மெய் அழகு—நீங்கள் அதை வளர்க்கலாம்
அழகு சம்பந்தமாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேதாகமம் ஆலோசனை வழங்குகிறது. ஆண்களுக்கு அது சொல்லுகிறது: “வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்.” (நீதிமொழிகள் 20:29) ஆம், வாலிபரின் சக்தியும் உயிர்த்துடிப்பும் மிகவும் கவர்ச்சியாக இருக்கலாம். அந்த இளமை சக்தி குறையும்போது என்ன நேரிடும்? வேதாகம நீதிமொழி சொல்லுகிறது: “நீதியின் வழியில் உண்டாகும் நரை மயிரானது மகிமையான கிரீடம்.” (நீதிமொழிகள் 16:31) நீதியானது உள்ளார்ந்த அழகின் ஓர் அம்சமாகும். ஒரு வாலிபன் அதை வளர்ப்பானாகில், அவன் வாலிபத்தின் கவர்ச்சியான சக்தியை இழந்த பிறகும் அது அங்கு இருக்கும்.
பெண்களைக் குறித்து வேதாகமம் சொல்லுகிறது: “செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; யெகோவாவுக்குப் (NW) பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.” (நீதிமொழிகள் 31:30) அழகிய, செளந்தரியமான வாலிபப் பெண் ஒரு மகிழ்ச்சியூட்டும் துணையாவாள். ஆனால் அந்தச் சரீரப் பிரகாரமான செளந்தரியத்திற்கு பின்னால் மாய்மாலமும் தன்னல தற்பெருமையும் மறைந்திருந்தால் என்ன? அப்போது அழகானது ஆழமற்றதாகும்; மேலும் அது உள்ளான ஒரு விகாரத்தை மூடிமறைக்கிறது. அழகு வாடிமங்கிய பிறகு, என்ன எஞ்சியிருக்கும்? நேர்த்தியான வெளித்தோற்றம், ‘யெகோவாவுக்கான பயத்தில்’ வேரூன்றிய ஒரு மங்காத, உள்ளான அழகோடுகூட பொருந்தியிருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்?
ஆள்தன்மையில் ஒரு மாற்றம்
இந்த உள்ளான அழகை வளர்ப்பது இயலுமா? ஆம். உண்மையில், கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு கட்டாயமானதும்கூட. கடவுள் உண்மை அழகை மதிக்கிறார். “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.” (பிரசங்கி 3:11, ரிவைஸ்ட் ஸ்டான்டர்டு வெர்ஷன்) அழகற்ற உள்ளார்ந்த தன்மைகளை வெளிப்படுத்தும் நடத்தையுடையோரின் வணக்கத்தை அவர் ஏற்றுக்கொள்வதில்லை.
கொலோசெயருக்கு அப்போஸ்தலராகிய பவுலின் வார்த்தைகள் ஓர் உள்ளான அழகை வளர்ப்பதின் தேவையை உள்ளடக்கியுள்ளது. முதலாவதாக, அவர் அறிவுறுத்துகிறார்: “கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோடுங்கள்.” ஆம், அப்படிப்பட்ட பண்பற்ற காரியங்களைச் செய்பவன் எவனும் கடவுளுக்கும் நேர்சிந்தனையுடைய மனிதருக்கும் அருவருப்பானவனாக இருக்கிறான். மேலும், பவுல் தொடருகிறார்: “தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.” (கொலோசெயர் 3:8-10) கடவுளுடைய சித்தத்துடன் ஒத்திருக்கும் யோசிக்கும் மற்றும் உணரும் தன்மைகளை நாம் “தரித்துக்கொள்ள” வேண்டும். இந்தப் “புதிய ஆள்தன்மையின்” விசேஷமான குணங்கள் யாவை?
