அறிவியலுக்கு முன்னே பைபிள் நோயுடன் போராடியது
இன்று எப்போதெல்லாம் பைபிள் குறிப்பிடப்படுகிறதோ, அறியாத அநேக மக்கள், அது தங்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்குத் தகுதியற்றதென அதை உடனே மனதைவிட்டு அகற்றுகின்றனர். நவீன மனிதன் அண்மையில்தானே கற்றுக்கொண்ட அல்லது இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அது குறிப்பிட்டது என்பதைக் காண தங்கள் மனதைத் திறந்து வைக்க மறுக்கின்றனர். உலக நிலைமைகள், அரசாங்கம், வானியல், சுற்றுச்சூழல், இயற்கை வரலாறு, உடலியங்கியல் மற்றும் உளவியல் ஆகிய இவையனைத்து சம்பந்தமாகவும் இது உண்மையாக இருக்கிறது. இது நோயின் காரியத்திலும் உண்மையாகவே இருக்கிறது.
பைபிள் ஒரு ஜீவ புத்தகம். வேறு எந்தப் பதிப்போ இலக்கிய தொகுப்போ வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுக்கு இத்தகைய பரந்த பொருத்தத்தைக் கொண்டில்லை. நல்ல உடல்நலமும் வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்கிறது, எனவே உடல்நலத்தோடு தொடர்புடைய பல கொள்கைகளை பைபிள் கொண்டிருக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. குஷ்டரோகம், மூலநோய் (குத இரத்தக்குழல் தளர்ச்சி), நீர்க்கோவை (நீர்வீக்கம்), வயிற்று நோய்கள் போன்ற பல நோய்களை பைபிள் குறிப்பிடுகிறது.—உபாகமம் 24:8; 28:27; லூக்கா 14:2; 1 தீமோத்தேயு 5:23.
அடிப்படையில் பைபிள், உடல்சார்ந்த நோயைப்பற்றி போதிப்பதற்காக எழுதப்படவில்லை. இருப்பினும், அது கொடுக்கக்கூடிய தகவல் துல்லியமானதும் ஆராய்வதற்குப் பயனுள்ளதுமாயிருக்கிறது. மனித உடல் பண்டைய சங்கீதக்காரனுக்கு வியப்பூட்டுவதாய் இருந்தது; அதைக்குறித்து அவர் எழுதினார்: “நீர் [யெகோவா] என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.”—சங்கீதம் 139:13-16.
கருப்பையின் இருளில் கரு மறைக்கப்பட்டிருந்தாலும், யெகோவா அது உருவாக்கப்படுவதையும் எலும்புகள் வளர்வதையும் காண்கிறார். அவருக்கு “இருளும் வெளிச்சமும் சரி.” (வசனம் 12) யெகோவாவிடமிருந்து எதுவும் மறைவானதாக இல்லை. மருத்துவ ரீதியில் சொல்லப்போனால், கரு தாயிடமிருந்து கருக்கொடியால் பாதுகாத்து வைக்கப்பட்டு இவ்வாறாக ஓர் அந்நிய பொருளாக வெளியேற்றப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்கிறது. எனினும், இந்தச் சங்கீதத்தில் விவரிக்கப்பட்ட உண்மை, மருத்துவரீதியிலல்ல ஆனால் ஆவிக்குரியவிதத்தில், அதாவது, யெகோவா எல்லாவற்றையும் பார்க்கிறார், கருப்பையின் இருளில்கூட என்பதாகும்.
கருத்தரிக்கும் அந்தக் கணத்திலிருந்து, தாயின் கருப்பையிலுள்ள கருவளமுடைய முட்டை அணுவின் மரபியல் குறியீட்டில் ‘நம்முடைய அவயவங்கள் எல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன.’ மேலும், ஒவ்வொன்றும் அவற்றிற்குரிய தகுந்த வரிசையில் ‘அவைகள் உருவேற்படும் நாட்கள்பற்றிய,’ காலக்கணக்கும் மரபணுக்களினுள் திட்டமிடப்பட்டிருக்கின்ற பல உயிரியல் கடிகாரங்களால் தீர்மானிக்கப்படுகிறது.
