-
“கேட்டின் மகனாகிய பாவமனுஷனை” அடையாளங்கண்டுகொள்ளுதல்காவற்கோபுரம்—1990 | செப்டம்பர் 1
-
-
3. இந்த அக்கிரமக்காரனிடமாக பைபிள் எப்படி நம் கவனத்தைத் திருப்புகிறது?
3 பைபிள் இந்தக் கேட்டின் மகனாகிய பாவ மனுஷனைப் பற்றி 2 தெசலோனிக்கேயர் 2:3-ல் சொல்லுகிறது. கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டவனாக அப்போஸ்தலனாகிய பவுல்: “எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் (இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையை அழிக்கும் யெகோவாவின் நாள்) வராது” என்று எழுதினான். இந்த ஒழுங்குமுறையின் முடிவுக்கு முன்பாக விசுவாச துரோகம் அதிகரித்து, கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் தோன்றுவான் என்பதாக இங்கே பவுல் தீர்க்கதரிசனமுரைத்தான். உண்மையில், பவுல் 7-வது வசனத்தில்: “அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய்கிறது” என்று குறிப்பிட்டான். எனவே முதல் நூற்றாண்டிலேயே இந்த அக்கிரமக்காரன் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டான்.
அக்கிரமக்காரனின் துவக்கம்
4. இந்தக் கேட்டின் மகனாகிய பாவ மனுஷனை படைத்துருவாக்கி ஆதரித்து வருவது யார்?
4 இந்தக் கேட்டின் மகனாகிய பாவமனுஷனை படைத்துருவாக்கி ஆதரித்து வருவது யார்? பவுல் பதிலளிக்கிறான்: “அந்த அக்கிரமக்காரனின் வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப் போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.” (2 தெசலோனிக்கேயர் 2:9, 10) எனவே சாத்தானே கேட்டின் மகனாகிய பாவ மனுஷனின் பிதாவும் ஆதரிப்பவனுமாக இருக்கிறான். சாத்தான் யெகோவாவுக்கும் அவர் நோக்கங்களுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் எதிராக இருப்பது போல கேட்டின் மகனும், அவன் அதை உணர்ந்தாலும், உணராவிட்டாலும் அவ்வாறே இருக்கிறான்.
5. அக்கிரமக்காரனுக்கும் அவனைப் பின்பற்றுகிறவர்களுக்கும் என்ன முடிவு காத்துக்கொண்டிருக்கிறது?
5 கேட்டின் மகனாகிய பாவமனுஷனோடு போகும் எவரும் அவன் அனுபவிக்கும் அதே முடிவை அனுபவிப்பர்—அழிவு: “அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் (இயேசு, NW) . . . அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம் பண்ணுவார்.” (2 தெசலோனிக்கேயர் 2:8) கேட்டின் மகனாகிய பாவமனுஷன் மற்றும் அவனுடைய ஆதரவாளர்களின் (“அழிந்துபோய்கொண்டிருப்பவர்கள்”) அழிவுக்கான காலம் வெகு சீக்கிரத்தில் வரும். “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும் போது அப்படியாகும். அவர்கள் . . . நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.”—2 தெசலோனிக்கேயர் 1:6-8, 10.
6. இந்த அக்கிரமக்காரனைப் பற்றி மேலுமான என்ன குறிப்புகளை பவுல் கொடுக்கிறான்?
6 அக்கிரமக்காரனைப்பற்றி மேலும் விவரிப்பவனாக பவுல்: “அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், ‘தேவ’னென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்” என்று சொல்கிறான். (2 தெசலோனிக்கேயர் 2:4) எனவே சாத்தான், கடவுளுடைய சட்டத்திற்கு மேலாகத் தன்னை வைத்துக்கொள்ளுகிறவனாக இருக்கும் ஓர் அக்கிரமக்காரனை, ஆராதிக்கப்படுவதற்கு பொய்யான ஒரு பொருளை எழும்பப்பண்ணுவான், என்று பவுல் எச்சரிக்கிறான்.
அக்கிரமக்காரனை அடையாளங் கண்டுகொள்ளுதல்
7. பவுல் தனிப்பட்ட ஓர் ஆளைப் பற்றிப் பேசிக்கொண்டில்லை என்று நாம் ஏன் தீர்மானிக்கலாம்? கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் என்ற சொற்றொடர் எதைக் குறிக்கிறது?
7 பவுல் தனிப்பட்ட ஒருவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தானா? இல்லை, அந்த “மனுஷன்” பவுலின் நாட்களிலே இருந்திருக்கிறான். மேலும் இந்த ஒழுங்குமுறையின் முடிவில் யெகோவா அவனை அழிக்கும் வரை தொடர்ந்து இருப்பான் என்றும் அவன் குறிப்பிடுகிறான். ஆகவே அவன் பல நூற்றாண்டுகளாக இருக்கிறான். தெளிவாகவே, எந்தச் சொல்லர்த்தமான மனிதனும் அந்த அளவு நீண்டகாலம் வாழ்ந்ததில்லை. எனவே “கேட்டின் மகனாகிய பாவ மனுஷன்” என்ற சொற்றொடர் ஒரு குழுவை அல்லது ஒரு வகுப்பைச் சேர்ந்த ஆட்களைக் குறிக்க வேண்டும்.
8. கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் யார்? அதைக் காணச் செய்யும் சில அடையாளக் குறிப்புகள் என்ன?
8 அவர்கள் யார்? ஆதாரம் காண்பிக்கும் வண்ணமாக இவர்கள் பெருமையான, பேராசையான திட்டங்களைக் கொண்ட கிறிஸ்தவ மண்டல குருவர்க்க வகுப்பினராக, பல நூற்றாண்டுகளாகத் தங்களையே சட்டமாக வைத்துக்கொண்டவர்களாயிருக்கின்றனர். உண்மைகள் காண்பிக்கும் விதமாக இவர்கள் கிறிஸ்தவமண்டலத்தின் ஆயிரக்கணக்கான வித்தியாசமான மதங்களாகவும் பிரிவுகளாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி குருமார் இருந்தபோதிலும் ஒவ்வொருவரும் கொள்கையில் அல்லது செயல்களில் ஒருவருக்கொருவர் முரண்படுகிறவர்களாக இருக்கின்றனர். இந்தப் பிரிவினையான நிலைதானே அவர்கள் கடவுளுடைய சட்டத்தைப் பின்பற்றுகிறதில்லை என்பதற்கு தெளிவான ஆதாரமாக இருக்கிறது. அவர்கள் கடவுளிடமிருந்து வந்தவர்களாக இருக்க முடியாது. (மீகா 2:12; மாற்கு 3:24; ரோமர் 16:17; 1 கொரிந்தியர் 1:10 ஒப்பிடவும்.) இந்த எல்லா மதங்களிலும் பொதுவாக இருக்கும் காரியம் அவர்கள் பைபிள் போதனைகளைக் கடைப்பிடிப்பதில்லை. “எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டா”மென்ற கட்டளையை மீறுகின்றனர்.—1 கொரிந்தியர் 4:6; மத்தேயு 15:3, 9, 14-ஐயும் பார்க்கவும்.
9. வேதப்பூர்வமற்ற என்ன நம்பிக்கைகளை இந்த அக்கிரக்காரன் வேதாகமச் சத்தியங்களுக்குப் பதிலாக கொண்டிருக்கிறான்?
9 இவ்வாறு பாவ மனுஷன் ஒரு கூட்டு மனிதன்: கிறிஸ்தவமண்டல மத குருவர்க்கத்தினர் ஆவர். அவர்கள் அனைவரும், போப்புகளாகவோ, மதகுருமார்களாகவோ, கோத்திரப் பிதாக்களாகவோ, அல்லது புராட்டஸ்டன்ட் பிரசங்கிகளாகவோ, அவர்கள் யாராக இருந்தாலும், கிறிஸ்தவமண்டல மதசம்பந்தமான பாவங்களுக்குப் பொறுப்புடையவர்களாகிறார்கள். அவர்கள் தேவனுடைய சத்தியத்தை வேதபூர்வமற்ற போதனைகளாகிய மனித ஆத்துமாக சாவாமை, நரக அக்கினி, உத்தரிக்கும் ஸ்தலம் மற்றும் திரித்துவக் கோட்பாடு போன்ற புறமத பொய்களுடன் மாற்றியிருக்கிறார்கள். “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; . . . அவன் பொய்யனும் பொய்க்குப் பிதா”வுமாயிருக்கிறான் என்பதாக இயேசு கூறிய மதத்தலைவர்களைப் போல அவர்கள் இருக்கிறார்கள். (யோவான் 8:44) கடவுளுடைய சட்டங்களை மீறும்செயல்களில் அவர்கள் பங்குகொள்வதால் அவர்களுடைய செயல்களும்கூட அவர்கள் பாவ மனுஷன் என்பதாக வெளிப்படுத்துகிறது. அப்படிப்பட்டவர்களிடம் இயேசு: “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்” என்று கூறுகிறார்.—மத்தேயு 7:21–23.
தங்களைத்தாங்களே உயர்த்திக்கொள்ளுதல்
10. அக்கிரமக்காரன் அரசியல் ஆட்சியாளர்களுடன் என்ன உறவை வைத்திருந்தான்?
10 சரித்திரம் காண்பித்திருக்கிற பிரகாரம், இந்தக் கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் உண்மையில் உலக ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கும் அளவிற்குப் பெருமையையும் அகந்தையையும் வெளிக்காட்டியிருக்கிறான். ‘ராஜாக்களின் தெய்வீக உரிமை’ என்ற கொள்கையின் தலைக்கீடு உரையின்படி இந்தக் குருவர்க்கத்தினர் அரசர்களுக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கும் முக்கியமான மத்தியஸ்தர்களாகத் தங்களை உரிமை பாராட்டினார்கள். அவர்கள், அரசர்களையும் பேரரசர்களையும் சிங்காசனத்தில் ஏறும்படியும், சிங்காசனத்திலிருந்து இறங்கும்படியும் செய்திருக்கிறார்கள். பொதுமக்களை ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகவோ எதிராகவோ திருப்பும் வல்லமையையும் கொண்டிருந்தனர். இதன் பலனாக, இயேசுவை நிராகரித்த யூத பிரதான ஆசாரியர்களைப் போல இவர்களும்: “இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை” என்று சொல்கிறார்கள். (யோவான் 19:15) இருந்தபோதிலும் இயேசு தெளிவாகவே: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல” என்று கற்பித்தார்.—யோவான் 18:36.
11 பொதுமக்களுக்கும் மேலாகத் தங்களை உயர்த்துகிறவர்களாக, இந்த அக்கிரமக்கார வகுப்பார் வெவ்வேறு வித உடைகளை அணியக் கற்றுக்கொண்டிருக்கின்றனர், பொதுவாக கறுப்பு நிற உடைகள். மேலுமாக கிரீடங்கள், சிலுவைகள், நீண்டதொப்பிகள் ஆகியவற்றுடன் தோற்றத்தால் கவர்ச்சியை உட்படுத்தும் அரசுரிமை சின்னங்களைக் கொண்டு தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். (மத்தேயு 23:5, 6 ஒப்பிடவும்.) ஆனால் இயேசுவோ அல்லது அவரைப் பின்பற்றியவர்களோ இப்படிப்பட்ட உடைகளை அணியவில்லை; அவர்கள் சாதாரண ஆட்களைப் போலத்தானே உடுத்தியிருந்தனர். மேலும் இந்தக் குருவர்க்கத்தினர் “தந்தை,” “புனிதத் தந்தை,” “அருட்டிரு,” “சமயமண்டலத் தலைவர்,” “மேதகையர்,” “கார்டினல்” போன்ற பட்டங்களைத் தங்களுக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவை ‘எல்லாருக்கும் மேலாகத் தங்களை உயர்த்திக்’ கொள்வதை சேர்ந்ததாக இருக்கிறது. மதசம்பந்தமான பட்டங்களைக் குறித்து இயேசு: “பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்” என்று கற்பித்தார். (மத்தேயு 23:9) அதேவிதமாகவே எலிகூ யோபுவின் மாய்மாலமான தேற்றரவாளர்களைக் கண்டனம் செய்யுமிடத்து: “நான் ஒருவனுடைய முகத்தைப் பாராமலும் ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் (பட்டங்களை வழங்காமலும், NW) இருப்பேனாக” என்று சொன்னான்.—யோபு 32:21.
12. யாருக்கு இந்த குருவர்க்கத்தினர் உண்மையில் சேவை செய்கிறார்கள் என்று பவுல் குறிப்பிட்டான்?
12 பவுல் ஏற்கெனவே தன்னுடைய நாட்களிலே கேட்டின் மகனாகிய பாவமனுஷன் செயல்பட துவங்கிவிட்டான் என்று சொன்னபோது அந்த அக்கிரமக்காரனின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் ஆட்களைப் பற்றியும் அவன் சொன்னான்: “அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.”—2 கொரிந்தியர் 11:13–15.
மெய்வணக்கத்திற்கெதிரான கலகம்
13. பவுல் முன்னுரைத்த விசுவாசதுரோகம் என்ன?
13 இந்தக் கேட்டின் மகனாகிய பாவமனுஷன் விசுவாச துரோகத்துடன் சேர்ந்து வளருவான் என்று பவுல் சொன்னான். உண்மையில் “விசுவாச துரோகம் முந்திநேரிட் . . . டாலொழிய அந்த நாள் (இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையை அழிக்கும் யெகோவாவின் நாள்) வராது” என்று சொல்வதன் மூலம் பவுல் முதலாவது வழிகாட்டும் குறிப்பு ஒன்றை, இந்த அக்கிரமக்கார வகுப்பாரை அடையாளங் கண்டுகொள்ள கொடுக்கிறான். (2 தெசலோனிக்கேயர் 2:2, 3) ஆனால் “விசுவாச துரோகம்” என்றால் என்ன? இந்தச் சந்தர்ப்பத்தில் இது சோர்வுறுவதையோ அல்லது ஆவிக்குரிய பலவீனத்தால் வீழ்ந்துபோவதையோ குறிக்காது. “விசுவாச துரோக”த்துக்கு உபயோகப்படுத்தப்படும் கிரேக்க வார்த்தை மற்ற காரியங்களோடுகூட “சமயம் கைவிடு”வதை அல்லது “மீறுதலை”க் குறிக்கிறது. அநேக மொழிபெயர்ப்புகளில் இது “கலகம் செய்தல்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வில்லியம் பார்க்லேயின் மொழிபெயர்ப்பு: “பெரிய கலகம் நடைபெறும்வரை அந்த நாள் வராது” என்று குறிப்பிடுகிறது. தி ஜெருசலேம் பைபிள் “பெரிய மீறுதல்” என்று அதை அழைக்கிறது. எனவே “விசுவாச துரோகம்” என்பது மெய் வணக்கத்திற்கெதிரான கலகம் என்பதையே பவுல் இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகிறான்.
14. இந்த விசுவாச துரோகம் எப்பொழுது தீவிரமாக வளர ஆரம்பித்தது?
14 இந்த விசுவாச துரோகம், இந்தக் கலகம் எப்படி வளர ஆரம்பித்தது? 2 தெசலோனிக்கேயர் 2:6-ல் பவுல் தன்னுடைய நாளைப் பற்றி எழுதுகையில் அக்கிரமக்காரனுக்கு “தடையாகச் செயல்பட்ட ஒரு பொருளைப்” பற்றி எழுதினான். அது என்ன? அது அப்போஸ்தலர்களுடைய கட்டுப்படுத்தும் அல்லது தடையாக செயல்படும் சக்தியாக இருந்தது. அவர்களுடைய பிரசன்னமும், பரிசுத்த ஆவியால் அவர்கள் பெற்றுக்கொண்ட வல்லமை வாய்ந்த வரங்களும் இந்த விசுவாச துரோகம் தொத்து நோய் போல் பரவுவதைத் தடை செய்திருந்தது. (அப்போஸ்தலர் 2:1–4; 1 கொரிந்தியர் 12:28) ஆனால் ஏறக்குறைய முதல் நூற்றாண்டின் இறுதியில், அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப்பின் முட்டுக்கட்டையைப் போல் தடையாக இருந்தவை நீக்கப்பட்டன.
வேதப்பூர்வமற்ற குருவர்க்க வகுப்பின் வளர்ச்சி
15. கிறிஸ்தவ சபையிலுள்ள என்ன ஏற்பாட்டை இயேசு ஸ்தாபித்தார்?
15 முதல் நூற்றாண்டில் இயேசு ஸ்தாபித்த சபையானது மூப்பர்கள் (கண்காணிகள்) மற்றும் உதவிஊழியர்களின் வழிநடத்துதலின் கீழ் வளர்ந்தது. (மத்தேயு 20:25–27; 1 தீமோத்தேயு 3:1–13; தீத்து 1:5–9) இவர்கள் சபையிலிருந்து எடுக்கப்பட்டார்கள். இவர்கள் இயேசுவைப் போல் விசேஷித்த இறைமையியல் சார்ந்த எந்தப் பயிற்சியையும் பெறாத தகுதியுள்ள ஆவிக்குரிய மனிதர்களாக இருந்தனர். உண்மையில், அவருடைய எதிரிகள்: “இவர் கல்லாதவராயிருந்தும் வேதஎழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார்” என்று ஆச்சரியப்பட்டார்கள். (யோவான் 7:15) அப்போஸ்தலர்களைப் பற்றியதிலும் மதத்தலைவர்கள் இதேக் காரியத்தையே கவனித்தனர்: “பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.”—அப்போஸ்தலர் 4:13.
16. விசுவாசதுரோகத்தின் விளைவு எப்படி முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபை அமைப்பு மாதிரியிலிருந்து விலகிப் போகும்படியாகச் செய்தது?
16 என்றபோதிலும், யூதமதத்தலைவர்களிடமிருந்தும், காலப்போக்கில் புறமத ரோம மதப்பின்னணியிடமிருந்தும் விசுவாச துரோகிகள் கொள்கைகளைப் பெற்று அதை நுழைத்தனர். காலங்கடந்து செல்லுகையில் மெய் விசுவாசத்திலிருந்து விலகி செல்லுதல் நிகழ ஆரம்பித்தது, வேதப்பூர்வமற்ற ஒரு குருவர்க்க வகுப்பு வளர்ந்தது. இறைநூல் கல்லூரியிலிருந்து தேர்ச்சிப் பெற்ற குருக்களிலிருந்து மேற்றிராணியார்களும் அதிமேற்றிராணியார்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான இவர்களிலிருந்து எடுக்கப்பட்டவர்கள் போப்பாண்டவருக்கடுத்த குரு வகுப்பில் இருந்தனர். இவர்களைக் கொண்ட கல்லூரியை ஒரு கிரீடம் அணிந்த போப்பாண்டவர் ஆளத்துவங்கினார். இவ்வாறு முதல் நூற்றாண்டுக்கு வெகுகாலத்துக்குப் பின் அல்ல, முன்பாகவே ஒரு மறைஞான குருவர்க்க வகுப்பு கிறிஸ்தவமண்டலத்தைக் கைப்பற்றியது. இந்த வகுப்பு முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ மூப்பர்கள் மற்றும் உதவிஊழியர்களின் மாதிரியைப் பின்பற்றியதல்ல மாறாக புறமத ஒழுங்கு முறையைப் பின்பற்றியதாக இருந்தது.
17. முக்கியமாக எப்பொழுதிலிருந்து அக்கிரமக்காரனின் ஆளும் அதிகாரத்தின் வலிமை கூடியது?
17 பொ.ச. மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, மத நம்பிக்கை கொண்ட எளியோர்கள் பாமரர் என்ற இரண்டாவது வகுப்பு நிலைக்குத் தாழ்த்தப்பட்டனர். விசுவாச துரோக கேட்டின் மகனாகிய பாவமனுஷன் படிப்படியாக ஆளும் அதிகாரத்தை ஏற்று ஆள ஆரம்பித்தான். ரோமப் பேரரசர் கான்ஸ்டன்டீன் காலத்தில் முக்கியமாக பொ.ச. 325-ல் நைசியா பேரவைக்குப் பின் இந்த ஆளும் அதிகாரத்தின் வலிமை கூடியது. அதன்பிறகு சர்ச்சும் அரசும் ஒன்றாக ஒட்டவைக்கப்பட்டது. இவ்வாறு கேட்டின் மகனாகிய பாவமனுஷன்—கிறிஸ்தவமண்டல குருவர்க்கத்தினர்—மெய்யான கடவுளாகிய யெகோவாவுக்கு எதிராக கலகம் செய்யும் விசுவாச துரோகிகளாக பல நூற்றாண்டுகளின் நீண்ட வரிசையில் இருக்கின்றனர். அவர்கள் கடவுளுடையதல்ல, தங்களுடைய சொந்த சட்டங்களையும் ஏற்பாடுகளையுமே பின்பற்றுகின்றனர்.
புறமத போதனைகள்
18. தேவதூஷணமான என்ன புறமதப் போதனைகளை அக்கிரமக்காரன் பின்பற்றினான்?
18 வளர்ந்துவரும் கேட்டின் மகனாகிய பாவ மனுஷனும்கூட புறமதப் போதனைகளை கடன் வாங்கினான். உதாரணமாக, “நான் கர்த்தர், (யெகோவா, NW) இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், . . . கொடேன்.” “நானே கர்த்தர், (யெகோவா, NW) வேறொருவர் இல்லை; என்னைத் தவிர தேவன் இல்லை.”—இவ்வாறு சொன்னவருக்குப் பதிலாக இரகசியமான புரிந்துகொள்ளமுடியாத திரித்துவக் கடவுள் வைக்கப்பட்டது. (ஏசாயா 42:8; 45:5) கடவுளுடைய சத்தியங்களுக்கு மாற்றுப்பொருளான இந்த மனித, மற்றும் புறமத கருத்துகளும் மேலுமான தேவதூஷணத்தை உட்படுத்தி விரிவாக்கப்பட்டது: வேதாகமத்தின் தாழ்மையான மரியாள் கிறிஸ்தவமண்டலத்தின் “தேவனுடைய தாய்” ஆக வணங்கப்பட்டாள். இவ்வாறு பொய்யான போதனைகளை முன்னேற்றுவிப்பவர்கள், இயேசுவால் விதைக்கப்பட்ட நல்ல விதைகளை நெருக்கிப் போட சாத்தான் தன் படையாட்களை, மதகுருமார் வகுப்பினரைக் கொண்டு களைகளை விதைக்கிறான்.—மத்தேயு 13:36–39.
19. கிறிஸ்தவமண்டலம் நூற்றாண்டுகளினூடாக எப்படி துண்டுதுண்டாக பிரிந்தது? ஆனால் எது தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது?
19 உட்பிரிவுகளும், பிளவுகளும் ஏற்பட்டபோது கிறிஸ்தவமண்டலம் துண்டுதுண்டாக பல நூற்றுக்கணக்கான மதங்களாகவும், பிரிவுகளாகவும் ஆனது. ஆனால் ஒவ்வொரு புதிய மதமும் அல்லது பிரிவும் ஒருசில வேறுபாடுகளுடன் குருவர்க்கம்–பாமரர் என்ற பிரிவுடன் இருக்கிறது. இவ்வாறு கேட்டின் மகனாகிய பாவமனுஷனின் வகுப்பு இன்றைய நாள்வரை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் இன்னும் தொடர்ந்து அது தன்னை பொதுமக்களுக்கு மேலாக வேறுபடுத்தும் உடைகளுடனும் மதிப்பு மிகுந்து ஒலிக்கும் பட்டங்களுடனும் வித்தியாசமாக தன்னை உயர்த்திவைத்திருக்கிறது. தெளிவாகவே, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வகுப்பார் தங்களை மகிமைப்படுத்தி, தேவனுக்குச் சமமான ஒரு நிலைக்குத் தங்களை உயர்த்துவார்கள் என்று கூறியபோது பவுல் மிகைப்படுத்திக்கொண்டில்லை.
போப்பாதிக்கம்
20. ஒரு கத்தோலிக்க ஆதார ஏடு எவ்வாறு போப்பாண்டவரை விவரிக்கிறது?
20 அப்படிப்பட்ட மேன்மைப்படுத்துதலுக்கு ஓர் உதாரணம் ரோமிலுள்ள போப்பாதிக்கமாகும். இத்தாலியில் வெளியிடப்பட்ட லூசியோ ஃபெராரிஸின் பிரசங்க அகராதி ஒன்று போப்பை “அவர் வெறுமென ஒரு மனிதன் அல்ல, தேவனைப் போன்ற, தேவனுடைய போப்பாண்டவராக இருக்கும் அளவுக்கு மேன்மையையும், உயர்பதவியையும் உடைய ஒருவராக” இருக்கிறார் என்று விவரிக்கிறது. அவருடைய கிரீடம் “பரலோகம், பூமி மற்றும் நரகம் இவற்றின் அரசனாக” காட்டும் ஒரு முக்கூறான கிரீடமாக இருக்கிறது. அதே அகராதி தொடருகிறது: “போப் பூமியில் கடவுளாகவும் கிறிஸ்துவின் உண்மையுள்ளவர்கள் அனைவரின் ஒரே பிரபுவாகவும் ராஜாக்களுக்கெல்லாம் மகா ராஜாவாகவும் இருக்கிறார்.” மேலும் அது கூறுகிறது: “போப் தெய்வீக சட்டத்துக்கு எதிராக சில சமயங்களில் செயல்படலாம்.” மேலுமாக புதிய கத்தோலிக்க அகராதி போப்பைப் பற்றி “அவருடைய ஸ்தானாதிபதிகளின் சாமர்த்தியப் பேச்சு வார்த்தை நடத்தும் குழுவின் மற்ற அங்கத்தினர்களுக்கும் முதன்மையாயிருக்கிறார்” என்று குறிப்பிடுகிறது.
21. பேதுரு, யோவான் இவர்களுடைய செயல்களுடன் போப்பாண்டவரின் செயல்களை வேறுபடுத்திக் காட்டவும்.
21 இயேசுவின் சீஷர்களைப் போலில்லாமல் போப் பெரிய ஆடைகளை எப்பொழுதும் உடுத்துபவராக மனிதர்களின் இச்சக வார்த்தைகளை வரவேற்பவராகவும் இருக்கிறார். ஜனங்கள் முழங்கால் படி இடவும், அவருடைய மோதிரத்தை முத்தமிடவும், விசேஷமான நாற்காலியில் அவரை வைத்து தங்கள் தோள்களில் தூக்கிச் செல்வதையும் போப் அனுமதிக்கிறார். இந்த நூற்றாண்டுகளினூடே போப்புகள் என்னே மாயையை வெளிப்படுத்தியிருக்கின்றனர்! தன்னுடைய பாதங்களில் முழங்கால் படியிட்டுப் பணிவதற்கு வந்த ரோம அதிகாரியாகிய கொர்நேலியுவிடம் மனத்தாழ்மையுள்ள எளிமையான பேதுரு சொன்ன வார்த்தைகளுக்கு எவ்வளவு முரணாக இருக்கிறது: “எழுந்திரும், . . . நானும் ஒரு மனிதன் தானே”! (அப்போஸ்தலர் 10:25, 26) அப்போஸ்தலனாகிய யோவானுக்கு வெளிப்படுத்துதலைக் கொடுத்த தேவதூதனோடு ஒப்பிடும்போது என்னே ஒரு முரண்பாடு! யோவான் வணங்கும்படி அந்தத் தூதனின் பாதத்தில் விழ அந்தத் தூதன் “நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுது கொள்” என்றான்.—வெளிப்படுத்துதல் 22:8, 9.
22. வேதப்பூர்வமான எந்தச் சட்டத்தின் மூலம் அக்கிரமக்காரனை அடையாளம் கண்டுகொள்ளலாம்?
22 குருவர்க்க வகுப்பினரைப் பற்றிய இந்த மதிப்பீடு அதிக கடுமையானதா? “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்ற பொய்த் தீர்க்கதரிசிகளை அடையாளங்காணச் செய்யும் இயேசு கொடுத்த இந்தச் சட்டத்தைப் பொருத்துவதன் மூலம் இதை நாம் தீர்மானிக்கலாம். (மத்தேயு 7:15, 16) கடந்த நூற்றாண்டுகளிலும் நம்முடைய இந்த 20-ம் நூற்றாண்டிலும் குருவர்க்கத்தினரின் கனிகள் என்ன? இந்தக் கேட்டின் மகனாகிய பாவமனுஷனின் முடிவு என்னவாக இருக்கும்? யாரும் அந்த முடிவில் பங்குகொள்வர்? இந்த அக்கிரமக்காரன் சம்பந்தமாக உண்மையில் கடவுள் பயமுள்ள ஆட்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது? பின்வரும் கட்டுரைகள் இந்தக் குறிப்பை ஆராயும். (w90 2/1)
-
-
“கேட்டின் மகனாகிய பாவமனுஷ”னுக்கு எதிரான கடவுளின் நியாயத்தீர்ப்புகாவற்கோபுரம்—1990 | செப்டம்பர் 1
-
-
“கேட்டின் மகனாகிய பாவமனுஷ”னுக்கு எதிரான கடவுளின் நியாயத்தீர்ப்பு
“நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.” —மத்தேயு 7:19.
1, 2. கேட்டின் மகனாகிய பாவமனுஷன் எது? அது எப்படி வளர்ந்தது?
“கேட்டின் மகனாகிய பாவ மனுஷ”னின் வருகையைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைக்கும்படி கடவுளால் ஏவப்பட்டபொழுது அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய நாட்களிலேயே அது தோன்ற ஆரம்பித்துவிட்டதென சொன்னான். முந்தையக் கட்டுரை விளக்கியவிதமாகவே, மெய்க்கிறிஸ்தவத்திற்கெதிராக விசுவாச துரோகம் செய்வதில் முன்நின்று வழிநடத்தும் ஒரு தனிப்பட்ட வகுப்பைப் பற்றி பவுல் பேசிக்கொண்டிருந்தான். சத்தியத்திலிருந்து விலகி வருதல் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் முக்கியமாக கடைசி அப்போஸ்தலனின் மரணத்துக்குப் பின் ஆரம்பமானது. இந்த அக்கிரமக்கார வகுப்பு கடவுளுடைய வார்த்தைக்கு எதிராக இருக்கும் கொள்கைகளையும் செயல்களையும் அறிமுகப்படுத்தியது.—2 தெசலோனிக்கேயர் 2:3, 7; அப்போஸ்தலர் 20:29, 30; 2 தீமோத்தேயு 3:16, 17; 4:3, 4.
-