இராயனுடையதை இராயனுக்குச் செலுத்துதல்
“யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்.”—ரோமர் 13:7.
1, 2. (அ) இயேசுவின் பிரகாரம், கிறிஸ்தவர்கள் எவ்வாறு கடவுளுக்கும் இராயனுக்கும் செய்யவேண்டிய தங்களுடைய கடமைகளைச் சமநிலைப்படுத்தவேண்டும்? (ஆ) யெகோவாவின் சாட்சிகளுடைய முதன்மையான அக்கறை என்ன?
இயேசுவின் பிரகாரம், நாம் தேவனுக்குச் செலுத்த கடமைப்பட்டிருக்கிற காரியங்களும் இராயன் அல்லது அரசாங்கத்துக்குச் செலுத்த கடமைப்பட்டிருக்கிற காரியங்களும் உண்டு. இயேசு சொன்னார்: “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்.” இந்த ஒருசில வார்த்தைகளில் இயேசு தம்முடைய சத்துருக்களைக் குழப்பமடையச்செய்து, கடவுளோடு நம்முடைய உறவிலும் அரசாங்கத்தோடு நம்முடைய செயல்தொடர்புகளிலும் நாம் கொண்டிருக்கவேண்டிய சமநிலையான நோக்கைச் சுருக்கமாக கூறிவிட்டார். அவருக்கு செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் “அவரைக்குறித்து ஆச்சரியப்பட்ட”தில் வியப்பேதுமில்லை.—மாற்கு 12:17.
2 நிச்சயமாகவே, யெகோவாவின் ஊழியர்களுடைய முதன்மையான அக்கறை தேவனுடையதை தேவனுக்குச் செலுத்துவதாகும். (சங்கீதம் 116:12-14) இருப்பினும், அவ்விதமாகச் செய்கையில், ஒருசில காரியங்களை அவர்கள் இராயனுக்குக் கொடுக்கவேண்டும் என்பதாக இயேசு சொன்னதை அவர்கள் மறந்துவிடுவது கிடையாது. பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட அவர்களுடைய மனச்சாட்சி, இராயன் கேட்பதை எந்தளவுக்கு அவர்கள் செலுத்தமுடியும் என்பதை ஜெப சிந்தையோடு அவர்கள் ஆழ்ந்துயோசிப்பதை தேவைப்படுத்துகிறது. (ரோமர் 13:7) நவீன காலங்களில், அரசாங்க அதிகாரத்துக்கு வரம்புகள் இருப்பதையும் எல்லா இடங்களிலுமுள்ள மக்களும் அரசாங்கங்களும் இயற்கை சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதையும் அநேக சட்ட நிபுணர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள்.
3, 4. இயற்கை சட்டம், வெளிப்படுத்தப்பட்ட சட்டம், மனித சட்டம் ஆகியவற்றைப் பற்றி என்ன அக்கறையூட்டும் குறிப்புகள் சொல்லப்பட்டிருக்கின்றன?
3 அப்போஸ்தலன் பவுல் உலக மக்களைக் குறித்து எழுதுகையில் இந்த இயற்கை சட்டத்தைப் பற்றி குறிப்பிட்டார்: “தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.” அதற்கு அவர்கள் பிரதிபலிப்பார்களேயானால், இயற்கை சட்டம் இந்த அவிசுவாசிகளின் மனச்சாட்சிகளையும்கூட தூண்டுவிப்பதாக இருக்கும். இதன் காரணமாகவே பவுல் மேலுமாக இவ்வாறு சொன்னார்: “நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், . . . நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.”—ரோமர் 1:19, 20; 2:14, 15.
4 பதினெட்டாவது நூற்றாண்டில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல சட்ட நிபுணர் வில்லியம் ப்ளாக்ஸ்டோன் இவ்வாறு எழுதினார்: “மனிதவர்க்கம் தோன்றிய [அதே காலப்பகுதியில்] தோன்றியதும் கடவுளாலே ஏற்படுத்தப்பட்டதுமான இந்த இயற்கை சட்டம் [சுபாவமான சட்டம்] வேறு எதைக் காட்டிலும் கடமை உணர்ச்சியில் நிச்சயமாகவே மிக மேலானதாகும். அது உலகம் முழுவதிலும், எல்லா தேசங்களிலும், எல்லா சமயங்களிலும் கட்டுப்படுத்துவதாய் உள்ளது: இதற்கு எதிர்மாறாக இருக்கும்பட்சத்தில் எந்த மனித சட்டமும் செல்லுபடி ஆவதாக இல்லை.” பைபிளில் காணப்படுகிறபடி, ‘வெளிப்படுத்தப்பட்ட சட்டத்தைக்’ குறித்து பேசுகிறவராய் ப்ளாக்ஸ்டோன் தொடர்ந்து சொன்னதாவது: “இயற்கை சட்டம் மற்றும் வெளிப்படுத்தப்பட்ட சட்டம் ஆகிய இந்த இரண்டு அஸ்திவாரத்தையே எல்லா மனித சட்டங்களும் சார்ந்திருக்கின்றன; அதாவது, எந்த மனித சட்டமும் இவற்றுக்கு முரண்பட அனுமதிக்கப்படக்கூடாது.” இது மாற்கு 12:17-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, கடவுளையும் இராயனையும் பற்றி இயேசு சொன்னவற்றிற்கு இசைவாக இருக்கிறது. இராயன் ஒரு கிறிஸ்தவனிடம் தேவைப்படுத்துபவற்றை கடவுள் கட்டுப்படுத்தக்கூடிய ஒருசில காரியங்கள் இருக்கின்றன. இயேசுவை குறித்து பிரசங்கிப்பதை நிறுத்திவிடும்படியாக அப்போஸ்தலர்களுக்கு கட்டளையிட்டபோது ஆலோசனைச் சங்கம் அப்படிப்பட்ட ஒரு பகுதியின் எல்லையைத்தான் தாண்டிற்று. ஆகவே, அப்போஸ்தலர்கள் சரியாகவே இவ்வாறு பதிலளித்தார்கள்: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் [“அரசராக,” NW] தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.”—அப்போஸ்தலர் 5:28, 29.
