‘நீடிய பொறுமையைத் தரித்துக்கொள்ளுங்கள்’
“உருக்கமான இரக்கத்தையும், . . . நீடிய பொறுமையையும் தரித்துக்கொ[ள்ளுங்கள்].” —கொலோசெயர் 3:12.
1. நீடிய பொறுமைக்கு சிறந்த ஓர் உதாரணத்தைக் குறிப்பிடுங்கள்.
தென்மேற்கு பிரான்ஸில் வாழ்கிற ரேஷீஸ் 1952-ல் முழுக்காட்டுதல் பெற்று யெகோவாவின் சாட்சியானார். யெகோவாவை சேவிப்பதற்கு அவர் எடுக்கும் முயற்சிகளைத் தடைசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் அவருடைய மனைவி பல ஆண்டுகளுக்கு செய்து வந்தாள். அவர் கூட்டங்களுக்குச் செல்வதைத் தடுப்பதற்காக அவருடைய வண்டியின் டயர்களை பங்சர் செய்ய முயன்றாள். ஒரு சந்தர்ப்பத்தில் அவர் பைபிள் செய்தியை வீடுவீடாக பிரசங்கிக்கையில் அவரைப் பின்தொடர்ந்து போய் ராஜ்ய நற்செய்தியை அவர் வீட்டுக்காரர்களுக்கு சொல்லுகையில் அவரை கேலி செய்தாள். எதிர்ப்பு தொடர்ந்து இருந்தபோதிலும் ரேஷீஸ் நீடிய பொறுமையை இழந்துவிடாமல் இருந்தார். இவ்வாறு, தம்முடைய வணக்கத்தார் அனைவரும் மற்றவர்களிடம் நீடிய பொறுமையுடன் நடந்துகொள்ளும்படி யெகோவா எதிர்பார்ப்பதால் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் ரேஷீஸ் சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.
2. “நீடிய பொறுமை” என்பதற்குரிய கிரேக்க வார்த்தையின் நேர்பொருள் என்ன, அந்த வார்த்தை எதை அர்த்தப்படுத்துகிறது?
2 “நீடிய பொறுமை” என்பதற்குரிய கிரேக்க வார்த்தை, “மனப்பான்மையில் நீடிப்பு” என்ற நேர்பொருளைத் தருகிறது. இந்த வார்த்தையை “நீடிய சாந்தம்” என ஆறு தடவையும், “நீடிய பொறுமை” என எட்டு தடவையும் தமிழ் பைபிள் மொழிபெயர்க்கிறது. “நீடிய பொறுமை” என மொழிபெயர்க்கப்பட்ட எபிரெய, கிரேக்க வார்த்தைகள் பொறுமையை, சகிப்புத்தன்மையை, கோபப்பட தாமதிப்பதை அர்த்தப்படுத்துகின்றன.
3. நீடிய பொறுமையைப் பற்றிய கிறிஸ்தவரின் கருத்து முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கரின் கருத்திலிருந்து எவ்வாறு வேறுபட்டது?
3 முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கர்கள் நீடிய பொறுமையை ஒரு சிறந்த குணம் என கருதவில்லை. ஸ்தோயிக் தத்துவஞானிகள் அந்த வார்த்தையை உபயோகிக்கவும்கூட இல்லை. பைபிள் அறிஞர் வில்லியம் பார்க்ளேயின்படி, நீடிய பொறுமை “கிரேக்க பண்புகளுக்கு முற்றிலும் எதிர்மாறானது,” மற்ற காரியங்களுடன்கூட “எந்த அவமதிப்பையும் அல்லது புண்படுத்தலையும் பொறுத்துக்கொள்ள மறுப்பது” அவர்கள் மத்தியில் பெருமையடித்துக் கொள்ளப்பட்ட விஷயம். “கிரேக்கரைப் பொறுத்தவரை, பழிவாங்குவதற்கு எதையும் செய்பவரே பெரிய மனிதர். கிறிஸ்தவரைப் பொறுத்தவரை பழிவாங்க வாய்ப்பிருந்தும் அதை செய்ய மறுப்பவரே பெரிய மனிதர்” என அவர் குறிப்பிடுகிறார். நீடிய பொறுமையை பலவீனத்தின் அடையாளமாக கிரேக்கர் கருதியிருக்கலாம். ஆனால் மற்ற விஷயங்களில் இருப்பதுபோல் இங்கு, “தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.”—1 கொரிந்தியர் 1:25.
நீடிய பொறுமையில் கிறிஸ்துவின் முன்மாதிரி
4, 5. நீடிய பொறுமையை காட்டுவதில் இயேசு வைத்த சிறந்த முன்மாதிரி என்ன?
4 யெகோவாவுக்கு அடுத்தபடியாக கிறிஸ்து இயேசு நீடிய பொறுமைக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார். பெரும் அழுத்தத்தின் கீழிருக்கையில் இயேசு வியக்கத்தக்க விதத்தில் பொறுமையோடிருந்தார். “அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” என அவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தது.—ஏசாயா 53:7.
5 தம்முடைய பூமிக்குரிய ஊழிய காலம் முழுவதும் இயேசு எப்பேர்ப்பட்ட குறிப்பிடத்தக்க நீடிய பொறுமையை வெளிக்காட்டினார்! தம்முடைய சத்துருக்களின் வஞ்சனையான கேள்விகளையும், எதிரிகளின் நிந்தனைகளையும் அவர் சகித்தார். (மத்தேயு 22:15-46; 1 பேதுரு 2:23) தம்முடைய சீஷர்களிடம் பொறுமையோடு நடந்து கொண்டார், தங்களில் யார் பெரியவன் என்பதைக் குறித்து அவர்கள் தொடர்ந்து சண்டை போடும்போதும் அவர் பொறுமையாகவே நடந்துகொண்டார். (மாற்கு 9:33-37; 10:35:45; லூக்கா 22:24-27) அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில், “விழித்திருங்கள்” என அவர் சொல்லியிருந்த போதிலும் பேதுருவும் யோவானும் தூங்கிவிட்டதைக் கண்டபோது எத்தகைய மெச்சத்தக்க பொறுமையை இயேசு வெளிக்காட்டினார்!—மத்தேயு 26:36-41.
6. இயேசுவின் நீடிய பொறுமையிலிருந்து பவுல் எவ்வாறு பயனடைந்தார், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
6 தம்முடைய மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றிற்குப் பிறகும் இயேசு தொடர்ந்து நீடிய பொறுமையுள்ளவராக இருந்தார். அப்போஸ்தலன் பவுல் முற்காலத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துபவராக இருந்ததால், இதைப் பற்றி முக்கியமாய் உணர்வுள்ளவராக இருந்தார். “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும் பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம் பெற்றேன்” என பவுல் எழுதினார். (1 தீமோத்தேயு 1:15, 16) முன்பு நம்முடைய வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்திருந்தாலும் இயேசுவின்மீது விசுவாசம் வைத்தால், அவர் நம்மிடம் நீடிய பொறுமையைக் காட்டுவார்; அதே சமயத்தில், “மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளை” காட்டும்படியும் நிச்சயம் அவர் நம்மிடம் எதிர்பார்ப்பார். (அப்போஸ்தலர் 26:20; ரோமர் 2:4) கிறிஸ்து ஆசியா மைனரிலிருந்த ஏழு சபைகளுக்கு அனுப்பிய செய்திகள், அவர் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கிறபோதிலும், நம்முடைய நடத்தையில் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதை காட்டுகின்றன.—வெளிப்படுத்துதல், அதிகாரங்கள் 2-ம் 3-ம்.
ஆவியின் கனிகளில் ஒன்று
7. நீடிய பொறுமைக்கும் பரிசுத்த ஆவிக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது?
7 கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தின் 5-ம் அதிகாரத்தில், பவுல் மாம்சத்தின் கிரியைகளுக்கும் ஆவியின் கனிகளுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை குறிப்பிடுகிறார். (கலாத்தியர் 5:19-23) நீடிய பொறுமை யெகோவாவின் குணங்களில் ஒன்றாக இருப்பதால், இந்தப் பண்பின் பிறப்பிடம் அவரே. அவருடைய ஆவியின் கனிகளில் இதுவும் ஒன்று. (யாத்திராகமம் 34:6, 7) ஆவியின் கனிகளைப் பற்றிய பவுலின் விவரிப்பில், “அன்பு, சந்தோஷம், சமாதானம், . . . தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகியவற்றோடு பொருத்தமாகவே நீடிய பொறுமை நான்காவதாக பட்டியலிடப்பட்டுள்ளது. (கலாத்தியர் 5:22, 23) ஆகையால், கடவுளைப் போல் பொறுமையை அல்லது நீடிய பொறுமையை அவருடைய ஊழியர்கள் வெளிக்காட்டுகிறார்கள் என்றால் அதற்கு பரிசுத்த ஆவியின் தூண்டுதலே காரணம்.
