வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஜூலை 1-7
பைபிளில் இருக்கும் புதையல்கள்|கொலோசெயர் 1-4
“பழையதைக் களைந்துபோட்டு, புதியதை அணிந்துகொள்ளுங்கள்”
உலகத்தின் சிந்தையை அல்ல, கடவுளுடைய சக்தியைப் பெறுங்கள்
12 என்னுடைய சுபாவத்தில் எது மேலோங்கியிருக்கிறது—கடவுளுடைய சக்தியா, உலகத்தின் சிந்தையா? (கொலோசெயர் 3:8-10, 13-ஐ வாசியுங்கள்.) இந்த உலகத்தின் சிந்தை பாவ இயல்புக்குரிய செயல்களை ஊட்டி வளர்க்கிறது. (கலா. 5:19-21) பிரச்சினைகள் தலைதூக்கும்போதுதான் நம்மிடம் கடவுளுடைய சக்தி இருக்கிறதா அல்லது இந்த உலகத்தின் சிந்தை இருக்கிறதா என்பது தெரிய வருகிறது; உதாரணமாக, கிறிஸ்தவ சகோதரனோ சகோதரியோ நம்மை அசட்டை செய்யும்போது, புண்படுத்தும்போது அல்லது நமக்கு எதிராகப் பாவம் செய்யும்போது அது தெரிய வருகிறது. அதோடு, வீட்டில் தனிமையில் இருக்கும்போது அது பளிச்செனத் தெரிய வருகிறது. இதற்குச் சுயபரிசோதனை செய்துகொள்வது பொருத்தமாக இருக்கும். ஆகவே, ‘கடந்த ஆறு மாதங்களில் என்னுடைய சுபாவம் கிறிஸ்துவின் சுபாவத்தைப் போல் பெருமளவு மாறியிருக்கிறதா அல்லது என்னுடைய பேச்சும் நடத்தையும் பழையபடி மோசமாகிவிட்டதா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
13 “பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் களைந்துபோட்டு . . . புதிய சுபாவத்தை” அணிந்துகொள்ள கடவுளுடைய சக்தி நமக்கு உதவுகிறது. அது அன்பையும் கருணையையும் அதிகமதிகமாகக் காட்ட நமக்கு உதவும். மற்றவர்கள்மீது நியாயமாகவே ஏதாவது மனக்குறை இருந்தால்கூட தாராளமாக மன்னிப்போம். அநியாயமாகத் தோன்றும் காரியங்களைப் பார்க்கும்போது, “மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும்” வெளிப்படுத்த மாட்டோம். மாறாக, ‘கரிசனை காட்ட’ முயற்சி செய்வோம்.—எபே. 4:31, 32.
நீங்கள் மாறிவிட்டீர்களா?
18 கடவுளுடைய வார்த்தை நம்மை மாற்றுவதற்கு, தவறாமல் பைபிளை வாசித்து அதிலுள்ள விஷயங்களைத் தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. நிறைய பேருக்கு பைபிளை அடிக்கடி வாசிக்கும் பழக்கம் இருப்பதால் அதிலுள்ள அநேக விஷயங்களைத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஒருவேளை, ஊழியத்தில் அப்படிப்பட்ட ஆட்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். சிலர் பைபிள் வசனங்களை மனப்பாடமாகக்கூட சொல்வார்கள். ஆனால், அது அவர்களுடைய சிந்தையையும் வாழ்க்கையையும் மாற்றுவதில்லை. ஏன்? கடவுளுடைய வார்த்தையை ஒருவர் ஏற்றுக்கொண்டு தன்னை மாற்றிக்கொள்வதற்கு, அவர் தன்னுடைய இருதயத்தில் அதை ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். ஆகவே, நாம் கற்றுக்கொள்வதைச் சிந்தித்துப் பார்க்க நேரம் செலவிட வேண்டும். நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘இது வெறுமனே ஒரு மதப் போதனை அல்ல என்பதை ஒத்துக்கொள்கிறேனா? இதுதான் சத்தியம் என்பதை ஆதாரப்பூர்வமாக நம்புகிறேனா? கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்குச் சொல்வதோடு என் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறேனா? கற்றுக்கொள்கிறவற்றை யெகோவா என்னிடம் நேரடியாக சொல்கிற விஷயங்களாக ஏற்றுக்கொள்கிறேனா?’ இந்தக் கேள்விகளைச் சிந்திப்பதும் தியானிப்பதும் யெகோவாவிடம் நெருங்கி வர நமக்கு உதவும். அவர்மீதுள்ள அன்பை அதிகரிக்கும். கற்றுக்கொண்ட விஷயங்கள் நம் இருதயத்தைத் தொடும்போது யெகோவாவைச் சந்தோஷப்படுத்தும் விதத்தில் மாற்றங்களைச் செய்வோம்.—நீதி. 4:23; லூக். 6:45.
19 “பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் களைந்துபோட்டு, . . . புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்; அதாவது, திருத்தமான அறிவின் மூலம் [உங்களை] . . . தொடர்ந்து புதிதாக்குங்கள்” என்று பவுல் சொன்னதை நாம் ஓரளவுக்கு செய்திருக்கிறோம். (கொலோ. 3:9, 10) கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் வாசிப்பதும் தியானிப்பதும் அதைத் தொடர்ந்து செய்ய நம்மைத் தூண்டும். ஆம், கடவுளுடைய வார்த்தையை நன்றாகப் புரிந்துகொண்டு அதைப் பின்பற்றும்போது புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள முடியும். சாத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து அது நம்மைப் பாதுகாக்கும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E 169 ¶3-5
கடவுளுடைய அரசாங்கம்
‘தன்னுடைய அன்பான மகனின் அரசாங்கம்.’ இயேசு பரலோகத்துக்குப் போய்ப் பத்து நாட்களுக்குப் பிறகு, அதாவது கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளில், தன்னுடைய சீஷர்கள்மேல் கடவுளுடைய சக்தியைப் பொழிந்தார். ‘கடவுளுடைய வலது பக்கத்துக்கு அவர் உயர்த்தப்பட்டுவிட்டார்’ என்பதற்கு அது அத்தாட்சியாக இருந்தது. (அப் 1:8, 9; 2:1-4, 29-33) இப்படி, சீஷர்களுடைய விஷயத்தில் ‘புதிய ஒப்பந்தம்’ செயல்பட ஆரம்பித்தது; அவர்கள் புதிதாக உருவான ‘பரிசுத்த ஜனத்தின்,’ அதாவது ஆன்மீக இஸ்ரவேலர்களின், முக்கிய உறுப்பினர்களாக ஆனார்கள்.—எபி 12:22-24; 1பே 2:9, 10; கலா 6:16.
தன்னுடைய தகப்பனின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிறிஸ்துதான் அந்தச் சபையின் தலைவராக இருந்தார். (எபே 5:23; எபி 1:3; பிலி 2:9-11) கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளிலிருந்து, இயேசு தன்னுடைய சீஷர்களை ஆட்சி செய்ய ஆரம்பித்தார் என்பதை வசனங்கள் காட்டுகின்றன. முதல் நூற்றாண்டில் கொலோசெ நகரத்தில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் கடிதம் எழுதியபோது, இயேசு கிறிஸ்துவுக்கு ஏற்கெனவே ஒரு அரசாங்கம் இருந்ததாகக் குறிப்பிட்டார். அதாவது, “[கடவுள்] நம்மை இருளின் அதிகாரத்திலிருந்து காப்பாற்றி, தன்னுடைய அன்பான மகனின் அரசாங்கத்துக்குக் கொண்டுவந்தார்” என்று சொன்னார்.—கொலோ 1:13; ஒப்பிடுங்கள்: அப் 17:6, 7.
கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளிலிருந்து இயேசு கிறிஸ்து ஆன்மீக இஸ்ரவேலர்கள்மேல் ஆட்சி செய்துவருகிறார். இந்த ஆன்மீக இஸ்ரவேலர்கள், கடவுளுடைய சக்தியால் பிறந்த கிறிஸ்தவர்கள்; கடவுளுடைய ஆன்மீகப் பிள்ளைகள். (யோவா 3:3, 5, 6) இவர்கள் பரலோக வாழ்வைப் பரிசாகப் பெற்ற பிறகு, கிறிஸ்துவுடைய ஆன்மீக அரசாங்கத்தின் பூமிக்குரிய குடிமக்களாக இருக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, பரலோகத்தில் கிறிஸ்துவோடு சேர்ந்து ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்.—வெளி 5:9, 10.
கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர் ஆகியோருக்கு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
2:8 (NW)—‘இவ்வுலகின் அடிப்படைக் காரியங்களான’ எவற்றைக் குறித்து பவுல் எச்சரித்தார்? இவை சாத்தானுடைய உலகின் அடிப்படைக் காரியங்கள், அல்லது நியமங்கள், ஆகும். இவையே இந்த உலகை உருவமைக்கின்றன, வழிநடத்துகின்றன, செயல்படத் தூண்டுகின்றன. (1 யோ. 2:16) இந்த உலகின் தத்துவங்கள், பொருளாசை, பொய் மதங்கள் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.
ஜூலை 8-14
பைபிளில் இருக்கும் புதையல்கள்|1 தெசலோனிக்கேயர் 1-5
“எப்போதும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள், ஒருவரை ஒருவர் பலப்படுத்துங்கள்”
‘உங்களிடையே கடினமாக உழைக்கிறவர்களை மதியுங்கள்’
12 சபையாரை ‘வழிநடத்துவது’ கற்பிப்பதை மட்டுமே குறிப்பதில்லை. கிரேக்கில் அதே வார்த்தை 1 தீமோத்தேயு 3:4-லிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு கண்காணி “தன் குடும்பத்தைச் சிறந்த விதத்தில் நடத்துகிறவராகவும், மிகுந்த பொறுப்பும் கீழ்ப்படிதலும் உள்ள பிள்ளைகளை உடையவராகவும் இருக்க வேண்டும்” என்று பவுல் சொன்னார். இங்கே, ‘குடும்பத்தை நடத்துவதென்பது’ பிள்ளைகளுக்குக் கற்பிப்பதை மட்டுமல்லாமல், குடும்பத்தைத் தலைமை தாங்குவதையும் பிள்ளைகளை ‘கீழ்ப்படிகிறவர்களாக’ வளர்ப்பதையும் உட்படுத்துகிறது. ஆம், மூப்பர்கள் சபையைத் தலைமை தாங்கி நடத்தி, யெகோவாவுக்கு கீழ்ப்படிய அனைவருக்கும் உதவுகிறார்கள்.—1 தீ. 3:5.
‘உங்களிடையே கடினமாக உழைக்கிறவர்களை மதியுங்கள்’
19 யாராவது உங்களுக்கென்றே ஒரு விசேஷப் பரிசைக் கொடுத்தால் என்ன செய்வீர்கள்? அதைப் பயன்படுத்துவதன் மூலம் அதற்கு உங்கள் நன்றியைக் காட்டுவீர்கள், அல்லவா? இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவா உங்களுக்கென்றே தந்திருக்கும் ‘பரிசுகள்தான்’ மூப்பர்கள். இந்தப் பரிசுகளுக்கு நீங்கள் நன்றி காட்டுவதற்கான ஒரு வழி, மூப்பர்கள் கொடுக்கும் பேச்சுகளைக் கூர்ந்து கவனித்துக் கேட்டு, அவர்கள் சொல்கிறபடி நடக்க முயலுவதாகும். கூட்டங்களில் அர்த்தமுள்ள குறிப்புகளைச் சொல்வதன் மூலமும் நீங்கள் உங்கள் நன்றியைக் காட்டலாம். மூப்பர்கள் தலைமைதாங்கி நடத்தும் வேலைகளுக்கு உங்கள் ஆதரவைக் காட்டுங்கள்; உதாரணத்திற்கு, வெளி ஊழியத்திற்கு ஒத்துழைப்புக் கொடுங்கள். ஒரு மூப்பர் கொடுத்த அறிவுரையால் நீங்கள் பயனடைந்திருக்கிறீர்கள் என்றால், அதை ஏன் அவரிடம் தெரிவிக்கக் கூடாது? அதோடு, மூப்பர்களுடைய குடும்பத்தாருக்கும் உங்கள் பாராட்டைத் தெரிவிக்கலாம், அல்லவா? ஒரு மூப்பர் சபையில் கடினமாக உழைக்கிறார் என்றால், அவரது குடும்பத்தார் அவரோடு செலவிட முடிந்த நேரத்தைத் தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
‘செயலிலும் உண்மை மனதோடும்’ அன்பு காட்டுங்கள்
13 பலவீனமாக இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். “பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆதரவு கொடுங்கள், எல்லாரிடமும் பொறுமையாக இருங்கள்” என்ற பைபிளின் கட்டளைக்கு நாம் கீழ்ப்படியும்போதுதான் நம் அன்பு உண்மையானது என்று சொல்ல முடியும். (1 தெ. 5:14) முன்பு பலவீனமாக இருந்த நிறைய சகோதரர்கள், இப்போது விசுவாசத்தில் பலமானவர்களாக இருக்கிறார்கள். ஆனால், வேறு சில சகோதரர்களுக்கு நாம் தொடர்ந்து பொறுமையோடும் அன்போடும் உதவி செய்ய வேண்டியிருக்கிறது. அதை எப்படிச் செய்யலாம்? பைபிளைப் பயன்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்தலாம், நம்மோடு ஊழியம் செய்ய அவர்களைக் கூப்பிடலாம். சிலசமயங்களில், அவர்கள் பேசுவதைக் கேட்பதே அவர்களுக்கு உதவி செய்வதாக இருக்கும். நம்முடைய சகோதர சகோதரிகளை “பலமானவர்கள்” அல்லது “பலவீனமானவர்கள்” என்று முத்திரை குத்தாமல் இருக்க வேண்டும். நம் எல்லாருக்குமே பலங்களும் பலவீனங்களும் இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போஸ்தலன் பவுல்கூட, தனக்குப் பலவீனங்கள் இருந்ததை ஒத்துக்கொண்டார். (2 கொ. 12:9, 10) நம் எல்லாருக்குமே மற்றவர்களிடமிருந்து உதவியும் உற்சாகமும் தேவை.
இயேசுவைப் போல் மனத்தாழ்மையாக, கனிவாக இருங்கள்
16 கனிவாக பேசுங்கள். நமக்கு கனிவும் கரிசனையும் இருந்தால் ‘சோகமாயிருக்கிறவர்களிடம் ஆறுதலாகப் பேசுவோம்.’ (1 தெ. 5:14) எப்படி ஆறுதலாகப் பேசலாம்? அவர்கள்மீது நமக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்று அவர்களிடம் சொல்லலாம். அவர்களிடம் இருக்கிற நல்ல குணங்களுக்காகவும் திறமைகளுக்காகவும் அவர்களை பாராட்டலாம். யெகோவா அவர்களை ரொம்ப நேசிப்பதால்தான் தம்முடைய மக்களில் ஒருவராக அவர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தலாம். (யோவா. 6:44) ‘நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களை’ யெகோவா ஒருநாளும் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கையை கொடுக்கலாம். (சங். 34:18) சோகமாக இருப்பவர்களிடம் நாம் இப்படி கனிவாக பேசும்போது அவர்களுக்கு ரொம்ப தெம்பாகவும் ஆறுதலாகவும் இருக்கும்.—நீதி. 16:24.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E 863-864
பாலியல் முறைகேடு
பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்கள், கிறிஸ்தவச் சபையிலிருந்து நீக்கப்படலாம்; அந்தளவுக்கு அது ஒரு பெரிய குற்றம். (1கொ 5:9-13; எபி 12:15, 16) அப்போஸ்தலன் பவுல் விளக்குகிறபடி, பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவன் தன் உடலுக்கு எதிராகவே பாவம் செய்கிறான், அதாவது தன்னுடைய இனப்பெருக்க உறுப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகிறான். அவன் ஆன்மீக விதத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறான், கடவுளுடைய சபையை அசுத்தமாக்குகிறான், உயிருக்கு ஆபத்தான பாலியல் நோய்களுக்கு ஆளாகிறான். (1கொ 6:18, 19) அதோடு, அவன் தன்னுடைய கிறிஸ்தவச் சகோதரர்களின் உரிமைகளைப் பறிக்கிறான். (1தெ 4:3-7) எப்படி? இந்த நான்கு விதங்களில்: (1) அசுத்தமான, கேவலமான, முட்டாள்தனமான காரியத்தைச் செய்து சபைக்குக் கெட்ட பெயரைக் கொண்டுவருகிறான். (எபி 12:15, 16) (2) யாருடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறானோ அவர் கடவுளுக்கு முன் ஒழுக்கமாக இல்லாதபடி செய்துவிடுகிறான்; அவர் கல்யாணம் ஆகாதவராக இருந்தால், ஒழுக்கச் சுத்தமுள்ளவராகக் கல்யாண வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாதபடி செய்துவிடுகிறான். (3) ஒழுக்க விஷயத்தில் தன் குடும்பத்துக்கு இருக்கும் நல்ல பெயரைக் கெடுத்துவிடுகிறான். (4) யாருடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறானோ அவருடைய பெற்றோருக்கோ கணவருக்கோ அவரோடு நிச்சயமானவருக்கோ எதிராகப் பாவம் செய்துவிடுகிறான். அப்படிப்பட்ட ஒருவன் மனிதனை அல்ல, கடவுளையே அலட்சியம் செய்கிறான். மனிதர்கள் ஏற்படுத்தும் சட்டங்கள் பாலியல் முறைகேட்டைக் கண்டனம் செய்யாமல்கூட போகலாம். ஆனால், கடவுள் இந்தப் பாவத்துக்காக அவனைத் தண்டிப்பார்.—1தெ 4:8.
உங்களுடைய மீட்பு நெருங்கிவிட்டது!
14 மாகோகு தேசத்தானான கோகு கடவுளுடைய மக்களைத் தாக்க ஆரம்பித்த பிறகு என்ன நடக்கும்? அப்போது மனிதகுமாரன், “தேவதூதர்களை அனுப்பி, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பூமியின் ஒரு கோடியிலிருந்து வானத்தின் மறுகோடிவரை நாலாபக்கத்திலிருந்தும் கூட்டிச்சேர்ப்பார்” என்று பைபிள் சொல்கிறது. (மாற். 13:27; மத். 24:31) இந்தக் கூட்டிச்சேர்க்கும் வேலை, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தைக் குறிப்பதில்லை. அதே சமயத்தில், பூமியில் இருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் கடைசி முத்திரையைப் பெறுவதையும் இது குறிப்பதில்லை. (மத். 13:37, 38) ஏனென்றால், மிகுந்த உபத்திரவம் தொடங்குவதற்கு கொஞ்சம் முன்பு அவர்கள் கடைசி முத்திரையைப் பெற்றிருப்பார்கள். (வெளி. 7:1-4) அப்படியென்றால், இந்தக் கூட்டிச்சேர்க்கும் வேலை எதைக் குறிக்கிறது? பூமியில் மீந்திருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அவர்களுடைய பலனைப் பெற்று பரலோகத்துக்குப் போகும் சமயத்தை அது குறிக்கிறது. (1 தெ. 4:15-17; வெளி. 14:1) இந்த சம்பவம், மாகோகு தேசத்தானான கோகுவின் தாக்குதல் ஆரம்பித்த பிறகு ஒரு சமயத்தில் நடக்கும். (எசே. 38:11) அதற்குப் பிறகு இயேசு சொன்னது போல், “நீதிமான்கள் தங்களுடைய தகப்பனின் அரசாங்கத்தில் சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்.”—மத். 13:43.
15 மனித உடலில் தாங்கள் பூமியிலிருந்து பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று சர்ச் அமைப்புகளைச் சேர்ந்த நிறைய கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அதோடு, பூமியை ஆட்சி செய்ய இயேசு திரும்பி வருவதை ‘எங்கள் கண்களால் பார்ப்போம்’ என்றும் சொல்கிறார்கள். ஆனால், பைபிள் இதைப் பற்றி என்ன சொல்கிறது? இயேசுவின் வருகையை மக்கள் தங்கள் கண்களால் பார்க்க முடியாது. அதனால்தான், “மனிதகுமாரனின் அடையாளம் வானத்தில் தோன்றும்” என்றும் அவர் “வானத்து மேகங்கள்மீது” வருவார் என்றும் பைபிள் சொல்கிறது. (மத். 24:30) அதோடு, “மனித உடலுடன் பரலோக அரசாங்கத்திற்குள் போக முடியாது” என்றும் சொல்கிறது. அதனால் பரலோகத்துக்குப் போகிறவர்கள், ‘கடைசி எக்காளம் முழங்கும்போது, ஒரே கணத்தில், கண்ணிமைக்கும் நேரத்தில், மாற்றம் அடைய வேண்டும்.’ (1 கொரிந்தியர் 15:50-53-ஐ வாசியுங்கள்.) இப்படி, பூமியில் இருக்கும் பரலோக நம்பிக்கையுடைய உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பரலோகத்துக்குக் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள்.
ஜூலை 15-21
பைபிளில் இருக்கும் புதையல்கள்|2 தெசலோனிக்கேயர் 1-3
“அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்”
it-1-E 972-973
கடவுள்பக்தி
யெகோவாவின் ‘பரிசுத்த ரகசியத்துக்கு’ நேர்மாறான ஒரு மர்மம் இருக்கிறது. அதைத்தான் “மர்மமாக இருக்கிற இந்த அக்கிரமம்” என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். அப்போது அது ஏன் உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு ஒரு மர்மமாக இருந்தது? ஏனென்றால், பவுலின் காலத்தில் “அந்த அக்கிரமக்காரன்” எந்தத் தொகுதியைக் குறித்தான் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. அந்த அக்கிரமக்காரன் தோன்றிய பிறகுகூட அவனுடைய அடையாளம் பெரும்பாலோருக்கு மர்மமாகவே இருக்கும்; ஏனென்றால், கடவுள்பக்தி என்ற வேஷத்தைப் போட்டுக்கொண்டுதான் அவன் அக்கிரமங்களைச் செய்வான். சொல்லப்போனால், உண்மையான கடவுள்பக்தியை விட்டுவிட்டு விசுவாசதுரோகம் செய்வான். ‘மர்மமாக இருக்கிற இந்த அக்கிரமம் ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது’ என்று பவுல் சொன்னார். ஏனென்றால், அப்போது இருந்த கிறிஸ்தவச் சபையில் அக்கிரமத்தின் செல்வாக்கு ஏற்கெனவே இருந்தது. அதுதான் ஒரு விசுவாசதுரோகத் தொகுதியாக உருவாகவிருந்தது. கடைசியில், இயேசு கிறிஸ்து, தான் பிரசன்னமாகியிருப்பதைத் தெரியப்படுத்தும்போது அந்த அக்கிரமக்காரனை அழிப்பார். சாத்தானுடைய கைப்பாவையாக இருக்கும் இந்த விசுவாசதுரோக “அக்கிரமக்காரன்,” “கடவுள் என்று அழைக்கப்பட்டும் வணங்கப்பட்டும் (கிரேக்கில், செபாஸ்மா) வருகிற எல்லாவற்றுக்கும் மேலாக” தன்னை உயர்த்திக்கொள்வான். சாத்தானுடைய கைப்பாவையாகவும் கடவுளுடைய பெரிய எதிரியாகவும் இருக்கும் இவன் மக்களைப் பயங்கரமாக ஏமாற்றுவான்; அவனுடைய பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பவர்களுக்கு அழிவைக் கொண்டுவருவான். “அந்த அக்கிரமக்காரன்” கடவுள்பக்தி என்ற போர்வையில் அக்கிரமங்களைச் செய்வதால் சாமர்த்தியமாகச் செயல்படுவான்.—2தெ 2:3-12; ஒப்பிடுங்கள்: மத் 7:15, 21-23.
it-2-E 245 ¶7
பொய்
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியை விரும்பாமல் பொய்யை விரும்புகிறவர்கள், “பொய்யை நம்பி வஞ்சகத்தின் பிடியில் சிக்கிக்கொள்வதற்கு” யெகோவா விட்டுவிடுகிறார். (2தெ 2:9-12) இதைப் புரிந்துகொள்ள, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இஸ்ரவேலின் ராஜா ஆகாப் விஷயத்தில் என்ன நடந்ததென்று பார்க்கலாம். ராமோத்-கீலேயாத்தை ஆகாப் கைப்பற்றுவார் என்று போலி தீர்க்கதரிசிகள் அவருக்கு உறுதியளித்தார்கள். ஆனால், ஆகாப் அழிவைச் சந்திப்பார் என்று யெகோவாவின் தீர்க்கதரிசி மிகாயா சொன்னார். அவருக்கு ஒரு தரிசனத்தில் காட்டப்பட்டபடி, ஆகாபின் தீர்க்கதரிசிகள் வாயிலிருந்து ‘பொய்யான செய்தியை வர வைக்க’ யெகோவா ஒரு தேவதூதரை அனுமதித்தார். அந்தத் தீர்க்கதரிசிகள் உண்மையைப் பேசாமல் தங்களுடைய இஷ்டப்படியும் ஆகாப் கேட்க விரும்பியபடியும் பேசும்படி அந்தத் தேவதூதர் செய்துவிட்டார். ஆகாப் ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருந்தும், அவர்களுடைய பொய்யை நம்பி ஏமாறவே விரும்பினார், அதனால் தன் உயிரையே இழந்தார்.—1ரா 22:1-38; 2நா 18.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E 834 ¶5
நெருப்பு
“இப்போது இருக்கிற வானமும் பூமியும் . . . நெருப்புக்காக வைக்கப்பட்டிருக்கின்றன” என்று பேதுரு எழுதினார். இந்த வசனத்தின் சூழமைவையும் மற்ற வசனங்களையும் வைத்துப் பார்க்கும்போது, அவர் நிஜமான நெருப்பைப் பற்றிப் பேசவில்லை என்று தெரிகிறது. நெருப்பு என்பது நிரந்தரமான அழிவைக் குறிக்கிறது. நோவாவின் காலத்தில் வந்த பெருவெள்ளத்தில் நிஜமான வானமும் பூமியும் அழியவில்லை, கடவுள்பக்தி இல்லாத ஆட்கள்தான் அழிந்தார்கள். அதேபோல், இயேசு கிறிஸ்து ஜுவாலித்து எரிகிற நெருப்புடன் தன்னுடைய வல்லமைமிக்க தேவதூதர்களோடு வெளிப்படும்போது, கடவுள்பக்தி இல்லாதவர்களும் இந்தப் பொல்லாத உலகமும் மட்டும்தான் அழியும்.—2பே 3:5-7, 10-13; 2தெ 1:6-10; ஒப்பிடுங்கள்: ஏசா 66:15, 16, 22, 24.
யெகோவா ‘விடுவிக்கிறவர்’—நம் காலத்தில்
பொருள் சம்பந்தமாய் நம்மைக் காப்பாற்றுவதாக யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். (மத்தேயு 6:33, 34 மற்றும் எபிரெயர் 13:5, 6-ஐ வாசியுங்கள்.) இது, நமக்குத் தேவையான எல்லாம் அற்புதமாய்க் கிடைத்துவிடும் என்பதையோ வேலைசெய்யாமல் இருப்பதையோ அர்த்தப்படுத்துவதில்லை. (2 தெ. 3:10) மாறாக, நம் வாழ்க்கையில் கடவுளுடைய ராஜ்யத்தை முதலாவது தேடுவதோடு, வயிற்றுப்பாட்டுக்கு உழைக்க மனமுள்ளவர்களாய் இருந்தால், அத்தியாவசியமானவற்றைப் பெற யெகோவா உதவுவார் என்பதையே அர்த்தப்படுத்துகிறது. (1 தெ. 4:11, 12; 1 தீ. 5:8) நாம் நினைத்துக்கூடப் பார்க்காத விதங்களில் நமக்குத் தேவையானவற்றை அவரால் அளிக்க முடியும். ஒருவேளை சக வணக்கத்தார் மூலம் அவர் நமக்கு உதவலாம்; அது பொருளுதவியாக இருக்கலாம், அல்லது ஒரு வேலை வாய்ப்பாக இருக்கலாம்.
ஜூலை 22-28
பைபிளில் இருக்கும் புதையல்கள்|1 தீமோத்தேயு 1-3
“சிறந்த வேலை செய்ய முயற்சி செய்யுங்கள்”
நீங்கள் இன்னும் ஆன்மீக முன்னேற்றம் செய்ய வேண்டுமா?
3 ஒன்று தீமோத்தேயு 3:1-ஐ வாசியுங்கள். கண்காணியாவதற்கு ‘தகுதிபெற முயற்சி செய்கிற’ சகோதரர்களை அப்போஸ்தலன் பவுல் பாராட்டினார். ‘தகுதிபெற முயற்சி செய்’ என்ற கிரேக்க வார்த்தைக்கு எட்டிப்பிடி என்று அர்த்தம். அதாவது தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை எடுக்க அதிக முயற்சி செய்வதை இது அர்த்தப்படுத்துகிறது. உதாரணத்துக்கு, உதவி ஊழியராக ஆவதற்கு விரும்புகிற ஒரு சகோதரரை எடுத்துக்கொள்ளுங்கள். கிறிஸ்தவ குணங்களை வளர்க்க தான் இன்னும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும் என்பதை அவர் புரிந்துகொள்கிறார். உதவி ஊழியராக ஆன பிறகு, ஒரு மூப்பராக ஆவதற்கு அவர் தொடர்ந்து கடினமாக முயற்சி செய்கிறார்.
km-E 9/78 4 ¶7
‘நல்ல பெயர் எடுப்பவர்கள்’
7 அப்படிப்பட்ட ஆண்கள் “நல்ல பெயர் எடுக்கிறார்கள்” என்று பவுல் ஏன் சொன்னார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. சிலர் சொல்கிறபடி, சர்ச்சில் அவர்களுக்குப் பதவி உயர்வு கிடைப்பதைப் பற்றி இங்கே சொல்லப்படவில்லை. அதற்குப் பதிலாக, “நல்ல விதத்தில் ஊழியம் செய்கிற” உதவி ஊழியர்களுக்கு யெகோவாவிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற உறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது. முழு சபையின் மரியாதையையும் ஆதரவையும் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அதனால், “கிறிஸ்து இயேசுவின் மேல் வைத்திருக்கிற விசுவாசத்தைப் பற்றி எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசுகிறார்கள்.” அவர்கள் தங்களுடைய பொறுப்பை உண்மையோடும் நல்ல விதத்திலும் செய்வதால் சபையின் பாராட்டைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு உறுதியான விசுவாசம் இருப்பதால், கெட்ட பெயர் வந்துவிடுமோ என்ற பயம் இல்லாமல் தைரியமாகத் தங்கள் விசுவாசத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E 914-915
வம்சாவளி
முக்கியமாக, தீமோத்தேயுவுக்குப் பவுல் கடிதம் எழுதிய காலத்தில், இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் படிப்பதும் கலந்துபேசுவதும் வீணானதாகத் தெரிந்தது. கிறிஸ்தவச் சபையில் யூதர்களுக்கும் மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கடவுள் எந்த வித்தியாசமும் பார்க்காததால், ஒருவருடைய வம்சாவளியை நிரூபிப்பதற்கு வம்சாவளிப் பட்டியல்கள் இனி ஒருபோதும் தேவைப்படவில்லை. (கலா 3:28) அதோடு, கிறிஸ்து தாவீதின் வம்சாவளியில் வந்ததை வம்சாவளிப் பட்டியல்கள் ஏற்கெனவே உறுதி செய்திருந்தன. அதுமட்டுமல்ல, இந்த அறிவுரையை பவுல் எழுதிய கொஞ்ச காலத்தில், எருசலேம் அழியவிருந்தது. அதோடு, யூதப் பதிவுகளும் அழியவிருந்தன. அவற்றைக் கடவுள் பாதுகாக்கவில்லை. அதனால்தான், தீமோத்தேயுவும் சபைகளும், ஆராய்ச்சி செய்வதிலும் தனிப்பட்ட கருத்துகளைப் பற்றி வாக்குவாதம் செய்வதிலும் நேரத்தை வீணடிக்கக் கூடாதென்று பவுல் நினைத்தார். அவை கிறிஸ்தவ விசுவாசத்தை எந்த விதத்திலும் வளர்ப்பதில்லை. கிறிஸ்துவின் வம்சாவளியைத் தெரிந்துகொள்வதுதான் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் அவசியம். கிறிஸ்துதான் மேசியா என்பதை நிரூபிக்க, பைபிளில் இருக்கும் வம்சாவளிப் பட்டியல்களே போதுமானது. பைபிள் பதிவுகள் உண்மையான சரித்திரப் பதிவுகள்தான் என்பதை பைபிளிலுள்ள மற்ற வம்சாவளிப் பட்டியல்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
‘இதோ! இவரே நம் கடவுள்’
15 யெகோவாவிற்கு மட்டுமே பொருந்தும் மற்றொரு பட்டப்பெயர், “நித்தியத்தின் ராஜா.” (1 தீமோத்தேயு 1:17, NW; வெளிப்படுத்துதல் 15:3, NW) இதன் அர்த்தம் என்ன? மட்டுப்பட்ட நம் மனங்களால் இதை புரிந்துகொள்வது கடினம்; ஆனால் யெகோவா, கடந்தகாலத்தை பொறுத்ததிலும் நித்தியமானவர், எதிர்காலத்தை பொறுத்ததிலும் நித்தியமானவர். “ஆதியந்தமில்லாத சதாகாலங்களிலும் நீரே கடவுள்” என சங்கீதம் 90:2 (திருத்திய மொழிபெயர்ப்பு) சொல்கிறது. ஆக யெகோவாவிற்கு ஆரம்பமே இல்லை; அவர் எப்போதுமே இருந்திருக்கிறார். அவர் “நீண்ட ஆயுசுள்ளவர்” என சரியாகவே அழைக்கப்படுகிறார்; ஏனெனில், இந்த சர்வலோகத்தில் வேறு எதுவும் அல்லது எவரும் தோன்றுவதற்கு முன்பே அவர் நித்திய காலமாக வாழ்ந்து வந்திருக்கிறார்! (தானியேல் 7:9, 13, 22) சர்வலோகப் பேரரசராக இருக்கும் அவரது உரிமையைக் குறித்து யாரால் நியாயமாக கேள்வி கேட்க முடியும்?
ஜூலை 29–ஆகஸ்ட் 4
பைபிளில் இருக்கும் புதையல்கள்|1 தீமோத்தேயு 4-6
“கடவுள்பக்தியும் செல்வமும்”
மனநிறைவோடு இருப்பதன் இரகசியத்தை தெரிந்துகொள்ளுதல்
பவுலுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தந்த முக்கியமான அம்சம் மனநிறைவே. ஆனால் மனநிறைவு என்றால் என்ன? சுருங்கக் கூறினால், அடிப்படை தேவைகளுடன் திருப்தியாக இருப்பதாகும். இதன் சம்பந்தமாக பவுல் தன்னுடைய ஊழியத் தோழனாகிய தீமோத்தேயுவிடம் இவ்வாறு கூறினார்: “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.”—1 தீமோத்தேயு 6:6-8.
மனநிறைவை தேவபக்தியுடன் பவுல் இணைத்துப் பேசியதை கவனியுங்கள். உண்மையான மகிழ்ச்சி தேவபக்தியால்தான் வருகிறது, அதாவது கடவுளுக்கு செய்யும் சேவைக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பதில்தான் வருகிறது, பொருளுடைமைகளினாலோ செல்வத்தினாலோ அல்ல என்பதை அவர் உணர்ந்திருந்தார். தேவபக்தியை நாடித் தொடர அவருக்கு உதவிய பொருட்களே ‘உணவும் உடையும்.’ ஆகவே பவுல் மனநிறைவுடன் இருந்ததன் இரகசியம், எப்படிப்பட்ட சூழ்நிலைமையிலும் யெகோவாவை சார்ந்திருந்ததே.
செல்வந்தராவதில் தீர்மானமாயிருக்கிறீர்களா? அது உங்களை எப்படிப் பாதிக்கும்
செல்வங்களை நாடுவதால் மட்டுமே அநேகர் சாவதில்லை என்பது உண்மைதான். என்றாலும், செல்வத்தைத் தேடுவதிலேயே முழுமூச்சாய் ஈடுபடுபவர்கள் வாழ்க்கையில் உண்மையான திருப்தியை அடைவதில்லை. வேலைப் பளுவினாலோ பண நெருக்கடியினாலோ அவர்களுக்கு ஒருவித பயம், தூக்கமின்மை, தீராத தலைவலி, வயிற்றுப் புண் போன்ற வியாதிகள் வரலாம், இவை அவர்களுடைய வாழ்நாட்காலத்தைக் குறைத்து வாழ்க்கை தரத்தையே பாதிக்கலாம். கடைசியில் ஒருவர் தன் தவறை உணர்ந்து, வாழ்க்கையில் மிக முக்கியமான காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கத் தீர்மானித்தாலும், அப்போது காலம் கடந்துவிட்டிருக்கலாம். அவருடைய மணத்துணையின் நம்பிக்கையையும் இழந்திருப்பார், அவருடைய பிள்ளைகள் ஏற்கெனவே உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள், அவருடைய உடல் நலமும் மோசமாகிவிட்டிருக்கும். இதுபோன்ற பாதிப்புகளில் சிலவற்றை சரிசெய்துகொள்ளலாம்தான், ஆனால் அதற்கு அவர் பெரும்பாடுபட வேண்டியிருக்கும். இப்படிப்பட்டவர்கள் உண்மையில் “அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:10.
உண்மையான வெற்றிக்கு ஆறு வழிகள்
முதல் கட்டுரையில் பார்த்தபடி, வாழ்வில் வெற்றிபெற பணமே முக்கியமென நினைத்து அதன் பின்னாலேயே அலையும் ஒருவர் கானல் நீரை தேடியலைபவரைப் போல்தான் இருக்கிறார். இதனால் ஏமாற்றத்தை மட்டுமல்ல, அநேக வேதனைகளையும் தேடிக்கொள்கிறார். உதாரணமாக, செல்வத்தையே ஆவலாய் நாடும்போது, பெரும்பாலும் குடும்ப உறவுகளையும் நண்பர்களையும் மக்கள் பறிகொடுத்துவிடுகிறார்கள். வேறு சிலரோ வேலையினால் இல்லாவிட்டாலும் கவலையினால் தூக்கத்தைத் தொலைத்துவிடுகிறார்கள். “வேலை செய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது” என்று பிரசங்கி 5:12 சொல்கிறது.
பணம் கொடூரமான ஓர் எஜமான் மட்டுமல்ல, வஞ்சகன்கூட. ‘செல்வம் வஞ்சிக்கும் சக்தி படைத்தது’ என இயேசு கிறிஸ்துவும் கூறினார். (மாற்கு 4:19, NW) வேறு வார்த்தைகளில் சொன்னால், பணம் சந்தோஷத்தைக் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கும், ஆனால் அதை நிறைவேற்றாது. “இன்னும் நிறைய வேண்டுமென்ற” ஆசையைத்தான் உண்டாக்கும். “பண ஆசை உள்ளவருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் ஆவல் தீராது” என பிரசங்கி [சபை உரையாளர்] 5:10 கூறுகிறது.—பொ.மொ.
சுருங்கச் சொன்னால், பண ஆசை நம்மைச் சீரழித்து, நமக்கு ஏமாற்றத்தையும் விரக்தியையும்தான் அளிக்கிறது; ஏன், வன்முறையில் இறங்கவும் நம்மை இழுத்துச் சென்றுவிடுகிறதே. (நீதிமொழிகள் 28:20) அப்படியானால், சந்தோஷத்தையும் வெற்றியையும் பெற சுலபமான வழி தாராள குணம், மன்னிக்கும் பண்பு, ஒழுக்க சுத்தம், அன்பு போன்ற பண்புகளையும் ஆன்மீக உணர்வையும் வளர்த்துக்கொள்வதே.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
கடவுளுக்கு முன் நல்ல மனசாட்சியோடு இருங்கள்
17 “நல்ல மனசாட்சியோடு இருங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பேதுரு 3:16) வருத்தமான விஷயம் என்னவென்றால், சிலர் யெகோவாவின் நியமங்களைத் தொடர்ந்து அசட்டை செய்வதால், கடைசியில் அவர்களுடைய மனசாட்சி அவர்களை எச்சரிப்பதையே நிறுத்திவிடுகிறது. இப்படிப்பட்ட மனசாட்சியை “காய்ச்சிய கம்பியால் தழும்புண்டான மனசாட்சி” என்று பவுல் குறிப்பிட்டார். (1 தீமோத்தேயு 4:2; அடிக்குறிப்பு.) உங்களுக்கு எப்போதாவது பயங்கரமான தீக்காயம் ஏற்பட்டிருக்கிறதா? அப்படி நடந்திருந்தால், காயம்பட்ட இடத்தில் ஒரு பெரிய தழும்பு ஏற்பட்டிருக்கும். அந்த இடத்தைத் தொட்டால் உணர்ச்சியே இருக்காது. அதேபோல், ஒருவர் தொடர்ந்து தவறு செய்துகொண்டிருந்தால், அவருடைய மனசாட்சி ‘தழும்புண்டானதாக’ ஆகிவிடும், கடைசியில் செயல்படாமல் போய்விடும்.
it-2-E 714 ¶1-2
மற்றவர்கள்முன் வாசிப்பது
கிறிஸ்தவச் சபையில். முதல் நூற்றாண்டில், ஒருசிலரிடம் மட்டும்தான் பைபிள் புத்தகங்களின் சுருள்கள் இருந்தன. அதனால், எல்லாருக்கும் முன்பாக பைபிளை வாசித்துக் காட்டுவது அவசியமாக இருந்தது. அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய கடிதங்களைச் சபைக் கூட்டங்களில் வாசித்துக் காட்டும்படி கட்டளை கொடுத்தார். மற்ற சபைகளுக்கு அவர் எழுதிய கடிதங்களையும் அதேபோல் சபையில் வாசித்துக் காட்டும்படி சொன்னார். (கொலோ 4:16; 1தெ 5:27) “சபையார் முன்னால் வாசிப்பதிலும், அவர்களுக்கு அறிவுரை சொல்வதிலும், கற்றுக்கொடுப்பதிலும்” முழு மூச்சோடு ஈடுபட்டுக்கொண்டிருக்கும்படி இளம் கிறிஸ்தவக் கண்காணியான தீமோத்தேயுவுக்கு பவுல் அறிவுரை தந்தார்.—1தீ 4:13.
மற்றவர்கள்முன் வாசிக்கும்போது, நாம் சரளமாக வாசிக்க வேண்டும். (ஆப 2:2) மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத்தான் அவர்கள்முன் நாம் வாசிக்கிறோம். அதனால், என்ன வாசிக்கிறோம் என்பதை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும், எதை மனதில் வைத்து எழுத்தாளர் அதை எழுதியிருக்கிறார் என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கேட்பவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளாத விதத்தில் கவனமாக வாசிக்க வேண்டும். “இந்தத் தீர்க்கதரிசன செய்திகளைச் சத்தமாக வாசிக்கிறவர்களும் கேட்கிறவர்களும் இதில் எழுதப்பட்டிருப்பதைக் கடைப்பிடிக்கிறவர்களும் சந்தோஷமானவர்கள்” என்று வெளிப்படுத்துதல் 1:3 சொல்கிறது.