சங்கீதக்காரன் தாவீது இந்த அறிவியல்பூர்வமான விவரங்கள் அனைத்தையும் அறிந்திருக்கவில்லை, ஆனால் அந்தச் சங்கீதத்தை எழுதும்படி ஏவிய யெகோவா அறிந்திருந்தார்; ஏனென்றால், முதன்முதலாக அவர்தாமே மனிதனை சிருஷ்டித்தார். உயர்நிலை திறனாய்வாளர்கள் தாவீதின் எழுத்துரிமையை மறுத்தாலும், கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே சங்கீதம் எழுதப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.
பைபிள் நோய்த்தடுப்புமுறைக்கு கவனம் செலுத்துகிறது
கிறிஸ்துவுக்கு 15 நூற்றாண்டுகளுக்குமுன் மோச மூலமாக இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய சட்டங்களைப் பரிசீலனை செய்யும்போது, உடல்நலத்தைப்பற்றிய அந்தச் சட்டத்தின் முக்கிய அழுத்தம் நோய்த் தடுப்புமுறைக்கே கவனம் செலுத்துகிறது என்பது தெளிவாகக் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உபாகமம் 23:13-ல் அது சொல்கிறது: “உன் ஆயுதங்களோடே ஒரு சிறு கோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்து போனதை மூடிப்போடக்கடவாய்.” மலக்கழிவை புதைப்பதற்கான சட்டம், ஈயால் பரவக்கூடிய சால்மனெலோசிஸ், ஷிஜலோசிஸ் டைபாய்ட் மற்றுமநேக சீதபேதிகளுக்கெதிரான ஓர் ஆழ்ந்த முன்னேற்றமுள்ள தடுப்பு நடவடிக்கை; இந்தக் கொள்கை கடைப்பிடிக்கப்படாத இடங்களில் இன்றும் ஆயிரக்கணக்கான உயிர்கள் ஆட்கொள்ளப்படுகின்றனர்.
பூச்சி, கொறித்துண்ணும் பிராணி, மிக முக்கியமாக மாசுபடுத்தப்பட்ட தண்ணீர் ஆகியவைமூலம் நோய் பரவக்கூடும் என நியதியாக லேவியராகமம் 11-ம் அதிகாரம் உறுதிபடுத்துகிறது. இது பின்னால், நோய் நுண்ணுயிரிகளால் உண்டாக்கப்படுகிறது என்பதற்கு மெளனமாகச் சான்று பகர்வதன்மூலம், பைபிள், லேவன்ஹுக் (1683) அல்லது பாஸ்டருக்கு (19-ம் நூற்றாண்டு) பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னோடியாக இருப்பதைக் காண்பிக்கிறது. குஷ்டரோகத்தின்போது லேவியராகமம் 13-ம் அதிகாரத்தில் கட்டளையிடப்பட்ட நோய் தொற்றுத்தடைக்காப்பு ஒதுக்கலைப்பற்றியும் இவ்வாறே சொல்லப்படலாம்.
லேவியராகமம் 11:13-20-ல் பதிவு செய்யப்பட்டுள்ள உணவுசார்ந்த தடைகள், கழுகுகள், கருடன்கள் மற்றும் கூகைகள் போன்ற கொன்று தின்னும் உயிரிகளையும் அழுகிய பொருட்களைத் தின்னும் காகம், குருகு போன்றவைகளையும் உட்படுத்தியது. உணவுச் சங்கிலியின் மேல்நிலையில் இவை வைக்கப்பட்டிருப்பதால் அதிகப்படியான நச்சுச் செறிவுடையன. உணவுச் சங்கிலியில் கீழ்நிலையிலுள்ள விலங்குகள் மிகச்சிறிய அளவுகளில் இந்த நச்சுகளை உட்கொள்கின்றன; அதே சமயத்தில் உணவுச் சங்கிலியில் மேலுள்ள விலங்குகள் அவற்றை அதிகமான அளவுகளில் சேகரிக்கின்றன. அதிகப்படியான நச்சுகளைக் கொண்டிருக்கும் உணவுச் சங்கிலியில் இல்லாத தாவர உண்ணிகளான சில விலங்குகளை உண்பதை மோசயின் நியாயப்பிரமாணம் அனுமதித்தது. ஒருசில விலக்கப்பட்ட இறைச்சிகள், இழைப் புழுநோய் போன்றவற்றை உருவாக்கும் முட்டையுறைக்குள்ளான ஒட்டுண்ணிகளுக்குப் புகலிடமாய் இருக்கின்றன.
