தேவனிடத்திலிருந்து சமாதானம் எப்பொழுது?
“சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்.”—ரோமர் 16:20.
“போர்தளவாடங்களுக்கான முட்டாள்தனமான போட்டி தொடருமேயானால், நிச்சயமாகவே சரித்திரத்தில் முன்னொருபோதும் சம்பவித்திராத படுகொலையே அதன் விளைவாக இருக்கும். வெற்றி பெறும் தேசம் ஒன்று மீந்திருக்குமானால், நடைப்பிண வாழ்க்கையே அவர்களின் வெற்றியாக இருக்கும்.” 1938-ல் மோகன்தாஸ் காந்தியின் இந்த முன்கணிப்பு, அவருடைய காலத்துக்கு அப்பால் கவனம் செலுத்துவதாக இருந்தது.
2 இதற்கு முன்னால், 1931-ல் காந்தி, பிரிட்டிஷ் ராஜ பிரதிநிதியிடம் பின்வருமாறு சொல்லியிருந்தார்: “மலைப் பிரசங்கத்தில் கிறிஸ்து கொடுத்த போதனைகளின்படி, உம்முடைய நாடும் என்னுடைய நாடும் இணங்கிப் போவார்களேயானால், நம்முடைய நாடுகளின் பிரச்னைகளை மட்டுமல்லாமல், உலகம் முழுமையின் பிரச்னைகளையும் தீர்த்துவிட்டவர்கள் ஆவோம்.” இந்து ஞானி சுட்டிக் காண்பித்த விதமாகவே, இயேசுவின் பிரசங்கம் நிலையான சமாதானத்துக்குரிய வழியைக் காண்பிக்கிறது. அந்தப் பிரசங்கத்தில் கிறிஸ்து இவ்விதமாகச் சொன்னார்: “சமாதானம் பண்ணுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.” (மத்தேயு 5:9) அநேக “புத்திரர்கள்” இப்பொழுது தேவனிடத்திலிருந்து வரும் சமாதானத்தை அனுபவித்துக் களிக்கிறார்கள். காலப் போக்கில், பூமியிலுள்ள சாந்த குணமுள்ளவர்கள் அனைவரும், “மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:11) ஆனால் இதைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்க முடியுமா?
3 இன்று, உலகம் பூண்டோடொழிக்கப்படக்கூடிய கோரமான காட்சி மனிதவர்க்கத்தைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. சமீப காலத்திய ஆராய்ச்சி ஒன்று பின்வருமாறு சொல்லுகிறது: “அணு சக்தி படைக்கலச் சாலையை உருவாக்க, இரண்டாம் உலகப் போர் முதற்கொண்டு செலவிடப்படும் 4,20,000 கோடி ரூபாய் என்பது அனைத்தையும் கடந்த முட்டாள்தனமாகும். இது பயன்படுத்தப்படுமேயானால் அது அனைத்துலகின் அழிவையே அர்த்தப்படுத்தும். . . . உலகின் அணு சக்தி சேகரத்தின் வெடிக்கும் ஆற்றல் 58,000 கோடி ஆட்களை அல்லது இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் ஆட்களைவிட 12 மடங்கு அதிகமான ஆட்களைக் கொல்லுவதற்குப் போதுமானதாக இருக்கிறது.a இருந்த போதிலும், இந்த முட்டாள்தானமான போட்டி தொடர்ந்து தீவிரமாகிக்கொண்டே வருகிறது. நிச்சயமாகவே இது முட்டாள்தனமானதாக இருக்கிறது. ஏனென்றால் ஆங்கிலத்தில் MAD (Mutually Assured Destruction) பரஸ்பரமாக உறுதிசெய்துக் கொள்ளப்பட்ட அழிவாக இது இருக்கிறது. நிலையற்ற இந்தக் கருத்தின் மேல்தானே வல்லரசுகள் சமாதானத்தைச் சமநிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாகவே இது தேவனிடமிருந்து வரும் சமாதானம் இல்லை.
4 எல்லா விதத்திலும் இந்த உலகின் காட்சி அவலமானதாக இருக்கின்றது. மனித சமுதாயம் இன்றையத் தலைமுறையில் இருப்பதுபோல, இத்தனை அதிகமான அரசியல் ஊழலையும், அதிகமான குற்றச் சார்பான வன்முறையையும், அதிகமான பொருளாதார தொல்லைகளையும், அதிகமான அவபக்தியையும் மதசம்பந்தமான குழப்பத்தையும் அனுபவிக்க வேண்டிய நிலையில் ஒருபோதும் இருக்கவில்லை. “சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது” என்பது மனிதவர்க்கத்தின் விஷயத்தில் முன்னொருபோதும் இத்தனை உண்மையாக இல்லை. என்றபோதிலும் கடவுள் அவருடைய மனித சிருஷ்டி, “அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்” என்பதாக வாக்களிக்கிறார். (ரோமர் 8:21, 22) பைபிளின் கடவுளாகிய கர்த்தராகிய ஆண்டவர் யெகோவாவை வணங்கும் சமாதானப் பிரியர்கள் அந்தச் சுயாதீனத்துக்குள் பிரவேசிப்பார்கள் என்பதாக உறுதியளிக்கப்பட்டிருக்கிறார்கள். அது மெய்யான சமாதானத்தில், நித்தியமான சமாதானத்தில் உறுதியாக வேர்கொண்ட சுயாதீனமாக இருக்கும். (எசேக்கியேல் 37:26-28) ஆனால், எப்பொழுது, எவ்விதமாக அந்தச் சமாதானம் வரும்?
‘காலங்களையும் சமயங்களையும்’ பற்றிய கடவுளுடைய கருத்து
5 உயிர்த்தெழுதலானது எவ்விதமாக “கர்த்தருடைய [இயேசுவின்] பிரசன்னத்தோடு “சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை விளக்குவதன் மூலம், அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிக்கேயாவிலிருந்து கிறிஸ்தவர்களைத் தேற்றினான். அடுத்ததாக, அவன் சொல்கிறான்: “சகோதரரே, இவைகள் நடக்குங் காலங்களையும் சமயங்களையும் குறித்து உங்களுக்கு எழுத வேண்டுவதில்லை.”—1 தெசலோனிக்கேயர் 4:15; 5:1.
6 ‘காலங்களும் சமயங்களும்’ கடவுளுக்கு முக்கியமானவை அல்ல என்பதை அப்போஸ்தலனின் வார்த்தைகள் அர்த்தப்படுத்துகிறதா? நிச்சயமாகவே இல்லை. (பிரசங்கி 3:1) 69 வார வருடங்களின் முடிவில் “காலம் நிறைவேறினபோது”தானே “தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.” இயேசுவுங்கூட முன்னுரைக்கப்பட்டிருந்த விதமாகவே பொ.ச.29 -பொ.ச.33 வரையாக மூன்றரை வருடங்கள் ஊழியஞ் செய்தார். (கலாத்தியர் 4:5; தானியேல் 9:24-27) சரியாக 1914-ல் “புறஜாதியாரின் காலத்தின்” முடிவிலே தானே, இயேசு, “பரம எருசலேமில்” ராஜாவாக்கப்பட்டார். (லூக்கா 21:24; எபிரேயர் 12:22; எசேக்கியேல் 21:27; தானியேர் 4:31, 32) “மகா உபத்திரவமுங்“கூட யெகோவாவால் முடிவு செய்யப்பட்ட “நாளிலும் நாழிகையிலும்” வரும். “அது தாமதிப்பதில்லை.”—மத்தேயு 24:21, 36; ஆபகூக் 2:3.
7 என்றபோதிலும் இந்தக் கட்டத்தில் பவுலுக்கு “காலங்களையும் சமயங்களையும்” குறித்து எழுத வேண்டிய அவசியமிருக்கவில்லை. பொ.ச.70-ல் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்பு முடிய இருந்த யூத ஒழுங்கு முறையின் முடிவின் “சமயமாக” அது இருந்தது என்பதை ஏற்கெனவே அந்தத் தெசலோனிய கிறிஸ்தவர்கள் உறுதியாக நம்பியிருந்தார்கள். அவர்களுடைய வைராக்கியமும் “பரிசுத்த ஆவியின் சந்தோஷமும்” இதற்கு எடுத்துக் காட்டாக இருந்தது. (1 தெசலோனிக்கேயர் 1:4-7) அதே விதமாகவே, இன்று யெகோவாவின் சாட்சிகள் 1914 முதற்கொண்டு நடந்துவரும் உலகப் போர்களும் வேதனைத் தரும் மற்ற சம்பவங்களும் ராஜ்ய வல்லமையிலும் மகிமையிலும் இயேசுவின் காணக்கூடாத பிரசன்னத்தின் “அடையாளமாக” இருப்பதை முழுமையாக உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.—மத்தேயு 24:3-8; 25:31.
