“ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்”
யெகோவா “ஜெபத்தைக் கேட்கிறவர்.” (சங்கீதம் 65:2) அவரிடம் முழு இருதயத்தோடு பக்தியாயிருப்பவர்களின் ஜெபங்களை அவர் எப்போதும் கேட்கிறார், அவர்கள் ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணும்போது அவர் செவி கொடுத்துக் கேட்கிறார் என்று நாம் நிச்சயமாய் இருக்கலாம்.
ஆனால் ஒருவருக்காக ஒருவர் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்? அப்படிப்பட்ட ஜெபங்கள் எதைக் குறித்து ஏறெடுக்கப்பட வேண்டும்? நாம் ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணும்போது என்ன தெய்வீக குணங்கள் மேம்படுத்தப்படுகின்றன?
ஏன் ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்ய வேண்டும்?
யெகோவாவின் ஜனங்கள் ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்யும்படி வேதாகமம் உற்சாகப்படுத்துகிறது. மற்றவர்கள் சார்பாக செய்யப்படும் ஜெபங்கள் அப்போஸ்தலனாகிய பவுல் கடவுளிடம் செய்த விண்ணப்பங்களுள் அடங்கி இருந்தது. (கொலோசெயர் 1:3; 2 தெசலோனிக்கேயர் 1:11) மேலும், சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்.”—யாக்கோபு 5:16.
கடவுளின் மற்ற ஊழியர்களுக்கான ஜெபங்கள் திறம்பட்டவையாய் இருக்கின்றன. இது யாக்கோபு 5:13–18-ல் காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஆவிக்குரிய விதத்தில் நோயுற்றிருக்கும் ஒரு கிறிஸ்தவன் சபை மூப்பர்கள் “யெகோவாவுடைய (NW) நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணும்படி” அனுமதிக்க வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறான். அவர்களுடைய ஜெபத்தை கேட்பது துயரத்திலுள்ள நபரை பலப்படுத்தும். மேலும் கடவுள் தன் சொந்த ஜெபங்களுக்கும் பதிலளிப்பார் என்று அவரை நம்ப வைக்கும். (சங்கீதம் 23:5; 34:18) அந்த நபரோடு ஜெபம் செய்வது மட்டுமல்லாமல், காயத்தை ஆற்றும் எண்ணெயைப் போலிருக்கும் வேதாகம கருத்துக்களை சொல்வதன் மூலம் ஆவிக்குரிய ஆரோக்கியத்தை அவர் திரும்பவும் பெறுவதற்கு மூப்பர்கள் முயற்சி செய்வர்.
யாக்கோபு கூடுதலாகச் சொல்கிறார்: “அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; யெகோவா (NW) அவனை எழுப்புவார்.” ஆம், ஆவிக்குரிய பிரகாரமாய் நோயுற்று இருக்கும் நபர் மூப்பரின் “விசுவாசமுள்ள ஜெபத்தால்” உதவி செய்யப்படுவார். மேலும், அவர் வேதாகமத்தால் உதவப்பட விரும்புவாரேயானால் கடவுள் அவனை ஆவிக்குரிய ஆரோக்கியத்துக்கு “எழுப்புவார்.” ஆனால் வினைமையான பாவத்தினால் ஆவிக்குரிய நோய் ஏற்பட்டிருந்தால் என்ன? அந்த நபர் மனந்திரும்பினால் யெகோவா அவனை மன்னிப்பார்.
“நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. எலியா . . . மழை பெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம் பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறுமாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம் பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.” (1 இராஜாக்கள் 17:1–7; 18:1, 42–45) கடவுளின் சித்தத்துக்கு இசைவாயிருக்கும் ஒரு நீதிமானின் ஜெபத்தில் வல்லமை இருக்கிறது.—1 யோவான் 5:14, 15.
எதைப் பற்றி ஜெபிப்பது?
