இந்த முடிவு காலத்தில் உத்தரவாதமுள்ள பிள்ளைப்பேறு
“பிள்ளைகளை . . . நன்றாய் நடத்துகிறவர்களாயிருக்க வேண்டும்.”—1 தீமோத்தேயு 3:12.
பெற்றோராக இருப்பதன் மகிழ்ச்சி மறுக்க முடியாதது. தாய்மையின் உணர்வுகள் இருப்பதோ இயல்பானது, சிலரில் மற்றவர்களைவிட பலமாக இருக்கக்கூடும். மேற்கத்திய நாடுகள் பலவற்றில் சிறு பையன்கள் இயந்திர விளையாட்டுச் சாமான்கள் கொண்டு விளையாடுவதில் அதிக அக்கறைகாட்டுகின்றனர், சிறு பெண்பிள்ளைகளோ பொம்மைகளை விரும்புகின்றனர். எனவேதான், விளையாட்டுப்பொருட்களின் உற்பத்தியாளர்கள் அவற்றுக்கு உண்மையான தோற்றத்தைக் கொடுக்கின்றனர். அநேக பெண் பிள்ளைகள் ஒரு பொம்மையை அல்ல, ஆனால் தங்களுடைய சொந்த உயிருள்ள குழந்தையைக் கொஞ்சி தாலாட்டும் அந்த நாளுக்கென வாழ்கின்றனர்.
சந்தோஷங்களும் உத்தரவாதங்களும்
2 உத்தரவாதமுள்ள பிள்ளைப்பேறு தேவைப்படுத்துவதாவது, புதிதாய்ப் பிறந்த குழந்தையைப் பெற்றோர் வெறும் ஒரு விளையாட்டுப் பொருளாகக் கருதுவதற்கில்லை, ஆனால் அந்தக் குழந்தையின் வாழ்க்கைக்கும் எதிர்காலத்துக்கும் தாங்கள் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும். அவர்கள் இந்த உலகத்திற்குள் ஒரு குழந்தையைக் கொண்டுவரும்போது, ஒரு பெரிய உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்வதற்கும் அதற்கேற்ப தங்கள் காரியங்களைச் சரிசெய்துகொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் உணவு, உடை, நோய்க் கவனிப்பு, மற்றும் கல்வி ஆகியவற்றை உட்படுத்தும் ஓர் 20 ஆண்டு திட்டத்தில் இறங்குகிறார்கள், முடிவில் பலன் என்னவாக இருக்கும் என்பதை முன்னறிவிப்பதற்கில்லை.
3 மகிழ்ச்சிக்குரிய காரியம் என்னவென்றால், அநேக பெற்றோர், யெகோவாவின் உண்மையுள்ள ஒப்புக்கொடுத்த ஊழியர்களாகியிருக்கும் பிள்ளைகளை வளர்த்திருக்கிறார்கள். சிலர் தங்களுடைய பிள்ளைகள் வளர்ந்து முழுநேர ஊழியத்தில் பயனியர்களாக, மிஷனரிகளாக, பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களாகப் பிரவேசித்திருப்பதைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெற்றோர்களைக் குறித்ததில் இவ்வார்த்தைகள் உண்மையாகவே சொல்லப்படலாம்: “நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள், உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.”—நீதிமொழிகள் 23:24, 25.
பெற்றோரின் மனவேதனைகள்
4 ஆனால், எல்லா சமயத்திலும் இப்படி இருப்பதில்லை. பிள்ளைகளையுடைய மூப்பர்களின் விஷயத்திலும் இப்படி இருப்பதில்லை. பவுல் அப்போஸ்தலன் பின்வருமாறு எழுதினான்: “கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனாயும், ஒரே மனைவியை உடைய புருஷனும், . . . தன் சொந்த குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்க வேண்டும். ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?” பவுல் மேலுமாகக் கூறினான்: “உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய் தங்கள் பிள்ளைகளையும் சொந்த குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்க வேண்டும்.”—1 தீமோத்தேயு 3:2–5, 12.
5 உரிமை வயது வந்த வளர்ந்த பிள்ளைகள், யெகோவாவைத் தொடர்ந்து சேவிக்க மறுப்பார்களென்றால், அதற்காகக் கிறிஸ்தவ மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் பொறுப்புள்ளவர்களாக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், உரிமை வயது வராத இளம் பிள்ளைகளுக்கு அல்லது தங்களுடைய வீட்டில் தங்களோடிருக்கும் பெரிய பிள்ளைகளுக்கு அவர்கள் கட்டாயமாகவே உத்தரவாதமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்தக் காரியத்தில் கவனம் செலுத்தாததால் அல்லது “தங்கள் பிள்ளைகளையும் சொந்த குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களாய் இருக்க வேண்டும்” என்ற வேதப்பூர்வமான தகுதியில் வெகுவாகக் குறைவுபட்டதால் மூப்பர்களும் உதவி ஊழியர்களும் அருமையான ஊழிய சிலாக்கங்களை இழந்துவிட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குத் தங்கள் பிள்ளைகள் மகிழ்ச்சியை அல்ல, ஆனால் மனவருத்தத்தையே தேடித்தந்திருக்கின்றனர். இந்த நீதிமொழி எவ்வளவு உண்மையாயிருக்கிறது: “மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்!”—நீதிமொழிகள் 19:13.
உத்தரவாதமுள்ள தகப்பன் ஸ்தானம்
6 சபையில் உத்தரவாதங்களையுடையவர்களாய் இருந்தாலுஞ்சரி, இல்லாமல் இருந்தாலுஞ்சரி, கிறிஸ்தவ கணவன்மார்கள் எல்லாருமே கவனிக்க வேண்டிய ஒரு காரியம், இளம் பிள்ளைகளைக் கவனிப்பது தங்களுடைய மனைவியின் ஆவிக்குரிய தன்மையைப் பாதிக்கக்கூடும் என்பதாகும். ஒரு மனைவி ஆவிக்குரிய விதத்தில் பலமாக இல்லாதிருந்தால், ஒரு குழந்தை, விசேஷமாக புதிதாகப் பிறந்த குழந்தை அவளுடைய தனிப்பட்ட படிப்பையும், பிரசங்க வேலையில் பங்கு கொள்வதற்கான அவளுடைய வாய்ப்புகளையும் எப்படி பாதிக்கும்?
7 ஒரு குழந்தையை அல்லது பிள்ளையைக் கவனிக்கும் தங்களுடைய மனைவிமார்கள் சபை புத்தகப் படிப்பிலிருந்தும், ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களிலிருந்தும், வட்டார, மாவட்ட மாநாடுகளிலிருந்தும் முழு நன்மையைப் பெறுவதிலிருந்து அவர்களைத் தடை செய்கிறது என்பதைக் கணவன்மார் எல்லா சமயத்திலும் உணருகிறார்களா? இப்படிப்பட்ட நிலை பலமாதங்களுக்கும், அடுத்தடுத்து குழந்தைகள் இருந்தால் பல வருடங்களுக்கும் நீடிக்கக்கூடும். இயல்பாகவே, இந்தக் காரியத்தில் பாரம் முக்கியமாக தகப்பன் மீது அல்ல, தாய் மீதே விழுகிறது. சில சமயங்களில் கிறிஸ்தவ ஆண்கள் சபைகளில் சிலாக்கியங்களைப் பெறுமளவுக்கு ஆவிக்குரிய விதத்தில் முன்னேறுவது கவனிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அவர்களுடைய மனைவிகளோ ஆவிக்குரிய விதத்தில் பலவீனமாகிவிடுகிறார்கள். ஏன்? அநேக சமயங்களில் அவர்கள் கூட்டங்களில் கவனிப்பதிலிருந்தும், பைபிளை ஆழமாகப் படிப்பதிலிருந்தும், சாட்சி கொடுக்கும் வேலையில் நிறைவான பங்கை உடையவர்களாயிருப்பதிலிருந்தும் அவர்களுடைய சிற்றிளம் பிள்ளைகள் அவர்களைத் தடை செய்கிறார்கள். பிள்ளைப்பேறு இப்படிப்பட்ட ஒரு நிலைமைக்கு வழிநடத்துகிறதென்றால், தகப்பனின் ஸ்தானம் உத்தரவாதமுள்ள ஒன்றாய்க் கருதப்படுகிறது என்று சொல்லமுடியுமா?
8 நல்லவேளையாக, எல்லாருடைய விஷயத்திலும் இது இப்படி இருப்பதில்லை. தங்களுடைய மனைவிமார்கள் ஆவிக்குரிய காரியங்களுக்குக் கவனம் செலுத்துவதற்காக, அநேக தகப்பன்மார்கள், பிள்ளைகளைக் கூட்டங்களிலும் வீட்டிலும் கவனிக்கும் உத்தரவாதத்தைப் பகிர்ந்துகொள்கின்றனர். தங்களுடைய பிள்ளைகள் சபைக்கூட்டங்களின் போது அமைதியாக இருப்பதைக் கவனித்துக்கொள்வதில் தங்களுடைய முழு பங்கை நிறைவேற்றுகிறார்கள். தங்களுடைய குழந்தை அழ ஆரம்பித்தால், அல்லது பிள்ளை முரண்டுபிடிப்பதாய் இருந்தால், தங்களுடைய பாகமாக, அதற்குத் தகுந்த சிட்சையளிப்பதற்காக அதை வெளியே எடுத்துச் செல்வார்கள். கூட்டங்களின் பாகங்களைத் தவறவிடுவது ஏன் எப்பொழுதுமே தாய்மார்களாக இருக்கவேண்டும்? கணவனும் மனைவியும் அமைதலாக ஆவிக்குரிய காரியங்களுக்குக் கவனம் செலுத்துவதற்காகக் கரிசனையுள்ள கணவன்மார் வீட்டில் செய்யப்படும் வேலைகளில் மனைவிகளுக்கு உதவியாயிருந்து, பிள்ளைகளைத் தூங்க வைக்கவும் உதவுகிறார்கள்.
9 ஒரு சபையில் காரியங்கள் சரியாக ஒழுங்குசெய்யப்படும்போது குழந்தைகளையுடைய இளம் தாய்மார்கள் துணைப் பயனியர் சேவையில் பங்குபெறலாம். சிலர் ஒழுங்கான பயனியர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, பிள்ளைகள் எல்லா சமயத்திலும் முட்டுக்கட்டையாக இருப்பதில்லை. அநேக பெற்றோர் நல்ல பயனியர் ஆவியை வெளிப்படுத்துகின்றனர்.
பிள்ளைகளில்லாமல் இருந்தாலும் மகிழ்ச்சி
10 இளம் தம்பதிகளில் சிலர் பிள்ளைகளில்லாதிருக்க தீர்மானித்திருக்கின்றனர். மற்றப் பெண்களைப் போலவே தங்களுடைய மனைவிகளுக்கும் தாய்மைக்குரிய உணர்வுகள் பலமாக இருந்த போதிலும், தங்களுடைய கணவருடைய ஒப்புதலின் பேரில் யெகோவாவை முழுநேரமாக சேவிப்பதற்காக பிள்ளைகளில்லாமல் இருப்பது என்று தீர்மானித்திருக்கின்றனர். அவர்களில் அநேகர் பயனியர்களாகவும் மிஷனரிகளாகவும் சேவித்திருக்கின்றனர். அவர்களால் கடந்த ஆண்டுகளை நன்றியறிதலுடன் திரும்பிப்பார்க்க முடிகிறது. ஆம், அவர்கள் மாம்சப்பிரகாரமான பிள்ளைகளைப் பிறப்பிக்கவில்லை. ஆனால் யெகோவாவை வணங்குவதில் உண்மையோடு நிலைத்திருக்கும் புதிய சீஷர்களை உண்டாக்கி இருக்கின்றனர். தங்களுக்கு “சத்திய வசனத்தைக்” கொண்டுவர யார் கருவியாக இருந்தது என்பதை ‘விசுவாசத்தில் உத்தம பிள்ளைகள்’ எந்த சமயத்திலும் மறக்கமாட்டார்கள்.—1 தீமோத்தேயு 1:2; எபேசியர் 1:13; 1 கொரிந்தியர் 4:14, 17; 1 யோவான் 2:1-ஐ ஒப்பிடவும்.
