‘உங்களிடையே கடினமாக உழைக்கிறவர்களை மதியுங்கள்’
‘உங்களிடையே கடினமாக உழைத்து, நம் எஜமானருடைய சேவையில் உங்களை வழிநடத்தி, உங்களுக்குப் புத்திசொல்கிற சகோதரர்களிடம் மதிப்பு மரியாதையோடு நடந்துகொள்ளுங்கள்.’ —1 தெ. 5:12.
1, 2. (அ) தெசலோனிக்கே சபையாருக்கு பவுல் தன்னுடைய முதல் கடிதத்தை எழுதியபோது அவர்கள் என்ன நிலையில் இருந்தார்கள்? (ஆ) தெசலோனிக்கேயர்களை என்ன செய்யும்படி பவுல் உற்சாகப்படுத்தினார்?
முதல் நூற்றாண்டிலிருந்த தெசலோனிக்கே சபையில் நீங்கள் இருந்ததாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்; அது ஐரோப்பாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட சபைகளில் ஒன்று. அந்தச் சபையிலிருந்த சகோதரர்களை ஆன்மீக ரீதியில் பலப்படுத்துவதற்கு நிறைய நேரத்தை அப்போஸ்தலன் பவுல் செலவிட்டிருந்தார். மற்ற சபைகளில் செய்தது போலவே இங்கும் அவர் மூப்பர்களை நியமித்திருக்கலாம். (அப். 14:23) ஆனால், தெசலோனிக்கே சபை உருவான பிறகு பவுலையும் சீலாவையும் அந்த நகரத்தைவிட்டுத் துரத்த கலகக் கும்பல் ஒன்றை யூதர்கள் ஏற்படுத்தினார்கள். அப்போது, அந்த நகரத்திலிருந்த கிறிஸ்தவர்கள் கைவிடப்பட்டதைப் போல் உணர்ந்திருக்கலாம், பயந்தும் போயிருக்கலாம்.
2 தெசலோனிக்கே நகரைவிட்டு வந்த பிறகு, அங்கு உருவாகியிருந்த புதிய சபையைப் பற்றி பவுல் கவலைப்பட்டிருக்கலாம். அங்கு மீண்டும் போக அவர் முயற்சி செய்தார்; ஆனால், அவருடைய வழியில் ‘சாத்தான் குறுக்கிட்டான்.’ எனவே, அந்தச் சபையாரை உற்சாகப்படுத்த அவர் தீமோத்தேயுவை அனுப்பினார். (1 தெ. 2:18; 3:2) நல்ல செய்தியோடு தீமோத்தேயு திரும்பி வந்தபோது, தெசலோனிக்கேயர்களுக்கு ஒரு கடிதத்தை எழுத பவுல் தூண்டப்பட்டார். மற்ற காரியங்களோடுகூட, ‘அவர்களை வழிநடத்துகிற . . . சகோதரர்களிடம் மதிப்பு மரியாதையோடு நடந்துகொள்ளும்படி’ உற்சாகப்படுத்தியும் அவர் எழுதினார்.—1 தெசலோனிக்கேயர் 5:12, 13-ஐ வாசியுங்கள்.
3. என்ன காரணங்களால் தெசலோனிக்கேயிலிருந்த கிறிஸ்தவர்கள் தங்களுடைய மூப்பர்களை மிக உயர்வாய்க் கருத வேண்டியிருந்தது?
3 தெசலோனிக்கேயிலிருந்த கிறிஸ்தவர்களை வழிநடத்தி வந்த மூப்பர்கள் பவுலையும் அவருடைய பயணத் தோழர்களையும் போல் அனுபவசாலிகளாக இருக்கவில்லை; எருசலேமிலிருந்த மூப்பர்களைப் போல் அவர்கள் பல வருடங்களாக சத்தியத்தில் இருக்கவில்லை. சொல்லப்போனால், அந்தச் சபை உருவாகி ஒரு வருடம்கூட ஆகவில்லை! என்றாலும், அந்தச் சபையார் தங்களுடைய மூப்பர்களுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டியிருந்தது; ஏனென்றால், அவர்கள் “கடினமாக உழைத்து,” “வழிநடத்தி,” ‘புத்திசொல்லி வந்தார்கள்.’ எனவே, அவர்களை அந்தச் சபையார் ‘மிக உயர்வாய்க் கருதி, அவர்கள்மீது அன்பு காட்ட’ வேண்டியிருந்தது. பவுல் இதைச் சொன்ன பிறகு, “ஒருவரோடொருவர் சமாதானமாகுங்கள்” என்றும் கேட்டுக்கொண்டார். நீங்கள் தெசலோனிக்கேயில் இருந்திருந்தால், அந்த மூப்பர்களுடைய வேலைக்கு உள்ளப்பூர்வமான நன்றியைக் காட்டியிருப்பீர்களா? உங்கள் சபையில் கிறிஸ்துவின் மூலம் கடவுள் இந்த ‘மனிதர்களைப் பரிசுகளாக’ கொடுத்திருப்பதைக் குறித்து எப்படி உணருகிறீர்கள்?—எபே. 4:8.
‘கடினமாக உழைக்கிறவர்கள்’
4, 5. பவுலின் நாட்களில் சபையாருக்குக் கற்பிக்க மூப்பர்கள் ஏன் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது, இன்றும் ஏன் மூப்பர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது?
4 தெசலோனிக்கேயிலிருந்த மூப்பர்கள் பவுலையும் சீலாவையும் பெரோயா நகருக்கு அனுப்பிய பிறகு எவ்விதத்தில் ‘கடினமாக உழைத்தார்கள்’? அவர்கள் பவுலைப் பின்பற்றி, வேதவசனங்களிலிருந்து சபையாருக்குக் கற்பித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ‘தெசலோனிக்கே கிறிஸ்தவர்களுக்குக் கடவுளுடைய வார்த்தைமீது மதிப்பு இருந்ததா?’ என நீங்கள் யோசிக்கலாம். ஏனென்றால், பெரோயாவில் இருந்த யூதர்கள் ‘தெசலோனிக்கேயில் இருந்த யூதர்களைவிடப் பரந்த மனப்பான்மை உள்ளவர்களாக, . . . தினந்தோறும் வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தார்கள்’ என பைபிள் சொல்கிறதே என நீங்கள் நினைக்கலாம். (அப். 17:11) ஆனால், தெசலோனிக்கேயில் இருந்த யூதர்களைப் பற்றித்தான் பவுல் குறிப்பிட்டாரே தவிர, அங்கிருந்த கிறிஸ்தவர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அந்தக் கிறிஸ்தவர்களோ, ‘கடவுளுடைய வார்த்தையை . . . மனிதருடைய வார்த்தையாக அல்லாமல் கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டார்கள்.’ (1 தெ. 2:13) அப்படிப்பட்டவர்களை ஆன்மீக ரீதியில் போஷிக்க மூப்பர்கள் கடினமாக உழைத்திருக்க வேண்டும்.
5 இன்று, உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் கடவுளுடைய மந்தைக்கு ‘ஏற்ற வேளையில் உணவளிக்கிறார்கள்.’ (மத். 24:45) சபையாருக்கு ஏராளமான பைபிள் பிரசுரங்களை வழங்குகிறார்கள்; சில மொழிகளில் உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் மற்றும் சிடி-ராமில் உவாட்ச் டவர் லைப்ரரி ஆகியவை கிடைக்கின்றன. இந்த அடிமை வகுப்பாருடைய வழிநடத்துதலின்கீழ், மூப்பர்கள் தங்கள் சபையிலுள்ள சகோதர சகோதரிகளுக்கு ஆன்மீக உணவளிக்கக் கடினமாக உழைக்கிறார்கள். சபையாரின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவர்கள் பல மணிநேரங்களைச் செலவிடுகிறார்கள்; கூட்டங்களில் அர்த்தமுள்ள விதத்தில் பேச்சுகள் கொடுப்பதற்காக மணிக்கணக்காய்த் தயாரிக்கிறார்கள். அவர்கள் கூட்டங்களிலும், அசெம்பிளிகளிலும், மாநாடுகளிலும் பேச்சுகள் கொடுக்க எத்தனை மணிநேரம் தயாரிக்கிறார்கள் என யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
6, 7. (அ) தெசலோனிக்கேயிலிருந்த மூப்பர்களுக்கு பவுல் எவ்வாறு அருமையான முன்மாதிரியாக இருந்தார்? (ஆ) பவுலின் முன்மாதிரியைப் பின்பற்ற இன்றுள்ள மூப்பர்கள் ஏன் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டியிருக்கலாம்?
6 மந்தையை மேய்ப்பதில் பவுலின் அருமையான முன்மாதிரியை தெசலோனிக்கேயிலிருந்த மூப்பர்கள் மனதில் வைத்திருந்தார்கள். பவுல் ஏதோ கடமைக்காக மந்தையை மேய்க்கவில்லை. சென்ற கட்டுரையில் பார்த்தபடி, ‘பாலூட்டுகிற தாய் தன் குழந்தைகளை நெஞ்சார நேசிப்பதுபோல் அவர்களை நேசித்து அவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டார்.’ (1 தெசலோனிக்கேயர் 2:7, 8-ஐ வாசியுங்கள்.) அவர்களுக்காகத் தன்னுடைய ‘உயிரையே கொடுப்பதற்கு’ அவர் மனமுள்ளவராக இருந்தார்! அங்கிருந்த மூப்பர்கள் அவரைப் போலவே மந்தையை மேய்க்க வேண்டியிருந்தது.
7 இன்றுள்ள கிறிஸ்தவ மேய்ப்பர்கள் மந்தையை நெஞ்சார நேசிப்பதன் மூலம் பவுலைப் பின்பற்றுகிறார்கள். அன்போடும் நட்போடும் பழகும் இயல்பு சில ஆடுகளுக்கு இல்லாதிருக்கலாம். என்றாலும், மூப்பர்கள் விவேகத்தோடு செயல்பட்டு, அவர்களிடம் ‘நல்லதைக் கண்டுபிடிக்க’ முயலுகிறார்கள். (நீதி. 16:20, NW) மூப்பர்கள் அபூரணர்களாக இருப்பதால் மற்றவர்களிடம் நல்லதைக் காண மிகுந்த முயற்சி எடுக்க வேண்டியிருக்கலாம். ஆனாலும், அவர்கள் தங்களால் முடிந்தவரை எல்லாரிடமும் மென்மையாக நடந்துகொள்வதைப் பார்க்கையில், நாம் அவர்களைப் பாராட்ட வேண்டாமா? ஆம், கிறிஸ்துவுடைய தலைமையின்கீழ் நல்ல மேய்ப்பர்களாக இருக்க அவர்கள் எடுக்கும் முயற்சியைப் பாராட்ட வேண்டும், அல்லவா?
8, 9. இன்றுள்ள மூப்பர்கள் ‘நம்மைக் காத்து வருகிற’ வழிகளில் சில யாவை?
8 நாம் அனைவரும் மூப்பர்களுக்கு ‘அடிபணிந்து நடக்க’ வேண்டும்; ஏனென்றால், அவர்கள் ‘நம்மைக் காத்து வருகிறார்கள்’ என்று பவுல் எழுதினார். (எபி. 13:17) இந்த வார்த்தைகளை வாசிக்கும்போது, நிஜமான மேய்ப்பர்கள் ராத்திரி தூங்காமல் விழித்திருந்து தங்கள் மந்தையைப் பாதுகாப்பது நம் நினைவுக்கு வரலாம். அதுபோலவே, இன்றுள்ள மூப்பர்கள் சபையிலுள்ளவர்களுக்கு உதவ தங்கள் தூக்கத்தைத் தியாகம் செய்கிறார்கள்; உடல் ரீதியிலோ, உணர்ச்சி ரீதியிலோ, ஆன்மீக ரீதியிலோ கஷ்டப்படுகிறவர்களைக் கண்விழித்துப் பார்த்துக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்களிலுள்ள சகோதரர்கள், தாங்கள் அவசரமாக அழைக்கப்படும்போது ராத்திரி என்றும் பார்க்காமல் உடனடியாக எழுந்து செல்கிறார்கள். நமக்கு அப்படிப்பட்ட அவசர உதவி தேவைப்படும்போது அவர்களுடைய சேவைக்கு எவ்வளவாய் நன்றி சொல்வோம்!
9 ராஜ்ய மன்ற கட்டுமானத்திலும் நிவாரணப் பணியிலும் ஈடுபடுகிற மூப்பர்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவ கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் நம்முடைய உள்ளப்பூர்வமான ஆதரவைப் பெறத் தகுதியானவர்கள்! 2008-ல் நார்கிஸ் சூறாவளி மயன்மாரைத் தாக்கிய பிறகு மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணியைப் பற்றிக் கவனியுங்கள். ஐராவதி ஆற்றின் கழிமுகப் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது; அங்கிருந்த போத்திங்கோன் சபைக்குச் செல்ல நிவாரணக் குழுவினர் இடிபாடுகளையும் சடலங்களையும் கடந்து போனார்கள். முதன்முதலாக போத்திங்கோனுக்கு வந்து சேர்ந்த நிவாரணக் குழுவினரில் தங்களுடைய முன்னாள் வட்டாரக் கண்காணியும் இருந்ததைக் கவனித்த சகோதரர்கள், “அதோ! நம்முடைய வட்டாரக் கண்காணி! யெகோவா நம்மைக் காப்பாற்றிவிட்டார்!” என்று சந்தோஷமாகச் சொன்னார்கள். மூப்பர்கள் இராப்பகலாகச் செய்யும் கடின வேலையை நீங்கள் மதிக்கிறீர்களா? சில மூப்பர்கள் சிக்கலான நீதிவிசாரணைகள் செய்வதற்கு விசேஷக் குழுக்களில் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்களுடைய சாதனைகளைப் பற்றி பெருமையடிப்பதில்லை; என்றாலும், இவர்களுடைய சேவைக்காக மற்ற சகோதரர்கள் மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.—மத். 6:2-4.
10. மற்றவர்களுடைய கவனத்திற்கு வராத வேறு என்னென்ன வேலைகளை மூப்பர்கள் செய்கிறார்கள்?
10 இன்று மூப்பர்களுக்கு பல எழுத்து வேலைகளும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வாராந்தரக் கூட்டங்களில் யார் யார் என்னென்ன பகுதிகளைக் கையாள வேண்டுமென நியமிக்கிறார். சபை செயலர் மாதா மாதமும் வருடா வருடமும் வெளி ஊழிய அறிக்கைகளைத் தொகுக்கிறார். பள்ளி கண்காணி பள்ளி அட்டவணையை அலசி ஆராய்ந்து பேச்சுகளை நியமிக்கிறார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சபை கணக்குகள் தணிக்கை செய்யப்படுகின்றன. மூப்பர்கள் கிளை அலுவலகத்திலிருந்து வரும் கடிதங்களை வாசித்து, அதில் சொல்லப்பட்டபடி செய்கிறார்கள்; இது, ‘விசுவாசத்தில் ஒன்றுபட்டிருப்பதற்கு’ உதவுகிறது. (எபே. 4:3, 13) கடின உழைப்பாளிகளான மூப்பர்கள் எடுக்கும் அப்படிப்பட்ட முயற்சிகளால், ‘எல்லாக் காரியங்களும் கண்ணியமாகவும் ஒழுங்காகவும் நடைபெறுகின்றன.’—1 கொ. 14:40.
‘உங்களை வழிநடத்துகிறவர்கள்’
11, 12. சபையை யார் வழிநடத்துகிறார்கள், அதில் என்ன உட்பட்டிருக்கிறது?
11 தெசலோனிக்கே சபையில் கடினமாக உழைத்த மூப்பர்கள் அந்தச் சபையாரை ‘வழிநடத்தியதாக’ பவுல் குறிப்பிட்டார். அதற்குரிய கிரேக்க வார்த்தை “முன்நின்று” என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது; ஆகவே, “வழிகாட்டுவது, தலைமைதாங்கி நடத்துவது” என்றெல்லாம் அதை மொழிபெயர்க்கலாம். (1 தெ. 5:12) அந்த மூப்பர்கள் ‘கடினமாக உழைத்து’ வந்ததாகவும் பவுல் குறிப்பிட்டார். அவர் ஒரேவொரு “நடத்தும் கண்காணியை” பற்றிச் சொல்லவில்லை, ஆனால் சபையிலிருந்த எல்லா மூப்பர்களைப் பற்றியும் சொன்னார். இன்று, பெரும்பாலான மூப்பர்கள் சபைக்கு முன்பாக நின்று கூட்டங்களை நடத்துகிறார்கள். சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றத்தின்படி, “நடத்தும் கண்காணி” என்ற வார்த்தைக்குப் பதிலாக “மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது; இது, ஒன்றுபட்ட ஒரே குழுவின் அங்கத்தினர்களாக எல்லா மூப்பர்களையும் கருத நமக்கு உதவுகிறது.
12 சபையாரை ‘வழிநடத்துவது’ கற்பிப்பதை மட்டுமே குறிப்பதில்லை. கிரேக்கில் அதே வார்த்தை 1 தீமோத்தேயு 3:4-லிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு கண்காணி “தன் குடும்பத்தைச் சிறந்த விதத்தில் நடத்துகிறவராகவும், மிகுந்த பொறுப்பும் கீழ்ப்படிதலும் உள்ள பிள்ளைகளை உடையவராகவும் இருக்க வேண்டும்” என்று பவுல் சொன்னார். இங்கே, ‘குடும்பத்தை நடத்துவதென்பது’ பிள்ளைகளுக்குக் கற்பிப்பதை மட்டுமல்லாமல், குடும்பத்தைத் தலைமை தாங்குவதையும் பிள்ளைகளை ‘கீழ்ப்படிகிறவர்களாக’ வளர்ப்பதையும் உட்படுத்துகிறது. ஆம், மூப்பர்கள் சபையைத் தலைமை தாங்கி நடத்தி, யெகோவாவுக்கு கீழ்ப்படிய அனைவருக்கும் உதவுகிறார்கள்.—1 தீ. 3:5.
13. மூப்பர்களுடைய கூட்டத்தில் ஒரு தீர்மானத்திற்கு வர ஏன் அதிக நேரம் தேவைப்படலாம்?
13 மந்தையை சிறந்த விதத்தில் மேய்ப்பதற்கு மூப்பர்கள் ஒன்றுகூடி சபையின் தேவைகளைப் பற்றிக் கலந்துபேசுகிறார்கள். ஒரேவொரு மூப்பர் எல்லாத் தீர்மானங்களையும் எடுப்பது சுலபமாகத்தான் இருக்கும். ஆனால், முதல் நூற்றாண்டிலிருந்த ஆளும் குழுவினரின் முன்மாதிரியைப் பின்பற்றி, இன்றைய மூப்பர் குழுவினர் விஷயங்களை மனந்திறந்து பேசுகிறார்கள், வேதவசனங்களின் அறிவுரையை நாடுகிறார்கள். தங்களுடைய சபையின் தேவைகளுக்கு ஏற்ப பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதே அவர்களுடைய குறிக்கோள். மூப்பர்களுடைய கூட்டங்களுக்கு ஒவ்வொரு மூப்பரும் நன்கு தயாரிக்கும்போது அந்தக் குறிக்கோளை அடைய முடியும்; அப்படித் தயாரிக்க அவர்கள் வசனங்களையும், அடிமை வகுப்பாரின் அறிவுரைகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதற்கு நிச்சயமாகவே நேரம் தேவை. முதல் நூற்றாண்டு ஆளும் குழுவினர் விருத்தசேதனத்தைப் பற்றிப் பேசியபோது கூடியிருந்தோர் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவியது போல் இப்போதும் மூப்பர்களிடையே கருத்து வேறுபாடு நிலவினால்? வசனங்களின் அடிப்படையில் ஒருமித்த தீர்மானத்திற்கு வர அதிக நேரமும் ஆராய்ச்சியும் தேவைப்படலாம்.—அப். 15:2, 6, 7, 12-14, 28.
14. மூப்பர் குழுவினர் ஒன்றுபட்டு உழைப்பதை நீங்கள் பாராட்டுகிறீர்களா, ஏன்?
14 மூப்பர்களில் ஒருவர் தான் சொல்கிறபடிதான் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துபவராகவோ, தான் நினைப்பதுதான் சரி என்று சாதிப்பவராகவோ இருந்தால் என்ன நடக்கும்? அல்லது, முதல் நூற்றாண்டிலிருந்த தியோத்திரேப்பு என்பவனைப் போல் யாராவது சபையில் பூசல் உண்டாக்குபவராக இருந்தால் என்ன நடக்கும்? (3 யோ. 9, 10) சபை முழுவதும் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. சாத்தான் முதல் நூற்றாண்டிலிருந்த சபையின் அமைதியைக் குலைக்க முயன்றான் என்றால், இன்றுள்ள சபையின் சமாதானத்தைக் குலைக்கவும் முயலுவான் என்பது உறுதி. அவன் மனிதனின் தன்னல மனப்பான்மையை அனுகூலப்படுத்திக்கொள்ளலாம்; உதாரணத்திற்கு, முதன்மை அடைய வேண்டுமென்ற விருப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆகவே, மூப்பர்கள் மனத்தாழ்மையை வளர்த்துக்கொண்டு, ஒன்றுபட்ட ஒரே குழுவினராகச் செயல்பட வேண்டும். இவ்விதத்தில் ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து உழைக்கும் மூப்பர்களின் மனத்தாழ்மையை நாம் எவ்வளவாய்ப் பாராட்டுகிறோம்!
‘புத்திசொல்கிறவர்கள்’
15. என்ன காரணத்தினால் மூப்பர்கள் ஒரு சகோதரருக்கோ சகோதரிக்கோ புத்திசொல்கிறார்கள்?
15 அதன்பின், பவுல் மூப்பர்களுடைய ஒரு கஷ்டமான, அதேசமயத்தில் முக்கியமான பொறுப்பைப் பற்றிக் குறிப்பிட்டார்; அதுதான் சபையினருக்குப் புத்திசொல்கிற பொறுப்பு. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பவுல் மட்டுமே ‘புத்திசொல்’ என்பதற்கான கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தினார். அது கடுமையான அறிவுரை கொடுப்பதைக் குறிக்கலாம், ஆனால் அதை வெறுப்போடு கொடுப்பதைக் குறிப்பதில்லை. (அப். 20:31; 2 தெ. 3:15) உதாரணமாக, கொரிந்தியர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்களை வெட்கப்படுத்துவதற்காக நான் இவற்றை எழுதவில்லை, என் அன்புக் கண்மணிகளாய் எண்ணி உங்களுக்குப் புத்திசொல்வதற்காகவே இவற்றை எழுதுகிறேன்.” (1 கொ. 4:14) ஆகவே, அவர் புத்திசொன்னதற்குக் காரணம் மற்றவர்கள் மீது வைத்திருந்த அன்பும் அக்கறையும்தான்.
16. மற்றவர்களுக்குப் புத்திசொல்லும்போது மூப்பர்கள் எதை நினைவில் வைக்கிறார்கள்?
16 புத்திசொல்கிற விதம் முக்கியம் என்பதை மூப்பர்கள் நினைவில் வைக்கிறார்கள். அவர்கள் பவுலைப் போலவே அன்போடும் அக்கறையோடும் கரிசனையோடும் நடந்துகொள்ள முயலுகிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 2:11, 12-ஐ வாசியுங்கள்.) அதேசமயத்தில், ‘உண்மையுள்ள வார்த்தையை உறுதியுடன் பற்றிக்கொண்டு, . . . பயனளிக்கும் போதனைகளின் மூலம் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.’—தீத். 1:5-9.
17, 18. ஒரு மூப்பர் உங்களுக்குப் புத்திசொல்லும்போது நீங்கள் எதைப் புரிந்துகொள்ள வேண்டும்?
17 மூப்பர்கள் அபூரணர்கள் என்பதும் சில சமயங்களில் யோசிக்காமல் பேசிவிட்டு பிற்பாடு வருத்தப்படலாம் என்பதும் உண்மைதான். (1 இரா. 8:46; யாக். 3:8) அதோடு, அறிவுரைகள் கேட்பது தங்களுடைய சகோதர சகோதரிகளுக்குப் பொதுவாக “சந்தோஷமாகத் தோன்றாது, துக்கமாகவே தோன்றும்” என்பதை மூப்பர்கள் அறிந்திருக்கிறார்கள். (எபி. 12:11) ஆகவே, ஒரு மூப்பர் நன்கு யோசித்த பிறகும், அதிகம் ஜெபம் செய்த பிறகுமே யாருக்காவது புத்திசொல்லத் தீர்மானிக்கலாம். உங்களுக்கு ஒரு மூப்பர் புத்திசொல்கிறார் என்றால், அவர் உங்கள்மீது வைத்திருக்கும் அன்பையும் அக்கறையையும் புரிந்துகொள்கிறீர்களா?
18 மருத்துவர்களால் விளக்க முடியாத ஏதோவொரு உடல்நலப் பிரச்சினை உங்களுக்கு இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். பின்பு ஒரு டாக்டர் அந்தப் பிரச்சினை என்னவென்று சரியாகக் கண்டுபிடித்துவிடுகிறார்; ஆனால், அதை ஏற்றுக்கொள்வது உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கலாம். அதற்காக, அந்த டாக்டரைக் கோபித்துக்கொள்வீர்களா? நிச்சயமாக மாட்டீர்கள்! மாறாக, நீங்கள் ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டுமென அவர் சொன்னாலும் அது உங்கள் நன்மைக்குத்தான் என புரிந்துகொண்டு ஒத்துக்கொள்வீர்கள். டாக்டர் அந்த விஷயத்தை உங்களிடம் சொன்ன விதம் ஒருவேளை உங்கள் உணர்ச்சிகளைப் புண்படுத்தியிருக்கலாம், ஆனால் அதை வைத்து தீர்மானம் எடுப்பீர்களா? மாட்டீர்கள். அதேபோல், உங்களுக்குப் புத்திசொல்லப்படும் விதம் உங்கள் உணர்ச்சிகளைப் புண்படுத்தினாலும் யெகோவாவும் இயேசுவும் பயன்படுத்துகிற சகோதரர்களின் அறிவுரையைக் கேட்க மறுக்காதீர்கள்; ஆன்மீக ரீதியில் உங்களுக்கு நீங்களே எவ்வாறு உதவிக்கொள்ளலாம் அல்லது உங்களை நீங்களே எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதை உங்களுக்குக் காட்ட அவர்கள் இருவரும் அந்தச் சகோதரர்களைப் பயன்படுத்தலாம்.
யெகோவா தந்திருக்கும் மூப்பர்களை மதியுங்கள்
19, 20. யெகோவா தந்திருக்கும் ‘பரிசுகளுக்கு’ நீங்கள் எவ்வாறு நன்றி காட்டலாம்?
19 யாராவது உங்களுக்கென்றே ஒரு விசேஷப் பரிசைக் கொடுத்தால் என்ன செய்வீர்கள்? அதைப் பயன்படுத்துவதன் மூலம் அதற்கு உங்கள் நன்றியைக் காட்டுவீர்கள், அல்லவா? இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவா உங்களுக்கென்றே தந்திருக்கும் ‘பரிசுகள்தான்’ மூப்பர்கள். இந்தப் பரிசுகளுக்கு நீங்கள் நன்றி காட்டுவதற்கான ஒரு வழி, மூப்பர்கள் கொடுக்கும் பேச்சுகளைக் கூர்ந்து கவனித்துக் கேட்டு, அவர்கள் சொல்கிறபடி நடக்க முயலுவதாகும். கூட்டங்களில் அர்த்தமுள்ள குறிப்புகளைச் சொல்வதன் மூலமும் நீங்கள் உங்கள் நன்றியைக் காட்டலாம். மூப்பர்கள் தலைமைதாங்கி நடத்தும் வேலைகளுக்கு உங்கள் ஆதரவைக் காட்டுங்கள்; உதாரணத்திற்கு, வெளி ஊழியத்திற்கு ஒத்துழைப்புக் கொடுங்கள். ஒரு மூப்பர் கொடுத்த அறிவுரையால் நீங்கள் பயனடைந்திருக்கிறீர்கள் என்றால், அதை ஏன் அவரிடம் தெரிவிக்கக் கூடாது? அதோடு, மூப்பர்களுடைய குடும்பத்தாருக்கும் உங்கள் பாராட்டைத் தெரிவிக்கலாம், அல்லவா? ஒரு மூப்பர் சபையில் கடினமாக உழைக்கிறார் என்றால், அவரது குடும்பத்தார் அவரோடு செலவிட முடிந்த நேரத்தைத் தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
20 ஆகவே, நம்மிடையே கடினமாக உழைத்து, நம்மை வழிநடத்தி, நமக்குப் புத்திசொல்கிற மூப்பர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க நமக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற இந்தப் ‘பரிசுகள்’ அவரது அன்புக்கு அடையாளம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
நினைவிருக்கிறதா?
• தெசலோனிக்கே சபையார் தங்களைத் தலைமைதாங்கி நடத்தியவர்களை ஏன் உயர்வாய் மதிக்க வேண்டியிருந்தது?
• உங்கள் சபையிலுள்ள மூப்பர்கள் உங்களுக்காக எவ்வாறு கடினமாக உழைக்கிறார்கள்?
• மூப்பர்கள் உங்களை வழிநடத்துவதால் நீங்கள் எவ்வாறு பயனடைகிறீர்கள்?
• ஒரு மூப்பர் உங்களுக்குப் புத்திசொல்லும்போது நீங்கள் எதைப் புரிந்துகொள்ள வேண்டும்?
[பக்கம் 27-ன் படம்]
மூப்பர்கள் பல வழிகளில் சபையை மேய்ப்பதை நீங்கள் மதிக்கிறீர்களா?