‘கிறிஸ்துவோடு ஒன்றித்து தொடர்ந்து நடந்துவாருங்கள்’
“ஆகையால், கர்த்தராகிய கிறிஸ்து இயேசு[வோடு] . . . ஒன்றித்து தொடர்ந்து நடந்துவாருங்கள்.”—கொலோசெயர் 2:6, 7, NW.
1, 2. (அ) யெகோவாவுக்கு ஏனோக்கு செய்த உண்மைத்தன்மையுள்ள சேவையை பைபிள் எவ்வாறு விவரிக்கிறது? (ஆ) கொலோசெயர் 2:6, 7 சுட்டிக்காட்டுகிறபடி, யெகோவாவுடன் நடப்பதற்கு அவர் எவ்வாறு நமக்கு உதவியிருக்கிறார்?
ஒரு குட்டிப் பையன் தன் அப்பாவுடன் நடந்துசெல்வதை என்றாவது நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அந்தப் பொடியன் தன்னுடைய அப்பாவின் ஒவ்வொரு அடிக்கும் ஏற்ப சேர்ந்து நடக்கிறான், பெருமிதத்தால் அவனுடைய முகம் சிவக்கிறது; தன்னோடுகூட நடந்துவர அவனுடைய அப்பா அவனுக்கு உதவுகிறார், அன்பாலும் அங்கீகரிப்பாலும் அவருடைய முகமே பிரகாசிக்கிறது. பொருத்தமாகவே, யெகோவாவும் உண்மைத்தன்மையுடன் அவரை சேவிக்கும் ஒரு வாழ்க்கை முறையை விவரிக்க இதுபோன்ற ஒரு வர்ணனையையே பயன்படுத்துகிறார். உதாரணமாக, உண்மையுள்ள மனிதனாகிய ஏனோக்கு “[மெய்க்] கடவுளோடு தொடர்ந்து நடந்துவந்தார்” என கடவுளுடைய வார்த்தை கூறுகிறது.—ஆதியாகமம் 5:24; 6:9; NW.
2 அன்பாதரவான ஒரு தகப்பன் தன்னுடைய இளம் மகன் தன்னோடு நடந்துவர உதவிசெய்வது போலவே, யெகோவாவும் சாத்தியமான மிகச் சிறந்த உதவியை நமக்கு கொடுத்திருக்கிறார். அவர் தம்முடைய ஒரேபேறான குமாரனையே பூமிக்கு அனுப்பினார். இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்த தம்முடைய வாழ்நாளின் ஒவ்வொரு செயலிலும், தம் பரம பிதாவை பூரணமாய் பிரதிபலித்தார். (யோவான் 14:9, 10; எபிரெயர் 1:3) எனவே, கடவுளுடன் நடப்பதற்கு, நாம் இயேசுவுடன் நடப்பது அவசியம். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆகையால், கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை நீங்கள் ஏற்றுக்கொண்டபடியே, அவரில் வேரூன்றப்பட்டவர்களாயும் கட்டப்பட்டவர்களாயும் நீங்கள் போதிக்கப்பட்டபடியே விசுவாசத்தில் ஸ்திரப்பட்டவர்களாயும் நன்றிசெலுத்துவதில் விசுவாசத்தோடே பொங்கிவழிகிறவர்களாயும் அவருக்குள் ஒன்றித்து தொடர்ந்து நடந்துவாருங்கள்.”—கொலோசெயர் 2:6, 7, NW.
3. கொலோசெயர் 2:6, 7-ன்படி, கிறிஸ்துவுடன் ஒன்றித்து நடப்பது வெறுமனே முழுக்காட்டுதல் பெறுவதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது என நாம் ஏன் கூறலாம்?
3 அவர்கள் கிறிஸ்துவுடன் ஒன்றித்து நடக்க விரும்பி அவருடைய பூரண காலடிகளை பின்பற்ற கடினமாய் முயலுவதால், நேர்மை இருதயமுள்ள பைபிள் மாணாக்கர்கள் முழுக்காட்டுதல் பெறுகின்றனர். (லூக்கா 3:21; எபிரெயர் 10:7-9) 1997-ல் மட்டுமே, உலகமுழுவதும் 3,75,000-க்கும் அதிகமானோர் இந்த இன்றியமையாத நடவடிக்கையை எடுத்தனர்—சராசரியாக ஒவ்வொரு நாளுக்கும் 1,000-க்கும் அதிகமானோர். இந்த அதிகரிப்பு சிலிர்ப்பூட்டுகிறது! இருப்பினும், கிறிஸ்துவோடு ஒன்றித்து நடப்பது என்பது வெறுமனே முழுக்காட்டுதல் பெறுவதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது என்பதை கொலோசெயர் 2:6, 7-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள பவுலின் வார்த்தைகள் காட்டுகின்றன. “தொடர்ந்து நடந்துவாருங்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வினைச்சொல், இடையறாது, விடாமல் செய்யப்படும் ஒரு செயலை விவரிக்கிறது. மேலும், கிறிஸ்துவுடன் நடப்பது நான்கு விஷயங்களை உட்படுத்துகிறது என பவுல் கூறுகிறார்: கிறிஸ்துவில் வேரூன்றப்பட்டிருத்தல், அவரில் கட்டப்பட்டிருத்தல், விசுவாசத்தில் ஸ்திரப்பட்டிருத்தல், நன்றிசெலுத்துவதில் பொங்கிவழிதல். ஒவ்வொரு சொற்றொடரையும் சிந்தித்து, கிறிஸ்துவுடன் ஒன்றித்து தொடர்ந்து நடக்க நமக்கு அது எவ்வாறு உதவுகிறது என்பதை நாம் பார்க்கலாம்.
