திறமைகளை வளர்த்திட உதவுங்கள்
“உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.”—சங். 32:8.
1, 2. யெகோவா தம் ஊழியர்களிடம் எதைக் கவனிக்கிறார்?
உங்கள் பிள்ளைகள் விளையாடுவதைக் கவனித்திருக்கிறீர்களா? அநேக பெற்றோர் ஆர்வத்தோடு கவனிக்கிறார்கள். பிள்ளைக்கு இருக்கும் இயல்பான திறமைகளைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். ஒவ்வொரு பிள்ளைக்கும் வித்தியாசமான திறமை இருக்கிறது. சில பிள்ளைகள் விளையாட்டில் திறமைசாலிகளாக இருக்கலாம், சில பிள்ளைகள் ஓவியத்தில், இசையில் கெட்டிக்காரர்களாக இருக்கலாம். எப்படிப்பட்ட திறமையிருந்தாலும் சரி அதை வளர்த்துவிடத்தான் பெற்றோர் ஆசைப்படுவார்கள்.
2 நமக்கு எப்படிப்பட்ட திறமை இருக்கிறது என்று யெகோவாவும் ஆர்வத்தோடு கவனிக்கிறார். தம் ஊழியர்களை, ‘சகல தேசங்களிலிருந்தும்’ வந்த பொக்கிஷங்களாக நினைக்கிறார். (ஆகா. 2:7, NW) அவர்கள் விசுவாசத்தோடும் உண்மையோடும் தம்மை வணங்குவதால்தான் அவர் அப்படி நினைக்கிறார். நம் சகோதர சகோதரிகளிடம் வித்தியாசமான திறமைகள் இருக்கின்றன. சில சகோதரர்கள் சிறந்த பேச்சாளர்களாக இருக்கிறார்கள். சிலர் சபைக் காரியங்களைச் சிறப்பாகச் செய்கிறார்கள். சில சகோதரிகள் புதிய மொழியைக் கற்றுக்கொண்டு, ஊழியத்தில் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சிலர் வியாதிப்பட்டவருக்கோ பலவீனருக்கோ உதவுவதில் தலைச்சிறந்த முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். (ரோ. 16:1, 12) இதுபோன்ற சகோதர சகோதரிகளோடு சேவை செய்வது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்!
3. இந்தக் கட்டுரையில் என்ன கேள்விகளைச் சிந்திப்போம்?
3 இளைஞர்களும் புதிதாக ஞானஸ்நானம் எடுத்தவர்களும் இப்போதுதான் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்திருப்பார்கள். திறமைகளை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு எப்படி உதவலாம்? யெகோவாவைப் போலவே அவர்களிடமிருக்கும் நல்லதைக் கவனிக்க ஏன் முயல வேண்டும்?
யெகோவா திறமைகளைக் கவனிக்கிறார்
4, 5. யெகோவா தம் ஊழியர்களின் திறமைகளைக் கவனிக்கிறார் என்பதை நியாயாதிபதிகள் 6:11-16 எப்படிக் காட்டுகிறது?
4 யெகோவா தம் ஊழியர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை மட்டுமல்ல, அவர்களுடைய திறமைகளையும் கவனிக்கிறார். உதாரணத்திற்கு, மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரை விடுவிக்க கிதியோனை யெகோவா தேர்ந்தெடுத்தார். தேவதூதன் கிதியோனிடம், “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.” இதைக் கேட்டபோது கிதியோன் ஆச்சரியப்பட்டிருப்பார். ஏனென்றால், கிதியோன் தன்னை ‘பராக்கிரமசாலியாக’ கனவிலும் நினைக்கவில்லை. ‘என்னால எப்படி இதைச் செய்ய முடியும். நான் ஒன்றுக்கும் உதவாதவன் ஆச்சே’ என்று அவர் நினைத்தார். ஆனால், யெகோவா அவருடைய திறமைகளைக் கவனித்தார்.—நியாயாதிபதிகள் 6:11-16-ஐ வாசியுங்கள்.
5 கிதியோனால், இஸ்ரவேலரை விடுவிக்க முடியும் என்று யெகோவா நம்பினார். அவரிடம் என்ன திறமைகளைக் கவனித்தார்? கிதியோன் தன்னுடைய சக்தியையெல்லாம் ஒன்றுதிரட்டி கோதுமையைப் போரடித்ததை தேவதூதன் கவனித்தார். பொதுவாக, காற்றில் பதர் சுலபமாகப் பறக்கும் என்பதால் வெட்ட வெளியில் கதிர்களைப் போரடிப்பார்கள். ஆனால், கிதியோன் திராட்சை ஆலைக்குள் போரடித்தார். மீதியானியர் கோதுமைகளைக் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி ரகசியமாகப் போரடித்தார். இந்தப் புத்திசாலித்தனத்தையும் தேவதூதன் கவனித்தார். கிதியோனை கடினமாக உழைக்கும் ஒரு விவசாயியாக மட்டும் யெகோவா பார்க்கவில்லை, புத்திசாலியான நபராகப் பார்த்தார். அதனால், அவருடைய திறமைகளை யெகோவா இன்னும் மெருகேற்றினார்.
