“இப்படிப்பட்டவர்களைப் பிரியமாய் எண்ணிக் கொண்டிருங்கள்”
“இப்படிப்பட்டவர்களை அங்கீகாரம் பண்ணுங்கள்.”—1 கொரிந்தியர் 16:18.
அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பாகப் பிரியமாய் எண்ணிக்கொண்டிருந்த மனிதர்கள் யெகோவாவுக்கும் தங்களுடைய சகோதரர்களுக்கும் நிபந்தனையின்றி தங்கள் பெலத்தை செலவழிக்க மனமுள்ளவர்களாக இருந்த மனிதர்களே ஆவர். இப்படிப்பட்ட ஓர் உடன்வேலையாளைக் குறித்து பவுல் எழுதியதாவது: “நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே அவனை ஏற்றுக் கொண்டு, இப்படிப்பட்டவர்களைப் பிரியமாய் எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்ய வேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.”—பிலிப்பியர் 2:29, 30.
2 இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய 55,000-க்கும் மேற்பட்ட சபைகளில் அவர்களுடைய சகோதரர்களின் மத்தியில் அவர்களுடைய கடின உழைப்பின் காரணமாக நாம் குறிப்பாக போற்ற வேண்டிய அநேக சிறந்த கிறிஸ்தவ மனிதர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை நாம் பிரியமாய் எண்ண வேண்டும் என்பதைக் காண்பிப்பவனாய் பவுல் சொன்னதாவது: “அன்றியும் சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைச் செய்கிறவர்களாயிருந்து உங்களுக்குப் புத்தி சொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய கிரியைகளினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக் கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:12, 13.
3 நம்முடைய எல்லாச் சகோதர சகோதரிகளுக்கும், குறிப்பாக கடினமாக உழைக்கும் மூப்பர்களுக்கு சரியான போற்றுதல் காண்பிப்பது, நம்முடைய சபைக்குள்ளே சமாதானமாயிருப்பதற்கு முக்கியமான ஒரு காரியம் என்பதில் சந்தேகமில்லை. இந்த விஷயத்தில், கிறிஸ்தவ வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலுமிருப்பது போலவே, மூப்பர்கள் “மந்தைக்கு மாதிரிகளாக” இருக்க வேண்டும். (1 பேதுரு 5:2, 3.) என்றபோதிலும் மூப்பர்கள் தங்களுடைய கடினமான உழைப்புக்காக சகோதரர்களால் போற்றப்பட சரியாகவே எதிர்ப்பார்க்கிறபோதிலும், ஒருவருக்கொருவர் தகுதியான கரிசனையை காண்பிப்பதிலும்கூட அவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
“ஒருவரையொருவர் கனம் பண்ணுதல்”
4 இந்த விஷயத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தான். முந்தையக் கட்டுரையில் நாம் பார்த்தவிதமாகவே, அவன் தன்னுடைய சகோதர சகோதரிகளில் நல்ல காரியங்களையே தேடினான். கடினமாக உழைக்கும் மூப்பர்களில் அன்பு செலுத்தவும் அவர்களைக் கனம் பண்ணவும் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தியது மட்டுமல்லாமல், இவர்களுக்கு அவன்தானேயும்கூட தகுதியான போற்றுதலைக் காண்பித்தான். அவன் இப்படிப்பட்டவர்களைப் பிரியமாய் எண்ணினான் என்பது தெளிவாக இருக்கிறது.—பிலிப்பியர் 2:19–25, 29; கொலோசெயர் 4:12, 13; தீத்து 1:4, 5 ஒப்பிடவும்.
5 ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதிய தன்னுடைய கடிதத்தில் பவுல் எழுதியதாவது: “சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக் கொள்ளுங்கள். அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள், ஆவியிலே அனலாயிருங்கள்; யெகோவாவுக்கு ஊழியஞ் செய்யுங்கள்.” (ரோமர் 12:10, 11) நிச்சயமாகவே இந்த வார்த்தைகள் முதலாவதாக கிறிஸ்தவ மூப்பர்களுக்கே பொருத்தமாக இருக்கின்றன. எல்லாக் கிறிஸ்தவர்களிலும், அவர்கள் ஒருவரையொருவர் கனம் பண்ணுவதில் முன்சென்று வழிநடத்த வேண்டும்.
6 மூப்பர்கள் சக கண்காணிகளைக் குறித்து மதிப்புக் குறைவான கருத்துக்களைத் தெரிவிக்காதபடிக்குக் குறிப்பாக கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். எந்த ஒரு மூப்பரிடமும் எல்லாக் கிறிஸ்தவ குணங்களும் உச்ச உயர் அளவில் இல்லை. ஏனென்றால் எல்லாரும் அபூரணராயிருக்கிறார்கள். சிலர், ஒரு சில குணங்களில் சிறப்புற்றும், ஆனால் மற்றவைகளில் பலவீனமாகவும் இருக்கிறார்கள். மூப்பர்கள் ஒருவருக்கொருவர் சரியான சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் கொண்டிருப்பார்களேயானால், ஒருவருக்கொருவர் அவர்களுடைய பலவீனங்களை பெரிதுபடுத்தாமலிருப்பர். சகோதரர்களோடு அவர்களுடைய சம்பாஷணைகளில் தங்கள் சகமூப்பரின் மேன்மையான பண்புகளை உயர்த்திக் காண்பிப்பர். இவ்விதமாக ஒருவரையொருவர் கனம் பண்ணுவதில் முன்சென்று நடத்துவதன் மூலம், மொத்தமாக மூப்பர் குழுவில் சபையின் நம்பிக்கையை அவர்கள் அதிகரிப்பவர்களாக இருப்பர்.
ஒரு குழுவாகச் சேர்ந்து வேலைச் செய்தல்
7 சகோதரர்கள் சீர்பொருந்தும் பொருட்டும், சுவிசேஷ ஊழியத்துக்காகவும், பூமியில் தம்முடைய சபைக்குக் கிறிஸ்து அளித்த “மனுஷர்களில் வரங்களைப்” பற்றி பேசிய பிறகு, அப்போஸ்தலனாகிய பவுல், எழுதினான்: “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.” (எபேசியர் 4:7–15) கிறிஸ்துவே சபையின் சுறுசுறுப்பான தலையாக இருக்கிறார் என்பதையும் மூப்பர்கள் அவருடைய அதிகாரத்தின் வலது கரத்துக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் உணருவது, ஒவ்வொரு மூப்பர் குழுவினுள்ளும் ஐக்கியப்படுத்தும் காரியமாக இருக்கிறது. (எபேசியர் 1:22; கொலோசெயர் 1:18; வெளிப்படுத்துதல் 1:16, 20; 2:1) அவர்கள் பரிசுத்த ஆவியின் மூலமும் பைபிள் நியமங்களின் மூலமும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பின் ஆளும் குழு கொடுக்கும் முன்மாதிரியின் மூலமும் அவருடைய வழிநடத்தலை நாடுவார்கள்.—மத்தேயு 24:45–47; அப்போஸ்தலர் 15:2, 28; 16:4, 5.
8 எந்த ஒரு சூழ்நிலையை சமாளிக்கவோ அல்லது எந்த ஒரு முக்கிய தீர்மானத்தை எடுக்கவோ தேவையான பைபிள் நியமத்தை எடுத்துரைக்க, மூப்பர்களின் குழுவிலுள்ள எந்த ஒரு மூப்பரின் மனதையும் கிறிஸ்து பரிசுத்த ஆவியின் மூலமாக வழிநடத்தக்கூடும் என்பதை மூப்பர்கள் அறிந்திருப்பார்கள். (அப்போஸ்தலர் 15:6–15) ஒரு குழுவினுள் எந்தத் தனி ஒரு மூப்பரும் பரிசுத்த ஆவியின் ஏகபோக உரிமையை உடையவராக இல்லை. கலந்து பேசப்படும் ஒரு விஷயத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு பைபிள் நியமத்தையோ அல்லது ஆளும் குழுவிலிருந்து வரும் ஓர் அறிவுரையையோ எவர் கொண்டு வந்தாலும் அதைக் கவனமாக செவி கொடுத்துக் கேட்பதன் மூலம் மூப்பர்கள் ஒருவரையொருவர் கனம் பண்ணுவதைக் காண்பிப்பார்கள்.
9 கிறிஸ்தவ அடக்கமும் சாந்தமும் மனத்தாழ்மையும் மற்ற சகோதரர்களின் மீது ஆதிக்கம் செலுத்தவும் தன்னுடைய கருத்தை திணிக்கவும் முயற்சி செய்வதிலிருந்து எந்த ஒரு மூப்பரையும் தடை செய்யும். (நீதிமொழிகள் 11:2; கொலோசெயர் 3:12) ஒரு கிறிஸ்தவ கண்காணி குறிப்பிட்ட ஒரு விஷயத்தின் பேரில் மிக உறுதியான மற்றும் உண்மையான கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், அவனுடைய சக மூப்பர்களுக்கு அவனுடைய கருத்திலிருந்து வித்தியாசப்பட வேதப்பூர்வமானதும் தேவாட்சிக்கு அடுத்ததுமான காரணங்கள் இருப்பதை அவன் காண்பானேயானால், அவன் தன்னை ‘சிறியவனாக நடத்திக் கொண்டு’ பெரும்பான்மையினரின் கருத்துக்கு இணங்கிப் போவதன் மூலம் தன்னை “நியாயமானவனாக” காண்பிப்பான்.a (லூக்கா 9:48; 1 தீமோத்தேயு 3:3) வேதபூர்வமாக கலந்து பேசிய பின்பு பரிசுத்த ஆவியின் மூலமாக கொடுக்கப்பட்ட கிறிஸ்துவின் தலைமையின் கீழ், “ஒரு மனப்பட்டு” முடிவெடுத்த முதல் நூற்றாண்டு ஆளும் குழு வைத்த சிறந்த முன்மாதிரியை அவன் பின்பற்றுவான்.—அப்போஸ்தலர் 15:25.
10 முன்சென்று நடத்துவதற்காக ஒவ்வொரு சபையிலும் மூப்பர் குழுவின் நியமனம், பூர்வ கிறிஸ்தவ சபை வைத்த முன்மாதிரியின் அடிப்படையில் செய்யப்படுகிறது. (பிலிப்பியர் 1:1; 1 தீமோத்தேயு 4:14; தீத்து 1:5; எருசலேம் பைபிளில் தீத்து 1:5-ல் “மூப்பர்கள்” என்ற வார்த்தையின் அடிக்குறிப்பை ஒப்பிடவும்.) இந்த ஏற்பாட்டின் விவேகத்தை தொகுத்துரைப்பதாய் நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் (பக்கம் 37) புத்தகம் சொல்வதாவது: “சில மூப்பர்கள் ஒரு பண்பில் மற்றப் பண்புகளில் இருப்பதைவிட அதிகச் சிறந்தவர்களாக இருப்பர். அப்படியிருக்க அந்தக் குழுவிலுள்ள மற்றவர்கள், ஒருவேளை வேறுசிலர் பலவீனமாயிருக்கும் அந்தப் பண்புகளில் மேம்படுகிறவர்களாக இருப்பர். அப்படியானால், பொதுவாய்ப் பேச, இதன் பலனானது, முழுமையாக அந்தக் குழு கடவுளுடைய சபையில் சரியான கண்காணிப்பு செலுத்துவதற்குத் தேவையான எல்லாச் சிறந்த பண்புகளையும் அதற்குள் உடையதாயிருக்கும்.”
மூப்பர்கள் குழுக்களின் மத்தியில் பரஸ்பர மரியாதை
11 இவ்விதமாக மூப்பர்களின் குழு ஒரு தொகுதியாக, அதன் பாகங்களின் கூட்டுத் தொகை பிரதிநிதித்துவம் செய்வதைக் காட்டிலும் வேதப்பூர்வமான ஓர் அமைப்பாக இருக்கிறது. அவர்கள் கூடிவந்து கிறிஸ்துவின் மூலமாக யெகோவாவின் வழிநடத்துதலுக்காகவும் பரிசுத்த ஆவிக்காகவும் ஜெபிக்கையில், அவர்களிடம் தனிப்பட கலந்து பேசியிருந்தால் அவர்களால் எட்டியிருக்க முடியாத முடிவுகளை எடுக்க முடியும். மூப்பர்கள் ஒன்றாகக் கூடிவருகையில் அவர்களுடைய பல்வேறு குணாதிசயங்களும் வேறு ஒருவரின் நன்மைக்காக செயல் விளைவை உண்டுபண்ண காரியங்களின் மீது கிறிஸ்துவின் வழிநடத்துதலை பிரதிபலிக்கும் விளைவுகளை உண்டுபண்ணுகின்றன.—மத்தேயு 18:19, 20 ஒப்பிடவும்.
12 இப்படியாகவே கிறிஸ்து மூப்பர்களின் குழுக்களைக் கையாண்டார் என்பது, சிறிய ஆசியாவில் “ஏழு நட்சத்திரங்களுக்கு” அல்லது “ஏழு சபைகளின் தூதர்களுக்கு” அவர் அனுப்பிய செய்திகளிலிருந்து தெரிய வருகிறது. (வெளிப்படுத்துதல் 1:11, 20) அந்தச் செய்திகளில் முதலாவதானது, எபேசுவிலிருந்த சபைக்கு அதனுடைய ‘தூதன்’ அல்லது அபிஷேகம் பண்ணப்பட்ட கண்காணிகளின் குழுவின் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக, அப்போஸ்தலனாகிய பவுல் எபேசுவிலிருந்த மூப்பர் குழுவை விசேஷித்த ஒரு கூட்டத்துக்காக மிலேத்துவுக்கு வரவழைத்திருந்தான். அவர்களிடம் தங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருந்து சபையை மேய்க்கும்படியாக அவன் நினைப்பூட்டினான்.—அப்போஸ்தலர் 20:17, 28.
13 மூப்பர்களின் குழுக்கள் தங்கள் மத்தியிலும் தங்கள் சபையிலும் நேர்த்தியான நம்பிக்கையான ஆவியைக் காத்துக்கொள்வதற்கு குறிப்பாக கவனம் செலுத்த வேண்டும். (அப்போஸ்தலர் 20:30) தனிப்பட்ட ஒரு கிறிஸ்தவன் குறிப்பிட்ட ஓர் ஆவியை வெளிப்படுத்திக் காட்டுவது போலவே மூப்பர்களின் குழுக்களும் முழு சபைகளும் குறிப்பிட்ட ஓர் ஆவியை வளர்த்துக்கொள்ள முடியும். (பிலிப்பியர் 4:23; 2 தீமோத்தேயு 4:22; பிலேமோன் 25) தங்களுடைய சொந்த சபையில் ஒருவரையொருவர் கனம் பண்ணும் மூப்பர்கள் மூப்பர்களின் மற்ற குழுவோடு ஒருமனப்படுதல் குறைவுபடுவது சில சமயங்களில் சம்பவிக்கிறது. ஒரே மன்றத்தில் பல சபைகள் கூடும் நகரங்களில், கூட்டங்களின் அட்டவணைகள், பிராந்திய எல்லைகள், ராஜ்யமன்றத்தில் புதிய துணைக் கருவிகள் பொருத்துதல் போன்றவற்றின் சம்பந்தமாக சில சமயங்களில் மூப்பர் குழுக்களிடையே கருத்து வேற்றுமை ஏற்படுகிறது. ஒவ்வொரு குழுவினுள்ளும் மூப்பர்களைக் கட்டுப்படுத்தும் அடக்கம், சாந்தம், மனத்தாழ்மை மற்றும் நியாயம் என்ற அதே நியமங்களே மூப்பர் குழுக்களிடையே உறவை கட்டுப்படுத்த வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுலின் புத்திமதி வருமாறு: “சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.”—1 கொரிந்தியர் 14:26.
பிரயாண கண்காணிகளுக்குச் சரியான மரியாதை
14 யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளின் மத்தியில் இயங்கி வரும் மற்றொரு பைபிள் ஆதாரமுள்ள ஏற்பாடு, வட்டார அல்லது மாவட்ட கண்காணிகள் என்றழைக்கப்படும் பிரயாணம் செய்யும் மூப்பர்களின் ஒழுங்கான சந்திப்புகளாகும். (அப்போஸ்தலர் 15:36; 16:4, 5) இவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் “நன்றாய் விசாரணை செய்கிற மூப்பர்”களாக இருக்கிறார்கள். மற்ற மூப்பர்களைப் போலவே, அவர்கள், “விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்கு பாத்திரராக எண்ண வேண்டும்.”—1 தீமோத்தேயு 5:17.
15 அவனுடைய மூன்றாவது கடிதத்தில், அப்போஸ்தலனாகிய யோவான், தியோத்திரேப்புவை அவன் “சகோதரரை மரியாதையோடு ஏற்றுக் கொள்ளாமலிருப்பதற்காக” கண்டித்தான். (வசனம் 10) இந்தச் சகோதரர்கள் “அவருடைய [யெகோவாவுடைய] நாமத்தினிமித்தம்” புறப்பட்டு போன பயணம் செய்த கிறிஸ்தவர்களாக இருந்தனர். (வசனம் 7) அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காகவும் தாங்கள் விஜயம் செய்த பட்டணங்களிலுள்ள சபைகளை கட்டியெழுப்புவதற்காகவும் சுவிசேஷகர்களாக அனுப்பப்பட்டவர்களாக இருந்தனர். கடினமாக உழைக்கும் இந்தப் பிரசங்கிமார்கள் ‘தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி வழிவிட்டனுப்பப்பட’ வேண்டும் என்பதாக யோவான் கட்டளையிட்டான். (வசனம் 6) அப்போஸ்தலன் மேலுமாக: “ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக் கொள்ளக் கடனாளிகளாயிருக்கிறோம்” என்றான். (வசனம் 8) அவர்கள் மரியாதையுடன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர்களாக இருந்தனர்.
16 அதேவிதமாகவே இன்று, நற்செய்தியை பிரசங்கிக்கவும் சபைகளுக்கு உதவி செய்யவும் ஆளும் குழுவால் அனுப்பி வைக்கப்படும் பிரயாண கண்காணிகள் உபசரிப்போடு மரியாதையுடன் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். இந்தச் சகோதரர்களும் அவர்களுடைய மனைவிகளும் (அவர்கள் விவாகமானவர்களாயிருந்தால், அநேகர் அவ்விதமாகவே இருக்கிறார்கள்) நிலையான இருப்பிடத்தை விட்டுக் கொடுக்க மனமுள்ளவர்களாயிருந்திருக்கின்றனர். அவர்கள் இடம் விட்டு இடம் பிரயாணம் பண்ணி அநேகமாக உணவுக்கும் உறங்க ஒரு படுக்கைக்கும் சகோதரர்களின் உபசரிப்பின் மீது சார்ந்திருக்கின்றனர். பொ.ச. முதல் நூற்றாண்டில் பயண சுவிசேஷகர்களை அன்புடன் ஏற்றுக் கொண்ட காயுவுக்கு யோவான் எழுதினான்: “பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.” (3 யோவான் 5) அதேவிதமாகவே இன்று ‘யெகோவாவின் நாமத்தினிமித்தம்’ பயணம் செய்கிறவர்கள் பிரியமாய் எண்ணப்படவும் அன்பும் மரியாதையும் காண்பிக்கப்படவும் பாத்திரராயிருக்கிறார்கள்.
