யெகோவாவை எப்போதும் உங்கள் முன்பாக வைத்திருங்கள்
“கர்த்தரை [“யெகோவாவை,” NW] எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.”—சங். 16:8.
1. பைபிள் பதிவுகள் நமக்கு எதற்கு உதவலாம்?
மனிதர்களுடன் யெகோவா நடந்துகொண்ட விதத்தைப் பற்றிய அருமையான பதிவுகள் அவருடைய வார்த்தையான பைபிளில் உள்ளன. கடவுளுடைய நோக்கம் நிறைவேறுவதில் பங்கேற்ற பலரைப்பற்றி அவை குறிப்பிடுகின்றன. அவர்கள் சொன்ன விஷயங்களும் செய்த காரியங்களும் ஏதோ நாம் வாசித்து மகிழ்வதற்காக மட்டுமே எழுதப்பட்ட கதைகள் அல்ல. மாறாக, அந்தச் சம்பவங்கள் கடவுளிடம் நெருங்கி வர நமக்கு உதவுகின்றன.—யாக். 4:8, NW.
2, 3. சங்கீதம் 16:8-லுள்ள வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன?
2 ஆபிரகாம், சாராள், மோசே, ரூத், தாவீது, எஸ்தர், அப்போஸ்தலன் பவுல் போன்ற மிகப் பிரபலமான பைபிள் கதாபாத்திரங்களின் அனுபவங்களிலிருந்து நாம் எல்லாருமே பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். எனினும், அந்தளவுக்குப் பிரபலமாகப் பேசப்படாத நபர்களைப் பற்றிய பைபிள் பதிவுகளில் இருந்தும்கூட நாம் பயன் அடையலாம். பைபிள் பதிவுகளைத் தியானிப்பது சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகளுக்கு இசைவாகச் செயல்பட நமக்கு உதவும்: “கர்த்தரை [“யெகோவாவை,” NW] எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.” (சங். 16:8) இந்த வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன?
3 ஒரு போர் வீரர் பொதுவாக தன்னுடைய வலது கையில் பட்டயத்தைப் பிடித்திருப்பார். கேடயம் இடது கையில் இருப்பதால், இவருடைய வலப்புறம் பாதுகாப்பின்றி இருக்கும். எனினும், இவருடைய நண்பர் வலப்புறத்தில் இவருக்கு அருகே நின்று போர் செய்தபோது இவர் பாதுகாப்பைப் பெற்றார். நாமும் யெகோவாவை மனதில் வைத்து, அவருக்குப் பிரியமானதைச் செய்தால் அவர் நம்மைப் பாதுகாப்பார். எனவே, ‘யெகோவாவை எப்பொழுதும் நமக்கு முன்பாக வைத்திருப்பதற்கு’ பைபிள் பதிவுகளைச் சிந்திப்பது, நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு பலப்படுத்தும் என்பதை நாம் பார்ப்போம்.
யெகோவா நம் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறார்
4. கடவுள் ஜெபங்களுக்குப் பதில் அளிக்கிறார் என்பதற்கு பைபிளிலிருந்து உதாரணம் கொடுங்கள்.
4 யெகோவாவை எப்போதும் நமக்கு முன்பாக வைத்திருந்தால் அவர் நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் அளிப்பார். (சங். 65:2; 66:19) இதற்கு ஆபிரகாமின் மூத்த ஊழியக்காரர் ஒருவருடைய வாழ்வில் நடந்த சம்பவம் அத்தாட்சி அளிக்கிறது; அவர் ஒருவேளை எலியேசராக இருந்திருக்கலாம். கடவுள் பக்தியுள்ள பெண்ணை ஈசாக்குக்கு திருமணம் செய்துவைக்க ஆபிரகாம் விரும்பினார்; அத்தகைய பெண்ணைக் கண்டுபிடிக்க எலியேசரை மெசொப்பொத்தாமியாவுக்கு அவர் அனுப்பினார். காரியத்தை வழிநடத்தும்படி கடவுளிடம் எலியேசர் ஜெபம் செய்தார்; தன்னுடைய ஒட்டகங்கள் குடிப்பதற்கு ரெபேக்காள் தண்ணீர் ஊற்றியபோது யெகோவாவின் வழிநடத்துதலை அவர் புரிந்துகொண்டார். அவர் ஊக்கமாய் ஜெபம் செய்ததால், ஈசாக்கின் அருமை மனைவியாகவிருந்த பெண்ணைக் கண்டுபிடித்தார். (ஆதி. 24:12-14, 67) ஆபிரகாமின் ஊழியக்காரருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது ஒரு விசேஷப் பொறுப்பு என்பது உண்மைதான். எனினும், நம்முடைய ஜெபங்களுக்கும் யெகோவா பதில் அளிப்பார் என்பதில் நாமும் அதேபோன்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும், அல்லவா?
5. மனதுக்குள் சுருக்கமாகச் செய்கிற ஜெபத்திற்கும்கூட யெகோவாவிடமிருந்து பதில் கிடைக்குமென நாம் ஏன் சொல்லலாம்?
5 சில சமயங்களில், கடவுளுடைய உதவிக்காக நாம் சட்டென ஜெபம் செய்ய வேண்டியிருக்கலாம். ஒருசமயம், தன்னுடைய பானபாத்திரக்காரனான நெகேமியாவின் முகத்தில் கவலை ரேகை படர்ந்திருந்ததை பெர்சியாவின் ராஜாவான அர்தசஷ்டா கவனித்தார். “நீ கேட்கிற காரியம் என்ன” என்று ராஜா அவரிடம் கேட்டார். ‘அப்பொழுது அவர் [நெகேமியா]: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணினார்.’ அவரால் மனதுக்குள் சுருக்கமாக மட்டுமே ஜெபம் செய்ய முடிந்தது. அந்த ஜெபத்தையும் கடவுள் கேட்டார். எருசலேமின் மதிற்சுவரை மறுபடியும் கட்டுவதற்கு ராஜாவை உதவச் செய்வதன்மூலம் அவருடைய ஜெபத்திற்கு பதில் அளித்தார். (நெகேமியா 2:1-8-ஐ வாசிக்கவும்.) ஆம், மனதுக்குள் சுருக்கமாகச் செய்கிற ஜெபத்திற்கும்கூட பதில் கிடைக்கும்.
6, 7. (அ) ஜெபம் செய்வதில் எப்பாப்பிரா எப்படி முன்மாதிரியாய் இருந்தார்? (ஆ) மற்றவர்களுக்காக நாம் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?
6 மற்றவர்களுக்காக நாம் செய்கிற ஜெபங்களுக்கு எப்போதும் உடனடியாக பதில் கிடைக்காவிட்டாலும்கூட, “ஒருவருக்காக ஒருவர்” ஜெபம் செய்யும்படி நாம் ஊக்கப்படுத்தப்படுகிறோம். (யாக். 5:16) ‘கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரரான’ எப்பாப்பிரா, சக விசுவாசிகளுக்காக ஊக்கமாய் ஜெபம் செய்தார். ரோமிலிருந்து பவுல் எழுதியபோது, “உங்களைச் [கொலோசெயர்களைச்] சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன் [எப்பாப்பிரா], நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்க வேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்” என்று சொன்னார்.—கொலோ. 1:7; 4:12, 13.
7 கொலோசெ, லவோதிக்கேயா, எராப்போலியா ஆகிய நகரங்கள் ஆசியா மைனரில் அருகருகே இருந்தன. எராப்போலியா மக்கள் சிபலி தேவியை வழிபட்டார்கள்; லவோதிக்கேயாவை சேர்ந்தோர் பொருளாசைமிக்கவர்களாய் இருந்தார்கள்; கொலோசெயர்கள் தத்துவ சாஸ்திரங்களில் மூழ்கியிருந்தார்கள். இத்தகைய மக்கள் மத்தியிலேயே கிறிஸ்தவர்கள் குடியிருந்தார்கள். (கொலோ. 2:8) கொலோசெ நகரத்தைச் சேர்ந்த எப்பாப்பிரா அங்கிருந்த விசுவாசிகளுக்காக ஏன் ‘தன் ஜெபங்களில் போராடினார்’ என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது, அல்லவா? எப்பாப்பிராவின் ஜெபங்களுக்கு எப்படிப் பதில் கிடைத்தன என்பதை பைபிள் விளக்காவிட்டாலும், தன்னுடைய சக விசுவாசிகளுக்காக ஜெபம் செய்வதை அவர் நிறுத்திவிடவில்லை. நாமும்கூட நம் சகோதர சகோதரிகளுக்காக ஜெபம் செய்வதை நிறுத்தி விடக்கூடாது. நாம் ‘அந்நிய [அதாவது, பிறர்] காரியங்களில் தலையிடுவதில்லை.’ எனினும், குடும்பத்தாரிலோ நண்பர்களிலோ ஒருவர் விசுவாசத்தின் நிமித்தம் கடும் சோதனையை எதிர்ப்படுவதை நாம் கேள்விப்படலாம். (1 பே. 4:15) அப்படிப்பட்டவருக்காகத் தனிப்பட்ட விதத்தில் நாம் ஜெபம் செய்வது சரியாய் இருக்கும், அல்லவா? மற்றவர்கள் செய்த ஜெபங்களிலிருந்து பவுல் உதவி பெற்றார்; அதுபோல, நம்முடைய ஜெபங்களும் மற்றவர்களுக்குப் பெருமளவு உதவி செய்யும்.—2 கொ. 1:10, 11.
8. (அ) எபேசுவைச் சேர்ந்த மூப்பர்கள் ஜெபம் செய்வதன் முக்கியத்துவத்தைப் புரிந்திருந்தார்கள் என்பது நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) கடவுளிடம் ஜெபம் செய்வதை நாம் எப்படிக் கருத வேண்டும்?
8 தவறாமல் ஜெபம் செய்யும் பழக்கமுள்ளவர்களென மற்றவர்கள் நம்மைக் கருதுகிறார்களா? எபேசுவிலிருந்த மூப்பர்களை பவுல் சந்தித்த பிறகு, ‘அவர் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம்பண்ணினார்.’ பின்னர், ‘அவர்களெல்லாரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்க மாட்டீர்களென்று அவர் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு, பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவரை முத்தஞ்செய்தார்கள்.’ (அப். 20:36-38) அந்த மூப்பர்களின் பெயர்களெல்லாம் நமக்குத் தெரியாவிட்டாலும் அவர்கள் ஜெபம் செய்வதன் முக்கியத்துவத்தைப் புரிந்திருந்தார்கள் என்பது தெளிவாய் தெரிகிறது. ஜெபம் செய்கிற பாக்கியத்தை நிச்சயமாய் நாமும் பொன்னெனப் போற்ற வேண்டும்; நம் பரலோகத் தகப்பன் நம் ஜெபங்களைக் கேட்கிறார் என்ற நம்பிக்கையோடே, “பரிசுத்தமான கைகளை உயர்த்தி” ஜெபம் செய்ய வேண்டும்.—1 தீ. 2:8.
கடவுளுக்கு முழுமையாய்க் கீழ்ப்படியுங்கள்
9, 10. (அ) செலொப்பியாத்தின் மகள்கள் எந்த விஷயத்தில் முன்மாதிரியாய் இருந்தார்கள்? (ஆ) செலொப்பியாத்தின் மகள்களுடைய கீழ்ப்படிதல், திருமண விஷயத்தில் என்ன தீர்மானத்தை எடுக்க கிறிஸ்தவர்களுக்கு உதவுகிறது?
9 யெகோவாவை எப்போதும் மனதில் வைப்பது அவருக்குக் கீழ்ப்படிய நமக்கு உதவும். அதன் விளைவாக அவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவோம். (உபா. 28:14; 1 சா. 15:22) இதற்குக் கீழ்ப்படியத் தயாராய் இருப்பது அவசியம். உதாரணத்திற்கு, மோசேயின் காலத்தில் வாழ்ந்த செலொப்பியாத்தின் ஐந்து மகள்களுடைய மனப்பான்மையை எடுத்துக்கொள்வோம். இஸ்ரவேலரது வழக்கப்படி, தகப்பனுடைய சொத்துக்கள் மகன்களைப் போய்ச் சேர்ந்தன. செலொப்பியாத்திற்கோ ஆண் பிள்ளைகள் இல்லை. ஆகவே, அவர் இறந்த பிறகு, அவருடைய சொத்துக்களை ஐந்து மகள்களுக்கும் கொடுக்கும்படி யெகோவா சொன்னார். எனினும், ஒரு நிபந்தனை விதித்தார். அதன்படி, சொத்துகள் அந்தக் கோத்திரத்தைவிட்டு வெளியே போகாதிருக்க அவர்கள் மனாசேயின் மகன்களை மணமுடிக்க வேண்டியிருந்தது.—எண். 27:1-8; 36:6-8.
10 கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை செலொப்பியாத்தின் மகள்களுக்கு இருந்தது. “கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலொப்பியாத்தின் குமாரத்திகள் செய்தார்கள். செலொப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள் திர்சாள் ஒக்லாள் மில்காள் நோவாள் என்பவர்கள் தங்கள் பிதாவின் சகோதரருடைய புத்திரரை விவாகம்பண்ணினார்கள்; அவர்கள் யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் வம்சத்தாரை விவாகம்பண்ணினபடியால், அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் பிதாவின் வம்சமான கோத்திரத்தோடே இருந்தது” என்று பைபிள் சொல்கிறது. (எண். 36:10-12) கீழ்ப்படிதலுள்ள அந்தப் பெண்கள் யெகோவாவின் கட்டளைப்படி செய்தார்கள். (யோசு. 17:3, 4) அத்தகைய விசுவாசத்தையுடைய ஆன்மீக முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள், ‘கர்த்தருக்குட்பட்டவரையே’ மணமுடிக்கத் தீர்மானித்திருக்கிறார்கள்.—1 கொ. 7:39.
11, 12. கடவுள்மீது நம்பிக்கை இருந்ததை காலேப் எப்படிக் காட்டினார்?
11 இஸ்ரவேலரான காலேப்பைப் போல, நாமும் யெகோவாவுக்கு முழுமையாய்க் கீழ்ப்படிய வேண்டும். (உபா. 1:36) பொ.ச.மு. 1513-ல் எகிப்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலையாகி வந்ததும், கானான் தேசத்தை வேவு பார்க்க 12 பேரை மோசே அனுப்பினார். அவர்களில் காலேப்பும் யோசுவாவும் மட்டுமே, கடவுள்மீது முழு நம்பிக்கை வைத்து, அந்தத் தேசத்திற்குச் செல்லும்படி ஜனங்களை ஊக்கப்படுத்தினார்கள். (எண். 14:6-9) சுமார் நாற்பது வருடங்களுக்குப் பிறகு, யோசுவாவும் காலேபும் உயிரோடிருந்தார்கள், யெகோவாவை முழுமையாய்ப் பின்பற்றிக் கொண்டிருந்தார்கள்; வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலரை அழைத்துச் செல்ல யோசுவாவை கடவுள் பயன்படுத்தினார். ஆனால், இஸ்ரவேலர் 40 வருடங்கள் வனாந்தரத்தில் சுற்றித் திரிந்த காலத்தில் விசுவாசமற்ற அந்தப் பத்து வேவுகாரர்கள் இறந்துபோனார்கள்.—எண். 14:31-34.
12 இஸ்ரவேலரின் அந்த வனாந்தரப் பயணத்தில் இறந்துபோகாத வயதானவர்களில் காலேப்பும் ஒருவர். ‘நானோ என் தேவனாகிய கர்த்தரை [யெகோவாவை] உத்தமமாய்ப் [“முழுமையாய்ப்,” NW] பின்பற்றினேன்’ என்று காலேப்பால் யோசுவாவிடம் சொல்ல முடிந்தது. (யோசுவா 14:6-9-ஐ வாசிக்கவும்.) தனக்குக் கொடுப்பதாக கடவுள் வாக்குறுதி அளித்திருந்த மலைநாடு, மாபெரும் கோட்டைச் சுவர்களுடைய நகரங்களாய், பகைவர்களின் குடியிருப்பாய் இருந்தபோதிலும் அதைத் தரும்படி எண்பத்தைந்து வயதான காலேப் கேட்டார்.—யோசு. 14:10-15.
13. நாம் சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தாலும் கடவுளுடைய ஆசீர்வாதங்களைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
13 விசுவாசமும் கீழ்ப்படிதலுமிக்க காலேப்பைப் போலவே, நாமும் ‘யெகோவாவை முழுமையாய்ப் பின்பற்றினால்’ நமக்கும் கடவுளுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். பெரிய பிரச்சினைகளை நாம் எதிர்ப்படும்போது, ‘யெகோவாவை முழுமையாய்ப் பின்பற்றினால்’ அவருடைய ஆதரவு கிடைக்கும். ஆனால், காலேப்பைப் போல, வாழ்நாள் முழுவதும் யெகோவாவை முழுமையாய்ப் பின்பற்றுவது கடினமாக இருக்கலாம். ஆரம்பத்தில் சாலொமோன் ராஜா யெகோவாவைப் பின்பற்றி வந்தார்; ஆனால், வயதான காலத்தில் அவருடைய மனைவிகள் பொய்க் கடவுள்களை வணங்கும்படி அவருடைய மனதை மாற்றினார்கள், ஆகவே அவர், ‘தன் தகப்பனாகிய தாவீதைப்போலக் கர்த்தரைப் பூரணமாய்ப் [“முழுமையாய்ப்,” NW] பின்பற்றவில்லை.’ (1 இரா. 11:4-6) நாம் எத்தகைய சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தாலும் கடவுளுக்கு முழுமையாய்க் கீழ்ப்படிந்து, எப்போதும் அவரை நமக்கு முன்பாக வைத்திருப்போமாக.
யெகோவாமீது எப்போதும் நம்பிக்கை வையுங்கள்
14, 15. நகோமியின் அனுபவங்களிலிருந்து கடவுள்மீது நம்பிக்கை வைப்பது குறித்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
14 நம்முடைய எதிர்காலமே இருண்டுவிட்டதாக நினைத்து சோர்ந்துபோகும்போது, முக்கியமாய் கடவுள்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். உதாரணத்திற்கு, வயதான நகோமியை எடுத்துக்கொள்ளுங்கள். அவள் தன் கணவரையும் இரண்டு மகன்களையும் மரணத்தில் பறிகொடுத்திருந்தாள். மோவாப் தேசத்திலிருந்து யூதாவுக்கு அவள் திரும்பி வந்தபோது, “நீங்கள் என்னை நகோமி [“என் இனிமை,” NW அடிக்குறிப்பு] என்று சொல்லாமல், மாராள் [“கசப்பு,” NW அடிக்குறிப்பு] என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன்” என்று வேதனையில் புலம்பினாள்.—ரூத் 1:20, 21.
15 நகோமி துயரத்தில் தத்தளித்தாலும் யெகோவாமீது எப்போதும் நம்பிக்கை வைத்திருந்தாள் என்பது ரூத் புத்தகத்தைக் கவனமாய் வாசிக்கும்போது தெரிகிறது. பின்னர் அவளுடைய சூழ்நிலை எப்படித் தலைகீழாய் மாறியது! நகோமியின் விதவை மருமகள் ரூத், போவாஸின் மனைவியாகி, ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். நகோமி அந்தக் குழந்தையை வளர்க்கிற தாயானாள்; “அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்” என்று பைபிள் சொல்கிறது. (ரூத் 4:14-17) பூமியில் நகோமி உயிர்த்தெழுப்பப்படும்போது, ரூத் அங்கிருப்பதையும் அவள் இயேசுவின், மேசியாவின் மூதாதையாக ஆனதையும் அறிந்துகொள்வாள். (மத். 1:5, 6, 16) நகோமியைப் போலவே, இருண்டுவிட்டதாக நாம் நினைக்கிற சூழ்நிலைமை எப்படி மாறுமென நமக்கு உறுதியாய் தெரியாது. எனவே, நீதிமொழிகள் 3:5, 6 சொல்கிற விதமாக, நாம் யெகோவாமீது எப்போதும் நம்பிக்கை வைத்திருப்போமாக. அது சொல்வதாவது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”
பரிசுத்த ஆவிமீது சார்ந்திருங்கள்
16. பண்டைய இஸ்ரவேலிலிருந்த மூப்பர்கள் சிலருக்கு கடவுளுடைய பரிசுத்த ஆவி எவ்வாறு உதவியது?
16 யெகோவாவை எப்போதும் நமக்கு முன்பாக வைத்திருந்தால், தம்முடைய பரிசுத்த ஆவிமூலம் நம்மை வழிநடத்துவார். (கலா. 5:16-18) இஸ்ரவேல் ‘ஜனங்களின் பாரத்தைச் சுமப்பதில்’ மோசேக்கு உதவியாக இருக்கும்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 70 மூப்பர்களின் மேல் பரிசுத்த ஆவி இருந்தது. அவர்களில் எல்தாத், மேதாத் என்பவர்களுடைய பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தாலும் தங்களுடைய பொறுப்புகளைச் செய்து முடிப்பதற்கு இவர்கள் அனைவருக்குமே பரிசுத்த ஆவி உதவியது. (எண். 11:13-29) முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் போலவே, இவர்களும் திறமையானவர்களாக, பயபக்தியுள்ளவர்களாக, நம்பகமானவர்களாக, நேர்மையானவர்களாக இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. (யாத். 18:21) இத்தகைய குணங்களையே கிறிஸ்தவ மூப்பர்கள் இன்று வெளிக்காட்டுகிறார்கள்.
17. ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதில் யெகோவாவின் பரிசுத்த ஆவி என்ன பங்கு வகித்தது?
17 வனாந்தரத்தில் ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதில் யெகோவாவின் பரிசுத்த ஆவி முக்கியப் பங்கு வகித்தது. ஆசரிப்புக் கூடாரத்தின் முக்கிய கைவினைஞராகவும் அதைக் கட்டுபவராகவும் பெசலெயேல் என்பவரை யெகோவா நியமித்தார்; ‘சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கு வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவருக்கு உண்டாக, அவரை தேவ ஆவியினால் நிரப்புவதாக’ யெகோவா அவருக்கு வாக்குறுதி அளித்தார். (யாத். 31:3-5) இந்த அருமையான பணியில், பெசலெயேலுடனும் அவருடைய உதவியாளரான அகோலியாபுடனும் சேர்ந்து “ஞான இருதயமுள்ள” நபர்கள் ஈடுபட்டார்கள். அதோடு, நன்கொடைகளை வாரி வழங்குவதற்குத் தாராள மனமுள்ளவர்களை யெகோவாவின் பரிசுத்த ஆவி தூண்டியது. (யாத். 31:6; 35:5, 30-34) அதே ஆவி, ராஜ்யத்தை முதலாவது தேடுவதற்குத் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய இன்றுள்ள கடவுளுடைய ஊழியர்களைத் தூண்டுகிறது. (மத். 6:33) நம்மிடம் விசேஷ திறமைகள் இருக்கலாம்; எனினும், நம் நாளில் தம்முடைய ஜனங்களுக்கு யெகோவா தந்திருக்கிற வேலையை நாம் செய்து முடிப்பதற்கு, பரிசுத்த ஆவிக்காக ஜெபம் செய்யவும் நம்மை அது வழிநடத்த அனுமதிக்கவும் வேண்டும்.—லூக். 11:13.
யெகோவா தேவனிடம் எப்போதும் பயபக்தியாய் நடந்துகொள்ளுங்கள்
18, 19. (அ) கடவுளுடைய பரிசுத்த ஆவி நம்மில் எத்தகைய மனப்பான்மையை உண்டுபண்ணுகிறது? (ஆ) சிமியோன், அன்னாள் ஆகியோரின் முன்மாதிரியிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
18 யெகோவாவை எப்போதும் நமக்கு முன்பாக வைத்திருப்பதற்கு பரிசுத்த ஆவி நம்மில் பயபக்தியை உண்டுபண்ணுகிறது. கடவுளுடைய பூர்வகால மக்கள், ‘அவருடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்தி . . . [அவருக்குப்] பயந்திருப்பார்கள்’ என்று அவர்களைப்பற்றி சொல்லப்பட்டிருந்தது. (ஏசா. 29:23) முதல் நூற்றாண்டில் எருசலேமிலிருந்த வயதான சிமியோனும் அன்னாளும் தேவபக்திமிக்கவர்களாய் இருந்தார்கள். (லூக்கா 2:25-38-ஐ வாசிக்கவும்.) மேசியாவைக் குறித்துச் சொல்லப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்கள்மீது சிமியோன் விசுவாசம் வைத்திருந்தார். ஆகவே, ‘இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருந்தார்.’ சிமியோன்மீது பரிசுத்த ஆவியை ஊற்றி, மேசியாவைக் காணும்வரை உயிரோடிருப்பாரென கடவுள் அவருக்கு உறுதி அளித்தார். அவ்வாறே நடந்தது. பொ.ச.மு. 2-ஆம் ஆண்டில் ஒருநாள், பச்சிளங்குழந்தையான இயேசுவைத் தூக்கிக்கொண்டு, அவருடைய தாயான மரியாளும் வளர்ப்புத் தகப்பனான யோசேப்பும் ஆலயத்திற்கு வந்தார்கள். பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் சிமியோன் மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசன வார்த்தைகளை உரைத்தார்; மரியாளுக்கு வரவிருந்த துயரத்தையும் முன்னுரைத்தார். வாதனையின் கழுமரத்தில் இயேசு அறையப்பட்டபோது அந்தத் துயரத்தை மரியாள் அனுபவித்தார். சிமியோனோ, “கர்த்தருடைய கிறிஸ்துவை” தன்னுடைய கைகளில் ஏந்தியபோது எந்தளவுக்கு அகமகிழ்ந்திருப்பார் என்பதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். பயபக்தியாய் நடந்துகொள்வதில் இன்று கடவுளுடைய ஊழியர்களுக்கு சிமியோன் அருமையான முன்மாதிரியாய்த் திகழ்கிறார்.
19 தேவபக்திமிக்க 84 வயதுள்ள விதவையான அன்னாள் “தேவாலயத்தை விட்டு நீங்காமல்” இருந்தார். “உபவாசித்து, ஜெபம்பண்ணி,” இரவும் பகலும் யெகோவாவுக்குப் பரிசுத்த சேவை செய்து வந்தார். குழந்தையாயிருந்த இயேசுவை அவருடைய பெற்றோர் ஆலயத்திற்குத் தூக்கிக்கொண்டு வந்தபோது அன்னாளும் அங்கிருந்தார். வருங்கால மேசியாவைக் கண்டபோது எவ்வளவு நன்றியுள்ளவராய் இருந்திருப்பார்! ஆம், ‘கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினார்.’ இந்த நற்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அன்னாள் தூண்டப்பட்டார். சிமியோனையும் அன்னாளையும்போல, சாட்சிகளாக யெகோவாவுக்குச் சேவை செய்ய வயது தடையில்லை என்பதை வயதான கிறிஸ்தவர்கள் அறிந்து இன்று சந்தோஷப்படுகிறார்கள்.
20. நாம் எந்த வயதினராக இருந்தாலும் என்ன செய்ய வேண்டும், ஏன்?
20 நாம் எந்த வயதினராக இருந்தாலும் யெகோவாவை எப்போதும் நமக்கு முன்பாக வைத்திருக்க வேண்டும். அப்போது, அவருடைய அரசதிகாரத்தைப் பற்றியும், அற்புதமான செயல்களைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்ல மனத்தாழ்மையோடு நாம் எடுக்கிற முயற்சிகளை அவர் ஆசீர்வதிப்பார். (சங். 71:17, 18; 145:10-13) ஆனால், யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கு, நாம் கடவுளுக்குப் பிரியமான குணங்களை வெளிக்காட்ட வேண்டும். பைபிள் பதிவுகளைக் கூடுதலாக ஆராய்வதன்மூலம் அத்தகைய குணங்களைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
நீங்கள் எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• யெகோவா ஜெபங்களுக்குப் பதில் அளிக்கிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
• கடவுளுக்கு நாம் ஏன் முழுமையாய்க் கீழ்ப்படிய வேண்டும்?
• நாம் சோர்ந்து போனாலும், யெகோவாமீது ஏன் எப்போதும் நம்பிக்கை வைக்க வேண்டும்?
• கடவுளுடைய பரிசுத்த ஆவி அவருடைய ஜனங்களுக்கு எப்படி உதவுகிறது?
[பக்கம் 4-ன் படம்]
யெகோவாவிடம் நெகேமியா செய்த ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது
[பக்கம் 5-ன் படம்]
நகோமி பெற்ற ஆசீர்வாதங்களை எண்ணிப் பார்ப்பது யெகோவாமீது நம்பிக்கை வைக்க நமக்கு உதவும்