6, 7. (அ) ஆமோஸைப் பற்றி இஸ்ரவேலர்கள் என்ன நினைத்தார்கள், யெகோவா என்ன நினைத்தார்? (ஆ) யெகோவா சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்தார் என்று எப்படிச் சொல்லலாம்?
6 ஆமோஸ் தீர்க்கதரிசியிடமும் யெகோவா திறமைகளையே பார்த்தார். மற்றவர்கள் அவரைச் சாதாரணமான, எளிமையான நபராகப் பார்த்தார்கள். ‘நான் மந்தை மேய்க்கிறவன், காட்டத்திப் பழங்களைப் பொறுக்குகிறவன்’ என்று ஆமோஸே தன்னைக் குறைத்து மதிப்பிட்டார். ஆனால், பத்துக் கோத்திர இஸ்ரவேல ராஜ்யம் விக்கிரகாராதனை செய்ததால் அவர்களுக்குக் கண்டனத் தீர்ப்பு சொல்லும்படி ஆமோஸை யெகோவா தேர்ந்தெடுத்தார். ‘இவரைப்போய் அனுப்பியிருக்காங்களே’ என்று சில இஸ்ரவேலர்கள் நினைத்திருக்கலாம்.—ஆமோஸ் 7:14, 15-ஐ வாசியுங்கள்.
7 ஆமோஸ் குக்கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அக்கம்பக்கத்து நாடுகளின் பழக்கவழக்கங்களையும் அதன் அரசர்களையும் பற்றி நன்கு அறிந்திருந்தார். ஒருவேளை, அவருடைய கிராமம் வழியாகப் பயணித்த வியாபாரிகளிடமிருந்து இதைக் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாம். அண்டை நாடுகளின் நிலைமையையும் இஸ்ரவேலின் மோசமான நிலைமையையும் பற்றித் தெரிந்து வைத்திருந்தார். (ஆமோ. 1:6, 9, 11, 13; 2:8; 6:4-6) சில பைபிள் வல்லுநர்கள் ஆமோஸ் ஒரு சிறந்த எழுத்தாளர் என்று சொல்கிறார்கள். ஆமோஸ் எழுதிய பைபிள் புத்தகத்தில் எளிமையான, வலிமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்; ஒப்புமைகளையும் வார்த்தை ஜாலங்களையும்கூட பயன்படுத்தினார். அதுமட்டுமா, ஊழலில் ஊறிப்போயிருந்த அமத்சியாவிடம் ஆமோஸ் தைரியமாகப் பேசினார். இதிலிருந்து, யெகோவா சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. ஒருவருடைய திறமைகள் மற்றவர்களுக்குத் தெரியாவிட்டாலும் யெகோவாவால் அதைக் கவனிக்க முடியும். அந்த நபரைப் பயன்படுத்தவும் முடியும்.—ஆமோ. 7:12, 13, 16, 17.
8. (அ) தாவீதுக்கு யெகோவா என்ன உறுதியளித்தார்? (ஆ) தன்னம்பிக்கை இழந்தவர்களுக்கு சங்கீதம் 32:8 எப்படி உதவும்?
8 தம் ஊழியர்கள் ஒவ்வொருவருடைய திறமையையும் யெகோவா கவனிக்கிறார். “உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” என்று தாவீது ராஜாவிடம் சொன்னார். (சங்கீதம் 32:8-ஐ வாசியுங்கள்.) இதைக் கேட்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! நமக்குத் தன்னம்பிக்கை இல்லாவிட்டாலும், நாம் நினைத்ததைவிட அதிகத்தைச் செய்யவும் இலக்குகளை எட்டவும் யெகோவா நமக்கு உதவுவார். ஒரு குழந்தை நடக்க ஆரம்பிக்கும்போது பெற்றோர் அதற்கு உதவுவதுபோல், ஒருவர் ஆன்மீக முன்னேற்றம் செய்ய யெகோவா உதவுகிறார். நம் திறமைகளை வளர்க்க சகோதர சகோதரிகளையும் யெகோவா பயன்படுத்துகிறார். எப்படி?
திறமைகளைக் கவனியுங்கள்
9. பவுலின் அறிவுரையை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
9 “மற்றவர்களுடைய விஷயங்களிலும் ஆர்வம் காட்டுங்கள்” என்று பவுல் உற்சாகப்படுத்தினார். (பிலிப்பியர் 2:3, 4-ஐ வாசியுங்கள்.) மற்றவர்களுடைய திறமைகளைக் கவனித்து, பாராட்ட வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம். நம்மை யாராவது பாராட்டினால் நாம் எப்படி உணர்வோம்? இன்னும் முன்னேறவும், மிகச் சிறந்ததைச் செய்யவும் தூண்டப்படுவோம். மற்றவர்களின் திறமைகளைக் கவனித்துப் பாராட்டினால், அவர்கள் ஆன்மீக விதத்தில் முன்னேற நாம் உதவ முடியும்.
10. முக்கியமாக, யாருக்குப் பாராட்டுத் தேவை?
10 யாருக்குப் பாராட்டுத் தேவை? நம் எல்லோருக்குமே பாராட்டு தேவை. முக்கியமாக, இளைஞர்களுக்கும் புதிதாக ஞானஸ்நானம் எடுத்தவர்களுக்கும் பாராட்டுத் தேவை. அப்போதுதான், சபையில், அவர்களும் முக்கியமானவர்கள் என்பதைப் புரிந்துகொள்வார்கள். நாம் பாராட்டவில்லை என்றால், அவர்களுடைய திறமைகள் ஒளிந்தே கிடக்கும், சபையில் பொறுப்புகளை ஏற்கவும் தயங்குவார்கள்.—1 தீ. 3:1.
11. (அ) கூச்ச சுபாவமுள்ள இளைஞருக்கு ஒரு மூப்பர் எப்படி உதவினார்? (ஆ) இதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
11 இளைஞராக இருந்தபோது உதவி பெற்ற லூடோவிக் என்ற மூப்பர் இப்போது மற்றவர்களுக்கு உதவுகிறார்: “சகோதரங்கமேல உண்மையான அக்கறை காட்டும்போது அவங்க வேகமா முன்னேறுறாங்க. [கூச்ச சுபாவத்தோடு போராடிய] ஷூலியேன் என்ற சகோதரருக்கு தன்னோட கருத்துக்கள தெளிவா சொல்ல தெரியாது. ஆனா, நான் கவனிச்ச வரைக்கும் அவர் ரொம்ப அன்பானவர், மத்தவங்களுக்கு உதவணும்னு ஆசைப்படுவார். அவரைப்பத்தி தப்பா நினைக்காம, அவர்கிட்ட இருக்குற நல்லத பாத்து, உற்சாகப்படுத்தினேன்.” சீக்கிரத்திலேயே ஷூலியேன் ஒரு உதவி ஊழியரானார். இப்போது, ஒழுங்கான பயனியராகவும் இருக்கிறார்.
திறமையை வளர்க்க உதவுங்கள்
12. மற்றவர்களுடைய திறமையை வளர்க்க என்ன செய்ய வேண்டும்? உதாரணம் கொடுங்கள்.
12 மற்றவர்களுக்கு இருக்கும் திறமைகளை நன்றாகக் கவனித்தால்தான் அவர்களுக்கு உதவ முடியும். ஷூலியேன் விஷயத்தில் பார்த்தபடி மேலோட்டமாகத் தெரியும் பலவீனங்களைப் பார்க்காமல், உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளையும் நல்ல குணங்களையும் கண்டுபிடிக்க வேண்டும். அப்போஸ்தலன் பேதுரு விஷயத்தில் இயேசு இதைத்தான் செய்தார். சில நேரங்களில் பேதுரு விசுவாசத்தில் தடுமாறியதைப்போல் தெரிந்தாலும், ஒரு பாறையைப் போல் உறுதியாக இருப்பார் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால்தான் அவருக்கு கேபா அல்லது பேதுரு என்று பெயர் வைத்தார். பேதுரு என்றால் “கல்” என்று அர்த்தம்.—யோவா. 1:42.
13, 14. (அ) மாற்குவிற்கு பர்னபா எப்படி உதவினார்? (ஆ) ஒரு சகோதரர் என்ன உதவி பெற்றார்? (முதல் படத்தைப் பாருங்கள்.)