8. நீடிய பொறுமை உட்பட, ஆவியின் கனிகளை நம்மில் வளர்க்க எது நமக்கு உதவும்?
8 எனினும், ஒருவர்மீது யெகோவா தம்முடைய ஆவியை வற்புறுத்தி திணிக்கிறார் என இது அர்த்தப்படுத்துகிறதில்லை. நாம்தாமே அதன் தூண்டுதலுக்கு ஏற்ப மனமுவந்து செயல்பட வேண்டும். (2 கொரிந்தியர் 3:17; எபேசியர் 4:30) நாம் செய்யும் அனைத்து காரியங்களிலும் அதன் கனிகளை வளர்ப்பதன்மூலம், நம்முடைய வாழ்க்கையில் அந்த ஆவி செயல்பட அனுமதிக்கிறோம். மாம்சத்தின் கிரியைகளையும் ஆவியின் கனிகளையும் பட்டியலிட்ட பின்பு பவுல் இவ்வாறு சொன்னார்: “நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 5:25; 6:7, 8) நீடிய பொறுமையை வளர்ப்பதில் நாம் வெற்றி பெற, பரிசுத்த ஆவி கிறிஸ்தவர்களில் உண்டுபண்ணும் மற்ற ஆவியின் கனிகளையும் நம்மில் வளர்க்க வேண்டும்.
“அன்பு நீடிய பொறுமையுள்ளது”
9. “அன்பு நீடிய பொறுமையுள்ளது” என கொரிந்தியருக்கு பவுல் ஏன் சொல்லியிருக்கலாம்?
9 “அன்பு நீடிய பொறுமையுள்ளது” என பவுல் குறிப்பிடுகையில் அன்புக்கும் நீடிய பொறுமைக்கும் இடையில் விசேஷித்த தொடர்பு இருப்பதை அவர் காட்டினார். (1 கொரிந்தியர் 13:4, NW) கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவ சபையில் நிலவிய சண்டை சச்சரவை மனதில் வைத்து பவுல் இதை குறிப்பிட்டதாக ஆல்பர்ட் பார்ன்ஸ் என்ற ஒரு பைபிள் கல்விமான் கருத்து தெரிவிக்கிறார். (1 கொரிந்தியர் 1:11, 12) பார்ன்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “[நீடிய பொறுமைக்காக] இங்கு பயன்படுத்தப்படும் வார்த்தை, அவசரத்தன்மைக்கு எதிரிடையானதாக, ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் எரிச்சலடைவதற்கும் எதிரிடையானதாக இருக்கிறது. ஒடுக்கப்படுகையில், கோபமூட்டப்படுகையில், நீடித்துத் தாங்கக்கூடிய மனநிலையை இது குறிக்கிறது.” அன்பும் நீடிய பொறுமையும், கிறிஸ்தவ சபையின் சமாதானத்திற்கு இன்னமும் பெரும் பங்களிக்கின்றன.
10. (அ) நீடிய பொறுமையுடன் இருப்பதற்கு அன்பு நமக்கு எந்த வழியில் உதவுகிறது, இதன் சம்பந்தமாக அப்போஸ்தலன் பவுல் என்ன அறிவுரை கொடுக்கிறார்? (ஆ) கடவுளுடைய நீடிய பொறுமையையும் தயவையும் குறித்து பைபிள் கல்விமான் ஒருவர் என்ன சொன்னார்? (அடிக்குறிப்பைக் காண்க.)
10 “அன்பு நீடிய பொறுமையும் தயவுமுள்ளது; அன்பு . . . தன் சொந்த அக்கறைகளுக்கானவற்றை நாடுகிறதில்லை, கோபமடைகிறதில்லை.” ஆகையால், அநேக வழிகளில் நீடிய பொறுமையுடன் இருப்பதற்கு அன்பு நமக்கு உதவுகிறது.a (1 கொரிந்தியர் 13:4, 5, NW) ஒருவரையொருவர் பொறுமையுடன் சகிக்கவும், நாமெல்லாரும் அபூரணர், நம் அனைவரிடமும் குற்றங்குறைகள் உள்ளன என்பதை நினைவில் வைக்கவும் அன்பு நமக்கு உதவுகிறது. உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்து நடக்கவும் மன்னிக்கவும் அது நமக்கு உதவுகிறது. “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிரு”க்கவும் அப்போஸ்தலன் பவுல் நம்மை ஊக்குவிக்கிறார்.—எபேசியர் 4:1-3.
11. கிறிஸ்தவ சமுதாயங்களில் நீடிய பொறுமையுடன் இருப்பது குறிப்பாக ஏன் முக்கியம்?
11 சபைகள், பெத்தேல் இல்லங்கள், மிஷனரி இல்லங்கள், கட்டுமான குழுக்கள், கிறிஸ்தவ பள்ளிகள் ஆகிய எல்லா கிறிஸ்தவ சமுதாயங்களின் சமாதானத்திற்கும் சந்தோஷத்திற்கும் பங்களிப்பது அவற்றின் அங்கத்தினர்களின் நீடிய பொறுமை ஆகும். தனிப்பட்டவருக்குரிய குணங்களில், விருப்புவெறுப்புகளில், வளர்ப்பு முறைகளில், பண்பாட்டு தராதரங்களில், ஏன் சுகாதார முறைகளில்கூட வேறுபாடுகள் இருப்பதால் கோபமூட்டும் சந்தர்ப்பங்கள் அவ்வப்போது வரலாம். இது குடும்பங்களிலும் நிகழலாம். கோபப்பட தாமதிப்பது அதிக முக்கியம். (நீதிமொழிகள் 14:29; 15:18; 19:11) நீடிய பொறுமை, அதாவது, நிலைமை சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் பொறுமையுடன் சகித்திருப்பது நம் அனைவரின் பங்கிலும் அவசியம்.—ரோமர் 15:1-6.
சகிப்பதற்கு உதவும் நீடிய பொறுமை
12. கோபமூட்டும் சூழ்நிலைகளில் நீடிய பொறுமை ஏன் முக்கியம்?
12 முடிவற்றதாக தோன்றும் அல்லது விரைவில் தீர்வு கிடைக்காததாக தோன்றும் கோபமூட்டும் சூழ்நிலைகளைச் சகிக்க நீடிய பொறுமை நமக்கு உதவுகிறது. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ரேஷீஸ் விஷயத்திலும் இதுவே உண்மையானது. யெகோவாவை சேவிப்பதற்கு எடுத்த முயற்சிகளை அவருடைய மனைவி பல ஆண்டுகளாக எதிர்த்து வந்தாள். ஆனால் ஒருநாள் கண்ணீருடன் அவரிடம், “இதுதான் சத்தியம் என்று தெரியும். எனக்கு உதவுங்கள். பைபிளைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்” என்றாள். முடிவில் அவள் ஒரு சாட்சியாக முழுக்காட்டப்பட்டாள். “அந்த ஆண்டுகளின் போராட்டத்தையும், பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் யெகோவா ஆசீர்வதித்தார் என்பதை இது நிரூபித்தது” என ரேஷீஸ் சொல்கிறார். அவருடைய நீடிய பொறுமைக்கு பலன் கிடைத்தது.
13. சகித்திருக்க பவுலுக்கு எது உதவியது, நாம் சகித்திருக்க அவருடைய முன்மாதிரி எவ்வாறு நமக்கு உதவலாம்?
13 பொ.ச. முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலன் பவுல் நீடிய பொறுமைக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார். (2 கொரிந்தியர் 6:3-10; 1 தீமோத்தேயு 1:16) அவருடைய வாழ்க்கையின் முடிவு காலத்தில் தன்னுடைய இளம் தோழனாகிய தீமோத்தேயுவுக்கு அறிவுரை கூறுகையில், கிறிஸ்தவர்கள் அனைவரும் சோதனைகளை எதிர்ப்படுவார்கள் என பவுல் அவரை எச்சரித்தார். பவுல் தன்னையே உதாரணம் காட்டி, சகிப்பதற்குத் தேவைப்படும் அடிப்படை கிறிஸ்தவ குணங்களை சிபாரிசு செய்தார். “நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் [“நீடிய பொறுமையையும்,” NW] அன்பையும் பொறுமையையும், அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார். அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என அவர் எழுதினார். (2 தீமோத்தேயு 3:10-12; அப்போஸ்தலர் 13:49-51; 14:19-22) சகித்திருக்க நம் எல்லாருக்கும் விசுவாசமும் அன்பும் நீடிய பொறுமையும் தேவை.
நீடிய பொறுமையை அணிந்துகொள்ளுதல்
14. நீடிய பொறுமை போன்ற தேவபக்திக்குரிய பண்புகளை பவுல் எதற்கு ஒப்பிட்டார், கொலோசெய கிறிஸ்தவர்களுக்கு அவர் என்ன அறிவுரை வழங்கினார்?
14 ‘பழைய மனித இயல்புக்குரிய’ பழக்கவழக்கங்களைக் களைந்து போட்ட பின்பு, ஒரு கிறிஸ்தவன் அணிந்துகொள்ள வேண்டிய உடைகளுக்கு நீடிய பொறுமையையும் தேவபக்திக்குரிய மற்ற பண்புகளையும் அப்போஸ்தலன் பவுல் ஒப்பிட்டார். (கொலோசெயர் 3:5-10, பொது மொழிபெயர்ப்பு) “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து [“யெகோவா,” NW] உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” என அவர் எழுதினார்.—கொலோசெயர் 3:12-14.
15. கிறிஸ்தவர்கள் நீடிய பொறுமையையும் தேவபக்திக்குரிய மற்ற பண்புகளையும் ‘தரித்துக்கொள்கையில்’ என்ன பலன் கிடைக்கிறது?
15 சபையின் அங்கத்தினர்கள் இரக்கத்தையும் தயவையும் மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் நீடிய பொறுமையையும் அன்பையும் ‘தரித்துக்கொள்கையில்,’ பிரச்சினைகளை சரிசெய்யவும் யெகோவாவின் சேவையில் ஐக்கியத்துடன் முன்னேறவும் அவர்களால் முடிகிறது. முக்கியமாக, கிறிஸ்தவ கண்காணிகள் நீடிய பொறுமையுடன் இருக்க வேண்டும். மற்றொரு கிறிஸ்தவரை அவர்கள் கண்டிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வரலாம், ஆனால் இதை பல வழிகளில் கையாளலாம். அதற்கு தேவையான மிகச் சிறந்த மனப்பான்மையை பற்றி தீமோத்தேயுவுக்கு எழுதுகையில் பவுல் இவ்வாறு விவரித்தார்: “எல்லா நீடிய சாந்தத்தோடும் [“நீடிய பொறுமையோடும்,” NW] உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.” (2 தீமோத்தேயு 4:2) ஆம், யெகோவாவின் செம்மறியாடுகளை எப்போதும் நீடிய பொறுமையுடனும் கண்ணியத்துடனும் கனிவுடனும் நடத்த வேண்டும்.—மத்தேயு 7:12; 11:28; அப்போஸ்தலர் 20:28, 29, NW; ரோமர் 12:10.
‘எல்லாரிடமும் நீடிய பொறுமையுடன் இருங்கள்’
16. ‘எல்லாரிடமும் நீடிய பொறுமையுடன்’ நாம் இருந்தால் என்ன பலன் கிடைக்கலாம்?
16 மனிதகுலத்திடம் யெகோவா நீடிய பொறுமையோடு இருப்பது, ‘எல்லாரிடமும் நீடிய பொறுமையுடன் இருக்கும்படியான’ தார்மீக கடமைக்கு நம்மையும் உட்படுத்துகிறது. (1 தெசலோனிக்கேயர் 5:14, NW) சாட்சிகளாக இராத குடும்பத்தார், அக்கம்பக்கத்தார், சக தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகிய அனைவரிடமும் நீடிய பொறுமையுடன் இருப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. சில சந்தர்ப்பங்களில், வேலைசெய்யும் இடத்திலோ பள்ளியிலோ சகாக்களின் கேலி கிண்டல்களை அல்லது நேரடியான எதிர்ப்பை வருடக்கணக்காக சகிக்க நேர்ந்த சாட்சிகளால், பல தப்பெண்ணங்களை வெற்றிகரமாக சமாளிக்க முடிந்திருக்கிறது. (கொலோசெயர் 4:5, 6) “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்” என அப்போஸ்தலன் பேதுரு எழுதினார்.—1 பேதுரு 2:12.
17. யெகோவாவின் அன்பையும் நீடிய பொறுமையையும் நாம் எவ்வாறு பின்பற்றலாம், நாம் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?
17 யெகோவாவின் நீடிய பொறுமை கோடிக்கணக்கானோருக்கு இரட்சிப்பை அர்த்தப்படுத்தும். (2 பேதுரு 3:9, 15) யெகோவாவின் அன்பையும் நீடிய பொறுமையையும் நாம் பின்பற்றினால், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பொறுமையுடன் தொடர்ந்து பிரசங்கிப்போம், கிறிஸ்துவின் ராஜ்ய ஆட்சிக்குக் கீழ்ப்படியும்படி மற்றவர்களுக்குக் கற்பிப்போம். (மத்தேயு 28:18-20; மாற்கு 13:10) பிரசங்கிப்பதை நாம் நிறுத்திவிட்டால், அது யெகோவாவின் நீடிய பொறுமையை நாம் மட்டுப்படுத்த விரும்புவதைப் போலவும், ஜனங்கள் மனந்திரும்ப வாய்ப்பளிக்கும் அதன் நோக்கத்தை புரிந்துகொள்ள தவறியதைப் போலவும் இருக்கும்.—ரோமர் 2:4.
18. கொலோசெயருக்காக பவுல் என்ன ஜெபம் செய்தார்?
18 ஆசியா மைனரில், கொலோசெயிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதிய நிருபத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: “இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும் ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற [“திருத்தமான,” NW] அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் [“யெகோவாவுக்கு,” NW] பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.”—கொலோசெயர் 1:9-11.
19, 20. (அ) யெகோவாவின் நீடிய பொறுமையை சோதனையாக கருதுவதை நாம் எப்படி தவிர்க்கலாம்? (ஆ) நாம் நீடிய பொறுமையுடன் இருப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
19 “எல்லா வகையான மனிதரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவுக்கு வரவும்” வேண்டுமென்ற ‘அவருடைய சித்தத்தைப் பற்றிய திருத்தமான அறிவால் நாம் நிரப்பப்பட்டிருந்தால்’ யெகோவா தொடர்ந்து நீடிய பொறுமையோடு இருப்பது நம் விசுவாசத்திற்கு சோதனையாக இராது. (1 தீமோத்தேயு 2:4, NW) முக்கியமாய், ‘ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தியை’ பிரசங்கிப்பதன் மூலம் தொடர்ந்து ‘சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளை தந்துகொண்டே’ இருப்போம். (மத்தேயு 24:14, NW) இதை நாம் உண்மையுடன் தொடர்ந்து செய்வோமானால், “சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு” உதவுவதில், யெகோவா நம்மை ‘எல்லா வல்லமையாலும் பலப்படுத்துவார்.’ இவ்வாறு செய்கையில், ‘யெகோவாவுக்குப் பாத்திரராய் நடப்போம்.’ அவருக்கு ‘பிரியமுண்டாக’ செயல்படுவதை அறிவதிலிருந்து வரும் மன சமாதானத்தையும் அனுபவிப்போம்.
20 யெகோவாவின் நீடிய பொறுமையின் ஞானத்தை முற்றிலும் உணர்ந்தவர்களாக நாம் இருப்போமாக. அது நம்முடைய இரட்சிப்பிற்கும், நம்முடைய பிரசங்கிப்புக்கும் போதிப்புக்கும் செவிசாய்ப்பவர்களின் இரட்சிப்பிற்கும் ஏதுவாக செயல்படுகிறது. (1 தீமோத்தேயு 4:16) அன்பு, தயவு, நற்குணம், சாந்தம், இச்சையடக்கம் போன்ற ஆவியின் கனிகளை வளர்ப்பது, சந்தோஷமாய் நீடிய பொறுமையுடன் இருக்க நமக்கு உதவும். நம்முடைய குடும்பத்தாருடனும் சபையிலுள்ள நம் சகோதர சகோதரிகளுடனும் நல்ல விதத்தில் சமாதானத்தோடு வாழ்கிறவர்களாய் இருப்போம். சக தொழிலாளர்களுடன் அல்லது பள்ளித் தோழர்களுடன் பொறுத்துப்போக நீடிய பொறுமை நமக்கு உதவும். அதுமட்டுமல்லாமல், நம் நீடிய பொறுமைக்கு நோக்கம் இருக்கும்; அதாவது தவறுசெய்பவர்களை காப்பாற்றவும், நீடிய பொறுமையுள்ள கடவுளாகிய யெகோவாவை மகிமைப்படுத்தவும் வழிவகுக்கும்.
[அடிக்குறிப்பு]
a “அன்பு நீடிய பொறுமையும் தயவுமுள்ளது” என்ற பவுலினுடைய குறிப்பின் பேரில் கருத்து சொல்பவராய் பைபிள் கல்விமான் கார்டன் டி. ஃபீ இவ்வாறு எழுதுகிறார்: “பவுலின் இறையியல்படி மனிதகுலத்திடமான கடவுளுடைய மனப்பான்மையின் இருபுறங்களை அவை [நீடிய பொறுமை, தயவு] சுட்டிக்காட்டுகின்றன (cf. ரோ. 2:4). ஒருபுறத்தில் மனித கலகம் சம்பந்தமாக தம்முடைய கோபத்தை கடவுள் கட்டுப்படுத்தி வைத்திருப்பதில் அவருடைய அன்புள்ள பொறுமை வெளிக்காட்டப்படுகிறது; மறுபுறத்தில் அவருடைய இரக்கத்தின் ஆயிரக்கணக்கான வெளிக்காட்டுகளில் அவருடைய தயவு காணப்படுகிறது. இவ்வாறு அன்பை பற்றிய பவுலின் விவரிப்பு, கடவுளைப் பற்றிய இந்த இரண்டு விதமான விவரிப்புடன் தொடங்குகிறது. அவர் கிறிஸ்துவின் மூலம் தம்முடைய ஆக்கினைத் தீர்ப்புக்குத் தகுதியுள்ளோரிடம் பொறுமையையும் தயவையும் காட்டியிருக்கிறார்.”
நீங்கள் விளக்க முடியுமா?
• என்ன வழிகளில் கிறிஸ்து நீடிய பொறுமைக்கு அருமையான முன்மாதிரியாக திகழ்கிறார்?
• நீடிய பொறுமையை வளர்த்துக்கொள்ள எது நமக்கு உதவும்?
• நீடிய பொறுமை எவ்வாறு குடும்பங்களுக்கு, கிறிஸ்தவ சமுதாயங்களுக்கு, மூப்பர்களுக்கு உதவுகிறது?
• நாம் நீடிய பொறுமையோடு இருப்பது எவ்வாறு நமக்கும் பிறருக்கும் நன்மை அளிக்கலாம்?
[பக்கம் 15-ன் படம்]
பெரும் அழுத்தத்தின் கீழும், இயேசு தம்முடைய சீஷர்களிடம் பொறுமையாயிருந்தார்
[பக்கம் 16-ன் படம்]
கிறிஸ்தவ கண்காணிகள் தங்கள் சகோதரர்களோடு நடந்துகொள்ளும் முறைகளில் நீடிய பொறுமைக்கு சிறந்த முன்மாதிரியாக இருக்கும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள்
[பக்கம் 17-ன் படம்]
யெகோவாவின் அன்பையும் நீடிய பொறுமையையும் பின்பற்றினால் நாம் நற்செய்தியைத் தொடர்ந்து பிரசங்கிப்போம்
[பக்கம் 18-ன் படம்]
‘சந்தோஷத்தோடுகூடிய நீடிய பொறுமையுடன்’ கிறிஸ்தவர்கள் இருக்கும்படி பவுல் ஜெபித்தார்