முன்னேற விரும்புங்கள்—வளர்ச்சி அடையுங்கள்
பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்க நீங்கள் முதலில் கற்றுக்கொண்டபோது, உங்களில் ஆழமாக வேரூன்றியிருந்த சிந்தனைகளும் பேச்சும் நடத்தையும் படிப்படியாக மாற ஆரம்பித்தன. இவற்றில் பெரும்பாலான மாற்றங்கள், தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் நீங்கள் சேருவதற்கு முன்பே நடந்துவிட்டன. இப்போது யெகோவாவிற்கு உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருக்கும் அளவுக்கு நீங்கள் முன்னேற்றம் செய்திருக்கலாம். ஆக இனி முன்னேற வேண்டியதில்லை என அர்த்தமா? நிச்சயமாகவே இல்லை. உங்கள் முழுக்காட்டுதல் வெறும் ஆரம்பமே.
சீஷனாகிய தீமோத்தேயு, தான் “வளர்ச்சி அடைவது அனைவருக்கும் தெரியும்படி” தனக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனையைக் குறித்தும் ஊழிய சிலாக்கியங்களைக் குறித்தும் “சிந்தித்துக்கொண்டு,” இவற்றிலே ‘நிலைத்திருக்க’ வேண்டுமென்று பவுல் கூறினார். அச்சமயத்தில் தீமோத்தேயு ஏற்கெனவே கிறிஸ்தவ மூப்பராக சேவை செய்து வந்தார். (1 தீ. 4:12-15, NW) ஆகவே, நீங்கள் சமீபத்தில் கிறிஸ்தவ சத்திய பாதையில் நடக்க ஆரம்பித்திருந்தாலும்சரி பல ஆண்டுகளாக அதில் நடப்பவராக இருந்தாலும்சரி, தொடர்ந்து வளர்ச்சி அடைவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
அறிவும் மாற்றமும்
சக விசுவாசிகள் சத்தியத்தின் “அகலத்தையும் நீளத்தையும் உயரத்தையும் ஆழத்தையும் . . . மனதில் முழுமையாக கிரகிக்க” வேண்டுமென்று அப்போஸ்தலனாகிய பவுல் ஜெபித்ததாக எபேசியர் 3:14-19-ல் (NW) வாசிக்கிறோம். இதற்காக, இயேசு மனிதரில் வரங்களை அளித்தார்; போதிப்பதற்கும் சீர்படுத்துவதற்கும் சபையை கட்டியெழுப்புவதற்கும் இவர்களை அளித்தார். கடவுளின் ஏவுதலால் எழுதப்பட்ட அவருடைய வார்த்தையை தவறாமல் தியானிப்பதும் அனுபவமுள்ள போதகர்களின் உதவியும் ஆன்மீக ரீதியில் ‘வளர’ நமக்கு உதவும்.—எபே. 4:11-15.
இவ்வாறு வளருவது, ‘உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாவதை’ உட்படுத்துகிறது. இதற்கு, கடவுளுடைய மற்றும் கிறிஸ்துவுடைய சிந்தைகளுக்கு இசைவான உறுதியான மனச்சாய்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். ‘புதிய ஆள்தன்மையை தரித்துக்கொள்ள’ நம் மனதை அவர்களது சிந்தனையால் நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டும். (எபே. 4:23, 24, NW) சுவிசேஷ பதிவுகளை படிக்கும்போது, கிறிஸ்துவின் வாழ்க்கை சரிதையாகிய அவற்றை, பின்பற்ற வேண்டிய மாதிரியாக பார்க்கிறீர்களா? இயேசுவின் குறிப்பிட்ட சில குணங்களை கண்டுணர்ந்து, அவற்றை உங்கள் வாழ்க்கையில் பின்பற்ற உண்மையான முயற்சி எடுக்கிறீர்களா?—1 பே. 2:21.
எந்தளவு வளர்ச்சி அடைந்திருக்கிறீர்கள் என்பதை, மற்றவர்களுடன் நீங்கள் பேசும் விஷயங்கள் சுட்டிக்காட்டலாம். புதிய ஆள்தன்மையை தரித்திருப்பவர்கள் நேர்மையில்லாத, தூஷணமான, ஆபாசமான, அல்லது பயனற்ற பேச்சை பேசுவதில்லை. மாறாக, ‘பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தைகளையே . . . கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி’ பேசுவார்கள். (எபே. 4:25, 26, 29, 31; 5:3, 4; யூ. 16) அவர்களது சாதாரணமான உரையாடலும்சரி சபைக் கூட்டங்களில் தரும் பதில்களும்சரி, விவேகத்தை வளர்த்து வருகிறார்கள் என்பதையும் சத்தியம் அவர்களது வாழ்க்கையை மாற்றுகிறது என்பதையும் காட்டும்.
நீங்கள் இனியும் “போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்” இருந்தால், இதுவும் வளர்ச்சிக்கு அத்தாட்சி அளிக்கும். (எபே. 4:14) உதாரணத்திற்கு, புதுப் புது கருத்துக்களை, கொள்கைகளை, அல்லது பொழுதுபோக்குகளை உலகம் உங்கள்மீது திணிக்கும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஆன்மீக பொறுப்புகளுக்கு ஒதுக்க வேண்டிய நேரத்தை இவற்றிற்கு செலவழிக்க தூண்டப்படுகிறீர்களா? இப்படி செய்வது ஆன்மீக வளர்ச்சியை பெரிதும் தடைசெய்யும். ஆன்மீக காரியங்களுக்கு நேரத்தை வாங்குவது எவ்வளவு புத்திசாலித்தனம்!—எபே. 5:15, 16, NW.
மற்றவர்களோடு எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதும் உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு அடையாளமாக இருக்கலாம். உங்கள் சகோதர சகோதரிகளோடு ‘மென்மையான இரக்கத்தோடு நடந்து, தாராளமாக மன்னிக்க’ கற்றுக்கொண்டிருக்கிறீர்களா?—எபே. 4:32, NW.
எல்லாவற்றையும் யெகோவாவின் வழியில் செய்வதில் நீங்கள் காட்டும் முன்னேற்றம், சபையிலும் வீட்டிலும் வெளிப்பட வேண்டும். பள்ளியிலும், பொது இடங்களிலும், வேலை செய்யும் இடத்திலும்கூட அது வெளிப்பட வேண்டும். (எபே. 5:21-6:9) இப்படிப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் தெய்வீக குணங்களை முழுமையாக காட்டும்போது உங்கள் வளர்ச்சி தெரிய வருகிறது.
உங்கள் வரத்தை பயன்படுத்துங்கள்
யெகோவா நம் ஒவ்வொருவருக்கும் திறமைகளையும் சாமர்த்தியங்களையும் கொடுத்திருக்கிறார். மற்றவர்களுக்காக நாம் இவற்றை பயன்படுத்தும்படி அவர் எதிர்பார்க்கிறார்; இவ்வாறு நம் மூலம் மற்றவர்களுக்கு தமது தகுதியற்ற தயவைக் காட்ட அவர் விரும்புகிறார். இதைக் குறித்து அப்போஸ்தலனாகிய பேதுரு இவ்வாறு எழுதினார்: “அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய . . . கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல [“பொறுப்பாளர்போல்,” NW], ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.” (1 பே. 4:10) பொறுப்பாளராக உங்கள் வேலையை எவ்வாறு நிறைவேற்றுகிறீர்கள்?
பேதுரு இவ்வாறு தொடர்ந்து கூறுகிறார்: “ஒருவர் பேசினால், கடவுளுடைய பரிசுத்த வார்த்தைகளைப் பேசுவதுபோல் பேசட்டும்.” (1 பே. 4:11, NW) கடவுள் மகிமைப்படும்படி, அவருடைய வார்த்தையோடு முழுமையாக இசைந்திருக்கும் பேச்சை பேச வேண்டிய பொறுப்பை இந்த வசனம் வலியுறுத்துகிறது. அதைப் பேசும் விதமும் யெகோவாவை மகிமைப்படுத்த வேண்டும். தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் மூலம் கொடுக்கப்படும் பயிற்சி, மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் கடவுளை மகிமைப்படுத்தும் விதத்தில் உங்கள் வரத்தை பயன்படுத்த உதவும். அந்தக் குறிக்கோளோடு, பள்ளியில் உங்கள் முன்னேற்றத்தை எவ்வாறு அளவிட வேண்டும்?
பேச்சு ஆலோசனை படிவத்தில் எவ்வளவு குறிப்புகளை பயன்படுத்தி முடித்துவிட்டீர்கள் அல்லது எப்படிப்பட்ட நியமிப்புகளைப் பெற்றீர்கள் என்ற அடிப்படையில் சிந்திக்காமல், உங்கள் ஸ்தோத்திர பலியின் தரத்தை பள்ளியின் பயிற்சி எந்தளவு மேம்படுத்தியிருக்கிறது என்ற கோணத்தில் சிந்தியுங்கள். வெளி ஊழியத்தில் திறமையை இன்னும் அதிகமாய் வளர்க்க பள்ளி நம்மை தயார்படுத்துகிறது. ஆகவே உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘வெளி ஊழியத்தில் என்ன சொல்லப் போகிறேன் என்பதை உண்மையிலேயே தயாரிக்கிறேனா? நான் சாட்சி கொடுக்கும் நபர்கள்மீது தனிப்பட்ட அக்கறையைக் காட்ட கற்றுக்கொண்டிருக்கிறேனா? அடுத்த சந்திப்பில் கலந்துபேசுவதற்கு ஏற்ற ஒரு கேள்வியை முடிவில் கேட்டு, மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுகிறேனா? நான் பைபிளை ஒருவருக்குக் கற்றுக்கொடுக்கிறேன் என்றால், இருதயத்தை எட்டும் போதகராக முன்னேற உழைக்கிறேனா?’
உங்களுக்கு வழங்கப்படும் ஊழிய சிலாக்கியங்களின் அடிப்படையில் மட்டுமே உங்கள் முன்னேற்றத்தை அளவிடாதீர்கள். நியமிப்பை பெறுவதில் அல்ல, அந்நியமிப்பை எப்படி நிறைவேற்றுகிறீர்கள் என்பதிலேயே உங்கள் முன்னேற்றம் தெரியும். போதிப்பதை உட்படுத்தும் ஒரு நியமிப்பைப் பெற்றிருந்தால், இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் உண்மையிலேயே போதிக்கும் கலையை உபயோகித்தேனா? நான் போதித்த விதம், செவிசாய்த்தவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டுபண்ணியதா?’
உங்கள் வரத்தை பயன்படுத்துமாறு சொல்லப்படும் அறிவுரை, முன்முயற்சி எடுக்க வேண்டியதை உணர்த்துகிறது. மற்றவர்களோடு சேர்ந்து வெளி ஊழியம் செய்ய முன்முயற்சி எடுக்கிறீர்களா? உங்கள் சபையிலுள்ள புதியவர்களுக்கு, இளையவர்களுக்கு, அல்லது தளர்ச்சி அடைந்தவர்களுக்கு உதவ வழிதேடுகிறீர்களா? ராஜ்ய மன்றத்தை சுத்தப்படுத்த அல்லது மாநாடுகளிலும் அசெம்பிளிகளிலும் வாலண்டியர்களாக பல்வேறு விதங்களில் பணிபுரிய முன்வருகிறீர்களா? அவ்வப்போது துணைப் பயனியராக ஊழியம் செய்ய முடியுமா? ஒழுங்கான பயனியராக சேவை செய்ய அல்லது தேவை அதிகம் இருக்கும் சபையில் சேவை செய்ய உங்களால் முடியுமா? நீங்கள் ஒரு சகோதரர் என்றால், உதவி ஊழியராக அல்லது மூப்பராக ஆவதற்கான வேதப்பூர்வ தகுதிகளைப் பெற முயலுகிறீர்களா? உதவியளிக்கவும் பொறுப்பை ஏற்கவும் மனப்பூர்வமாக முன்வருவது உங்கள் வளர்ச்சியின் அடையாளமாகும்.—சங். 110:3, NW.
அனுபவம் வகிக்கும் பங்கு
கிறிஸ்தவ வாழ்க்கையில் அனுபவம் இல்லாததால் நீங்கள் எதிலோ குறைவுபடுவதாக நினைத்தால் மனதை தேற்றிக்கொள்ளுங்கள். கடவுளுடைய வார்த்தை ‘அனுபவமில்லாதவர்களை ஞானியாக்கும்.’ (சங். 19:7; 119:130; நீதி. 1:1-4; NW) பைபிள் ஆலோசனையை கடைப்பிடிப்பது, யெகோவாவின் பரிபூரண ஞானத்திலிருந்து பயனடைய நமக்கு உதவுகிறது; அனுபவத்தின் வாயிலாக மட்டுமே பெறும் எந்த ஞானத்தையும்விட இது அதிக மதிப்புமிக்கது. இருந்தாலும், யெகோவாவின் சேவையில் நாம் வளர்ச்சி அடைகையில் மதிப்புமிக்க அனுபவத்தைப் பெறுகிறோம். இதை எவ்வாறு நன்றாக பிரயோஜனப்படுத்திக் கொள்ளலாம்?
வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளை சந்தித்த பிறகு, ‘இந்தப் பிரச்சினையை நான் ஏற்கெனவே சந்தித்திருக்கிறேன். என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியும்’ என நியாயங்காட்ட மனம் தூண்டும். மனம் சொல்வதை கேட்பது ஞானமான காரியமா? “நீ உன்னை ஞானியென்று எண்ணாதே” என நீதிமொழிகள் 3:7 எச்சரிக்கிறது. நாம் பெற்றிருக்கும் அனுபவம், வாழ்க்கையில் சில சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது என்ற நம் கண்ணோட்டத்தை நிச்சயமாகவே பரந்ததாக்க வேண்டும். ஆனால் நாம் ஆன்மீக முன்னேற்றம் செய்கிறோம் என்றால், வெற்றி பெற நமக்கு யெகோவாவின் ஆசீர்வாதம் தேவை என்பதையும் அந்த அனுபவம் நம் மனதிலும் இருதயத்திலும் பதிக்க வேண்டும். ஆக, சூழ்நிலைகளை தன்னம்பிக்கையோடு சந்திப்பது அல்ல, ஆனால் வழிகாட்டுதலுக்காக உடனடியாக யெகோவாவிடம் திரும்புவதே நம் வளர்ச்சிக்கு அடையாளம். அவர் அனுமதிக்காமல் எதுவும் நடக்காது என்பதை நம்புவதும், நம் பரலோக தகப்பனோடு நம்பிக்கையும் பாசமும் நிறைந்த உறவை காத்துக்கொள்வதும் வளர்ச்சியின் வெளிக்காட்டுகள்.
தொடர்ந்து முன்னானவற்றை நாடுங்கள்
அப்போஸ்தலனாகிய பவுல், ஆன்மீக முதிர்ச்சி பெற்ற அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவராக இருந்தபோதிலும், ஜீவன் என்ற இலக்கை அடைய தொடர்ந்து ‘முன்னானவைகளை நாடுவதன்’ அவசியத்தை உணர்ந்தார். (பிலி. 3:13-16) நீங்களும் அதே போல் உணருகிறீர்களா?
நீங்கள் எந்தளவுக்கு முன்னேற்றம் செய்திருக்கிறீர்கள்? புதிய ஆள்தன்மையை எவ்வளவு முழுமையாக தரித்திருக்கிறீர்கள், யெகோவாவின் அரசதிகாரத்துக்கு எந்தளவு முழுமையாக கீழ்ப்படிந்திருக்கிறீர்கள், யெகோவாவை மகிமைப்படுத்த எவ்வளவு ஊக்கமாக உங்கள் வரங்களை பயன்படுத்துகிறீர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் வளர்ச்சியை அளவிடுங்கள். தேவராஜ்ய ஊழியப் பள்ளி கல்வியிலிருந்து நீங்கள் நன்மையடையும்போது, கடவுளுடைய வார்த்தையில் சிறப்பித்துக் காட்டப்படும் பண்புகள் உங்கள் பேச்சிலும் போதனையிலும் படிப்படியாக மிளிர வேண்டும். உங்கள் வளர்ச்சியின் இந்த அம்சங்களின்மீது மனதை ஒருமுகப்படுத்துங்கள். ஆம், அவற்றில் மகிழ்ந்திடுங்கள்; அப்போது உங்கள் வளர்ச்சி உடனடியாக தெரியும்.