உட்பார்வையோடும் உந்துவிக்கும் தன்மையோடும் போதியுங்கள்
“ஞானியின் வாய் உட்பார்வையைக் காண்பிக்கும்படி அவன் இருதயம் அவனுக்கு உதவும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் உந்துவிக்கும் தன்மையைக் கொடுக்கும்.”—நீதிமொழிகள் 16:23, NW.
1. கடவுளுடைய வார்த்தையை போதிப்பதில் வெறுமனே விஷயத்தை தெரியப்படுத்துவது மட்டுமே போதுமானதல்ல, ஏன்?
கடவுளுடைய வார்த்தையை நாம் போதிக்கையில் மாணாக்கரின் மனதிற்கு மட்டுமல்ல அவர்களுடைய இருதயத்திற்கும் ஒளியூட்டுவதே நம் குறிக்கோள். (எபேசியர் 1:19) ஆகவே, போதித்தல் என்பது வெறுமனே விஷயத்தை தெரியப்படுத்துவது மட்டுல்ல. நீதிமொழிகள் 16:23 (NW) கூறுகிறது: “ஞானியின் வாய் உட்பார்வையைக் காண்பிக்கும்படி அவன் இருதயம் அவனுக்கு உதவும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் உந்துவிக்கும் தன்மையைக் கொடுக்கும்.”
2. (அ) உந்துவிப்பது என்றால் என்ன? (ஆ) எல்லா கிறிஸ்தவர்களும் எப்படி உந்துவிக்கும் போதகர்களாக இருக்க முடியும்?
2 அப்போஸ்தலன் பவுல் போதிக்கையில் இந்த நியமத்தை பின்பற்றினார். அவர் கொரிந்துவில் இருக்கையில், “ஒவ்வொரு ஓய்வுநாளும் ஜெப ஆலயத்திலே ஒரு பேச்சு கொடுத்து, யூதரையும் கிரேக்கரையும் உந்துவித்தார்.” (அப்போஸ்தலர் 18:4, NW) இங்கு “உந்துவி” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை, “நியாயங்காட்டி அல்லது தார்மீக காரணங்களை சுட்டிக்காட்டி மனமாற்றத்தை ஏற்படுத்துதல்” என்று பொருள்படும் என ஓர் அகராதி கூறுகிறது. நம்பவைக்கும் விவாதத்தின் மூலம் மக்கள் தங்களுடைய சிந்தனை போக்கையே மாற்றிக்கொள்ள பவுல் அவர்களைத் தூண்டினார். அவருடைய உந்துவிக்கும் திறமை அவ்வளவு வலிமையுள்ளது; எதிரிகளும்கூட அவருடைய திறமையைக் கண்டு நடுங்குமளவுக்கு இருந்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! (அப்போஸ்தலர் 19:24-27) இருந்தாலும், பவுலின் போதகம் மனித திறமைகளின் வெளிக்காட்டல்ல. அவர் கொரிந்தியர்களிடம் கூறினார்: “உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், [“உந்துவிக்கும் வார்த்தைகளினால் அல்ல,” NW] ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.” (1 கொரிந்தியர் 2:4, 5) எல்லா கிறிஸ்தவர்களுக்கும் யெகோவா தேவனுடைய ஆவியின் உதவி கிடைக்குமாதலால் எல்லாருமே உந்துவிக்கும் போதகர்களாக இருக்கமுடியும். ஆனால் எப்படி? திறம்பட்ட போதிக்கும் கலைகளில் சிலவற்றை சிந்திப்போம்.
நன்கு செவிகொடுத்து கேளுங்கள்
3. மற்றவர்களுக்கு போதிக்கையில் உட்பார்வை ஏன் அவசியம், ஒரு பைபிள் மாணாக்கரின் இருதயத்தை நாம் எப்படி எட்டலாம்?
