நாம் தொடர்ந்து வளர்க்க வேண்டிய குணங்கள்
“நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.”—1 தீமோத்தேயு 6:11.
1. என்னென்ன காரியங்களை மக்கள் இன்று நாடித் தேடுகிறார்கள்?
இன்றுள்ள மக்கள் என்னென்ன காரியங்களை நாடித் தேடுகிறார்கள், எவற்றுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள்? பைபிள் சொல்கிறபடி, அநேகர் பிரயோஜனமற்ற இலக்குகளை அடைய முயற்சி செய்கிறார்கள். பொருள்களை வாங்கிக் குவிப்பதில்தான் சந்தோஷம் என நினைத்து சிலர் ‘வீணான’ காரியங்களை நாடுகிறார்கள். (நீதி. 28:19, பொது மொழிபெயர்ப்பு) இன்னும் சிலர், போட்டி விளையாட்டுகளில் பேரும் புகழும் பெறுவதற்காக முழுமூச்சாய் உழைக்கிறார்கள். (1 தீ. 4:8) இப்படிப்பட்ட காரியங்களை அடைவதற்காக மக்கள் என்னதான் முயற்சி செய்தாலும் அவை ‘காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானவையாக’ இருக்கின்றன.—பிர. [சபை உரையாளர்] 1:14, பொ.மொ.
2. (அ) சில கிறிஸ்தவர்களுக்கு என்ன இலக்கை கடவுள் முன்வைத்திருக்கிறார்? (ஆ) இன்றுள்ள கிறிஸ்தவர்கள் பலருக்கு என்ன வாய்ப்பை யெகோவா அளித்திருக்கிறார்?
2 மாறாக, கிறிஸ்தவர்கள் அடைய வேண்டிய பிரயோஜனமான இலக்கைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் எழுதியதைக் கவனியுங்கள்: “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” (பிலி. 3:14) பவுல் உட்பட கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,44,000 பேரும் பரலோக வாழ்க்கை எனும் பரிசைப் பெறுவார்கள் என்று பைபிள் சொல்கிறது. இவர்கள் இயேசு கிறிஸ்துவோடுகூட ஆயிரம் வருடங்களுக்கு பூமியை அரசாளுவார்கள். இவர்கள் அடைய வேண்டிய என்னே அருமையான இலக்கு இது! அதேசமயம் இன்றுள்ள உண்மை கிறிஸ்தவர்கள் பலருக்கு வேறுவிதமான நம்பிக்கை அல்லது இலக்கு இருக்கிறது. ஆதாமும் ஏவாளும் இழந்த வாய்ப்பை அதாவது, பரதீஸ் பூமியில் நோய்நொடி இல்லாமல் என்றென்றும் வாழ்வதற்கான வாய்ப்பை யெகோவா அவர்களுக்கு அளிக்கப்போகிறார்.—வெளி. 7:4, 9; 21:1-4.
3. கடவுளுடைய அளவற்ற கருணைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்பதை எப்படி காட்டலாம்?
3 மனிதர்கள் பாவிகளாக இருப்பதால் சரியானதை செய்வதற்கு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவர்களால் முடிவில்லா வாழ்வைப் பெற முடியாது. (ஏசா. 64:6) இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுள் செய்திருக்கும் அன்பான ஏற்பாட்டின்மீது விசுவாசம் வைத்தால் மட்டுமே முடிவில்லா வாழ்வைப் பெற முடியும். இவ்வாறு கடவுள் காட்டுகிற அளவற்ற கருணைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்பதை எப்படி காட்டலாம்? “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு” என்ற கட்டளைக்கு கீழ்ப்படிவது அதற்கு ஒரு வழியாகும். (1 தீ. 6:11) இந்த குணங்களைப்பற்றி சிந்திப்பது இவற்றை “அதிகமதிகமாய்” வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதில் திடத் தீர்மானமாயிருக்க நமக்கு உதவும்.—1 தெ. 4:1.