13 யோவான் என்ற மறுபெயருள்ள மாற்கிடம் பர்னபாவும் இப்படித்தான் நடந்துகொண்டார். (அப். 12:25) பர்னபாவுடன் பவுல் முதல் மிஷனரி பயணம் செய்தபோது, அவர்களுக்கு “உதவி” செய்ய மாற்குவையும் அழைத்துச் சென்றார்கள். பம்பிலியாவுக்குப் போனவுடன் மாற்கு அவர்களைவிட்டுப் பிரிந்து போய்விட்டார். மாற்குவின் உதவியில்லாமல் பவுலும் பர்னபாவும் கொள்ளையர்கள் நடமாடும் பகுதிகளில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. (அப். 13:5, 13) இப்படிப் பாதியிலேயே விட்டுச் சென்ற மாற்குவை பர்னபா ஒதுக்கிவிட்டாரா? இல்லை. அவரிடம் இருந்த நல்ல குணங்களைப் பார்த்தார், அவருடைய திறமைகளை வளர்க்க உதவினார். (அப். 15:37-39) யெகோவாவுடைய சேவையில் மாற்கு இன்னும் சிறந்ததைச் செய்ய இது உதவியது. ரோமாபுரியில் பவுல் சிறையில் இருந்தபோது மாற்குவும் அவரோடு இருந்தார். கொலோசெ சபைக்கு பவுல் கடிதம் எழுதியபோது மாற்குவைப் பாராட்டி எழுதினார். (கொலோ. 4:10) “மாற்குவை உன்னோடு அழைத்துக்கொண்டு வா; ஏனென்றால், ஊழியத்தில் அவர் எனக்கு உதவியாக இருப்பார்” என்று பவுல் சொன்னபோது பர்னபா நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார்.—2 தீ. 4:11.
14 புதிதாக நியமிக்கப்பட்ட அலெக்ஸாண்டர் என்ற மூப்பர் தன் இளவயது அனுபவத்தைச் சொல்கிறார்: “கூட்டங்கள்ல எல்லார் முன்னாடியும் ஜெபம் பண்ணனும்னா எனக்கு ரொம்ப பயமா இருக்கும். அதுக்காக மூப்பர்கள் என்னை அப்படியே ஒதுக்கிடல. பயப்படாம ஜெபம் பண்றதுக்கு ஒரு மூப்பர் சொல்லிக்கொடுத்தாரு. வெளி ஊழியக் கூட்டங்கள்ல ஜெபம் பண்றதுக்கு வாய்ப்பு கொடுத்தாரு. போகப்போக தைரியமா ஜெபம் பண்ண கத்துக்கிட்டேன்.”
15. பாராட்டுவதில் பவுல் என்ன முன்மாதிரி வைத்தார்?
15 சகோதர சகோதரிகளிடம் ஒரு முத்தான குணத்தைப் பார்த்தவுடன், அவரைப் பாராட்டுகிறோமா? இந்த விஷயத்தில் பவுல் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார். ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தில் 20-க்கும் அதிகமான சகோதர சகோதரிகளின் நல்ல குணங்களைப் பாராட்டி எழுதினார். (ரோ. 16:3-7, 13) பவுல் ஒரு கிறிஸ்தவராவதற்கு முன்பே அன்றோனீக்குவும் யூனியாவும் கிறிஸ்தவர்களானார்கள். அதனால், நீண்டகாலமாக அவர்கள் உண்மையோடு இருந்ததைப் பாராட்டினார். தன்னை அன்பாகக் கவனித்துக்கொண்ட ரூபுவின் தாயாரை விசாரித்து எழுதினார்.
16. இளைஞர்களைப் பாராட்டுவதால் என்ன நன்மை?
16 மனதாரப் பாராட்டும்போது நல்ல பலன்கள் கிடைக்கும். பிரான்சில் வசிக்கும் ரீக்கா என்ற இளைஞனின் அனுபவத்தைக் கவனியுங்கள். சத்தியத்தில் இல்லாத அவருடைய அப்பா ஞானஸ்நானம் எடுக்க அவரை அனுமதிக்கவில்லை. அதனால் 18 வயது ஆகும்வரை, அதாவது சட்டப்படி தீர்மானம் எடுக்கிற வயது வரும்வரை, காத்திருக்க வேண்டுமென்று ரீக்கா நினைத்தார். கூடப்படிப்பவர்களும் அவரை கேலி கிண்டல் செய்தார்கள். இதெல்லாம் அவரை உற்சாகம் இழக்கச் செய்தது. அவருக்கு பைபிள் படிப்பு எடுத்த ஃப்ரெடெரீக் என்ற மூப்பர் சொல்கிறார்: “மத்தவங்ககிட்ட தைரியமா யெகோவாவ பத்தி பேசுனதுக்காக ரீக்காவ பாராட்டினேன்.” இப்படிப் பாராட்டியது இன்னும் தைரியமாக யெகோவாவைச் சேவிக்க அவருக்கு உதவியது. தன் அப்பாவோடு நெருக்கமான பந்தத்தையும் வளர்த்துக்கொண்டார். இதனால், 12 வயதிலேயே ஞானஸ்நானம் எடுத்தார்.
17. (அ) நம் சகோதரர்கள் முன்னேறுவதற்கு எப்படி உதவலாம்? (ஆ) இளைஞர்களை ஒரு மிஷனரி எப்படி உற்சாகப்படுத்தினார், என்ன பலன் கிடைத்தது?
17 நன்றாகப் பேச்சு கொடுத்ததற்காகவும் நல்ல பதில்களைச் சொன்னதற்காகவும் சகோதர சகோதரிகளை நாம் பாராட்டும்போது யெகோவாவுடைய சேவையில் இன்னும் சிறந்ததைச் செய்ய அவர்களுக்கு உதவுகிறோம். சகோதரிகள் பொதுவாகச் சின்ன விஷயங்களைக்கூட கவனித்துப் பாராட்டுவார்கள் என்று பிரான்சு பெத்தேலில் பல வருடங்களாக சேவை செய்யும் சில்வியாa சொல்கிறார்: “முதிர்ச்சியுள்ள சகோதரர்கள் கொடுக்குற ஆலோசனையோடு சகோதரிகளின் பாராட்டும் கைகோர்க்கும்போது நல்ல பலன்கள் கிடைக்கும். பாராட்டுறத என்னோட கடமையா நினைக்கிறேன்.” (நீதி. 3:27) பிரெஞ்சு கயானாவில் மிஷனரியாக இருக்கும் ஷெரோம் என்ற சகோதரர், நிறைய இளைஞர்கள் மிஷனரியாவதற்கு உதவியிருக்கிறார். அவர் சொல்கிறார்: “ஊழியத்துல நல்லா பேசுனதுக்காகவோ கூட்டங்கள்ல பதில் சொன்னதுக்காகவோ பாராட்டுனா இளைஞர்களோட தன்னம்பிக்கை இன்னும் அதிகரிக்குது. அவங்களோட திறமைய வளர்க்கவும் உதவுது.”
18. இளைஞர்களோடு சேர்ந்து வேலை செய்வது ஏன் நல்லது?
18 மற்றவர்களோடு சேர்ந்து வேலை செய்யும்போது அவர்களை உற்சாகப்படுத்த நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரிந்த ஒரு இளைஞரை jw.org-லிருந்து வயதானவர்களுக்காகச் சில கட்டுரைகளைப் ப்ரிண்ட் எடுத்துத் தரும்படிச் சொல்லலாம். அல்லது ராஜ்யமன்ற பராமரிப்பு வேலை செய்ய ஒரு இளைஞரை அழைக்கலாம். இதுபோன்ற நேரங்களில், அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறமைகளை நீங்கள் கண்டுபிடிக்கலாம், அவர்களைப் பாராட்டலாம். அதனால் வரும் பலன்களை நீங்களே பார்ப்பீர்கள்.—நீதி. 15:23.
சபையின் வளர்ச்சியை மனதில் வையுங்கள்
19, 20. திறமையை வளர்க்க நாம் ஏன் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்?
19 இஸ்ரவேலரை வழிநடத்த யெகோவா யோசுவாவை நியமித்தபோது, அவரை “திடப்படுத்திப் பலப்படுத்து” என்று மோசேயிடம் சொன்னார். (உபாகமம் 3:28-ஐ வாசியுங்கள்.) நாளுக்கு நாள் யெகோவாவின் அமைப்பிற்குள் ஆட்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். மூப்பர்கள் மட்டுமல்ல அனுபவமுள்ள அனைவரும் இளைஞர்களை, புதிதாக ஞானஸ்நானம் பெற்றவர்களை உற்சாகப்படுத்தலாம். அவர்களுடைய திறமைகளை வளர்க்க உதவலாம். அப்படிச் செய்யும்போது, நிறைய பேர் முழுநேர சேவையில் அடியெடுத்து வைப்பார்கள்; ‘கற்பிக்க போதிய தகுதி பெற்று’ மூப்பர்களாவார்கள்.—2 தீ. 2:2.
20 நாம் ஒரு பெரிய சபையில் சேவை செய்தாலும் சரி, சிறிய தொகுதியில் சேவை செய்தாலும் சரி சபையின் வளர்ச்சியை மனதில் வைத்து செயல்படுவோமாக! மற்றவர்களிடம் நல்லதையே கவனிக்கும் யெகோவாவைப் பின்பற்றுவோமாக!!
a பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.