இளைஞர் கேட்கின்றனர்
நான் பள்ளியில் இன்னும் நன்றாக படிக்க முடியுமா?
“மார்க்குதான் என் அப்பா அம்மாவுக்கு ரொம்ப முக்கியம். ‘கணக்குல எத்தன மார்க்கு வாங்கின? இங்லீஷ்ல எத்தன மார்க்கு வாங்கின?’ இது எனக்கு சுத்தமா பிடிக்காது!”—13 வயது சாம்.
இக்கட்டான இச் சூழ்நிலை சாமுக்கு மட்டுமே இல்லை. உண்மையில், “இன்னும் நன்றாக படிக்கலாம்” (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள் பின்வருமாறு தெரிவிக்கின்றனர்: “தங்களது மகன் அல்லது மகள் பள்ளியில் எவ்வளவு நன்றாக படித்தாலும், அவனு(ளு)க்கு இருக்கும் திறமைக்கு, இன்னும் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோரையே நாங்கள் சந்திக்கிறோம்.” ஆனால் சாமைப் போலவே அநேக இளைஞர், தங்களது பள்ளிப்பாடத்தில் இன்னும் முன்னேறும்படி—ஒருவேளை மிகச் சிறந்து விளங்கும்படி—பெற்றோர் மிக அதிகமாய் வற்புறுத்துவதாக நினைக்கின்றனர். வகுப்பிலும் படிப்பதற்கு நிறைய பாடங்கள் அவர்களுக்கு இருக்கலாம். “வரவர வாத்தியார்களுக்குப் பொறுமையே இருக்கிறதில்ல” என்று புகார் சொல்கிறார் ஒரு டீனேஜர். “உடனே ஒப்பிக்கணும்னு அவங்க எதிர்பார்க்கிறாங்க; அப்படி செய்யலேனா, சரியான முட்டாள்னு நினைக்க வைக்கிறாங்க. அதனாலதான் நான் கொஞ்சங்கூட முயற்சி செய்றதில்ல.”
பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்ற அளவு மதிப்பெண் பெறாத இளைஞர், சரிவர படிக்காதவர்கள் என்ற அர்த்தத்தில், தேறாத கேஸுகள் என்று பொதுவாக முத்திரை குத்தப்படுகின்றனர். சொல்லப்போனால், எல்லா மாணவர்களுமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பள்ளியில் தேறாமல் இருக்கின்றனர். ஏன்? சோம்பேறித்தனமோ அல்லது கற்பதில் கோளாறுகளோ மட்டுமே அதற்குக் காரணமாய் இருப்பதில்லை என்பது ஆர்வமூட்டுகிறது. a
ஏன் சிலர் தேறுவதில்லை
பள்ளிப் பாடம் என்று வருகையில், சில இளைஞர், அதிகமாய் அலட்டிக்கொள்ளாமல் கிடைக்கிற மதிப்பெண்களிலேயே திருப்தி காண்பதாய்த் தோன்றுவதும் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம். “ரொம்ப அலட்டிக்காம படிச்சு பாஸ் ஆக முடியும்னா, அந்தளவு மட்டும்தான் நான் படிப்பேன்” என 15 வயது ஹெர்மன் ஒப்புக்கொள்கிறான். என்றாலும், உள்ளதைச் சொல்ல வேண்டுமென்றால், இப்படிப்பட்ட இளைஞர் எல்லாருமே படிப்பில் அசட்டையாய் இருப்பதில்லை. ஒருவேளை ஒரு குறிப்பிட்ட பாடத்தில் அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அத்துடன் சிலர், தாங்கள் கற்றுவரும் பாடத்தின் நடைமுறைப் பயனை மதித்துணரத் தெரியாமல் இருக்கலாம். 17 வயது ரூபன் இவ்வாறு சொன்னான்: “பள்ளிப்படிப்பை முடிச்ச பிறகு இந்த சப்ஜெக்ட் எல்லாம் உதவாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.” ஆர்வமின்மை அல்லது ஊக்கமின்மை, தேறாமைக்கு எளிதில் வழிநடத்தலாம்.
மற்ற காரணிகளும் உள்ளன. உதாரணமாக, ஆசிரியர் மிக வேகமாய் பாடம் நடத்தினால், உங்களுக்கு வெறுப்பு வரும். மிக மெதுவாய் பாடம் நடத்தினாலோ, சலிப்புத் தட்டும். நண்பர்களின் அழுத்தமும் பள்ளியில் நீங்கள் நன்றாகப் படிக்காதவாறு உங்களைப் பாதிக்கலாம். தேறா சிறுவர் (ஆங்கிலம்) என்ற புத்தகம் விளக்குவதாவது: “கெட்டிக்காரனும், படிப்பில் திறமைசாலியுமான சிறுவனுக்கு, படிப்பில் சிரத்தையில்லாத நண்பர்களின் கும்பலைச் சேர்ந்தவர்களால் தான் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற விருப்பம் இருப்பின், தேறாமல் போகும்படி வற்புறுத்தப்படுவதை உணரலாம்.” இவ்வாறு, பள்ளியில் ஆரம்ப வகுப்புகளில் படித்த காலத்தில், கடினமாய் உழைத்தபோது, மற்றவர்கள் பொறாமைப்பட்டு, தன்னைக் கேலி செய்ததாக சொல்லி ஒரு டீனேஜர் மனவருத்தப்பட்டான். ஆம், “சிந்தனைத் திறனுள்ளவன் வெறுக்கப்படுவான்” என்று சொல்லும் நீதிமொழிகள் 14:17-ல் (NW) உள்ள நியமத்தின் மெய்மையை ஓர் இளைஞர் எதிர்ப்படலாம்.
சில சமயங்களில், தேறாமைக்கு அதிக சிக்கலான காரணங்கள் இருக்கின்றன. விசனகரமாக, சில இளைஞர்கள் தங்களைப் பற்றிய ஓர் எதிர்மறையான அபிப்பிராயத்துடனேயே வளருகின்றனர். எப்பொழுது பார்த்தாலும், அசமந்தம், முட்டாள், சோம்பேறி போன்ற தயவற்ற பட்டப்பெயர்களைச் சொல்லிச் சொல்லியே அவர்களைத் திணறடிக்கையில் இவ்வாறு ஆகலாம். விசனகரமாக, இப்படிப்பட்ட முத்திரைகள் உண்மையில் அப்படிப்பட்டவராகவே ஒருவரை ஆக்கிவிடலாம். ஒரு டாக்டர் சொன்னவாறே, “ஒருவர் உங்களை முட்டாள் என்று சொன்னவுடன் நீங்களும் அதை நம்பிவிட்டால், முட்டாளைப்போலவே நடந்துகொள்வீர்கள்.”
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்லெண்ணத்துடன்தான் தூண்டுதல் அளிக்கின்றனர். என்றாலும், தங்களை அளவுக்கு மிஞ்சி வற்புறுத்துவதாக இளைஞர்கள் உணரலாம். நீங்களும் அவ்வாறே உணர்ந்தால், உங்கள் பெற்றோரும் ஆசிரியர்களும் உங்களைச் சீண்ட முயலுவதில்லை என்பதைப் புரிந்துகொண்டு கவலைப்படாமல் இருங்கள். உங்களிடம் உள்ள திறமைகள் அனைத்திலும் நீங்கள் சிறந்து விளங்கும்படி அவர்கள் ஒருவேளை விரும்பலாம். இருந்தாலும், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மார்க் வாங்க வேண்டும் என்ற கவலை, முயற்சி எதுவும் செய்யாமலே விட்டுவிடும்படியாக உங்களை உணரச் செய்யலாம். ஆனால் விட்டுவிடாதீர்கள்: நீங்கள் பள்ளியில் இன்னும் நன்றாக படிக்க முடியும்.
ஊக்கம் பெறுதல்
ஊக்கம் பெறுவதே முதல் கட்டம்! இதைச் செய்ய, நீங்கள் கற்பவற்றின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே.” (1 கொரிந்தியர் 9:10) குறிப்பிட்ட பாடங்களை “கருத்தூன்றிப் படிப்பதன்” மதிப்பைக் காண்பது எப்போதும் எளிதல்ல. உதாரணமாக, ‘நானோ கம்ப்யூட்டர் புரோகிராமர் ஆக விரும்புறேன், அப்புறம் எதுக்கு வரலாறு பாடத்தைப் படிக்கணும்?’ என நீங்கள் கேட்கலாம்.
உங்கள் பள்ளிப் பாடத் திட்டத்திலுள்ள சில பாடங்கள்—குறைந்தபட்சம் இப்போதைக்கு—உங்களுக்குச் சம்பந்தமற்றவைபோல் தோன்றலாம் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கதே. ஆனால், நீண்ட கால நோக்கில் காண முயலுங்கள். பல்வேறு பாடங்களைப் பொதுவாய் கற்றுக்கொள்வது, உங்களைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்துகொள்ளும் உங்களது ஆற்றலை அதிகரிக்கும். பலதரப்பட்ட பாடங்களைப் படிப்பது, ‘எல்லாருக்கும் எல்லாம் ஆக’ தங்களுக்கு உதவி செய்திருப்பதாய், அதாவது, வாழ்க்கையில் பல்வேறு பின்னணியுடைய மக்களுக்கு ராஜ்ய செய்தியை அளிப்பதில் மிகவும் பயனுள்ள வகையில் செயல்படுவதற்கு உதவி செய்திருப்பதாய், யெகோவாவின் சாட்சிகள் மத்தியிலிருக்கும் அநேக இளைஞர்கள் கண்டிருக்கின்றனர். (1 கொரிந்தியர் 9:22) ஒரு பாடத்தைக் கற்பதால் சிறிதளவே நடைமுறைப் பயன் இருப்பதுபோல் தோன்றினாலும் அதில் தேர்ச்சிபெறுவது உங்களுக்கு நன்மை தரலாம். குறைந்தபட்சம், உங்களது “சிந்திக்கும் திறனை” நீங்கள் அதிகரிக்கலாம்; அது காலப்போக்கில் உங்களுக்கு மிகவும் பயன் தரும்.—நீதிமொழிகள் 1:1-4.
மறைந்திருக்கும் உங்களது திறமைகளை வெளிக்கொணரவும் பள்ளி உதவலாம். அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு இவ்வாறு எழுதினார்: “உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடு.” (2 தீமோத்தேயு 1:6) ஏதோவொரு விதத்தில் விசேஷ சேவை செய்யும்படியாக தீமோத்தேயு கிறிஸ்தவ சபையில் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது தெளிவாய் தெரிகிறது. ஆனால் கடவுள் கொடுத்த திறன்—அவர் பெற்ற “வரம்”—வளர்க்கப்பட வேண்டியதாய் இருந்தது; அல்லாவிடில், அது முடங்கிப்போய், வீணாகிவிடும். கல்வி சம்பந்தமான உங்களது திறமைகள், தீமோத்தேயுவுக்குக் கிடைத்த வரத்தைப் போன்று நேரடியாக கடவுளால் உங்களுக்கு அருளப்படவில்லை. இருந்தபோதிலும், உங்களுக்கு இருக்கும் திறமைகள்—கலை, இசை, கணிதம், அறிவியல் அல்லது வேறெந்தத் துறையிலும் இருக்கும் திறமைகள்—உங்களுக்கு விசேஷமானவை; இப்படிப்பட்ட வரங்களைக் கண்டறிந்து அவற்றை விருத்தி செய்ய பள்ளி உங்களுக்கு உதவலாம்.
நல்ல படிப்பு பழக்கங்கள்
என்றாலும், பள்ளியிலிருந்து அதிக நன்மை பெறுவதற்கு, ஒரு நல்ல படிப்பு பழக்கம் உங்களுக்கு அவசியம். (பிலிப்பியர் 3:16-ஐ ஒப்பிடுக.) போதியளவு பாடத்தைப் படித்து முடிப்பதற்குத் தேவையான நேரத்தை ஒதுக்குங்கள்; ஆனால், நீங்கள் புத்துணர்ச்சி பெறும்படி இடை இடையே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்; உங்களது படிப்பு, வாசிப்பையும் உட்படுத்தினால், அந்தப் பாடத்தை நன்கு புரிந்துகொள்ளும்படியாக அதை முதலில் கவனமாக பார்வையிடுங்கள். அடுத்தபடியாக, பாடவாரியாகவோ, முக்கியத் தலைப்புவாரியாகவோ கேள்விகளைத் தயாரித்துக்கொள்ளுங்கள். பிறகு வாசியுங்கள்; அவ்வாறு வாசிக்கையில் உங்கள் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கிறதா என்று பாருங்கள். முடிவாக, நீங்கள் கற்றுக்கொண்ட விஷயத்தை மனப்பாடமாய் ஒப்பிக்க முடிகிறதா என்று பாருங்கள்.
நீங்கள் கற்றுக்கொள்ளும் விஷயத்தை, ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்துள்ள விஷயத்தோடு தொடர்புபடுத்திப் பாருங்கள். உதாரணமாக, அறிவியல் பாடம், கடவுளுடைய ‘காணப்படாதவைகள் தெளிவாய்க் காணப்படுவதற்கு’ வேண்டிய தகவலைப் பெற்றுக்கொள்ள உதவும் ஒரு வழியாக இருக்கலாம். (ரோமர் 1:20) “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்” என்ற கூற்றின் மெய்மைக்கான நிரூபணத்தை நீங்களே காணும்படியாக வரலாறு பாடம் உங்களுக்கு உதவலாம். (எரேமியா 10:23) நீங்கள் படிக்கும் விஷயத்தை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தி வருகையில், கல்வி கற்றல் எளிதாகி வருவதை—இன்னும் அதிக மகிழ்ச்சியூட்டுவதாய் ஆகி வருவதை—நீங்கள் காணலாம்! சாலொமோன் இவ்வாறு குறிப்பிட்டார்: “புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்.”—நீதிமொழிகள் 14:6.
நம்பிக்கையான மனநிலையுடன் இருங்கள்
என்றாலும் சில சமயங்களில், தேறாமை, நண்பர்களை ஒருவர் தெரிவு செய்வதுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. உங்கள் நண்பர்கள் நீங்கள் வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறார்களா அல்லது அவர்கள்தாமே தேறாத கேஸுகளா? பைபிள் நீதிமொழி ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) ஆகவே உங்கள் கூட்டாளிகளை ஞானமாய்த் தெரிந்தெடுங்கள். பள்ளிப் படிப்பினிடம் ஒரு நம்பிக்கையான மனநிலை உடையவர்களுடன் தோழமை கொள்ளுங்கள். நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற உங்கள் இலக்கைப் பற்றி உங்கள் ஆசிரியரிடம் பேச தயங்காதீர்கள். நிறைய மதிப்பெண் பெறுவதில் உங்களுக்கு உதவ உங்கள் ஆசிரியரும் முயற்சி செய்வார் என்பதில் சந்தேகமில்லை.
உங்கள் திறமைகளைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்கள் உங்களைத் தொல்லைப்படுத்துகையில், அப்போஸ்தலன் பவுலின் உதாரணத்தை நினைத்துக்கொள்ளுங்கள். அவருடைய பேச்சுத் திறனைப் பற்றி மக்கள் குறைகூறுகையில், அவர் பின்வருமாறு பதிலளித்தார்: “நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல.” (2 கொரிந்தியர் 10:10; 11:6) ஆம், பவுல் தனது பலவீனமான அம்சங்களுக்குப் பதிலாக பலமான அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். உங்களிடம் இருக்கும் பலமான அம்சங்கள் யாவை? அவற்றைப் பிரித்தறிய முடியாவிடில், உங்களுக்கு உதவியாய் இருக்கும் பெரியவர் எவரிடமாவது ஏன் பேசிப்பார்க்கக் கூடாது? அப்படிப்பட்ட ஒரு நண்பர், உங்களது பலமான அம்சங்களைக் கண்டுகொண்டு அதை நல்ல விதத்தில் பயன்படுத்திக்கொள்ள உங்களுக்கு உதவலாம்.
பிரச்சினைகளின் மத்தியிலும் தேறுவது
“நீ தேறுகிறது யாவருக்கும் தெரியும்படி, இவற்றிற்கே உன் முழு கவனத்தையும் உன் முழு ஆற்றலையும் செலுத்து.” (1 தீமோத்தேயு 4:15, பிலிப்ஸ்) ஒரு தகப்பன் தன் மகனிடம் பேசுவதுபோல், ஏற்கெனவே வெற்றிநடைபோட்ட தீமோத்தேயுவை ஊழியத்தில் இன்னும் தேறும்படியாக பவுல் உற்சாகப்படுத்தினார். பைபிள் காலங்களில் “தேறுவது” என்ற கிரேக்க வினைச்சொல், “முன்னோக்கி வெட்டுதல்” என்று நேரடியாக பொருள்பட்டது; இது, ஒருவர் தனக்கு வழியை ஏற்படுத்திக்கொள்வதற்காக புதர்களின் வழியே வெட்டிக்கொண்டு முன்னே செல்வதை மனதுக்கு நினைப்பூட்டியது. சில சமயங்களில், பள்ளிப் படிப்பும் அதைப் போலவே தோன்றலாம். ஆனால், முடிவில் அதற்குத் தகுந்த பலன் கிடைக்கும் என்று நீங்கள் நினைத்தால், பள்ளிப் படிப்பு எனும் பாதை வழியே செல்லுவது இன்னும் எளிதாய் இருக்கும்.
முயற்சி, ஊக்கம், கல்வி கற்றல் ஆகிய அனைத்தும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இதை பின்வருமாறு விளக்கலாம்: இசைக் கருவி ஒன்றை இசைக்கும் எவரையாவது நினைத்துப் பாருங்கள். அவர் அதில் இன்பம் கண்டால், அதிகம் இசைக்கிறார். அதிகம் இசைத்தால், அதிக தேர்ச்சி பெறுகிறார், அடுத்தபடியாக, அது அவரது மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. நாம் அதிகமதிகமாய் கற்றுக்கொள்ளுகையில், இன்னும் அதிகம் கற்பது எளிதாகிறது. ஆகவே உங்கள் பள்ளிப் படிப்பை நினைத்து துவண்டுவிடாதீர்கள். தேவையான முயற்சி எடுங்கள்; நீங்கள் நட்சத்திரமாக திகழ உதவுபவர்களுடன் கூட்டுறவு கொள்ளுங்கள்; அத்துடன், “நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு” என பூர்வ அரசன் ஆசாவுக்கு அசரியா கூறிய அறிவுரையை நினைத்துக்கொண்டு அவ்வாறே நீங்களும் செயல்படுங்கள்.—2 நாளாகமம் 15:7.
[அடிக்குறிப்புகள்]
a கற்பதில் கோளாறு உடைய இளைஞர் இந்த விஷயத்தில் குறிப்பான சவால்களை எதிர்ப்படலாம். கூடுதலான தகவலுக்கு, விழித்தெழு! ஜூன் 22, 1996, பக்கங்கள் 11-13-ஐக் காண்க.
[பக்கம் 21-ன் படம்]
நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற உங்கள் இலக்கைப் பற்றி உங்கள் ஆசிரியரிடம் பேச தயங்காதீர்கள்
[பக்கம் 22-ன் படம்]
ஒரு பாடத்தைக் கற்பதால் சிறிதளவே நடைமுறைப் பயன் இருப்பதுபோல் தோன்றினாலும் அதில் தேர்ச்சிபெறுவது உங்களுக்கு நன்மை தரலாம்