நியமிக்கப்பட்ட சகோதரர்களே, தீமோத்தேயுவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!
போன வருஷம், உலகம் முழுவதும், ஆயிரக்கணக்கான சகோதரர்கள், மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சகோதரர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால், உங்களுடைய புதிய நியமிப்பை நினைத்து ரொம்பவே சந்தோஷப்படுவீர்கள்!
அதேசமயம், உங்களுக்குக் கொஞ்சம் பயமாகவும் இருக்கலாம். “நான் நியமிக்கப்பட்ட புதுசுல, இத்தனை பொறுப்புகள எப்படி செய்யப்போறேனு நினைச்சு ரொம்ப பயந்தேன்” என்று இளம் மூப்பரான ஜேஸன் சொல்கிறார். மோசேக்கும் எரேமியாவுக்கும் யெகோவாவிடமிருந்து புதிய நியமிப்புகள் கிடைத்தபோது, அதைச் செய்யும் அளவுக்குத் திறமையில்லை என்று அவர்கள் நினைத்தார்கள். (யாத். 4:10; எரே. 1:6) நீங்களும் அதேபோல் உணருகிறீர்களா? அந்த உணர்வைச் சமாளித்து, நீங்கள் எப்படித் தொடர்ந்து முன்னேறலாம்? தீமோத்தேயுவின் உதாரணத்தை யோசித்துப்பாருங்கள்.—அப். 16:1-3.
தீமோத்தேயுவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்
மிஷனரி ஊழியத்தில் தன்னோடு சேர்ந்துகொள்ளும்படி தீமோத்தேயுவை பவுல் கூப்பிட்டபோது, தீமோத்தேயுவுக்கு அநேகமாக 18-23 வயது இருந்திருக்கலாம். தீமோத்தேயு ஒரு இளைஞராக இருந்ததால், ஆரம்பத்தில் அவருக்கு தன்னம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம்; புதிய பொறுப்பைச் செய்யத் தயங்கியிருக்கலாம். (1 தீ. 4:11, 12; 2 தீ. 1:1, 2, 7) ஆனால், 10 வருஷங்களுக்குப் பிறகு, பிலிப்பி சபைக்கு பவுலால் இப்படிச் சொல்ல முடிந்தது: “நம் எஜமானாகிய இயேசுவுக்கு விருப்பமானால் சீக்கிரத்திலேயே தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்ப நினைத்திருக்கிறேன். உங்களுடைய விஷயங்களை அக்கறையோடு கவனிப்பதற்கு அவரைப் போன்ற மனமுள்ளவர் வேறு யாரும் என்னோடு இல்லை.”—பிலி. 2:19, 20.
தீமோத்தேயு எப்படி இவ்வளவு அருமையான மூப்பராக ஆனார்? இதோ, அவரிடமிருந்து ஆறு பாடங்கள்...
1. மற்றவர்கள்மேல் உண்மையான அக்கறை காட்டினார். ‘உங்களுடைய விஷயங்களை [தீமோத்தேயு] அக்கறையோடு கவனிப்பார்’ என்று பிலிப்பியிலிருந்த சகோதரர்களிடம் பவுல் சொன்னார். (பிலி. 2:19, 20) மற்றவர்கள்மேல் தீமோத்தேயு உண்மையான அக்கறை காட்டினார். அவர்கள் யெகோவாவிடம் நெருங்கி வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர்களுக்காகத் தன்னையே மனப்பூர்வமாகக் கொடுத்தார்.
பயணிகளை ஏற்றிக்கொண்டு போவதைவிட, ஒவ்வொரு பஸ் நிறுத்தத்துக்கும் சரியான நேரத்துக்குப் போவதிலேயே குறியாக இருக்கிற பஸ் டிரைவரைப் போல இருக்காதீர்கள். மற்றவர்களின் மதிப்பைப் பெற்ற வில்லியம்ஸ் என்ற சகோதரர், 20 வருஷங்களுக்கும்மேல் மூப்பராகச் சேவை செய்கிறார். புதிதாக நியமிக்கப்பட்ட சகோதரர்களிடம் அவர் இப்படிச் சொல்வார்: “சபை வேலைகள ஒழுங்கமைக்குறதுக்கும் மேற்பார்வை செய்றதுக்கும் கவனம் செலுத்துறதவிட, சகோதர சகோதரிகளோட தேவைகளுக்கு அதிக கவனம் செலுத்துங்க.”