‘தேவனுடையவை’
5, 6. (அ) 1914-ல் ராஜ்ய பிறப்பை முன்னிட்டுப் பார்க்கையில் கிறிஸ்தவர்கள் எதை மிக கவனமாக மனதில் கொண்டிருக்க வேண்டும்? (ஆ) ஒரு கிறிஸ்தவர் தான் ஒரு ஊழியராக இருப்பதற்கு எவ்வாறு அத்தாட்சியைக் கொடுக்கிறார்?
5 விசேஷமாக 1914 முதற்கொண்டு, சர்வ வல்லமையுள்ள யெகோவா தேவன் கிறிஸ்துவின் மேசியானிய ராஜ்யத்தின் மூலமாக ராஜாவாக ஆளத்தொடங்கின சமயத்திலிருந்து, கிறிஸ்தவர்கள் தேவனுடையவற்றை இராயனுக்குச் செலுத்தாமல் இருப்பதைக் குறித்து நிச்சயமாயிருக்க வேண்டியதாக இருந்தது. (வெளிப்படுத்துதல் 11:15, 17) முன்னொருபோதும் இராத வண்ணம், கடவுளுடைய சட்டம் இப்பொழுது கிறிஸ்தவர்களை ‘உலகத்தின் பாகமாக இல்லாதிருக்கும்படியாக’ கேட்கிறது. (யோவான் 17:16) தங்களுக்கு உயிரைக் கொடுத்தவராகிய கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தவர்களாக இருக்கும் காரணத்தால், அவர்கள் இனிமேலும் தங்களுக்கு உரியவர்கள் அல்ல என்பதை தெளிவாக அவர்கள் காண்பிக்கவேண்டும். (சங்கீதம் 100:2, 3) பவுல் எழுதியபடியே, “நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.” (ரோமர் 14:8) மேலுமாக, ஒரு கிறிஸ்தவர் முழுக்காட்டுதல் பெறும்போது, அவர் கடவுளின் ஊழியராக நியமனம் பெறுகிறார், ஆகவே அவர் பவுலைப் போல பின்வருமாறு சொல்லமுடியும்: “தேவன் . . . எங்களை ஊழியர்களாக இருக்க உண்மையாகவே போதிய அளவு தகுதிபெறச் செய்திருக்கிறார்.”—2 கொரிந்தியர் 3:5, 6, NW.
6 “என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்,” என்றும்கூட அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: (ரோமர் 11:14) நிச்சயமாகவே நாமும் அவ்வாறே செய்யவேண்டும். நாம் ஊழியத்தில் முழுநேரமாக பங்குகொண்டாலும் சரி அல்லது பகுதி நேரமாக பங்குகொண்டாலும்சரி, யெகோவா தாமே நம்முடைய ஊழியத்துக்கு நம்மை நியமித்திருக்கிறார் என்பதை மனதில் கொள்ளவேண்டும். (2 கொரிந்தியர் 2:17) நம்முடைய நிலையை சிலர் ஆட்சேபிக்கக்கூடுமாதலால், ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவரும் தான் உண்மையில் நற்செய்தியின் ஊழியராக இருப்பதைக் குறித்து தெளிவான நம்பிக்கையான நிரூபணத்தை அளிக்க தயாராக இருக்கவேண்டும். (1 பேதுரு 3:15) அவருடைய ஊழியத்துக்கு அவருடைய நடத்தையும்கூட அத்தாட்சியைக் கொடுக்க வேண்டும். கடவுளுடைய ஒரு ஊழியராக, கிறிஸ்தவர் ஒருவர் சுத்தமான ஒழுக்கத்தை சிபாரிசு செய்து அதைக் கடைப்பிடிக்கிறவராக, குடும்ப ஐக்கியத்தைக் காத்துக்கொள்கிறவராக, நேர்மையானவராக, சட்டம் ஒழுங்கிற்கு மரியாதை காண்பிக்கிறவராக இருக்கவேண்டும். (ரோமர் 12:17, 18; 1 தெசலோனிக்கேயர் 5:15) ஒரு கிறிஸ்தவனுக்கு கடவுளோடு தன்னுடைய உறவும் கடவுளால் நியமிக்கப்பட்டுள்ள தன்னுடைய ஊழியமுமே வாழ்க்கையில் அதிமுக்கியமான காரியங்களாகும். இராயனுடைய கட்டளைக்காக இவற்றை அவர் விட்டுவிட முடியாது. அவை ‘தேவனுடையவை’யாக கருதப்படவேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது.