ஓர் உடன் விசுவாசிக்காக எந்த விஷயமும் நம்முடைய ஜெபங்களின் பொருளாக இருக்கலாம். உதாரணமாக, நற்செய்தியை பேசுவதற்கு தனக்கு திறமை வேண்டும் என்று மற்றவர்கள் ஜெபிக்கும்படி அப்போஸ்தலனாகிய பவுல் கேட்டார். (எபேசியர் 6:17–20) யாரோ ஒருவர் சோதிக்கப்படுகிறார் என்பது நமக்குத் தெரிந்தால் என்ன? அவர் “ஒரு பொல்லாங்கும் செய்யாதிருக்கும்படிக்கும்,” கடவுள் அவரை பரீட்சைக்கு விட்டுவிடாமல் அவரை பொல்லாங்கனாகிய பிசாசாகிய சாத்தானிடமிருந்து மீட்டுக் கொள்வதற்கும் நாம் ஜெபிக்கலாம். (2 கொரிந்தியர் 13:7; மத்தேயு 6:13) யாராவது ஒருவர் சரீரப்பிரகாரமாக வியாதிப்பட்டிருந்தால், அவர் தன் வியாதியை சகித்துக் கொள்வதற்கு தேவையான மனவலிமையை தரும்படி நாம் யெகோவாவை கேட்கலாம்.—சங்கீதம் 41:1–3.
துன்புறுத்தப்படும் யெகோவாவின் உடன் வணக்கத்தாருக்காக ஜெபிப்பது எப்போதும் பொருத்தமானதாயிருக்கிறது. பவுலும் அவருடைய கூட்டாளிகளும் கடுமையான துன்புறுத்தலை அனுபவித்தனர், அவர் கொரிந்து கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு சொன்னார்: “அநேகர் மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும் பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவி செய்யுங்கள்.” (2 கொரிந்தியர் 1:8–11; 11:23–27) நாம் சிறையில் அடைக்கப்பட்டாலும்கூட, யெகோவா “நீதிமான்களின் ஜெபத்தைக்” கேட்கிறார் என்பதை எப்போதும் நினைவில் வைத்தவர்களாய் துன்புறுத்தப்படும் மற்ற சகோதரர்களுக்காக நாம் ஜெபிக்கலாம்.—நீதிமொழிகள் 15:29.
யெகோவாவின் அமைப்புக்குள் பெரிய உத்தரவாதங்களை தாங்கும் நம்முடைய சகோதரர்களுக்காக விசேஷமாக நாம் ஜெபிக்க வேண்டும். இது அமைப்பை வழிநடத்தி, “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியரால்” பகிர்ந்தளிக்கப்படும் ஆவிக்குரிய உணவை தயாரிப்பவர்களை சேர்த்துக் கொள்கிறது. (மத்தேயு 24:45–47) உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழு அங்கத்தினர்கள் நம்முடைய ஜெபங்களுக்குத் தகுதியாயிருக்கின்றனர், ‘ஞானத்தை அளிக்கிற ஆவியை’ யெகோவா அவர்களுக்கு அருளும்படி நாம் ஜெபிக்கலாம்.—எபேசியர் 1:16, 17.
கிறிஸ்தவ குணாதிசயங்கள் மேம்படுத்தப்படுகின்றன
உடன் விசுவாசிகளுக்காக ஜெபிப்பதன் மூலம், நாம் நம்மை அக்கறையுள்ளவர்களாகவும் சுயநலமற்றவர்களாகவும், அன்பானவர்களாகவும் காண்பிக்கிறோம். நம்முடைய ஆவிக்குரிய சகோதரர்கள், சகோதரிகளுக்கான சுயநலமற்ற, அன்பான அக்கறை, ‘அன்பு தற்பொழிவை நாடாது’ என்ற பவுலின் குறிப்புக்கு இசைவாயிருக்கிறது. (1 கொரிந்தியர் 13:4, 5) “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” என்பது மற்றவர்களுக்காக ஜெபிப்பதின் ஒரு வழியாகும். (பிலிப்பியர் 2:4) மற்றவர்களுடைய ஆவிக்குரிய நலனை நம்முடைய அக்கறையாக ஜெபத்தில் வைப்போமானால், இயேசுவின் சீஷர்களை அடையாளம் காட்டும் சகோதர அன்பில் நாம் அவர்களோடு நெருங்கி சேருவோம்.—யோவான் 13:34, 35.