2. பிரசங்க வேலைக்கு முதலிடம் கொடுத்தார். தீமோத்தேயுவுக்கும் மற்றவர்களுக்கும் இருந்த வித்தியாசத்தைப் பற்றி பவுல் இப்படிச் சொன்னார்: “மற்ற எல்லாரும் தங்களுடைய விஷயங்களிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள், இயேசு கிறிஸ்துவுடைய விஷயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை.” (பிலி. 2:21) பவுல் ரோமிலிருந்துதான் பிலிப்பி சபைக்குக் கடிதம் எழுதினார்; அங்கிருந்த சகோதரர்கள், சொந்த விஷயங்களில் அளவுக்கு அதிகமாக மூழ்கியிருந்தார்கள்; கடவுளுடைய வேலையில் மும்முரமாக ஈடுபடவில்லை. ஆனால், தீமோத்தேயு அப்படி இருக்கவில்லை. நல்ல செய்தியைப் பெரியளவில் பிரசங்கிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தபோது, “இதோ, நான் இருக்கிறேன்! என்னை அனுப்புங்கள்!” என்று சொன்ன ஏசாயாவைப் போல நடந்துகொண்டார்.—ஏசா. 6:8.
உங்கள் சொந்தப் பொறுப்புகளையும் ஆன்மீகப் பொறுப்புகளையும் எப்படிச் சமநிலையோடு செய்யலாம்? முதலில், எதற்கு முன்னுரிமை கொடுப்பதென்று முடிவெடுங்கள். “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று பவுல் சொன்னார். (பிலி. 1:10) கடவுள் எதை முக்கியமானதாக நினைக்கிறாரோ, அதற்கு முன்னுரிமை கொடுங்கள். அடுத்ததாக, வேண்டாத விஷயங்களை, அதாவது உங்கள் நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சும் விஷயங்களை, தவிர்த்துவிடுங்கள். “இளமைப் பருவத்தில் வருகிற ஆசைகளைவிட்டு நீ விலகி ஓடு; . . . நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை நாடு” என்று தீமோத்தேயுவுக்குப் பவுல் அறிவுரை கொடுத்தார்.—2 தீ. 2:22.
3. பரிசுத்த சேவையை மும்முரமாகச் செய்தார். “தீமோத்தேயுவைப் பற்றி உங்களுக்கே தெரியும், அப்பாவோடு சேர்ந்து பிள்ளை உழைப்பதுபோல் நல்ல செய்தியை அறிவிப்பதில் என்னோடு சேர்ந்து அவர் கடினமாக உழைத்திருக்கிறார்” என்று பிலிப்பி சபைக்கு எழுதிய கடிதத்தில் பவுல் குறிப்பிட்டார். (பிலி. 2:22) தீமோத்தேயு சோம்பேறித்தனமாக இருக்கவில்லை; பவுலோடு சேர்ந்து கடுமையாக உழைத்தார். அதனால், அவர்களுக்கிடையில் இருந்த பந்தம் பலப்பட்டது.
இன்றும் கடவுளுடைய அமைப்பில் ஏராளமான வேலைகள் இருக்கின்றன. அவற்றைச் செய்யும்போது நமக்கு உண்மையிலேயே திருப்தி கிடைக்கிறது, சகோதர சகோதரிகளோடு நெருக்கமான பந்தத்தை வளர்க்க முடிகிறது. அதனால், எப்போதும் ‘எஜமானுடைய வேலையை அதிகமதிகமாகச் செய்வதை’ குறிக்கோளாக வையுங்கள்.—1 கொ. 15:58.
4. கற்றுக்கொண்ட விஷயங்களின்படி அவர் நடந்தார். “நீயோ என் போதனையையும், வாழ்க்கைப் பாணியையும், குறிக்கோளையும், விசுவாசத்தையும், பொறுமையையும், அன்பையும், சகிப்புத்தன்மையையும் நெருக்கமாகப் பின்பற்றி வந்திருக்கிறாய்” என்று தீமோத்தேயுவுக்குப் பவுல் எழுதினார். (2 தீ. 3:10) கற்றுக்கொண்ட விஷயங்களின்படி நடந்ததால், பெரிய பொறுப்புகளைச் செய்வதற்குத் தகுதி பெற்றார்.—1 கொ. 4:17.
உங்களுக்கு ரோல்மாடல் யாராவது இருக்கிறார்களா? உங்களைவிட வயதான, அதிக அனுபவமுள்ள ஒருவரை நீங்கள் ரோல்மாடலாக வைத்துக்கொள்ளலாமே! பல வருஷங்களாக மூப்பராகச் சேவை செய்யும் டாம் இப்படிச் சொல்கிறார்: “அனுபவமுள்ள ஒரு மூப்பர் என்மேல அக்கறை காட்டுனாரு, அருமையா பயிற்சி கொடுத்தாரு. நான் தவறாம அவருகிட்ட அறிவுரை கேட்பேன், அவரு சொல்ற மாதிரியே செய்வேன். அதனால, என்னோட தன்னம்பிக்கை அதிகமாச்சு.”
5. தனக்குத்தானே அவர் பயிற்சி கொடுத்தார். “கடவுள்பக்தி காட்டுவதைக் குறிக்கோளாக வைத்து உனக்கு நீயே பயிற்சி கொடுத்துக்கொள்” என்று பவுல் தீமோத்தேயுவிடம் சொன்னார். (1 தீ. 4:7) ஒரு ஓட்டப்பந்தய வீரருக்குப் பயிற்சியாளர் இருப்பார். ஆனால், அந்த வீரர் தனக்குத்தானே பயிற்சி கொடுப்பதும் முக்கியம். “சபையார் முன்னால் வாசிப்பதிலும், அவர்களுக்கு அறிவுரை சொல்வதிலும், கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபட்டுக்கொண்டிரு . . . இவற்றைப் பற்றியே ஆழமாக யோசித்துக்கொண்டிரு; இவற்றிலேயே மூழ்கியிரு; அப்போதுதான் உன்னுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெளிவாகத் தெரியவரும்” என்று சொல்லி தீமோத்தேயுவை பவுல் உற்சாகப்படுத்தினார்.—1 தீ. 4:13-15.
உங்கள் திறமைகளை நீங்கள் பட்டைதீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். நன்றாகப் படியுங்கள். சபைக் காரியங்கள் சம்பந்தமாக அமைப்பு கொடுக்கிற வழிநடத்துதல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள். அதோடு, அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையைத் தவிர்த்துவிடுங்கள். உங்களுக்கு நிறைய அனுபவம் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். அதனால், கவனமாக ஆராய்ச்சி செய்யாமலேயே எந்த விஷயத்தையும் கையாள முடியும் என்று யோசிக்கலாம்; இப்படிப்பட்ட எண்ணத்தைத் தவிர்க்க வேண்டும். தீமோத்தேயுவைப் போல நீங்களும் ‘உங்கள் மீதும் உங்கள் போதனையின் மீதும் எப்போதும் கவனம் செலுத்துங்கள்.’—1 தீ. 4:16.
6. யெகோவாவின் சக்தியை அவர் நம்பியிருந்தார். தீமோத்தேயுவின் ஊழியத்தைப் பற்றிக் குறிப்பிட்டபோது, “உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிற அருமையான இந்தப் பொக்கிஷத்தை நமக்குள் குடியிருக்கிற கடவுளுடைய சக்தியால் காத்துக்கொள்” என்று பவுல் ஞாபகப்படுத்தினார். (2 தீ. 1:14) தீமோத்தேயு தன்னுடைய ஊழியத்தைக் காத்துக்கொள்ள, கடவுளுடைய சக்தியை நம்பியிருக்க வேண்டியிருந்தது.
பல பத்தாண்டுகள் மூப்பராகச் சேவை செய்யும் டானல்ட் இப்படிச் சொல்கிறார்: “நியமிக்கப்பட்ட சகோதரர்கள், யெகோவாவோட இருக்குற பந்தத்த உயர்வா மதிக்கணும். அப்படி செய்றவங்களுக்கு, ‘பலத்துக்குமேல் பலம்’ கிடைக்கும். கடவுளோட சக்திக்காக ஜெபம் செய்றப்பவும், அந்த சக்தியால உண்டாகுற குணங்கள காட்டுறப்பவும், சகோதர சகோதரிகளுக்கு ஆசீர்வாதமா இருப்பாங்க.”—சங். 84:7; 1 பே. 4:11.
உங்களுக்குக் கிடைத்த பொறுப்பை உயர்வாக மதியுங்கள்
உங்களைப் போல புதிதாக நியமிக்கப்பட்ட சகோதரர்கள் நிறையப் பேரை யெகோவா எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதைப் பார்க்கும்போது, ரொம்பவே உற்சாகமாக இருக்கிறது. ஆரம்பத்தில் பார்த்த ஜேஸன் இப்படிச் சொல்கிறார்: “நான் மூப்பரா இருந்த இத்தனை வருஷத்துல, நிறைய கத்துக்கிட்டேன், என்னோட தன்னம்பிக்கையும் அதிகமாயிருக்கு. இப்போ நான் உண்மையிலேயே என்னோட நியமிப்ப சந்தோஷமா செய்றேன், அது ஒரு அருமையான பாக்கியம்!”
யெகோவா உங்களைத் தொடர்ந்து பயன்படுத்த நீங்கள் இடம்கொடுப்பீர்களா? தீமோத்தேயுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதை உங்கள் குறிக்கோளாக வையுங்கள். அப்போது, கடவுளுடைய மக்களுக்கு நீங்களும் ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.