நீங்கள் ‘கிறிஸ்துவில் வேரூன்றப்பட்டவர்களா’?
4. ‘கிறிஸ்துவில் வேரூன்றப்பட்டிருத்தல்’ என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
4 முதலாவதாக, நாம் கிறிஸ்துவில் வேரூன்றப்பட்டிருக்க வேண்டும் என பவுல் எழுதுகிறார். (ஒப்பிடுக: மத்தேயு 13:20, 21.) ‘கிறிஸ்துவில் வேரூன்றப்பட’ ஒரு நபர் எவ்வாறு உழைக்கலாம்? நாம் பார்க்கலாம், ஒரு தாவரத்தின் வேர்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கின்றன, ஆனால் அத்தாவரத்திற்கு அவை இன்றியமையாதவை—அவை அதற்கு ஸ்திரத்தன்மையையும் போஷாக்கையும் அளிக்கின்றன. அதைப் போலவே, கிறிஸ்துவின் முன்மாதிரியும் போதனையும் முதலாவதாக நம் கண்ணுக்குப் புலப்படாமல் நம்மீது செல்வாக்கு செலுத்துகின்றன. அங்கே அவை போஷித்து நம்மை பலப்படுத்துகின்றன. அவை நம்முடைய சிந்தையையும் செயல்களையும் தீர்மானங்களையும் ஆட்கொள்ளும்படி அனுமதிக்கும்போது, யெகோவாவுக்கு நம்முடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுக்க நாம் உந்துவிக்கப்படுகிறோம்.—1 பேதுரு 2:21.
5. நாம் எவ்வாறு ஆவிக்குரிய உணவுக்கான ‘வாஞ்சையை வளர்த்துக்கொள்ளலாம்’?
5 கடவுளிடமிருந்து வரும் அறிவை இயேசு நேசித்தார். அவர் அதை உணவுக்கும்கூட ஒப்பிட்டு பேசினார். (மத்தேயு 4:4) ஏன், தம்முடைய மலைப்பிரசங்கத்தில், எபிரெய வேதாகமத்திலுள்ள எட்டு வெவ்வேறு புத்தகங்களிலிருந்து 21 மேற்கோள்களை எடுத்துக்காட்டினாரே. அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கு, அப்போஸ்தலன் பேதுருவினுடைய புத்திமதிக்கு செவிசாய்க்க வேண்டும்—அதாவது, “புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல” ஆவிக்குரிய உணவுக்கான ‘வாஞ்சையை வளர்த்துக்கொள்ள’ வேண்டும். (1 பேதுரு 2:2, NW) புதிதாய்ப் பிறந்த குழந்தை போஷாக்குக்காக ஏங்கும்போது, தன்னுடைய மிகுந்த வாஞ்சையை எந்தச் சந்தேகத்திற்கும் இடமளிக்காமல் தெரியப்படுத்துகிறது. ஆவிக்குரிய உணவைக் குறித்து தற்பொழுது நாம் அப்படிப்பட்ட வாஞ்சையுள்ளவர்களாய் இராவிட்டால், அந்த வாஞ்சையை ‘வளர்த்துக்கொள்ளும்படி’ பேதுருவின் வார்த்தைகள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன. எப்படி? சங்கீதம் 34:8-ல் (NW) காணப்படும் நியமம் உதவலாம்: “யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்.” யெகோவாவின் வார்த்தையாகிய பைபிளை நாம் தவறாமல் “ருசித்துப்” பார்ப்போமென்றால், ஒருவேளை ஒவ்வொரு நாளும் அதிலுள்ள ஒரு பகுதியை வாசிப்போமென்றால், அது ஆவிக்குரிய விதத்தில் போஷாக்களிப்பதாயும் நன்மையளிப்பதாயும் இருப்பதை நாம் காண்போம். காலப்போக்கில், அதன்மீது நம் வாஞ்சை வளரும்.
6. நாம் வாசிப்பதன் பேரில் தியானிப்பது ஏன் முக்கியம்?
6 இருப்பினும், நாம் ஒருமுறை உணவை உட்கொண்ட பிறகு அது நன்கு ஜீரணிக்க வேண்டியது முக்கியம். ஆகையால் நாம் வாசித்தவற்றை தியானிப்பது அவசியம். (சங்கீதம் 77:11, 12) உதாரணமாக, எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை வாசிக்கையில் நாம் சற்று நிறுத்தி, ‘இந்த விவரப்பதிவில் கிறிஸ்துவினுடைய ஆளுமையின் எந்த அம்சத்தை நான் காண்கிறேன், என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான் இதை எவ்வாறு பின்பற்றலாம்?’ என்று நம்மைநாமே கேட்டுக்கொள்ளலாம்; இப்படி செய்வோமாகில், ஒவ்வொரு அதிகாரமும் நமக்கு அதிக பிரயோஜனமாய் இருக்கும். இவ்விதத்தில் தியானிப்பது, நாம் கற்றுக்கொண்டதை பொருத்திப் பயன்படுத்த நமக்கு உதவும். பின்பு, ஒரு தீர்மானம் எடுக்கவேண்டிய சூழ்நிலையை எதிர்ப்படுகையில், இந்நிலையில் இயேசு இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என நம்மைநாமே கேட்டுக்கொள்ளலாம். அதற்கேற்றவாறு நாம் தீர்மானம் எடுத்தால், உண்மையிலேயே கிறிஸ்துவில் வேரூன்றப்பட்டிருப்பதற்கான அத்தாட்சியை கொடுக்கிறோம்.
7. பலமான ஆவிக்குரிய போஷாக்கைக் குறித்ததில் நம்முடைய நோக்குநிலை என்னவாக இருக்க வேண்டும்?
7 ‘பலமான ஆகாரத்தை,’ கடவுளுடைய வார்த்தையின் ஆழமான சத்தியங்களை ‘உட்கொள்ளும்படியும்’ பவுல் நம்மை உந்துவிக்கிறார். (எபிரெயர் 5:14) இதன் சம்பந்தமாக, முழு பைபிளையும் வாசிப்பது நம்முடைய முதல் குறிக்கோளாக இருக்கலாம். அதோடு படிப்பதற்கு அதிக திட்டவட்டமான தலைப்புகள், அதாவது கிறிஸ்துவினுடைய மீட்பின் கிரயபலி, யெகோவா தம்முடைய மக்களுடன் செய்த பல்வேறு உடன்படிக்கைகள், அல்லது பைபிளிலுள்ள சில தீர்க்கதரிசன செய்திகள் ஆகியவையும் உள்ளன. இத்தகைய பலமான ஆவிக்குரிய ஆகாரத்தை உட்கிரகித்து ஜீரணிப்பதற்கு உதவும் தலைப்பு பொருள்கள் ஏராளமாய் இருக்கின்றன. இப்படிப்பட்ட அறிவை உட்கொள்வதன் நோக்கம் என்ன? இது, பெருமையடித்துக்கொள்வதற்கு அல்ல, யெகோவாவிடம் நம்முடைய அன்பை வளர்த்துக்கொள்வதற்கும் அவரிடம் நெருங்கி வருவதற்குமே ஆகும். (1 கொரிந்தியர் 8:1; யாக்கோபு 4:8) இந்த அறிவை நாம் ஆவலுடன் பெற்று, அதை நமக்குப் பொருத்திப் பிரயோகித்து, மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்துவோமாகில், நாம் உண்மையிலேயே கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாக இருப்போம். இது, அவரில் நாம் சரியாக வேரூன்றப்படுவதற்கு உதவிசெய்யும்.
நீங்கள் ‘கிறிஸ்துவில் கட்டப்பட்டு’ வருகிறீர்களா?
8. ‘கிறிஸ்துவில் கட்டப்படுவது’ என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
8 கிறிஸ்துவில் ஒன்றித்து நடப்பதன் மற்றொரு அம்சத்திற்காக, ஒரு காட்சிப் பொருளிலிருந்து மற்றொன்றிற்கு—அதாவது, தாவரத்தைப் பற்றிய காட்சிப் பொருளிலிருந்து கட்டடத்திற்கு—பவுல் உடனடியாக மாறுகிறார். கட்டுமான பணி நடைபெறும் ஒரு கட்டடத்தை நாம் சிந்தித்துப்பார்க்கையில், வெறுமனே அஸ்திவாரத்தை மட்டுமல்ல, கடின உழைப்பின் பலனாய் பளிச்சென்று தெரியும் உயர்ந்த கட்டடத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்கிறோம். அதைப் போலவே, கிறிஸ்துவைப் போன்ற பண்புகளையும் பழக்கங்களையும் வளர்த்துக்கொள்வதற்கு நாம் அதிக கடினமாய் உழைக்க வேண்டும். இப்படிப்பட்ட கடினமான முயற்சி கவனிக்கப்படாமல் போய்விடாது, தீமோத்தேயுவுக்குப் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘நீ தேறுகிறது யாவருக்கும் தெரிவதாக.’ (1 தீமோத்தேயு 4:15, NW; மத்தேயு 5:16) நம்மை கட்டியெழுப்பும் கிறிஸ்தவ செயல்கள் சில யாவை?
9. (அ) நம்முடைய ஊழியத்தில் கிறிஸ்துவை பின்பற்றுவதற்கு, நாம் வைக்கக்கூடிய நடைமுறையான இலக்குகள் சில யாவை? (ஆ) நம்முடைய ஊழியத்தை நாம் அனுபவித்து மகிழும்படி யெகோவா விரும்புகிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
9 நற்செய்தியைப் பிரசங்கிக்கவும் போதிக்கவும் இயேசு நம்மை நியமித்தார். (மத்தேயு 24:14; 28:19, 20) தைரியத்தோடும் திறம்பட்ட முறையிலும் சாட்சிகொடுப்பதற்கு அவர் பரிபூரண முன்மாதிரியை வைத்தார். நிச்சயமாகவே, அவர் செய்ததுபோல நாம் அவ்வளவு சிறப்பாக ஒருபோதும் செய்யமாட்டோம். இருப்பினும், அப்போஸ்தலன் பேதுரு இந்த இலக்கை நமக்கு வைக்கிறார்: “கர்த்தராகிய தேவனை [“கிறிஸ்துவை,” NW] உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.” (1 பேதுரு 3:15) நீங்கள் “உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிரு”க்கவில்லையென்றால், நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். அந்த நிலைக்குப் படிப்படியாக முன்னேற உங்களுக்கு உதவும் நியாயமான இலக்குகளை வையுங்கள். உங்களுடைய பிரசங்கத்தை மாற்றியமைத்துக் கொள்வதற்கு, அல்லது ஓரிரண்டு வசனங்களை சேர்த்துக்கொள்வதற்கு முன்னதாகவே தயாரிப்பது உங்களுக்கு உதவலாம். அதிகமான பைபிள் பிரசுரங்கள் அளிப்பதற்கு, அதிகமான மறுசந்திப்புகள் செய்வதற்கு, அல்லது ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிப்பதற்கு நீங்கள் இலக்குகள் வைக்கலாம். அளவின் பேரில்—அதாவது மணிநேரம், அளிப்புகள் அல்லது படிப்புகளின் எண்ணிக்கையின் பேரில்—முக்கியத்துவத்தை கண்டிப்புடன் கடைப்பிடிக்கக் கூடாது, ஆனால் தரத்தின் பேரிலேயே கவனம் செலுத்த வேண்டும். ஊழியத்தில் நம்மையே அளிப்பதை அனுபவித்து மகிழ நியாயமான இலக்குகள் வைப்பதும் அவற்றை அடைய கடினமாய் முயற்சிப்பதும் நமக்கு உதவலாம். அதையே—நாம் அவரை ‘மகிழ்ச்சியுடன்’ சேவிப்பதையே—யெகோவா விரும்புகிறார்.—சங்கீதம் 100:2; ஒப்பிடுக: 2 கொரிந்தியர் 9:7.
10. நாம் செய்யக்கூடிய வேறுசில கிறிஸ்தவ செயல்கள் யாவை, இவை நமக்கு எவ்வாறு உதவுகின்றன?
10 கிறிஸ்துவில் கட்டப்பட்டிருப்பதற்கு நாம் சபையில் செய்யவேண்டிய செயல்களும்கூட இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது என்னவென்றால், ஒருவருக்கொருவர் அன்புகாட்டுவதாகும்; ஏனென்றால் இதுவே மெய்க் கிறிஸ்தவர்களை அடையாளம் காட்டும் குறியாக இருக்கிறது. (யோவான் 13:34, 35) நாம் இன்னும் படித்துக்கொண்டிருக்கும்போது, நம்மில் அநேகர் நமக்குக் கற்பிப்பவருடன் நெருக்கமானவர்களாய் ஆகிறோம், இது இயல்பானதுதான். இருப்பினும், சபையிலுள்ள மற்றவர்களை அறிந்துகொள்வதன்மூலம் ‘விரிவாகும்படி’ பவுல் கொடுத்த ஆலோசனையை நாம் இப்பொழுது பின்பற்ற முடியுமா? (2 கொரிந்தியர் 6:13, NW) மூப்பர்களுக்கும்கூட நம்முடைய அன்பும் போற்றுதலும் தேவை. மூப்பர்களுடைய வேதப்பூர்வமான ஆலோசனையை நாடி அதை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் ஒத்துழைப்பதன் மூலம், அவர்களுடைய கடினமான வேலையை நாம் எளிதாக்குவோம். (எபிரெயர் 13:17) அதேசமயத்தில், நாம் கிறிஸ்துவில் கட்டப்படுவதற்கும் இது உதவிசெய்யும்.
11. முழுக்காட்டுதலைக் குறித்து யதார்த்தமான என்ன நோக்குநிலை நமக்கு இருக்க வேண்டும்?
11 முழுக்காட்டுதல் என்பது கிளர்ச்சியூட்டும் நிகழ்ச்சி! இருப்பினும், அதன்பிறகு வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அதைப்போலவே கிளர்ச்சியூட்டுவதாய் இருக்குமென நாம் எதிர்பார்க்கக்கூடாது. நாம் கிறிஸ்துவில் கட்டப்பட்டிருப்பதன் பெரும் பாகம், ‘ஒரே வழக்கமுறையில் சீராக நடந்துவருவதை’ உட்படுத்துகிறது. (பிலிப்பியர் 3:16, NW) அது உற்சாகமற்ற, சலிப்பூட்டுகிற வாழ்க்கை பாணியை அர்த்தப்படுத்துவதில்லை. நேர்கோட்டில் முன்னோக்கி நடப்பதை—வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், நல்ல ஆவிக்குரிய பழக்கங்களை வளர்த்துக்கொண்டு அவற்றை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதை—அர்த்தப்படுத்துகிறது. “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.—மத்தேயு 24:13.
நீங்கள் ‘விசுவாசத்தில் ஸ்திரப்பட்டவர்களாய்’ இருக்கிறீர்களா?
12. ‘விசுவாசத்தில் ஸ்திரப்பட்டிருத்தல்’ என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
12 கிறிஸ்துவுடன் நாம் ஒன்றித்து நடப்பதை விவரிக்கும் தன் மூன்றாவது சொற்றொடரில், ‘விசுவாசத்தில் ஸ்திரப்பட்டவர்களாய்’ இருக்கும்படி பவுல் நம்மை உந்துவிக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பு இவ்வாறு வாசிக்கிறது: ‘விசுவாசத்தைக் குறித்ததில் உறுதிப்பட்டிருங்கள்.’ பவுல் பயன்படுத்திய கிரேக்க வார்த்தை, “உறுதியளிப்பது, உத்தரவாதமளிப்பது, சட்டப்பூர்வமாய் மாற்றமுடியாததாய் செய்வது” என்பதை அர்த்தப்படுத்தலாம். நாம் அறிவில் வளருகையில், யெகோவா தேவனில் நம்முடைய விசுவாசம் நன்கு ஆதாரமிடப்பட்டிருப்பதை, சொல்லப்போனால், சட்டப்பூர்வமாய் நிலைநாட்டப்பட்டிருப்பதை காண்பதற்கு கூடுதலான காரணங்கள் நமக்குக் கொடுக்கப்படுகின்றன. அதன் விளைவு, நம் ஸ்திரத்தன்மை அதிகரிக்கிறது. நம்மை அசைவிப்பதற்கு சாத்தானின் உலகிற்கு இது அதிக கடினமாகிறது. ‘முதிர்ச்சியை நோக்கி தொடர்ந்து முன்னேறும்படி’ பவுல் கொடுத்த புத்திமதியை நமக்கு இது நினைப்பூட்டுகிறது. (எபிரெயர் 6:1, NW) முதிர்ச்சியும் ஸ்திரத்தன்மையும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை.
13, 14. (அ) கொலோசெயில் இருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தங்களுடைய ஸ்திரத்தன்மைக்கு என்ன அச்சுறுத்தலை எதிர்ப்பட்டார்கள்? (ஆ) அப்போஸ்தலன் பவுலுக்கு எது கவலையுண்டாக்கியிருக்கலாம்?
13 கொலோசெயில் இருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தங்களுடைய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை எதிர்ப்பட்டார்கள். பவுல் எச்சரித்தார்: “தத்துவசாஸ்திரம் மாயமான வஞ்சகம் இவற்றினால் ஒருவனும் உங்களைக் கொள்ளை கொண்டுபோகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; அவை மனுஷரின் பாரம்பரிய முறைமைக்கும் உலகத்தின் பாலபோதனைகளுக்கும் இசைந்தவைகளேயன்றிக் கிறிஸ்துவுக்கு இசைந்தவைகளல்ல.” (கொலோசெயர் 2:8, திருத்திய மொழிபெயர்ப்பு) ‘[தேவனுடைய] அன்பின் குமாரனுடைய ராஜ்யத்தில்’ பிரஜைகளாயிருந்த கொலோசெயர்கள், தங்களுடைய ஆசீர்வதிக்கப்பட்ட ஆவிக்குரிய நிலையிலிருந்து வீழ்ந்துபோவதை, திசைதிருப்பப்படுவதை பவுல் விரும்பவில்லை. (கொலோசெயர் 1:13) எதால் தவறாக வழிநடத்தப்படுவதை விரும்பவில்லை? ‘தத்துவசாஸ்திரம்’ என்பதாக பவுல் அதை சுட்டிக்காட்டினார்; இந்த ஒரு தடவை மட்டுமே பைபிளில் இந்த வார்த்தை காணப்படுகிறது. பிளாட்டோ, சாக்ரடீஸ் போன்ற கிரேக்க தத்துவஞானிகளைப் பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தாரா? மெய்க் கிறிஸ்தவர்களுக்கு இவர்கள் ஓர் அச்சுறுத்தலாக இருந்தபோதிலும், அந்நாட்களில், ‘தத்துவசாஸ்திரம்’ என்ற இந்த வார்த்தை விரிவான கருத்தில் பயன்படுத்தப்பட்டது. அது பொதுவாக மதம்சார்ந்த பல அறிஞர்களின் தொகுதிகளையும் பாடசாலைகளையும் குறித்தது. உதாரணமாக, ஜொஸிஃபஸ், ஃபிலோ போன்ற முதல் நூற்றாண்டு யூதர்கள், தங்களுடைய சொந்த மதத்தை ஒரு தத்துவசாஸ்திரம் என்பதாக அழைத்தார்கள்; ஒருவேளை கருத்தைக் கவரும் அதன் தன்மையை உயர்த்துவதற்காக அவ்வாறு அழைத்திருக்கலாம்.
14 பவுலுக்கு கவலையை உண்டாக்கிய சில தத்துவசாஸ்திரங்கள், ஒருவேளை மதம்சார்ந்த இயல்புடையதாய் இருந்திருக்கலாம். கொலோசெயர்களுக்கு எழுதிய தன்னுடைய கடிதத்தின் அதே அதிகாரத்தில், “தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே” என்று போதித்தவர்களைப் பற்றி அவர் பேசினார்; அதன்மூலம் கிறிஸ்துவின் மரணத்தால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தின் அம்சங்களை மறைமுகமாய் குறிப்பிட்டார். (ரோமர் 10:4) புறமத தத்துவசாஸ்திரங்களோடுகூட, சபையின் ஆவிக்குரியத்தன்மையை அச்சுறுத்திய மற்ற செல்வாக்குகளும் இருந்தன. (கொலோசெயர் 2:20-22) ‘உலகத்தின் பாலபோதனைகளின்’ பாகமாய் இருந்த தத்துவசாஸ்திரத்திற்கு எதிராக பவுல் எச்சரித்தார். இப்படிப்பட்ட பொய் போதனைகள் மனுஷனிடமிருந்து வந்தவையாக இருந்தன.
15. அடிக்கடி வேதப்பூர்வமற்ற சிந்தையினால் ஆட்கொள்ளப்படுவதை எவ்வாறு நாம் தவிர்க்கலாம்?
15 கடவுளுடைய வார்த்தையில் உறுதியாய் ஆதாரமிடப்படாத மனித கருத்துக்களையும் யோசனைகளையும் முன்னேற்றுவிப்பது கிறிஸ்தவ ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். இன்று நாம் இப்படிப்பட்ட அச்சுறுத்துதல்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு உந்துவித்தார்: “அன்பார்ந்தவர்களே, . . . ஏவப்பட்ட எல்லா வார்த்தைகளையும் நம்பாமல், அவை கடவுளிடமிருந்து வந்தவையா என்பதை பார்ப்பதற்கு ஏவப்பட்ட அந்த வார்த்தைகளை சோதித்தறியுங்கள்.” (1 யோவான் 4:1, NW) ஆகையால், பைபிள் தராதரங்களின்படி வாழ்வது பழம்பாணி என்று சொல்லி உங்களை நம்பவைப்பதற்கு பள்ளித்தோழன் ஒருவன் முயன்றால், அல்லது அயலகத்தார் ஒருவர் பொருளாசை சம்பந்தமான மனப்பான்மையைப் பின்பற்றும்படி உங்களைத் தூண்டினால், அல்லது பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட உங்களுடைய மனச்சாட்சியை மீறும்படி உடன் வேலைசெய்பவர் தந்திரமாக உங்களை வற்புறுத்தினால், அல்லது உடன் விசுவாசி தன்னுடைய சொந்த அபிப்பிராயத்தின் அடிப்படையில் சபையிலுள்ள மற்றவர்களைப் பற்றி குற்றங்குறை காண்கிற, எதிர்மறையான குறிப்புகளைச் சொன்னாலும்கூட, அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள். கடவுளுடைய வார்த்தைக்கு முரணான காரியங்களை ஒழித்துவிடுங்கள். நாம் அவ்வாறு செய்கையில், கிறிஸ்துவுடன் ஒன்றித்து நடக்கிறவர்களாய் நம்முடைய ஸ்திரத்தன்மையை காத்துக்கொள்வோம்.
‘நன்றிசெலுத்துவதில் விசுவாசத்தோடே பொங்கிவழியுங்கள்’
16. கிறிஸ்துவுடன் ஒன்றித்து நடப்பதன் நான்காவது அம்சம் என்ன, நாம் என்ன கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம்?
16 கிறிஸ்துவுடன் ஒன்றித்து நடப்பதைக் குறித்து பவுல் குறிப்பிடுகிற நான்காவது அம்சம், ‘நன்றிசெலுத்துவதில் விசுவாசத்தோடே பொங்கிவழிவதாகும்.’ (கொலோசெயர் 2:7, NW) ‘பொங்கிவழியுங்கள்’ என்ற வார்த்தை, நதியின் கரைகளில் தண்ணீர் கரைபுரண்டோடுவதை நமக்கு நினைவுபடுத்துகிறது. கிறிஸ்தவர்களாக நம்முடைய நன்றிசெலுத்துதல் தொடர்ந்து செய்யக்கூடிய அல்லது வழக்கமான ஒரு காரியமாக இருக்க வேண்டும் என்பதை இது நமக்குத் தெரிவிக்கிறது. நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ளலாம், ‘நான் நன்றியுள்ளவனளாக இருக்கிறேனா?’
17. (அ) இக்கட்டான காலங்களிலும்கூட, நாமனைவரும் மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருப்பதற்கு அதிகமுள்ளது என்று ஏன் சொல்லப்படலாம்? (ஆ) யெகோவாவிடமிருந்து வரும் அன்பளிப்புகளில் நீங்கள் விசேஷமாக நன்றியுள்ளவர்களாய் உணருகிற அன்பளிப்புகள் யாவை?
17 உண்மையில், ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துவதில் பொங்கிவழிவதற்கு நம் அனைவருக்கும் போதுமான காரணங்களுண்டு. மிகவும் இக்கட்டான காலங்களிலும்கூட, நம் மனதுக்கு இதமளிக்கும் சின்ன சின்ன விஷயங்கள் இருக்கலாம். உதாரணமாக, அனுதாபம் காட்டும் நண்பர். அன்பானவரின் பாசத்தை வெளிக்காட்டும் ஸ்பரிசம். புத்துணர்ச்சியளிக்கும் நிம்மதியான உறக்கம். பசியின் வேதனையை தணிக்கும் ருசியான சாப்பாடு. ஒரு பறவையின் கீதம், மழலையின் சிரிப்பு, பளிச்சிடும் நீலவானம், இதமான தென்றல்—இவையனைத்தையும் இன்னும் அதிகத்தையும்கூட ஒரே நாளில் நாம் அனுபவிக்கலாம். இப்படிப்பட்ட அன்பளிப்புகளை சாதாரணமாக எடுத்துக்கொள்வது எளிதானதே. நன்றி என்று சொல்வதற்கு இவையெல்லாம் தகுதியானவையாய் இல்லையா? ‘நன்மையான எந்த ஈவுக்கும் பூரணமான எந்த வரத்திற்கும்’ மூலகாரணராகிய யெகோவாவிடமிருந்தே இவையனைத்தும் வருகின்றன. (யாக்கோபு 1:17) இவற்றையெல்லாம் அற்பமாக தோன்றச்செய்யும் அன்பளிப்பை—உதாரணமாக, உயிரை—அவர் நமக்கு கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 36:9) மேலும், என்றென்றும் வாழும் வாய்ப்பையும் நமக்கு கொடுத்திருக்கிறார். இந்த அன்பளிப்பைத் தருவதற்கு தம்முடைய ஒரேபேறான குமாரனையே, ‘செல்லப்பிள்ளையையே’ அனுப்புவதன் மூலம் யெகோவா மிகப் பெரிய தியாகத்தைச் செய்தார்.—நீதிமொழிகள் 8:30; யோவான் 3:16.
18. எவ்வாறு யெகோவாவுக்கு நம்மை நன்றியுள்ளவர்களாய் காண்பிக்கலாம்?
18 அப்படியானால், சங்கீதக்காரனுடைய வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை: ‘யெகோவாவுக்கு நன்றிசெலுத்துவது நலமானது.’ (சங்கீதம் 92:1, NW) இதைப் போலவே, தெசலோனிக்கேயில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் நினைப்பூட்டினார்: “எவ்விஷயத்திலும் நன்றிசெலுத்துங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:18; எபேசியர் 5:20; கொலோசெயர் 3:15; தி.மொ.) நாம் ஒவ்வொருவரும் அதிக நன்றியுள்ளவர்களாய் இருப்பதற்கு உறுதியோடிருக்கலாம். நம்முடைய ஜெபங்கள் முழுக்க முழுக்க நம்முடைய தேவைகளைக் குறித்து கடவுளிடம் கேட்கும் விண்ணப்பங்களாகவே இருக்கக்கூடாது. இவற்றையெல்லாம் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் உங்களிடமிருந்து ஏதாவது தேவைப்படும்போது மாத்திரமே உங்களிடம் பேசுகிற ஒரு நண்பரை கற்பனைசெய்து பாருங்கள்! ஆகையால், ஏன் நன்றிசெலுத்துவதற்கும் துதிசெலுத்துவதற்கும் மட்டுமே யெகோவாவிடம் ஜெபிக்க கூடாது? நன்றிகெட்ட இவ்வுலகை அவர் பார்க்கும்போது இப்படிப்பட்ட ஜெபங்கள் அவரை எவ்வளவாய் பிரியப்படுத்தும்! இரண்டாவது நன்மையானது, நாம் எவ்வளவாய் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை நினைப்பூட்டி, வாழ்க்கையின் நம்பிக்கையூட்டும் அம்சங்களின்மீது மனதை ஒருமுகப்படுத்த இப்படிப்பட்ட ஜெபங்கள் நமக்கு உதவிசெய்யலாம்.
19. கிறிஸ்துவுடன் நடப்பதில் நாமனைவரும் தொடர்ந்து முன்னேறலாம் என்பதை கொலோசெயர் 2:6, 7-ல் உள்ள பவுலின் வார்த்தைகள் எவ்வாறு தெரிவிக்கின்றன?
19 கடவுளுடைய வார்த்தையின் ஒரு பகுதியிலிருந்தே இவ்வளவு ஞானமான வழிநடத்துதலை பெறுவது குறிப்பிடத்தக்கது அல்லவா? கிறிஸ்துவுடன் தொடர்ந்து நடந்துவரும்படி பவுல் கொடுத்த அறிவுரை நாம் ஒவ்வொருவரும் மனதில் எடுத்துக்கொள்ளவேண்டிய ஒன்று. அப்படியானால், நாம் ‘கிறிஸ்துவில் வேரூன்றப்படவும்’ ‘அவரில் கட்டப்படவும்’ ‘விசுவாசத்தில் ஸ்திரப்படவும்’ ‘நன்றிசெலுத்துவதில் பொங்கிவழிகிறவர்களாய்’ இருப்பதற்கும் திடதீர்மானத்துடன் இருப்போமாக. இப்படிப்பட்ட அறிவுரை முக்கியமாய் புதிதாக முழுக்காட்டப்பட்டவர்களுக்கு இன்றியமையாதது. ஆனால் இது நம் அனைவருக்கும் பொருந்துகிறது. ஓர் ஆணிவேர் எவ்வாறு கீழ்நோக்கி மேன்மேலும் வளர்கிறது என்பதையும் ஒரு கட்டடம் கட்டப்படுகையில் எவ்வாறு மேன்மேலும் மேல்நோக்கி உயருகிறது என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். எனவே, நாம் கிறிஸ்துவுடன் நடப்பது ஒருபோதும் முடிவடையாது. நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு அம்சங்களில் நாம் ஆவிக்குரிய விதமாய் வளருவது அவசியமாகும். யெகோவா நமக்கு உதவிசெய்வார், நம்மை ஆசீர்வதிப்பார்; ஏனென்றால் நாம் என்றென்றும் அவருடனும் அவருடைய நேச குமாரனுடனும் தொடர்ந்து நடந்துவரும்படி அவர் விரும்புகிறார்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ கிறிஸ்துவுடன் ஒன்றித்து நடப்பதில் என்ன உட்பட்டுள்ளது?
◻ ‘கிறிஸ்துவில் வேரூன்றப்பட்டிருத்தல்’ என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
◻ நாம் எவ்வாறு ‘கிறிஸ்துவில் கட்டப்படலாம்’?
◻ ‘விசுவாசத்தில் ஸ்திரப்பட்டவர்களாய்’ இருப்பது ஏன் அவ்வளவு முக்கியம்?
◻ ‘நன்றிசெலுத்துவதில் பொங்கிவழிவதற்கு’ நமக்கு என்ன காரணங்கள் உள்ளன?
[பக்கம் 10-ன் படம்]
மரத்தின் வேர்கள் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கலாம், ஆனால் அவை மரத்திற்கு போஷாக்களித்து அதை உறுதியாக ஊன்றவைக்கின்றன