தீமோத்தேயு—‘விசுவாசத்தில் உத்தம குமாரன்’
தீமோத்தேயுவை அப்போஸ்தலனாகிய பவுல் தன் பயண தோழனாக தெரிந்தெடுத்தபோது தீமோத்தேயு சற்று இளைஞனாகவே இருந்தார். இது, 15 ஆண்டுகளாக தொடர்ந்த ஒரு கூட்டுறவுக்கு அடிகோலியது. ‘எனக்குப் பிரியமும் கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரன்,’ ‘விசுவாசத்தில் உத்தம குமாரன்’ என பவுல் சொல்லுமளவுக்கு இந்த இருவரிடையே உறவு செழித்தோங்கியது.—1 கொரிந்தியர் 4:17; 1 தீமோத்தேயு 1:2.
தீமோத்தேயுவிடம் பவுல் அவ்வளவு பிரியமாக இருக்குமளவுக்கு அவருடைய குணம் எப்படிப்பட்டதாக இருந்தது? தீமோத்தேயு எவ்வாறு ஒரு மதிப்புமிக்க தோழனாக ஆனார்? தீமோத்தேயுவின் செயல்களைப் பற்றிய ஏவப்பட்ட இந்தப் பதிவிலிருந்து, பயன்தரும் என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்?
பவுலால் தெரிந்தெடுக்கப்படுதல்
பொ.ச. 50-ல், பவுல் தன்னுடைய இரண்டாவது மிஷனரி பயணத்தில் (நவீனகால துருக்கியில் இருக்கும்) லிஸ்திராவுக்கு விஜயம் செய்தபோது இளம் சீஷனாகிய தீமோத்தேயுவை கண்டார். பருவ வயது கடந்த சமயத்தில் அல்லது 20-களின் ஆரம்பத்தில் இருந்த தீமோத்தேயு, லிஸ்திரா மற்றும் இக்கோனியத்திலுள்ள கிறிஸ்தவர்களின் பாராட்டுக்குரிய நபராக திகழ்ந்தார். (அப்போஸ்தலர் 16:1-3) அவர் தன்னுடைய பெயருக்கேற்ப வாழ்ந்தார். “கடவுளை கனப்படுத்துகிறவர்” என்பது அவருடைய பெயரின் அர்த்தம். குழந்தைப் பருவம் முதற்கொண்டே, தீமோத்தேயுவுக்கு அவருடைய பாட்டி லோவிசாளும் தாய் ஐனிகேயாளும் பரிசுத்த வேதவசனங்களை கற்பித்திருந்தனர். (2 தீமோத்தேயு 1:5; 3:14, 15) சில வருடங்களுக்கு முன்பு பவுல் தன்னுடைய முதல் விஜயத்தில் அவர்களுடைய பட்டணத்திற்கு சென்றபோது அவர்கள் கிறிஸ்தவத்தை தழுவியிருக்கலாம். இப்பொழுது பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் தீமோத்தேயுவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஒரு குறிப்பிட்ட முன்னறிவிப்பு சுட்டிக்காட்டியது. (1 தீமோத்தேயு 1:18) அந்த வழிநடத்துதலுக்கு இசைவாக, பவுலும் சபையிலிருந்த மூப்பர்களும் அந்தச் இளைஞன்மீது தங்களுடைய கைகளை வைத்தனர். இதன்மூலம் அவரை ஒரு குறிப்பிட்ட சேவைக்காக பிரித்து வைத்தனர். இவ்வாறு, பவுல் அவரை தன்னுடைய மிஷனரி தோழனாக தெரிந்தெடுத்தார்.—1 தீமோத்தேயு 4:14; 2 தீமோத்தேயு 1:6.
அவருடைய தகப்பனார் ஓர் அவிசுவாசி, கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர். எனவே, தீமோத்தேயு விருத்தசேதனம் செய்யப்படவில்லை. இது, கிறிஸ்தவர்கள் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றும் அல்ல. இருந்தபோதிலும், அவர்கள் சந்திக்கும் யூதர்களுக்கு ஓர் இடறலாக இருப்பதை தவிர்ப்பதற்காக, தீமோத்தேயு இந்த வேதனைமிக்க சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டார்.—அப்போஸ்தலர் 16:3.
முன்பு தீமோத்தேயு ஒரு யூதராக கருதப்பட்டாரா? ரபிக்களுடைய ஆதாரச் சான்றுகளின்படி, “கலப்புத் திருமணத்தில் வாரிசின் உறவுமுறை தாயினால் தீர்மானிக்கப்படுகிறது, தகப்பனால் அல்ல,” அதாவது, “ஒரு யூத பெண்ணுக்கு பிறக்கும் பிள்ளைகள் யூதர்களே” என கல்விமான்கள் சிலர் வாக்குவாதம் செய்கின்றனர். ஆனால், “இப்படிப்பட்ட ரபீனிய சட்டம் பொ.ச. முதல் நூற்றாண்டில் ஏற்கெனவே இருந்ததா” அல்லது ஆசியா மைனரிலுள்ள யூதர்களால் பின்பற்றப்பட்டதா என்பதை எழுத்தாளராகிய சாயே கோஹன் சந்தேகிக்கிறார். சரித்திரப்பூர்வ அத்தாட்சியை ஆராய்ந்தப்பின், இஸ்ரவேல் பெண்களை புறஜாதியார் திருமணம் செய்துகொண்டபோது, “இந்தக் குடும்பம் இஸ்ரவேலில் வாழ்ந்தால் மாத்திரமே இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் இஸ்ரவேலராக கருதப்பட்டனர்” என்ற முடிவுக்கு இவர் வருகிறார். “தாயின் நாட்டில் வாழ்ந்தபோது வம்சாவளி தாய்க்குரியதாக கருதப்பட்டது. அந்த இஸ்ரவேல பெண் புறஜாதியைச் சேர்ந்த தன்னுடைய கணவனுடன் சேர்ந்துகொள்வதற்காக வேறு தேசத்திற்கு சென்றால், அவளுடைய பிள்ளைகள் புறஜாதியாராக கருதப்பட்டார்கள்.” எப்படியிருந்தபோதிலும், தீமோத்தேயுவை அவர்களுடைய கலப்பு பெற்றோர் வளர்த்தது பிரசங்க வேலையில் ஓர் ஆஸ்தியாக இருந்திருக்க வேண்டும். யூதருக்கோ அல்லது புறஜாதியாருக்கோ விஷயங்களை சொல்வது அவருக்கு ஒரு பிரச்சினையாக இருந்திருக்காது, ஒருவேளை அவர்களுக்கிடையே இருந்த வேறுபாடுகளை மேற்கொள்வதற்கு ஒரு பாலமாக இவர் உதவியிருக்கலாம்.
லிஸ்திராவுக்கு பவுல் விஜயம் செய்தது தீமோத்தேயுவின் வாழ்க்கையில் ஒரு திருப்புகட்டமாக விளங்கியது. பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை பின்பற்றுவதற்கு அந்த இளைஞர் மனவிருப்பமுள்ளவராக இருந்தார். கிறிஸ்தவ மூப்பர்களுக்கு தாழ்மையோடு ஒத்துழைப்பு தருபவராகவும் இருந்தார். இது, பெரும் ஆசீர்வாதங்களுக்கும் ஊழிய சிலாக்கியங்களுக்கும் வழிவகுத்தது. அந்தச் சமயத்தில் இதை தீமோத்தேயு உணர்ந்தாரோ அல்லது உணரவில்லையோ, ரோம் வரையாக, அதாவது இந்தப் பேரரசின் தலைநகர் வரையாக அவர் அழைத்துச்செல்லப்பட்டு பவுலின் வழிநடத்துதலில் முக்கியமான தேவராஜ்ய வேலைகளில் பயன்படுத்தப்படுவதில் இது விளைவடைந்தது.
