உருக்கமான இரக்கமுள்ளோராக இருங்கள்
“இரக்கத்தின் உருக்கமான பாசங்களையும் தயவையும் கொண்டு உங்களை உடுத்துவித்துக்கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:12, NW.
1. இன்று இரக்கத்திற்கு ஏன் பெரும் தேவையுள்ளது?
இரக்கமான உதவி தேவைப்படுவோராக இத்தனை பல ஜனங்கள் சரித்திரத்தில் முன்னொருபோதும் இருந்ததில்லை. நோய், பசி, வேலையில்லாமை, குற்றச்செயல், போர்கள், அரசிலா குழப்பநிலை, இயற்கை விபத்துக்கள் ஆகியவற்றிற்கெதிரில் லட்சக்கணக்கானோருக்கு உதவி தேவைப்படுகிறது. ஆனால் இவற்றைப்பார்க்கிலும் அதிக வினைமையான ஒரு பிரச்சினை உள்ளது, அது மனிதகுலத்தின் மிக மோசமான ஆவிக்குரிய நிலைமையாகும். தனக்குக் கொஞ்சக்காலம் மாத்திரமே உண்டென்று அறிந்திருக்கிற சாத்தான் “உலகமனைத்தையும் மோசம்போக்”கிக் கொண்டிருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:9, 12) ஆகையால், முக்கியமாய், உண்மையான கிறிஸ்தவ சபைக்குப் புறம்பேயுள்ளவர்கள் தங்கள் உயிரை இழக்கும் ஆபத்தில் இருக்கின்றனர், கடவுளுடைய வரவிருக்கும் நியாயத்தீர்ப்பு நாளின்போது மரண தண்டனை நிறைவேற்றப்படுவோருக்கு உயிர்த்தெழுதலின் எந்த நம்பிக்கையும் இராதென பைபிள் தெரிவிக்கிறது.—மத்தேயு 25:31-33, 41, 46; 2 தெசலோனிக்கேயர் 1:6, 8-10.
2. பொல்லாதவர்களை அழிப்பதை யெகோவா ஏன் நிறுத்தி வைத்திருக்கிறார்?
2 எனினும், நன்றிகெட்டவர்களும் பொல்லாதவர்களுமானோரிடம் யெகோவா தேவன், இந்தப் பிந்திய நேரம் வரையிலுமாகப் பொறுமையையும் இரக்கத்தையும் தொடர்ந்து காட்டிக்கொண்டிருக்கிறார். (மத்தேயு 5:45; லூக்கா 6:35, 36) உண்மையற்ற இஸ்ரவேல் ஜனத்தைத் தண்டிப்பதை யெகோவா தாமதித்த அதே காரணத்தினிமித்தமே அவர் இதைச் செய்திருக்கிறார். “யெகோவாவாகிய ஆண்டவரின் திருவாக்கோ இது: என் ஜீவன்மேல் ஆணை, நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல் துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன்; இஸ்ரவேல் வீட்டாரே, உங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார்.”—எசேக்கியேல் 33:11, தி.மொ.
3. தம்முடைய ஜனமல்லாதவர்களுக்கு யெகோவா காட்டின இரக்கத்திற்கு என்ன உதாரணம் நமக்கு உள்ளது, இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
3 பொல்லாத நினிவே பட்டணத்தாருக்கும் யெகோவாவின் இரக்கம் காட்டப்பட்டது. வரவிருந்த அழிவைக் குறித்து அவர்களை எச்சரிக்கும்படி, யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியாகிய யோனாவை அனுப்பினார். யோனாவின் பிரசங்கத்துக்கு அவர்கள் செவிகொடுத்து மனந்திரும்பினர். இது, அந்தச் சமயத்தில் அந்த நகரத்தை தாம் அழிக்காமல் விடும்படி இரக்கமுள்ள கடவுளாகிய யெகோவாவை கனிவித்தது. (யோனா 3:10; 4:11) உயிர்த்தெழுதல் சாத்தியமாய் இருந்திருக்கக்கூடிய நினிவே பட்டணத்தாருக்காக கடவுள் வருத்தப்பட்டாரெனில், இன்று நித்திய அழிவை எதிர்ப்படும் ஜனங்களுக்காக அவர் இன்னும் எவ்வளவு அதிக இரக்கப்படுவார்!—லூக்கா 11:32.
முன்னொருபோதும் ஈடிணையற்ற இரக்கமான ஊழியம்
4. இன்று எவ்வாறு யெகோவா தம்முடைய ஜனத்துக்கு இரக்கம் காட்டுகிறார்?
