ராஜ்ய நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்!
“நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்.” —ரோமர் 12:12.
1. யெகோவாவின் கூட்டுறவில் நாம் ஏன் மகிழ்ச்சியை காணமுடியும்? பவுல் அப்போஸ்தலன் கிறிஸ்தவர்களை என்ன செய்யும்படியாக துரிதப்படுத்தினார்?
“நித்தியானந்த தேவன்.” (1 தீமோத்தேயு 1:11) இது யெகோவாவை எத்தனை நேர்த்தியாக வருணிக்கிறது! ஏன்? ஏனென்றால் அவருடைய கிரியைகள் அனைத்தும் அவருக்கு அதிகமான சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது. யெகோவா எல்லா நன்மையான மற்றும் மகிழ்ச்சிதரும் காரியங்களுக்கு ஊற்றுமூலராக இருப்பதன் காரணமாக, புத்திக்கூர்மையுள்ள அவருடைய எல்லா சிருஷ்டிகளும் அவரோடு தங்களுடைய கூட்டுறவில் மகிழ்ச்சியைக் காணலாம். யெகோவா தேவனை அறிந்துகொண்டிருக்கும் தங்கள் மகிழ்ச்சியான சிலாக்கியத்தை மதித்துணரும்படியும், அவருடைய சிருஷ்டிப்புகளின் மகத்தான எல்லா ஈவுகளுக்காக நன்றியுள்ளவர்களாயிருக்கும்படியும், அவர் அவர்களுக்குக் காண்பிக்கும் அவருடைய அன்புள்ள தயவில் மகிழ்ச்சி காணும்படியும் பவுல் அப்போஸ்தலன் கிறிஸ்தவர்களை துரிதப்படுத்தியது பொருத்தமாகவே இருக்கிறது. பவுல் எழுதினார்: “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.”—பிலிப்பியர் 4:4; சங்கீதம் 104:31.
2. என்ன நம்பிக்கை அதிகமான சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது? இந்த நம்பிக்கையின் சம்பந்தமாக கிறிஸ்தவர்கள் என்ன செய்யும்படியாக ஊக்குவிக்கப்படுகிறார்கள்?
2 பவுல் அளித்த இந்த அறிவுரைக்குக் கிறிஸ்தவர்கள் செவிசாய்க்கிறார்களா? நிச்சயமாகவே அவர்கள் செவிசாய்க்கிறார்கள்! இயேசு கிறிஸ்துவின் ஆவிக்குரிய சகோதரர்கள் கடவுள் தங்களுக்குத் திறந்துவைத்திருக்கும் மகத்தான நம்பிக்கையில் சந்தோஷமாயிருக்கிறார்கள். (ரோமர் 8:19-21; பிலிப்பியர் 3:20, 21) ஆம், கிறிஸ்துவோடு அவருடைய பரலோக ராஜ்ய அரசாங்கத்தில் சேவிப்பதன் மூலம் உயிருள்ளோரும் மரித்தோருமான மனிதவர்க்கத்தினுடைய எதிர்காலத்துக்கான தலைச்சிறந்த நம்பிக்கையை நிறைவேற்றுவதில் தாங்கள் பங்கு கொள்ளப் போவதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ராஜாக்களும் ஆசாரியர்களுமாக சேவிக்கும் உடன்-சுதந்தரவாளிகளாக தங்கள் சிலாக்கியத்தில் எவ்வளவு சந்தோஷமாயிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்! (வெளிப்படுத்துதல் 20:6) உண்மையுள்ள மனிதகுலம் பரிபூரணத்தை அடைய உதவி செய்து பரதீஸை நம்முடைய பூமிக்குத் திரும்ப நிலைநாட்டுவதை வழிநடத்த உதவி செய்கையில் அவர்களுடைய மகிழ்ச்சி எப்பேர்ப்பட்டதாக இருக்கும்! மெய்யாகவே கடவுளுடைய ஊழியர்கள் அனைவருக்கும் “பொய்யுரையாத தேவன் ஆதிகால முதல் வாக்குத்தத்தம் பண்ணின நித்திய ஜீவனின் நம்பிக்கைக்கு ஆதார”த்தை உடையவர்களாக இருக்கிறார்கள். (தீத்து 1:3) மகத்தான இந்த நம்பிக்கையை முன்னிட்டு, அப்போஸ்தலனாகிய பவுல் எல்லா கிறிஸ்தவர்களையும் இவ்வாறு ஊக்குவிக்கிறார்: “நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்.”—ரோமர் 12:12.a
மெய்யான மகிழ்ச்சி—இருதயத்தின் ஒரு குணம்
3, 4. (எ) “சந்தோஷப்படுவது” என்ற பதத்தின் பொருள் என்ன? கிறிஸ்தவர்கள் எவ்வளவு அடிக்கடி சந்தோஷமாயிருக்க வேண்டும்? (பி) மெய்யான மகிழ்ச்சி என்பது என்ன? அது எதன் மேல் சார்ந்திருக்கிறது?
3 “சந்தோஷமாயிருப்பது” என்பது மகிழ்ச்சியை உணருவதையும் வெளிக்காட்டுவதையும் அர்த்தப்படுத்துகிறது. அது கிளர்ச்சியுற்ற அல்லது உற்சாகமான ஒரு நிலையில் எப்போதுமிருப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. பைபிளில் “மகிழ்ச்சி” “ஆனந்தம்” மற்றும் “சந்தோஷம்” ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகளுக்கு இணையான வினைச்சொற்கள், மகிழ்ச்சியினுடைய உள்ளத்து உணர்ச்சிகளையும் வெளியே அதைக் காண்பிப்பதையும் ஆகிய இரண்டையும் அர்த்தப்படுத்துகிறது. கிறிஸ்தவர்கள் “தொடர்ந்து சந்தோஷமாயிருக்கவும்” [NW] “எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க”வும் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.—2 கொரிந்தியர் 13:11; 1 தெசலோனிக்கேயர் 5:16.
4 ஆனால் ஒருவர் எவ்விதமாக எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க முடியும்? இது கூடிய காரியம் ஏனென்றால், மெய்யான மகிழ்ச்சி இருதயத்தின் ஒரு குணமாக, ஆழமான ஓர் உள்ளார்ந்த குணமாக, ஆவிக்குரிய ஒன்றாக இருக்கிறது. (உபாகமம் 28:47; நீதிமொழிகள் 15:13; 17:22) இது அன்புக்கு அடுத்ததாக பவுல் வரிசைப்படுத்தின கடவுளுடைய ஆவியின் ஒரு கனியாகும். (கலாத்தியர் 5:22) இருதயத்தில் மறைந்திருக்கும் ஒரு குணமாக, அது வெளியேயுள்ள காரியங்களின் பேரில், நம்முடைய சகோதரர்களின் பேரிலும்கூட சார்ந்ததாக இல்லை. ஆனால் அது நிச்சயமாகவே கடவுளுடைய பரிசுத்த ஆவியின் மீது சார்ந்ததாக இருக்கிறது. உங்களிடம் சத்தியம், ராஜ்ய நம்பிக்கை இருப்பதையும், யெகோவாவுக்குப் பிரியமானதை நீங்கள் செய்வதையும் அறிந்திருப்பதால் கிடைக்கும் ஆழமான மனநிறைவிலிருந்து அது வருகிறது. ஆகவே சந்தோஷம் என்பது வெறுமனே நம்முடன் பிறந்த ஆள்தன்மையாக இல்லை; அது இயேசு கிறிஸ்துவை வித்தியாசப்படுத்திக் காண்பித்த கூட்டு குணங்களின், “புதிய ஆள்தன்மை”யின் பாகமாகும்.—எபேசியர் 4:24; கொலோசெயர் 3:10.
5. எப்பொழுது மற்றும் எவ்விதமாக மகிழ்ச்சி வெளிப்படையாக காண்பிக்கப்படலாம்?
5 மகிழ்ச்சி என்பது இருதயத்திலுள்ள குணம் என்றாலும், சில சமயங்களில் அது வெளிப்படையாக காண்பிக்கப்படலாம். அவ்வப்போது நிகழ்கிற இந்த மகிழ்ச்சியின் வெளிக்காட்டல்கள் யாவை? அவை முக அமைதியிலிருந்து உண்மையில் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பது வரையாக எதுவாகவும் இருக்கக்கூடும். (1 இராஜாக்கள் 1:40; லூக்கா 1:44; அப்போஸ்தலர் 3:8; 6:15) வாயடித்துக் கொண்டில்லாதவர்களுக்கு அல்லது எப்போதும் புன்முறுவல் செய்துகொண்டில்லாதவர்களுக்குச் சந்தோஷம் இல்லை என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை! மெய்யான மகிழ்ச்சி இடைவிடாத பேச்சு, உரத்த நகைப்பு, புன்முறுவல் அல்லது அசட்டு சிரிப்பில் வெளிப்படுவதில்லை. சூழ்நிலைமைகள் மகிழ்ச்சியைப் பல்வேறு வழிகளில் வெளிக்காட்டச் செய்கிறது. ராஜ்ய மன்றத்தில் நம்மை விரும்பத்தக்கவர்களாக செய்விப்பது மகிழ்ச்சி மாத்திரமே அல்ல, ஆனால் நம்முடைய சகோதர சிநேகமும் அன்புமே அவ்விதமாகச் செய்கிறது.
6. கிறிஸ்தவர்கள் வெறுப்புண்டாக்கும் நிலைமைகளை எதிர்படுகிற போதிலும்கூட ஏன் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கலாம்?
6 கிறிஸ்தவனுடைய புதிய ஆள்தன்மையின் மனமார்ந்த ஒரு பகுதியாக அது மனதுக்குள் என்றும் இருப்பதே சந்தோஷத்தின் மாறாத அம்சமாக இருக்கிறது. இதுவே எப்பொழுதும் சந்தோஷமாயிருப்பதைக் கூடிய காரியமாக்குகிறது. நிச்சயமாகவே சில சமயங்களில் ஏதோ ஒன்றைப் பற்றி நாம் அமைதி இழந்துவிடக்கூடும் அல்லது வெறுப்புண்டாக்கும் நிலைமைகளை எதிர்ப்படக்கூடும். ஆனால் நாம் முன்போலவே அப்போதும் நம்முடைய இருதயத்தில் மகிழ்ச்சியை கொண்டிருக்கக்கூடும். சில பூர்வ கிறிஸ்தவர்கள், பிரியப்படுத்த கடினமாயிருந்த எஜமான்களையுடைய அடிமைகளாக இருந்தனர். இப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் எப்போதும் சந்தோஷமாயிருக்க முடியுமா? ஆம், ஏனென்றால் அவர்களுடைய ராஜ்ய நம்பிக்கையாலும், அவர்களுடைய இருதயங்களிலுள்ள மகிழ்ச்சியினாலும் அவ்விதமாக இருக்க முடியும்.—யோவான் 15:11; 16:24; 17:13.