தீமோத்தேயு ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவித்தார்
தீமோத்தேயுவின் நடவடிக்கைகளைப் பற்றிய பதிவுகள் நம்மிடம் ஓரளவே இருக்கின்றன, ஆனால் ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்க அவர் அநேக இடங்களுக்குப் பயணம் செய்தார். பொ.ச. 50-ல் பவுல் மற்றும் சீலாவுடன் தீமோத்தேயுவின் முதல் பயணம் அவரை ஆசியா மைனருக்கும் ஐரோப்பாவிற்கும் வழிநடத்தியது அங்கே அவர் பிலிப்பியிலும் தெசலோனிக்கேயாவிலும் பெரோயாவிலும் பிரசங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். எதிர்ப்பு அலை பவுலை அத்தேனே பட்டணத்தில் ஒதுக்கியது. அதனால், பெரோயாவில் ஸ்தாபிக்கப்பட்ட சீஷர்களடங்கிய ஒரு தொகுதியை கவனித்துக்கொள்வதற்கு தீமோத்தேயுவும் சீலாவும் அங்கேயே இருந்துவிட்டனர். (அப்போஸ்தலர் 16:6–17:14) பிற்பாடு, தெசலோனிக்கேயாவிலிருந்த ஒரு புதிய சபையை பலப்படுத்துவதற்கு தீமோத்தேயுவை பவுல் அனுப்பினார். கொரிந்துவில் பவுலை சந்தித்தபோது அதன் முன்னேற்றத்தைப் பற்றிய நற்செய்தியை அவருக்கு கொண்டுவந்தார்.—அப்போஸ்தலர் 18:5; 1 தெசலோனிக்கேயர் 3:1-7.
கொரிந்தியர்களுடன் எவ்வளவு காலம் தீமோத்தேயு தங்கியிருந்தார் என்பதை வேதவசனங்கள் சொல்லவில்லை. (2 கொரிந்தியர் 1:19) ஆனால் சுமார் பொ.ச. 55-ல், அவர்களுடைய நிலைமையைப் பற்றிய கவலைக்குரிய செய்தி பவுலுக்கு கிடைத்ததால், தீமோத்தேயுவை மீண்டும் அங்கு அனுப்ப எண்ணினார். (1 கொரிந்தியர் 4:17; 16:10) பிற்பாடு, எபேசுவிலிருந்து மக்கெதோனியாவுக்கு எரஸ்துவுடன் தீமோத்தேயு அனுப்பப்பட்டார். கொரிந்துவிலிருந்து ரோமர்களுக்கு பவுல் எழுதுகையில், தீமோத்தேயு மறுபடியும் அவருடன் அங்கு இருந்தார்.—அப்போஸ்தலர் 19:22; ரோமர் 16:21.
எருசலேமுக்கு பவுல் கிளம்பியபோது தீமோத்தேயுவும் மற்றவர்களும் கொரிந்துவைவிட்டு சென்றனர், இவர்கள் அந்த அப்போஸ்தலனுடன் துரோவா வரைக்குமாவது ஒன்றுசேர்ந்து சென்றிருக்கலாம். எருசலேமுக்கு தீமோத்தேயு சென்றாரா என்பது தெரியாது. சுமார் பொ.ச. 60-61-ல் ரோமிலுள்ள சிறையிலிருந்து பவுல் எழுதிய மூன்று நிருபங்களின் அறிமுகங்களில் தீமோத்தேயுவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. a (அப்போஸ்தலர் 20:4; பிலிப்பியர் 1:1; கொலோசெயர் 1:1; பிலேமோன் 1) தீமோத்தேயுவை ரோமிலிருந்து பிலிப்பிக்கு அனுப்ப பவுல் எண்ணிக்கொண்டிருந்தார். (பிலிப்பியர் 2:19) சிறையிலிருந்து பவுல் விடுதலை செய்யப்பட்டபின், இந்த அப்போஸ்தலனுடைய கட்டளையின்படி தீமோத்தேயு எபேசுவிலேயே தங்கியிருந்தார்.—1 தீமோத்தேயு 1:4.
முதல் நூற்றாண்டில் பயணம் செய்வது சுலபமாகவும் இல்லை, சொகுசாகவும் இல்லை. சபைகளின் நிமித்தமாக அநேக பயணங்களை மேற்கொள்ள தீமோத்தேயு முன்வந்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. (காவற்கோபுரம், ஆகஸ்ட் 15, 1996, பக்கம் 29-லுள்ள பெட்டியை காண்க.) அவருடைய பயணங்களில் ஒன்றையும் அது தீமோத்தேயுவைப் பற்றி நமக்கு என்ன சொல்கிறது என்பதையும் கவனியுங்கள்.
தீமோத்தேயுவின் குணத்தை ஆராய்தல்
பிலிப்பிலுள்ள துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு சிறையிலிருந்த அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியபோது தீமோத்தேயுவும் உடன் இருந்தார். பவுல் சொன்னார்: “நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும் படிக்குச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன். அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை. மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள். தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தம குணத்தை அறிந்திருக்கிறீர்கள்.”—பிலிப்பியர் 1:1, 13, 28-30; 2:19-22.
உடன் விசுவாசிகள்மீது தீமோத்தேயுவுக்கு இருந்த அக்கறையை அந்த வார்த்தைகள் காட்டுகின்றன. படகில் சென்றால் தவிர, ரோமிலிருந்து பிலிப்பிக்கு கால்நடையாக—ஏட்ரியாடிக் கடல் வழியாக குறுகிய தூரத்தைக் கடப்பது உட்பட—செல்ல 40 நாட்கள் ஆகும். பிறகு ரோமுக்கு மீண்டும் திரும்பிவர இன்னொரு 40 நாட்கள். தன்னுடைய சகோதர சகோதரிகளுக்கு சேவைசெய்ய இவையெல்லாவற்றையும் சகிக்க தீமோத்தேயு தயாராக இருந்தார்.
தீமோத்தேயு அநேக இடங்களுக்கு சென்றபோதிலும், சிலசமயங்களில் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவருக்கு ஏதோ ஒருவிதமான வயிற்றுவலி இருந்திருக்கலாம், அதனால் ‘அடிக்கடி பலவீனமானார்.’ (1 தீமோத்தேயு 5:23) இருந்தபோதிலும் நற்செய்தியின் நிமித்தமாக அதிக முயற்சி செய்தார். இவருடன் பவுல் இவ்வளவு நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததில் ஆச்சரியமில்லை!
பவுலுடைய பாதுகாப்பில் தீமோத்தேயு இருந்தார். இருவரும் ஒன்றுசேர்ந்து நிறைய அனுபவங்களை பெற்றனர். இதன் விளைவாக பவுலின் பண்பை தீமோத்தேயு வெளிப்படுத்தினார். இதனால், அவரைப் பற்றி பவுல் இவ்வாறு சொல்ல முடிந்தது: “என் போதனை, நடத்தை, நோக்கம், நம்பிக்கை, பொறுமை, அன்பு, மனஉறுதி ஆகியவற்றை பின்பற்றிவந்திருக்கிறாய். அந்தியோக்கியாவிலும், இக்கோனியாவிலும், லிஸ்திராவிலும் எனக்கு நேரிட்ட இன்னல்களும் துன்பங்களும் உனக்குத் தெரியும்.” பவுலின் துயரங்களில் தீமோத்தேயுவும் பங்குகொண்டார், பவுல் இவருக்காக ஜெபித்தார், ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்காக தோளோடு தோள் சேர்ந்து உழைத்தார்.—2 தீமோத்தேயு 1:3, 4, பொ.மொ.; 3:10, 11.
“உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடி” கவனமாயிருக்க தீமோத்தேயுவை பவுல் உற்சாகப்படுத்தினார். தீமோத்தேயு ஓரளவு கூச்ச சுபாவமுள்ளவராக, தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துவதில் தயக்கமுள்ளவராக இருந்ததை இது சுட்டிக் காட்டுவதாக தெரிகிறது. (1 தீமோத்தேயு 4:12; 1 கொரிந்தியர் 16:10, 11) என்றபோதிலும், அவர் தனித்தே சேவைசெய்யும் திறமைபெற்றவராக திகழ்ந்தார். அதனால் பொறுப்புமிக்க வேலைகளுக்கு பவுல் அவரை நம்பிக்கையுடன் அனுப்ப முடிந்தது. (1 தெசலோனிக்கேயர் 3:1, 2) எபேசுவிலுள்ள சபையில் பலமான தேவராஜ்ய கண்காணிப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தை பவுல் உணர்ந்தார். ஆகவே தீமோத்தேயு அங்கிருந்து, “வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், . . . நீ சிலருக்குக் கட்டளையிடும்”படி பவுல் அவரை உந்துவித்தார். (1 தீமோத்தேயு 1:3) அநேக பொறுப்புகள் கொடுக்கப்பட்டபோதிலும், தீமோத்தேயு அடக்கமானவராக விளங்கினார். தனக்கு இருந்த கூச்ச சுபாவத்தின் மத்தியிலும் தைரியத்தோடிருந்தார். உதாரணமாக, தன்னுடைய விசுவாசத்திற்காக பவுல் விசாரணையில் இருந்த சமயத்தில் அவருக்கு உதவ ரோமுக்கு சென்றார். சொல்லப்போனால், ஒருவேளை அதே காரணத்திற்காக தீமோத்தேயு தானேயும் சிலகாலம் சிறையில் இருந்தார்.—எபிரெயர் 13:23.
பவுலிடமிருந்து தீமோத்தேயு அநேக விஷயங்களை கற்றுக்கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. தன்னுடைய உடன் ஊழியர்மீது அப்போஸ்தலனாகிய பவுல் கொண்டிருந்த பெரும் மதிப்பை அவருக்கு எழுதிய இரண்டு கடிதங்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்தக் கடிதங்கள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் காணப்படுகின்றன. பொ.ச. 65-ல், தன்னுடைய தியாக மரணம் வெகு சீக்கிரத்தில் நடக்கப்போவதை பவுல் உணர்ந்தபோது, அவர் மீண்டும் தீமோத்தேயுவை அழைத்தார். (2 தீமோத்தேயு 4:6, 9) பவுல் அப்போஸ்தலன் கொலை செய்யப்படுவதற்கு முன்பு தீமோத்தேயு அவரை பார்க்க முடிந்ததா என்பதைப் பற்றி வேதவசனங்கள் சொல்லவில்லை.
நீங்களும் முன்வாருங்கள்!
தீமோத்தேயுவின் சிறந்த முன்மாதிரியிலிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். பவுலுடன் கூட்டுறவு கொண்டதிலிருந்து அவர் அநேக நன்மை அடைந்தார், கூச்ச சுபாவமுள்ள இளைஞனாக இருந்து ஒரு கண்காணியாகும் பொறுப்பிற்கு உயர்ந்தார். இன்று, இளம் கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் இத்தகைய கூட்டுறவிலிருந்து அதிக நன்மை அடையலாம். யெகோவாவின் சேவையை தங்கள் வாழ்க்கைத் தொழிலாக செய்வார்களாகில், செய்வதற்கு பிரயோஜனமான அநேக வேலைகள் அவர்களுக்கு இருக்கும். (1 கொரிந்தியர் 15:58) அவர்கள் தங்களுடைய தாய் சபையில் பயனியர்களாக இருக்கலாம், அல்லது முழுநேர பிரசங்கிகளாக இருக்கலாம், அல்லது ராஜ்ய பிரசங்கிகளுக்கான தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்யலாம். இவர்கள் வேறொரு தேசத்தில் மிஷனரி சேவை செய்வதற்கோ அல்லது உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைமை அலுவலகத்திலோ அல்லது கிளை அலுவலகம் ஒன்றில் சேவை செய்வதற்கோ அநேக சாத்தியங்கள் இருக்கின்றன. யெகோவாவுக்கு முழு ஆத்துமாவோடு செய்யும் சேவையின் மூலம் எல்லா கிறிஸ்தவர்களும் தீமோத்தேயுவின் அதே மனப்பான்மையை வெளிப்படுத்திக் காண்பிக்கலாம்.
ஆவிக்குரிய விதத்தில் தொடர்ந்து வளர்ந்து, எந்தவொரு நியமிப்பாக இருந்தாலும் யெகோவாவின் அமைப்பில் உபயோகமுள்ளவர்களாய் இருப்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால், தீமோத்தேயுவைப் போல செய்யுங்கள். உங்களால் முடிந்தவரை, உங்களையே அளிக்க முன்வாருங்கள். எதிர்காலத்தில் என்ன சிலாக்கியங்கள் உங்களுக்கு காத்திருக்கின்றன என்பது யாருக்குத் தெரியும்?
[அடிக்குறிப்புகள்]
a பவுல் எழுதிய மற்ற நான்கு நிருபங்களிலும் தீமோத்தேயு குறிப்பிடப்பட்டிருக்கிறார்.—ரோமர் 16:21; 2 கொரிந்தியர் 1:1; 1 தெசலோனிக்கேயர் 1:1; 2 தெசலோனிக்கேயர் 1:1.
[பக்கம் 31-ன் படம்]
“என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை”