“சரியானதைச் செய்வதை விட்டுவிடாதீர்கள்”
இரண்டு தெசலோனிக்கேயரிலிருந்து முக்கிய குறிப்புகள்
மக்கெதோனியா பட்டணத்தில் தெசலோனிக்கேயாவிலிருந்த கிறிஸ்தவர்கள் மீது அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இருந்த கரிசனைத்தானே ஏறக்குறைய பொ.ச. 51-ல் அவர்களுக்குத் தன்னுடைய இரண்டாவது கடிதத்தை எழுதும்படியாகத் தூண்டியது. இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் உடனடியாக இருக்கப்போகிறது என்று சபையிலுள்ள சிலர் தவறாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். ஒருவேளை பவுல் எழுதியதாகத் தவறாகக் கருதப்பட்ட ஒரு கடிதம் “யெகோவாவின் நாள்” வந்துவிட்டது என்பதைக் குறிப்பதாக விளக்கப்பட்டிருக்கக்கூடும்.—2 தெசலோனிக்கேயர் 2:1, 2.
எனவே ஒரு சில தெசலோனிக்கேயரின் யோசனையில் மாற்றம் தேவைப்பட்டது. தன்னுடைய இரண்டாவது கடிதத்தில் பவுல் அவர்களுடைய வளரும் விசுவாசத்திற்கும், அதிகரித்துவரும் அன்புக்கும், உண்மையோடு சகித்துவருவதற்கும் அவர்களைப் போற்றுகிறான். ஆனால் இயேசுவின் பிரசன்னத்திற்கு முன்பு விசுவாசதுரோகம் வரும் என்றும் அவன் காண்பித்தான். எனவே எதிர்காலத்தில் இக்கட்டான காலங்கள் காத்திருந்தது, எனவே அப்போஸ்தலனின் கடிதம் “சரியானதைச் செய்வதை விட்டுவிடாதீர்கள்” என்ற அவனுடைய புத்திமதிக்குச் செவிகொடுக்க அவர்களுக்கு உதவியது. (2 தெசலோனிக்கேயர் 3:13, NW) இதேவிதமாக பவுலின் வார்த்தைகள் நமக்கும் உதவக்கூடும்.
கிறிஸ்து வெளிப்படுவதும் அவருடைய பிரசன்னமும்
பவுல் முதலாவது உபத்திரவத்திலிருந்து விடுதலை குறித்து பேசினான். (1:1–12) இது “கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடு . . . வானத்திலிருந்து வெளிப்படும்போது” நடக்கும். அப்போது நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்கள்மீது நித்திய அழிவு நிறைவேற்றப்படும். துன்புறுத்துவோரின் கைகளில் நாம் துன்பப்படும்போது இதை மனதில் கொண்டிருப்பது நமக்கு ஆறுதலாயிருக்கிறது.
அடுத்து, கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கு முன்பு “பாவ மனுஷன்” வெளிப்படுவான் என்று பவுல் குறிப்பிட்டான். (2:1–17) “யெகோவாவின் நாள்” ஏற்கெனவே வந்துவிட்டது என்ற எந்த ஒரு செய்தியாலும் தெசலோனிக்கேயர் கிளர்ச்சியடைந்துவிடக்கூடாது. முதலாவது, விசுவாசதுரோகம் நேரிட்டுப் பாவமனுஷன் வெளிப்படுத்தப்படுவான். அதற்குப் பின்பு, இயேசு தம்முடைய பிரசன்னத்தில் வெளிப்படும்போது, அவனை நாசம்பண்ணுவார். அதற்கிடையே, கடவுளும் கிறிஸ்துவும் தெசலோனிக்கேயரின் இருதயங்களைத் தேற்றி “எல்லா நல் வசனத்திலும் நற்கிரியையிலும் . . . ஸ்திரப்படுத்த” பவுல் ஜெபிக்கிறான்.
ஒழுங்கற்றவர்களைக் கையாளுதல்
பவுல் தொடர்ந்து சொன்ன வார்த்தைகளில் ஒழுங்கற்றவர்களைக் கையாளுதல் சம்பந்தமான புத்திமதிகள் காணப்படுகின்றன. (3:1–18) கர்த்தர் அவர்களைப் பலப்படுத்தி தீயவனாகிய பிசாசாகிய சாத்தானிடமிருந்து விலக்கிக் காத்தருள்வார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறான். ஆனால் தங்களுடைய சொந்த ஆவிக்குரிய நன்மைக்கு ஏற்ற நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவேண்டும். அவர்கள் ஒழுங்கற்றவர்களிடமிருந்தும், தங்களுக்குரியதாயில்லாத காரியங்களில் தலையிட்டுக்கொள்கிறவர்களிடமிருந்தும், வேலைசெய்ய மனமில்லாதவர்களிடமிருந்தும் விலகிக்கொள்ளவேண்டும். “ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது” என்றான் பவுல். அப்படிப்பட்டவர்களைக் குறித்துக்கொண்டு அவர்களோடு கலந்துகொள்ளக்கூடாது, என்றபோதிலும் அவர்களைச் சகோதரராக எண்ணி புத்திசொல்ல வேண்டும். உண்மையுள்ள தெசலோனிக்கேய கிறிஸ்தவர்கள் சரியானதைச் செய்வதை விட்டுவிடக்கூடாது, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தகுதியற்றதயவு அவர்கள் அனைவரோடுங்கூட இருக்கவேண்டும் என்பதும் பவுலின் ஆசையாக இருந்தது.
தெசலோனிக்கேயருக்கு பவுல் எழுதிய இரண்டாவது கடிதம், கிறிஸ்துவும் அவருடைய தூதர்களும் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்கள் மீது ஆக்கினையைச் செலுத்தவரும்போது, தங்களுக்கு துன்புறுத்தப்படுவதிலிருந்து விடுதலைவரும் என்ற நிச்சயத்தை யெகோவாவின் சாட்சிகளுக்கு அளிக்கிறது. அதேசமயத்தில் “பாவ மனுஷன்” (கிறிஸ்தவமண்டலத்தின் குருவர்க்கம்) மற்றும் பொய் மதம் சீக்கிரத்தில் அழிவுக்கு வரும் என்பதை அறிவதும் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. அதற்கிடையில், சரியானதைச் செய்வதை விட்டுவிடவேண்டாம் என்ற பவுலின் புத்திமதிக்கு நாம் செவிகொடுப்போமாக. (w91 1⁄15)
[பக்கம் 32-ன் பெட்டி/படம்]
யெகோவாவின் வார்த்தை வேகமாக முன்னேறிச் செல்கிறது: “உங்களிடத்தில் யெகோவாவின் வார்த்தை வேகமாக முன்னேறிச் சென்று [அல்லது, “ஓடி”] மகிமைப்படும்படிக்கு எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.” (2 தெசலோனிக்கேயர் 3:1; கிங்டம் இன்டர்லீனியர்) பவுல் அப்போஸ்தலன் ஓர் ஓட்டப்பந்தயத்தில் வேகமாக முன்னேறிச் செல்கிறவர்களுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறான் என்று சில அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது நிச்சயமாயில்லாதிருக்க, தானும் தன்னுடைய உடன்வேலையாட்களும் சத்திய வசனத்தை அவசரத்தன்மையோடும் தடையின்றியும் பரப்புவதற்கேதுவாக தெசலோனிக்கேய கிறிஸ்தவர்களை ஜெபிக்க கேட்டுக்கொள்கிறான். கடவுள் அப்படிப்பட்ட ஜெபங்களுக்குச் செவிகொடுப்பதால், இந்தக் கடைசி நாட்களில் நற்செய்தி அவசரத்தன்மையுடன் பிரசங்கிக்கப்பட்டுவருகையில் அவருடைய வார்த்தை “வேகமாக முன்னேறிச் செல்கிறது.” யெகோவாவின் வார்த்தையை ஏற்றுக்கொண்ட தெசலோனிக்கேயர் மத்தியில் இருந்ததுபோல, அது ‘மகிமைப்படுத்தப்படுகிறது,’ “இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” என்று விசுவாசிகளால் உயர்வாக மதிக்கப்படுகிறது. (ரோமர் 1:16; 1 தெசலோனிக்கேயர் 2:13) கடவுள் ராஜ்ய பிரசங்கிப்பை ஆசீர்வதித்துவருகிறார் என்பதும் தம்முடைய வணக்கத்தாரின் எண்ணிக்கையை அதிகரித்துவருகிறார் என்பதும் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி!—ஏசாயா 60:22.