7. (எ) இயேசு உபத்திரவத்தின் கீழ் சந்தோஷத்தைப் பற்றி என்ன சொன்னார்? (பி) உபத்திரவத்தின் கீழ் சகித்திருக்க நமக்கு உதவி செய்வது எது? இந்த விஷயத்தில் மிகச் சிறந்த முன்மாதிரியை வைத்தது யார்?
7 பவுல் அப்போஸ்தலன் “நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்” என்று சொல்லிவிட்டு உடனடியாக மேலுமாக “உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்” என்பதாகச் சொன்னார். (ரோமர் 12:12) இயேசுவும்கூட மத்தேயு 5:11, 12-ல் பின்வருமாறு சொன்ன போது உபத்திரவத்தின் கீழ் சந்தோஷத்தைப் பற்றி பேசினார்: “மக்கள் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்துவார்களேயானால் நீங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருப்பீர்கள் [NW] . . . சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.” சந்தோஷப்படுவதும் களிகூருவதும் இங்கே சொல்லர்த்தமாக வெளிப்படையாக காண்பிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை; அது முக்கியமாக சோதனையின் கீழ் ஒருவர் உறுதியாக நிலைநிற்கும் போது யெகோவாவையும் இயேசு கிறிஸ்துவையும் பிரியப்படுத்துவதில் அவருக்கு இருக்கும் ஆழமான உள்ளான மனநிறைவாகவே இருக்கிறது. (அப்போஸ்தலர் 5:41) உண்மையில் உபத்திரவத்தின் கீழ் சகித்திருக்க நமக்கு உதவி செய்வது மகிழ்ச்சியே ஆகும். (1 தெசலோனிக்கேயர் 1:6) இந்த விஷயத்தில் இயேசு மிகச் சிறந்த முன்மாதிரியை வைத்தார். வேதாகமம் நமக்குச் சொல்கிறது: “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு . . . கழுமரத்தைச் சகித்தார்.”—எபிரெயர் 12:2, NW.
பிரச்னைகள் இருந்தபோதிலும் நம்பிக்கையில் சந்தோஷமாயிருத்தல்
8. கிறிஸ்தவர்கள் என்ன பிரச்னைகளை எதிர்படக்கூடும்? ஆனால் பிரச்னைகள் ஏன் ஒரு கிறிஸ்தவனின் மகிழ்ச்சியைப் பறித்துவிடுவதில்லை?
8 யெகோவாவின் ஊழியராக இருப்பது ஒருவரை பிரச்னைகளிலிருந்து விடுவித்துவிடுவது கிடையாது. குடும்ப பிரச்னைகள், பொருளாதார இன்னல்கள், உடல்நலக்கேடு அல்லது அன்பானவர்களின் மரணம் போன்றவை இருக்கக்கூடும். இப்படிப்பட்டக் காரியங்கள் துயரத்தை உண்டுபண்ணக்கூடும் என்றாலும் நம்முடைய இருதயத்தில் நமக்கிருக்கும் உள்ளான மகிழ்ச்சியான ராஜ்ய நம்பிக்கையில் சந்தோஷமாயிருப்பதற்குரிய நம்முடைய ஆதாரத்தை அவை பறித்துவிடுவதில்லை.—1 தெசலோனிக்கேயர் 4:13.
9. ஆபிரகாமுக்கு என்ன பிரச்னைகள் இருந்தன? அவனுக்கு இருதயத்தில் மகிழ்ச்சி இருந்தது நமக்கு எப்படித் தெரியும்?
9 உதாரணத்துக்கு ஆபிரகாமை எடுத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை எப்போதும் அவருக்கு இன்பமாக இருக்கவில்லை. அவருக்குக் குடும்ப பிரச்னைகள் இருந்தன. அவருடைய மறுமனையாட்டி ஆகாரும் அவருடைய மனைவி சாராளும் ஒருவரையொருவர் அனுசரித்து வாழக்கூடாதவர்களாக இருந்தனர். அங்கே சண்டை இருந்தது. (ஆதியாகமம் 16:4, 5) இஸ்மவேல் ஈசாக்கை பரியாசம் பண்ணி, அவனை துன்புறுத்தினான். (ஆதியாகமம் 21:8, 9; கலாத்தியர் 4:29) கடைசியாக ஆபிரகாமின் அன்பு மனைவி சாராள் மரித்துப் போனாள். (ஆதியாகமம் 23:2) இந்தப் பிரச்னைகளின் மத்தியிலும், பூமியிலுள்ள சகல ஜாதிகளுக்கும் ஆசீர்வாதத்தின் வழியாக இருக்கப் போகும் ஆபிரகாமின் வித்தாகிய ராஜ்ய வித்தின் நம்பிக்கையிலே சந்தோஷமாயிருந்தார். (ஆதியாகமம் 22:15-18) தன் இருதயத்தில் மகிழ்ச்சியோடே அவர் தன் சொந்த பட்டணமாகிய ஊரிலிருந்து புறப்பட்டு வந்தப் பின் நூறு ஆண்டுகளுக்கு யெகோவாவின் சேவையில் நிலைத்திருந்தார். ஆகவே அவரைப் பற்றி பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: “தேவன்தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.” வரவிருந்த மேசியானிய ராஜ்யத்தில் ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசத்தின் காரணமாக, ஏற்கனவே ராஜாவாக இருக்க அபிஷேகம் பண்ணப்பட்டிருந்த கர்த்தராகிய இயேசுவால் இவ்விதமாகச் சொல்ல முடிந்தது: “ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான்.”—எபிரெயர் 11:10; யோவான் 8:56.