‘இராயனுடையவை’
7. வரிசெலுத்துவதன் சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகள் என்ன பெயர் பெற்றிருக்கின்றனர்?
7 யெகோவாவின் சாட்சிகள் அரசாங்க ஆட்சியாளர்களான “மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படிய” கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று அறிந்திருக்கின்றனர். (ரோமர் 13:1) ஆகவே, இராயன், அரசாங்கம், நியாயமான கோரிக்கைகளை செய்யும்போது, பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட அவர்களுடைய மனச்சாட்சி இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்களை அனுமதிக்கும். உதாரணமாக, உண்மைக் கிறிஸ்தவர்கள் வரிசெலுத்துவதில் உலகத்திலேயே மிகச் சிறந்த முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். ஜெர்மனியில் ம்யென்க்னர் மெர்க்கூர் என்ற செய்தித்தாள் யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி இவ்வாறு சொன்னது: “பெடரல் ரிப்பப்ளிக்கில் அவர்கள்தானே மிக நேர்மையாகவும் காலந்தவறாமலும் வரிசெலுத்துபவர்கள்.” இத்தாலியில் லா ஸ்டாம்ப்பா செய்தித்தாள் இவ்வாறு குறிப்பிட்டது: “அவர்கள் [யெகோவாவின் சாட்சிகள்] எவரும் விரும்பக்கூடிய அதிக உண்மைப்பற்றுறுதியுள்ள குடிமக்கள்: அவர்கள் வரிகளை செலுத்தாமல் ஏமாற்றுவதில்லை அல்லது தங்களுடைய சொந்த லாபத்துக்காக அசெளகரியமான சட்டங்களை ஏய்த்துவிடுவதுமில்லை.” யெகோவாவின் ஊழியர்கள் ‘தங்கள் மனச்சாட்சியினிமித்தம்’ இதைச் செய்கிறார்கள்.—ரோமர் 13:5, 6.
8. இராயனுக்குச் செலுத்தவேண்டியவை பணமாக செலுத்தப்படும் வரிகளுக்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றனவா?
8 ‘இராயனுடையவை’ வரிசெலுத்துவதற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதா? இல்லை. பவுல், பயம் மற்றும் கனம் போன்ற மற்ற காரியங்களையும் பட்டியலிடுகிறார். க்ரிட்டிக்கல் அண்ட் எக்ஸிஜெட்டிக்கல் ஹான்ட் புக் டு தி காஸ்பல் ஆஃப் மாத்யூ-ல் ஜெர்மன் கல்விமான் ஹைன்ரிக் மேயர் எழுதினார்: “[இராயனுடையவை] என்பது . . . உள்நாட்டு வரி மட்டுமே என்பதாக நாம் புரிந்துகொள்ளக்கூடாது, ஆனால் சட்டப்படி அவனுடைய ஆட்சியின் காரணமாக அவன் பெற்றுக்கொள்ள உரிமைபெற்றிருக்கும் எல்லாமாக அது இருக்கிறது.” சரித்திராசிரியர் இ. டபிள்யூ. பார்ன்ஸ், கிறிஸ்தவத்தின் எழுச்சி என்ற தன்னுடைய புத்தகத்தில், ஒரு கிறிஸ்தவன் வரிசெலுத்தவேண்டியிருந்தால் அதை செலுத்துவான், “அதேவிதமாக தேவனுடையவற்றை இராயனுக்குச் செலுத்தும்படியாக கேட்கப்பட்டாலொழிய அவன் அரசாங்கத்திற்கு செய்யவேண்டிய மற்ற எல்லா கடமைகளையும் ஏற்றுக்கொள்ளுவான்,” என்பதாக குறிப்பிட்டார்.
9, 10. இராயனுக்குரியதைச் செலுத்துவதைக் குறித்து ஒரு கிறிஸ்தவனுக்கு என்ன தயக்கமிருக்கலாம், ஆனால் என்ன உண்மைகள் மனதில் வைக்கப்பட வேண்டும்?
