கொடுத்த வாக்கை ஏன் காப்பாற்ற வேண்டும்?
“குறைந்தளவு வாக்குறுதிகளை கொடுத்தவனுக்கே ஓட்டுப் போடுங்கள்; அப்போதுதான் குறைந்தளவே ஏமாறுவீர்கள்” என சொன்னார் அமெரிக்க ஜனாதிபதியின் ஆலோசகரான, காலஞ்சென்ற பெர்னார்ட் பாரூக். இன்றைய உலகில் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் “செல்லா காசாக” தோன்றுகின்றன. அவை திருமண வாக்குறுதிகளாகவோ, வியாபார ஒப்பந்தங்களாகவோ, அல்லது குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்பதற்கு ஒப்புக்கொண்ட வாக்காகவோ இருக்கலாம். எங்கும் புறக்கணிக்கப்படுகிற, அடிக்கடி ஒலிக்கும் மறைமுகமாக சுட்டிக்காட்டப்படும் பழமொழி “ஒருவனுடைய வாக்கு சுத்தத்தால் அவன் எடை போடப்படுகிறான்” என்பதே.
கொடுத்த வாக்கை தாங்கள் காப்பாற்ற வேண்டும் என அநேகர் நினைப்பதேயில்லை என்பது உண்மைதான். தங்களால் முடியாத பட்சத்திலும்கூட அநேகர் அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிடுகின்றனர் அல்லது சொன்ன சொல் தவறுகின்றனர்; அதுதான் அவர்களுக்குத் தெரிந்த எளிதான வழி.
சில சமயம் எதிர்பாராத காரணங்களால், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் வாக்குத் தவறுவது உண்மையில் பெரும் சேதத்தை விளைவிக்குமா? கொடுக்கும் வாக்குறுதிகளை நீங்கள் முக்கியமானவையாய் கருதுகிறீர்களா? இந்த விஷயத்திற்கு நாம் ஏன் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள யெகோவா தேவனின் உதாரணத்தைச் சற்று சிந்திப்பது உதவும்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுகிறார் யெகோவா
நாம் வணங்கும் கடவுளுடைய பெயர்தாமே, அவருடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தோடு நெருங்கத் தொடர்புடையதாய் உள்ளது. பைபிள் காலங்களில், ஒருவருடைய பெயர் அவர் எப்படிப்பட்டவர் என்பதை விளக்கியது. இது யெகோவா என்ற பெயரைப் பொருத்ததிலும் உண்மை; “ஆகும்படி செய்கிறவர்” என்பது அப்பெயரின் அர்த்தம். இவ்வாறு கடவுள் தம்முடைய வாக்குறுதிகளைக் காப்பாற்றி தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுகிறவர் என்ற கருத்து அவருடைய பெயரில் அடங்கியிருக்கிறது.
தம்முடைய பெயருக்கு இசைய, பூர்வ இஸ்ரவேல் தேசத்திற்குக் கொடுத்த ஒவ்வொரு வாக்கையும் அவர் நிறைவேற்றினார். இந்த வாக்குறுதிகளைக் குறித்ததில், “தாம் வாக்குத்தத்தம் பண்ணினபடியெல்லாம் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலை அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை” என சாலொமோன் ராஜா ஒப்புக்கொண்டார்.—1 இராஜாக்கள் 8:56.
அந்தளவுக்கு நம்பிக்கைக்குரியவராக யெகோவா இருப்பதால், “ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம் பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்[டார்]” என அப்போஸ்தலனாகிய பவுலால் விவாதிக்க முடிந்தது. (எபிரெயர் 6:13) தமக்கு பேரிழப்பு வந்தாலும்கூட தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஒருபோதும் பின்வாங்க மாட்டார் என்பதற்கு யெகோவாவின் பெயரும் அவருடைய குணங்களுமே உத்தரவாதம் அளிக்கின்றன. (ரோமர் 8:32) தம்முடைய வாக்குறுதிகளை யெகோவா நிறைவேற்றும் உண்மை, நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது; அது நமக்கு நங்கூரமாய் அமைகிறது.—எபிரெயர் 6:19.
யெகோவாவின் வாக்குறுதிகளும் நம்முடைய எதிர்காலமும்
யெகோவாவினுடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தில்தான் நம்முடைய நம்பிக்கை, நம்முடைய விசுவாசம், நம்முடைய ஜீவன் என எல்லாமே சார்ந்திருக்கிறது. எந்த நம்பிக்கையை நாம் பொக்கிஷம் போல் காக்கிறோம்? “அவருடைய [கடவுளுடைய] வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்[ற]” நம்பிக்கைக்கான ஆதாரத்தையும் பைபிள் நமக்குக் கொடுக்கிறது. (அப்போஸ்தலர் 24:15) நம் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடும் ஒன்றல்ல என்பதைக் குறித்து நாம் உறுதியாக இருக்கலாம். அந்த ‘வாக்குத்தத்தத்தை,’ ‘நித்திய ஜீவன்’ என அப்போஸ்தலனாகிய யோவான் சொல்கிறார். (1 யோவான் 2:25) யெகோவாவின் வார்த்தையில் காணப்படும் வாக்குறுதிகள் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சொல்பவை அல்ல. நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு இப்போதும் பயனுள்ளவையாயும் இருக்கின்றன.
“தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், . . . கர்த்தர் சமீபமாயிருக்கிறார். . . . அவர்கள் கூப்பிடுதலைக் கேட்[கிறார்]” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 145:18, 19) “சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணு”வதாகவும் யெகோவா நமக்கு உறுதியளிக்கிறார். (ஏசாயா 40:29) ‘நம்முடைய திராணிக்கு மேலாக நாம் சோதிக்கப்படுகிறதற்கு யெகோவா இடங்கொடாமல், . . . சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்’ என்பதை அறிந்திருப்பது எத்தகைய ஆறுதலை அளிக்கிறது! (1 கொரிந்தியர் 10:13, NW) இந்த வாக்குறுதிகளில் ஒன்றாகிலும் நம்முடைய விஷயத்தில் உண்மையாகியிருந்தால் யெகோவாவை ‘மலைபோல்’ முழுமையாக நம்பலாம் என்பதை நாம் அறிந்திருப்போம். யெகோவா அநேக வாக்குறுதிகளைக் கொடுக்கிறார், அவற்றை நிறைவேற்றவும் செய்கிறார், அதிலிருந்து நாம் அநேக நன்மைகளையும் பெறுகிறோம். அதன் அடிப்படையில் பார்த்தால், நம்முடைய வாக்குறுதிகளை நாம் எப்படிக் கருத வேண்டும்?
கடவுளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பது
நாம் கொடுக்கும் வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானது கடவுளுக்கான நம் ஒப்புக்கொடுத்தல் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலையை நாம் எட்டுகையில் யெகோவாவை என்றென்றும் சேவிக்க விரும்புகிறோம் என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறோம். கடவுளுடைய கட்டளைகள் பாரமானவையாய் இல்லாத போதிலும் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையில் அவருடைய சித்தத்தைச் செய்வதும், செய்வதற்கிசைய வாழ்வதும் எப்போதும் எளிதானதாய் இருப்பதில்லை. (1 யோவான் 5:3; 2 தீமோத்தேயு 3:12) ஆனால், யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களாகவும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாகவும் ஆகி, ‘கலப்பையின் மேல் கையை வைத்துவிட்டோம்’ என்றால், முழுக்குப் போட்டுவிட்டு வந்த உலகப்பிரகாரமான காரியங்களுக்காக ஏக்கப் பெருமூச்சுவிடக் கூடாது.—லூக்கா 9:62.
நாம் யெகோவாவிடம் ஜெபிக்கையில், நம்முடைய பலவீனத்தை மேற்கொள்வதற்காக போராடுவோம், கிறிஸ்தவ குணாதிசயங்களை வளர்த்துக்கொள்வோம் அல்லது குறிப்பிட்ட சில தேவராஜ்ய வேலைகளில் முன்னேறுவோம் என வாக்குக் கொடுக்க நாம் தூண்டப்படலாம். இந்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற எது நமக்கு உதவும்?—பிரசங்கி 5:2-5-ஐ ஒப்பிடுக.
இருதயமும் மனமுமே உண்மையான வாக்குறுதிகளின் பிறப்பிடம். எனவே, நம்முடைய வாக்குறுதிகளை உறுதிப்படுத்துவதற்காக, நம்முடைய இதயத்திலுள்ள பயங்களையும், விருப்பங்களையும், பலவீனங்களையும் யெகோவாவிடம் ஜெபத்தின் மூலம் கொட்டவேண்டும். நம்முடைய வாக்குறுதியைக் குறித்து ஜெபிப்பது அதை நிறைவேற்ற வேண்டும் என்ற நம் தீர்மானத்தை வலுப்படுத்தும். கடவுளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை, நாம் அடைத்துத் தீர்க்க வேண்டிய கடனைப் போல கருதவேண்டும். கடன் சுமை அதிகமாக இருந்தால் கொஞ்சங்கொஞ்சமாக கொடுத்து தீர்ப்போம். அதேவிதமாக, நாம் யெகோவாவுக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் காலத்தை எடுக்கும். ஆனால் தவறாமல் கொஞ்சங்கொஞ்சமாக “கொடுக்கும்” போது நம்மால் கொடுத்துத் தீர்க்க முடியும்; இவ்வாறு, சொன்னதைச் செய்கிறோம் என்பதற்கு அத்தாட்சி அளிக்கையில், அவரும் அதற்கேற்ப நம்மை ஆசீர்வதிப்பார்.
அடிக்கடி, அதாவது, தினந்தினம் நம்முடைய வாக்குறுதிகளைக் குறித்து ஜெபிப்பதன்மூலம், கொடுத்த வாக்குறுதிகளை நாம் ஏனோதானோ என்று எடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் காட்டலாம். அது நாம் உண்மையுள்ளவர்களாக இருப்பதை நம் பரலோக தகப்பனுக்கு வெளிப்படுத்தும். அது நித்தம் நமக்கு நினைப்பூட்டுதலாயும் அமையும். இதற்குத் தாவீது சிறந்த முன்மாதிரி வைத்தார். “தேவனே, என் கூப்பிடுதலைக் கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும். . . . தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்” என ஒரு சங்கீதத்தில் அவர் யெகோவாவிடம் மன்றாடினார்.—சங்கீதம் 61:1, 8.
வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நம்பிக்கையை அதிகரிக்கிறது
கடவுளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றால் உடன் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளைப் பொறுத்ததிலும் அதுவே உண்மையாய் இருக்க வேண்டும். ஒரு கண்ணில் வெண்ணெய் மறுகண்ணில் சுண்ணாம்பு என்பது போல் யெகோவாவின் விஷயத்தில் ஒருமாதிரியும் நம்முடைய சகோதரர்கள் விஷயத்தில் ஒருமாதிரியும் நடந்துகொள்ளக்கூடாது. (1 யோவான் 4:20-ஐ ஒப்பிடுக.) இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில், “உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்” என்று சொன்னார். (மத்தேயு 5:37) ‘விசுவாச குடும்பத்தார்களுக்கு நன்மைசெய்வது’ நாம் சொன்னதையே செய்வோம் என்பதைக் காட்டுவதற்கான ஒருவழி. (கலாத்தியர் 6:10) நாம் நிறைவேற்றும் ஒவ்வொரு வாக்குறுதியும் நம் நம்பிக்கை கட்டிடம் உயர உதவும் ஒவ்வொரு கற்களாகும்.
பணம் உட்பட்டிருக்கையில் சொன்ன வாக்கைக் காப்பாற்றாதது ஏற்படுத்தும் பாதிப்புகள் பெரும்பாலும் பூதக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் பெரிதுபடுத்திக் காட்டப்படும். கடனைத் திருப்பித் தருவதில், ஒரு வேலையைச் செய்து முடிப்பதில், அல்லது வியாபார ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் ஒரு கிறிஸ்தவனுக்கு வாய் சுத்தம் அவசியம். இதுவே யெகோவாவுக்கும் பிரியமானது; இது ஒற்றுமையாய் ‘சகோதரர் ஒருமித்து வாசம்பண்ண’ முக்கியமாய் தேவைப்படுகிற பரஸ்பர நம்பிக்கையை உறுதிப்படுத்தும்.—சங்கீதம் 133:1.
எனினும், ஒப்பந்தங்களுக்கு இசைய நடக்கவில்லை என்றால் அது சபையையும் அதில் நேரடியாக உட்பட்டுள்ள நபர்களையும் பாதிக்கும். “வியாபார தகராறுகள், அதிலும் முக்கியமாக, செய்த ஒப்பந்தத்தின்படி ஒரு தரப்பினர் நடக்கவில்லை என்பதாக மற்ற தரப்பினர் நினைப்பதால் எழும்பும் தகராறுகள் அடிக்கடி எல்லாருக்கும் தெரிய வருகின்றன. இதனால், சகோதரர்கள் கட்சி சேர்ந்துகொண்டு இரண்டுபட்டுவிடுவதால் ராஜ்ய மன்றத்தில் நிலைமை படுமோசமடைகிறது” என கருத்துத் தெரிவிக்கிறார் ஒரு பயணக் கண்காணி. நாம் என்ன வாக்குக் கொடுத்தாலும் கவனமாக அதைச் செய்வதும், எழுத்தில் எழுதிவிடுவதும் எவ்வளவு முக்கியம்!a
விலையுயர்ந்த பொருட்களை விற்கையில் அல்லது முதலீடு செய்யச் சொல்லி மற்றவர்களிடம் சொல்கையில் எச்சரிக்கை தேவை. அதிலும் குறிப்பாக இதனால் நமக்கு லாபம் இருந்தால் இந்த எச்சரிக்கை மிகவும் அவசியம். அதேவிதமாக, குறிப்பிட்ட சில பொருட்களின் அல்லது ஆரோக்கியத்திற்கு உதவும் சாதனங்களின் பயன்களைப் பற்றி ஒரேயடியாக வானளாவ உயர்த்திப் பேசாமலிருப்பது அல்லது முதலீடுகள் செய்தால், “கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்” பாணியில் வாக்குக் கொடுக்காமலிருப்பது அவசியம். அவற்றில் உட்பட்டுள்ள எல்லா ஓட்டைகளையும், லாபநஷ்டங்களையும் ஒளிவுமறைவில்லாமல் சொல்ல கிறிஸ்தவர்களை அன்பு தூண்ட வேண்டும். (ரோமர் 12:10) அநேக சகோதரர்கள் வியாபாரத்தில் அனுபவம் இல்லாதவர்களாய் இருப்பதாலும், விசுவாசத்தில் நாம் அவர்களுக்கு “உறவுக்காரராய்” இருப்பதால் கண்ணை மூடிக்கொண்டு நாம் சொல்வதை மலைபோல் நம்பிவிடுவர். இத்தகைய நம்பிக்கையின் அஸ்திவாரமே ஆட்டங்கண்டால் அவர்கள் நிலை வேதனைக்குரியதே!
கிறிஸ்தவர்களாக நாம், நேர்மையற்ற அல்லது மற்றவர்களின் நியாயமான அக்கறைகளையே மிதிப்பதாக இருக்கும் வியாபார விஷயங்களில் ஈடுபட மாட்டோம். (எபேசியர் 2:2, 3; எபிரெயர் 13:18) யெகோவாவின் ‘கூடாரத்தில் விருந்தினராக’ தங்கும் பாக்கியம் பெற, நாம் நம்பிக்கைக்குரியவராய் இருக்க வேண்டும். ‘ஆணையிட்டதில் நமக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்க வேண்டும்.’—சங்கீதம் 15:1, 4, NW.
அம்மோனியருக்கு எதிரான யுத்தத்தில் கடவுள் தனக்கு வெற்றியளித்தால், யுத்தம் முடிந்து திரும்புகையில் தன் வீட்டிலிருந்து தான் முதலாவது எதிர்ப்பட போவதை யெகோவாவுக்குத் தகனபலி கொடுப்பதாய் இஸ்ரவேலின் நியாயாதிபதியாகிய யெப்தா பொருத்தனை பண்ணினார். முதலாவதாக எதிர்ப்பட்டதோ யெப்தாவின் ஒரே மகள்; ஆனால் அவர் தான் சொன்ன சொல் தவறவில்லை. தன் மகளின் பூரண சம்மதத்தோடு கடவுளுடைய ஆலயத்தில் நித்தம் இருந்து சேவை செய்ய அவளை ஒப்புக்கொடுத்தார்; சந்தேகத்திற்கிடமில்லாமல் அந்த “பலி” அவரை சோகத்தில் ஆழ்த்தியது, பேரிழப்பாகவும் இருந்தது.
தாங்கள் சொன்னதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு முக்கியமாய் சபை கண்காணிகளுக்கு இருக்கிறது. 1 தீமோத்தேயு 3:2-ன்படி கண்காணி, ‘குற்றஞ்சாட்டப்படாதவராய்’ இருக்க வேண்டும். இது, “எதிலும் சிக்கிக்கொள்ளாமலிருத்தல், குற்றமற்றிருத்தல், தூற்றப்படாமல் இருத்தல்” என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. இது, “ஒருவர் நற்பெயர் பெற்றிருப்பது மட்டும் போதாது ஆனால் அதற்குத் தகுதியானவராகவும் இருப்பதை அர்த்தப்படுத்துகிறது.” (கிரேக்க புதிய ஏற்பாட்டை அறிவதற்கான மொழிமூலம் [ஆங்கிலம்]) கண்காணியானவர் குற்றஞ்சாட்டப்படாதவராய் இருக்க வேண்டுமாதலால், அவருடைய வாக்குறுதிகள் எப்போதும் நம்பத்தக்கவையாய் இருக்க வேண்டும்.
வாக்குத் தவறாமல் இருக்க சில வழிகள்
கிறிஸ்தவர்களாக இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் வாக்குகளை நாம் எப்படிக் கருத வேண்டும்? “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” என்றார் இயேசு. (மத்தேயு 5:16) நாம் சொன்ன சொல் தவறாதவர்கள் என்பதை நிரூபிப்பதன்மூலம் நற்செய்தியிடம் மற்றவர்களை நாம் ஈர்க்கலாம். நேர்மையின் விலை என்ன என்று கேட்கும் இன்றைய உலகத்தில் உண்மைத் தன்மையை மதிக்கும் அநேகர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். நாம் கொடுத்த வாக்கைக் காப்பது, கடவுளுக்கும் அயலாருக்கும் நம் அன்பைக் காட்டுவதற்கும் நீதியை நேசிப்போருக்கு அழைப்பு விடுப்பதற்குமான ஒரு வழி.—மத்தேயு 22:36-39; ரோமர் 15:2.
யெகோவாவின் சாட்சிகள், 1998-ன் ஊழிய ஆண்டின்போது நூறு கோடிக்கும் அதிக மணிநேரத்தை கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை எல்லாருக்கும் அறிவிப்பதில் செலவிட்டிருக்கின்றனர். (மத்தேயு 24:14) நம்முடைய வியாபாரத்திலோ அல்லது மற்ற விஷயங்களிலோ சொன்ன பேச்சு மாறுபவர்களாய் நாம் இருந்துகொண்டு மற்றவர்களுக்கு நாம் பிரசங்கம் செய்தோமானால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே இருக்கும். சத்தியத்தின் கடவுளை நாம் பிரதிநிதித்துவம் செய்வதால், நாம் நேர்மையாய் நடந்துகொள்ளும்படி ஆட்கள் எதிர்பார்க்கின்றனர். நம்பகமானவராகவும் நேர்மையானவராகவும் இருக்கையில், இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்க”வர்களாய் நாம் இருப்போம்.—தீத்து 2:9.
நம்முடைய ஊழியத்தில், ராஜ்ய செய்தியிடம் ஆர்வம் காட்டியவர்களை மறுசந்திப்பு செய்கையில் நம்முடைய வார்த்தையைக் காப்பாற்ற நமக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. நாம் மீண்டும் சந்திக்க வருவதாக சொல்லியிருந்தால் நிச்சயம் செல்ல வேண்டும். ‘நன்மை செய்யத்தக்கவர்களுக்கு அதை செய்ய’ இருக்கும் ஒரு வழி, நாம் ஒப்புக்கொண்டபடி மறுபடியும் சென்று சந்திப்பது. (நீதிமொழிகள் 3:27) “பல சந்தர்ப்பங்களில், ‘சாட்சி ஒருவர் வருவதாக சொல்லிவிட்டுச் சென்றார் ஆனால் போனவர் போனவர்தான்’ என சொல்லும் ஆர்வம் காட்டும் அநேகரை நான் சந்தித்திருக்கிறேன். ஒருவேளை, அந்த வீட்டுக்காரர் வீட்டில் இல்லாதிருந்தது அல்லது மீண்டும் செல்ல சூழ்நிலை அனுமதிக்காதது காரணமாயிருக்கலாம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னைப் பற்றி யாரும் அப்படி தப்புக்கணக்குப் போட்டுவிடக் கூடாது, எனவே ஆட்களை மீண்டும் வீடுகளில் சந்திக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். நான் யாரையாவது காக்க வைத்து ஏமாற்றிவிட்டால் அது யெகோவாவின் பெயரையும் என் சகோதரர்கள் அனைவருடைய பெயரையும் கெடுத்துவிடும் என்பது தெரியும்” என ஒரு சகோதரி விஷயத்தை இப்படி விவரித்தார்.
அந்த நபருக்கு உண்மையிலேயே ஆர்வம் இல்லை என நாமாகவே முடிவுசெய்து கொண்டு மறுசந்திப்பு செய்யாமலிருப்பதும் சில சமயங்களில் நடக்கிறது. மேற்குறிப்பிடப்பட்ட அதே சகோதரி சொல்வதாவது: “ஒருவர் எந்தளவு ஆர்வம் காட்டினார் என தீர்மானிக்க தராசை நானே கையிலெடுக்க மாட்டேன். என் முதல் கணிப்பு அடிக்கடி தவறியிருக்கிறது; இதுவே என் அனுபவம் எனக்குக் கற்பித்த பாடம். அதனால் எப்போதுமே நல்லதையே நினைப்பேன்; வருங்கால சகோதர சகோதரிகள் என்ற கண்ணோட்டத்திலேயே ஒவ்வொரு ஆளையும் பார்ப்பேன்.”
கிறிஸ்தவ ஊழியத்திலும் இன்னும் பல விஷயங்களிலும் வாக்கு மாறாதவர்கள் என நாம் பெயரெடுக்க வேண்டியது முக்கியம். செய்வதைக் காட்டிலும் சொல்வது எளிது என்பது அநேக விஷயங்களில் முழுக்க முழுக்க உண்மை. “மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?” என ஒரு ஞானி சொன்னார். (நீதிமொழிகள் 20:6) முழு உறுதியோடு, நம் வார்த்தைகளில் நம்பிக்கைக்கும் உண்மைக்கும் பாத்திரராய் இருக்கலாம்.
கடவுளிடமிருந்து மிகுந்த ஆசீர்வாதம்
வேண்டுமென்றே போலித்தனமாக வாக்குக்கொடுப்பது நேர்மையற்றதாகும்; அது பாங்க் அக்கௌண்டில் பணமில்லாதிருக்கையில் வெத்து செக்கை எழுதிக் கொடுப்பதற்குச் சமம். ஆனால் நாம் சொன்ன சொல்லைக் காப்பாற்றினாலோ கிடைக்கும் பலன்களும் ஆசீர்வாதங்களும் விவரிக்க முடியாதவை! நம்பகமானவராய் இருப்பதால் கிடைக்கும் பலன்களில் ஒன்று: சுத்தமான மனசாட்சி. (அப்போஸ்தலர் 24:16-ஐ ஒப்பிடுக.) சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியவில்லையே என்று நினைத்து மனம் புழுங்காமல், நாம் திருப்தியையும் சாந்தியையும் பெறுவோம். மேலும், நம் வார்த்தையைக் காப்பாற்றுவதன் மூலம், பரஸ்பர நம்பிக்கையைச் சார்ந்திருக்கும் சபை ஐக்கியத்திற்கு நாம் பங்களிப்போம். நாம் ‘சத்தியத்தைப் பேசுவதன்’ மூலமும் சத்திய தேவனின் ஊழியர்கள் என நம்மை ஏற்கச் செய்வோம்.—2 கொரிந்தியர் 6:3, 4, 7, NW.
யெகோவா வாய்மை தவறாதவர்; ‘பொய் நாவை’ அவர் வெறுக்கிறார். (நீதிமொழிகள் 6:16, 17) நம் பரலோக தகப்பனின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம் நாம் அவரிடம் நெருங்கி வரமுடியும். நிச்சயமாகவே, நம்முடைய வாக்குறுதிகளைக் காப்பாற்ற நமக்கு நல்ல காரணம் இருக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a “எழுதி வாங்கிக் கொள்ளுங்கள்!” என்ற கட்டுரையை பிப்ரவரி 8, 1983, ஆங்கில விழித்தெழு!-வில், பக்கங்கள் 13-15-ல் காண்க.
[பக்கம் 10-ன் படங்கள்]
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது யெப்தாவுக்கு வேதனையளித்தபோதிலும் காப்பாற்றினார்
[பக்கம் 11-ன் படங்கள்]
மறுசந்திப்புக்கு ஒப்புக்கொண்டிருந்தால் அதற்காக நன்றாக தயாரித்துச் செல்லுங்கள்