10, 11. (எ)கிறிஸ்தவர்களாக நமக்கு என்ன போராட்டம் இருக்கிறது? நாம் எவ்வாறு காப்பாற்றப்படுகிறோம்? (பி) நம்முடைய பாவமுள்ள மாம்சத்துக்கு எதிராக பரிபூரணமாக போராட நம்முடைய இயலாமையை எது ஈடுசெய்கிறது?
10 அபூரண மனிதர்களாக, நமக்கும்கூட போராடி நிலைநிறுத்த வேண்டிய நம்முடைய பாவமுள்ள மாம்சமிருக்கிறது. சரியானதைச் செய்வதற்கான இந்தப் போராட்டம் மிகவும் வேதனையளிப்பதாக இருக்கக்கூடும். ஆனால் நம்முடைய பலவீனங்களுக்கு எதிரான நம்முடைய போராட்டம் நமக்கு நம்பிக்கை இல்லை என்பதை அர்த்தப்படுத்துவது இல்லை. இந்தப் போராட்டத்தைக் குறித்துப் பவுல் நிர்பந்தமாக உணர்ந்து இவ்விதமாகச் சொன்னார்: “இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.” (ரோமர் 7:24, 25) இயேசு கிறிஸ்துவின் மூலமாகவும் அவர் அருளிய மீட்பின் மூலமாகவும் நாம் விடுதலைப் பெற்றிருக்கிறோம்.—ரோமர் 5:19-21.
11 போராட்டத்தைப் பரிபூரணமாகச் செய்வதற்குரிய நம்முடைய இயலாமையை கிறிஸ்துவின் மீட்பின் பலி ஈடு செய்துவிடுகிறது. இந்த மீட்பில் நாம் சந்தோஷமாயிருக்கலாம், ஏனென்றால் இது சுத்திகரிக்கப்பட்ட மனச்சாட்சியையும் நம்முடைய பாவ மன்னிப்பையும் சாத்தியமாக்குகிறது. எபிரெயர் 9:14-ல், பவுல் “மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரி”ப்பதற்கு வல்லமையுள்ள “கிறிஸ்துவினுடைய இரத்தம்” பற்றி பேசுகிறார். இதன் காரணமாக கிறிஸ்தவர்களின் மனச்சாட்சி கண்டனத்தினாலும் குற்ற உணர்வுகளினாலும் அழுத்தப்பட வேண்டியதில்லை. இதுவும் நமக்கிருக்கும் நம்பிக்கையும், மகிழ்ச்சியான சந்தோஷத்துக்கு பலமான சக்தியை உண்டுபண்ணுகிறது. (சங்கீதம் 103:8-14; ரோமர் 8:1, 2, 32) நம்முடைய நம்பிக்கையை ஆழ்ந்து சிந்திக்கையில் நாம் அனைவருமே வெற்றிகரமாகப் போராட ஊக்குவிக்கப்படுவோம்.
நம்முடைய நம்பிக்கையை மனதில் நெருக்கமாக வைத்திருத்தல்
12. அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ன நம்பிக்கையைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கலாம்?
12 ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரும் வேறே ஆடுகளும் ஆகிய இரு சாராருக்குமே “இரட்சிப்பின் நம்பிக்கை”யை மனதில் கொண்டு அதை பாதுகாப்பளிக்கும் தலைச்சீராவாக அணிந்து கொள்வது முக்கியமாகும். (1 தெசலோனிக்கேயர் 5:8) அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் யெகோவா தேவனை அணுக முடிகிறவர்களாயும், மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவோடும், அப்போஸ்தலர்களோடும் நூற்றாண்டுகளினூடே தங்கள் உத்தமத்தைக் காத்துக் கொண்டவர்களுமாகிய மற்ற எல்லா 1,44,000 பேரோடும்கூட தனிப்பட்ட கூட்டுறவை அனுபவித்துக் களிப்பவர்களாயும், பரலோகத்தில் சாவாமையை பெற்றுக்கொள்ளும் மகத்தான சிலாக்கியத்தைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கலாம். என்னே விவரிக்கமுடியாத நிறைவான கூட்டுறவு!
13. இன்னும் பூமியிலிருக்கும் அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் தங்கள் நம்பிக்கையைக் குறித்து எவ்வாறு உணருகிறார்கள்?
13 இன்னும் பூமியிலிருக்கும் ஒருசில அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் தங்கள் ராஜ்ய நம்பிக்கையைக் குறித்து எவ்வாறு உணருகிறார்கள்? இதை 1913-ல் முழுக்காட்டப்பட்ட ஒருவருடைய வார்த்தைகளில் தொகுத்துரைக்க முடியும்: “எங்களுடைய நம்பிக்கை நிச்சயமான காரியம், இது சிறு மந்தையின் 1,44,000 பேரில் கடைசியானவர்கள் வரையிலுமாக ஒவ்வொருவருக்கும் நாம் கற்பனைச் செய்திருப்பதற்கும் மேம்பட்ட ஒரு அளவில் முழுமையாக நிறைவேற்றமடையும். 1914-ம் ஆண்டில், பரலோகத்துக்கு நாங்கள் அனைவரும் போய்விடுவோம் என்பதாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அப்போதிருந்த மீதியானோராகிய நாங்கள், அந்த நம்பிக்கையினுடைய எங்கள் மதிப்பின் உணர்வை இழந்து போய்விடவில்லை. ஆனால் நாங்கள் எக்காலத்திலுமிருந்தது போல அதற்காக உறுதியுள்ளவர்களாக இருக்கிறோம், அதற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதாக இருக்கையில் அதை இன்னுமதிகமாக நாங்கள் போற்றுகிறோம். இலட்சக்கணக்கான ஆண்டுகளை அது தேவைப்படுத்தினாலும்கூட, அதற்காக காத்திருப்பது தகுதியுடையதே. எங்களுடைய நம்பிக்கையை எக்காலத்தையும்விட அதிகமாக நான் மதிப்பிடுகிறேன். அதற்கான என்னுடைய போற்றுதலை இழக்க நான் ஒருபோதும் விரும்ப மாட்டேன். சிறுமந்தையைச் சேர்ந்தவர்களுடைய நம்பிக்கை, வேறே ஆடுகளான திரள் கூட்டத்தாரின் எதிர்பார்ப்பு கூட, தோல்வியுறும் எந்த சாத்தியமுமின்றி நம்முடைய மிகச் சிறந்த கற்பனைக்கும் அதிகமாக நிறைவேற்றமடையும் என்ற உறுதியைக் கொடுக்கிறது. அதன் காரணமாகவே, இந்த மணிநேரம் வரையாகவும் நாங்கள் உறுதியாயிருக்கிறோம், கடவுள் தம்முடைய ‘மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களுக்கு’ உண்மையுள்ளவராக இருப்பதை அவர் உண்மையில் நிரூபிக்கும் வரையாகவும் நாங்கள் உறுதியாயிருக்கப் போகிறோம்.”—2 பேதுரு 1:4; எண்ணாகமம் 23:19; ரோமர் 5:5.
பரதீஸ் நம்பிக்கையில் இப்பொழுது சந்தோஷமாயிருத்தல்
14. திரள் கூட்டத்தார் என்ன நம்பிக்கையை மனதில் வைப்பது அவசியமாயிருக்கிறது?
14 இதுபோன்ற மகிழ்ச்சி பொங்கும் விசுவாசத்தின் வெளிக்காட்டு, வேறே ஆடுகளின் திரள் கூட்டத்தாரைச் சேர்ந்தவர்கள் சந்தோஷப்படுவதற்கு மகத்தான காரணங்களைக் கொடுக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:15, 16) இப்படிப்பட்டவர்கள் அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கும் நம்பிக்கையை மனதில் கொள்வது அவசியமாகும். ஆம், பிசாசைக் கடவுளாகக் கொண்டிருக்கும் பொல்லாதவர்களை நீக்கி பூமியைச் சுத்திகரிக்கும் மகா உபத்திரவத்தைக் கொண்டு வருவதன் மூலம் கடவுளுடைய ராஜ்யம், யெகோவா தேவனின் சர்வலோக அரசுரிமையை நியாயப்படுத்தி அவருடைய மகத்தான நாமத்தை பரிசுத்தப்படுத்துவதைக் காண ஆவலாய் காத்திருங்கள். அந்த மகா உபத்திரவத்தைத் தப்பிப் பிழைப்பது என்னே ஒரு மகிழ்ச்சியாக இருக்கும்!—தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 7:14.
15. (எ) இயேசு பூமியில் இருந்தபோது, என்ன சுகப்படுத்தும் வேலையைச் செய்தார்? ஏன்? (பி) அர்மகெதோனைத் தப்பிப் பிழைப்பவர்களுடைய உடல் ஆரோக்கிய தேவைகள் என்னவாக இருக்கும்? உயிர்த்தெழுப்பப்பட்டவர்களுடையதிலிருந்து அவை ஏன் வித்தியாசமாக இருக்கின்றன?