9 சரியாகவே தேவனுக்கு உரியதாக இருக்கும் காரியங்களின்மீது அத்துமீறி வராமல் அரசாங்கள் என்ன காரியங்களைக் கேட்கக்கூடும்? சிலர் தாங்கள் இராயனுக்கு பணத்தின் வடிவில் சட்டப்படி வரிசெலுத்தலாமே தவிர வேறு எதையும் செலுத்தமுடியாது என்பதாக உணர்ந்திருக்கின்றனர். தேவராஜ்ய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் நேரத்தை எடுத்துக்கொள்ளுகிற எதையும் இராயனுக்குக் கொடுப்பதில் அவர்கள் நிச்சயமாகவே செளகரியமாக உணரமாட்டார்கள். இருப்பினும், நாம் ‘யெகோவாவை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்புகூர வேண்டும்’ என்பது உண்மையாக இருக்கையில், நம்முடைய பரிசுத்த சேவையைத் தவிர மற்ற காரியங்களில் நேரத்தை நாம் செலவிடுவதை யெகோவா எதிர்பார்க்கிறார். (மாற்கு 12:30, NW; பிலிப்பியர் 3:3) உதாரணமாக, திருமணமான ஒரு கிறிஸ்தவர் அவருடைய அல்லது அவளுடைய துணையைப் பிரியப்படுத்துவதற்கு நேரத்தை ஒதுக்கிவைக்கும்படியாக அறிவுரை சொல்லப்படுகிறார். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தவறானவை அல்ல, ஆனால் அவை “கர்த்தருக்குரியவைகள்” அல்ல “உலகத்திற்குரியவைகள்” என்பதாக அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார்.—1 கொரிந்தியர் 7:32-34; ஒப்பிடுக: 1 தீமோத்தேயு 5:8.
10 மேலுமாக, வரிகளைச் ‘செலுத்தும்படியாக’ கிறிஸ்து தம்மைப் பின்பற்றுவோருக்கு அதிகாரமளித்தார், இது யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் நேரத்தை பயன்படுத்துவதை நிச்சயமாகவே உட்படுத்துகிறது—ஏனென்றால் நம்முடைய முழு வாழ்க்கையுமே கடவுளுக்கு இவ்விதத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு தேசத்தின் சராசரி வரி, வருமானத்தில் 33 சதவீதமாக இருந்தால் (சில தேசங்களில் அது அதிகமாக உள்ளது), ஒவ்வொரு ஆண்டும் ஒரு சராசரி வேலையாள் அரசாங்க கஜானாவுக்கு நான்கு மாத சம்பாத்தியத்தை செலுத்திவிடுகிறார் என்று அர்த்தமாகிறது. வேறு விதமாகச் சொன்னால், அவர் வேலைசெய்யும் காலம் முடிவுக்கு வரும்போது, சராசரி வேலையாள் ‘இராயன்’ தேவைப்படுத்தும் வரிப்பணத்தை சம்பாதிப்பதில் சுமார் 15 ஆண்டுகளைச் செலவழித்திருப்பார். பள்ளிப்படிப்பு விஷயத்தையும்கூட சிந்தித்துப்பாருங்கள். பெரும்பாலான தேசங்களில், பெற்றோர் குறைந்தபட்ச ஆண்டுகள் தங்களுடைய பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்பதை சட்டம் தேவைப்படுத்துகிறது. பள்ளி படிப்புக்குரிய ஆண்டுகளின் எண்ணிக்கை தேசத்துக்கு தேசம் வித்தியாசப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் அது கணிசமான நீண்ட ஒரு காலமாக இருக்கிறது. உண்மைதான், இப்படிப்பட்ட பள்ளிப் படிப்பு பொதுவாக பிரயோஜனமுள்ளதாகவே இருக்கிறது, ஆனால் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் எந்தப் பகுதி இவ்விதமாக செலவிடப்படவேண்டும் என்று தீர்மானிப்பது இராயனே, கிறிஸ்தவ பெற்றோர் இராயனுடைய தீர்மானத்தை ஒத்துக்கொள்கின்றனர்.
கட்டாய இராணுவச் சேவை
11, 12. (அ) அநேக தேசங்களில் இராயனுடைய கோரிக்கை என்னவாக இருக்கிறது? (ஆ) பண்டைய கிறிஸ்தவர்கள் இராணுவச் சேவையை எவ்வாறு கருதினர்?
11 ஒருசில தேசங்களில் இராயனுடைய மற்றொரு கோரிக்கை கட்டாய இராணுவச் சேவையாகும். 20-ம் நூற்றாண்டில், பெரும்பாலான தேசங்களில் போர் காலங்களிலும் சில தேசங்களில் அமைதியான காலத்திலும்கூட இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பிரான்ஸில் இந்தக் கடமை அநேக வருடங்களாக இரத்தவரி என்பதாக அழைக்கப்பட்டது, ஒவ்வொரு இளைஞனும் தன்னுடைய உயிரை அரசாங்கத்துக்காக தியாகம்செய்ய மனமுள்ளவனாக இருக்கவேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. இது யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பவர்கள் மனச்சாட்சிப்பூர்வமாக செய்யக்கூடிய ஒன்றா? முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்தை எவ்வாறு கருதினர்?