‘நீதியை நாடுங்கள்’
4. ‘நீதியின்படி’ நடப்பது முக்கியம் என்று நாம் எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்? அதற்கு நாம் என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டும்?
4 தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டு கடிதங்களிலும் அப்போஸ்தலன் பவுல் நாம் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டிய குணங்களைப்பற்றி பேசினார்; ஒவ்வொரு முறையும் அவர் ‘நீதியை’ முதலில் குறிப்பிட்டார். (1 தீ. 6:11; 2 தீ. 2:22) பைபிளிலுள்ள மற்ற வசனங்களும் தொடர்ந்து நீதியாக நடக்கும்படி நம்மை ஊக்குவிக்கின்றன. (நீதி. 15:9; 21:21; ஏசா. 51:1) ‘ஒன்றான மெய்த்தேவனையும் அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே’ அதைச் செய்வதற்கான முதல் படியாக இருக்கிறது. (யோவா. 17:3) நீதியாக நடக்க விரும்புகிறவர் அதைச் செயலில் காட்டத் தூண்டப்படுவார். அதாவது, கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக கடந்தகால தவறுகளுக்கு மனந்திரும்பி தன் வாழ்க்கைப் போக்கை மாற்றி கொள்வார்.—அப். 3:20.
5. கடவுளுக்கு முன் நீதியாக இருக்கவும் தொடர்ந்து அப்படியே நடக்கவும் நாம் என்ன செய்ய வேண்டும்?
5 நீதியாக நடக்க முயற்சி செய்கிற லட்சக்கணக்கானோர் தங்களையே யெகோவாவுக்கு அர்ப்பணித்திருக்கிறார்கள். ஞானஸ்நானம் எடுப்பதன்மூலம் அதைக் காட்டியிருக்கிறார்கள். நீங்கள் ஞானஸ்நானம் எடுத்த ஒரு கிறிஸ்தவர் என்றால் நீதியாகத்தான் நடந்து வருவீர்கள். ஆனால், தொடர்ந்து நீதியாக நடக்கிறீர்கள் என்பதை உங்கள் வாழ்க்கைப் போக்கு காட்டுகிறதா என்று யோசித்து பாருங்கள். தொடர்ந்து நீதியாக நடப்பதற்கு, வாழ்க்கையில் முக்கியமான தீர்மானங்களைச் செய்ய வேண்டிய சமயங்களில் ‘எது சரி எது தவறு’ (NW) என்பதை பைபிளை வைத்துப் புரிந்துகொள்வது ஒரு வழியாகும். (எபிரெயர் 5:14-ஐ வாசியுங்கள்.) உதாரணத்திற்கு, நீங்கள் திருமண வயதில் இருந்தால் சாட்சியல்லாத ஒருவரை காதலிக்கக்கூடாது என்ற திடத் தீர்மானத்தைச் செய்திருக்கிறீர்களா? நீங்கள் நீதியாக நடக்க விரும்பினால் அப்படித்தான் செய்வீர்கள்.—1 கொ. 7:39.
6. உண்மையிலேயே நீதியாக நடப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
6 நீதியாக நடக்கிறவர்கள் தங்களைத் தாங்களே நீதிமான்களாக கருதமாட்டார்கள். அல்லது தங்களை ‘மிஞ்சின நீதிமான்களாக’ நினைக்க மாட்டார்கள். (பிர. 7:16) ‘மற்றவர்களைவிட நான் எப்போதும் ஒருபடி மேல்’ என்பதுபோல் காட்டிக்கொள்வதற்காக ‘தர்மம் செய்வதை’ [“நீதியான செயல்கள் செய்வதை,’” NW] குறித்து இயேசு எச்சரித்தார். (மத். 6:1) நீதியாய் நடப்பதற்கு நம்முடைய இருதயத்தைச் சரி செய்துகொள்ள வேண்டும். அதாவது, நம் இருதயத்தில் உதிக்கிற தவறான யோசனைகள், மனப்பான்மைகள், உள்ளெண்ணங்கள், விருப்பங்கள் ஆகியவற்றைச் சரி செய்துகொள்ள வேண்டும். இவற்றைத் தொடர்ந்து சரி செய்துவந்தால் மோசமான பாவங்களைச் செய்யாமலிருப்போம். (நீதிமொழிகள் 4:23-ஐ வாசியுங்கள்; யாக்கோபு 1:14, 15-ஐ ஒப்பிடுங்கள்.) யெகோவாவும் நம்மை ஆசீர்வதித்து மற்ற முக்கியமான கிறிஸ்தவ குணங்களை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவுவார்.
‘தேவபக்தியை நாடுங்கள்’
7. “தேவபக்தி” என்றால் என்ன?
7 பக்தி என்பது நம்மை முழுமையாக அர்ப்பணிப்பதையும் உண்மையாக இருப்பதையும் உட்படுத்துகிறது. “தேவபக்தி” என்ற வார்த்தையின் கிரேக்க பதம் “கடவுளுக்கு பிடிக்காத காரியத்தை செய்துவிடுவோமோ என்ற ஆரோக்கியமான பயத்தை” அர்த்தப்படுத்துவதாக ஒரு பைபிள் அகராதி குறிப்பிடுகிறது. இதுபோன்ற தேவபக்தியை வெளிக்காட்ட இஸ்ரவேலர் அடிக்கடி தவறினார்கள். கடவுள் அவர்களை எகிப்திலிருந்து விடுதலை செய்த பிறகும்கூட அவர்கள் கீழ்ப்படியாமல் போனதிலிருந்து இது தெரிகிறது.
8. (அ) ஆதாம் பாவம் செய்ததால் என்ன கேள்வி எழுந்தது? (ஆ) ‘பரிசுத்த ரகசியமாக’ இருந்த இந்த கேள்விக்கு எப்படி பதில் கிடைத்தது?
8 பரிபூரணமாக இருந்த ஆதாம் பாவம் செய்து ஆயிரக்கணக்கான வருடங்கள் உருண்டோடிவிட்டன. என்றாலும், “எந்த மனிதனாவது பரிபூரண தேவபக்தியைக் காட்டமுடியுமா?” என்ற கேள்விக்குப் பதில் கிடைக்காமலேயே இருந்தது. பாவமுள்ள எந்த மனிதனாலும் அதுவரை பரிபூரண தேவபக்தியைக் காட்டமுடியவில்லை. ஆனால், ‘பரிசுத்த ரகசியமாக’ இருந்த இந்தக் கேள்விக்கு யெகோவா சரியான நேரத்தில் பதில் அளித்தார். பரலோகத்திலிருந்த தன்னுடைய ஒரே மகனின் உயிரை மரியாளின் கருப்பைக்குள் வைத்தார். இவர் ஒரு பரிபூரண மனிதனாக பிறந்தார். கடவுளுக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதி மூச்சுவரை அவருக்கு உண்மையாக இருப்பது எப்படி என்பதை தம் வாழ்நாள் முழுவதும் காட்டினார். ஏன், கேவலமான மரணத்தை அனுபவிக்கவேண்டிய சமயத்திலும் காட்டினார். அன்பான பரலோக தகப்பன்மீது அவருக்கிருந்த பயபக்தியை அவருடைய ஜெபங்கள் காட்டின. (மத். 11:25; யோவா. 12:27, 28) எனவே, இயேசுவின் முன்மாதிரியான வாழ்க்கையை விவரிக்கையில் ‘தேவபக்தியைக்’ குறித்து எழுதும்படி பவுலை யெகோவா தம் சக்தியின் மூலமாக தூண்டினார்.—1 தீமோத்தேயு 3:16-ஐ வாசியுங்கள்.a
9. நாம் தேவபக்தியை எப்படி தொடர்ந்து காட்ட முடியும்?
9 பாவிகளாகிய நம்மால் தேவபக்தியை பரிபூரணமாக காட்டமுடியாதுதான். ஆனாலும், அதைக் காட்டுவதற்கு நாம் தொடர்ந்து முயற்சி செய்ய முடியும். அதற்கு கிறிஸ்துவின் அடிச்சுவடை நம்மால் முடிந்தளவுக்கு அச்சுப்பிசகாமல் பின்பற்ற வேண்டும். (1 பே. 2:21) அப்படி செய்தால் நாம் ‘தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிற’ மாய்மாலக்காரரைப் போல் இருக்கமாட்டோம். (2 தீ. 3:5) உண்மையான தேவபக்தியைக் காட்டுபவர்கள் வெளித் தோற்றத்திற்கு கவனம் செலுத்த வேண்டியதில்லை என இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லவே இல்லை. உதாரணத்திற்கு, திருமண உடையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலும்சரி கடைக்குச் செல்வதற்கு உடுத்தும் விஷயத்திலும்சரி நம்முடைய தோற்றம் எப்போதுமே ‘தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்வதற்கு’ பொருத்தமாக இருக்கவேண்டும். (1 தீ. 2:9, 10) ஆம், தேவபக்தியை தொடர்ந்து காட்டவேண்டுமென்றால் ஒவ்வொரு நாளும் நாம் கடவுளுடைய நீதியான நெறிகளுக்கு ஏற்றபடி வாழவேண்டும்.
‘விசுவாசத்தை நாடுங்கள்’
10. விசுவாசத்தில் திடமாயிருக்க நாம் என்ன செய்யவேண்டும்
10 ரோமர் 10:17-ஐ வாசியுங்கள்.b திடமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளவும் அதைக் காத்துக்கொள்ளவும் கடவுளுடைய வார்த்தையில் பதிந்துள்ள முத்தான சத்தியங்களைக் குறித்து நாம் ஆழ்ந்து யோசிக்கவேண்டும். “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் அநேக அருமையான பிரசுரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் மற்றும் பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற இரண்டு மிகச் சிறந்த புத்தகங்களை எடுத்துக்கொள்வோம். இவை, கிறிஸ்துவைப்பற்றி நன்றாக தெரிந்துகொண்டு அவரைப் பின்பற்ற நமக்கு உதவும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. (மத். 24:45-47, NW) அதோடு கூட்டங்கள், அசெம்பிளிகள், மாநாடுகள் ஆகியவற்றையும் அடிமை வகுப்பார் ஏற்பாடு செய்கிறார்கள். இவற்றில் பெரும்பாலும் “கிறிஸ்துவைப் பற்றிய செய்தி” சிறப்பித்து காட்டப்படுகிறது. கடவுள் செய்திருக்கும் இதுபோன்ற ஏற்பாடுகளுக்கு ‘வழக்கத்திற்கும் அதிகமான கவனம் செலுத்தி’ அவற்றிலிருந்து அதிக நன்மை பெற நீங்கள் என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்?—எபி. 2:1, NW.
11. தொடர்ந்து விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள ஜெபமும் கீழ்ப்படிதலும் எப்படி உதவும்?
11 திடமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவும் மற்றொரு அம்சம் ஜெபம். ஒரு சமயம் சீஷர்கள் இயேசுவை நோக்கி, ‘இன்னும் மிகுந்த விசுவாசத்தை எங்களுக்கு வழங்கும்’ என்று கெஞ்சி கேட்டார்கள். நாமும் அதேப்போல் கடவுளிடம் மனத்தாழ்மையோடு கெஞ்சி கேட்கலாம். (லூக். 17:5, ERV) இன்னும் அதிக விசுவாசத்தைப் பெறுவதற்கு நாம் பரிசுத்த ஆவிக்காக அதாவது கடவுளுடைய சக்திக்காக ஜெபிக்கவேண்டும். ஏனெனில், ‘தேவ சக்தியால் பிறப்பிக்கப்படும் குணங்களில்’ ஒன்று விசுவாசம். (கலா. 5:22, NW) கடவுளுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிவதாலும் நம்முடைய விசுவாசம் பலப்படும். உதாரணத்திற்கு, வெளி ஊழியத்தில் அதிகமாக ஈடுபடும்போது நாம் அளவில்லா ஆனந்தத்தை அடையலாம். இவ்வாறு, ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவதால்’ கிடைக்கும் ஆசீர்வாதங்களை நாம் சிந்தித்துப் பார்த்தால் நம்முடைய விசுவாசம் பலப்படும்.—மத். 6:33.
‘அன்பை நாடுங்கள்’
12, 13. (அ) இயேசு கொடுத்த புதிய கட்டளை என்ன? (ஆ) என்ன முக்கியமான வழிகளில் தொடர்ந்து நாம் கிறிஸ்துவைப் போல் அன்பு காட்டமுடியும்?
12 ஒன்று தீமோத்தேயு 5:1, 2-ஐ வாசியுங்கள். மற்றவர்கள்மீது அன்பு காட்டுவதற்கு உதவும் நடைமுறையான ஆலோசனைகளை பவுல் அளித்தார். நாம் தேவபக்தி உள்ளவர்களாய் இருந்தால், இயேசு கொடுத்த புதிய கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். அவர் நம்மீது அன்பாயிருந்தது போல் நாமும் ‘ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும்’ என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். (யோ. 13:34) அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு சொன்னார்: “ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலை கொள்ளுகிறதெப்படி?” (1 யோ. 3:17) நடைமுறையான விதத்தில் அன்பைக் காட்டியது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
13 மற்றவர்களை நாம் தாராளமாக மன்னிப்பது தொடர்ந்து அன்பை வளர்த்துக்கொள்வதற்கு இன்னொரு வழியாக இருக்கிறது. நம் சகோதரர்களுடன் ஏதாவது மனக்கசப்பு ஏற்பட்டிருந்தால் அதை மனதில் வைத்து புகைந்துகொண்டு இருக்கமாட்டோம். (1 யோவான் 4:20-ஐ வாசியுங்கள்.) மாறாக, “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என்ற அறிவுரைக்குக் கீழ்ப்படிவோம். (கொலோ. 3:13) சபையில் யாரிடமாவது உங்களுக்கு மனஸ்தாபம் இருக்கிறதா? இந்த அறிவுரைக்குக் கீழ்ப்படிந்து அவரை உங்களால் மன்னிக்க முடியுமா?
‘பொறுமையை நாடுங்கள்’
14. பிலதெல்பியா சபையாரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
14 சிறிய இலக்குகளை வைத்தால் அதை நாம் எப்படியாவது முயற்சி செய்து எட்டிவிடலாம். ஆனால், நாம் வைக்கும் ஓர் இலக்கு எட்டுவதற்கு கடினமாக இருந்தாலோ, அதற்காக நாம் பலகாலம் காத்திருக்க வேண்டியிருந்தாலோ நமக்கு பொறுமை அவசியம். சொல்லப்போனால், முடிவில்லா வாழ்வு என்ற இலக்கை அடைவதற்கு நமக்கு பொறுமை நிச்சயம் தேவை. கர்த்தராகிய இயேசு பிலதெல்பியா சபையாரிடம் இவ்வாறு சொன்னார்: நான் ‘பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால் சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.’ (வெளி. 3:10) உண்மையில், பொறுமையாக இருக்கவேண்டியதன் அவசியத்தை இயேசு கற்பித்தார். துன்பங்களிலும் சோதனைகளிலும் நாம் சிக்கித் தவிக்கையில் நிலைகுலைந்து விடாமலிருக்க இந்த குணம் நமக்கு உதவும். பிலதெல்பியா சபையிலிருந்த முதல் நூற்றாண்டு சகோதரர்கள் பொறுமையைக் காட்டுவதில் மிகச் சிறந்த முன்மாதிரிகளாக இருந்திருக்க வேண்டும். எனவே, எதிர்காலத்தில் வரவிருந்த சோதனை காலத்தைச் சமாளிக்க உதவுவதாக இயேசு அவர்களுக்கு உறுதியளித்தார்.—லூக். 16:10.
15. பொறுமையைக் குறித்து இயேசு என்ன கற்பித்தார்?
15 சத்தியத்தில் இல்லாத உறவினர்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் தம்முடைய சீஷர்கள் எதிர்ப்பைச் சந்திப்பார்கள் என்பதை இயேசு நன்கு அறிந்திருந்தார். அதனால்தான் குறைந்தது இரண்டு முறையாவது அவர்களை இவ்வாறு ஊக்குவித்தார்: “முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.” (மத். 10:22; 24:13) எதிர்ப்பைச் சந்திக்கையில் பொறுமையாய் இருக்க தேவையான பலத்தை தம்முடைய சீஷர்கள் எங்கிருந்து பெறமுடியும் என்றும் அவர் சொன்னார். ஓர் உவமையில் அவர் இதை தெரியப்படுத்தினார். அதில், கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் ‘சந்தோஷத்துடனே [கடவுளுடைய] வசனத்தை ஏற்றுக்கொண்டாலும்’ விசுவாசத்தைச் சோதிக்கும் பிரச்சினைகளை எதிர்ப்படுகையில் பின்வாங்கிப்போவதாக அவர் சொன்னார். என்றாலும், தம்மை உண்மையாய் பின்பற்றுகிறவர்களை நல்ல நிலத்தோடு ஒப்பிட்டார். ஏனென்றால், அவர்கள் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு, அதை ‘இருதயத்திலே காத்து பொறுமையுடனே பலன்கொடுக்கிறார்கள்.’—லூக். 8:13, 15.
16. பொறுமையாக இருக்க என்ன அன்பான ஏற்பாடு லட்சக்கணக்கானோருக்கு உதவியிருக்கிறது?
16 பொறுமையாக இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டீர்களா? ஆம், கடவுளுடைய வார்த்தையை ‘காத்துக்கொள்ள’ வேண்டும். அதை நம் இருதயத்திலும் மனதிலும் உயிரோட்டமுள்ளதாக வைத்துக்கொள்ள வேண்டும். இன்று அநேக மொழிகளில் பைபிள் கிடைப்பது இதற்கு உதவியாக இருக்கிறது. தினந்தோறும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஒரு பகுதியை வாசித்து அதை ஆழ்ந்து சிந்திப்பது, ‘பொறுமையுடன்’ பலன் கொடுக்கிறவர்களாக இருப்பதற்குத் தேவையான பலத்தைப் பெற நமக்கு உதவும்.—சங். 1:1, 2.
சமாதானத்தையும் ‘சாந்தகுணத்தையும் நாடுங்கள்’
17. (அ) ‘சாந்தகுணம்’ ஏன் மிக முக்கியம்? (ஆ) சாந்தகுணத்தை இயேசு எவ்வாறு காண்பித்தார்?
17 செய்யாத ஒரு குற்றத்தை செய்ததாக சொன்னால் யாருக்குத்தான் எரிச்சல் வராது. உடனே அதை மறுத்து கோபமாக பதில் அளிப்பதுதான் மனித இயல்பு. ஆனால், அதுபோன்ற சமயங்களில் ‘சாந்தமாக’ பதில் அளிப்பது சிறந்ததாக இருக்குமல்லவா? (நீதிமொழிகள் 15:1-ஐ வாசியுங்கள்.) நம்மீது யாராவது அநியாயமாக பழி சுமத்தும்போது சாந்தமாக இருப்பதற்கு அதிக மனோபலம் தேவை. இதற்கு ஓர் உன்னத உதாரணம் இயேசு கிறிஸ்து! “அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.” (1 பே. 2:23) இயேசுவைப்போல் நம்மால் இருக்கமுடியாது என்பது உண்மைதான்; ஆனால், சாந்தமாக இருக்க நாம் முடிந்தளவுக்கு முயற்சி செய்யலாம், அல்லவா?
18. (அ) எதைத் தவிர்க்க சாந்தகுணம் நமக்கு உதவும்? (ஆ) நாம் வளர்த்துக்கொள்ளவேண்டிய மற்றொரு குணம் எது?
18 இயேசுவைப்போல நாமும் நம்முடைய நம்பிக்கைகளைப்பற்றி விளக்குவதற்கு ‘எப்பொழுதும் ஆயத்தமாய்’ இருக்கவேண்டும். ஆனால், அதைச் ‘சாந்தத்தோடும் வணக்கத்தோடும்’ செய்ய வேண்டும். (1 பே. 3:15) ஊழியத்தில் நாம் சந்திக்கும் ஆட்களிடமும் நம்முடைய சகோதர சகோதரிகளிடமும் நாம் சாந்தமாக இருந்தால், சிறுசிறு கருத்து வேறுபாடுகள் கனல் தெறிக்கும் வாக்குவாதங்களாக வெடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். (2 தீ. 2:24-26) சாந்தம் சமாதானத்திற்கு வழிதிறக்கும். அதனால்தான், மற்ற குணங்களுடன் ‘சமாதானத்தையும்’ தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும்படி பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டாம் கடிதத்தில் சொல்லியிருக்க வேண்டும். (2 தீ. 2:22; ஒப்பிடுங்கள் 1 தீ. 6:11.) ஆம், ‘சமாதானத்தை’ நாடும்படியும் பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. —சங். 34:14; எபி. 12:14.
19. ஏழு கிறிஸ்தவ குணங்களைச் சிந்தித்த பிறகு எதை வளர்த்துகொள்ள நீங்கள் தீர்மானமாய் இருக்கிறீர்கள், ஏன்?
19 நீதி, தேவபக்தி, விசுவாசம், அன்பு, பொறுமை, சாந்தகுணம், சமாதானம் என நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஏழு நல்ல குணங்களைப்பற்றி பார்த்தோம். ஒவ்வொரு சபையிலும் சகோதர சகோதரிகள் இந்தப் பொன்னான குணங்களை வளர்த்துக்கொள்ள அதிகதிகமாக முயற்சி செய்தால் அது எவ்வளவு பெரிய ஆசீர்வாதமாக இருக்கும்! இது யெகோவாவுக்கு கனத்தையும் மகிமையையும் சேர்ப்பதோடு அவர் நம்மை வடிவமைப்பதை எளிதாக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a 1 தீமோத்தேயு 3:16 (NW): “தேவபக்தியின் பரிசுத்த ரகசியம் நிச்சயமாகவே மகத்தானது: ‘அவர் பூமிக்குரிய உடலில் வந்தார், பரலோகத்திற்குரிய உடலில் நீதியுள்ளவரென அறிவிக்கப்பட்டார், தேவதூதர்களுக்குக் காணப்பட்டார், புறதேசத்தாரிடையே பிரசங்கிக்கப்பட்டார், உலகத்தாரால் நம்பிக்கை வைக்கப்பட்டார், மகிமையான விதத்தில் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.’”
b ரோமர் 10:17 (NW): “ஆகவே, அறிவிக்கப்படுவதைக் கேட்டால்தான் விசுவாசம் உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க முடியும்.”
ஆழ்ந்து சிந்திப்பதற்கு
• நீதியையும் தேவபக்தியையும் வளர்த்துக்கொள்வதில் என்ன உட்பட்டிருக்கிறது?
• விசுவாசத்தையும் பொறுமையையும் வளர்த்துக்கொள்ள எது உதவும்?
• அன்பிருந்தால் நாம் மற்றவர்களிடம் எப்படி பழகுவோம்?
• சாந்தகுணத்தையும் சமாதானத்தையும் நாம் ஏன் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளவேண்டும்?
[பக்கம் 12-ன் படம்]
மற்றவர்களை கவருவதற்காக நீதிமானாக வேஷம் போடுவதைக் குறித்து இயேசு எச்சரித்தார்
[பக்கம் 13-ன் படம்]
கடவுளுடைய வார்த்தையில் பதிந்துள்ள சத்தியங்களை ஆழ்ந்து சிந்திப்பதன்மூலம் நாம் தொடர்ந்து விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளலாம்
[பக்கம் 15-ன் படம்]
நாம் அன்பையும் சாந்தகுணத்தையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளலாம்