யெகோவாவுக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுங்கள்
“நாங்கள் . . . உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் பண்ணுகிறோம்; நீங்கள் . . . சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, . . . கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், . . . உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.”—கொலோசெயர் 1:9-11.
1, 2. சந்தோஷத்தையும் திருப்தியையும் பெறுவதற்கு எது முக்கிய வழியாக அமையலாம்?
“ஒரு பண்ணையில் நாங்கள் டிரெய்லரில் வசிக்கிறோம். எங்களுடைய வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்வதால், மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. யெகோவாவுக்கு வாழ்க்கையை ஒப்புக்கொடுக்க நிறையபேருக்கு உதவியிருக்கிறோம். இது எங்களுக்குக் கிடைத்த பெரிய பாக்கியம், ஆசீர்வாதமும்கூட.”—தென் ஆப்பிரிக்காவில் முழுநேர ஊழியர்களாக இருக்கும் ஒரு தம்பதி.
2 மற்றவர்களுக்கு உதவுவதில் சந்தோஷம் கிடைக்கும் என்பதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா? நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, நலிந்தவர்களுக்கு, அல்லது தனிமையிலிருப்பவர்களுக்கு உதவுவதை சிலர் பழக்கப்படுத்தி இருக்கிறார்கள்; அப்படி செய்வதில் அவர்களுக்கு திருப்தி கிடைக்கிறது. உண்மை கிறிஸ்தவர்களோ, யெகோவாவையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை பகிர்ந்து கொள்வதே மற்றவர்களுக்குச் செய்யும் மிகச் சிறந்த உதவி என்று நம்புகிறார்கள். இந்த அறிவே, இயேசுவின் மீட்கும்பலியை ஏற்றுக்கொள்ளவும், கடவுளுடன் நல்ல உறவை வளர்க்கவும் நித்திய ஜீவனைப் பெறுவதற்கு தகுதி பெறவும் அவர்களை வழிநடத்தும்.—அப்போஸ்தலர் 3:19-21; 13:48.
3. என்ன வகையான உதவிக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்?
3 ஆனாலும், ஏற்கெனவே கிறிஸ்தவ “மார்க்கத்தை” பின்பற்றி கடவுளைச் சேவிப்பவர்களுக்கு உதவி செய்வது எப்படி? (அப்போஸ்தலர் 19:9) அவர்கள் நலனில் எப்போதும் நீங்கள் அதிக அக்கறை காண்பிக்கிறீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால், முதலாவதாக, அவர்களுக்கு இன்னும் அதிகமாக அல்லது தொடர்ந்து எப்படி உதவி செய்வது என்று நீங்கள் அறியாமல் இருக்கலாம். இரண்டாவதாக, உதவி செய்ய உங்களுடைய சூழ்நிலை அனுமதிக்காமலிருக்கலாம்; அதனால் மனத்திருப்தியும் கிடைக்காமல் போகலாம். (அப்போஸ்தலர் 20:35) இந்த இரண்டு விஷயங்களைப் பற்றியும் கொலோசெயர் புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
4. (அ) எந்தச் சூழ்நிலையில் கொலோசெயருக்கு பவுல் கடிதம் எழுதினார்? (ஆ) எப்பாப்பிரா யார், அவர் என்ன செய்தார்?
4 கொலோசெயிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதும்போது, அவர் ரோமில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்; ஆனால் மற்றவர்கள் அவரை சந்திக்க முடிந்தது. தனக்குக் கிடைத்த ஓரளவு சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பவுல் பிரசங்கித்தார். (அப்போஸ்தலர் 28:16-31) உடன் கிறிஸ்தவர்கள் பவுலை வந்து பார்க்க முடிந்தது; சில சமயங்களில் அவர்களில் சிலரும்கூட அவருடன் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம். (கொலோசெயர் 1:7, 8; 4:10) எப்பாப்பிரா என்ற வைராக்கியமான பிரசங்கிப்பாளரும் அவர்களில் ஒருவர். இவர், ஆசியா மைனரிலுள்ள (தற்கால துருக்கி) எபேசுவுக்கு கிழக்கிலுள்ள பீடபூமியில் அமைந்திருக்கும் பிரிகியாவிலிருக்கும் கொலோசெ பட்டணத்தைச் சேர்ந்தவர். கொலோசெ சபை உருவாக காரணமானவர் எப்பாப்பிரா; பக்கத்திலுள்ள லவோதிக்கேயா, எராப்போலியா சபைகளுக்காகவும் அவர் கடுமையாக உழைத்தார். (கொலோசெயர் 4:12, 13) ரோமிலிருந்த பவுலைப் பார்க்கும்படி எப்பாப்பிரா ஏன் அவ்வளவு தூரம் பயணப்பட்டார்? பவுலுடைய பிரதிபலிப்பிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
கொலோசெயருக்கு பயனுள்ள உதவி
5. பவுல் ஏன் கொலோசெயருக்கு கடிதம் எழுதினார்?
5 கொலோசெயிலுள்ள நிலைமைகளைக் குறித்து பவுலுடன் கலந்துபேசுவதற்காகவே எப்பாப்பிரா அந்தக் கடும் பயணத்தை ரோமுக்கு மேற்கொண்டார். அங்கிருந்த கிறிஸ்தவர்களின் விசுவாசம், அன்பு, ஊழியம் செய்வதில் அவர்கள் எடுத்த முயற்சிகள் ஆகியவற்றைப் பற்றி சொன்னார். (கொலோசெயர் 1:3, 4, 6-8) அதேசமயம், கொலோசெயருடைய ஆவிக்குரிய தன்மைக்கு அச்சுறுத்தலாய் இருந்த காரியங்களைப் பற்றி அவருக்கிருந்த கவலையையும் பகிர்ந்திருப்பார். ஆகவே பவுல் ஒரு கடிதத்தை எழுதினார். கடவுளால் ஏவப்பட்ட இக்கடிதத்தில், பொய் போதகர்கள் பரப்பிவந்த கருத்துக்கள் சிலவற்றை தவறென காட்டி எழுதினார். குறிப்பாக, இன்றியமையாத ஸ்தானம் வகிக்கும் இயேசு கிறிஸ்துவிற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தினார்.a அப்படியென்றால் முக்கியமான பைபிள் சத்தியங்களை வலியுறுத்துவதுடன் அவருடைய உதவி நின்றுவிட்டதா? கொலோசெயருக்கு வேறு என்ன விதத்தில் அவரால் உதவிசெய்ய முடிந்தது? மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
6. கொலோசெயருக்கு எழுதின கடிதத்தில் பவுல் எதை வலியுறுத்திக் கூறினார்?
6 நாம் கவனிக்க தவறும் ஒரு வகை உதவியைப் பற்றி பவுல் தன் கடிதத்தின் தொடக்கத்தில் கவனத்திற்குக் கொண்டுவந்தார். பவுலும் எப்பாப்பிராவும் கொலோசெயிலிருந்து வெகு தூரத்திலிருந்தாலும் செய்ய முடிந்த பயனுள்ள உதவி அது. “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்” என பவுல் உறுதியளித்தார். இந்த வேண்டுதல், குறிப்பாக கொலோசெயிலுள்ள கிறிஸ்தவர்களுக்காக செய்யப்பட்ட ஜெபங்களே. “இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், . . . உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்” என்றும் பவுல் சொன்னார்.—கொலோசெயர் 1:5, 9, 11.
7, 8. பெரும்பாலும் எதைக் குறித்து தனிப்பட்ட விதமாகவும் சபையாகவும் ஜெபம் செய்யப்படுகிறது?
7 யெகோவா ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்று நமக்குத் தெரியும். அதனால் அவருடைய சித்தத்திற்கு இசைவாக செய்யும் ஜெபங்களை உடனடியாக கேட்கிறார் என்று நம்பிக்கையுடன் இருக்கலாம். (சங்கீதம் 65:2; 86:6; நீதிமொழிகள் 15:8, 29; 1 யோவான் 5:14) என்றாலும், மற்றவர்களுக்காக நாம் செய்யும் ஜெபங்கள் எப்படிப்பட்டவையாய் இருக்கின்றன?
8 பெரும்பாலும் நாம் ‘உலகத்திலுள்ள சகோதரர்களின்’ முழு தொகுதியையும் மனதில் வைத்து ஜெபிக்கலாம். (1 பேதுரு 5:9) அல்லது பெருஞ்சேதமோ ஏதாவது துயரமான சம்பவமோ தாக்கிய இடத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் யெகோவாவை அணுகலாம். யூதேயாவில் ஏற்பட்ட பஞ்சத்தைப்பற்றி முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் கேள்விப்பட்டபோது, நிவாரண நிதிகளை அனுப்பும் முன்பே தங்களுடைய சகோதரர்களுக்காக பலமுறை ஜெபம் செய்திருப்பார்கள். (அப்போஸ்தலர் 11:27-30) இன்றும் கிறிஸ்தவ கூட்டங்களில், உலகெங்குமுள்ள சகோதரர்களுக்காக அல்லது ஒரு பகுதியிலுள்ள சகோதரர்களுக்காக பொதுப்படையாக ஜெபம் செய்யப்படுவதைக் கேட்கிறோம். இதனால், கூடியிருப்பவர்கள் அனைவரும் ஜெபத்தைப் புரிந்துகொண்டு “ஆமென்” சொல்ல முடிகிறது.—1 கொரிந்தியர் 14:16.
தனி நபர்களுக்காக ஜெபியுங்கள்
9, 10. (அ) தனி நபர்களுக்காக ஜெபம் செய்வது ஏற்றது என்பதை எந்த உதாரணங்கள் காட்டுகின்றன? (ஆ) பவுலுக்காக எப்படி குறிப்பான ஜெபம் செய்யப்பட்டது?
9 இருந்தாலும், பொதுப்படையாக இல்லாமல் தனி நபர்களுக்கென்று குறிப்பாக செய்யப்பட்ட பல ஜெபங்களை பைபிள் பதிவு செய்திருக்கிறது. லூக்கா 22:31, 32-ல் இயேசு சொன்ன குறிப்பை சிந்தித்துப் பாருங்கள். அவருக்கு 11 உண்மையான அப்போஸ்தலர் இருந்தனர். வரவிருந்த கடினமான காலங்களில், அவர்கள் அனைவருக்குமே கடவுளுடைய ஆதரவு தேவைப்படும் என்பதால் இயேசு அவர்களுக்காக ஒட்டுமொத்தமாய் ஜெபம் செய்தார். (யோவான் 17:9-14) ஆனாலும், அந்தத் தொகுதியிலிருந்த ஒரு சீஷனாகிய பேதுருவுக்காக மட்டுமே குறிப்பாகவும் வேண்டிக் கொண்டார். இன்னும் சில உதாரணங்கள் பின்வருமாறு: எலிசா தன் வேலைக்காரனுக்கு உதவும்படி கடவுளிடம் ஜெபித்தார். (2 இராஜாக்கள் 6:15-17) காயு என்பவர் உடல் ரீதியிலும் ஆவிக்குரிய ரீதியிலும் நலமாக இருக்க அப்போஸ்தலன் யோவான் ஜெபித்தார். (3 யோவான் 1, 2) மேலும் சில ஜெபங்கள் குறிப்பிட்ட தொகுதியினருக்காக செய்யப்பட்டன.—யோபு 42:7, 8; லூக்கா 6:28; அப்போஸ்தலர் 7:60; 1 தீமோத்தேயு 2:1, 2.
10 குறிப்பான ஜெபங்களைப் பற்றி பவுலின் கடிதங்கள் வலியுறுத்திக் காண்பிக்கின்றன. தனக்காக அல்லது தனக்காகவும் தன் கூட்டாளிகளுக்காகவும் ஜெபிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். கொலோசெயர் 4:2, 3, 4 இவ்வாறு வாசிக்கிறது: “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள். கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக் குறித்துப் பேச வேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு . . . எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.” வேறு சில உதாரணங்களையும் கவனியுங்கள்: ரோமர் 15:32; 1 தெசலோனிக்கேயர் 5:25; 2 தெசலோனிக்கேயர் 3:1, 2; எபிரெயர் 13:18.
11. ரோமிலிருந்தபோது, எப்பாப்பிரா யாருக்காக ஜெபம் செய்தார்?
11 ரோமில் பவுலின் கூட்டாளியாக இருந்தவரும் தனி நபர்களுக்காக ஜெபித்தார். “எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், . . . தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்.” (கொலோசெயர் 4:12) ‘போராடுதல்’ என்ற வார்த்தை, பண்டைய காலத்து ஜிம்னாஸ்டிக் விளையாட்டு வீரனின் ஊக்கமான முயற்சியை அர்த்தப்படுத்துகிறது. எப்பாப்பிரா, உலகெங்குமுள்ள விசுவாசிகளுக்காக அல்லது ஆசியா மைனரெங்கும் உள்ள உண்மை வணக்கத்தாருக்காக ஊக்கமாக ஜெபம் செய்தாரா? குறிப்பாக கொலோசெயில் உள்ளவர்களுக்காக எப்பாப்பிரா ஜெபம் செய்ததாக பவுல் தெரியப்படுத்தினார். அவர்களுடைய நிலைமையை எப்பாப்பிரா அறிந்திருந்தார். அவர்கள் எல்லாருடைய பெயர்களும் நமக்குத் தெரியாது. அவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் இருந்தன என்றும் நமக்குத் தெரியாது. ஆனாலும் இப்படி ஒருவேளை ஊகிக்கலாம். இளம் லீனு அந்நாளைய தத்துவங்களில் சிக்கிக்கொள்ளாதிருக்க போராடிக் கொண்டிருந்திருக்கலாம். விட்டுவந்த யூத பழக்கவழக்கங்களில் மீண்டும் ஈடுபடத் தூண்டும் மனதை அடக்க ரூப்புக்கு பலம் தேவைப்பட்டிருக்கலாம். விசுவாசத்தில் இல்லாத கணவனுடன் வாழ்ந்துகொண்டு, தன் பிள்ளைகளை கர்த்தருக்குள் வளர்ப்பதற்கு சகிப்புத்தன்மையும் ஞானமும் பெர்சியாளுக்கு தேவைப்பட்டிருக்குமோ? தீராத நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அசிங்கிரீத்துக்கு இன்னும் ஆறுதல் தேவைப்பட்டிருக்குமோ? நிச்சயமாகவே எப்பாப்பிராவுக்கு தன்னுடைய சபையிலிருந்தவர்களைப் பற்றி தெரிந்திருந்தது. அவர்களுக்காக ஊக்கமாய் ஜெபம் செய்தார். ஏனென்றால் பக்தியுள்ள அவர்கள் யெகோவாவுக்கு பாத்திரராய் நடக்க வேண்டும் என்று அவரும் பவுலும் விரும்பினார்கள்.
12. நம் தனிப்பட்ட ஜெபங்களில் எப்படி குறிப்பாக ஜெபம் செய்யலாம்?
12 மற்றவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதன்பேரில் மேற்கண்ட உதாரணங்கள் உணர்த்தும் பாடத்தை புரிந்துகொண்டீர்களா? கிறிஸ்தவ கூட்டங்களில் பலதரப்பட்டவர்கள் இருப்பதால் பொதுப்படையாகத்தான் ஜெபம் செய்யப்படுகிறது என்பதை கவனித்தோம். ஆனால் நம்முடைய தனிப்பட்ட அல்லது குடும்ப ஜெபங்களில் தனிப்பட்டவர்களுக்காக குறிப்பாக ஜெபம் செய்யலாம். எல்லா பயண கண்காணிகளையும், ஆவிக்குரிய மேய்ப்பர்களையும் வழிநடத்தி ஆசீர்வதிக்கும்படி நாம் சில வேளைகளில் கடவுளிடம் வேண்டுகிறோம். ஆனால் இன்னும் குறிப்பாகவும் ஜெபிக்கலாம் அல்லவா? உதாரணமாக, உங்கள் சபையை சந்திக்க வரும் வட்டாரக் கண்காணியின் பெயரைக் குறிப்பிட்டு அல்லது உங்கள் புத்தக படிப்பை நடத்துபவரின் பெயரைக் குறிப்பிட்டு ஏன் ஜெபம் செய்யக்கூடாது? தீமோத்தேயு, எப்பாப்பிரோதீத்து ஆகியோரின் உடல்நலத்தில் பவுல் தனிப்பட்ட அக்கறை காண்பித்ததாக பிலிப்பியர் 2:25-28 மற்றும் 1 தீமோத்தேயு 5:23 காண்பிக்கின்றன. நமக்கு பழக்கப்பட்டவர்கள் உடல்நிலை சரியில்லாதிருக்கும்போது நாமும் அதேவிதமான அக்கறையை காண்பிக்கலாம் அல்லவா?
13. நம் தனிப்பட்ட ஜெபங்களில் எந்தெந்த விஷயங்களுக்காக ஜெபிப்பது பொருத்தமானதாக இருக்கும்?
13 மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் நாம் தலையிடக்கூடாது என்பது உண்மைதான். ஆனால் தெரிந்தவர்கள் மீதும், நேசமானவர்கள் மீதும் உள்ள கரிசனையின் நிமித்தம் அவர்களுக்காக ஜெபம் செய்வது சரியானதே. (1 தீமோத்தேயு 5:13; 1 பேதுரு 4:15) ஒரு சகோதரர் வேலையை இழந்திருக்கலாம். நம்மால் அவருக்கு வேறொரு வேலை வாங்கி கொடுக்க முடியாதிருக்கலாம். ஆனாலும், நம் தனிப்பட்ட ஜெபங்களில் அவருடைய பெயரைச் சொல்லி, அவர் எதிர்ப்படும் பிரச்சினையைக் குறிப்பிட்டு ஜெபம் செய்யலாம். (சங்கீதம் 37:25; நீதிமொழிகள் 10:3) ‘கர்த்தருக்குட்பட்டவரை’ திருமணம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தால், புருஷனும் பிள்ளைகளும் இல்லாமல் வயதாகிக்கொண்டே போகும் மணமாகாத சகோதரியை உங்களுக்குத் தெரியுமா? (1 கொரிந்தியர் 7:39) அந்தச் சகோதரியை ஆசீர்வதிக்கும்படியும் தன் சேவையில் உண்மையாக தொடருவதற்கு உதவும்படியும் உங்கள் தனிப்பட்ட ஜெபங்களில் ஏன் யெகோவாவிடம் கேட்கக்கூடாது? இன்னொரு உதாரணம், தவறு செய்த ஒரு சகோதரருக்கு இரு மூப்பர்கள் அறிவுரை கொடுத்திருக்கலாம். இவர்கள் தங்கள் தனிப்பட்ட ஜெபங்களில் ஏன் அந்த சகோதரரின் பெயரைச் சொல்லி அவருக்காக அவ்வப்போது ஜெபிக்கக் கூடாது?
14. குறிப்பான ஜெபங்கள் எவ்வாறெல்லாம் மற்றவர்களுக்கு உதவும்?
14 யெகோவாவின் ஆதரவும், ஆறுதலும், ஞானமும், பரிசுத்த ஆவியும், அதன் கனிகளும் தேவைப்படுகிற எத்தனையோ நபர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படிப்பட்டவர்களை உங்கள் தனிப்பட்ட ஜெபங்களில் நினைப்பதற்கு எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. தூரத்தின் காரணமாகவோ வேறு சூழ்நிலைகளின் காரணமாகவோ, பொருளாதார ரீதியிலோ, நேரடியாகவோ உங்களால் உதவ முடியாமல் போகலாம். ஆனால் உங்கள் சகோதர சகோதரிகளுக்காக ஜெபம் செய்ய மறக்காதீர்கள். அவர்கள் யெகோவாவுக்கு பாத்திரராய் நடக்க விரும்புகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஆனாலும் என்றென்றுமாக அவ்வாறு நடக்க அவர்களுக்கு உண்மையிலேயே உதவி தேவைப்படலாம். அதற்கு சிறந்ததோர் உதவி உங்கள் ஜெபங்களே.—சங்கீதம் 18:2; 20:1, 2; 34:15; 46:1; 121:1-3.
மற்றவர்களுக்கு பக்கபலமாக இருங்கள்
15. கொலோசெயரின் கடைசி பகுதிக்கு நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
15 மற்றவர்களுக்காக, அதிலும் உங்கள் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியவர்களுக்காக ஊக்கமாய் ஜெபிப்பது மட்டுமே உதவி செய்வதற்கான ஒரே வழி அல்ல. கொலோசெயர் புத்தகம் இதை தெளிவாக்குகிறது. கோட்பாடு சம்பந்தமான அறிவுரையையும் நடைமுறையான ஆலோசனையையும் கொடுத்த பிறகு, வெறுமனே வாழ்த்துக்கள் சொல்லி தன் கடிதத்தைப் பவுல் முடித்ததாக பல அறிஞர்கள் கருதுகின்றனர். (கொலோசெயர் 4:7-18) அதற்கு மாறாக, இந்தக் கடைசி பகுதியில் குறிப்பிடத்தக்க அறிவுரை அடங்கியிருப்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். இன்னும் அதிகத்தையும் இந்தப் பகுதியிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
16, 17. கொலோசெயர் 4:10, 11-ல் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரர்களைப் பற்றி நாம் என்ன சொல்லலாம்?
16 பவுல் இவ்வாறு எழுதினார்: “என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக் குறித்துக் கட்டளை பெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள். யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள்மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தின்பொருட்டு என் உடன் வேலையாட்களாயிருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தவர்கள் [“பக்கபலமாக இருந்தவர்கள்,” NW].”—கொலோசெயர் 4:10, 11.
17 ரோமில் விருத்தசேதனம் பண்ணப்பட்ட அநேக யூதர்கள் இருந்தனர். அவர்களில் சிலர் இப்போது கிறிஸ்தவர்கள். அப்படிப்பட்ட குறிப்பிடத்தக்க சில சகோதரர்களைப் பற்றியே பவுல் பேசினார். ஏனெனில் அவர்கள் யூத பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் பவுலின் உதவிக்கு வந்தார்கள். புறஜாதியாரிலிருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களுடன் கூட்டுறவு கொள்ள அவர்கள் தயங்காமல் இருந்திருக்கலாம். பவுலுடன் சேர்ந்து புறஜாதியாருக்குப் பிரசங்கிப்பதிலும் அவர்கள் சந்தோஷமாக பங்கெடுத்திருக்கலாம்.—ரோமர் 11:13, 14; கலாத்தியர் 1:16; 2:11-14.
18. பவுல் தன்னோடிருந்த சிலரை எப்படி பாராட்டினார்?
18 பவுலின் இந்தக் குறிப்பைக் கவனியுங்கள்: ‘இவர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தவர்கள்.’ இங்கு அவர் பயன்படுத்திய கிரேக்க வார்த்தை பைபிளில் இந்த இடத்தில் மட்டுமே காணப்படுகிறது. அநேக மொழிபெயர்ப்பாளர்கள் இதை “ஆறுதல்” என்று மொழிபெயர்க்கின்றனர். என்றாலும், வேறொரு கிரேக்க வார்த்தையே (பாராகாலேயோ) பொதுவாக “ஆறுதல்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இதே கடிதத்தில் மற்ற இடங்களில் பவுல் இவ்வார்த்தையை பயன்படுத்தினார். ஆனால் கொலோசெயர் 4:11-ல் அதைப் பயன்படுத்தவில்லை.—மத்தேயு 5:4; அப்போஸ்தலர் 4:36; 9:31; 2 கொரிந்தியர் 1:4; கொலோசெயர் 2:2; 4:8.
19, 20. (அ) ரோமில் தனக்கு உதவிய சகோதரர்களைக் குறிக்க பவுல் பயன்படுத்திய பதத்தின் அர்த்தம் என்ன? (ஆ) என்ன வழிகளில் அந்த சகோதரர்கள் பவுலுக்கு உதவி செய்திருப்பார்கள்?
19 பவுல் குறிப்பிட்ட சகோதரர்கள் வெறும் வாயளவில் ஆறுதல் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. கொலோசெயர் 4:11-ல் “பக்கபலமாக” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம், வேதனையை போக்கும் மருந்தைக் குறிப்பிட சில புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நியூ லைஃப் வர்ஷன் பைபிளில் “அவர்கள் எனக்கு எவ்வளவு உதவியாக இருந்திருக்கிறார்கள்!” என்று வாசிக்கிறோம். டுடேஸ் இங்லிஷ் வர்ஷன் இந்த சொற்றொடரை, “அவர்கள் எனக்கு பெரும் உதவியாக இருந்தார்கள்” என மொழிபெயர்க்கிறது. பவுலுக்கு அருகில் வாழ்ந்துவந்த கிறிஸ்தவர்கள் அவருக்கு உதவ என்ன செய்திருப்பார்கள்?
20 பவுலை மற்றவர்கள் வந்து பார்க்க முடிந்தது; ஆனால் அவரால் பல காரியங்களைச் செய்ய முடியவில்லை. உதாரணமாக, குளிர்காலத்திற்கு வேண்டிய உணவு, உடை போன்ற அடிப்படை தேவைக்குரிய பொருட்களைக்கூட அவர் போய் வாங்க முடியாது. படிப்பதற்கு சுருள்கள் அவருக்கு எப்படி கிடைக்கும்? எழுதுவதற்கு தேவையான பொருள்களையும் அவர் எங்கிருந்து வாங்குவார்? (2 தீமோத்தேயு 4:13) பவுலின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, கடைக்குப் போவது போன்ற சிறிய சிறிய காரியங்களில் அந்த சகோதரர்கள் அவருக்கு உதவியிருப்பார்கள் என்று நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறது அல்லவா? ஒரு சபையில் என்ன நடக்கிறது என்பதை விசாரித்தறியவும் அதை ஊக்குவிக்கவும் அவர் விரும்பியிருக்கலாம். காவலில் இருந்ததால் அவரால் அதைச் செய்ய முடிந்திருக்காது; ஆகவே பவுல் சார்பாக இந்த சகோதரர்கள் அந்த சபைகளுக்கு செய்திகளைக் கொண்டு செல்லவும் அறிக்கைகளை கொண்டுவரவும் உதவியிருப்பார்கள். எந்தளவு பக்கபலமாக இருந்தனர்!
21, 22. (அ) கொலோசெயர் 4:11-ன் வார்த்தைகள் நமக்கு ஏன் அக்கறைக்குரியவையாய் இருக்கின்றன? (ஆ) பவுலுடன் இருந்தவர்களின் முன்மாதிரியை நாம் பின்பற்றுவதற்கு சில வழிகள் யாவை?
21 “பக்கபலமாக” இருப்பதைப் பற்றி பவுல் எழுதியது, மற்றவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதன்பேரில் நமக்கு உட்பார்வை அளிக்கிறது. யெகோவாவின் ஒழுக்க தராதரங்களைப் பின்பற்றுதல், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்லுதல், பிரசங்க வேலையில் பங்கெடுத்தல் ஆகியவற்றில் அவர்கள் கடவுளுக்கு பாத்திரராய் நடந்துகொண்டிருக்கலாம். இதற்காக அவர்களை நாம் பாராட்ட வேண்டும். ஆனாலும் பவுலோடு இருந்தவர்களைப்போல “பக்கபலமாக” இருப்பதற்கு நாம் இன்னும் என்னென்ன செய்யலாம்?
22 ஒரு சகோதரி 1 கொரிந்தியர் 7:37-ஐ (NW) ஞானமாக பின்பற்றி மணம் செய்துகொள்ளாமலேயே இருக்கலாம். இப்போது அவரது குடும்பத்தினரும் அவருக்கு அருகில் இல்லாதிருக்கலாம். அப்படிப்பட்ட சகோதரியை உங்கள் குடும்பத்தோடு ஒன்றாக சேர்ந்து நேரம் செலவிட அல்லது சாப்பிட அழைக்கலாம் அல்லவா? கூட்டுறவிற்காக நண்பர்களையும் உறவினர்களையும் அழைக்கும்போது இவரையும் அழைக்கலாம் அல்லவா? மாநாட்டுக்காக அல்லது விடுமுறைக்காக எங்காவது செல்லும்போது அவரையும் உங்களுடன் கூடவரச் சொல்லலாமே. அல்லது உணவு பொருட்களை வாங்க கடைக்குச் செல்லும்போது வசதிப்படும் நேரத்தில் உங்களுடன் வரும்படி அவரைக் கேட்கலாமே. துணையை இழந்தவர்களுக்கும், வாகனங்களை ஓட்ட முடியாத நிலையில் இருப்பவர்களுக்கும் இதுபோன்ற உதவிகளைச் செய்யலாம். அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டு தெரிந்துகொள்ளலாம்; நல்ல பழங்களை வாங்குவது எப்படி, பிள்ளைகளுக்கு துணிமணிகளை தேர்ந்தெடுப்பது எப்படி போன்ற சின்னச் சின்ன விஷயங்களைக்கூட அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்; இவை உங்களுக்கு பயன் தரும். (லேவியராகமம் 19:32; நீதிமொழிகள் 16:31) அதன் விளைவாக உங்கள் பந்தம் இன்னும் பலப்படும். அப்போது அவர்களும் மருந்து வாங்குவது போன்ற சிறிய வேலைகளைச் செய்வதற்கு உங்கள் உதவியைக் கேட்க கூச்சப்பட மாட்டார்கள். ரோமில் பவுலுடன் இருந்தவர்கள் நடைமுறையான உதவிகளை செய்து, பக்கபலமாக இருந்திருப்பார்கள். நீங்களும் அவர்களைப் போல் இருக்கலாம். அன்றும் இன்றும் இதனால் பெறும் பலன்: அன்பின் கட்டுகள் பலப்படுகின்றன; ஒன்றுசேர்ந்து யெகோவாவை உண்மையுடன் சேவிக்க வேண்டும் என்ற நம் தீர்மானம் உறுதிப்படுகிறது.
23. எதில் நம் நேரத்தை செலவிடுவது நம் ஒவ்வொருவருக்கும் நன்மையாக இருக்கும்?
23 இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கலாம். இவை உதாரணங்கள் மட்டுமே. ஆனால் நம் சகோதர சகோதரிகளுக்கு இன்னும் “பக்கபலமாக” இருக்க உதவும் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளை இவை நமக்கு நினைவூட்டும். மனிதாபிமானத்தை வளர்ப்பதற்காக நாம் இப்படி செய்வதில்லை. கொலோசெயர் 4:10, 11-ல் குறிப்பிடப்பட்ட சகோதரர்களின் நோக்கம் அதுவல்ல. அவர்கள் ‘தேவனுடைய ராஜ்யத்தின்பொருட்டு உடன் வேலையாட்களாய்’ இருந்தார்கள். பக்கபலமாக இருப்பது அதோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தது. நம் விஷயத்திலும் அது உண்மையாய் இருக்கட்டும்.
24. மற்றவர்களுக்காக ஜெபம் செய்வதற்கும் அவர்களைப் பலப்படுத்துவதற்கும் முக்கிய காரணம் என்ன?
24 நம் தனிப்பட்ட ஜெபங்களில் மற்றவர்களுடைய பெயரைச் சொல்லி ஜெபம் பண்ணுவதற்கும் அவர்களைப் பலப்படுத்தும்படி முயற்சிகள் எடுப்பதற்கும் காரணம்: நம் சகோதர சகோதரிகள் ‘கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள’ விரும்புகிறார்கள் என்று நம்புவதனாலேயே. (கொலோசெயர் 1:10) இந்த உண்மை வேறொன்றோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது. கொலோசெயில் உள்ளவர்களுக்காக எப்பாப்பிரா செய்த ஜெபங்களைப் பற்றி எழுதுகையில் பவுல் அதைக் குறிப்பிட்டார். அது, அவர்கள் ‘தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டும்’ என்பதே. (கொலோசெயர் 4:12) தனிப்பட்டவர்களாக நாம் எப்படி அவ்வாறு நிலைநிற்கலாம்? நாம் பார்க்கலாம்.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச்டவர் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கங்கள் 490-1-ஐயும் ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ (ஆங்கிலம்), பக்கங்கள் 226-8-ஐயும் பாருங்கள்.
நீங்கள் கவனித்தீர்களா?
• நம்முடைய தனிப்பட்ட ஜெபங்களில் நாம் எப்படி அதிக உதவியாய் இருக்கலாம்?
• என்ன அர்த்தத்தில் சில கிறிஸ்தவர்கள் பவுலுக்கு “பக்கபலமாக” இருந்தார்கள்?
• என்ன சூழ்நிலைகளில் நாம் “பக்கபலமாக” இருக்க முடியும்?
• என்ன நோக்கத்துடன் நம் சகோதர சகோதரிகளுக்காக ஜெபம் செய்து, அவர்களைப் பலப்படுத்த முயல்கிறோம்?
[பக்கம் 18-ன் படம்]
எங்காவது குடும்பமாக செல்லும்போது வேறொரு கிறிஸ்தவரையும் கூட்டிச்செல்வீர்களா?
[படத்திற்கான நன்றி]
Courtesy of Green Chimney’s Farm