12 பண்டைய கிறிஸ்தவர்கள் நல்ல குடிமக்களாக இருக்க முயற்சிக்கையில், மற்றொருவரின் உயிரை அழிப்பதை அல்லது அரசாங்கத்துக்காக தங்களுடைய சொந்த உயிரை தியாகம் செய்வதை அவர்களுடைய விசுவாசம் தடைசெய்தது. தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் சொல்கிறது: “கிறிஸ்தவர்கள் மனித உயிரை அழிப்பதிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர், இதே நியமம்தான் ரோம படையில் பங்குகொள்வதைத் தடைசெய்தது என்பதை டெர்ட்டுல்லியன் மற்றும் ஆரிஜென் உட்பட பூர்வ சர்ச் தந்தைமார் உறுதிசெய்தனர்.” பூர்வ சர்ச் மற்றும் உலகம் என்ற ஆங்கில புத்தகத்தில், பேராசிரியர் சி. ஜே. காடூ எழுதுகிறார்: “மார்கஸ் ஆரிலியஸின் ஆட்சிவரையாவது [பொ.ச. 161-180], முழுக்காட்டுதலுக்குப் பின்பு எந்த ஒரு கிறிஸ்தவனும் போர்ச்சேவகனாக மாட்டான்.”
13. கிறிஸ்தவமண்டலத்திலுள்ள பெரும்பாலானவர்கள் ஏன் பூர்வ கிறிஸ்தவர்கள் செய்ததுபோல இராணுவ சேவையை நோக்குவதில்லை?
13 இன்று கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் உறுப்பினர்கள் ஏன் காரியங்களை இவ்விதமாக நோக்குவதில்லை? நான்காவது நூற்றாண்டில் நிகழ்ந்த அடிப்படையான ஒரு மாற்றத்தின் காரணமாகவே. எ ஹிஸ்டரி ஆஃப் தி கிறிஸ்டியன் கவுன்சில்ஸ் என்ற கத்தோலிக்க பிரசுரம் விளக்குகிறது: “புறமத பேரரசர்களின்கீழ் அநேக கிறிஸ்தவர்கள் . . . இராணுவச் சேவையின் சம்பந்தமாக மத சம்பந்தமான மனவுறுத்தல்களைக் கொண்டிருந்தனர், போர் ஆயுதங்களை எடுக்க உறுதியாக மறுத்தனர் அல்லது புறக்கணித்துவிட்டனர். [பொ.ச. 314-ல் நடந்த ஆர்லஸ்] பேரவை கான்ஸ்டன்டைனால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களை சிந்திக்கையில், அது கிறிஸ்தவர்கள் போரில் சேவை செய்ய வேண்டும் என்ற கடமையை அறிவித்தது, . . . இது ஏனென்றால் கிறிஸ்தவர்களை ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரு பிரபுவின்கீழ் சர்ச் அரசாங்கத்தோடு சமாதானமாய் (இன் பேஸ்) இருக்கிறது.” அந்தச் சமயத்திலிருந்து இப்பொழுது வரையாக இயேசுவின் போதகங்களை இவ்வாறு புறக்கணித்துவிட்டிருப்பதன் விளைவாக, கிறிஸ்தவமண்டலத்தின் குருமார் தங்கள் மந்தையிலுள்ளவர்களை தேசங்களின் படைகளில் சேவிக்கும்படியாக உற்சாகப்படுத்தியிருக்கின்றனர்; ஒருசில ஆட்கள் மனச்சாட்சி இடங்கொடுக்காததால் அதை ஆட்சேபிக்கும் நிலையை ஏற்றிருந்தபோதிலும் இது இவ்வாறு இருந்தது.
14, 15. (அ) சில இடங்களிலுள்ள கிறிஸ்தவர்கள் எந்த அடிப்படையில் இராணுவ சேவையிலிருந்து விதிவிலக்களிக்கப்பட கோரியிருக்கின்றனர்? (ஆ) விதிவிலக்கு கிடைக்கப்பெறாத இடங்களில் இராணுவ சேவையின் விஷயத்தில் சரியான ஒரு தீர்மானத்தை எடுக்க ஒரு கிறிஸ்தவனுக்கு எந்த வேதப்பூர்வமான நியமங்கள் உதவிசெய்யும்?
14 இந்த விஷயத்தில் இன்று பெரும்பான்மையரை பின்பற்றுவதற்கு கிறிஸ்தவர்கள் கடமைப்பட்டிருக்கின்றனரா? இல்லை. மத ஊழியர்களுக்கு இராணுவ சேவையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் ஒரு தேசத்தில் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட ஒரு கிறிஸ்தவர் வாழ்ந்துவந்தால், அவர் இந்த ஏற்பாட்டை பயன்படுத்திக் கொள்ளலாம், ஏனென்றால் அவர் உண்மையில் ஒரு ஊழியராக இருக்கிறார். (2 தீமோத்தேயு 4:5) ஐக்கிய மாகாணங்கள் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல தேசங்கள் போர் காலத்திலும்கூட இப்படிப்பட்ட விதிவிலக்கை அளித்திருக்கின்றன. அமைதியான காலத்தின்போது, கட்டாய இராணுவ சேவையைக் காத்துவரும் அநேக தேசங்களில் மத ஊழியர்கள் என்பதற்காக யெகோவாவின் சாட்சிகள் விதிவிலக்களிக்கப்பட்டிருக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் தங்களுடைய பொது சேவையின் மூலமாக தொடர்ந்து மக்களுக்கு உதவிசெய்துவரலாம்.
15 ஆனால் மத ஊழியர்களுக்கு விதிவிலக்களிக்கப்படாத ஒரு தேசத்தில் கிறிஸ்தவர் ஒருவர் வாழ்ந்து வருவாரேயானால் அப்பொழுது என்ன? அப்பொழுது அவர் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தன்னுடைய மனச்சாட்சியைப் பின்பற்றி தனிப்பட்ட தீர்மானத்தைச் செய்யவேண்டும். (கலாத்தியர் 6:5) இராயனின் அதிகாரத்தைக் கருத்தில்கொள்ளுகிறபோதிலும், அவர் தான் யெகோவாவுக்கு செலுத்த கடமைப்பட்டிருப்பவற்றை கவனமாக சீர்தூக்கிப் பார்ப்பார். (சங்கீதம் 36:9; 116:12-14; அப்போஸ்தலர் 17:28) ஒரு உண்மைக் கிறிஸ்தவரின் அடையாளம், அவருடைய உடன்விசுவாசிகள் மற்ற தேசங்களில் வாழ்பவர்களாக இருந்தாலும்கூட அல்லது மற்ற இனங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்கூட அவர்கள் அனைவரிடமும் அன்புசெலுத்துவதே என்பதை கிறிஸ்தவர் நினைவில் வைப்பார். (யோவான் 13:34, 35; 1 பேதுரு 2:17) மேலுமாக, அவர் ஏசாயா 2:2-4; மத்தேயு 26:52; ரோமர் 12:18; 14:19; 2 கொரிந்தியர் 10:4 மற்றும் எபிரெயர் 12:14 போன்ற வேதவசனங்களிலுள்ள வேதப்பூர்வமான நியமங்களையும்கூட மறந்துவிட மாட்டார்.
இராணுவம் சாராத சேவை
16. சில தேசங்களில் இராணுவ சேவையை ஏற்றுக்கொள்ளாதவர்களிடமிருந்து இராணுவம் சாராத என்ன சேவையை இராயன் வற்புறுத்துகிறான்?
16 என்றபோதிலும், மத ஊழியர்களுக்கு விதிவிலக்களிப்பதை அனுமதிக்காவிட்டாலும் ஒருசில ஆட்கள் இராணுவ சேவையை ஆட்சேபிக்கக்கூடும் என்பதை ஒப்புக்கொள்ளும் அரசாங்கத்தை உடைய தேசங்கள் இருக்கின்றன. மனச்சாட்சி இடமளிக்காத இப்படிப்பட்ட ஆட்களை இராணுவ சேவையினுள் கட்டாயப்படுத்தி புகுத்தாதிருப்பதற்கு இவற்றில் அநேக தேசங்கள் ஏற்பாடு செய்கின்றன. ஒருசில இடங்களில் சமுதாயத்தில் பயனுள்ள ஒரு வேலை போன்று தேவைப்படுத்தப்படும் இராணுவம் சாராத சேவை, இராணுவம் சாராத தேசிய சேவையாக கருதப்படுகிறது. ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவர் இப்படிப்பட்ட சேவையை ஏற்றுக்கொள்ள முடியுமா? மறுபடியுமாக, இங்கே ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட ஒரு கிறிஸ்தவர் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனச்சாட்சியின் அடிப்படையில் தன்னுடைய சொந்த தீர்மானத்தை செய்யவேண்டும்.
17. இராணுவம் சாராத சேவைக்கு பைபிளில் உதாரணம் இருக்கிறதா?
17 பைபிள் காலங்களில் கட்டாய சேவை பழக்கத்திலிருந்ததாக தெரிகிறது. சரித்திர புத்தகம் ஒன்று இவ்வாறு சொல்கிறது: “யூதேயாவின் குடிமக்களிடமிருந்து வற்புறுத்தி வாங்கப்பட்ட வரிகளோடும் தீர்வைகளோடும்கூட, கூலியில்லா வேலை ஏற்பாடும்கூட [பொது நலத்துறை அதிகாரிகள் வரிகளுக்குப் பதிலாக வற்புறுத்தி பெற்றுக்கொண்ட உடலுழைப்பு (corvee)] அங்கிருந்தது. இது கிழக்கில் ஒரு பண்டைய ஏற்பாடாக இருந்தது, இதை கிரேக்க மற்றும் ரோம அதிகாரிகள் தொடர்ந்து ஆதரித்துவந்தனர். . . . புதிய ஏற்பாடும்கூட யூதேயாவில் கூலியில்லா வேலையின் உதாரணங்களை குறிப்பிட்டு அது எவ்வளவு பரவலாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. இந்தப் பழக்கத்துக்கு இசைவாக, போர்ச் சேவகர்கள் இயேசுவின் சிலுவையை [வாதனையின் கழுமரத்தை] சுமந்துவரும்படியாக சிரேனே ஊரானாகிய சீமோனை பலவந்தப்படுத்தினார்கள் (மத்தேயு 5:41; 27:32; மாற்கு 15:21; லூக்கா 23:26).”
18. இராணுவம் சாராத, மதம் சாராத என்ன வகையான சமூக சேவையில் அடிக்கடி யெகோவாவின் சாட்சிகள் ஒத்துழைக்கின்றனர்?
18 அதேவிதமாகவே இன்று ஒருசில தேசங்களிலுள்ள குடிமக்கள் பல்வேறு வகையான சமூக சேவையில் பங்குகொள்ளும்படியாக அரசாங்க அல்லது உள்ளூர் அதிகாரிகளால் கேட்கப்படுகிறார்கள். சில சமயங்களில் இது கிணறுகளைத் தோண்டுவது அல்லது சாலைகளை அமைப்பது போன்ற குறிப்பிட்ட ஒரு வேலையாக இருக்கிறது; சில சமயங்களில் அது சாலைகளை, பள்ளிகளை அல்லது மருத்துவமனைகளைப் பராமரிப்பதில் வாரந்தோறும் பங்குகொள்வது போன்று ஒழுங்கான அடிப்படையில் செய்யப்படுவதாக இருக்கிறது. இராணுவம் சாராத இப்படிப்பட்ட சேவை சமுதாயத்தின் நன்மைக்காக இருந்து பொய் மதத்தோடு சம்பந்தப்படாததாக அல்லது யெகோவாவின் சாட்சிகளுடைய மனச்சாட்சிக்கு ஆட்சேபணைக்குரியதாக இல்லாதபோது பெரும்பாலும் அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. (1 பேதுரு 2:13-15) இது பொதுவாக மிகச் சிறந்த ஒரு சாட்சிகொடுக்கப்படுவதில் விளைவடைந்திருக்கிறது, சாட்சிகள் அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் என்பதாக பொய்யாக குற்றஞ்சாட்டுபவர்களை இது சில சமயங்களில் வாய் அடைக்கச் செய்திருக்கிறது.—மத்தேயு 10:18-ஐ ஒப்பிடுக.
19. ஒரு காலப்பகுதிக்கு கிறிஸ்தவர் ஒருவரை இராணுவம் சாராத தேசிய சேவையை செய்யும்படியாக இராயன் கேட்கும்போது, அவர் காரியத்தை எவ்வாறு அணுகவேண்டும்?
19 ஆனால் இராணுவம் சாராத ஒரு நிர்வாகத்தின் கீழ் செயல்படும் தேசிய சேவையின் ஒரு பாகமாக இருக்கும் இராணுவம் சாராத சேவையை ஒரு காலப்பகுதிக்கு செய்யும் படியாக ஒரு கிறிஸ்தவரை அரசாங்கம் தேவைப்படுத்தினால் அப்பொழுது என்ன? மறுபடியுமாக இங்கு, பயிற்றுவிக்கப்பட்ட மனச்சாட்சியின் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய சொந்த தீர்மானத்தைச் செய்யவேண்டும். “நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.” (ரோமர் 14:10) இராயனுடைய வேண்டுகோளை கிறிஸ்தவர்கள் எதிர்ப்படுகிறபோது, அதை ஜெபசிந்தையோடு ஆராய்ந்து அதைக்குறித்து தியானிக்க வேண்டும்?a சபையிலுள்ள முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களோடு இந்த விஷயத்தைக் குறித்து பேசுவதுகூட ஞானமுள்ளதாக இருக்கும். இதற்குப் பின்பு தனிப்பட்ட ஒரு தீர்மானம் செய்யப்பட வேண்டும்.—நீதிமொழிகள் 2:1-5; பிலிப்பியர் 4:5, NW.
20. இராணுவம் சாராத சேவையின் விஷயத்தை பரிசீலனை செய்ய என்ன கேள்விகளும் வேதப்பூர்வமான நியமங்களும் ஒரு கிறிஸ்தவருக்கு உதவிசெய்யும்?
20 இப்படிப்பட்ட ஒரு ஆய்வைச் செய்கையில் கிறிஸ்தவர்கள் பல்வேறு பைபிள் நியமங்களைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாம் “துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து . . . சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிரு[ந்து] . . . பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும்,” வேண்டும் என்று பவுல் சொன்னார். (தீத்து 3:1, 2) அதே சமயத்தில் கிறிஸ்தவர்கள் கேட்கப்படும் இராணுவம் சாராத சேவையை பரிசீலித்துப் பார்ப்பது நல்லதாயிருக்கும். அவர்கள் அதை ஏற்றுக்கொண்டால், அவர்களால் கிறிஸ்தவ நடுநிலைமையக் காத்துக்கொள்ள முடியுமா? (மீகா 4:3, 5; யோவான் 17:16) இது ஏதேனும் பொய்மதத்துடன் அவர்களை ஒருவேளை உட்படுத்துமா? (வெளிப்படுத்துதல் 18:4, 20, 21) அதைச் செய்வது தங்களுடைய கிறிஸ்தவ பொறுப்புகளை நிறைவேற்றுவதிலிருந்து அவர்களைத் தடைசெய்யுமா அல்லது நியாயமற்ற விதமாக அவர்களைக் கட்டுப்படுத்துமா? (மத்தேயு 24:14; எபிரெயர் 10:24, 25) மறுபட்சத்தில், அவர்கள் தொடர்ந்து ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் செய்து, ஒருவேளை தேவைப்படும் சேவையை செய்துகொண்டே முழுநேர ஊழியத்திலும்கூட பங்குகொள்ளமுடியுமா?—எபிரெயர் 6:11, 12.