4 தம்முடைய இரக்கமுள்ள பண்பியல்புக்கு ஒத்திசைய, யெகோவா தம்முடைய சாட்சிகளை, “ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி”யுடன் தங்கள் அயலாரைத் தொடர்ந்து சந்தித்துவரும்படி பொறுப்பளித்து கட்டளையிட்டிருக்கிறார். (மத்தேயு 24:14, NW) உயிரைக்காக்கும் இந்த ஊழியத்திற்கு ஆட்கள் நன்றியுணர்வோடு பிரதிபலிக்கையில், ராஜ்ய செய்தியைப் புரிந்துகொண்டு ஏற்கும்படி யெகோவா அவர்களுடைய இருதயங்களைத் திறக்கிறார். (மத்தேயு 11:25; அப்போஸ்தலர் 16:14) உண்மையான கிறிஸ்தவர்கள், அக்கறை காட்டுவோரை மறுபடியும் சந்தித்து, கூடியபோதெல்லாம் பைபிள் படிப்பை நடத்தி அவர்களுக்கு உதவிசெய்வதன்மூலம், தங்கள் கடவுளுடைய மாதிரியைப் பின்பற்றி உருக்கமான இரக்கத்தைக் காட்டுகிறார்கள். இவ்வாறு, 1993-ல் 45 லட்சத்துக்கு மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகள், 231 நாடுகளில், வீடுவீடாகப் பிரசங்கிப்பதிலும் தங்கள் அயலாரோடு பைபிள் படிப்பதிலும் நூறு கோடிக்கு மேற்பட்ட மணிநேரங்களைச் செலவிட்டனர். புதிதாய் அக்கறைகாட்டுவோரான இவர்கள், தங்கள் முறையாக, யெகோவாவுக்குத் தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து, அவருடைய ஒப்புக்கொடுத்த சாட்சிகளின் அணிவரிசைகளைச் சேர்ந்துகொள்ளும் வாய்ப்பை உடையோராக உள்ளனர். இவ்வாறு, சாத்தானின் சாகும் நிலையிலுள்ள உலகத்தில் சிக்கப்பட்டிருப்போராக இன்னுமிருக்கும் எதிர்கால சீஷர்களின் சார்பாகச் செய்யப்படும் ஈடிணையற்ற இந்த இரக்கமுள்ள ஊழியத்தைச் செய்யும் பொறுப்பை அவர்களும் ஏற்கின்றனர்.—மத்தேயு 28:19, 20; யோவான் 14:12.
5. கடவுளுடைய இரக்கம் அதன் எல்லையை எட்டுகிறபோது, கடவுளைத் தவறாக எடுத்துரைக்கும் மதத்திற்கு என்ன சம்பவிக்கும்?
5 சீக்கிரத்தில் யெகோவா ‘யுத்தவீரராக’ செயல்படுவார். (யாத்திராகமம் 15:3, தி.மொ.) அவர் தம்முடைய பெயருக்காகவும் தம்முடைய ஜனத்துக்காகவும் கொண்டுள்ள இரக்கத்தினால், அக்கிரமத்தை முற்றிலும் ஒழித்து நீதியுள்ள ஒரு புதிய உலகத்தை ஸ்தாபிப்பார். (2 பேதுரு 3:13) கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளே கடவுளின் கோப நாளை முதலாவதாக அனுபவிக்கும். எருசலேமிலிருந்த தம்முடைய சொந்த ஆலயத்தைக் கடவுள் பாபிலோனின் அரசனுடைய கைக்குத் தப்பவிடாததைப்போலவே, தம்மைத் தவறாக எடுத்துக்காட்டியிருக்கும் மத அமைப்புகளையும் அவர் தப்பவிடார். கிறிஸ்தவ மண்டலத்தையும் மற்ற எல்லா பொய்மத வகைகளையும் பாழாக்கும்படியான எண்ணத்தைக் கடவுள் ஐக்கிய நாட்டு சங்க உறுப்பினரின் இருதயத்துக்குள் போடுவார். (வெளிப்படுத்துதல் 17:16, 17) “என் கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கஞ்செய்வதுமில்லை; அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் சிரசின்மேல் இறங்கப்பண்ணுவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.—எசேக்கியேல் 9:5, 10.
6 இன்னும் சமயமிருக்கையில், யெகோவாவின் சாட்சிகள் இரட்சிப்புக்குரிய கடவுளின் செய்தியை ஆர்வத்தோடு பிரசங்கிப்பதன்மூலம் தங்கள் அயலாருக்குத் தொடர்ந்து இரக்கத்தைக் காட்டுவார்கள். இயல்பாகவே, கூடியபோது, பொருள்தேவையிலிருக்கும் ஆட்களுக்கும் அவர்கள் உதவிசெய்வார்கள். எனினும், இதைக் குறித்ததில், அவர்களுடைய முதல் பொறுப்பானது, நெருங்கிய குடும்ப உறுப்பினரின் மற்றும் விசுவாசத்தில் தங்களுக்கு உறவானோரின் தேவைகளைக் கவனிப்பதாகும். (கலாத்தியர் 6:10; 1 தீமோத்தேயு 5:4, 8) பல்வேறு விபத்துக்களுக்கு ஆட்பட்ட உடன்விசுவாசிகளின் சார்பாக யெகோவாவின் சாட்சிகள் செய்துள்ள துயர்த்தீர்ப்பு உதவிகள் பல, இரக்கத்தின் முனைப்பான முன்மாதிரிகளாக இருந்திருக்கின்றன. இருப்பினும் கிறிஸ்தவர்கள், உருக்கமான இரக்கத்தைக் காட்டுவதற்கு முன்பாக ஒரு நெருக்கடிக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. அன்றாட வாழ்க்கையின் இன்பதுன்பங்களைக் கையாளுவதில் அவர்கள் விரைவில் இந்தப் பண்பைக் காட்டுகின்றனர்.