15 திரள் கூட்டத்தாரைக் குறித்து, வெளிப்படுத்துதல் 7:17 இவ்விதமாகச் சொல்கிறது: “ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்.” இந்தத் தீர்க்கதரிசனம் இப்பொழுது ஆவிக்குரிய நிறைவேற்றத்தைக் கொண்டிருந்த போதிலும், அர்மகெதோனைத் தப்பிப் பிழைப்பவர்கள் அது சொல்லர்த்தமாக நிறைவேற்றமடைவதைக் காண்பர். எவ்விதமாக? ஆம், இயேசு பூமியில் இருந்தபோது என்ன செய்தார்? அவர் ஊனரைக் குணமாக்கினார், சப்பாணிகளை நடக்க வைத்தார், செவிடர்களின் காதுகளையும் குருடர்களின் கண்களையும் திறந்தார், குஷ்டரோகத்தையும் திமிர்வாதத்தையும் “சகல வியாதிகளையும் சகல நோய்களையும்” நீக்கி சொஸ்தமாக்கினார். (மத்தேயு 9:35; 15:30, 31) இன்று கிறிஸ்தவர்களுக்குத் தேவையாயிருப்பது இதுவே அல்லவா? திரள் கூட்டத்தார், பழைய உலகின் குறைபாடுகளையும் பலவீனங்களையும் புதிய உலகத்தினுள் எடுத்துச் செல்வார்கள். அதைக் குறித்து ஆட்டுக்குட்டியானவர் என்ன செய்யும்படியாக நாம் எதிர்பார்க்கிறோம்? அர்மகெதோனைத் தப்பிப் பிழைப்பவர்களுடைய தேவைகள் உயிர்த்தெழுப்பப்பட போகிறவர்களின் தேவைகளிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள், மனித பரிபூரணத்தையும் இன்னும் உடையவர்களாக இல்லாதிருப்பினும் திடமான நல்ல நிலையிலுள்ள ஆரோக்கியமான உடல்களோடு மறுபடியும் சிருஷ்டிக்கப்படுவர். உயிர்த்தெழுதல் அற்புதத்தின் மூலமாக அவர்களுடைய எந்த ஒரு முந்தைய குறைபாடுகளையும் சரிசெய்வது அவசியமாயிராது. மறுபட்சத்தில் அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கும் ஈடிணையற்ற ஓர் அனுபவத்தின் காரணமாக திரள் கூட்டத்தாரைச் சேர்ந்தவர்கள் அநேகருக்கு தேவைப்படுவதும் அவர்கள் பெற்றுக்கொள்வதும் அற்புதமான சுகப்படுத்தலாக இருக்கும். திரள் கூட்டத்தார், வெறுமென தப்பிப் பிழைப்பது மட்டுமன்றி, அதற்குப் பிற்பாடு சுகப்படுத்தவும்படுவர் என்ற மகிழ்ச்சியான எதிர்பார்ப்பை அவர்களுடைய ஊக்குவிப்புக்காக அவர்களுக்கு விளக்குவதே இயேசு செய்த சுகப்படுத்தல்களின் முக்கிய நோக்கமாயிருந்தது.
16. (எ) அர்மகெதோனைத் தப்பிப் பிழைப்பவர்கள் எப்போது அற்புதமாக சுகமளிக்கப்படுவர்? என்ன விளைவோடு? (பி) ஆயிரம் வருடங்களின் போது என்ன நம்பிக்கையில் நாம் தொடர்ந்து சந்தோஷமாயிருப்போம்?
16 இப்படிப்பட்ட அற்புத சுகமளித்தல் நியாயமாகவே அர்மகெதோனைத் தப்பிப் பிழைப்பவர்கள் மத்தியில் அர்மகெதோனுக்குப் பின் ஒப்பிடுகையில் உடனடியாகவும் உயிர்த்தெழுதல் ஆரம்பமாவதற்கு முன்னும் நடந்தேறும். (ஏசாயா 33:24; 35:5, 6; வெளிப்படுத்துதல் 21:4; மாற்கு 5:25-29 ஒப்பிடவும்.) அப்பொழுது மக்கள், மூக்குக் கண்ணாடிகளையும், கைத்தடிகளையும், முடவன் கோல்களையும், சக்கர நாற்காலிகளையும், செயற்கை பல் தொகுதிகளையும், செவிடர் கேட்க உதவும் பொறியமைவுகளையும் தூக்கி எறிவார்கள். சந்தோஷமாயிருக்க என்னே ஒரு காரணம்! புதிய பூமியின் அஸ்திபாரமாக இருக்கப்போகும் அர்மகெதோனைத் தப்பிப் பிழைப்பவர்களின் கடமையோடு இயேசு விரைவில் எடுக்கும் இந்த செயல்நடிவடிக்கை எத்தனை நேர்த்தியாக இணக்கமாயிருக்கிறது! தப்பிப் பிழைக்கும் இவர்கள், இந்தப் பழைய உலகம் அவர்களை அல்லல்படுத்திய காரியங்களினால் இழுத்துப் பறித்துக் கொண்டில்லாமல், அவர்களுக்கு முன்பாக பரந்து கிடக்கும் ஆயிர வருட ஆட்சியின் மகத்தான வேலைளை எதிர்நோக்கியவர்களாய் ஆர்வத்தோடு முன்னோக்கிச் செல்லும் பொருட்டு முடமாக்கும் பிணிகள் வழியிலிருந்து நீக்கப்பட்டு விடும். ஆம், அர்மகெதோனுக்குப் பின்பும்கூட திரள் கூட்டத்தார் ஆயிரம் வருட ஆட்சியின் முடிவில் மனித பரிபூரண வாழ்க்கையை பெறக்கூடிய இந்த மகத்தான நம்பிக்கையில் சந்தோஷமாயிருப்பார்கள். ஆயிரம் வருடங்கள் முழுவதுமாக அவர்கள் அந்த மகிழ்ச்சியான இலக்கை அடையும் நம்பிக்கையில் சந்தோஷமாயிருப்பார்கள்.
17. பரதீஸை திரும்ப நிலைநாட்டும் வேலை செய்யப்பட்டு வரும் போது அங்கே என்ன சந்தோஷங்கள் இருக்கும்?
17 அது உங்களுடைய நம்பிக்கையாக இருக்குமேயானால், பூமியின் மீது பரதீஸை மீண்டும் நிலைநாட்டுவதில் பங்குகொள்ளும் மகிழ்ச்சியையும்கூட ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். (லூக்கா 23:42, 43) அர்மகெதோனைத் தப்பிப் பிழைப்பவர்கள் பூமியைச் சுத்தம் செய்து இவ்விதமாக மரித்தோர் எழுந்து வருவதற்கு இன்பமான இடங்களை அளிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சவ அடக்க ஊர்வலங்களுக்குப் பதில் அங்கு உயிர்தெழுந்து வருபவர்களுக்கு அது வரவேற்பு காலமாக இருக்கும். இதில் மரித்துபோன நம்முடைய சொந்த அன்பானவர்களும் இருப்பார்கள். கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த உண்மையுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் பயனுள்ள கூட்டுறவைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். யாரிடம் நீங்கள் விசேஷமாக பேச விரும்புகிறீர்கள்? ஆபேல், ஏனோக்கு, நோவா, யோபு, ஆபிரகாம், சாராள், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, மோசே, யோசுவா, ராகாப், தெபோராள், தாவீது, எலியா, எலிசா, எரேமியா, எசேக்கியேல், தானியேல் அல்லது முழுக்காட்டுபவனாகிய யோவான்? ஆம், அப்படியென்றால் இந்த பெரு மகிழ்ச்சிதரும் எதிர்பார்ப்பும்கூட உங்கள் நம்பிக்கையின் பாகமாக இருக்கிறது. நீங்கள் அவர்களோடு பேசவும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் முழு பூமியையும் ஒரு பரதீஸாக ஆக்குவதில் அவர்களோடு சேர்ந்து வேலை செய்யக்கூடியவர்களாகவும் இருப்பீர்கள்.
18. கூடுதலான என்ன சந்தோஷங்களை நாம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கலாம்?
18 யெகோவா சிருஷ்டித்த வண்ணமாக, அதனுடைய பரிபூரணமான உயிரின வாழ்க்கைச் சூழலின் சமநிலையை திரும்ப பெற்றுக்கொண்ட நம்முடைய இந்த பூமியோடுகூட ஆரோக்கியமான உணவு, தூய்மையான தண்ணீர், சுத்தமான காற்றையும் கற்பனைச் செய்துப் பாருங்கள். வாழ்க்கையில் அப்பொழுது, பரிபூரணம் வெறுமனே சுறுசுறுப்பில்லாமல் அனுபவிக்கப்படாமல், சந்தோஷந்தரும் வேலைகளில் சுறுசுறுப்பான, அர்த்தமுள்ள பங்கெடுத்தலாக இருக்கும். குற்றச்செயல், தற்பெருமை, பொறாமை, சண்டை ஆகியவற்றிலிருந்து நீங்கலான உலகளாவிய ஒரு ஜன சமுதாயத்தை—அனைவரும் ஆவியின் கனியை வளர்த்து அதை பிறப்பிக்கும் அந்த ஒரு சகோதரத்துவத்தை ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். எத்தனை கிளர்ச்சியூட்டுவதாயிருக்கிறது!—கலாத்தியர் 5:22, 23.
வாழ்க்கையை வாழத் தகுதியுள்ளதாக்கும் அந்த நம்பிக்கை
19. (எ) ரோமர் 12:12-ல் குறிப்பிடப்பட்ட சந்தோஷம் எப்பொழுது அனுபவிக்கப்பட வேண்டும்? (பி) வாழ்க்கையின் பாரங்கள், நம்முடைய நம்பிக்கையை ஒரு பக்கமாக தள்ளிவிட செய்விப்பதை அனுமதியாதிருக்க நாம் ஏன் தீர்மானமாயிருக்க வேண்டும்?
19 எதிர்பார்ப்பு கைகூடிவருகையில் இனிமேலும் அது நம்பிக்கையாக இல்லை, ஆகவே ரோமர் 12:12-ல் பவுல் உற்சாகப்படுத்தும் சந்தோஷம் இப்பொழுது அனுபவிக்கப்படுகிறது. (ரோமர் 8:24) கடவுளுடைய ராஜ்யம் கொண்டு வர இருக்கும் எதிர்கால ஆசீர்வாதங்களைப் பற்றி சிந்திப்பது தானே, இப்பொழுது அந்த நம்பிக்கையில் சந்தோஷப்படுவதற்கு நமக்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஆகவே சீரழிந்த உலகில், வாழ்க்கைச் சுமைகள் உங்கள் மகத்தான நம்பிக்கையை ஒரு பக்கமாக தள்ளிவிட அனுமதியாதபடிக்கு தீர்மானமாக இருங்கள். சலிப்புற்று முன்னாலிருக்கும் நம்பிக்கையை காட்சியிலிருந்து மறையச் செய்து, களைத்துப் போய்விடாதீர்கள். (எபிரெயர் 12:3) கிறிஸ்தவ பாதையை விட்டுச் செல்வது உங்கள் பிரச்னைகளைத் தீர்த்துவிடாது. இப்பொழுது வாழ்க்கையில் ஏற்படும் எல்லாப் பாரங்களின் காரணமாக எவராவது ஒருவர் கடவுளை சேவிப்பதை நிறுத்திவிடுவாரேயானால் அவர் இன்னும் அந்த பாரங்களில் சிக்குண்டவராகவே இருக்கிறார், ஆனால் அவர் நம்பிகையை இழந்து, அதன் காரணமாக முன்னாலிருக்கும் மகத்தான எதிர்ப்பார்ப்புகளில் சந்தோஷமாயிருக்கும் சாத்தியத்தை இழந்து போகிறார்.
20. ராஜ்ய நம்பிக்கையை ஏற்றுக்கொள்பவர்கள் மீது அது என்ன பாதிப்புடையதாக இருக்கிறது? ஏன்?
20 யெகோவாவின் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொண்டிருக்க எல்லா காரணமுமிருக்கிறது. அவர்களுடைய பிரகாசமான தூண்டுதலளிக்கும் நம்பிக்கை, வாழ்க்கையை வாழத் தகுதியுள்ளதாக்குகிறது. அவர்கள் இந்த மகிழ்ச்சியான நம்பிக்கையைத் தங்களுக்கே வைத்துக்கொள்வதில்லை. இல்லை, அவர்கள் மற்றவர்களோடு அதை பகிர்ந்து கொள்ள ஆவலாயிருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 3:12) இதன் காரணமாகவே, ராஜ்ய நம்பிக்கையை ஆர்வமாக ஏற்றுக்கொள்கிறவர்கள் தன்னம்பிக்கையுள்ள மக்களாக, கடவுளிடமிருந்து வரும் நற்செய்தியை மற்றவர்களிடம் சொல்வதன் மூலம் அவர்களை உற்சாகப்படுத்த நாடுகிறார்கள். இது பொதுவாக மனிதகுலத்துக்கு எக்காலத்திலும் கொடுக்கப்பட்டவற்றுள் மிக அதிசயமான நம்பிக்கையால்—பூமிக்குப் பரதீஸை நிலைநாட்டும் ராஜ்யத்தின் அந்த நம்பிக்கையால்—செய்தியை ஏற்றுக்கொள்பவர்களின் வாழ்க்கையை நிரப்புகிறது. மக்கள் அதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், இன்னும் நாம் தொடர்ந்து சந்தோஷமாயிருக்கிறோம், ஏனென்றால் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. கேட்க விருப்பமில்லாதவர்களே இழப்புக்கு ஆளாகிறார்கள் இருக்கிறார்கள்; நாம் அல்ல.—2 கொரிந்தியர் 4:3, 4.
21. எது அருகாமையில் இருக்கிறது, நம்முடைய நம்பிக்கையை நாம் எவ்விதமாக மதிப்பிட வேண்டும்?
21 கடவுளுடைய வாக்கு: “இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்.” (வெளிப்படுத்துதல் 21:5) புதிய உலகம், அதனுடைய எல்லாப் பரவசமூட்டும், முடிவில்லா, ஆசீர்வாதங்களோடுகூட அருகாமையில் இருக்கிறது. நம்முடைய நம்பிக்கை பரலோகத்தில் அல்லது பரதீஸிய பூமியின் மீது வாழ்க்கை—விலைமதிப்புள்ளதாகும்; அதை பற்றிக் கொண்டிருங்கள். எக்காலத்தையும்விட நெருக்கடியான இந்தக் கடைசி நாட்களில், அதை “நிலையும் உறுதியுமான . . . ஆத்தும நங்கூரமாக” கருதுங்கள். “நித்திய கன்மலை”யாகிய யெகோவாவில் நங்கூரமிடப்பட்ட நம்முடைய நம்பிக்கையோடு நமக்கு முன்பாக இருக்கும் “நம்பிக்கையில் சந்தோஷமாயிருக்க” இப்பொழுதே பலமான, கிளர்ச்சியூட்டும் காரணம் நிச்சயமாகவே நமக்கிருக்கிறது.—எபிரெயர் 6:19; ஏசாயா 26:4, தி ஆம்பிளிஃபைட் பைபிள். (w91 12/15)
[அடிக்குறிப்புகள்]
a 1992-ன் போது உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர வாக்கியம் பின்வருமாறு இருக்கிறது: “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள். . . . ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.”—ரோமர் 12:12.
விமர்சனத்துக்கு கேள்விகள்
◻மனிதவர்க்கத்தின் சிறப்புவாய்ந்த நம்பிக்கை என்ன?
◻மெய்யான சந்தோஷம் என்பது என்ன?
◻அர்மகெதோனைத் தப்பிப் பிழைப்பவர்களுக்கு அற்புதமான சுகமளித்தல் எப்போது நடந்தேறக்கூடும்?
◻வாழ்க்கையின் பாரங்கள் நம்முடைய நம்பிக்கையை ஒருபுறமாக தள்ளிவைக்கும்படி செய்விக்க நாம் ஏன் அனுமதிக்கக்கூடாது?
◻புதிய உலகில் என்ன சந்தோஷங்களுக்கு நீங்கள் ஆவலாய்க் காத்திருக்கிறீர்கள்?
[பக்கம் 9-ன் படம்]
இயேசு நடப்பித்த விதமான சுகப்படுத்தல்களைக் காண்பது உங்கள் இருதயத்தைச் சந்தோஷத்தினால் நிரப்புமல்லவா?
[பக்கம் 10-ன் படம்]
ராஜ்யத்தில் சந்தோஷமாயிருப்பவர்கள், தங்கள் நம்பிக்கையை பகிர்ந்துகொள்வதன் மூலம் மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்