21. ஒரு சகோதரருடைய தீர்மானம் என்னவாக இருந்தாலும், இராணுவம் சாராத சேவையின் விஷயத்தைக் கையாளும் அவரை சபை எவ்விதமாக நோக்கவேண்டும்?
21 இப்படிப்பட்ட கேள்விகளுக்கு ஒரு கிறிஸ்தவரின் நேர்மையான பதில்கள், தேசிய இராணுவம் சாராத சேவை அதிகாரிகளுக்கு கீழ்ப்படிகிறவர்களாக தான் செய்யக்கூடிய “நல்ல வேலை”யாக இருக்கிறது என்ற முடிவுக்கு அவரை வழிநடத்தினால் அப்போது என்ன? அது யெகோவாவுக்கு முன்பாக அவருடைய தீர்மானமாக இருக்கிறது. நியமிக்கப்பட்ட மூப்பர்களும் மற்றவர்களும் அந்தச் சகோதரரின் மனச்சாட்சியை முழுமையாக மதித்து, நல்ல நிலைநிற்கையிலுள்ள ஒரு கிறிஸ்தவராக அவரை தொடர்ந்து கருதவேண்டும். இருப்பினும், இராணுவம் சாராத இந்த சேவையை தான் செய்யமுடியாது என்பதாக ஒரு கிறிஸ்தவர் உணருவாரேயானால், அவருடைய நிலைநிற்கையும்கூட மதிக்கப்பட வேண்டும். அவரும்கூட நல்ல நிலைநிற்கையில் இருக்கிறார், அவரும் அன்புள்ள ஆதரவை பெறவேண்டும்.—1 கொரிந்தியர் 10:29; 2 கொரிந்தியர் 1:24; 1 பேதுரு 3:16.
22. என்ன நிலைமை நம்மை எதிர்ப்பட்டாலும், நாம் தொடர்ந்து என்ன செய்வோம்?
22 கிறிஸ்தவர்களாக நாம் “எவனை கனம் பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணு”வதை நிறுத்திவிட மாட்டோம். (ரோமர் 13:7) நாம் நல்ல ஒழுங்கை மதித்து, சமாதானமுள்ள, சட்டத்துக்கு கீழ்ப்படிகிற குடிமக்களாக இருக்க நாடுவோம். (சங்கீதம் 34:14) ‘ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்கும்,’ நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையையும் வேலையையும் பாதிக்கும் தீர்மானங்களைச் செய்ய வேண்டியிருக்கும்போது அவர்களுக்காகவும்கூட நாம் ஜெபிக்கலாம். நாம் இராயனுடையதை இராயனுக்குச் செலுத்துவதன் விளைவாக, “நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்”ண முடியும் என்று நம்பியிருக்கிறோம். (1 தீமோத்தேயு 2:1, 2) எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கையாக ராஜ்யத்தின் நற்செய்தியை நாம் தொடர்ந்து பிரசங்கித்துக்கொண்டு தேவனுடையதைத் தேவனுக்கு மனச்சாட்சிப்பூர்வமாக செலுத்துவோம்.
[அடிக்குறிப்பு]
a மே 15, 1964, காவற்கோபுரம் (ஆங்கிலம்) பக்கம் 308, பாரா 21-ஐப் பார்க்கவும்.
உங்களால் விளக்கமுடியுமா?
◻ இராயனோடும் யெகோவாவோடும் தன்னுடைய உறவுகளை சமநிலைப்படுத்துகையில், ஒரு கிறிஸ்தவனின் முதல் அக்கறை என்ன?
◻ இராயனுக்கு ஒருபோதும் கொடுக்கமுடியாத எதை நாம் யெகோவாவுக்கு செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்?
◻ நாம் சரியாகவே இராயனுக்குச் செலுத்தும் சில காரியங்கள் யாவை?
◻ கட்டாய இராணுவ சேவையின் விஷயத்தில் சரியான தீர்மானத்தைச் செய்ய என்ன வேதவசனங்கள் நமக்கு உதவிசெய்கின்றன?
◻ இராணுவம் சாராத தேசிய சேவைக்காக நாம் அழைக்கப்படுகையில் மனதில் வைக்கவேண்டிய ஒருசில காரியங்கள் யாவை?
◻ யெகோவா மற்றும் இராயனின் சம்பந்தமாக, நாம் தொடர்ந்து என்ன செய்துகொண்டிருக்கிறோம்?
[பக்கம் 16,17-ன் பெட்டி/படம்]
ஆலோசனை சங்கத்திடம் அப்போஸ்தலர்கள் இவ்வாறு சொன்னார்கள்: ‘மனுஷருக்குக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் அரசராக தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது’