நீங்கள் இயேசுவிடம் ஜெபிக்கவேண்டுமா?
சில மக்கள் இயேசுவிடம் ஜெபிப்பதைச் சரியானதாகக் கருதுகிறார்கள். ஜெர்மனியில், அநேகர் தாங்கள் பிள்ளைகளாக இருந்தபோது, உணவைச் சாப்பிடுவதற்கு முன் தங்கள் கைகளைக் கூப்பி இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி சொல்லும்படி கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பைபிளின்படி, இயேசு உண்மையிலேயே பரலோகத்தில் ஒரு மிக உயர்ந்த நிலையில் இருக்கிறார். என்றபோதிலும், அதுதானே நாம் அவரிடம் ஜெபிக்கவேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறதா? இயேசுவிடமுள்ள அன்பின் காரணமாக அவருக்கு ஜெபங்களை ஏறெடுப்பவர்களுள் நீங்கள் இருக்கக்கூடும்; ஆனால், இயேசு தாமே அப்படிப்பட்ட ஜெபங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்?
முதலாவதாக, இந்தக் கேள்விகள்தானே ஏன் எழும்புகின்றன? ஏனென்றால், யெகோவா தேவன் ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்று பைபிள் சொல்லுகிறது. அப்படியானால், பண்டை காலத்தில் கடவுளுடைய ஊழியக்காரராயிருந்த இஸ்ரவேலரைப் போன்றோர் சர்வவல்லமையுள்ளவராகிய யெகோவா தேவனிடம் மட்டுமே ஜெபித்தனர் என்பதில் ஆச்சரியமேதுமில்லை.—சங்கீதம் 5:1, 2; 65:2.
மனிதகுலத்தைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்பதற்காகக் கடவுளின் குமாரனாகிய இயேசு பூமிக்கு வந்தபோது காரியங்கள் மாறினவா? இல்லை, ஜெபங்கள் இன்னும் யெகோவாவிடம் செய்யப்பட்டவையாகவே இருந்தன. பூமியில் இருந்தபோது இயேசுதாமே தம்முடைய பரலோகத் தகப்பனிடம் அடிக்கடி ஜெபம் செய்தார்; அவ்வாறு செய்யும்படி மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தார். கர்த்தருடைய ஜெபம் அல்லது பரமண்டல ஜெபம் என்று சிலசமயங்களில் அழைக்கப்படுகிற, உலகத்திலேயே மிக நன்றாக அறியப்பட்டிருக்கிற மாதிரி ஜெபத்தைப் பற்றி சற்று யோசித்துப் பாருங்கள். இயேசு, தம்மிடம் ஜெபிக்கும்படி நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லை; அவர் நமக்கு இந்த மாதிரியைக் கொடுத்தார்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.”—மத்தேயு 6:6, 9; 26:39, 42.
இப்போது, உண்மையில் ஜெபம் என்றால் என்ன என்பதை ஆராய்வதன்மூலம் அந்தப் பொருளைக்குறித்து முழுமையாகச் சிந்திப்போம்.
ஜெபம் என்றால் என்ன?
ஒவ்வொரு ஜெபமும் ஒரு வகையான வழிபாடாக இருக்கிறது. தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா பின்வருமாறு சொல்வதன்மூலம், இதை உறுதிப்படுத்துகிறது: “ஜெபம் என்பது ஒரு வகையான வழிபாடாக இருக்கிறது; அதில் ஒருவர் பக்தியை, நன்றியை, பாவ அறிக்கையை, அல்லது மன்றாட்டை கடவுளிடம் அளிக்கக்கூடும்.”
ஒரு சந்தர்ப்பத்தில் இயேசு சொன்னார்: “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக.” வழிபாடும்—அதன் காரணமாக ஜெபங்களும்—தம் தகப்பனாகிய யெகோவா தேவனுக்கு மட்டுமே செலுத்தப்படுவதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உண்மையை இயேசு கடைப்பிடித்தார்.—லூக்கா 4:8; 6:12.
இயேசுவை நம்முடைய ஜெபங்களில் ஏற்றுக்கொள்ளுதல்
இயேசு மனிதகுலத்திற்கு ஒரு மீட்பின் கிரய பலியாக மரித்து, கடவுளால் உயிர்த்தெழுப்பப்பட்டு, ஒரு மேன்மையான நிலைக்கு உயர்த்தப்பட்டார். நீங்கள் நினைத்துப் பார்க்கக்கூடியபடி, ஏற்றுக்கொள்ளப்படத்தக்க ஜெபங்களைக் குறித்ததில் இவை யாவும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தன. என்ன வழியில்?
இயேசுவின் நிலை, ஜெபத்தின்மீது செலுத்தக்கூடிய பெருஞ்செல்வாக்கை அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு விளக்குகிறார்: “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.”—பிலிப்பியர் 2:9-11.
“இயேசுவின் நாமத்தில் . . . முழுங்கால் யாவும் முடங்கும்படி” என்ற வார்த்தைகள் நாம் அவரிடம் ஜெபிக்க வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகின்றனவா? இல்லை. இங்குள்ள கிரேக்க சொற்றொடர் “முழங்காலை முடங்குவோர் யாவரும் எந்தப் பெயரின்பேரில் ஒன்றுபடுகிறார்களோ அதைக் குறிக்கிறது, அதன் பேரில் ஒன்றுபட்ட யாவரும் (πᾶν γόνυ) வழிபடுகிறார்கள். இயேசு பெற்றிருக்கிற அந்தப் பெயர் எல்லாரையும் ஒன்றுபட்ட வணக்கத்திற்குத் தூண்டியிருக்கிறது.” (G. B. வைனரின் புதிய ஏற்பாட்டு மரபுச் சொற்றொடர் இலக்கணம், [ஆங்கிலம்]) உண்மையில், ஒரு ஜெபம் ஏற்கத்தக்கதாக இருக்கவேண்டுமானால், அது “இயேசுவின் நாமத்தில்” செய்யப்படவேண்டும்; என்றபோதிலும், அது யெகோவாவிடம் செலுத்தப்பட்டு, அவருடைய மகிமைக்கு ஏற்றவாறு அமைகிறது. இந்தக் காரணத்திற்காக பவுல் சொல்லுகிறார்: “எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.”—பிலிப்பியர் 4:6.
ஒரு பாதை, முடிவான ஒரு இடத்திடமாக வழிநடத்துவதுபோல, சர்வவல்லமையுள்ள கடவுளிடமாக வழிநடத்தும் “வழி”யாக இயேசு இருக்கிறார். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்,” என்று இயேசு அப்போஸ்தலர்களுக்குக் கற்பித்தார். (யோவான் 14:6) இதன் காரணமாக, நாம் நம்முடைய ஜெபங்களை இயேசுவின் மூலமாக ஏறெடுக்கவேண்டும், நேரடியாக இயேசுவிடம் அல்ல.a
‘ஆனால், சீஷனாகிய ஸ்தேவானும் அப்போஸ்தலன் யோவானும் பரலோகத்தில் இயேசுவிடம் பேசினதாக பைபிள் தெரிவிக்கவில்லையா?’ என்று சிலர் கேட்கக்கூடும். அது உண்மையே. என்றபோதிலும், இந்தச் சம்பவங்கள் ஜெபங்களை உட்படுத்தவில்லை; ஏனென்றால் தரிசனத்தில் ஸ்தேவானும் யோவானும் நேரடியாக இயேசுவைக் கண்டு அவரோடு பேசினர். (அப்போஸ்தலர் 7:56, 59; வெளிப்படுத்துதல் 1:17-19; 22:20) கடவுளிடம்கூட வெறுமனே பேசுவதுதானே ஜெபமாவதில்லை என்பதை ஞாபகத்தில் வையுங்கள். ஆதாமும் ஏவாளும் ஏதேனில் பாவம் செய்ததைத் தொடர்ந்து கடவுள் அவர்களுக்கு நியாயத்தீர்ப்பளித்தபோது, அவர்கள் தங்களுடைய பெரிய பாவத்திற்குச் சாக்குப்போக்குகளை அளித்து அவரிடம் பேசினார்கள். அந்த விதத்தில் அவர்கள் அவரிடம் பேசியது ஜெபம் அல்ல. (ஆதியாகமம் 3:8-19) எனவே, ஸ்தேவான் அல்லது யோவான் இயேசுவிடம் பேசியதை, நாம் உண்மையில் அவரிடம் ஜெபிக்க வேண்டும் என்பதற்கு அத்தாட்சியாகக் காட்டுவது சரியல்ல.
இயேசுவின் பெயரின் ‘பேரில் கூப்பிடப்படுவது’ எப்படி?
இயேசுவிடம் ஜெபிப்பது சரி என்று இன்னும் நினைத்துக்கொண்டு, தொடர்ந்து சந்தேகங்களைக் கொண்டிருக்கிறீர்களா? உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளை அலுவலகம் ஒன்றிற்கு ஒரு பெண்மணி இவ்வாறு எழுதினார்: “கவலைக்குரியவிதத்தில், முதல் கிறிஸ்தவர்கள் இயேசுவிடம் ஜெபிக்கவில்லை என்று என்னால் இன்னும் நம்பமுடியவில்லை.” ‘நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் [நாமத்தின் பேரில் எங்கும் கூப்பிட்டுக்கொண்டிருக்கிற, NW] அனைவரையும்’ பற்றி பவுல் 1 கொரிந்தியர் 1:2-ல் குறிப்பிட்ட வார்த்தைகளை அவர்கள் மனதில் கொண்டிருந்தார்கள். என்றபோதிலும், “பேரில் கூப்பிடுதல்” என்ற கூற்று, அதன் மூல மொழியில், ஜெபம் அல்லாமல் மற்ற காரியங்களையும் குறிக்கலாம்.
எங்கும் கிறிஸ்துவின் நாமத்தின் ‘பேரில் கூப்பிடப்படுவது’ எப்படி? நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் அவரை மேசியாவாகவும் “உலகரட்சகராக”வும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டு, அவருடைய பேரில் அநேக அற்புதகரமான செயல்களையும் நடப்பித்தது ஒரு வழியாகும். (1 யோவான் 4:14; அப்போஸ்தலர் 3:6; 19:5) ஆகவே, “நம்முடைய கர்த்தரின் பேரில் கூப்பிடுதல் . . . என்ற கூற்று அவரிடம் ஜெபிப்பதற்கு மாறாக அவருடைய கர்த்தத்துவத்தை அறிவிப்பதை அர்த்தப்படுத்துகிறது,” என்று தி இன்டர்பிரட்டர்ஸ் பைபிள் குறிப்பிடுகிறது.
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, பாவமன்னிப்பைச் சாத்தியமானதாக்கும் அவருடைய சிந்தப்பட்ட இரத்தத்தில் விசுவாசம் வைப்பதும், ‘நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்துவின் நாமத்தின் பேரில் கூப்பிடுவதை’ அர்த்தப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 10:43-ஐ 22:16, NW-வுடன் ஒப்பிடவும்.) மேலும் நாம் எப்போதெல்லாம் இயேசுவின் மூலமாகக் கடவுளிடம் ஜெபிக்கிறோமோ அப்போதெல்லாம் அவருடைய பெயரை சொல்லர்த்தமாகவே பயன்படுத்துகிறோம். ஆகவே, நாம் இயேசுவின் நாமத்தின் பேரில் கூப்பிட முடியும் என்று காண்பிக்கையில், நாம் அவரிடம் ஜெபிக்க வேண்டும் என்பதாக பைபிள் குறிப்பிடுவதில்லை.—எபேசியர் 5:20; கொலோசெயர் 3:17.
இயேசு நமக்கு என்ன செய்ய முடியும்
இயேசு தெளிவாக தம்முடைய சீஷர்களுக்கு வாக்களித்தார்: “என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.” இது அவரிடம் ஜெபிப்பதைத் தேவைப்படுத்துகிறதா? இல்லை. நாம் கேட்பது யெகோவா தேவனிடமாகத் திருப்பப்பட்டிருக்கிறது—ஆனால் இயேசுவின் நாமத்தில் கேட்கப்படுகிறது. (யோவான் 14:13, 14; 15:16) கடவுளுடைய குமாரனாகிய இயேசு, தம்முடைய பெரும் வல்லமையையும் அதிகாரத்தையும் நம் சார்பாகப் பிரயோகிக்கும்படி நாம் கடவுளிடம் மன்றாடுகிறோம்.
இயேசு, இன்று தம்மை உண்மையாகப் பின்பற்றுகிறவர்களிடம் எவ்வாறு தொடர்பு கொள்ளுகிறார்? அபிஷேகம் செய்யப்பட்டோராலான சபையைப் பற்றிய பவுலின் விளக்கம் ஒரு உதாரணமாக அமையக்கூடும். அவர் அதை ஒரு சரீரத்திற்கும் இயேசு கிறிஸ்துவை தலைக்கும் ஒப்பிட்டார். “கணுக்களாலும் கட்டுகளாலும்” அல்லது அவருடைய சபைக்கு ஆவிக்குரிய ஊட்டச்சத்தையும் வழிநடத்துதலையும் கொடுப்பதற்கான வழிமுறைகளாலும் ஏற்பாடுகளாலும் ஆவிக்குரிய சரீரத்தின் அங்கத்தினர்களுடைய தேவைகளைத் “தலை” அளிக்கிறது. (கொலோசெயர் 2:18) அதேவிதமாகவே, சபையை முன்நின்று வழிநடத்துவதற்கும், தேவை ஏற்படும்போது சிட்சையைக் கொடுப்பதற்கும்கூட, இன்று இயேசு ‘மனித வடிவில் வரங்களை’ அல்லது ஆவிக்குரிய விதத்தில் தகுதிபெற்ற ஆண்களைப் பயன்படுத்துகிறார். இயேசுவுடன் நேரடியாகப் பேச்சுத்தொடர்பு கொள்வதற்கோ அவரிடம் ஜெபிப்பதற்கோ சபையிலுள்ள அங்கத்தினர்களுக்கு எவ்வித ஏற்பாடும் இல்லை, ஆனால் அவர்கள் நிச்சயமாக—ஆம், கண்டிப்பாக—இயேசுவின் பிதாவாகிய யெகோவா தேவனிடம் ஜெபம் செய்யவேண்டும்.—எபேசியர் 4:8-10, 12, 13.
நீங்கள் எப்படி இயேசுவுக்குக் கனம்செலுத்துவீர்கள்?
மனிதர்களுடைய இரட்சிப்பைக் குறித்ததில், இயேசு என்னே ஒரு முக்கிய பாகத்தை ஏற்கிறார்! அப்போஸ்தலன் பேதுரு வியந்து கூறினார்: “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.” (அப்போஸ்தலர் 4:12) இயேசுவின் நாமத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
தனிப்பட்டவிதத்தில் இயேசுவிடம் ஜெபங்களைச் செய்யாமல் இருப்பதால், நாம் அவருடைய நிலையைத் தரக்குறைவாக்குவதில்லை. மாறாக, அவருடைய பெயரில் நாம் ஜெபிக்கும்போது இயேசு கனம்செலுத்தப்படுகிறார். மேலும் கீழ்ப்படிவதன்மூலம், பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கனம்செலுத்துவதுபோல, நாம் இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன்மூலம், முக்கியமாக ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவேண்டும் என்ற புதிய கட்டளைக்குக் கீழ்ப்படிவதன்மூலம் நாம் அவருக்குக் கனம் செலுத்துகிறோம்.—யோவான் 5:22, 23; 13:34.
ஏற்கத்தக்க ஜெபங்கள்
ஏற்கத்தக்க ஜெபங்களை ஏறெடுக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால் அவற்றை யெகோவா தேவனிடமாகச் செய்யுங்கள்; மேலும் அவருடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் அவ்வாறு செய்யுங்கள். கடவுளுடைய சித்தத்தை அறிந்துகொள்ளுங்கள்; உங்கள் ஜெபங்கள் அப்படிப்பட்ட புரிந்துகொள்ளுதலை வெளிக்காட்டட்டும். (1 யோவான் 3:21, 22; 5:14) சங்கீதம் 66:20-லுள்ள வார்த்தைகளிலிருந்து பெலனடையுங்கள்: “என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.”
நாம் பார்த்தபடி, ஜெபங்கள், தனிப்பட்டவிதத்தில் சர்வவல்லவருக்கு மட்டுமே உரியதான ஒருவகையான வழிபாடாக இருக்கின்றன. யெகோவா தேவனிடமாக நம்முடைய எல்லா ஜெபங்களையும் செய்வதன்மூலம், “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே,” என்று ஜெபம் செய்வதற்கான இயேசுவின் கட்டளையை நாம் கவனத்தில் கொண்டிருக்கிறோம் என்பதைக் காண்பிக்கிறோம்.—மத்தேயு 6:9.
[அடிக்குறிப்புகள்]
a இயேசுவை சிலர் கடவுளாக நம்புவதால் அவரிடம் ஜெபிக்கக்கூடும். ஆனால் இயேசு கடவுளுடைய குமாரன்; அவர் தாமே தம் பிதாவாகிய யெகோவாவை வழிபட்டார். (யோவான் 20:17) இந்தப் பொருளின் பேரிலான விவரமான கலந்தாலோசிப்புக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? என்ற சிற்றேட்டைப் பார்க்கவும்.