கிறிஸ்தவ பண்புகள்
அதை உருவாக்கச் செல்லும் அநேக அழகிய பண்புகளை வேதாகமம் பட்டியலிடுகிறது. ஆனால் இந்த உள்ளான அழகிற்கான அடிப்படை இயேசுவின் வார்த்தைகளில் விவரிக்கப்பட்டுள்ளது: “உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.” (மத்தேயு 22:37-39, NW) கடவுளின்பேரிலுள்ள அன்பானது அவரைப் பிரியப்படுத்தும் வகையான ஆளாக இருக்க நம்மை வழிநடத்தும். அப்படிப்பட்ட அன்பு அவரைப்பற்றி மற்றவரிடம் பேசி அவர்களுக்கு உதவி செய்து, அவர்களும் தங்களது சிருஷ்டிகரை அறியவைக்க நம்மை உந்துகிறது.—ஏசாயா 52:7.
புதிய ஆள்தன்மையை உருவாக்க உதவும் சில இதரப் பண்புகள் அப்போஸ்தலராகிய பவுலால் விவரிக்கப்பட்டுள்ளது: “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம், இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.”—கலாத்தியர் 5:22, 23.
மேலும் கூடுதலாக, குறிப்பாகக் கணவன்மாருக்கு வேதாகமம் சொல்லுகிறது: “கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். . . . புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, . . . தம்மைத் தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” (எபேசியர் 5:23, 25, 27) மேலும் மனைவிகளுக்கு வேதாகமம் சொல்லுகிறது: “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்த புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். . . . மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.” (எபேசியர் 5:22, 33) கணவன் தன் பொறுப்புகளை அன்பாக, தன்னலமற்ற மேலும் பொறுமையான வகையில் நிறைவேற்றும்பொழுது குடும்ப வாழ்க்கை எவ்வளவு அழகாக உள்ளது! மேலும் மனைவியானவள் போட்டி போடாமலும், அதிகமாக குறைகாணாமலும் அன்பாக அவனை ஆதரித்து தன் உள்ளான அழகை வெளிக்காட்டும்போது, கணவன் அவனுக்கான சரியான பாகத்தை நிறைவேற்றுவது எவ்வளவு எளிதாகிறது. அப்படிப்பட்ட நிலைமைகளின் கீழ் குடும்ப வாழ்க்கை உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கலாம்.
முந்திய கட்டுரையில் கூறப்பட்ட உதாரணங்கள் இந்தப் பண்புகளில் சிலவற்றை செயலில் காட்டின. சூலமத்திய பெண் சாலொமோனின் சபையின் மினுமினுப்பிற்காக தன் ஆடுமேய்க்கும் காதலனை விட்டுவிட மறுத்து அவன்பேரில் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பையும் மாறாத்தன்மையையும் வெளிக்காட்டினாள். தன்னுடைய எஜமானனாகிய போத்திபாருக்கு எதிராக பாவம் செய்ய மறுத்தபோது, யோசேப்பு ஓர் உள்ளான நற்குணத்தை வெளிப்படுத்தினான். அவன் போத்திபாரின் மனைவியால் கவர்ந்திழுக்கப்படுவதற்கு மாறாக அவளைவிட்டு ஓடியபோது அவன் தன்னடக்கத்தையும் வெளிக்காட்டினான். மேலும் தன் வாழ்க்கையின் இந்த அநேக அனுகூலமற்ற சம்பவங்கள் தன்னைச் சோர்வுற அனுமதியாதபோது அவன் சாந்தத்திற்கும், சமாதானத்திற்கும், நீடிய பொறுமைக்கும் உதாரணமானான்.
ஓர் அழகற்ற உலகில் அழகு
இப்படிப்பட்ட அழகான பண்புகள் இன்று நடைமுறையானவையா? பலர் அவ்வாறு எண்ணுவதில்லை. மாறாக, ஓர் உணர்ச்சியற்ற வெளிதோற்றத்தை வளர்த்து அவர்கள் வாழும் இந்தத் தன்னல அக்கறைகளை நாடும், பேராசைப் பிடித்த உலகிற்கு ஏற்றவாறு பிரதிபலிக்கிறார்கள். தொடர்ந்து உயிர்வாழ்வதற்கு இரக்கமற்றவராகவும், பேராசை மிகுந்தவராகவும், தன்னைத்தானே முதன்மையாக வைப்பவராகவும் தங்களுக்குக் கிடைக்கக்கூடியவற்றை எல்லாம் அடைய முயலுபவராகவும் இருக்கவேண்டுமென்று அவர்கள் உணருகிறார்கள்.
இதற்கு மாறாக, வேதாகமம் உற்சாகமளிக்கிறது: “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.” (பிலிப்பியர் 2:3, 4) மனிதவர்க்கம் பொதுவாக இந்த அருமையான ஆலோசனையை பின்பற்றாததால் மட்டுமே மனித சமூகம் இவ்வளவு மோசமாக கெட்டுபோய்வருகிறது.
மேலும், தற்போதைய உலகில், ஒரு மனிதனின் வெற்றியானது பணத்தாலும் பதவியாலும் அளக்கப்படுகிறது. பணமுடையவன் வெற்றி நிறைந்தவனாகக் கருதப்படுகிறான். என்றபோதிலும், மெய்யான பண்புகளை பொறுத்தவரையில், ஒருவன் பணக்காரன் அல்லது ஏழை என்பது முற்றும் முக்கியமற்ற ஒன்றாகிறது. உண்மையிலேயே, செல்வம் அதன் அபாயங்களைக் கொண்டுள்ளது. வேதாகமம் எச்சரிக்கிறது: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.” மேலும் அது கூறுகிறது: “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.”—1 தீமோத்தேயு 6:9, 10.
நிச்சயமாகவே, சுயநலக்காரராகவும், பேராசைக்காரராகவும், பொருளாசைக்காரராகவும், மற்றும் இரக்கமற்றவராகவும் உள்ளவர்கள் அடிக்கடி ஒரு தற்காலிக “வெற்றியை”தான் இன்று அனுபவிக்கிறார்கள். ஆனால் அது மெய்யான வெற்றி அல்ல; ஏனென்றால் அப்படிப்பட்ட அழகற்ற முறையில் வாழ்வதற்கான கிரயம்—தனிப்பட்ட வகையில் மற்றவரால் விரும்பப்படாத நிலை, சீர்குலைந்த விவாகங்கள், ஆரோக்கியமற்ற நிலை, மேலும் பொதுவான ஏமாற்றம்—மிகவும் அதிகமாக உள்ளது. மனிதன் தேவ சாயலில் உண்டாக்கப்பட்டான்; ஆனால், அவனுள் கடவுள் முதலில் பதியவைத்த பண்புகளுக்கெதிராக வன்மையாக அவன் கலகம் செய்யும்போது, அவன் தனிப்பட்ட சந்தோஷத்தை எப்பொழுதும் அடையமுடியாது.—ஆதியாகமம் 1:27.
உள்ளார்ந்த அழகை வளர்ப்பது
இந்த உலகின் மோசமான செல்வாக்கை எதிர்த்து சிறப்பான, தெய்வீகத் தன்மைகளை நாம் எப்படி வளர்க்கலாம்? ‘அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்’ என்று பவுல் இந்தப் பண்புகளை பட்டியலிட்டபோது அவற்றை “ஆவியின் கனி” என்று அழைத்தான். (கலாத்தியர் 5:22, 23) ஆகவே இந்த அழகிய உள்ளார்ந்த பண்புகளை நாம் வளர்க்கவேண்டுமானால் கடவுளுடைய ஆவி தேவைப்படுகிறது.
எப்படி? தேவ ஆவியால் ஏவி எழுதப்பட்ட பைபிளை படிப்பது, இந்தப் பண்புகளை நாம் அடையாளங்கண்டுகொள்ளவும், அவற்றை வளர்ப்பதற்கான ஆவலைப் பலப்படுத்தவும் நமக்கு உதவும். (2 தீமோத்தேயு 3:16) பைபிளை ஜனங்கள் படிக்க உதவுவதை அவர்களுடைய ஊழியத்தில் ஒரு பாகமாக அவர்கள் கருதுவதால், அப்படிப்பட்ட திட்டத்தில் உதவ யெகோவாவின் சாட்சிகள் எப்பொழுதுமே சந்தோஷப்படுகிறார்கள். உண்மையான ஒரு சுய-பரிசோதனை நாம் எங்கு குறைபட்டிருக்கிறோம் என்பதைக் காண நமக்கு உதவும்; இந்த இடங்களில் கடவுளுடைய ஆவியின் உதவிக்காக நாம் ஜெபிக்கலாம். கடவுளின் சகவணக்கத்தாருடன் கூட்டுறவு கொள்வது நமக்குத் தேவையான நம் சகாக்களின் ஆதரவை அளிக்கும்; மேலும், இங்கும்கூட, கடவுளின் ஆவி உதவுகிறது, ஏனென்றால், இயேசு கூறியது போல், “இரண்டுபேராவது, மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறீர்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்.”—மத்தேயு 18:20.
ஓர் அழகிய உலகம் அண்மையிலிருக்கிறது
நிச்சயமாகவே, நம்மில் யாருமே நம் அபூரணங்கள் முழுவதையும் மேற்கொள்ள முடியாது; ஆனால் இந்த உள்ளான அழகை வளர்த்துக்கொள்ள நாம் கடுமையாக முயற்சித்தால், தேவன் நம் முயற்சிகளை ஆசீர்வதிப்பார். அற்புதமான வகையில் அவர் நமக்குச் சன்மானமளிப்பார். இப்போதுள்ள ஒழுங்குமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் ஒரு புதிய ஒழுங்குமுறையை விரைவில் முன்னறிவித்து அழைக்கும் கடவுளின் நோக்கத்தை நமக்காக பைபிள் பதிவு செய்திருக்கிறது. அதில், “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) இயேசு தாமே கூறினார்: “சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.”—மத்தேயு 5:5.
அச்சமயம், இந்தக் காரிய ஒழுங்கின் அவலட்சணமான போட்டி மனப்பான்மைக்கும் சுயநலத்திற்கும் பதிலாக எழில்மிக்க அமைதியும் சாந்தமும் இருக்கும். “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை; கேடு செய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” (ஏசாயா 11:9) நிச்சயமாகவே, தேவன் “அவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:4.
அப்படிப்பட்ட நிலைமைகள் கேட்பதற்கு நன்றாக உள்ளதா? கடவுளையும் அயலானையும் அன்புகூருவதன் அடிப்படையில் உண்டான உள்ளான அழகை பூமியில் வாசமாயிருப்பவர்கள் அப்போது கொண்டிருப்பதால்தான் அவை சாத்தியமாகின்றன. மேலும், அவருடைய தராதரங்களைப் பின்பற்ற கடுமையாக முயற்சி செய்து, “புதிய ஆள்தன்மையை” வளர்த்துக்கொண்டு, அவரை இப்போது சேவிப்பவர்கள் அந்த வாக்குறுதியின் நிறைவேற்றத்தை காண்பார்கள் என்று தேவன் வாக்களித்திருக்கிறார். அழகிய தோற்றம், சரீரப்பிரகாரமான அழகு இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை என்றுமே கொண்டுவர முடியாது. நேர்மையாய் யோசிக்கும் மனிதர்களையும் கடவுளையும்கூட மிகவும் பிரியப்படுத்தும் அந்த அதி சிறப்பான, நெடுநாள்-நிலைக்கும் உள்ளான அழகை வளர்த்துகொள்வதற்கு என்ன அருமையான காரணம்! (w89 2/1)
[பக்கம் 6-ன் படம்]
சரீரப்பிரகாரமான அழகுடையவர்கள் சுயநலமாக இருப்பதையும், தன்னலத்திற்காக காரியங்களை திசைதிருப்பி கையாளுவதையும் தவிர்க்க வேண்டும். மாறாக, கடவுளுக்குப் பிரியமான உள்ளான அழகை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்