11 உலகமுழுவதும் அநேக தம்பதிகள் வட்டார கண்காணிகளாகவும் மாவட்ட கண்காணிகளாகவும் அல்லது பெத்தேல் அங்கத்தினராகவும் யெகோவாவை முழுநேரமாக சேவிப்பதற்கென்று பெற்றோராயிருப்பதன் மகிழ்ச்சியைத் துறந்திருக்கின்றனர். இவர்களுங்கூட இந்தச் சிலாக்கியங்களில் யெகோவாவையும் தங்களுடைய சகோதரர்களையும் சேவிப்பதில் தாங்கள் செலவழித்திருக்கும் வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பதில் திருப்தியைக் காண்கின்றனர். அவர்கள் விசனப்படுவதில்லை. இந்த உலகத்திற்குள் பிள்ளைகளைக் கொண்டுவரும் மகிழ்ச்சியைக் கண்டிராவிட்டாலும், ராஜ்ய அக்கறைகளை விஸ்தரிப்பதில் அவர்கள் முக்கியமான பங்கை வகித்துவந்திருக்கிறார்கள். “ராஜ்யத்தினிமித்தம்” பிள்ளைகளில்லாமல் இருக்கும் இந்தத் தம்பதிகளுக்குப் பின்வரும் வசனம் நிச்சயமாகவே பொருந்துகிறது: “உங்கள் கிரியையும் நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.”—மத்தேயு 19:12; எபிரெயர் 6:10.
ஒரு தனிப்பட்ட விஷயம்
12 இந்தக் கலந்தாராய்வின் ஆரம்பத்தில் நாம் கவனித்ததுபோல, பிள்ளைப்பேறு ஓர் ஈவு. (சங்கீதம் 127:3) அது யெகோவாவின் ஆவி சிருஷ்டிகளுக்கு இல்லாத தனித்தன்மை வாய்ந்த ஒரு சிலாக்கியம். (மத்தேயு 22:30) பிள்ளைகளைப் பெற்றெடுத்தல், பூமியிலுள்ள தம்முடைய ஊழியர்களுக்கு யெகோவா நியமித்த வேலையின் ஒரு பாகமாக இருந்த சமயங்களும் இருந்தன. இது ஆதாம் ஏவாள் விஷயத்தில் உண்மையாயிருந்தது. (ஆதியாகமம் 1:28) ஜலப்பிரளத்தைத் தப்பிப்பிழைத்தவர்கள் விஷயத்திலும் இது உண்மையாயிருந்தது. (ஆதியாகமம் 9:1) இஸ்ரவேல் புத்திரர் பிள்ளைப்பேற்றின் மூலம் பெருக வேண்டும் என்பது யெகோவாவின் சித்தமாக இருந்தது.—ஆதியாகமம் 46:1–3; யாத்திராகமம் 1:7, 20; உபாகமம் 1:10.
13 இன்று பிள்ளைப்பேறு, யெகோவா தம்முடைய ஊழியர்களுக்குக் கொடுத்திருக்கும் வேலையின் குறிப்பிட்ட ஒரு பாகமாக இல்லை. என்றபோதிலும் இது விவாகமான தம்பதிகள் விருப்பப்பட்டால் அவர்களுக்கு அவர் அளித்திருக்கும் ஒரு சிலாக்கியமாக இன்னும் இருந்துவருகிறது. எனவே ஒரு குடும்பத்தைக் கொண்டிருக்க கிறிஸ்தவ தம்பதிகள் தீர்மானிப்பார்களானால், அவர்களைக் குறை சொல்லக் கூடாது; பிள்ளைகளில்லாமல் இருக்க தீர்மானிக்கும் தம்பதிகளையும் குறைசொல்லக்கூடாது.
14 எனவே இந்தக் கடைசி காலத்தில் பிள்ளைகளைக் கொண்டிருப்பது என்பது ஒவ்வொரு தம்பதியும் தங்களுக்கென்று தீர்மானிக்க வேண்டிய ஒரு தனிப்பட்ட விஷயம். இருந்தாலும், “காலம் குறுகினதானபடியால்” விவாகமான தம்பதிகள், உலகத்தில் பிள்ளைகளைக் கொண்டு வருவதிலிருக்கும் நன்மை தீமைகளைக் கவனமாகவும் ஜெபத்தோடும் சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது. (1 கொரிந்தியர் 7:29) பிள்ளைகளைக் கொண்டிருக்க தீர்மானிப்பவர்கள், பிள்ளைப்பேறு கொண்டுவரக்கூடிய மகிழ்ச்சியை அறிந்தவர்களாக மட்டுமல்ல, ஆனால் அதில் உட்பட்டிருக்கும் உத்தரவாதங்களையும் தங்களுக்கும் இந்த உலகில் தாங்கள் கொண்டுவரும் பிள்ளைகளுக்கும் ஏற்படக்கூடிய பிரச்னைகளையும் முழுவதுமாக அறிந்தவர்களாயிருக்க வேண்டும்.
திட்டமிடாதிருக்கும்போது
15 சிலர் இப்படியாக சொல்லக்கூடும்: ‘அதெல்லாம் சரிதான், ஆனால் எதிர்பாராத சமயத்தில் குழந்தை உண்டாகிவிட்டால் என்ன செய்வது?’ இந்த உலகத்தில் பிள்ளைகளைக் கொண்டுவருவதற்கு இது சாதகமான காலம் அல்ல என்பதை நன்றாக அறிந்திருக்கும் அநேக தம்பதிகளுக்கு இது சம்பவித்திருக்கிறது. அவர்களில் பலர் முழுநேர ஊழியத்தில் பல ஆண்டுகளாக இருந்தவர்கள். எதிர்பாராத அந்தப் புதிய நபரின் வருகையை அவர்கள் எவ்விதம் நோக்க வேண்டும்?
16 இந்த இடத்தில்தான் உத்தரவாதமுள்ள பெற்றோராயிருப்பதன் பாகம் வருகிறது. உண்மைதான், கர்ப்பமாவது ஒருவேளை எதிர்பாராத ஒன்றாக இருக்கக்கூடும், ஆனால் பிறக்கும் குழந்தை வேண்டாத குழந்தை என்று கிறிஸ்தவ பெற்றோர் நினைத்துவிடக்கூடாது. அதன் வருகை அவர்களுடைய வாழ்க்கையில் என்ன மாற்றங்களைக் கொண்டுவந்தாலும் அதை அவர்கள் வெறுப்பாக உணரக்கூடாது. என்னதானிருந்தாலும், அந்தக் கருதரிப்புக்கு அவர்கள்தானே உத்தரவாதமுள்ளவர்கள். இப்பொழுது அந்நிலை ஏற்பட்டிருக்க, “சமயமும் எதிர்பாராத சம்பவமும்” ஏதாவது ஒரு வழியில் எல்லா மனிதருக்கும் ஏற்படுகிறது என்பதை அறிந்து, தங்களுடைய மாறிய சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும். (பிரசங்கி 9:11, NW) யெகோவா தாமே காரணகர்த்தாவாக இருக்கும் படைப்புக்குரிய ஒரு செயலில் அவர்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ பங்கு பெற்றிருக்கின்றனர். தங்களுடைய பிள்ளையைத் தாங்கள் பெற்ற ஒரு பொறுப்புரிமையாக ஏற்று, “கர்த்தருக்குள் பெற்றோராக” தங்களுடைய உத்தரவாதங்களை அன்போடு நிறைவேற்ற வேண்டும்.—எபேசியர் 6:1, NW.
‘எல்லாவற்றையும் கர்த்தருடைய நாமத்தில் செய்யுங்கள்’
17 குடும்ப விவகாரங்களின் பேரில் ஆலோசனை கொடுப்பதற்கு சற்று முன்பு, அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினான்: “வார்த்தையிலும் அல்லது செயலிலும் நீங்கள் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாக பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.” (கொலோசெயர் 3:17–21) ஒரு கிறிஸ்தவன் தன்னை எந்த நிலையில் காண்பவனாயிருந்தாலும், அவன் யெகோவாவுக்கு நன்றியுள்ளவனாயிருந்து, ‘எல்லாவற்றையும் கர்த்தருடைய நாமத்தில் செய்ய’ தன்னுடைய நிலையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
18 விவாகமின்றி இருப்பதைத் தெரிந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவன் தனக்கிருக்கும் சுயாதீனத்தைத் தன்னைப் பிரியப்படுத்துவதற்காக பயன்படுத்தாமல், “யெகோவாவுக்கென்று முழு ஆத்துமாவோடு” உழைக்க, கூடுமானால் ஏதாவதொருவகை முழுநேர சேவையில் பயன்படுத்தலாம். (கொலோசெயர் 3:23; 1 கொரிந்தியர் 7:32) அதுபோல, பிள்ளைகளில்லாமல் இருக்க தீர்மானிக்கும் ஒரு விவாகமான தம்பதி தன்னலத்துடன் ‘உலகத்தை முழுவதுமாய் அனுபவியாமல்’ தங்களுடைய வாழ்க்கையில் ராஜ்ய சேவைக்குப் பெரியதொரு இடத்தைக் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.—1 கொரிந்தியர் 7:29–31.
19 பிள்ளைகளையுடைய கிறிஸ்தவர்களைக் குறித்ததில், அவர்கள் பெற்றோரின் பாகத்தை உத்தரவாதமுள்ள வழியில் ஏற்று நடத்த வேண்டும். யெகோவாவுக்குத் தாங்கள் செய்யும் சேவைக்குத் தங்களுடைய பிள்ளைகள் தடையாக இருக்கிறார்கள் என்று நோக்குவதற்கு மாறாக, அவர்களைக் கொண்டிருப்பது தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு விசேஷ நியமிப்பு என்று கருதவேண்டும். இது எதை உட்படுத்தும்? ஒப்புக்கொடுத்த ஒரு கிறிஸ்தவன் சத்தியத்தில் அக்கறை காண்பிக்கும் ஒருவரை சந்திக்க நேர்ந்தால், அவன் அந்த நபருடன் ஒரு ஒழுங்கான பைபிள் படிப்பை ஆரம்பிக்கிறான். படிப்பை ஆரம்பித்திருக்க, சாட்சி அதிக ஊக்கங்கொண்டு, அந்த நபர் ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுவதற்காக வாரந்தோறும் அவனைச் சந்திக்கச் செல்கிறார். கிறிஸ்தவ பிள்ளைகளுடைய விஷயத்தில் அதைவிட குறைவான முயற்சி தேவைப்படுகிறதென்பதில்லை. ஒழுங்கான, நல்ல திட்டமிடப்பட்ட ஒரு பைபிள் படிப்பை எவ்வளவு சீக்கிரமாக ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக ஆரம்பித்து, அதைத் தவறாமல் நடத்திவருவது, சிறுவர் ஆவிக்குரிய பிரகாரமாய் வளருவதற்கும், தன்னுடைய சிருஷ்டிகரை நேசிக்கக் கற்றுக்கொள்வதற்கும் அவசியமாயிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:14, 15) கூடுதலாக, கிறிஸ்தவ நடத்தை சம்பந்தமாக பெற்றோர் ராஜ்ய மன்றத்தில் நடந்துகொள்ளும்விதமாகவே வீட்டிலும் நல்ல முன்மாதிரி வைப்பதற்குக் கவனமாயிருக்கவேண்டும். கூடுமானவரை, தங்களுடைய பிள்ளைகளை வெளியூழியத்தில் பயிற்றுவிக்கும் உத்தரவாதத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இப்படியாக, மற்றவர்களுக்குப் போதிப்பதோடுகூட, பெற்றோர், யெகோவாவின் உதவியுடன் தங்களுடைய சொந்த பிள்ளைகளை “சீஷராக்க” முற்படுவார்கள்.—மத்தேயு 28:19.
“மிகுந்த உபத்திரவத்தின்” போது பிள்ளைகள்
20 “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும் இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம்” நமக்கு முன்பாக இருக்கிறது. (மத்தேயு 24:21) அது பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் ஒரே மாதிரியான கடினமான சமயமாக இருக்கும். தற்போதைய ஒழுங்குமுறையின் முடிவு குறித்த தம்முடைய தீர்க்கதரிசனத்தில் கிறிஸ்தவ சத்தியம் குடும்பங்களைப் பிரித்திடும் என்று இயேசு முன்னறிவித்தார். அவர் கூறினார்: “அன்றியும் சகோதரன் சகோதரியையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலை செய்வார்கள்.” (மாற்கு 13:12) தெளிவாகவே, முடிவு காலத்தில் பிள்ளைகளை வளர்ப்பது எல்லா சமயத்திலும் முழு மகிழ்ச்சிக்குரிய காரியமாக இருக்காது. மேற் குறிப்பிடப்பட்ட இயேசுவின் வார்த்தைகள் காண்பிப்பதுபோல், அது மனமுறிவையும், மனச்சோர்வையும், ஆபத்தையுங்கூட ஏற்படுத்தும்.
21 ஆனால் நமக்கு முன்பாக இருக்கும் பிரச்னையான காரியங்களின் உண்மை நிலையை நாம் அறிந்தவர்களாக இருக்கிறபோதிலும், சிறு பிள்ளைகளையுடையவர்கள் எதிர்காலத்தைக் குறித்து அளவுக்கு மிஞ்சி கவலைப்படுகிறவர்களாக இருக்கக்கூடாது. தாங்கள் உண்மையுள்ளவர்களாக இருந்து, தங்களுடைய பிள்ளைகளை “யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மனக் கட்டுப்பாட்டிலும்” வளர்ப்பதற்காகத் தங்களாலானதையெல்லாம் செய்வார்களானால், தங்களுடைய கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகள் தேவனுடைய தயவைப் பெறுவார்கள் என்பதில் நம்பிக்கையாயிருக்கலாம். (எபேசியர் 6:4; 1 கொரிந்தியர் 7:14-ஐ ஒப்பிடவும்.) “திரள் கூட்டத்”தின் பாகமாக தாங்களும் தங்களுடைய இளம் பிள்ளைகளும் “மிகுந்த உபத்திவத்தைத்” தப்பிப்பிழைப்பார்கள் என்று அவர்கள் நம்பிக்கை கொள்ளலாம். அப்படிப்பட்ட பிள்ளைகள் யெகோவாவுக்கு உண்மையுள்ள ஊழியர்களாக இருக்கும்படியாக வளர்வார்களானால், தாங்கள் உத்தரவாதமுள்ள பெற்றோரைக் கொண்டிருந்ததற்காக அவருக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 14; நீதிமொழிகள் 4:1, 3, 10. (w88 3⁄1)
விமர்சனக் கேள்விகள்
◻ ஒரு குழந்தையின் பிறப்பு என்ன நீண்ட கால திட்டத்தை உட்படுத்துகிறது?
◻ சில மூப்பர்களும் உதவி ஊழியர்களும் தங்களுடைய சிலாக்கியங்களை ஏன் இழந்துவிட்டனர்?
◻ தன்னுடைய மனைவி கர்ப்பமாவது சம்பந்தமாக ஒரு கிறிஸ்தவ கணவன் எந்த அம்சங்களைக் கவனிக்க வேண்டும்?
◻ விவாகமான ஒரு கிறிஸ்தவ தம்பதி பிள்ளைகளில்லாமலும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை எது நிரூபிக்கிறது?
◻ ஒரு குழந்தையின் பிறப்பை பெற்றோர் எப்படி நோக்க வேண்டும்? அவர்கள் ஏன் எதிர்காலத்தைக் குறித்து அனாவசியமாகக் கவலைப்படுகிறவர்களாக இருக்க வேண்டியதில்லை?
[கேள்விகள்]
1. அநேக பெண்களுக்கு இருக்கும் இயல்பான ஆசை என்ன? இது வாழ்க்கையின் ஆரம்பக்காலத்திலேயே எப்படி வெளிப்படுகிறது?
2. புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையைப் பெற்றோர் எப்படி கருதவேண்டும்? அவர்கள் என்ன காரியத்தை ஏற்று நடத்த ஆயத்தமாக இருக்க வேண்டும்?
3. நீதிமொழிகள் 23:24, 25 ஏன் அநேக பெற்றோருக்குப் பொருத்தப்படலாம்?
4, 5. (எ) பிள்ளைகளையுடைய மூப்பர்களிடமிருந்தும் உதவி ஊழியர்களிடமிருந்தும் வேதப்பூர்வமாக என்ன தகுதி எதிர்பார்க்கப்படுகிறது? (பி) எவ்விதம் சில பிள்ளைகள் தங்களுடைய பெற்றோருக்கு “மிகுந்த துக்கம்” விளைவித்திருக்கின்றனர்?
6. கிறிஸ்தவ கணவன்மார் தங்களைத்தாங்களே என்ன கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
7. சில கிறிஸ்தவ மனைவிமார்களுக்கு என்ன நேரிட்டிருக்கிறது? பெரும்பாலும் இந்த நிலைக்குக் காரணம் என்ன?
8. பிள்ளைகளைக் கவனிக்கும் பாரத்தைப் பல தகப்பன்மார்கள் எவ்விதம் பகிர்ந்துகொள்கின்றனர்? இதனால் அவர்களுடைய மனைவிகளுக்கு என்ன நன்மை?
9. பிள்ளைகள் எல்லாசமயத்திலும் முட்டுக்கட்டையாக இருப்பதில்லை என்று எது நிரூபிக்கிறது?
10. விவாகமான சில தம்பதிகள் என்ன தீர்மானம் செய்திருக்கின்றனர்? அவர்கள் எவ்விதம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர்?
11. (எ) பிள்ளைகளில்லாத தம்பதிகள் யெகோவாவை எங்கே சேவிக்கின்றனர்? அதற்காக அவர்கள் ஏன் விசனப்படுவதில்லை? (பி) “ராஜ்யத்தினிமித்தம்” பிள்ளைகளில்லாமல் இருக்கும் எல்லா தம்பதிகளுக்கும் எந்த வசனம் பொருத்தப்படலாம்?
12. (எ) பிள்ளைப்பேறு ஏன் தனித்தன்மைவாய்ந்த ஒரு சிலாக்கியம்? (பி) எந்தக் காலப்பகுதிகளில் பிள்ளைப்பேறு கடவுள் நியமித்த வேலையின் ஒரு பாகமாக இருந்தது?
13, 14. (எ) பிள்ளைப்பேற்றைக் குறித்து இன்று என்ன சொல்லப்படலாம்? எந்தக் காரியத்தைக் குறை சொல்லுவது தகுதியாயிராது? (பி) இந்த முடிவின் காலத்தில் பிள்ளையைப் பெற்றெடுக்கும் காரியம் ஒரு தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும், என்ன ஆலோசனை கொடுக்கப்பட்டிருக்கிறது?
15, 16. (எ) எதிர்பாராத சமயத்தில் கர்ப்பமானால் என்ன மனநிலை தவிர்க்கப்படவேண்டும்? ஏன்? (பி) எந்த ஒரு பிள்ளைப் பிறப்பும் எவ்விதம் நோக்கப்படவேண்டும்? இது என்ன உத்தரவாதங்களை உட்படுத்துகிறது?
17. கொலோசெயருக்குப் பவுல் அப்போஸ்தலன் என்ன ஆலோசனை கொடுத்தான்? இந்த ஆலோசனையை இன்று எவ்விதம் பின்பற்றலாம்?
18, 19. (எ) விவாகமின்றி இருக்கும் கிறிஸ்தவர்களும் பிள்ளைகளில்லாத தம்பதிகளும் எப்படி ‘எல்லாவற்றையும் கர்த்தருடைய நாமத்தில் செய்யக்’கூடும்? (பி) கிறிஸ்தவ பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை எவ்விதம் நோக்க வேண்டும்? தங்களுக்கு என்ன இலக்குகளை வைத்துக்கொள்ள வேண்டும்?
20. (எ) நமக்கு முன் என்ன இருக்கிறது? இயேசு என்ன கஷ்டங்களைக் குறித்து எச்சரித்தார்? (பி) முடிவு காலத்தில் பிள்ளைகளை வளர்க்கும் காரியத்தில் இயேசுவின் வார்த்தைகள் என்ன சம்பந்தத்தை உடையதாயிருக்கிறது?
21. (எ) எதிர்காலத்தை அதன் உண்மை நிலையில் சிந்திப்பவர்களாயிருந்தாலும் அதைக் குறித்து பெற்றோர் ஏன் அளவுக்கு மிஞ்சி கவலைப்படுகிறவர்களாக இருக்கக்கூடாது? (பி) தங்களுக்கும் தங்களுடைய பிள்ளைகளுக்கும் என்ன நம்பிக்கையைக் கொண்டிருக்கலாம்?
[பக்கம் 25-ன் படம்]
கூட்டங்கள் நடக்கும்போது பிள்ளைகளை அமைதியாக வைத்துக்கொள்ளும் உத்தரவாதத்தைத் தகப்பன்மார் பகிர்ந்துகொள்ளலாம்