புதிய மனிதப் பண்பியல்பின் பாகம்
7. (அ) கொலோசெயர் 3:8-13-ல், இரக்கம் எவ்வாறு புதிய பண்பியல்போடு இணைக்கப்பட்டிருக்கிறது? (ஆ) உருக்கமான பாசம் என்ன செய்வதைக் கிறிஸ்தவர்களுக்கு எளிதாக்குகிறது?
7 நம்முடைய பாவ இயல்பும் சாத்தானுடைய உலகத்தின் தீய செல்வாக்கும் நாம் உருக்கமான இரக்கமுள்ளோராக இருப்பதற்குத் தடங்கல்களாக இருக்கின்றனவென்பது உண்மையே. அதன் காரணமாகவே பைபிள், “கோபம் மூர்க்கம் துர்க்குணம் தூஷணம் உங்கள் வாயில் பிறக்கும் அவலக்ஷணப் பேச்சு” ஆகிய இவற்றையெல்லாம் விலக்கும்படி நம்மைத் தூண்டுவிக்கிறது. மாறாக, கடவுளுடைய சாயலுக்கு ஒப்பான பண்பியல்பாகிய—‘புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளும்படி’ நாம் அறிவுரை கூறப்படுகிறோம். முதலாவதாக, “[உருக்கமான, UV] இரக்கமுள்ள மனது தயாளம், தாழ்மை, சாந்தம், நீடிய பொறுமை” ஆகியவற்றைத் தரித்துக்கொள்ளும்படி நாம் கட்டளையிடப்படுகிறோம். பின்பு இந்தப் பண்புகளை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு நடைமுறையான ஒரு வழியை பைபிள் நமக்குக் காட்டுகிறது. “ஒருவரையொருவர் பொறுத்து ஒருவன்மேல் ஒருவனுக்குக் குறையுண்டானால் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்; ஆண்டவர் [யெகோவா, NW] உங்களுக்கு மன்னித்ததுபோலவே நீங்களும் மன்னியுங்கள்.” நம்முடைய சகோதரரிடமாக ‘இரக்கத்தின் உருக்கமான பாசத்தை’ நம்மில் வளர்த்திருந்தால் மன்னிப்போராக இருப்பது அதிக எளிதாயுள்ளது.—கொலோசெயர் 3:8-13, தி.மொ.
8. மன்னிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருப்பது ஏன் முக்கியம்?
8 மறுபட்சத்தில் இரக்கமுள்ள மன்னிப்பைக் காட்டத் தவறுவது யெகோவாவிடம் நமக்குள்ள உறவை இடருக்குள்ளாக்குகிறது. இதை இயேசு, மன்னிக்க மனமில்லாத அடிமையைப் பற்றிய தம்முடைய உவமையில் அறிவுறுத்தும் வகையில் காட்டினார். அவனுடைய எஜமான் “அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும்” அவனைச் சிறைச்சாலையில் போடுவித்தான். இந்த அடிமை அவ்வாறு நடத்தப்படுவதற்குத் தகுதியுள்ளவனாயிருந்தான். ஏனெனில், இரக்கத்துக்காக கெஞ்சின ஓர் உடன் அடிமைக்கு இரக்கத்தைக் காட்ட திடுக்கிடச் செய்யும் வகையில் தவறினான். இயேசு பின்வருமாறு சொல்லி அந்த உவமையை முடித்தார்: “நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.”—மத்தேயு 18:34, 35.
9. எவ்வாறு உருக்கமான இரக்கம் புதிய பண்பியல்பின் மிக முக்கியமான அம்சத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது?
9 உருக்கமான இரக்கமுள்ளோராக இருப்பது அன்பின் ஒரு முக்கியமான அம்சமாகும். அன்பு உண்மையான கிறிஸ்தவத்தின் அடையாளங்காட்டும் குறியாக உள்ளது. (யோவான் 13:35) ஆகையால், புதிய மனிதப் பண்பியல்பைப் பற்றிய பைபிளின் விவரிப்பு இவ்வாறு முடிகிறது: “இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:14.
பொறாமை—இரக்கத்துக்கு ஒரு தடை
10. (அ) பொறாமை நம் இருதயத்தில் தோன்றி வளரும்படி எது செய்விக்கக்கூடும்? (ஆ) பொறாமையிலிருந்து என்ன கெட்ட விளைவுகள் உண்டாகக்கூடும்?