17 மூப்பர்கள், குறிப்பாக விஜயம் செய்யும் ஆளும் குழுவின் இந்தப் பிரதிநிதிகளுக்குத் தகுந்த மரியாதையை காண்பிக்க வேண்டும். இவர்கள், அவர்களுடைய ஆவிக்குரிய குணங்களுக்காகவும் அவர்களுடைய அனுபவத்தின் காரணமாகவும் சபைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இது பொதுவாக அநேக உள்ளூர் மூப்பர்களுடையதைக் காட்டிலும் மிக விரிவாக இருக்கிறது. இந்தப் பிரயாண கண்காணிகளில் சிலர், அவர்கள் சந்திக்கும் சபைகளிலுள்ள ஒரு சில மூப்பர்களைக்காட்டிலும் வயதில் இளையவர்களாக இருக்கலாம். ஆனால் தகுந்த மரியாதையை அவர்களுக்கு மறுப்பதற்கு இது சரியான ஒரு காரணமம் அல்ல. தீமோத்தேயுவுக்குப் பவுல் கொடுத்த எச்சரிப்பை மனதில் கொண்டவர்களாய் இவர்கள், ஒரு சகோதரரை உதவி ஊழியராக அல்லது மூப்பராக சிபாரிசு செய்ய உள்ளூர் மூப்பர்கள் அவசரப்படுகையில் அதைப் பக்குவப்படுத்த வேண்டிய அவசியத்தை உணரலாம். (1 தீமோத்தேயு 5:22) விஜயம் செய்யும் கண்காணி உள்ளூர் மூப்பர்கள் கொண்டுவரும் தர்க்கங்களுக்குத் தகுந்த கவனத்தைக் கொடுக்க வேண்டியதாக இருக்கையில், இவர்கள் அவருக்குச் செவிகொடுத்துக் கேட்டு அவருடைய மிகுதியான அனுபவத்திலிருந்து நன்மையடைய மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆம், அவர்கள், “இப்படிப்பட்டவர்களைப் பிரியமாய் எண்ண” வேண்டும்.—பிலிப்பியர் 2:29.
“இப்படிப்பட்டவர்களை அங்கீகாரம் பண்ணுங்கள்”
18 கொரிந்தியருக்கு எழுதிய தன்னுடைய முதல் கடிதத்தில் பவுல் எழுதியதாவது: “சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயா நாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே. இப்படிப்பட்டவர்களுக்கும், உடன்வேலையாட்களாய்ப் பிரயாசப்படுகிற மற்ற யாவருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாயிருக்கிறேன், நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதாயிருந்ததை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்; இப்படிப்பட்டவர்களை அங்கீகாரம் பண்ணுங்கள்.”—1 கொரிந்தியர் 16:15–18.
19 மிகவும் அறியப்படாதவர்களாக இருந்த சிலர் உட்பட, பவுல் தன் சகோதரர்களிடமாக என்னே ஒரு நேர்த்தியான பெருந்தன்மையான மனநிலையைக் கொண்டிருந்தான். ஆனால் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும் அவர்களுடைய முயற்சியில் “ஒத்துழைப்பவர்களாயும்” “பிரயாசப்படுகிற”வர்களாயும் இருந்ததன் காரணமாக பவுல் அவர்களை நேசித்தான். பழைய குறைகள் பழைய குறைகளாகவே இருக்க அனுமதிப்பதிலும்கூட பவுல் ஒரு மெச்சத்தகுந்த முன்மாதிரியை வைத்தான். யோவான் மாற்கு தன்னுடைய முதல் மிஷனரி பயணத்தின் போது நம்பிக்கையை குலைத்துவிட்டிருந்தபோதிலும், பவுல் பின்னால் அவனை கொலோசெயிலிருந்த சபைக்கு மனமுவந்து சிபாரிசு செய்தான். (அப்போஸ்தலர் 13:13; 15:37, 38; கொலோசெயர் 4:10) ரோமில் சிறையிலிருந்த போது பவுல் மாற்குவைத் தன்னுடன் இருக்கும்படியாக கேட்டுக்கொண்டான். ஏனென்றால் அவன் சொன்னவிதமாகவே, “ஊழியத்தில் அவன் [மாற்கு] எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.” (2 தீமோத்தேயு 4:11) அற்பமாக மனக்கசப்பை வைத்துக் கொள்வது அங்கு இல்லை!
20 இன்று கடவுளுடைய மக்கள் மத்தியில், ஸ்தேவானைப் போல தங்கள் சகோதரர்களுக்கு ஊழியஞ்செய்துவரும் அநேக பக்தியுள்ள கண்காணிகள் இருக்கிறார்கள். நிச்சயமாகவே அவர்கள் தங்களுடைய குற்றங்குறைகளையும் உடையவர்களாக இருக்கிறார்கள். என்றபோதிலும் அவர்கள் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யோடும் அதன் ஆளும் குழுவோடும் “ஒத்துழைத்து” பிரசங்க வேலையிலும் தங்கள் சகோதரர்களுக்கு உதவி செய்வதிலும் “பிரயாசப்படு”கிறார்கள். நாம் ‘இப்படிப்பட்டவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து’ அவர்களிடமுள்ள குறைகளைத் தேடிக் கொண்டில்லாமல் அவர்களுடைய குணங்களுக்காக நாம் அவர்களை போற்றுகிறவர்களாக இருக்க வேண்டும். மூப்பர்கள் தங்கள் சகமூப்பர்களுக்குப் போற்றுதலையும் மரியாதையையும் காண்பிப்பதில் முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். மூப்பர்கள் அன்பின் ஆவியிலும் ஐக்கியத்தின் ஆவியிலும் ஒருவரோடொருவர் ஒத்துழைக்க வேண்டும். அனைவருமே இப்படிப்பட்ட உண்மையுள்ள சகோதரர்களின் மதிப்பை உணர்ந்து, “இப்படிப்பட்டவர்களைக் பிரியமாய் எண்ணு”வார்கள்.—பிலிப்பியர் 2:29. (w88 10⁄1)
[அடிக்குறிப்புகள்]
a புதிய உலக மொழிபெயர்ப்பு குறிப்புரை பைபிளின் ஓர் அடிக்குறிப்பு, 1 தீமோத்தேயு 3:3-லுள்ள “நியாயமாக” என்ற வார்த்தை “இணங்குவது” என்பதாக சொல்லர்த்தமாகப் பொருள்படும் ஒரு கிரேக்க பதத்தை மொழிபெயர்க்கிறது என்பதாகக் குறிப்பிடுகிறது.
விமர்சனத்துக்குக் குறிப்புகள்
◻ எப்படிப்பட்ட மனிதர்களைப் பவுல் குறிப்பாகப் பிரியமாக எண்ணியிருந்தான்? இன்று யார் நம்முடைய விசேஷித்த கரிசனைக்குப் பாத்திரமாக இருக்கிறார்கள்?
◻ மூப்பர்கள் தாங்கள் ஒருவரையொருவர் கனம் பண்ணுவதை எப்படிக் காண்பிக்க முடியும்?
◻ மூப்பர்களின் ஒரு குழு ஏன், அதன் உறுப்பினர்கள் தனிப்பட செயல்படுகையில் செய்வதைக் காட்டிலும் அதிகத்தைச் சாதிக்க முடியும்?
◻ மூப்பர்களின் ஒரு குழு மூப்பர்களின் மற்றொரு குழுவை கனம் பண்ணுவதை எந்த விஷயங்களில் காண்பிக்கலாம்?
◻ கண்காணிகளின் எந்தப் பிரிவினர் குறிப்பாக பிரியமாக எண்ணப்பட பாத்திரமுள்ளவர்களாக இருக்கிறார்கள்? இந்தச் சரியான மரியாதை எவ்விதமாக காண்பிக்கப்படலாம்?
[கேள்விகள்]
1. எப்படிப்பட்ட ஆட்களை அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பாக பிரியமாய் எண்ணினான்? இப்படிப்பட்ட ஒரு கிறிஸ்தவனைக் குறித்து அவன் என்ன எழுதினான்?
2. நாம் யாரை மிகவும் அன்பாய் எண்ணிக் கொள்ள வேண்டும்? ஏன்?
3. (எ) ஒருவரோடொருவர் சமாதானமாயிருக்க எது நமக்கு உதவிசெய்யும்? (பி) எந்த விஷயத்தில் மூப்பர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்?
4, 5. (எ) கடினமாக உழைக்கும் மூப்பர்களை அப்போஸ்தலனாகிய பவுல் போற்றினான் என்பதை எது காட்டுகிறது? (பி) ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அவன் என்ன எழுதினான்? அவனுடைய வார்த்தை ஏன் குறிப்பாக மூப்பர்களுக்குப் பொருந்துகிறது?
6. (எ) மூப்பர்கள் எதைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்? ஏன்? (பி) முழு மூப்பர் குழுவிலும் சபையின் நம்பிக்கையை மூப்பர்கள் எவ்விதமாக அதிகரிக்கலாம்?
7. மூப்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஐக்கியமாக வேலை செய்ய எது உதவிசெய்யும்? இதை அவர்கள் எவ்விதமாக காண்பிப்பார்கள்?
8. எல்லா மூப்பர்களும் எதை நினைவில் கொள்ள வேண்டும்? அவர்கள் எவ்விதமாக ஒருவரையொருவர் கனம் பண்ணுவார்கள்?
9. (எ) ஆவிக்குரிய என்ன குணங்கள் சகமூப்பர்களின் மேல் ஆதிக்கம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்கு ஒரு கண்காணிக்கு உதவிசெய்யும்? (பி) ஒரு மூப்பர் எவ்விதமாக தன்னை “நியாயமானவராகக்” காண்பிப்பார்? இந்த விஷயத்தில் முதல் நூற்றாண்டு ஆளும் குழு எவ்விதமாக முன்மாதிரியை வைத்தது?
10. (எ) ஒவ்வொரு சபையிலும் மூப்பர் குழுவின் நியமனம் பைபிள் ஆதாரமுள்ள ஓர் ஏற்பாடு என்பதை எது நிரூபிக்கிறது? (பி) இந்த ஏற்பாட்டின் நன்மைகளை நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகம் எவ்விதமாக விளக்குகிறது?
11, 12. (எ) மூப்பர்களின் குழு அதன் அங்கத்தினர்கள் தனிப்பட செயல்படுவதைவிட, அதிகத்தை ஏன் சாதிக்க முடியும்? (பி) மூப்பர்களின் குழுக்களை கிறிஸ்து இயேசுவும் அப்போஸ்தலனாகிய பவுலும் எவ்விதமாக கையாண்டார்கள்? என்ன புத்திமதி கொடுக்கப்பட்டது?
13. மூப்பர்கள் அவர்களுடைய உள்ளூர் மூப்பர் குழுவினுள்ளும் மற்ற மூப்பர்களின் குழுக்களோடும் தங்களுடைய மொத்தமான உறவில் காண்பிக்கும் ஆவிக்கு ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
14. மூப்பர்களின் வேறு எந்தப் பிரிவினர் “பிரியமாய் எண்ணப்பட” பாத்திரராயிருக்கிறார்கள்? ஏன்?
15. பயணம் செய்யும் சுவிசேஷகர்களைக் குறித்து அப்போஸ்தலனாகிய யோவான் என்ன புத்திமதியைக் கொடுத்தான்?
16. முதல் நூற்றாண்டு சுவிசேஷகர்களுக்கு “உண்மையான வேலையை” செய்த காயுவின் முன்மாதிரியை இன்று எல்லாக் கிறிஸ்தவர்களும் எவ்விதமாக பின்பற்றலாம்? இது ஏன் பொருத்தமாக இருக்கிறது?
17. விஜயம் செய்யும் ஆளும் குழுவின் பிரதிநிதிகளுக்கு, சபை மூப்பர்கள் எவ்விதமாக சரியான மரியாதையை காண்பிக்க வேண்டும்?
18, 19. (எ) உடன் வேலையாட்களுக்கு பவுல் எவ்விதமாக தன்னுடைய போற்றுதலை வெளியிட்டான்? (பி) பவுல் தன் சகோதரர்களுக்கு எதிராக மனக்கசப்பை மனதில் தொடர்ந்து வைத்துக் கொண்டில்லை என்பதை என்ன உதாரணம் காண்பிக்கிறது?
20. பொதுவாக கிறிஸ்தவர்கள், குறிப்பாக மூப்பர்கள் உண்மையுள்ள கண்காணிகளை அவர்கள் போற்றுவதையும் “இப்படிப்பட்டவர்களைப் பிரியமாய் எண்ணு”வதையும் எவ்விதமாக காண்பிக்க வேண்டும்?
[பக்கம் 18-ன் படம்]
மூப்பர்கள் ஒருவருக்கொருவர் சரியான போற்றுதலை காண்பிக்க வேண்டும்
[பக்கம் 22-ன் படம்]
பயணக் கண்காணிகளுக்கு அன்பையும் மரியாதையையும் காண்பியுங்கள்