மோசேயின் நியாயப்பிரமாணத்தில் பல இடங்களில் உள்ளிட்ட இரத்தத்தின் துர்ப்பிரயோகம்பற்றிய பைபிளின் விலக்கு, இப்போது 3,500 ஆண்டுகளுக்குப்பின் மருத்துவப்பூர்வமாக சரியானதாக நிரூபிக்கப்படுகிறது. (ஆதியாகமம் 9:4; லேவியராகமம் 3:17; 7:26; 17:10-16; 19:26; உபாகமம் 12:16; 15:23) இந்த வரையறை மறுபடியும் கிறிஸ்தவ கிரேக்க வேதஎழுத்துக்களில் அப்போஸ்தலர் 15:20, 29 மற்றும் 21:25-ல் சொல்லப்படுகிறது. சிறுநீரக இடைச்சவ்வூட்டான பிரிவினை, இருதய-நுரையீரல் இயந்திரம் மற்றும் பொதுவாக அறுவை சிகிச்சையில் கொடயாளி இரத்தத்தைப் பயன்படுத்துவதைக் குறைக்க அல்லது முற்றிலும் ஒழிக்க மருத்துவத்தொழில் முயற்சி செய்கிறது. கடவுளுடைய சட்டங்களைப் புறக்கணித்து உலக ஞானிகளாக இருப்பவர்களுக்கு, ஈரல் அழற்சியின் பல வகைகள், எய்ட்ஸ், சைட்டோமெகலோ வைரஸ் நோய் இன்னும் எண்ணற்ற இரத்தத்தால் கடத்தப்பட்ட கோளறுகள் பயங்கரமான நினைப்பூட்டுதல்களாக இருக்கின்றன.
நல்ல ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அத்தியாவசியமானது; பைபிள் அதன் பலன்களை ஒத்துக்கொள்கிறது. ஒரு வாரத்திற்கு மூன்று முறை 20 நிமிட தொடர்களைக் கொண்ட குறுகிய நேர ஊக்கமான உடற்பயிற்சி இருதயம் மற்றும் சுற்றோட்ட மண்டலத்திற்கான அபாயங்களைக் குறைக்கக்கூடும். அது HDL என்னும் பாதுகாக்கும் கொழுப்புச்சத்து வகையை அதிகரிக்கிறது; ஆற்றல்திறனின் நிலையை விருத்திசெய்கிறது, மேலும் எளிதில் இசைந்துகொடுக்கும் திறனைக் கூட்டி நலமாக இருக்கும் உணர்ச்சியைக் கொடுக்கிறது. பைபிள் உடற்பயிற்சியின் மதிப்பை ஏற்றுக்கொண்டாலும், அதிக முக்கியமான ஆவிக்குரிய வளர்ச்சிக்குப் பிறகான இரண்டாவது இடத்திலேயே அதை வைக்கிறது: “சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.”—1 தீமோத்தேயு 4:8.
சந்தேகமின்றி, அன்று நிலவியிருந்த, ஆனால் அதுவரை அடையாளங்காணப்படாத அல்லது ஒருவேளை நூற்றாண்டுகளாக நிபுணர்களால் சந்தேகிக்கவும்படாத பாலின உறவுகளால் கடத்தப்பட்ட வியாதிகளுக்கு எதிராக பைபிளின் ஒழுக்கச் சட்டங்கள் மூலப்பாதுகாப்பாகச் சேவித்தன.—யாத்திராகமம் 20:14; ரோமர் 1:26, 27; 1 கொரிந்தியர் 6:9, 18; கலாத்தியர் 5:19.
“மிக துல்லியமான ஓர் அறிவியல் புத்தகம்”
“மருத்துவத்தின் தந்தை” என அறியப்பட்டிருக்கும் ஹிப்பாக்ரட்டீஸ் பொ.ச.மு. நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளில் இருந்த ஒரு கிரேக்க மருத்துவர்; ஆனால் பைபிள் வியாதிகளைப்பற்றிச் சொல்லும் காரியங்களில் பல, அதற்கும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் மோசயால் எழுதப்பட்டவையாகும். இருப்பினும், “தற்போது சிறந்த வேலையைச் செய்துகொண்டிருக்கும், காரியங்களை நன்கறிந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், பைபிள் மிக துல்லியமான ஓர் அறிவியல் புத்தகம் என்ற முடிவிற்கே வருகின்றனர். . . . வாழ்க்கை, நோய் நிர்ணயம், சிகிச்சை மற்றும் தடுப்பு மருத்துவத்தைப்பற்றி பைபிளில் கொடுக்கப்பட்ட உண்மைகள், இன்னும் நிரூபிக்கப்படாத பல மற்றும் முழுமையாக சரியற்றதாக கண்டுபிடிக்கப்பட்ட ஹிப்பாக்ரட்டீஸின் கோட்பாடுகளைவிட மிக அதிக மேம்பட்டவையும் நம்பத்தக்கவையுமாய் இருக்கின்றன,” என்பதாகச் சொல்லும் ஒரு டாக்டரின் கடிதத்தை தி AMA நியூஸ் குறிப்பிடத்தக்கவிதத்தில் அறிக்கை செய்தது.
டாக்டர் A. ரென்டெல் ஷாட், பைபிளும் நவீன மருத்துவமும் (The Bible and Modern Medicine) என்ற தன்னுடைய புத்தகத்தில், பூர்வ இஸ்ரவேலைச் சுற்றியிருந்த தேசங்களின் மத்தியில் உடல் ஆரோக்கியத்திற்கான சட்டங்கள் என்று ஒன்று இருந்தால், அவை மிக அடிப்படையானவையே என்பதைச் சுட்டிக்காட்டிவிட்டுப் பின்வருமாறு கூறினார்: “எனவே அறிவியல் பூர்வமற்றது என்பதாகக் குறிப்பிடப்படும் பைபிளைப் போன்ற ஒரு புத்தகத்தில் உடல் ஆரோக்கியத்தைப்பற்றிய சட்டத்தொகுப்பு நெறி ஒன்று இருப்பதே அதிக வியப்பூட்டுவதாய் இருக்கிறது; மேலும், அப்போதுதானே அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, அடிக்கடி எதிரிகளால் படையெடுக்கப்பட்டு அவ்வப்போது சிறையிருப்பினுள் கொண்டுசெல்லப்பட்ட ஒரு தேசம், தன்னுடைய சட்டப் புத்தகங்களில் சுகாதாரத்திற்காக அத்தகைய ஞானமான, நியாயமான சட்டத்தொகுப்புகளைக் கொண்டிருப்பது, அதேவிதமாக வியப்பூட்டுவதாய் இருக்கிறது.”
உளவழி உடல்நோய் பிரச்னைகள்
சில உடல்நல கோளறுகள் உள்ளம்சார்ந்த பிரச்னைகளோடு தொடர்புடையன என்பதை மருத்துவ துறை பொதுவாக ஏற்றுக்கொள்வதற்கு வெகுகாலத்திற்கு முன்னரே ஒப்புக்கொண்டதில் பைபிள் மருத்துவரீதியில் ஒரு மேம்பட்ட புத்தகமாக நிரூபித்திருக்கிறது. மேலுமாக, உடலில் நோய் வெளிக்காட்டப்படுவதில் மனது வகிக்கும் பங்கை பைபிள் விவரிப்பதுதானே, சரியான புரிந்துகொள்ளுதலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. நீதிமொழிகள் 17:22 குறிப்பிடுகிறது: “மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.” இங்கு எதுவும் தீர்ப்பளிப்பதாக இல்லை, வெறுமென உண்மையை எடுத்துரைப்பதாகவே இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். கவலை உணர்ச்சிகளில் மூழ்கியிருக்கும் ஒருவரை அதிலிருந்து மீண்டு வருவதற்காக எந்த அறிவுரையும் கொடுப்பதற்கு அது அத்தனை எளிதானதல்ல.
ஒரு நம்பிக்கையான மனநிலை உதவியாக இருக்கும்; கவலை எதிர்மறையானதும் தீங்கிழைப்பதாயும் இருக்கிறது. “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.” (நீதிமொழிகள் 12:25) நீதிமொழிகள் 18-ம் அதிகாரம், 14-ம் வசனம், ஆழ்ந்து சிந்திக்க தகுந்ததாய் இருக்கும்: “மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?” ஓரளவு உடல்சார்ந்த நோய்களை (கோளாறு) தாங்கும் சக்தியை, ஒருவருடைய ஆவிக்குரிய சக்திகள்மேல் சார்ந்திருப்பதன்மூலம் பெருக்கலாம் என்பதாக இந்த வேதவாக்கியம் உணர்த்துகிறது.
ஓர் உளநோய் மருத்துவர் ஜேம்ஸ் T. ஃபிஷர், இயேசுவின் மலைப்பிரசங்கத்தின் மனநிலைசார்ந்த மதிப்பைக்குறித்து இவ்வாறு சொன்னார்: “மனம்சார்ந்த ஆரோக்கியத்தைப்பற்றிய பொருளில், மிகவும் தகுதிவாய்ந்த உளநூல் வல்லுநர்கள் மற்றும் உளநோய் மருத்துவர்களால் இதுவரை எழுதப்பட்ட அதிகாரத்துவமான கட்டுரைகள் அனைத்தின் சாராம்சத்தையும் எடுத்து—அவற்றை ஒன்றுசேர்த்து, சீர்ப்படுத்தி, தேவைக்கதிகமான சொற்களைப் பிரித்தெடுத்தால்—அவற்றிலுள்ள சுவையூட்டும் வார்த்தைகளை விட்டுவிட்டு கருத்துச்செறிவுள்ள பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, இந்தக் கலப்பற்ற அறிவியல்பூர்வ அறிவு துணுக்குகளை, இன்றுவாழும் மிகத்திறம்பட்ட கவிஞர்களால் சுருக்கமாக வெளிப்படுத்திக்கூறச் செய்வோமேயானால், ஒரு பொருத்தமற்ற, சரியாக முற்றுப்பெறாத மலைப்பிரசங்கத்தின் சுருக்கத்தையே நாம் கொண்டிருப்போம். மேலும் அதை ஒப்பிட்டுப்பார்க்கும்போது மிகவும் போதததாகக் காணப்படும்.”—எ ஃப்யு பட்டன்ஸ் மிஸ்ஸிங், பக்கம் 273.
உளவழி சார்ந்த உணர்ச்சிகள் நம்முடைய உடல்நிலையை பாதிப்பதுதானே, ஓர் உடல்நோயும் உண்மையில் இல்லை என்பதை அர்த்தப்படுத்தாது. எனவே, முதலில் உடல் தேவைகள் சம்மந்தமாக உதவ முயற்சிசெய்வது, குறைந்தபட்சம், அந்த நோயை அடையாளம் கண்டுகொள்வதாவது முக்கியம்; அதே நேரத்தில், ஓர் ஆள் சகித்து நிலைத்திருப்பதற்கு உதவும் வகையில் ஒரு நம்பிக்கையான மனநிலையையும் ஆவியையும் கொண்டிருக்க உற்சாகப்படுத்தலாம். இந்தக் காரிய ஒழுங்குமுறையில் எந்த உறுதியான சிகிச்சையும் இல்லாதிருக்கும்போது இது விசேஷமாக முக்கியமாக இருக்கிறது.
ஆதாமின் பாவத்திற்குப்பின், மரணம் மனிதவர்க்கம் முழுவதற்கும் வெகுதூரம் சென்றுவிட்ட ஒரு மரபியல் உண்மையாகிவிட்டது. (ரோமர் 5:12) ஆகவே, ஒரு நபருடைய குறிப்பிட்ட வியாதிக்கு அவருடைய ஆவிக்குரிய நிலையைக் காரணமாகக் காட்டுவது எப்பொழுதும் சரியானதாக இல்லை. உணர்ச்சிபூர்வமாக பலவீனப்பட்ட நிலையிலிருக்கும் நபர்களின் பிரச்னைகளைக் கையாளுகையில் இதை மனதில் கொண்டிருப்பது முக்கியம்.
மருத்துவரின் பங்கு
மருத்துவர்கள் மற்றும் நவீன மருத்துவ தொழில்முறைகளில் கிறிஸ்தவர்கள் எந்தளவு தொடர்புடையவர்களாய் இருக்கவேண்டும்? பைபிளைக் கூர்ந்தாராயும்போது, மருத்துவர்களுக்கு அளவுக்கதிக மதிப்பளிப்பதற்கு அல்லது மருத்துவ தொழில்நுட்பமே நல்லாரோக்கியத்திற்கு ஒரே வழி என்று நோக்குவதற்கு எவ்வித வேதப்பூர்வமான அடிப்படையையும் நாம் காணமுடிவதில்லை. அதைவிட, அதன் எதிர்மாறானதற்கு ஆதாரம் இருக்கிறது. “அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்”பட்ட, பல ஆண்டுகளாய் “பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ”யைப்பற்றி மாற்கு கூறுகிறார். (மாற்கு 5:25-29) இந்தப் பொதுவான உடல்நிலைக் கோளாறு தற்போது பெரும்பாலும் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டாலும், பல நோய்கள் சிகிச்சையளிக்கப்பட முடியாமல் இருக்கின்றன; மேலும் அதிக எண்ணிக்கையான, சிகிச்சையளிக்கப்பட முடியாத புதிய நோய்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
ஆயினும், பாரம்பரியமாக செய்யப்படும் மருத்துவ தொழில் முறையை குறைந்த அல்லது எந்த மதிப்பும் இல்லாததாகக் கருதும் எதிர்மாறான மிதமிஞ்சிய நிலையை பைபிள் ஆதரிப்பதில்லை. சிலர் மருத்துவரை அளவுகடந்த மதிப்பளிக்கும் நிலையிலிருந்து எடுத்துவிட்டு, தங்களால் அல்லது அந்த நேரத்திற்கு ஆர்வமற்றதாய்த் தோன்றும் வேறு ஏதாவது மருத்துவமற்ற அணுகுமுறையைக் கொண்டு மாற்றீடு செய்கின்றனர். கொலாசெயர் 4:14-ல், லூக்கா, “பிரியமான” வைத்தியன் என்பதாகக் கூறப்பட்டிருப்பது, சந்தேகமின்றி அவருடைய மருத்துவ திறமைகளைவிட அவருடைய ஆவிக்குரிய தகுதிகளையே குறிப்பதாக இருக்கும். இருப்பினும், ஒருவருடைய மருத்துவ தொழில்முறை, நெறிமுறையற்ற அல்லது வேதப்பூர்வமற்றதாக இருந்திருந்தால், ஏவுதலின்கீழ் பரிசுத்த வேத எழுத்துக்களின் பாகத்தை எழுதுவதன்மூலம் அவர் அனுபவித்த சிலாக்கியம் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்காது.
ஹிப்பாக்ரட்டீஸின் செல்வாக்கைக் குறிப்பிட்டுக்காட்டும் கலைச்சொற்கள், மருத்துவ விவரிப்புகள் மற்றும் அவர் காலத்திற்கு நவீனமாகவிருந்த மருத்துவமுறையை லூக்கா கொண்டிருந்தார் என்று குறிப்பதற்கு சான்றிருக்கிறது. ஹிப்பாக்ரட்டீஸ் எப்பொழுதும் சரியாக இல்லாதபோதிலும், அவர் அந்தத் தொழில்முறையில் மூடநம்பிக்கைகளையும் மருத்துவத்தைப்பற்றிய பொய்மத கோட்பாடுகளையும் பகிரங்கமாக கண்டனஞ்செய்து அந்தத் தொழில்முறையில் நியாயத்தன்மையைக் கொண்டுவர முயற்சி செய்தார். மேலும், நோய்களைக் குணப்படுத்துவதற்கு மருத்துவ அனுபவமுள்ளவர்கள் ஓரளவு தகுதியுள்ளவர்களாய் இருக்கலாம் என்பதாக ஒத்துக்கொள்ளப்படாவிட்டால், லூக்கா 5:31-ல், “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை,” என்ற இயேசுவின் எளிய உதாரணம் அர்த்தமற்றதாகிவிடும்.
நுண்ணுயிர்க்கொல்லிகள், சீழ்எதிர்ப்பிகள் அல்லது வலிநீக்கிகளை, அவற்றின் உபயோகத்திற்கான தேவை ஏற்படும்போது பயன்படுத்துவதைக் கண்டிக்கக்கூடிய மிதமிஞ்சிய போக்கை மேற்கொள்ள எந்த வேதப்பூர்வ ஆதாரமும் இல்லை. எரேமியா 46:11 மற்றும் 51:8 விவரிக்கிற கீலேயாத்தின் தைலம் தணிவிக்கக்கூடிய வலிநீக்கும் தன்மைகளோடு சீழ்எதிர்க்கும் தன்மையையும் கொண்டிருக்கலாம். மருந்துகளை உட்கொள்வதற்கு எதிராக வேதப்பூர்வ அல்லது கோட்பாடுகள் சம்பந்தமான எந்த நிலைநிற்கையும் கிடையாது.
எனினும், உலகம் முழுவதிலும் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் ஈக்கள், கொசுக்கள், நத்தைகளால் கடத்தப்படும் தொற்றுநோய்களின் தாக்குதலுக்குள்ளாகும் நிலை தொடர்ந்திருப்பதைப் பேரளவான நுண்ணுயிர்க்கொல்லிகளால் ஈடு செய்ய முடிவதில்லை. பாதுகாப்பான முறையில் கழிவுநீர் அகற்றல், தண்ணீர் வழங்கீட்டின் பாதுகாப்பு, நோய்தாங்கும் பூச்சிகள் கட்டுப்பாடு, ஆளுடன் ஆள் மற்றும் கை-வாய்த் தொடர்புபற்றிய எச்சரிக்கை ஆகியவற்றிக்குச் சுகாதார ஊழியர்கள் திரும்பவும் பைபிளின் அடிப்படை கோட்பாடுகளுக்குச் சென்று அவற்றைத் துவங்கவேண்டியதிருந்தது. அண்மையில், அதாவது 1970-களில் தாதிகளும் மருத்துவர்களும் மருத்துவ கழிநீர் தொட்டிகள் மற்றும் நோயாளிகளின் படுக்கைகளுக்கு மேல், பின்வரும் வாசகங்களால் நினைப்பூட்டப்பட்டார்கள்: “கைகளைக் கழுவவும்”—இதுதான் நோய் பரவுவதைத் தடுப்பதற்கு மிகச் சிறந்த வழி.
ஓர் எச்சரிப்பான வார்த்தை
உடல்நல ஆலோசனை கொடுப்பவர்கள்—ஒரு மருத்துவராக, ஒரு வர்மமுறை மருத்துவராக, ஓர் இனமுறை மருத்துவம் செய்பவராக அல்லது நலன் கருதும் ஆனால் ஒருவேளை காரியங்களை நன்கறியாத ஒரு நண்பராக இருந்தாலும்—எப்போதெல்லாம் ஒருவருடைய சுகவீனம் கண்டு ஆலோசனை கொடுக்கிறார்களோ, அப்போதெல்லாம் ஒரு பெரிய உத்திரவாதத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். இது குறிப்பாக கேடு விளைவிப்பதாக அல்லது பெரும்பாலும் திறம்பட்டதாக இருக்கும் சிகிச்சையிலிருந்து கவனத்தைத் திருப்புவதாக அல்லது அதற்கு எதிரானதாக அல்லது உதவியளிக்கப்படுவதைத் தாமதம் செய்வதாக இருக்கும்போது அவ்வாறிருக்கிறது. ஒரு நம்பிக்கையிழந்த நிலையில் உதவிக்கான தனிப்பட்ட தேடுதலில், சுகநல தொழிலர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும், போலி மருத்துவம் மற்றும் ஆவியுலக தொடர்புக்கு எதிராக காத்துக்கொள்ள எச்சரிப்புகள் பைபிளில் உள்ளன. நீதிமொழிகள் 14:15-ஐ ஞாபகத்தில் வையுங்கள்: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”
பரிசுத்த வேத எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ள கோட்பாடுகள் இன்று ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்வதற்கு நடைமுறையானதா? மோசயின் நியாயப்பிரமாணத்தில் தடுப்புமுறை எவ்வாறு முக்கிய கவனத்திற்குரியதாய் இருந்ததோ, அவ்வாறே இன்றும், சிகிச்சைமுறையை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் காட்டிலும் தடுப்பு அணுகுமுறையே மிக சிறந்த மதிப்புடையதாய் இருப்பதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வளர்ச்சியடையாத நாடுகளில் நவீன உடல்நல சிகிச்சையைச் செயல்படுத்த முயற்சி செய்யும் உலக சுகாதார அமைப்பின் நவீன போதனை இதுவாகும்: “வெள்ளம் வருகிறதற்கு முன்னே, அணை போடவேண்டும்.”
முடிவாக, சந்தோஷமுள்ள ராஜ்ய வேலையை முன்னேறச் செய்வதில் கடவுளின் மகிமைக்காக நல்ல ஆரோக்கியத்தைப் பயன்படுத்துவதை இலக்காகக் கொண்டு, ஒரு கிறிஸ்தவன் ஆரோக்கியத்தைக் குறித்து ஒரு மதிப்புள்ள, நீண்டகால நோக்கைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் அந்த ராஜ்ய அரசாட்சியின்கீழ், வாக்குத்தத்தம் என்னவென்றால்: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.”—ஏசாயா 33:24. (g91 11/22)
[பக்கம் 4-ன் படம்]
“நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப் . . . பட்டபோது, உன் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை”