‘கர்த்தரைச் சந்திக்க எடுத்துக்கொள்ளப்படுதல்’—எவ்வாறு?
தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவைநோக்கிய இறங்குமுகக் கணிப்பு மாற்றமுடியாத வகையில் தொடருகிறது. ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு விநாடியும் கடந்துசெல்லுகையில், நாம் வெகு காலத்துக்கு முன்பே தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட குறிப்பிடத்தக்கச் சம்பவங்களை நெருங்கிவருகிறோம். பரவசம் இவற்றில் ஒன்றா? அப்படியிருக்குமானால், எப்போது மற்றும் எவ்விதமாக அது நடைபெறும்?
“பரவசம்” என்ற வார்த்தை பைபிளில் காணப்படுவதில்லை. ஆனால் அதை நம்புகிறவர்கள் தங்கள் நம்பிக்கைக்கு ஆதாரமாக 1 தெசலோனிக்கேயர் 4:17-லுள்ள பவுல் அப்போஸ்தலனின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகின்றனர். இந்த வேதவசனத்தை அதன் சூழமைவில் நாம் ஆராய்ந்து பார்க்கலாம். பவுல் எழுதினார்:
“சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்துப் பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் [வந்திருத்தல்மட்டும், NW] உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில் கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள் மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 4:13-18.
பவுல் அங்கிருந்த கிறிஸ்தவர்களுக்கு சுமார் பொ.ச. 50-ல் தன் முதல் கடிதத்தை எழுதிய சமயத்தில், தெசலோனிக்கேயாவிலிருந்த சபை ஒப்பிடுகையில் புதியதாக இருந்தது. சபையின் அங்கத்தினர்கள் தங்களுடையவர்களில் சிலர் ‘மரணத்தில் நித்திரையாயிருந்தது’ குறித்து வேதனையுற்றிருந்தனர். இருப்பினும், பவுல் எழுதிய காரியம் தெசலோனிக்கேயர்களை உயிர்த்தெழுதல் நம்பிக்கையால் தேற்றியது.
கிறிஸ்துவின் “வந்திருத்தல்”
அப்போது மரித்த உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவர் என்பதை உறுதிசெய்கையில், பவுல் இவ்விதமாகவும்கூட சொன்னார்: “கர்த்தருடைய வருகைமட்டும் [வந்திருத்தல்மட்டும், NW] உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.” (வசனம் 15) அப்போஸ்தலன் கர்த்தருடைய “வந்திருத்தலைக்” குறிப்பிடுவது நிச்சயமாகவே கவனிக்கத்தக்கதாகும். இங்கே மூல-மொழி வாசகம் “அருகருகாக இருப்பது” என்ற நேர்ப்பொருள் கொண்ட கிரேக்க வார்த்தை பரோசியன்-ஐ பயன்படுத்துகிறது.
ஓர் அயல்நாட்டுத் தலைவர் ஒரு தேசத்துக்கு வருகை தரும்போது, அங்கே அவர் வந்திருக்கும் தேதிகள் பொதுவாக அறிவிக்கப்படுகின்றன. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வந்திருத்தல் சம்பந்தமாக இது உண்மையாக இருந்திருக்கிறது. பரலோக ராஜ்ய வல்லமையில் இயேசுவின் வந்திருத்தல் 1914-ல் ஆரம்பமானது என்பதற்கு அத்தாட்சியை காவற்கோபுரம் எப்பொழுதும் நேர்மை இருதயமுள்ள பைபிள் தீர்க்கதரிசன மாணாக்கர்களுக்கு அளித்துவந்திருக்கிறது. அந்த ஆண்டு முதற்கொண்டு நடந்துவரும் சம்பவங்கள் இயேசுவின் காணக்கூடாத வந்திருத்தலை உறுதிசெய்கிறது. (மத்தேயு 24:3-14) ஆகவே கர்த்தருடைய வந்ததிருத்தலின்போது வாழும் ஒருசில கிறிஸ்தவர்கள் “கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள் மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவர்,” என்று சொல்வதன்மூலம், உயிரோடிருக்கும் அவர்கள் நிலவுலக வளிமண்டலத்தில் அல்ல, ஆனால் இயேசு கடவுளுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிற அந்தக் காணக்கூடாத பரலோக மண்டலத்தில் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோவார்கள் என்றே பவுல் அர்த்தப்படுத்தினார். (எபிரெயர் 1:1-3) ஆனால் அவர்கள் யார்?
“தேவனுடைய இஸ்ரவேலர்”
வேதாகமம் மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலரைப்பற்றி அதிகத்தைச் சொல்கிறது. மேலும் ஆவிக்குரிய “தேவனுடைய இஸ்ரவேலரைப்” பற்றியும்கூட பேசுகிறது. யூத மற்றும் புறமத விசுவாசிகள் கடவுளுடைய பரிசுத்த ஆவி அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தியினால் அபிஷேகம்பண்ணப்பட்ட இந்தத் தொகுதியின் முழு எண்ணிக்கையை உண்டுபண்ண வேண்டியவர்களாக இருந்தனர். (கலாத்தியர் 6:16; ரோமர் 11:25, 26; 1 யோவான் 2:20, 27) வெளிப்படுத்துதல் புத்தகம், ஆவிக்குரிய இஸ்ரவேலரின் மொத்த எண்ணிக்கை 1,44,000 என்று காட்டுகிறது. இவர்கள் அனைவரும் பரலோக சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவுடனேகூட இருப்பதாக காட்டப்பட்டிருக்கிறார்கள். கிறிஸ்துவோடேகூட அவர்கள் பரலோகத்தில் ராஜாக்களும் ஆசாரியர்களுமாக இருப்பர். (வெளிப்படுத்துதல் 7:1-8; 14:1-4; 20:6) இவர்கள் மத்தியில், அவர்களுடைய இன அல்லது தேசீய பின்னணி எதுவாக இருப்பினும், தெசலோனிக்கேயாவிலும் மற்ற இடங்களிலுமுள்ள சபைகளோடு தொடர்புகொண்டிருந்த தனிநபர்களும் இருப்பர்.—அப்போஸ்தலர் 10:34, 35.
ஆவிக்குரிய இஸ்ரவேலின் எந்த உண்மையுள்ள உறுப்பினரும், பரலோக வெகுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பாக, குறிப்பிட்ட ஓர் அனுபவத்தில் அவர்கள் பங்கேற்க வேண்டும். பரலோகங்களில் வாழ்வதற்கு உயிர்த்தெழுப்பப்படுவதற்கு முன்பாக இயேசு வாதனையின் கழுமரத்தில் மரித்தது போலவே, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் வெகுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பாக மரிக்க வேண்டும். (1 கொரிந்தியர் 15:35, 36) பொ.ச. முதல் நூற்றாண்டில் வாழ்ந்துவந்த ஆவிக்குரிய இஸ்ரவேலின் உண்மையான அங்கத்தினர்களின் விஷயத்திலும் இன்று உயிருடனிருக்கும் இப்படிப்பட்ட தனிநபர்களின் விஷயத்திலும் அதுவே உண்மையாக இருக்கும்.
“கர்த்தருடைய வந்திருத்தலைப்”பற்றி குறிப்பிட்ட பின்னர் பவுல், மரித்துப்போன உண்மையுள்ள ஆவிக்குரிய இஸ்ரவேலர் தங்கள் பரலோக வெகுமதியைப் பெறப்போகும் காலத்தைச் சுட்டிக்காட்டினார். அவர் எழுதினார்: “கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும், வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.” (வசனம் 16) ஆகவே, ராஜாவாக இயேசுவின் வந்திருத்தல் ஆரம்பமானவுடனே, உத்தமத்தைக் காத்துக்கொண்டவர்களாக ஏற்கெனவே மரித்துபோன ஆவிக்குரிய இஸ்ரவேலரோடு ஆரம்பித்து பரலோக உயிர்த்தெழுதல் நடைபெறத் துவங்குவதை நாம் எதிர்பார்ப்போம். (1 கொரிந்தியர் 15:23) அவர்கள் இப்பொழுது பரலோகத்தில் இயேசுவுக்கு அருகருகாக சேவிக்கிறார்கள். ஆனால் பூமியின்மீது இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற, ஒப்பிடுகையில் ஒருசிலராக இருக்கும் அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களைப்பற்றி என்ன? அவர்கள் பரவசத்துக்காகக் காத்திருக்கிறார்களா?
“எடுத்துக்கொள்ளப்படுதல்”—எவ்வாறு?
மரித்துவிட்டிருக்கும் அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களைப்பற்றி குறிப்பிட்ட பின்பு, பவுல் இவ்வாறு சொன்னார்: “பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள் மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.” (வசனம் 17) “உயிரோடி”ருப்பவர்கள் கிறிஸ்துவின் வந்திருத்தலின் சமயத்தில் உயிருள்ளவர்களாயிருப்பவர்கள் ஆவர். அவர்கள் கர்த்தராகிய இயேசுவுக்கு எதிர்கொண்டு போக “எடுத்துக்கொள்ளப்படு”வார்கள். உண்மையுள்ள பண்டைய கிறிஸ்தவர்களின் விஷயத்தில் இருந்தது போலவே, பரலோகத்தில் கிறிஸ்துவோடு இருப்பதற்கு மனிதனாக மரிப்பது அவர்களுக்கு அவசியமாகும்.—ரோமர் 8:17, 35-39.
கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில் பவுல் சொன்னார்: “சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.” (1 கொரிந்தியர் 15:50-52) கிறிஸ்துவின் வந்திருத்தலின்போது உண்மையுள்ளவர்களாக மரிக்கையில், ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீதியானோரில் ஒவ்வொருவரும் தன் பரலோக வெகுமதியை உடனடியாகப் பெற்றுக்கொள்கிறார்கள். “ஒரு இமைப்பொழுதிலே,” அவர் ஓர் ஆவி சிருஷ்டியாக உயிர்த்தெழுப்பப்பட்டு, இயேசுவுக்கு எதிர்கொண்டு போகவும், பரலோக ராஜ்யத்தில் உடன் அரசராக சேவிக்கவும் “எடுத்துக்கொள்ளப்படு”கிறார். ஆனால் யெகோவாவை வணங்கும் மற்ற எல்லாரையும்பற்றி என்ன? இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவு நெருங்கிவருகையில், அவர்களுங்கூட பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்களா?
தப்பிப்பிழைத்தல் —ஆனால் பரவசம்மூலமாக இல்லை
இயேசுவின் ராஜரீக வந்திருத்தல் 1914-ல் ஆரம்பித்த காரணத்தால், நாம் இப்பொழுது இந்த உலகின் “முடிவு கால”த்திற்குள் இருக்கிறோம். (தானியேல் 12:4) பவுல் எச்சரித்தார்: “சகோதரரே, இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள் மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.” (1 தெசலோனிக்கேயர் 5:1-3) ஆனால் விழிப்பாயிருக்கும் கிறிஸ்தவர்கள் தப்பித்துக்கொள்வர். எவ்வாறு?
“சமாதானமும் சவுக்கியமும்,” என்ற கூக்குரல் இயேசு “மிகுந்த உபத்திரவம்” என்றழைத்த காலப்பகுதிக்கு முற்போந்த அறிகுறியாகும். பூமிக்குரிய ஒரு பரதீஸில் என்றுமாக வாழும் நம்பிக்கையுடைய உண்மையுள்ளவர்களின் “ஒரு திரள்கூட்டத்தை” விவரிப்பதாய், வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது: “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.” (வெளிப்படுத்துதல் 7:9, 14; லூக்கா 23:43) இல்லை, அவர்களுடையது பரவச எதிர்பார்ப்பு அல்ல. மாறாக அவர்கள் இதே பூமியில் தப்பிப்பிழைக்கும் நம்பிக்கையுள்ளவர்கள். அதற்கு தயார் செய்வதற்கு, அவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் விழிப்புள்ளவர்களாக நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் இதை எவ்விதமாகச் செய்து இந்த ஒழுங்கின் முடிவைத் தப்பிப்பிழைக்க முடியும்?
நீங்கள் ‘தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும் இரட்சிப்பின் நம்பிக்கையென்றும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருப்பது’ அவசியமாகும். (1 தெசலோனிக்கேயர் 5:6-8) கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தையாகிய பைபிளுக்கு கவனம் செலுத்த இதுவே நேரம். இந்த ஒழுங்கின் முடிவுவரையாக காலம் கடந்துசெல்லுகையில், பவுலின் புத்திமதிக்கு செவிசாயுங்கள்: “தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:20, 21) ஆகவே யெகோவாவின் சாட்சிகள் உங்களை அவர்களுடைய ராஜ்ய மன்றங்களுக்கு அழைக்கிறார்கள். அங்கே பைபிள் தீர்க்கதரிசனங்களையும் கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையின் மற்ற அம்சங்களையும் படிப்பதில் அவர்களோடு சேர்ந்துகொள்ளலாம்.
நீங்கள் திருத்தமான அறிவிலும் விசுவாசத்திலும் வளர்ந்துவருகையில், சர்வலோகத்திலுமிருந்து தம்முடைய சத்துருக்களை ஒழித்து பூமியை ஒரு பரதீஸாக மாற்றுவதற்கு யெகோவா தேவன் கொண்டிருக்கும் நோக்கத்தின் நிறைவேற்றத்தை நீங்கள் பகுத்துணருவீர்கள். விசுவாசத்தை அப்பியாசிப்பதன்மூலம் மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்பவர்கள் மத்தியில் நீங்களும்கூட இருக்கலாம். பூமியின்மீது ஜீவனுக்கு உயிர்த்தெழுப்பப்படப்போகிற லட்சக்கணக்கானோரை வரவேற்கும் சிலாக்கியத்தைப் பெறலாம். இயேசு கிறிஸ்துவின் கைகளிலும், பரலோக மண்டலத்தில் வாழ்வதற்கு உயிர்த்தெழுப்பப்படுவதன்மூலம் ‘கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும்’ அவருடைய உடன்அரசர்களின் கைகளிலும் கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் வாழ்வது என்னே மகிழ்ச்சியாக இருக்கும்!
அப்படியென்றால், பொதுவில் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு என்ன மெய்யான வேத ஆதாரமுள்ள நம்பிக்கை இருக்கிறது? அது பரவசம் அல்ல. மாறாக, அது கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின்கீழ் பூமியின்மீது நித்திய ஜீவனாகும்.
[பக்கம் 7-ன் படம்]
மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைக்கிறவர்கள், இயேசு மற்றும் பரலோகத்துக்கு “எடுத்துக்கொள்ளப்படு”கிறவர்களின் ஆட்சியின்கீழ் ஒரு பரதீஸிய பூமியில் வாழ்வதற்கு உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களை வரவேற்பர்