நம்புவது—அல்லது நம்பாதிருப்பது
நம்புவதா அல்லது நம்பாதிருப்பதா என்பதை அறிவது கடினமாயிருக்கக்கூடும். ஒவ்வொன்றும் அதன் ஆபத்தைக் கொண்டுள்ளது, விசேஷமாக, வஞ்சகமும் ஏமாற்றமும் அவ்வளவாய்ப் படர்ந்து பரவுகிற ஓர் உலகில் அவ்விதம் உள்ளது. என்றபோதிலும் நாம் துன்புறுகையில் நமக்கு ஆதரவளிக்கும், நம்பகரமான நண்பர்கள் நம் அனைவருக்கும் தேவை. (நீதிமொழிகள் 17:17) சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ரோம எழுத்தாளர் ஃபிட்ரஸ், இந்த இரண்டுங்கெட்டான் நிலையை இவ்விதம் தெரிவித்தார்: “நம்புவது அல்லது நம்பாதிருப்பது ஆபத்தானதாயிருக்கிறது.”
நம்புதல் ஆபத்தானதாயிருக்கலாம்
வேறொருவரை நம்புதல் ஏன் ஆபத்தானதாயிருக்கலாம்? அது இருக்கட்டும், ஸைக்காலஜி டுடே பத்திரிகையில் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையைக் கருத்தில் கொள்ளுங்கள். மக்களின் நம்பிக்கையை சுயநலத்துக்காகப் பயன்படுத்தும் சிலரை இது “கொன்றுதின்னிகள்” என்று விவரிக்கிறது. இவர்கள் “சுற்றியிருப்பவர்களை ஏமாற்றி சூழ்ச்சித்திறத்துடன் கையாண்டு அவர்கள் வாழ்க்கையை அழிப்பதற்கு அழகையும், பச்சோந்தி போன்ற ஏமாற்றும் தன்மையுள்ள தந்திரச் செயல்களையும் பயன்படுத்துகின்றனர்.” தெளிவாகவே, அத்தகைய வஞ்சகர் சூழ்ந்திருக்க, மட்டுக்குமீறிய நம்பிக்கை வைப்பது நிச்சயமாகவே ஆபத்தாயிருக்கிறது.
மிக அதிகம் நம்பும் எவரேனும் ஏமாளியாகலாம், மேலும், அதன் காரணமாய், எளிதில் ஏமாற்றப்பட்டு, சூழ்ச்சித் திறத்துடன் கையாளப்படுகிறார். ஏமாளித்தனத்தின் சரியான ஓர் உதாரணமாயிருந்தது, தெளிந்த சிந்தை கொண்ட அனுபவம்வாய்ந்த துப்பறியும் ஷெர்லாக் ஹோம்ஸ்-ஐத் தோற்றுவித்தவரான சர் ஆர்தர் கோனன் டாய்ல். 1917-ல், எல்ஸீ ரைட், மற்றும் அவருடைய பெற்றோரின் உடன்பிறந்தாரது பிள்ளை ஃபிரான்ஸஸ் கிரிஃபத்ஸ் ஆகிய இரு இளம்பெண்கள், தாங்கள் இங்கிலாந்தில், காட்டிங்லீயிலுள்ள தங்கள் வீட்டின் தோட்டத்தில் வனதெய்வங்களோடு விளையாடியதாக கூறிக்கொண்டனர். அதை நிரூபிக்க முயலுவதற்காக, வனதெய்வங்களின் போட்டோக்களையும் காட்டினர்.
தன் மகனின் மரணத்தைத் தொடர்ந்து, ஆவிக்கொள்கையில் அதிக ஆர்வமுள்ளவராயிருந்த கோனன் டாய்ல்—அப்போது பலர் செய்ததுபோலவே—அவர்களை நம்பி, வனதெய்வங்களைப் பற்றிய கதைகளை உண்மையென்றே ஒப்புக்கொண்டார். அதெல்லாம் மோசடியான கட்டுக்கதையாயிருந்ததாகவும், அவர்கள் “வனதெய்வங்களை” போட்டோ எடுப்பதற்கு முன்பு ஒரு புத்தகத்திலிருந்து வெட்டியெடுத்திருந்ததாகவும் சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவ்விரண்டு பெண்களும் ஒப்புக்கொண்டனர். ஃபிரான்ஸஸ் கிரிஃபத்ஸ் தங்களின் கதையை எவருமே நம்பிவிட்டதாகப் பேராச்சரியத்தைத் தெரிவித்தார். அவர் சொன்னார்: “அவை உண்மையாயிருந்தன என்று நம்புமளவுக்கு எப்படி இத்தரணியில் எவரும் அவ்வளவு ஏமாளியாயிருக்கக்கூடும் என்பது எப்போதுமே எனக்கு ஒரு மர்மமாகவே இருந்தது.”—ஹோக்ஸர்ஸ் அண்ட் தேர் விக்டிம்ஸ்.
கோனன் டாய்ல் விழுந்துவிட்ட கண்ணி எதுவாயிருந்தது என்பதை நீங்கள் காணமுடிகிறதா? அவர் எவ்விதத் தயக்கத்தையோ, சந்தேகத்தையோ காட்டாமலே அக்கதையை முற்றிலும் நம்பினார், ஏனெனில், அது உண்மையாயிருக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். ஆசிரியர் நார்மன் மாஸ் கூறுகிறார்: “நம் புலனுணர்வுகள் பழக்கத்தால் மந்தப்படுத்தப்படுவதால் மட்டுமே நாம் முட்டாளாக்கப்படலாம், அதனால் நாம் காரியங்களைப் பாதி-மூடிய கண்களின் வழியாகப் பார்க்கிறோம். . . . சில சமயங்களில், உண்மையாயிருக்க வேண்டும் என்று நாம் விரும்பும் ஏதோவொன்றாக இருப்பதால் ஒரு காரியத்தை உண்மையென்று நாம் ஏற்றுக்கொள்கிறோம்.” (தி ப்ளெஷர்ஸ் ஆஃப் டிஸெப்ஷன்) அது, நமது பொது சகாப்தத்திற்கு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன், புகழ்பெற்ற கிரேக்கப் பேச்சாளர் டிமாஸ்தனீஸால் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையை எதிரொலிக்கிறது: “எல்லாவற்றையும்விட மிக எளிதான காரியமானது, ஒருவர் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது, ஏனெனில் ஒரு மனிதன் தான் விரும்புவதைப் பொதுவாக உண்மையென நம்புகிறான்.” நம் சொந்த உணர்வுகளை மட்டும் நம்புதல் ஆபத்தானதாயிருக்கக்கூடும்.
இயல்பாகவே, இது மிஞ்சியதோர் உதாரணமாகவும், நீங்கள் எக்காலத்திலும் இருந்திருப்பதைவிட கோனன் டாய்ல் அதிக முட்டாளாக இருந்ததாகவும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஏமாளியாயிருப்பவர்கள் மட்டுமே ஏமாற்றப்படும் ஆபத்திலில்லை. கவனமுள்ள, பொதுவாக ஜாக்கிரதையாயுள்ள பலருங்கூட நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகத் தோன்றியவர்களால் முட்டாளாக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டுள்ளனர்.
நம்பாதிருத்தல் ஆபத்தானதாயிருக்கலாம்
இருப்பினும், எவரையுமே அல்லது எதையுமே நம்பாதிருத்தலில் ஆபத்துகள் இருக்கின்றன. அவநம்பிக்கை, அரிக்கும் துருவைப் போன்றது. அது, வேறுவிதத்தில் மகிழ்ச்சியுடன்கூடிய நெருங்கிய உறவுகளாயிருந்திருப்பவற்றையும் மெல்ல அரித்து, அழிக்கக்கூடும். ஆழமாய் வேர்கொண்டுள்ள குறைகாணும் மனப்பான்மையும் விட்டுக்கொடுக்காத அவநம்பிக்கையும் உங்களை மகிழ்ச்சியற்ற, நண்பரற்ற ஒரு நபராக்கக்கூடும். மற்றவர்களுடன் கொண்டுள்ள உறவுகளுக்கு அத்தனை சேதப்படுத்தும் தன்மையை அது கொண்டிருக்கக்கூடுமாதலால், ஆங்கில எழுத்தாளர் சாம்யெல் ஜான்சன் எழுதினார், “நம்பாதிருப்பதைக் காட்டிலும் சில சமயங்களில் ஏமாற்றப்படுவது சந்தோஷகரமானது.”
அவநம்பிக்கை உங்கள் உடல்நலத்தையும்கூட ஆபத்தான நிலைக்குள்ளாக்கக்கூடும். கோபம் போன்ற பலமான உணர்ச்சிகள், மாரடைப்பு ஏற்படும் ஆபத்தில் உங்களை வைக்கக்கூடும் என்று நீங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால் அதையே, அவநம்பிக்கை கொண்டவராயிருப்பதும் செய்யக்கூடும் என்பதாக சில ஆராய்ச்சிகள் ஆலோசனை கூறுவது உங்களுக்குத் தெரிந்ததா? ஷாட்லான் பத்திரிகை கூறுகிறது: “கோபத்தை எளிதில் வெளிக்காட்டும் ஆட்கள்மட்டுமே தங்கள் நடத்தையால் இருதயநோயைத் தோற்றுவிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறதில்லை. குறைகாணும் தன்மையைக் கொண்டிருப்பதும் அவநம்பிக்கையுள்ளவராயிருப்பதுமான போக்கைப் போன்ற பகைமையின் தந்திரமான தோற்றங்களும்கூட, உங்களை அபாயத்திற்குள்ளாக்கக்கூடும் என்று புதிய ஆராய்ச்சி குறிப்பிட்டுக் காட்டுகிறது.”
உங்கள் நடைகளைக் குறித்து கவனமாயிருங்கள்
நீங்கள் என்ன செய்யக்கூடும்? இவ்விஷயத்தில் பைபிள் சில நல்ல அறிவுரைகளைக் கூறுகிறது. “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்,” என்று நீதிமொழிகள் 14:15 கூறுகிறது. இது அழிவுக்கேதுவான குறைகாணும் தன்மையல்ல. அது ஜாக்கிரதையாயிருக்கத் தேவையான நடைமுறையான ஒரு நினைப்பூட்டுதல். மிகவும் கபடமற்ற, பேதையான ஒரு நபர் தான் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையையும் எவ்விதத் தயக்கமும் சந்தேகமுமின்றி நம்புவார். சரியான காரணத்துடனேயே பைபிள் நீதிமொழி தொடருகிறது: “விவேகியோ தன் நடையின்மீது கவனமாயிருக்கிறான்.” ஆங்கில நாடக ஆசிரியர் உவில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதினார்: “இற்றுப்போன மரப்பலகைகளை நம்பாதீர்கள்.” கீழேயிருந்து வெகு உயரத்திலிருக்கும் ஒரு பாலத்தின்மீதுள்ள மரப்பலகைகள் ஒருவேளை இற்றுப்போயிருப்பதாக நினைக்கும் எவரேனும் அவற்றில் நடப்பது வெகு முட்டாள்தனமானதாயிருக்கும். அப்படியானால், உங்கள் நம்பிக்கையைத் தவறான இடத்தில் வைக்காதிருக்கும்படி, எப்படி ‘உங்கள் நடைகளைக் குறித்து கவனமாயிருக்க’ முடியும்?
எவ்விதத் தயக்கமும், சந்தேகமுமின்றி நாம் கேட்கும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதற்கு மாறாக, மக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைச் சோதித்துப்பார்க்கும்படி பைபிள் நம்மை உத்வேகப்படுத்துகிறது. “வாயானது போஜனத்தை ருசி பார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்,” என்று அது கூறுகிறது. (யோபு 34:3) அது உண்மையாக இல்லையா? நாம் உணவை விழுங்குவதற்குமுன் பொதுவாக அதை ருசி பார்க்கிறதில்லையா? நாம் மக்களின் வார்த்தைகளையும் செயல்களையும்கூட, அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு சோதித்துப்பார்க்க வேண்டும். உண்மையானவராயிருப்பவர் எவரும் நாம் அவரது நற்சாட்சிப்பத்திரங்களைச் சோதிக்கையில் புண்படமாட்டார். நாம் ஏதோவொன்று உண்மையானதா என்று பார்ப்பதற்காக அதைச் சோதிக்கவேண்டும் என்பது, “என்னை ஒரு தடவை ஏமாற்றுகிறவனுக்கு அது இகழ்ச்சியாகும்; அவன் என்னை இரண்டு தடவை ஏமாற்றினால், எனக்கு அது இகழ்ச்சியாகும்” என்ற ஸ்காட்லாந்திய பழமொழியால் ஆதரிக்கப்படுகிறது.
அப்போஸ்தலன் பவுல் அறிவுரை கூறினார்: ‘எல்லாவற்றையும் சோதித்துப்பாருங்கள்.’ (1 தெசலோனிக்கேயர் 5:21) “சோதித்து” என்பதற்கு அப்போஸ்தலன் பவுல் பயன்படுத்திய வார்த்தையே விலையுயர்ந்த உலோகங்களை, அவை உண்மையானவையா என்று சோதித்தறிவதோடு தொடர்புடையதற்கும் பயன்படுத்தப்பட்டது. ஓர் விவேகமுள்ள நபர் தான் வாங்கிக்கொண்டிருந்த பொருட்கள் உண்மையானதுதானா என்பதைப் பார்ப்பதற்கு எப்போதுமே சோதிக்கிறார். அல்லாவிடில், முட்டாள்களின் தங்கம் என்றழைக்கப்படும் தாமிரத்தின் மஞ்சள்நிற தாதுப்பொருளை—தங்கத்தைப் போன்று தோன்றிய, ஆனால் உண்மையில் மதிப்பற்ற ஏதோவொன்றை—அவர் வாங்கும்படி ஆகியிருக்கலாம்.
நியாயமானவராயும் சமநிலையுள்ளவராயும் இருங்கள்
இயல்பாகவே, இவ்விஷயத்தில் நியாயமானவராயும், பிறர்மீது மிதமிஞ்சி சந்தேகம் கொள்ளாதவராயும் இருக்கவே நாம் விரும்புகிறோம். (பிலிப்பியர் 4:5, NW) தவறான உள்ளெண்ணங்களைச் சீக்கிரமாக எவரிடமும் குறித்துக் காட்டாதீர்கள். உள்ளெண்ணங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் நேர்த்தியான, நெருங்கிய உறவுகளுக்குச் சேதம் விளைவிக்கும் மிக விரைவான வழியாயிருக்கக்கூடும். கடினமான சூழ்நிலைகள் எழும்போது, தவறான உள்ளெண்ணங்களைக் குறித்துக்காட்டுவதற்கு மாறாக, உங்கள் நண்பர்கள் உங்களுக்கு மிகச் சிறந்ததையே செய்ய விரும்புகிறார்கள் என்று ஊகிப்பதே பொதுவாக மிகச்சிறந்ததாயிருக்கிறது.
பிறரது அபூரணங்களையும் தவறுகளையும் நீங்கள் பெரிதுபடுத்தாதீர்கள். “ஒரு நண்பனால் ஏமாற்றப்படுதல் நம்பிக்கையின் ஒரு சீர்குலைவை அர்த்தப்படுத்துகிறது,” என்று எழுத்தாளர் கிறிஸ்டன் வான் கிறீஸ்லர் கூறுகிறார். என்றபோதிலும், அத்தகைய ஏமாற்றுதல் வேண்டுமென்றே செய்யப்படாததாக இருக்கலாம், அல்லது இப்போது மிகவும் மனம் வருந்துகிற பலவீனத்தின் விளைவாயிருந்திருக்கலாம். ஆகவே, அவர் தொடருகிறார்: “ஏமாற்றுதலின்மீதே கவனத்தை ஒருமுகப்படுத்தாதீர்கள்—அல்லது அது நீங்கள் பிறரை நம்புவதைத் தடுக்க அனுமதிக்காதீர்கள்.” கசப்பான, எதிர்மறையான அனுபவங்கள், நீங்கள் பிறரோடு நம்பிக்கையான உறவுகளை வளர்ப்பதால் வரும் இன்பங்களைப் பெறமுடியாதவாறு செய்ய அனுமதிக்காதீர்கள்.
சமநிலையுள்ளவராயிருங்கள். மக்களை மதிப்பிடுகையில், நீங்கள் கண்திரைகளை அணிந்துகொள்ளத் தேவையில்லை; எச்சரிக்கையுள்ள ஒரு நபர் விழிப்புடன் இருக்கிறார். மறுபட்சத்தில், பிறர் தங்களால் முடிந்தளவு நலமானதை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று ஊகிக்க முயலவும், அவர்கள் காரியங்களை நோக்கும் விதத்தை நாம் புரிந்துகொள்ள முயலவும், மேலும், கூடிய சந்தர்ப்பங்களிலெல்லாம் “பிறரை நம்புவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளவும்” டாக்டர் ரெட்ஃபர்டு உவில்லியம்ஸ் ஆலோசனை கூறுகிறார். நம்பாமலே இருப்பதைக் காட்டிலும், மிக அதிகம் நம்புவது மேம்பட்டதாயிருக்கலாம்.
“ஒருவரையொருவர் சிதறடித்துவிடும் தன்மைகொண்ட சிநேகிதரும் உள்ளனர்”—அதாவது, உங்கள் நம்பிக்கையை சுயநலமாகப் பயன்படுத்த முயலும் மக்களும் உள்ளனர் என்று பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகளின் எழுத்தாளர் ஒப்புக்கொள்கிறார். உலகம் அத்தகையோரால் நிறைந்துள்ளது. ஆனால் தாங்கள் நம்பத்தகுந்தவரென்று செயலில் காண்பிக்கும்படி பிறருக்கு நேரத்தையும் சந்தர்ப்பத்தையும் அளியுங்கள். அப்போது, உண்மையிலேயே, ‘ஒரு சகோதரனிலும் அதிக நெருக்கமாய்ச் சிநேகிக்கும்’ நண்பர்களை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.—நீதிமொழிகள் 18:24, NW.
அப்படியானால், உங்கள் நம்பிக்கை பிறரால் சுயநலத்துக்காகப் பயன்படுத்தப்படுமோ அல்லது ஏமாற்றப்படுமோ என்ற எந்தப் பயமுமின்றி, நீங்கள் முற்றிலும் நம்பக்கூடிய ஏதாவது இருக்கிறதா அல்லது எவராவது இருக்கிறாரா? ஆம், நிச்சயமாகவே. உங்கள் நம்பிக்கையை முழு தைரியத்தோடு நீங்கள் எங்கே வைக்கலாம் என்பதை அடுத்தக் கட்டுரை சுருக்கமாக ஆழ்ந்து ஆராயும்.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மீது கவனமாயிருக்கிறான்.” —நீதிமொழிகள் 14:15
[பக்கம் 7-ன் படம்]
பிறரது அபூரணங்களையும் தவறுகளையும் பெரிதுபடுத்தாதீர்கள்