3 போதிக்கும் கலையில் முதல்படி, பேசுவதல்ல காது கொடுத்துக் கேட்பதே. நீதிமொழிகள் 16:23-ல் கவனித்த விதமாக உந்துவிப்பவர்களாய் இருப்பதற்கு நமக்கு உட்பார்வை அவசியம். இயேசு தாம் போதித்த மக்களைப் பற்றி நல்ல உட்பார்வை கொண்டிருந்தார். “மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்”தார் என யோவான் 2:25 கூறுகிறது. ஆனால், நாம் போதிக்கும் ஆட்களுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை எப்படி தெரிந்துகொள்ள முடியும்? செவிகொடுத்து கேட்பவராய் இருப்பது ஒரு வழி. யாக்கோபு 1:19 இவ்வாறு கூறுகிறது: “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும்” இருக்கவேண்டும். எல்லாரும் தங்களுடைய எண்ணங்களை உடனே வெளிப்படுத்திவிட மாட்டார்கள் என்பது உண்மையே. ஆனாலும் நாம் அவர்கள்மேல் உண்மையான அக்கறை வைத்திருக்கிறோம் என நம் பைபிள் மாணாக்கர்கள் நிச்சயமாக அறிந்த பிறகு தங்களுடைய உள்ளான உணர்ச்சிகளை தாராளமாக வெளிப்படுத்தலாம். அன்பான, பகுத்தறியும் கேள்விகளினால் அவர்கள் இருதயத்தைத் தொட்டு, உள்ளான உணர்ச்சிகளை நம்மால் “மொண்டெடு”க்க முடியும்.—நீதிமொழிகள் 20:5.
4. கிறிஸ்தவ மூப்பர்கள் ஏன் நன்கு செவிகொடுத்து கேட்க வேண்டும்?
4 முக்கியமாக கிறிஸ்தவ மூப்பர்கள் செவிகொடுத்து கேட்பவர்களாய் இருப்பது அவசியம். அப்போதுதான், “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று” அவர்கள் நன்றாக அறியமுடியும். (கொலோசெயர் 4:6) நீதிமொழிகள் 18:13 இவ்வாறு எச்சரிக்கிறது: “காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.” ஒரு சகோதரி சில கூட்டங்களுக்கு வர தவறினார்; ஆகவே, நல்ல நோக்கத்துடனேயே இரண்டு சகோதரர்கள் உலக ஆசைகளைப் பற்றி அவருக்கு புத்திமதி கூறினார்கள். ஆனால், அந்தச் சகோதரி ஏன் வரவில்லை என்பதைப் பற்றி அவர்கள் ஒன்றுமே கேட்காததால் அவர் மனம் புண்ணாகிவிட்டது. ஏனென்றால், சமீபத்தில்தான் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்திருந்தது. ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு செவிகொடுத்து கேட்பது எவ்வளவு முக்கியம் பாருங்கள்!
5. சகோதரர்கள் மத்தியில் எழும் பிரச்சினைகளை மூப்பர்கள் எவ்வாறு கையாளலாம்?
5 மூப்பர்களைப் பொருத்தவரை போதித்தல் என்பது மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுப்பதையும் உட்படுத்தும். இந்தச் சமயத்திலும் நன்கு செவிகொடுத்து கேட்பது அவசியம். முக்கியமாக உடன் கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரச்சினைகள் எழும்போது செவிகொடுத்து கேட்பது இன்னும் அதிக முக்கியம். மூப்பர்கள் செவிகொடுத்து கேட்ட பிறகுதான், ‘பட்சபாதமில்லாமல் நியாயந்தீர்க்கிற பிதாவைப்’ பின்பற்ற முடியும். (1 பேதுரு 1:17) அப்படிப்பட்ட சமயங்களில் உணர்ச்சிகள் வெடிக்கலாம். ஆகவே, நீதிமொழிகள் 18:17-ன் அறிவுரையை ஒரு மூப்பர் மனதில் வைத்திருப்பது நல்லது: “தன் வழக்கிலே முதல் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான்.” திறம்பட்ட ஒரு போதகர் இரண்டு சாராருக்கும் செவிகொடுத்து கேட்பார். ஜெபம் செய்து அமைதலான சூழ்நிலை ஏற்பட உதவுகிறார். (யாக்கோபு 3:18) உணர்ச்சிகள் எல்லை மீறினால், அந்தச் சகோதரர்கள் இருவரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதற்கு மாறாக தங்களுடைய பிரச்சினையை நேரடியாக தன்னிடம் சொல்லும்படி மூப்பர் கூறலாம். அதோடு பொருத்தமான கேள்விகள் கேட்பது விவாதத்தின் அடிப்படை காரணத்தை தெளிவாக புரிந்துகொள்ள உதவும். அநேக சமயங்களில், சண்டைகளுக்கு முக்கிய காரணம் வன்மம் அல்ல, சரிவர பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாததே. ஆனால் பைபிள் நியமங்களை மீறியிருப்பது தெரியவந்தால், அன்புள்ள ஒரு போதகர் உட்பார்வையோடு அறிவுரை கொடுக்க முடியும். ஏனென்றால் இரண்டு சாராருடைய வாதத்தையும் அவர் கேட்டிருப்பார்.
எளிமையின் முக்கியத்துவம்
6. எளிமையாக போதிப்பதில் பவுலும் இயேசுவும் என்ன முன்மாதிரி வைத்தனர்?
6 மதிப்புவாய்ந்த போதித்தலில் மற்றொரு கலை, எளிய வார்த்தைகளை உபயோகிப்பதாகும். “சகல பரிசுத்தவான்களோடுங்கூட” நம்முடைய பைபிள் மாணாக்கர்களும் சத்தியத்தின் “அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து”கொள்ள வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். (எபேசியர் 3:18) பைபிளின் சில கோட்பாடுகள் கவர்ச்சியூட்டுபவையாயும் அக்கறையை தூண்டுபவையாயும் உள்ளன. (ரோமர் 11:33) இருந்தாலும், பவுல் கிரேக்கர்களிடம் பிரசங்கித்தபோது ‘அறையப்பட்ட கிறிஸ்துவைப்’ பற்றிய எளிமையான செய்தியையே பேசினார். (1 கொரிந்தியர் 2:1, 2) அதைப்போலவே இயேசுவும் தெளிவான, கவர்ந்திழுக்கும் முறையில் பிரசங்கித்தார். மலைப் பிரசங்கத்தில் அவர் எளிய வார்த்தைகளையே உபயோகித்தார். ஆனாலும், இதுவரை சொல்லப்படாத ஆழமான சத்தியங்களை அப்போது கூறினார்.—மத்தேயு, அதிகாரங்கள் 5-7.
7. பைபிள் படிப்புகளை நடத்தும்போது நாம் எப்படி எளிமையாக போதிக்கலாம்?
7 பைபிள் படிப்புகளில் போதிக்கும்போது நாமும் எளிமையாக போதிக்கலாம். எப்படி? “அதி முக்கிய காரியங்கள்” மீது கவனம் செலுத்துவதனால். (பிலிப்பியர் 1:10, NW) கடினமான விஷயங்களை எளிய மொழிநடையில் விளக்க முயலவேண்டும். ஒரு பிரசுரத்தில் இடக்குறிப்பில் இருக்கும் ஒவ்வொரு பைபிள் வசனத்தையும் வாசித்து கலந்துபேசுவதற்கு பதிலாக முக்கிய வசனங்கள் மீதே கவனம்செலுத்த வேண்டும். அதற்கு நாம் நல்லவிதமாக தயாரிக்க வேண்டியது அவசியம். நுட்ப விவரங்களை அளித்து மாணாக்கரை திணறடிக்க கூடாது; அதிக முக்கியமில்லாத சிறிய விஷயங்கள் நம்மை திசை திருப்பிவிட அனுமதிக்க கூடாது. பாடத்துடன் நேரடியாக சம்பந்தப்படாத ஒரு கேள்வி மாணாக்கருக்கு இருக்குமானால், பாடத்தை முடித்தபிறகு அதை சிந்திக்கலாம் என சாதுரியமாக சொல்லவேண்டும்.
கேள்விகளை திறம்பட உபயோகித்தல்
8. இயேசு கேள்விகளை எவ்வாறு திறமையாக உபயோகித்தார்?
8 திறம்பட்ட கேள்விகளைக் கேட்பதும் உபயோகமான மற்றொரு போதிக்கும் கலை. இயேசு கிறிஸ்து போதிக்கையில் கேள்விகளை தாராளமாக உபயோகித்தார். உதாரணமாக, இயேசு பேதுருவிடம் இவ்வாறு கேட்டார்: “சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார். அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்த வேண்டுவதில்லையே” என்றார். (மத்தேயு 17:24-26) இயேசு, ஆலயத்தில் வணங்கப்பட்டவருடைய ஒரே பேறான குமாரனாக இருந்ததால் ஆலய வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனாலும் கேள்விகளை திறமையான விதத்தில் உபயோகித்து இயேசு இந்த உண்மையை உணர்த்தினார். இவ்வாறு, பேதுரு ஏற்கெனவே அறிந்திருந்த தகவலை வைத்து சரியான முடிவெடுப்பதற்கு இயேசு அவருக்கு உதவினார்.
9. பைபிள் படிப்புகளின்போது நாம் எவ்வாறு கேள்விகளை உபயோகிக்கலாம்?
9 பைபிள் படிப்புகளின்போது நாம் கேள்விகளை நல்லவிதமாக உபயோகிக்கலாம். ஒரு மாணாக்கர் தவறான பதிலைக் கொடுத்தால், உடனே சரியான பதிலை சொல்லவேண்டும் போல் நமக்கு தோன்றலாம். ஆனால் அப்படி செய்தால் படிக்கிற விஷயம் மாணாக்கர் நினைவில் நிற்குமா? கேள்விகளைக் கேட்டு மாணாக்கர் தாமே சரியான முடிவுக்கு வர வழிநடத்த முயலுவதே மிகச் சிறந்தது. உதாரணமாக, கடவுளுடைய பெயரை ஏன் உபயோகிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அவருக்கு கடினமாக இருந்தால் நாம் இவ்வாறு கேட்கலாம்: ‘உங்க பெயர் உங்களுக்கு முக்கியமா? . . . ஏன்? . . . உங்க பெயரை சொல்லவே மாட்டேன்னு ஒருத்தர் சொன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்? . . . நாம கடவுளுடைய தனிப்பட்ட பெயரை உபயோகிக்கனும்னு அவர் எதிர்பார்க்கிறது நியாயம்தான் இல்லையா?’
10. உணர்ச்சிப்பூர்வமாக பாதிக்கப்பட்ட தனி நபர்களுக்கு உதவுகையில் மூப்பர்கள் எவ்வாறு கேள்விகளை உபயோகிக்கலாம்?
10 மூப்பர்கள் மந்தையை மேய்ப்பதிலும்கூட கேள்விகளை நல்லவிதமாக உபயோகிக்கலாம். சபையிலுள்ள அநேகரை சாத்தானுடைய உலகம் உணர்ச்சிப்பூர்வமாக தாக்கி காயப்படுத்தியிருக்கிறது. ஆகவே, அசுத்தமானவர்களாகவும் யாருமே தங்களிடம் அன்புகூரமாட்டார்கள் எனவும் அவர்கள் நினைக்கலாம். அப்படிப்பட்ட நபரிடம் ஒரு மூப்பர் இவ்வாறு பேசலாம்: ‘உங்கள நீங்களே மோசம்னு நெனக்கிறீங்க, ஆனா யெகோவா உங்களபத்தி என்ன நெனக்கிறாரு? நம்ம அன்புள்ள பரலோக தகப்பன், உங்களுக்காக தம்முடைய குமாரனை உயிர்த் தியாகம் செய்ய அனுமதிச்சிருக்காருன்னா அவர் உங்கமேல அன்பு வச்சிருக்கிறாருன்னு தானே அர்த்தம்?’—யோவான் 3:16.
11. பதிலை எதிர்பார்க்காத கேள்விகள் என்ன நோக்கத்தை சேவிக்கின்றன, பொதுப் பேச்சுகளில் அவற்றை எவ்வாறு உபயோகிக்கலாம்?
11 பதிலை எதிர்பார்க்காத கேள்விகள், பிரயோஜனமான மற்றொரு போதிக்கும் கலையாகும். கேட்பவர்கள் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை, ஆனால் காரியங்களை நியாயப்படுத்தி பார்க்க அவர்களுக்கு உதவும். முற்காலங்களில் வாழ்ந்த தீர்க்கதரிசிகள், கேட்பவர்களை ஆழமாக சிந்திக்க தூண்டுவதற்கு இம்மாதிரியான கேள்விகளை தாராளமாக உபயோகித்தனர். (எரேமியா 18:14, 15) இயேசுவும் பதிலை எதிர்பார்க்காத கேள்விகளை திறமையாக உபயோகித்தார். (மத்தேயு 11:7-11) முக்கியமாக பொதுப் பேச்சுகள் கொடுக்கையில் அப்படிப்பட்ட கேள்விகள் அதிக பிரயோஜனமானவை. யெகோவாவை பிரியப்படுத்துவதற்கு முழு ஆத்துமாவோடு சேவிக்க வேண்டும் என்று சபையாரிடம் வெறுமனே சொல்வதற்கு மாறாக, ‘நாம் உண்மையிலேயே முழு மனதோடு சேவிக்கவில்லை என்றால் யெகோவா பிரியப்படுவாரா?’ என்று கேட்பது அதிக பிரயோஜனமாக இருக்கும்.
12. நோக்குநிலைக் கேள்விகளைக் கேட்பதன் பிரயோஜனமென்ன?
12 பைபிள் மாணாக்கர் ஒருவர் தான் கற்றுக்கொள்வதை உண்மையில் நம்புகிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள நோக்குநிலைக் கேள்விகள் உதவுகின்றன. (மத்தேயு 16:13-16) வேசித்தனம் தவறு என்று ஒரு மாணாக்கர் சரியான பதிலை டக்கென்று சொல்லிவிடலாம். ஆனால், அதோடுகூட பின்வரும் கேள்விகளையும் கேட்டால் பிரயோஜனமாக இருக்கும்: ‘கடவுளுடைய ஒழுக்க தராதரத்தைப் பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க? ரொம்ப கெடுபிடியா இருக்குதுன்னு நெனக்கிறீங்களா? கடவுளுடைய தராதரங்கள கடைப்பிடிக்கிறோமா இல்லையாங்கிறது முக்கியம்னு நீங்க நெனக்கிறீங்களா?’
நெஞ்சைத் தொடும் உவமைகள்
13, 14. (அ) ஒன்றை உவமையாக கூறுவது என்றால் என்ன? (ஆ) நல்ல உவமைகள் திறம்பட்டவையாய் இருப்பதற்கு காரணம் என்ன?
13 கேட்பவர்களின் மற்றும் பைபிள் மாணாக்கர்களின் நெஞ்சைத் தொடுவதற்கு மற்றொரு வழி உவமைகளை திறம்பட உபயோகிப்பதாகும். “உவமை” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க பதம், “பக்கத்தில் அல்லது ஒன்றாக வைப்பது” என்று பொருள்படும். நீங்கள் ஓர் உவமையை உபயோகிக்கையில், பரிச்சயமான ஏதோ ஒன்றிற்கு ‘பக்கத்தில் வைப்பதன் மூலம்’ ஒரு காரியத்தை விளக்குகிறீர்கள். உதாரணமாக, இயேசு இவ்வாறு கேட்டார்: “தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?” அவரே அதற்கு பதிலளிப்பவராய் பிரபலமாயிருந்த கடுகு விதையைக் குறிப்பிட்டார்.—மாற்கு 4:30-32.
14 கடவுளுடைய தீர்க்கதரிசிகள் ஆற்றல்மிக்க அநேக உவமைகளை உபயோகித்தனர். இஸ்ரவேலர்களை தண்டிக்க கடவுள் அசீரியர்களை கருவியாக உபயோகித்தார்; ஆனால் அவர்களோ கொடூரமாக துன்புறுத்த ஆரம்பித்தனர். அப்போது அவர்களுடைய மேட்டிமையை இந்த உவமை மூலம் ஏசாயா வெளிப்படுத்தினார்: “கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மைபாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ?” (ஏசாயா 10:15) அதைப் போலவே, மற்றவர்களுக்கு போதிக்கையில் இயேசு ஏராளமான உவமைகளை உபயோகித்தார். அவர், “உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை” என்று வாசிக்கிறோமே! (மாற்கு 4:34) நல்ல உவமைகள் திறம்பட்டவை; ஏனென்றால் அவை மனதையும் இருதயத்தையும் உட்படுத்துகின்றன. கேட்பவர்கள், தாங்கள் ஏற்கெனவே அறிந்திருந்த ஏதோ ஒன்றோடு அதை ஒத்துப்பார்த்து புதிய தகவலை உடனே புரிந்துகொள்ள அவை உதவுகின்றன.
15, 16. உவமைகள் எப்போது அதிக திறம்பட்டவையாய் இருக்கும்? உதாரணங்கள் கொடுங்கள்.
15 நெஞ்சைத் தொடும் உவமைகளை நாம் எவ்வாறு உபயோகிக்கலாம்? முதலில், நாம் விளக்கும் காரியத்திற்கும் உவமைக்கும் ஓரளவாவது பொருத்தம் இருக்கவேண்டும். அந்த உவமை பொருத்தமற்றதாக இருந்தால் கேட்போரின் கவனம் சிதறப்படுமே ஒழிய அவர்களுக்கு உதவியாக இருக்காது. ஒரு பேச்சாளர், வீட்டில் வளர்க்கும் விசுவாசமுள்ள நாயைப்போல அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகிறார்கள் என ஒப்பிட்டார். அவர் நல்ல நோக்கத்துடனேயே அவ்வாறு சொல்லியிருக்கலாம். ஆனால் இவ்வளவு கீழ்த்தரமான ஒப்புமை உண்மையில் பொருத்தமாக இருக்குமா? பைபிள் இதே கருத்தை மிகவும் அருமையான, மேன்மையான விதத்தில் கூறுகிறதே! இயேசுவை பின்பற்றும் அபிஷேகம் செய்யப்பட்ட 1,44,000 பேரை அது, “தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டி”க்கு ஒப்பிடுகிறது.—வெளிப்படுத்துதல் 21:2.
16 உவமைகள் மக்களுடைய வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டிருக்கும்போது அதிக பயனளிக்கின்றன. நாத்தான் கூறிய கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியைப் பற்றிய உவமை தாவீது ராஜாவின் நெஞ்சைத் தொட்டது; ஏனென்றால், வாலிபனாய் இருக்கையில் ஆடு மேய்ப்பவராக இருந்ததால் தாவீது ஆடுகளை நேசித்தார். (1 சாமுவேல் 16:11-13; 2 சாமுவேல் 12:1-7) இதே உவமையை ஒரு காளையை வைத்து சொல்லியிருந்தால் அவ்வளவு ஆற்றல் மிக்கதாக இருந்திருக்காது. அதைப் போலவே, அறிவியல் நிகழ்ச்சிகள் அல்லது பிரபலமாய் இல்லாத சரித்திர நிகழ்ச்சிகள் போன்றவற்றைச் சார்ந்த உவமைகளும் கேட்பவர்களுக்கு அதிக பிரயோஜனமாய் இருக்காது. இயேசு தம் உவமைகளை அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்தே எடுத்தார். விளக்கு, ஆகாயத்து பறவைகள், காட்டு புஷ்பங்கள் போன்ற மிகவும் சாதாரண காரியங்களைப் பற்றியே பேசினார். (மத்தேயு 5:15, 16; 6:26, 28) இயேசுவுக்கு செவிகொடுத்தவர்கள் அப்படிப்பட்ட காரியங்களை எளிதில் கற்பனைசெய்து பார்க்க முடிந்தது.
17. (அ) எதை அடிப்படையாக வைத்து நாம் உவமைகளை கூறலாம்? (ஆ) நம் பிரசுரங்களில் உபயோகிக்கப்பட்டிருக்கும் உவமைகளை நம் மாணாக்கரின் சூழ்நிலைகளுக்கு தக்கவாறு எவ்வாறு மாற்றியமைக்கலாம்?
17 நம் ஊழியத்தில் எளிமையான அதேசமயம் திறம்பட்ட உவமைகளை உபயோகிக்க அநேக சந்தர்ப்பங்கள் உண்டு. கூர்ந்து கவனியுங்கள். (அப்போஸ்தலர் 17:22, 23) கேட்பவரின் குழந்தைகள், வீடு, வேலை அல்லது பொழுதுபோக்கு போன்றவற்றை வைத்து ஓர் உவமையைக் கூறலாம். அல்லது நம் பைபிள் மாணாக்கரைப் பற்றி நாம் தனிப்பட்ட விதமாக அறிந்தவற்றை வைத்து பிரசுரத்தில் ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருக்கும் உவமைக்கு மெருகூட்டலாம். உதாரணமாக, நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் அறிவு புத்தகத்தில் அதிகாரம் 8, பாரா 14-ல் உள்ள திறம்பட்ட உவமையை எடுத்துக்கொள்ளுங்கள். அது, ஓர் அன்புள்ள பெற்றோரைப் பற்றி அயலகத்தார் ஒருவர் பொய்களைப் பரப்புவதைப் பற்றியது. பெற்றோராய் இருக்கும் ஒரு பைபிள் மாணாக்கரின் சூழ்நிலைகளுக்கு தக்கவாறு இந்த உவமையை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பதைப் பற்றி நாம் ஆழ்ந்து சிந்திப்பது மிகவும் நல்லது.
வசனங்களை திறமையோடு வாசித்தல்
18. சரளமாய் வாசிக்க நாம் ஏன் முயற்சி செய்யவேண்டும்?
18 பவுல் தீமோத்தேயுவிடம், “பொது வாசிப்பிலும் புத்தி சொல்வதிலும் போதிப்பதிலும் தொடர்ந்து உன்னை ஈடுபடுத்திக்கொண்டிரு” என அறிவுரை கூறினார். (1 தீமோத்தேயு 4:13, NW) பைபிளே நம் போதகத்தின் அடிப்படை; ஆகவே நாம் அதைச் சரளமாக வாசிக்க வேண்டியது மிகவும் பிரயோஜனமானது. கடவுளுடைய மக்களுக்கு மோசேயின் நியாயப்பிரமாணத்தை வாசித்துக்காட்ட வேண்டிய சிலாக்கியம் லேவியர்களுக்கு இருந்தது. அவர்கள் வாசிக்கும்போது தடுமாறினார்களா அல்லது ஒரே குரலில் வாசித்தார்களா? இல்லை. நெகேமியா 8:8-ல் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.”
19. வேதவசனங்களை வாசிப்பதில் நாம் எவ்வாறு முன்னேற்றம் காணலாம்?
19 சில கிறிஸ்தவ ஆண்கள் சரளமாக பேச்சு கொடுக்கின்றனர், ஆனால் வாசிப்பதில் தடுமாறுகின்றனர். அவர்கள் எவ்வாறு முன்னேற்றம் செய்யலாம்? தொடர்ந்து பயிற்சி செய்வதே வழி. ஆம், சரளமாக வாசிக்க முடியும்வரை மறுபடியும் மறுபடியும் சப்தமாக வாசிக்க வேண்டும். பைபிளின் ஆடியோ கேசட்டுகள் உங்கள் மொழியில் கிடைத்தால், அதை வாசிப்பவரின் கருத்து அழுத்தமும் குரலில் ஏற்றத்தாழ்வும் எப்படி இருக்கின்றன என்பதைக் கூர்ந்து கவனிப்பது நல்லது. அதோடு, பெயர்களும் வழக்கத்திற்கு மாறான வார்த்தைகளும் எவ்வாறு உச்சரிக்கப்படுகின்றன என்பதையும் கவனியுங்கள். நன்கு பயிற்சி செய்தால் மகேர்-சாலால்-அஷ்-பாஸ் போன்ற பெயர்களைக்கூட ஓரளவு சரளமாக வாசிக்க முடியும்.—ஏசாயா 8:1.
20. நாம் எவ்வாறு நம் ‘போதகத்திற்கு கவனம் செலுத்தலாம்’?
20 யெகோவாவின் ஜனங்களாய் நாம் போதகர்களாக உபயோகிக்கப்படுவது என்னே ஓர் சிலாக்கியம்! ஆகவே அந்தப் பொறுப்பை நாம் ஒவ்வொருவரும் ஆர்வத்தோடு ஏற்றுக்கொள்வோமாக. நமக்கும் ‘நம் போதனைக்கும் தொடர்ந்து கவனம் செலுத்துவோமாக.’ (1 தீமோத்தேயு 4:16, NW) செவிகொடுத்து கேட்பவராக, எளிய வார்த்தைகளை உபயோகிப்பவராக, உட்பார்வையோடு கேள்விகளைக் கேட்பவராக, திறம்பட்ட உவமைகளை உபயோகிப்பவராக, வசனங்களை திறமையோடு வாசிப்பவராக இருந்தால் நாம் நல்ல போதகர்களாக இருக்கலாம். யெகோவா தம்முடைய அமைப்பின் வாயிலாக தரும் பயிற்சியிலிருந்து நாம் அனைவரும் பயனடைவோமாக. “கல்விமானின் நாவை” பெற இது நமக்கு உதவும். (ஏசாயா 50:4) புரோஷர்கள், ஆடியோ கேசட்டுகள், வீடியோ கேசட்டுகள் போன்றவை உட்பட நம் ஊழியத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா உபகரணங்களையும் முழுமையாக பயன்படுத்தினால் உட்பார்வையோடும் உந்துவிக்கும் தன்மையோடும் போதிக்க நாம் கற்றுக்கொள்ளலாம்.
[அடிக்குறிப்பு]
இந்த அடிக்குறிப்பு தமிழில் இல்லை
உங்கள் ஞாபகத்திற்கு வருகிறதா?
◻ நன்றாக செவிகொடுத்து கேட்பது நாம் போதிக்கையில் நமக்கு எப்படி உதவும்?
◻ எளிமையாக போதிப்பதில் நாம் எப்படி பவுலையும் இயேசுவையும் பின்பற்றலாம்?
◻ மற்றவர்களுக்கு போதிக்கையில் எப்படிப்பட்ட கேள்விகளை நாம் உபயோகிக்கலாம்?
◻ எப்படிப்பட்ட உவமைகள் அதிக திறம்பட்டவை?
◻ பொது வாசிப்பில் நம் திறமையை எப்படி முன்னேற்றுவிக்கலாம்?
[பக்கம் 16-ன் படம்]
ஒரு நல்ல போதகர் உட்பார்வை பெறுவதற்காக கவனித்து கேட்கிறார்
[பக்கம் 18-ன் படம்]
இயேசு தம் உவமைகளை அன்றாட வாழ்க்கையிலிருந்தே எடுத்தார்