8 அடுத்ததாக அப்போஸ்தலன், தன்னுடைய உடன் கிறிஸ்தவர்களுக்கு பின்வருமாறு மீண்டும் அதை உறுதி செய்கிறான்: “இரவிலே திருடன் வருகிறவிதமாய் யெகோவாவுடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்களே.” (1 தெசலோனிக்கேயர் 5:2) துல்லிபமாக அந்தச் சமயத்தை நாம் அறிந்திராவிட்டாலும், நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான அந்த நாள் வெகு அருகாமையில் இருக்கிறது. அது சடிதியாக, கடவுளுடைய குறிக்கப்பட்ட நேரத்தில் உடனடியாக வரும். ஆகவே நாம் விழித்திருந்து சுறுசுறுப்பாயிருக்க வேண்டும்.—லூக்கா 21:34-36.
சமாதானத்துக்கான ஒரு உச்சக்கட்ட அமைப்பு
9 கிறிஸ்துவின் பிரசன்னத்தின் உச்சக்கட்டமாக “சமாதானம் பாதுகாப்பு” என்ற அறிவிப்பு கேட்கப்படும் என்பதாக பவுல் இங்கே எச்சரிக்கிறான். (1 தெசலோனிக்கேயர் 5:3) அந்த அறிவிப்பை நாம் சீக்கிரத்தில் கேட்போமா? உலக சமாதானத்துக்கும் பாதுகாப்புக்குமான அந்த அழைப்பு எங்கிருந்து வரக்கூடும்? கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களின் மத்தியிலிருந்து வராது என்பது தெளிவாக இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் “உலகத்தின் பாகமாக” இல்லை, தம்முடைய ராஜ்யமும் “உலகத்தின் பாகமாக” இல்லை என்பதாக இயேசு சொன்னார். (யோவான் 15:19; 17:14, 16; 18:36) ஆகவே இந்தக் கூக்குரலை எழுப்புகிறவர்கள், வரப் போகும் தேவனுடைய ராஜ்யத்தை எதிர்க்கும் உலகப் பிரகாரமான ஆட்களாக இருக்க வேண்டும். அவர்கள் “பொல்லாங்கனுக்குள் கிடக்கிற” உலகத்தின் பாகமாக இருக்கிறார்கள். அந்தப் பொல்லாங்கனே பிசாசாகிய சாத்தான். (1 யோவான் 5:19) எரேமியாவின் நாட்களிலிருந்த அரசியல் மற்றும் மதத் தலைவர்களைப் போலவே இவர்கள் “உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று” சொல்லி இந்தச் சாதானம் கர்த்தரிடத்திலிருந்து வருவதாக தவறாக வாதிட்டு, “தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லு”வார்கள். அவர்களின் உரிமைப் பாராட்டல்கள் எத்தனைப் பொய்யானதாக நிரூபிக்கப்படும்!—எரேமியா 23:16, 17, 19, 20.
10 சங்கிலித் தொடரான சம்பவங்கள், “சமாதானம் பாதுகாப்பு” என்ற இந்தக் கூக்குரலுக்கு வழிநடத்துகிறது. 1920-ல், இப்பொழுது முதல் உலகப் போர் என்றழைக்கப்படும் மகாப் போர் முடிந்த சமயத்தில் சர்வதேச சங்கம் ஒன்று நிறுவப்பட்டது. பூமியிலிருந்து என்றுமாக யுத்தத்தை ஒழிப்பதே அந்தச் சங்கத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால் இரண்டாவது உலகப் போர் சர்வதேச சங்கத்தை அபிஸிற்குள் தள்ளியது. அக்டோபர் 24, 1945-ல் இந்தக் குழு, ஐக்கிய நாடுகள் என்ற புதிய பெயரில் சாம்பலிலிருந்து எழுந்து மீண்டும் உயிர்பெற்று வந்தது. (வெளிப்படுத்தின விசேஷம் 17:8 ஒப்பிடவும்) “உலக சமாதானத்தையும் பாதுகாப்பையும் காத்துக்” கொள்வதே அதன் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. அதன் ஸ்தாபகர்கள் “போரின் கொடுமையிலிருந்து பின்வரும் சந்ததிகளைக் காப்பாற்ற” அவர்களுடைய தீர்மானத்தை வெளியிட்டார்கள். இப்படிப்பட்ட சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் ஐ.நா. வெற்றி அடைந்திருக்கிறதா?
11 ஐ.நா.வின் ஸ்தாபகர்களில் சிலர் எத்தனை நல்லெண்ணம் படைத்தவர்களாக இருந்தபோதிலும், அதற்கு முன்னிருந்த சர்வ தேச சங்கத்தைப் போலவே அது அதன் எழுத்துருவிலிருக்கும் நோக்கத்தை நிறைவேற்றத் தவறியிருக்கிறது. உலகமானது இப்பொழுது அணு ஆயுத கருவிகளின் வெடி மருந்து பீப்பாயின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறது. சமாதான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டாலுங்கூட அணுசக்திக்கு பயங்கரமான ஆற்றல் இருப்பதை, 1986 ஏப்ரலில் ருஷ்யாவில் செர்நோபில் என்னும் இடத்தில் நடந்த விபத்தும், அதன் விளைவாக ஐரோப்பாவின் பெரும் பகுதியின் மீது காற்றினூடே பறந்துவந்த கதிரியக்கத் தூளும் காண்பிக்கிறது. தென் பசிபிக்கிலுள்ள சில தேசங்கள் தங்கள் பகுதியை அணு ஆற்றல் விலக்கு மண்டலமாக வைத்துக்கொள்ள முயன்று வருகின்றன. ஆனால் முழு அளவு அணு ஆயுதப் போர் ஒன்று ஏற்படுமேயானால், எந்த இடத்திலும் தப்பிப் பிழைப்பவர்கள் இருக்க மாட்டார்கள்.
“சமாதானமும் பாதுகாப்பும்” சாத்தியமா?
12 தீவிரமாகிவரும் நெருக்கடி நிலையை நன்கு உணர்ந்தே, ஐக்கிய நாடுகள் 1986-ஐ சர்வ தேசீய சமாதான ஆண்டாக அறிவித்தது. தேசங்களின் மத்தியில் பல்வகையான வரவேற்பு இதற்கு கிடைத்திருக்கிறது. பெரும்பாலான தேசங்கள், ஏதாவது ஒரு வகையில் ஐ.நா-வின் சமாதான ஆண்டை ஆதரித்திருக்கிறார்கள். ஆனால் அவை அணு யுத்தமானது சமாதானத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதைச் சுட்டிக் காண்பிக்கின்றன. இதற்கிடையில், சிறிய போர்கள் தொடர்ந்து பூமி முழுவதிலும் நடைபெற்று வருகிறது. இரண்டாம் உலகப் போர் முதற்கொண்டு நடந்திருக்கும் சுமார் 150 போர்களில் மொத்தமாக 3,00,00,000-க்கும் மேலான ஆட்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஐ.நா-வில் ப்ளாசா சுவரின் மீது எழுதப்பட்டுள்ள ஏசாயா 2:4-ன் பிரபலமான அந்த வார்த்தைகளின்படி செயல்பட எந்த ஒரு தேசமாவது உண்மையில் முயற்சித்திருப்பதாக சொல்ல முடியுமா?
13 உலகிலுள்ள மதங்களும் ஐ.நா.-வின் சமாதான ஆண்டை ஆதரிப்பதில் தயக்கங் காண்பிக்கவில்லை. போப் ஜான் பால் II, ஜனவரி 1-ம் தேதியை உலக சமாதான தினமாக அறிவித்து அனைத்துலகிலும் சமாதானத்துக்கு ஒரு அஸ்திவாரத்தைப் போடுவதற்குத் தேவையான தலைமை வகிப்புக்கு வழிவகுக்குமாறு அரசியல் தலைவர்களைத் துரிதப்படுத்தினார். சர்வ தேச சமாதான ஆண்டின்போது, இத்தாலியிலுள்ள அஸிஸியில் உலகிலுள்ள மதங்களை ஜெபத்துக்காக கூடிவரும்படியுங்கூட அவர் அழைப்பு விடுத்தார். இங்கிலாந்து சர்ச்சின் தலைவரான கேன்டர்பரியின் தலைமை குருவும் புத்தமத தொகுதிகளும் இந்த அழைப்பை அனலோடு வரவேற்றனர். சர்வதேச சமாதான ஆண்டில் சர்ச்சுகளின் உலக குழு, அணுசக்தி படைவலிமையை உடனடியாக குறைக்கும்படியாக துரிதப்படுத்திய அறிக்கை ஒன்றை விடுத்தது.
14 என்றபோதிலும் “சமாதானத்தையும் பாதுகாப்பையும்” நிலைநாட்டும் இந்த விஷயத்தில், “சமாதானத்தின் தேவனுடைய” சித்தம் என்னவாக இருக்கிறது, அபூரண மனிதர்களும் தேசங்களும் இந்த உலகத்துக்கு சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டு வரமுடியும் என்பதாக கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தைக் காண்பிக்கிறதா? நிச்சயமாகவே இல்லை. யெகோவா அவருடைய நீதிக்கிசைவாகவும் அவருடைய துதிக்காகவும் காரியங்களைக் கையாளும்போது தானே அது “வாய்க்கும்.”—ஏசாயா 55:11; 61:11.
வர இருக்கும் “சடிதியான அழிவு”
15 என்ன சம்பவிக்க இருக்கிறது என்பதைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் நமக்குச் சொல்லுகிறான். அவன் பின்வருமாறு சொல்லுகிறான்: “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல அழிவு சடிதியாய் அவர்கள் மேல் வரும்; அவர்கள் தப்பிப் போவதில்லை.”—1 தெசலோனிக்கேயர் 5:3.
16 முதல் முறையாக வாசிக்கையில் அந்த வார்த்தைகள் அதிர்ச்சி தருவதாக தோன்றலாம். ஆனால் பைபிள், விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது. இன்று தேசங்களின் வழிகள் கடவுளுடைய வழிகளாக இல்லை. (ஏசாயா 55:8, 9) அவர், வித்தியாசமான மனித ஆட்சிகள் தொடர்ந்திருக்க அனுமதித்திருப்பதற்குக் காரணம், சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பாக தந்திரமுள்ள சர்ப்பமாகிய பிசாசாகிய சாத்தான் எழுப்பிய பிரச்னைக்கு விடையளிக்கவே ஆகும். சாத்தான், கடவுளிடமிருந்து பிரிந்து சுதந்திரமாக இருப்பதைத் தெரிந்து கொள்வதற்கு நம்முடைய முதல் பெற்றோரை இணங்க வைத்தபோது, மனித வர்க்கத்துக்கு உண்மையில் கடவுளுடைய ஆட்சி தேவைத்தானா என்பது பற்றி கேள்வியை அவன் எழுப்பினான்.—ஆதியாகமம் 3:4, 5.
17 இதைத் தொடர்ந்து வந்த பல ஆயிர வருடங்களில் மனிதன் அவன் நினைத்துப் பார்க்க முடிந்த அனைத்து மனித அரசாங்கங்களையும் முயற்சித்துப் பார்க்க கடவுள் அனுமதித்திருக்கிறார். ஒரு சில வருடங்களோ அல்லது பல நூறு வருடங்களோ நிலைத்திருந்தாலுஞ்சரி, ஒவ்வொரு வகையான மனித அரசாங்கமும் மெய் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டு வர மிக மோசமாக தவறிவிட்டிருக்கிறது. எல்லா விதமான மனித அரசாங்கத்தின் கீழும் போரும், குற்றச் செயலும், திகிலும், மரணமுமே தொடர்ந்து மனிதனின் அனுபவமாக இருந்திருக்கிறது. சரித்திரம் முழுவதிலுமாக, “ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆண்டு” வந்திருக்கிறான். (பிரசங்கி 8:9) இன்று இது வித்தியாசமாக இல்லை. பிரச்னையைக் குறித்து அறிந்திருக்கும் எவருமே, இப்பொழுது, கடவுளுடைய தீர்க்கதரிசி சொன்னது போலவே சொல்லக்கூடும்: “யெகோவாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும் தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.”—எரேமியா 10:23.
18 இப்பொழுது பிரச்னையை முடிவாக தீத்துவிடுவதற்குரிய சமயம் அருகாமையில் இருக்கிறது. கடவுளுடைய ஆட்சி மட்டுமே, மனிதவர்க்கத்துக்கு மெய்யான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவர முடியும். என்றபோதிலும், “சமாதானம் பாதுகாப்பு” என்று தேசங்கள் சொல்லும்போது அவர்கள் கடவுளுடைய ஆட்சிக்கு ஆதரவைக் கொடுப்பதில்லை. அவர்கள் தங்கள் சொந்த மேட்டிமையான தத்துவங்களுக்கிசைவாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்க விரும்புகிறார்கள். ஆனால் காலம் முடிந்துவிட்டது! தீவிரமாக ஏதோ ஒன்று செய்யப்பட வேண்டும் என்பதைத் தேசங்கள் அறிந்திருக்கின்றன. மற்றபடி அனைத்துமே ஏதோ ஒரு அணுசக்தி அழிவில் இழக்கப்பட்டுவிடும். ஆகவே எரேமியா முன்னறிவித்த காரியத்தை அவர்கள் செய்வார்கள்: “சமாதானமில்லாதிருந்தும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.” ஆனால் அது வீணாக இருக்கும்!—எரேமியா 6:14; 8:11, 15.
முன்னுரைக்கப்பட்ட முடிவு
19 அழிவு “சடிதியாய் வரும்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறான். கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயா கூடுதலாக இவ்விதமாகச் சொல்லுகிறான்: “இதோ, அவர்களுடைய பராக்கிரம சாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து ஸ்தானாபதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்.” (ஏசாயா 33:7) யெகோவாவின் நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றம் பொல்லாத தேசங்களின் மீது தீவிரமாக எதிர்பாராத வகையில்—உண்மையில், “இரவிலே திருடன் வருகிற விதமாய்” வரும் என்பதாக அநேக இடங்களில் பைபிள் காண்பிக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:2, 3; எரேமியா 25:32, 33; செப்பனியா 1:14-18; 2 பேதுரு 3:10) உலகமானது ஏதோ ஒரு விதமான “சமாதானம் மற்றும் பாதுகாப்பான” காலத்தைச் சென்றெட்டிவிட்டது என்பதாக சப்தமாக அறிவிப்பு செய்யப்படும்போது, “யெகோவாவின் நாள்” பயங்கரமாக சடிதியாக வரும். கடவுளுடைய ஜனங்கள் “சமாதானம் பாதுகாப்பு” என்ற கூக்குரல், அது எதற்காக என்பதை உணர்ந்தவர்களாய், யெகோவா ஏற்பாடு செய்யும் அடைக்கலத்தில் பாதுகாப்பாக இருப்பார்கள்.—சங்கீதம் 37:39, 40; 46:1, 2; யோவேல் 3:16.
20 கடவுளுடைய வார்த்தையில், சர்வ தேச சங்கத்தின் மற்றும் ஐக்கிய நாடுகளின் போக்கு, ஏழு தலைகளையும் (அதன் தோற்றத்துக்கு காரணமாக இருந்திருக்கும் உலக வல்லரசுகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன) பத்துக் கொம்புகளையும் (அதை இப்பொழுது ஆதரிக்கும் அரசியல் அதிகாரங்கள்) உடைய ஒரு “சிவப்பு நிறமுள்ள மிருகத்துக்கு” ஒப்பிடப்பட்டிருக்கிறது. பிரட்டன் தேசத்து “சிங்கத்தைப்” போலவும் ருஷ்யா நாட்டின் “கரடி”யைப் போலவும் அது ஒரு அரசியல் “மிருகமாக” இருப்பதாக பைபிள் காண்பிக்கிறது. அதன் மேல் சவாரி செய்யும் ஸ்திரி, “மகா பாபிலோன் வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்.” (வெளிப்படுத்தின விசேஷம் 17:3-8) யெகோவாவையும் அவருடைய நீதியுள்ள ராஜ்யத்தையும் பிரதிநிதித்துவம் செய்யாத, பொய் மதத்தை யெகோவா எவ்விதமாக கருதுகிறார் என்பதை இது நன்றாக வெளிப்படுத்துகிறது. அரசியலில் ஈடுபடுவதன் மூலமாக அவள் ஆவிக்குரிய வேசித்தனஞ் செய்கிறாள். உலகின் சமாதானத்துக்கும் பாதுகாப்புக்குமான போராட்டங்களில் மதம் ஐ.நா.வோடு இணைந்திருப்பது இதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் அறிவித்து வரும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செய்தியிலிருந்துங்கூட சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டிருக்க அவள் விரும்புகிறாள். இதற்காகவே சாட்சிகளுடைய கிறிஸ்தவ ஊழியத்தைத் தடை செய்யும்படியாக அவள் சில அரசாங்கங்களின் மீது செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறாள்.—சங்கீதம் 2:1-3.
21 “யெகோவாவின் நாள்” எவ்விதமாக வரும்? மனித சரித்திரத்தின் இந்த இருண்ட இரவில் அது நிச்சயமாகவே “திருடனைப்” போல வரும். ஐ.நா. மிருகத்தின் தேசங்கள் திடீரென்று பொய் மதத்துக்கு எதிராக திரும்புவதற்கு கடவுள் அவைகளைத் தூண்டி இயக்கும் சமயமாக அது இருக்கும். மகா பாபிலோனை அவர்கள் வெகுவாக பகைப்பதைக் காண்பித்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி அவளைச் சுட்டெரித்துப் போடுவார்கள். இந்தத் தண்டனைத் தீர்ப்பு அத்தனை விரைவாக வருவதன் காரணமாக அவளுடைய அரசியல் கள்ளக்காதலர்கள், “ஐயையோ! பாபிலோன் மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே” என்பார்கள். ஆனால் தேசங்களும் அவைகளின் சேனைகளும் கடவுளுடைய ஜனங்களையுங்கூட தாக்குவார்கள். அப்பொழுது ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்து அந்த எல்லா சத்துருக்களையும் அழித்து பிரதான எதிரியாகிய பிசாசாகிய சாத்தானை அபிஸிற்குள் தள்ளிவிடுவார்.—வெளிப்படுத்தின விசேஷம் 17:16, 17; 18:10; 19:11-21; 20:1-3; எசேக்கியேல் 38:11, 16, 18-23 ஒப்பிடவும்.
22 கடைசியாக, மெய்யான சமாதானமும் பாதுகாப்பும் கடவுளுடைய ராஜ்யத்தின் கீழே தழைத்து ஓங்கும். (சங்கீதம் 72:1, 7; ஏசாயா 9:6, 7) இன்று ‘விழித்துக் கொண்டு தெளிந்தவர்களாயிருக்கும்’ அநேகர் அதைக் காண உயிரோடிருப்பார்கள் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. (1 தெசலோனிக்கேயர் 5:4-6) கிறிஸ்துவின் மூலமாக யெகோவா செய்திருக்கும் மீட்பின் ஏற்பாட்டில் விசுவாசத்தை அப்பியாசிக்கும் “சகல ஜாதிகளிலுமிருந்து . . . வரும் திரளான கூட்டமாகிய ஜனங்கள்” தேவனிடமிருந்து வரும் நித்திய சமாதானத்தை அனுபவித்துக் களிப்பதற்காக “மகா உபத்திரவத்திலிருந்து” பாதுகாக்கப்படுவர். (வெளிப்படுத்தின விசேஷம் 7:9-17; 21:3, 4) அவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்களாக! (w86 10/1)
[அடிக்குறிப்புகள்]
a உலக இராணுவம் மற்றும் சமுதாயச் செலவுகள்
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻ காலங்களும் சமயங்களும் ஏன் கடவுளுக்கும் நமக்கும் முக்கியமானவையாக இருக்கின்றன?
◻ “யெகோவாவின் நாள்” நெருங்கி வருவதை நாம் எவ்விதமாக கருத வேண்டும்?
◻ 1 தெசலோனிக்கேயர் 5:3-ன் கூக்குரலில் பங்கு கொள்வது யார்? எப்பொழுது?
◻ அந்தக் கூக்குரல் ஆரம்பித்து வைக்கும் முக்கியமான சம்பவங்கள் யாவை?
[கேள்விகள்]
1, 2. போரையும் சமாதானத்தையும் குறித்து ஒரு இந்து ஞானி என்ன சொன்னார்? (பி) தேவனிடமிருந்து வரும் சமாதானத்தை அனுபவிக்கும் சந்தோஷமுள்ளவர்கள் யார்?
3. இன்று ஏன் பூமியில் மெய்யான சமாதானம் இல்லை?
4. (எ) உலகின் காட்சி எவ்விதமாக உள்ளது? (பி) என்றபோதிலும் யெகோவாவின் வணக்கத்தாருக்கு என்ன உறுதியான நம்பிக்கை இருக்கிறது?
5. 1 தெசலோனிக்கேயர் 5:1-ன் சம்பந்தமாக என்ன கேள்வி எழும்புகிறது?
6. ‘காலங்களும் சமயங்களும்’ கடவுளுக்கு முக்கியமானவை என்பது நமக்கு எப்படித் தெரியும்?
7. “காலங்களையும் சமயங்களையும்” குறித்து தெசலோனிக்கேயர்களுக்கு எழுத வேண்டிய அவசியம் ஏன் பவுலுக்கு இருக்கவில்லை?
8. நாம் ஏன் விழித்திருந்து சுறுசுறுப்பாயிருக்க வேண்டும்?
9. (எ) என்ன கூக்குரல் எழும்புகிறது? அதில் ஏன் மெய் கிறிஸ்தவர்கள் பங்கு கொள்வதில்லை? (பி) இதை எழுப்புகிறவர்கள் யார்? எரேமியாவின் நாட்களிலிருந்து ஆட்சியாளர்களோடு ஒப்பிடுகையில் அவர்கள் எவ்விதமாக இருக்கிறார்கள்?
10. இன்றைய உலக நிலைமைக்கு வழிநடத்தியிருக்கும் சங்கிலித் தொடரான நிகழ்ச்சிகள் யாவை?
11. உலகம் எதிர்படும் நெருக்கடியான நிலை எவ்வளவு வினைமையானதாக இருக்கிறது?
12. 1986-க்கு ஐ.நா. செய்திருக்கும் அறிக்கை யாது? இதற்குத் தேசங்களின் பிரதிபலிப்பு என்னவாக இருந்திருக்கிறது?
13. மதத் தலைவர்கள் எவ்விதமாக ஆதரவைக் கொடுத்திருக்கிறார்கள்?
14. சமாதானத்துக்கான திட்டம் எவ்விதமாக மாத்திரமே வெற்றியடையக்கூடும்?
15. பவுல் அடுத்ததாகச் சொல்லும், அதிர்ச்சி தரும் காரியம் என்ன?
16. தேசங்களின் வழிகள் ஏன் கடவுளுடைய வழிகளாக இல்லை?
17. மனித ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் பதிவு என்ன? இது எதை நிரூபிக்கிறது?
18. தேசங்கள் “சமாதானம் பாதுகாப்பு” என்று சொல்வது ஏன் வீணானதாக இருக்கும்?
19. “யெகோவாவின் நாள்” எவ்விதமாக வரும்?
20. (எ) ஐ.நா. என்ன விதமான “மிருகமாக” இருக்கிறது? (பி) பொய் மதத்தை யெகோவா எவ்விதமாக கருதுகிறார்? ஏன்?
21. (எ) என்ன நடவடிக்கை “யெகோவாவின் நாள்” ஆரம்பமாவதை உணர்த்துவதாக இருக்கும்? (பி) அடுத்ததாக அந்த நாள் என்ன இறுதி கட்டத்துக்குச் செல்கிறது?
22. (எ) விசுவாசிக்கும் மனிதர்களுக்கு இன்று என்ன மகத்தான எதிர்பார்ப்பு இருக்கிறது? (பி) நீங்கள் எவ்விதமாக தேவனிடமிருந்து வரும் சமாதானத்தை அனுபவித்துக் களிக்கலாம்?