நாம் யாரைக் குறித்து ஜெபிக்கிறோமோ அவர்களிடம் பரிவு உணர்ச்சி வளர்க்கப்படுகிறது. (1 பேதுரு 3:8) அவர்களுடைய அக்கறைகளிலும் வேதனைகளிலும் பங்கு கொண்டு, அவர்களுக்காக பரிவு இரக்கம் கொண்டிருக்கிறோம். மனித உடலில், ஒரு கைக்கு காயம் ஏற்பட்டால், மற்றொரு கை அதை கவனித்துக் கொண்டு காயத்தினால் ஏற்பட்ட வேதனையை குறைப்பதற்கு முயற்சி செய்கிறது. (1 கொரிந்தியர் 12:12, 26 ஒப்பிடுக.) அதேப் போன்று, வேதனைப்படும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிப்பது அவர்களிடமாக நம்முடைய பரிவு இரக்கத்தை வளர்க்கிறது, மேலும் அவர்களை மனதில் வைப்பதற்கு நமக்கு உதவுகிறது. விசுவாசமுள்ள உடன் கிறிஸ்தவர்களை நம்முடைய ஜெபங்களில் நாம் புறக்கணிப்போமானால் அது நம்முடைய இழப்பாயிருக்கும், ஏனென்றால் கடவுளும் கிறிஸ்துவும் அவர்களை கைவிடுவதில்லை.—1 பேதுரு 5:6, 7.
நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்கையில் பல்வேறு தெய்வீக குணாதிசயங்கள் மேம்படுத்தப்படுகின்றன. நாம் அவர்களை அதிகமாக புரிந்து கொண்டு, அவர்களிடம் பொறுமையாக இருப்போம். கசப்பு நீக்கப்படுகிறது, நம்மை அன்பானவர்களாகவும், சந்தோஷமானவர்களாகவும் ஆக்கும் கட்டியெழுப்பும் சிந்தனைகளைச் செய்வதற்கு வழிநடத்தும். மற்றவர்களுக்காக ஜெபிப்பது யெகோவாவின் ஜனங்கள் மத்தியில் சமாதானத்தையும் ஒற்றுமையையும்கூட முன்னேற்றுவிக்கும்.—2 கொரிந்தியர் 9:13, 14.
தொடர்ந்து ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்து கொண்டே இருங்கள்
பவுலைப் போன்று, நாம் மற்றவர்களை நமக்காக ஜெபிக்கும்படி கேட்கலாம். நம்மோடு ஜெபிப்பது மட்டுமல்லாமல், நம்முடைய நண்பர்கள் நம் சார்பாக தனிப்பட்ட விதமாய் நம்முடைய பெயரையும், பிரச்னையையும் குறிப்பிட்டு, அவர் நமக்கு உதவி செய்யும்படி கேட்டு கடவுளிடம் ஜெபிக்கலாம். உதவி வரும் ஏனென்றால் ‘யெகோவா தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்க அறிந்திருக்கிறார்.’—2 பேதுரு 2:9.
அவர்களுடைய ஜெபங்களில் நம்மை குறிப்பிடும் யெகோவாவின் சாட்சிகளுக்கும்கூட சோதனைகள் இருக்கின்றன—அவை நம்முடைய சோதனைகளைவிட அதிக வேதனையானதாக ஒருவேளை இருக்கலாம். என்றபோதிலும், அவர்கள் நம்முடைய கவலைகளை நித்தியத்தின் ராஜா முன்பு கொண்டு செல்கின்றனர், ஒருவேளை நம்முடைய சார்பாக அவர்கள் கண்ணீரையும்கூட வடிக்கலாம். (2 கொரிந்தியர் 2:4; 2 தீமோத்தேயு 1:3, 4 ஒப்பிடுக.) இதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! ஆகையால் மதித்துணர்வோடும் முன்கூறப்பட்ட பிற காரணங்கள் நிமித்தமும் ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்போமாக. (w90 11/15)