யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
தெசலோனிக்கேயருக்கும் தீமோத்தேயுவுக்கும் எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
அப்போஸ்தலன் பவுல் தெசலோனிக்கே பட்டணத்திற்கு சென்றிருந்தபோது அங்கே ஒரு சபையை ஆரம்பித்திருந்தார். அப்போது முதற்கொண்டு அந்தச் சபையார் பல உபத்திரவங்களைச் சந்தித்திருக்கிறார்கள். அங்கிருந்து புறப்பட்டு பவுலைப் பார்க்கச் செல்கிற தீமோத்தேயு அந்தச் சபையைக் குறித்த நல்ல செய்தியை எடுத்துச் செல்கிறார். அந்தச் சமயத்தில் தீமோத்தேயுவின் வயது 20-களில் இருந்திருக்கலாம். அவர் சொன்ன செய்தியைக் கேட்ட பவுல், தெசலோனிக்கேயரைப் பாராட்டியும் உற்சாகப்படுத்தியும் கடிதம் எழுதத் தூண்டப்படுகிறார். இக்கடிதம் பொ.ச. 50-ன் பிற்பகுதியில் எழுதப்பட்டிருக்கலாம். கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பவுல் எழுதிய முதல் கடிதம் இதுதான். அதன் பிறகு சீக்கிரத்திலேயே அவர்களுக்கு இரண்டாவது கடிதத்தையும் எழுதுகிறார். இக்கடிதத்தின் மூலம் அந்தக் கிறிஸ்தவர்களில் சிலருக்கு இருந்த தவறான கருத்துகளைத் திருத்துகிறார், விசுவாசத்தில் உறுதியாய் இருக்கும்படி சகோதரர்களை ஊக்கப்படுத்துகிறார்.
சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு, பவுல் மக்கெதோனியாவில் இருக்கையில் எபேசுவிலிருந்த தீமோத்தேயுவுக்கு கடிதம் எழுதுகிறார். தீமோத்தேயு எபேசுவிலேயே தங்கியிருந்து, சபையிலுள்ள கள்ளப் போதகர்களுக்குச் செவிசாய்க்காமல் கடவுளோடுள்ள தங்கள் பந்தத்தைக் காத்துக்கொள்ள சகோதர சகோதரிகளுக்கு உதவும்படி அக்கடிதத்தில் உற்சாகப்படுத்துகிறார். பொ.ச. 64-ல் ரோம் நகரே தீப்பிடித்து எரிந்து பெரும் நாசம் ஏற்பட்டபோது, கிறிஸ்தவர்கள் கடும் துன்புறுத்தலை அனுபவிக்கிறார்கள். அந்தச் சமயத்தில்தான் பவுல் தீமோத்தேயுவுக்கு தன்னுடைய இரண்டாம் கடிதத்தை எழுதுகிறார். கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அவர் எழுதிய கடிதங்களில் இதுவே கடைசி கடிதமாகும். பவுல் எழுதிய இந்த நான்கு கடிதங்களிலும் காணப்படுகிற ஆலோசனைகளிலிருந்தும் ஊக்கமூட்டும் வார்த்தைகளிலிருந்தும் இன்று நாம் நன்மையடையலாம்.—எபி. 4:12.
‘விழித்திருங்கள்’
தெசலோனிக்கேயருடைய ‘விசுவாசத்தின் கிரியைக்காகவும் அன்பின் பிரயாசத்துக்காகவும் பொறுமைக்காகவும்’ பவுல் அவர்களைப் பாராட்டுகிறார். அவர்கள் தன்னுடைய ‘நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாய் இருக்கிறார்கள்’ என அவர்களிடம் சொல்கிறார்.—1 தெ. 1:2; 2:19.
உயிர்த்தெழுதல் நம்பிக்கையைக் குறித்து சொல்லி ஒருவரையொருவர் ஆறுதல்படுத்தும்படி கிறிஸ்தவர்களை ஊக்குவித்த பிறகு, ‘இரவிலே திருடன் வருகிற விதமாய்க் கர்த்தருடைய நாள் வரும்’ என்று பவுல் குறிப்பிடுகிறார். ‘விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாய் இருக்கும்படி’ அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கிறார்.—1 தெ. 4:16–18; 5:2, 6.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
4:15-17—‘கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுபவர்கள்’ யார், இது எப்படி நடக்கிறது? கிறிஸ்து ராஜாவாக பிரசன்னமாகியிருக்கிற சமயத்தில் பூமியிலே உயிரோடு இருக்கிற பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களே இவர்கள். காண முடியாத பரலோகப் பகுதியில் இவர்கள் கர்த்தராகிய இயேசுக்கு ‘எதிர்கொண்டு’ போவார்கள். இப்படிப் போவதற்கு இவர்கள் முதலாவது மரித்து, ஆவி சிருஷ்டிகளாக உயிர்த்தெழுப்பப்பட வேண்டும். (ரோ. 6:3–5; 1 கொ. 15:35, 44) கிறிஸ்துவின் பிரசன்னம் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. ஆகவே, இன்று பரலோக நம்பிக்கையுடையவர்கள் மரிக்கையில், அவர்கள் செத்த நிலையிலேயே இருப்பதில்லை. மாறாக, மரித்த உடனேயே ‘எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்.’—1 கொ. 15:51, 52.
5:23—சகோதரர்களின் “ஆவி ஆத்துமா சரீரம் . . . காக்கப்படுவதாக” என பவுல் ஜெபித்தபோது அவர் எதை அர்த்தப்படுத்தினார்? ஒரு தொகுதியாக கிறிஸ்தவ சபையின் ஆவி, ஆத்துமா, சரீரத்தையே பவுல் குறிப்பிட்டார். பரலோக நம்பிக்கையுடைய தெசலோனிக்கே கிறிஸ்தவர்களும் அதில் உட்பட்டிருந்தனர். வெறுமெனே சபையைக் காக்கும்படி ஜெபிக்காமல் அதன் “ஆவி,” அதாவது, அதன் மனச்சாய்வு காக்கப்பட வேண்டுமென அவர் ஜெபம் செய்தார். அதன் ‘ஆத்துமாவுக்காகவும்’ அதாவது அதன் ஜீவனுக்காகவும், அவர் ஜெபம் செய்தார். அதோடு, பரலோக நம்பிக்கையுள்ளவர்களைக் கொண்ட ஒரு தொகுதியாக அதன் ‘சரீரத்திற்காகவும்’ அவர் ஜெபம் செய்தார். (1 கொ. 12:12, 13) சபையின்மீது பவுலுக்கு ஆழ்ந்த அக்கறை இருந்ததை இந்த ஜெபம் வெளிக்காட்டுகிறது.
நமக்குப் பாடம்:
1:2, 7; 2:13; 4:1-12; 5:15. தகுந்த பாராட்டையும் முன்னேறுவதற்கான உற்சாகத்தையும் அளித்து ஆலோசனை கொடுப்பதே சிறந்த பலனைத் தரும்.
4:1, 9, 10. யெகோவாவை வழிபடுவோர் அவரோடுள்ள பந்தத்தை எப்போதும் பலமாக வைத்திருக்க வேண்டும்.
5:1-3, 8, 20, 21. யெகோவாவின் நாள் நெருங்க நெருங்க, நாம் “தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்க” வேண்டும். அதுமட்டுமின்றி, கடவுளுடைய தீர்க்கதரிசன புத்தகமாகிய பைபிளுக்குக் கூர்ந்த கவனம் செலுத்த வேண்டும்.
‘நிலைகொண்டிருங்கள்’
சபையிலிருந்த சிலர், பவுல் தன்னுடைய முதல் கடிதத்தில் எழுதியிருந்த குறிப்புகளை அப்படியே புரட்டி, கர்த்தரின் பிரசன்னம் சீக்கிரத்தில் நிகழப்போகிறது என அடித்துக் கூறினர். அவர்களுடைய தவறான கருத்தைச் சரிசெய்வதற்கு எது ‘முந்தி நேரிட’ வேண்டும் என்பதை பவுல் விவரிக்கிறார்.—2 தெ. 2:1–3.
‘நீங்கள் நிலைகொண்டு . . . நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்’ என்று பவுல் புத்திமதி கூறுகிறார். “ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் . . . விட்டு விலகவேண்டுமென்று” அவர்களுக்குக் கட்டளையிடுகிறார்.—2 தெ. 2:15; 3:6.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
2:3, 8—“கேட்டின் மகன்” யார், அவன் எப்படி அழிக்கப்படுவான்? ஒரு தொகுதியாக கிறிஸ்தவமண்டலத்தின் குருவர்க்கத்தினரே அந்த “மகன்.” கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் செய்தியை அறிவிப்பதற்கும் அவர்களை அழிப்பதற்கு உத்தரவிடுவதற்கும் “வார்த்தை” என்பவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது; கடவுளுடைய பிரதான பிரதிநிதி பேச்சாளரான இயேசு கிறிஸ்துவே அவர். (யோவா. 1:1) ஆகவே, அந்தக் கேட்டின் மகனை “தம்முடைய வாயின் சுவாசத்தினாலே” இயேசு அழிப்பார் என்று சொல்ல முடியும்.
2:13, 14—பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்கள் ‘இரட்சிப்படையும்படிக்கு ஆதிமுதல் தெரிந்துகொள்ளப்பட்டது’ எப்படி? ஸ்திரீயின் வித்து சாத்தானின் தலையை நசுக்குவதற்கு யெகோவா தீர்மானித்தபோது இந்தப் பரலோக நம்பிக்கையுடையோரை ஒரு தொகுதியாக அவர் முன்குறித்தார். (ஆதி. 3:15) அவர்களுக்கான தகுதிகள், வேலை, அவர்கள் அனுபவிக்க வேண்டிய பரீட்சை ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார். இவ்விதமாக, இந்த இரட்சிப்பை ‘அடையும்பொருட்டு’ அவர்களை அவர் அழைத்தார்.
நமக்குப் பாடம்:
1:6-8, 10. யெகோவா தமக்குக் கீழ்ப்படியாதவர்களை மட்டுமே அழிக்கிறார்.
3:8-12. யெகோவாவின் நாள் சமீபித்திருப்பதை சாக்காக வைத்துக்கொண்டு, நம்முடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ளாமலும் ஊழியத்தில் ஈடுபடாமலும் இருந்துவிடக் கூடாது. வேலை செய்யாமல் சும்மா இருப்பது நம்மைச் சோம்பேறியாக்கி விடும், மற்றவர்கள் விஷயத்தில் ‘தலையிடுவதற்கும்’ தூண்டிவிடும்.—1 பே. 4:15.
‘உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதைக் காத்துக்கொள்’
“நல்ல போராட்டம்பண்ணு . . . விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு” என பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுரை வழங்குகிறார். சபையில் கண்காணிகளாய் நியமிக்கப்படுவோருக்கான தகுதிகளை அப்போஸ்தலன் பவுல் பட்டியலிடுகிறார். பரிசுத்தமானவற்றிற்கு விரோதமான ‘கட்டுக்கதைகளுக்கு விலகியிருக்கும்படியும்’ அவர் தீமோத்தேயுவுக்கு அறிவுரை கொடுக்கிறார்.—1 தீ. 1:18, 19; 3:1–10, 12, 13; 4:7.
‘முதிர்வயதுள்ளவரைக் கடிந்துகொள்ள வேண்டாமென’ பவுல் எழுதுகிறார். “உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு” என தீமோத்தேயுவுக்கு அறிவுறுத்துகிறார்.—1 தீ. 5:1; 6:20.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:18; 4:14—தீமோத்தேயுவைக் குறித்து என்ன ‘தீர்க்கதரிசனங்கள்’ சொல்லப்பட்டன? கிறிஸ்தவ சபையில் தீமோத்தேயு வகிக்கவிருந்த ஸ்தானத்தைப் பற்றிய சில தீர்க்கதரிசனங்களாக அவை இருந்திருக்கலாம். பவுல் தன்னுடைய இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது லீஸ்திராவுக்குச் சென்றிருந்தபோது கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் இந்தத் தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்பட்டிருக்கலாம். (அப். 16:1, 2) சபையிலிருந்த மூப்பர்கள், இத்தீர்க்கதரிசனங்களின் அடிப்படையிலேயே இளம் தீமோத்தேயுவை குறிப்பிட்ட சேவையில் நியமிப்பதற்காக அவர்மீது கைகளை வைத்தார்கள்.
2:15—ஒரு பெண் எவ்வாறு ‘பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுகிறாள்,’ அதாவது பாதுகாக்கப்படுகிறாள்? பிள்ளைகளைப் பெற்றெடுப்பது, அவர்களைப் பராமரிப்பது, வீட்டு வேலைகளைக் கவனிப்பது ஆகியவை ‘அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும்’ இராதபடி ஒரு பெண்ணைப் பாதுகாக்கின்றன.—1 தீ. 5:11–15.
3:16—தேவபக்திக்குரிய பரிசுத்த இரகசியம் என்பது என்ன? யெகோவாவின் பேரரசாட்சிக்கு மனிதரால் முழுமையாகக் கீழ்ப்படிய முடியுமா முடியாதா என்பது பல காலத்திற்கு ஒரு இரகசியமாகவே இருந்தது. இயேசு மரணம் வரையாகக் கடவுளுக்கு முற்றிலும் உத்தமமாய் இருந்து அக்கேள்விக்கு பதில் அளித்தார்.
6:15, 16—இந்த வசனங்கள் யெகோவா தேவனுக்குப் பொருந்துகின்றனவா அல்லது இயேசு கிறிஸ்துவுக்குப் பொருந்துகின்றனவா? இவை இயேசு கிறிஸ்துவுக்குப் பொருந்துகின்றன. ஏனெனில் அவருடைய பிரசன்னத்தையே அவை விவரிக்கின்றன. (1 தீ. 6:14) ராஜாக்களாகவும் பிரபுக்களாகவும் ஆட்சிபுரிகிற மனிதரோடு ஒப்பிட இயேசுவே ‘ஏகசக்கராதிபதியாய்’ இருக்கிறார்; அவர் ஒருவரே சாவைமையுள்ளவராயும் இருக்கிறார். (தானி. 7:14; ரோ. 6:9) அவர் காணக்கூடாத பரலோகத்திற்கு சென்றது முதற்கொண்டு பூமியிலுள்ள மனிதரால் அவரைக் “காண” முடியாது.
நமக்குப் பாடம்:
4:15. நாம் சமீபத்தில் கிறிஸ்தவராகியிருந்தாலும் சரி வெகு காலமாகவே கிறிஸ்தவராக இருந்தாலும் சரி, நாம் முன்னேறவும் ஆன்மீக ரீதியில் தொடர்ந்து வளர்ச்சியடையவும் முயல வேண்டும்.
6:2. நம் சகோதரர் ஒருவரிடத்தில் நாம் வேலை பார்க்கிறோமெனில், அவரிடத்தில் ஆதாயம் தேட நினைக்கக் கூடாது. மாறாக, சகோதரரல்லாத வேறொருவரிடம் நாம் எப்படி வேலை செய்வோமோ அதற்கும் அதிகமாக நம் சகோதரரிடம் வேலைசெய்ய மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
‘அவசரவுணர்வுடன் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு’
வரவிருக்கும் கடினமான காலத்திற்கு தீமோத்தேயுவைத் தயார்படுத்த பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.” பின்வருமாறு அவருக்கு அறிவுரையும் வழங்குகிறார்: ‘கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனுமாய் இருக்க வேண்டும்.’—2 தீ. 1:7; 2:24.
‘நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு’ என பவுல் தீமோத்தேயுவுக்கு புத்திமதி கொடுக்கிறார். விசுவாசத்துரோகிகளின் போதனைகள் பரவிவந்ததால் அப்போஸ்தலன் பவுல் இளம் கண்காணியான தீமோத்தேயுவுக்கு இவ்வாறு ஆலோசனை கொடுக்கிறார்: “ஜாக்கிரதையாய்த் [அதாவது, அவசரவுணர்வுடன்] திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; . . . கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.”—2 தீ. 3:14; 4:2.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:13—‘ஆரோக்கியமான வசனங்களின் சட்டம்’ என்பது என்ன? இந்த ஆரோக்கியமான வசனங்கள், “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்” வசனங்களாகும், அதாவது உண்மையான கிறிஸ்தவ போதனைகளாகும். (1 தீ. 6:3) இயேசு கற்பித்த, செய்த காரியங்கள் கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக இருந்தன. ஆகவே, விரிவான கருத்தில் ‘ஆரோக்கியமான வசனங்கள்’ என்ற இச்சொற்றொடர் எல்லா பைபிள் போதனைகளையும் அர்த்தப்படுத்தலாம். இந்தப் போதனைகள், யெகோவா நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். பைபிளிலிருந்து நாம் கற்றுக்கொண்டவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் அந்தச் சட்டத்தை தொடர்ந்து பின்பற்றுகிறோம்.
4:13—இந்தத் “தோற்சுருள்கள்” எவை? ரோமில் கைதியாக இருந்த பவுல் படிப்பதற்காகக் கேட்ட எபிரெய வேதாகமத்தின் சில சுருள்களாக அவை இருக்கலாம். இச்சுருள்களில் சில நாணற்புற்களால் தயாரிக்கப்படவையாய் இருக்கலாம் மற்றவை தோலினால் தயாரிக்கப்பட்டவையாய் இருக்கலாம்.
நமக்குப் பாடம்:
1:5; 3:15. தீமோத்தேயு, கிறிஸ்து இயேசுவின்மீது விசுவாசம் வைத்து எல்லாக் காரியங்களையும் செய்ததற்கு அடிப்படைக் காரணம், குழந்தைப் பருவத்திலிருந்தே வீட்டில் அவருக்குக் கிடைத்த பைபிள் கல்வியாகும். அப்படியானால், கடவுளிடமாகவும் தங்கள் பிள்ளைகளிடமாகவும் இந்தப் பொறுப்பை நிறைவேற்ற தாங்கள் செய்ய வேண்டியதைக் குறித்து குடும்ப அங்கத்தினர்கள் அக்கறையோடு யோசித்துப் பார்ப்பது எவ்வளவு முக்கியம்!
1:16-18. நம் சகோதர சகோதரிகள் சோதனைகளையோ துன்புறுத்தலையோ அனுபவிக்கையில் அல்லது சிறையில் தள்ளப்படுகையில், நாம் அவர்களுக்காக ஜெபம் செய்து, நம்மாலான அனைத்து உதவிகளையும் செய்வோமாக.—நீதி. 3:27; 1 தெ. 5:25.
2:22. கிறிஸ்தவர்கள், முக்கியமாக இளைஞர்கள் உடலை கட்டுறுதியாக்குதல், போட்டி விளையாட்டுகள், இசை, கேளிக்கை நிகழ்ச்சிகள், விருப்பத் தொழில்கள், சுற்றுலா செல்லுதல், அரட்டை அடித்தல் போன்ற காரியங்களில் ஒரேயடியாக மூழ்கிவிடக்கூடாது. அப்படிச் செய்தால் ஆன்மீகக் காரியங்களில் ஈடுபட முடியாமல் போய்விடும்.
[பக்கம் 31-ன் படம்]
அப்போஸ்தலன் பவுல் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதிய கடைசி கடிதம் எது?