10 நம்முடைய பாவமுள்ள மனித இயல்பின் காரணமாக, பொறாமை உணர்ச்சிகள் நம் இருதயத்தில் எளிதாகத் தோன்றி வளரக்கூடும். ஒரு சகோதரனோ சகோதரியோ நமக்கிராத இயல்பான திறமைகளை அல்லது பொருளாதார அனுகூலங்களை உடையவராக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது எவராவது ஆவிக்குரிய தனிப்பட்ட ஆசீர்வாதங்களையும் சிலாக்கியங்களையும் ஒருவேளை பெற்றிருக்கலாம். அத்தகையோரைப்பற்றி நாம் பொறாமை கொண்டால், அவர்களை உருக்கமான இரக்கத்துடன் நாம் நடத்த முடியுமா? பெரும்பாலும் முடியாது. மாறாக, பொறாமையான உணர்ச்சிகள் முடிவில் குறைகூறும் பேச்சில் அல்லது தயவற்ற செயல்களில் வெளிப்படக்கூடும். ஏனெனில்: “இருதயத்தின் நிறைவிலிருந்து அவனவன் வாய் பேசும்” என்று இயேசு மனிதரைக் குறித்து சொன்னார். (லூக்கா 6:45, தி.மொ.) மற்றவர்கள் ஒருவேளை அத்தகைய குறைகூறுதலோடு சேர்ந்து ஆதரிக்கலாம். இவ்வாறு ஒரு குடும்பத்தின் அல்லது கடவுளுடைய ஜனங்களுடைய சபையின் சமாதானம் கெடுக்கப்படுகிறது.
11. எவ்வாறு யோசேப்பின் பத்து சகோதரர்கள் இரக்கத்திற்குத் தங்கள் இருதயத்தில் இடமளிக்கவில்லை, அதன் விளைவென்ன?
11 ஒரு பெரிய குடும்பத்தில் என்ன நடந்ததென்பதைக் கவனியுங்கள். யாக்கோபின் மூத்தக் குமாரர்கள் பத்துபேர், தங்கள் இளைய சகோதரன் யோசேப்பு தங்கள் தகப்பனின் தனிப்பாசத்துக்குரியவனாக இருந்ததனால் அவன்மீது பொறாமை கொண்டனர். இதன் விளைவாக, “அவனோடு பட்சமாய்ப் பேசவும் அவர்களுக்கு வாய்வரவில்லை.” பின்னால் யோசேப்பு, கடவுளிடமிருந்து சொப்பனங்களைப் பெற்று ஆசீர்வதிக்கப்பட்டான், இது யெகோவாவின் தயவு அவனுக்கு இருந்ததை நிரூபித்தது. “அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.” அவர்கள் பொறாமையைத் தங்கள் இருதயத்திலிருந்து அகற்றாததனால், அது இரக்கத்துக்கு இடமிராதபடி நெருக்கி, வினைமையான பாவத்திற்கு வழிநடத்தினது.—ஆதியாகமம் 37:4, 5, 11, தி.மொ.
12, 13. பொறாமை உணர்ச்சிகள் நம் இருதயத்தில் பிரவேசிக்கிறபோது நாம் என்ன செய்ய வேண்டும்?
12 கொடூரமாய், அவர்கள் யோசேப்பை அடிமையாயிருக்கும்படி விற்றுப்போட்டார்கள். தங்கள் தவறை மூடிமறைக்க முயற்சி செய்து, யோசேப்பு ஒரு காட்டுமிருகத்தால் கொல்லப்பட்டானென்று நினைக்கும்படி தங்கள் தகப்பனை வஞ்சித்தனர். பல ஆண்டுகளுக்குப் பின், பஞ்சத்தினிமித்தம் எகிப்துக்குச் சென்று உணவு வாங்க வற்புறுத்தப்பட்ட நிலைமைக்குள்ளானபோது, அவர்களுடைய பாவம் வெளியாயிற்று. உணவு வழங்கின அந்த அதிகாரி யோசேப்பு என்று அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அந்த அதிகாரி அவர்களை வேவு பார்க்க வந்தவர்களெனக் குற்றஞ்சாட்டி, அவர்கள் தங்கள் கடைசி இளைய சகோதரனான பென்யமீனை அழைத்து வந்தால் தவிர மறுபடியுமாகத் தன் உதவியை நாடக்கூடாதெனக் கூறினார். ஆனால் இந்தச் சமயத்தில் பென்யமீன் தங்கள் தகப்பனின் தனிப்பாசத்துக்குரியவனாக ஆகிவிட்டிருந்தான், யாக்கோபு அவனைப் போகவிட அனுமதிக்கமாட்டாரென அவர்கள் அறிந்திருந்தார்கள்.
13 ஆகவே யோசேப்புக்கு முன்னால் நிற்கையில், அவர்களுடைய மனச்சாட்சி இவ்வாறு ஒப்புக்கொள்ளும்படி அவர்களைக் குத்தியது: “நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால், இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது.” (ஆதியாகமம் 42:21) யோசேப்பு இரக்கத்துடன் எனினும் உறுதியுடன் தன் சகோதரரைக் கையாண்டதால், அவர்கள் தங்கள் மனந்திரும்புதலின் உண்மையானத் தன்மையை நிரூபிக்கும்படி உதவிசெய்தார். பின்பு அவர் தான் யாரென்பதை அவர்களுக்கு வெளிப்படுத்தி தாராளமாய் அவர்களுக்கு மன்னித்தார். குடும்ப ஒற்றுமை திரும்ப நிலைநாட்டப்பட்டது. (ஆதியாகமம் 45:4-8) கிறிஸ்தவர்களாக, இதிலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்கவேண்டும். பொறாமையின் தீய விளைவுகளை அறிந்து, பொறாமை உணர்ச்சிகளை நீக்கி, ‘இரக்கத்தின் உருக்கமான பாசத்தால்’ அதனிடத்தை நிரப்புவதற்கு உதவிசெய்யும்படி நாம் யெகோவாவிடம் ஜெபிக்க வேண்டும்.
இரக்கத்திற்கு மற்றத் தடைகள்
14. அவசியமில்லாமல் வன்முறைக்கு நம்மை ஆளாக்குவதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?
14 நாம் இரக்கமாயிருப்பதற்கு மற்றொரு தடையானது, தேவையில்லாமல் வன்முறைக்கு ஆளாகும் நிலையில் நம்மை வைப்பதனால் விளையக்கூடும். வன்முறையை மேம்படுத்திக் காட்டும் போட்டி விளையாட்டுக்களும் பொழுதுபோக்குகளும் இரத்தவெறிகொண்ட கொந்தளிப்புக்கு வழிநடத்தக்கூடும். பைபிள் காலங்களில், புறமதத்தார் ரோமப் பேரரசின் வட்டரங்குகளில் வாள்போர் போட்டிகளையும் மனித வதைப்புக்குரிய மற்ற வகைகளையும் தவறாமல் பார்த்து வந்தனர். சரித்திராசிரியர் ஒருவர் சொல்வதன்படி, அத்தகைய பொழுதுபோக்கு “மனிதனை மிருக சிருஷ்டிப்பிலிருந்து வேறுபடுத்துவதான, துன்பப்படுவோருக்குப் பரிவிரக்கம் காட்டும் நரம்புணர்ச்சியை அழித்தது.” இன்றைய நவீன உலகத்தின் பொழுதுபோக்கில் பெரும்பான்மையானது அதே பாதிப்பைக் கொண்டுள்ளது. உருக்கமான இரக்கத்துடன் இருக்கும்படி பெரும் முயற்சி செய்யும் கிறிஸ்தவர்கள், தாங்கள் தெரிந்துகொள்ளும் வாசிப்பு விஷயங்களையும் திரைப்படங்களையும் டெலிவிஷன் நிகழ்ச்சிகளையும் குறித்தவற்றில் வெகு கவனமாகத் தெரிவு செய்ய வேண்டியது அவசியம். சங்கீதம் 11:5-ன் (தி.மொ.) இந்த வார்த்தைகளை அவர்கள் ஞானமாய்த் தங்கள் மனதில் வைக்கின்றனர்: “இம்சைசெய்வதில் விருப்பமுள்ள யாவரையும் அவர் [யெகோவாவின்] திருவுள்ளம் வெறுக்கும்.”
15. (அ) வினைமையாக இரக்கமற்றத் தன்மையை ஒருவன் எவ்வாறு காட்டக்கூடும்? (ஆ) உடன் விசுவாசிகள் மற்றும் அயலார் தேவையில் இருக்கையில் கிறிஸ்தவர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர்?
15 தன்னலமே கருதும் ஒருவர் இரக்கமற்றவராயும் பெரும்பாலும் இருக்கக்கூடும். அப்போஸ்தலன் யோவான் விளக்கிக் கூறுகிறபடி, இது வினைமையானது: “ஒருவன் இவ்வுலகப் பொருள் உடையவனாயிருந்து தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு அவனுக்கு மனதிரங்காதிருந்தால் அவனில் கடவுளின் அன்பு நிலைத்திருப்பதெப்படி?” (1 யோவான் 3:17, தி.மொ.) அயலான்மீது அக்கறைகாட்டின சமாரியனைப்பற்றிய இயேசுவின் உவமையில், சுயநீதி உணர்வுவாய்ந்த அந்த ஆசாரியனும் லேவியனும் இதைப்போன்ற இரக்கமற்றத் தன்மையைக் காட்டினார்கள். குற்றுயிராகக் கிடந்த தங்கள் யூத சகோதரனின் நெருக்கடிநிலையைக் கண்டபோது, இவர்கள் அந்தப் பாதையின் மறுபுறம் குறுக்கே கடந்துசென்று தங்கள் வழியே தொடர்ந்து சென்றனர். (லூக்கா 10:31, 32) எதிர்மாறாக, இரக்கமுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் சகோதரரின் பொருள் சம்பந்தமான மற்றும் ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்திசெய்ய சீக்கிரமாய்ச் செயல்படுகிறார்கள். இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட அந்தச் சமாரியனைப்போல், அன்னியர்களின் தேவைகளைப்பற்றியும் அவர்கள் அக்கறையுடையோராக உள்ளனர். இவ்வாறு அவர்கள், சீஷராக்கும் ஊழியத்தை முன்னேற்றுவிப்பதற்குத் தங்கள் நேரத்தையும் சக்தியையும் பொருளாதாரத்தையும் மகிழ்ச்சியுடன் அளிக்கின்றனர். இந்த முறையில் லட்சக்கணக்கானோரின் இரட்சிப்புக்காக உடனுதவியளிக்கின்றனர்.—1 தீமோத்தேயு 4:16.
நோயுற்றோருக்கான இரக்கம்
16. நோய்ப்பட்டிருப்போரைக் கையாளுகையில் என்ன மட்டுப்பாடுகளை நாம் எதிர்ப்படுகிறோம்?
16 நோய், அபூரணரான சாகும் மனிதகுலத்தின் பங்காயுள்ளது. கிறிஸ்தவர்கள் அதற்கு நீங்கலாக இல்லை. அவர்களில் பெரும்பான்மையர் மருத்துவ துறையில் வேலைசெய்வோராக இல்லை. மேலும் கிறிஸ்துவிடமிருந்தும் அவருடைய அப்போஸ்தலரிடமிருந்தும் அற்புதங்களை நடப்பிக்கும் வல்லமைகளைப் பெற்ற பூர்வ கிறிஸ்தவர்கள் சிலரைப்போல் அவர்கள் அற்புதங்கள் நடப்பிக்கவும் முடியாது. கிறிஸ்துவின் அப்போஸ்தலரும் அவர்களுடைய உடனடுத்தக் கூட்டாளிகளும் மரித்ததோடு, அத்தகைய அற்புத வல்லமைகளும் கடந்து சென்றுவிட்டன. ஆகவே, மூளைக்கோளாறும் மயக்கத்தோற்றங்களும் உட்பட உடல்சம்பந்தமான நோயால் வருந்துவோருக்கு உதவி செய்யும் நம்முடைய திறமை மட்டுப்பட்டதாயுள்ளது.—அப்போஸ்தலர் 8:13, 18; 1 கொரிந்தியர் 13:8.
17. நோயுற்றும் இழப்புக்காளாகியும் இருந்த மனிதனாகிய யோபு நடத்தப்பட்ட முறையிலிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்?
17 மனச்சோர்வு அடிக்கடி நோயோடுசேர்ந்து வருகிறது. உதாரணமாக, கடவுள் பயமுள்ள யோபு, சாத்தான் அவர்மீது கொண்டுவந்த கடும் நோயினிமித்தமும் பேரிழப்புகளினிமித்தமும் மிக மனச்சோர்வடைந்திருந்தார். (யோபு 1:18, 19; 2:7; 3:3, 11-13) உருக்கமான இரக்கத்தோடு தன்னை நடத்துவோரும் ‘ஆறுதலாய்ப் பேசுவோருமான’ நண்பர்கள் அவருக்குத் தேவைப்பட்டனர். (1 தெசலோனிக்கேயர் 5:14, NW) அதற்குப் பதிலாக, ஆறுதலளிப்பவர்களென அழைக்கப்பட்ட மூவர் அவரைச் சந்திக்க வந்து, பதற்றமாய்த் தவறான முடிவுகள் செய்தனர். யோபுக்கு ஏற்பட்ட தீங்குகள், அவர் செய்த ஏதோ சொந்தக் குற்றத்தின் காரணமாகவே நிகழ்ந்தனவென்று சொல்வதால் யோபின் மனச்சோர்வுநிலையை மேலும் பெருகச் செய்தனர். உடன் விசுவாசிகள் நோய்ப்பட்டோ மனச்சோர்வுற்றோ இருக்கையில், கிறிஸ்தவர்கள், உருக்கமான இரக்கமுள்ளோராக இருப்பதனால், அதைப்போன்ற தவறைத் தவிர்ப்பர். சில சமயங்களில், அத்தகையோருக்குத் தேவைப்படும் முக்கிய காரியமானது, பரிவோடு தங்களுக்குச் செவிகொடுத்துக் கேட்டு, புரிந்துகொள்ளுதலைக் காட்டி, அன்புள்ள வேதப்பூர்வ ஆலோசனையைக் கொடுக்கும் மூப்பர்களோ அல்லது மற்ற முதிர்ந்த கிறிஸ்தவர்களோ ஒருசில தயவான சந்திப்புகள் செய்வதேயாகும்.—ரோமர் 12:15; யாக்கோபு 1:19.
பலவீனருக்கான இரக்கம்
18, 19. (அ) பலவீனரை அல்லது தவறு செய்தவர்களை மூப்பர்கள் எவ்வாறு கையாள வேண்டும்? (ஆ) நியாயவிசாரணைக் குழுவை அமைப்பது தேவைப்படுகிறதென்றாலும், தவறுசெய்தவர்களை உருக்கமான இரக்கத்துடன் மூப்பர்கள் நடத்த வேண்டியது ஏன் முக்கியம்?
18 மூப்பர்கள் முக்கியமாய் உருக்கமான இரக்கத்துடன் இருக்க வேண்டும். (அப்போஸ்தலர் 20:29, 35) “பலமுள்ளவர்களாகிய நாம் . . . பலவீனருடைய பலவீனங்களைத் தாங்க வேண்டும்” என்று பைபிள் கட்டளையிடுகிறது. (ரோமர் 15:1) அபூரணராயிருப்பதால், நாம் எல்லாரும் தவறுகள் செய்கிறோம். (யாக்கோபு 3:2) ‘தான் உணருவதற்கு முன் ஏதோ தவறான அடியெடுத்து வைத்துவிடுகிற’ ஒருவரைக் கையாளுவதில் உருக்கம் தேவைப்படுகிறது. (கலாத்தியர் 6:1, NW) கடவுளுடைய சட்டத்தைத் தாங்கள் பொருத்திப் பயன்படுத்துவதில் நியாயமற்ற விதத்தில் சுயநீதியுள்ள பரிசேயர்களைப்போல் இருக்க மூப்பர்கள் ஒருபோதும் விரும்புகிறதில்லை.
19 நேர்மாறாக, யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் வைக்கும் உருக்கமான இரக்கத்தின் முன்மாதிரிகளையே மூப்பர்கள் பின்பற்றுகின்றனர். கடவுளுடைய செம்மறியாடுகளைப் போஷித்து, ஊக்கப்படுத்தி, புதுக்கிளர்ச்சியூட்டுவதே அவர்களுடைய முக்கிய வேலை. (ஏசாயா 32:1, 2) பல கட்டளைகளைக் கொண்டு காரியங்களை அடக்கியாள முயற்சி செய்வதற்குப் பதிலாக, கடவுளுடைய வார்த்தையிலுள்ள சிறந்த நியமங்களை ஆதரவாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆகவே, மூப்பர்களின் வேலையானது தங்கள் சகோதரரைக் கட்டியெழுப்பி, அவர்களுடைய இருதயத்தில் யெகோவாவின் நற்குணத்திற்காக மகிழ்ச்சியையும் மதித்துணர்வையும் கொண்டுவருவதாகவே இருக்க வேண்டும். உடன் விசுவாசி ஒருவர் ஏதோ சிறிய பிழை செய்துவிட்டால், மற்றவர்கள் கவனித்துக்கேட்கத்தக்க நிலையில் அவரைத் திருத்துவதை மூப்பர் பொதுவாய்த் தவிர்ப்பார். பேசுவது அவசியமாயிருந்தால், அந்த நபரைத் தனிமையில் அழைத்துச் சென்று மற்றவர்களின் செவிகேட்காதவாறு அந்தப் பிரச்சினையை அவரோடு கலந்து பேசும்படி, உருக்கமான இரக்க உணர்ச்சிகள் அந்த மூப்பரைச் செய்விக்கும். (மத்தேயு 18:15-ஐ ஒத்துப்பாருங்கள்.) எவராயினும் ஒருவரை அனுசரித்துச் செல்வது எவ்வளவு கடினமாக இருந்தாலும் சரி, மூப்பரின் அணுகுமுறை பொறுமையாகவும், உதவியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய ஒருவரை சபைக்குப் புறம்பாக்குவதற்குச் சாக்குப்போக்குகளைத் தேட அவர் ஒருபோதும் விரும்புகிறதில்லை. நியாயவிசாரணைக் குழு ஒன்றை அமைப்பது தேவைப்படுகையிலுங்கூட, வினைமையான தவறுசெய்ததில் உட்பட்ட அந்த ஆளைக் கையாளுவதில் மூப்பர்கள் உருக்கமான இரக்கத்தைக் காட்டுவார்கள். அவர்களுடைய சாந்தம் அந்த நபரை மனந்திரும்புவதற்கு உதவிசெய்யலாம்.—2 தீமோத்தேயு 2:24-26.
20. இரக்க உணர்ச்சிவச வெளிக்காட்டல்கள் எப்போது பொருத்தமற்றவை, ஏன்?
20 எனினும், யெகோவாவின் ஓர் ஊழியன் இரக்கம் காட்ட முடியாத சமயங்களும் உள்ளன. (உபாகமம் 13:6-9-ஐ ஒத்துப்பாருங்கள்.) சபைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் நெருங்கிய ஒரு நண்பருடன் அல்லது உறவினருடன் தோழமை ‘கலந்துகொள்ளாமல்’ இருப்பது கிறிஸ்தவன் ஒருவனுக்கு உண்மையான சோதனையாக இருக்கக்கூடும். அத்தகைய காரியங்களில் ஒருவர், பரிதாப உணர்ச்சிகளுக்கு இடமளித்து விட்டுக்கொடாதபடி இருப்பது முக்கியம். (1 கொரிந்தியர் 5:11-13) அத்தகைய உறுதி, தவறுசெய்தவரை மனந்திரும்பும்படியும் ஊக்குவிக்கலாம். மேலும், எதிர்பாலாரோடு கொள்ளும் தொடர்பில், கிறிஸ்தவர்கள், பாலுறவு ஒழுக்கக்கேட்டுக்கு வழிநடத்தக்கூடிய தகாத இரக்க வெளிக்காட்டல்களைத் தவிர்க்க வேண்டும்.
21. வேறு என்ன சந்தர்ப்பங்களிலும் நாம் உருக்கமான இரக்கம் காட்ட வேண்டும், அதன் பலன்கள் யாவை?
21 உருக்கமான இரக்கம் தேவைப்படுகிற பல சந்தர்ப்பங்கள்—முதியோர், இழப்புக்காளானவர்கள், அவிசுவாசிகளான மணத்துணைவர்களிடம் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளோர் போன்ற—எல்லாவற்றையும் கலந்தாலோசிக்க இந்தக் கட்டுரையில் நமக்கு இடமில்லை. அவ்வாறே கடினமாய் உழைக்கும் மூப்பர்களையும் உருக்கமான இரக்கத்துடன் நடத்த வேண்டும். (1 தீமோத்தேயு 5:17) அவர்களை மதித்து அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். (எபிரெயர் 13:7, 17) “நீங்களெல்லாரும் . . . இரக்கமுள்ளவர்களும், . . . மனஉருக்கமுள்ளவர்களு”மாக இருங்கள் என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பேதுரு 3:8) தேவைப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த முறையில் நடப்பதால், சபையில் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் நாம் முன்னேற்றுவித்து புறம்பேயுள்ளவர்களைச் சத்தியத்துக்குக் கவர்ந்திழுக்கிறோம், எல்லாவற்றிற்கும் மேலாக, அதன்மூலம் உருக்கமான இரக்கமுள்ள நம் தகப்பனாகிய யெகோவாவைக் கனப்படுத்துகிறோம்.
மறுபார்வையிடுவதில் கேள்விகள்
◻ எவ்வாறு யெகோவா பாவிகளான மனிதகுலத்துக்கு இரக்கத்தைக் காட்டுகிறார்?
◻ உருக்கமான இரக்கத்துடன் இருப்பது ஏன் முக்கியம்?
◻ நாம் உருக்கமான இரக்கமுள்ளோராக இருப்பதற்குத் தடைகள் சில யாவை?
◻ நோயுற்றோரையும் மனச்சோர்வுற்றோரையும் நாம் எவ்வாறு நடத்த வேண்டும்?
◻ முக்கியமாய் யாருக்கு உருக்கமான இரக்கம் தேவைப்படுகிறது, ஏன்?
6. இரக்கம் காட்டும்படி யெகோவாவின் சாட்சிகள் என்ன வழிகளில் தூண்டுவிக்கப்பட்டிருக்கின்றனர்?
[பக்கம் 19-ன் பெட்டி]
இரக்கமற்ற பரிசேயர்கள்
இளைப்பாறுதலுக்குரிய ஓய்வுநாள் கடவுளுடைய ஜனங்களுக்கு ஆவிக்குரிய மற்றும் சரீரப்பிரகாரமான ஆசீர்வாதமாக இருக்கும்படி கருதப்பட்டது. எனினும், யூத மதத் தலைவர்கள், பல கட்டுப்பாட்டு விதிகளை ஏற்படுத்தி கடவுளுடைய ஓய்வுநாள் சட்டத்தை மதிப்புக்குறைவாக்கி ஜனங்களுக்கு பாரமானவையாக்கினர். உதாரணமாக, எவருக்காவது ஓர் விபத்து நேரிட்டால் அல்லது நோயினால் துன்பப்பட்டால், அவனுடைய உயிர் ஆபத்தில் இருந்தால் தவிர ஓய்வுநாளில் அவன் உதவிபெற முடியாது.
பரிசேயரின் பயிற்சி சாலை ஒன்று இந்த ஓய்வுநாள் சட்டத்திற்கு விளக்கம் கூறுவதில் அவ்வளவு கண்டிப்பாக இருந்து: “ஓய்வுநாளில் துக்கிப்போருக்கு ஒருவன் ஆறுதல் சொல்வதில்லை, நோயுற்றோரைச் சென்று பார்ப்பதில்லை” என்று சொல்லிற்று. மற்ற மதத் தலைவர்கள் ஓய்வுநாளில் அத்தகைய சந்திப்புகளை அனுமதித்தனர் ஆனால்: “கண்ணீர் வடிக்கக்கூடாது” என்று தனிப்பட வற்புறுத்தினர்.
இதனால், நீதி, அன்பு, இரக்கம் போன்ற நியாயப்பிரமாணத்தின் அதிக முக்கியமான கட்டளைகளைக் கவனியாமல் விட்டதற்காக, அந்த மதத் தலைவர்களை இயேசு சரியாகவே கண்டனம் செய்தார். “உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள்” என்று அவர் சொன்னது ஆச்சரியமாயில்லை!—மாற்கு 7:8, 13; மத்தேயு 23:23; லூக்கா 11:42.
[பக்கம் 17-ன் பெட்டி/படங்கள்]
231 நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள், ஜனங்களின் வீடுகளில், வீதிகளில், சிறைச்சாலைகளிலுங்கூட, முன்னொருபோதும் செய்யப்பட்டிராத முறையில் இரக்கத்துக்குரிய ஓர் ஊழியத்தை நிறைவேற்றுகின்றனர்
[பக்கம் 18-ன் பெட்டி/படம்]
டெலிவிஷன் போன்றவற்றில் வன்முறைச்செயலைக் கண்டுகொண்டிருப்பது, உருக்கமான இரக்கத்திற்கு மறைகேடு செய்கிறது