எவ்வாறு தீங்கிழைக்கும் வீண்பேச்சை நசுக்கிப்போடலாம்
“யெகோவா, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.” —சங்கீதம் 141:3, தி.மொ.
1. கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் மூளைக்கு இருக்கும் திறமை என்ன?
யெகோவா நமக்கு ஒரு மூளையைத் தந்தார், அது எவ்வளவு அதிசயமான ஒன்று! வியக்கத்தக்க இயந்திரம் (The Incredible Machine) என்ற புத்தகம் இப்படியாகக் கூறுகிறது: “நாம் கற்பனைசெய்து பார்க்கக்கூடிய மிக உயர்ந்த ரக கம்ப்யூட்டர்களுங்கூட வரம்பற்ற சிக்கலான அமைப்புடையதும் பல்திறம் படைத்ததுமான மனித மூளைக்கு ஒப்பிடுகையில் பக்குவமடையாதவையே . . . எந்த ஒரு சமயத்திலும் உங்களுடைய மூளைக்குச் செல்லும் லட்சக்கணக்கான செய்திக் குறிகள் தகவல்களை அசாதாரணமான அளவில் தாங்கிச் செல்கின்றன. அவை உங்களுடைய உடலின் உள் மற்றும் வெளிச் சூழலைக் குறித்த செய்திகளைக் கொண்டுவருகின்றன . . . மற்ற செய்திக் குறிகள் தகவல்களைச் சேகரித்து ஆய்ந்திடுகையில், அவை ஒரு தீர்மானத்திற்கு வழிநடத்தும் குறிப்பிட்ட சில உணர்ச்சிகளையும், நினைவுகளையும், எண்ணங்களையும், அல்லது திட்டங்களையும் உண்டாக்குகின்றன. அநேகமாய் உடனடியாகவே, உங்கள் மூளையிலிருந்து வரும் செய்திக் குறிகள் என்ன செய்ய வேண்டுமென்று உங்கள் உடலின் மற்ற பாகங்களுக்குத் தெரிவிக்கின்றன . . . அதற்கிடையில் உங்கள் உணர்வுக்கும் புறம்பான உங்கள் சுவாசிப்பு, இரத்த ரசாயனம், வெப்பம் போன்ற முக்கியமான செயல்களையும் உங்கள் மூளை இயக்குகிறது.”—பக்கம் 326.
2. நாம் இப்பொழுது சிந்திக்கத் தகுந்த கேள்வி என்ன?
2 நிச்சயமாகவே, கடவுளிடம் இருந்து நாம் பெற்றிருக்கும் இப்படிப்பட்ட ஓர் அதிசய பரிசை ஒரு குப்பைத் தொட்டியாகவோ அல்லது ஒரு குப்பைக் கூடையாகவோ ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. என்றபோதிலும், தீங்கிழைக்கும் வீண்பேச்சுக்கு செவிகொடுத்து அதைத் தூற்றுவதன் மூலம் நாம் மூளையைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும். இப்படிப்பட்ட பேச்சை நாம் எவ்வாறு தவிர்த்து, அதில் ஈடுபடுவதிலிருந்து விலகியிருக்க மற்றவர்களுக்கும் உதவலாம்?
கடவுள் கொடுத்த உங்கள் மனதை மதித்துணருங்கள்
3. உண்மையான கிறிஸ்தவன் எவனும் ஏன் தீங்கிழைக்கும் வீண்பேச்சில் ஈடுபடமாட்டான்?
3 கடவுள் நமக்கு கொடுத்த மனதை மதித்துணருவதுதானே தீங்கிழைக்கும் வீண்பேச்சுக்குச் செவிகொடுத்து அதைத் தூற்றிடுவதிலிருந்து நம்மைத் தடை செய்யும். யெகோவாவின் ஆவி எவரையும் தன்னுடைய மனதை அப்படிப்பட்ட எண்ணங்களால் நிரப்புவதற்கோ அல்லது எவரையாவது புண்படுத்துவதற்குத் தன் நாவைப் பயன்படுத்துவதற்கோ உந்துவிக்காது. மாறாக, கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது: “துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு . . . திரும்பக்கடவன்.” (ஏசாயா 55:7) துன்மார்க்கனின் மனம் தீய எண்ணங்களால் நிரம்பியிருக்கிறது, நேர்மையுள்ளவனைப் பற்றி பழிதூற்றுவதற்கு அவன் விரைகிறான். ஆனால் கடவுள் தங்களுக்குக் கொடுத்திருக்கும் மனதைப் போற்றுகிறவர்களிடமிருந்து அப்படிப்பட்ட பேச்சை நாம் எப்பொழுதும் எதிர்பார்க்க மாட்டோம்.
4. நம்முடைய மூளையையும் பேசும் திறமையையும் நாம் போற்றுவோமானால், நம் மனதையும் நாவையும் எவ்விதம் பயன்படுத்துவோம்?
4 சரியான மதித்துணர்வு நம்முடைய பாவ மாம்சத்தின் இச்சைகளைத் திருப்திப்படுத்துவதற்கு நம்முடைய மனதையும் நாவையும் பயன்படுத்துவதிலிருந்து விலகியிருக்க நமக்கு உதவும். மாறாக, நம்முடைய சிந்தனையையும் பேச்சையும் ஓர் உயர்ந்த நிலையில் வைத்திருப்போம். நம்முடைய நினைவுகளைவிட மிக உயர்ந்த நினைவுகளையுடையவரில் ஜெபத்தோடு சார்ந்திருப்பதன் மூலம் தீங்கிழைக்கும் வீண்பேச்சை நாம் புறம்பாக்கிவிடலாம். அப்போஸ்தலனாகிய பவுல் பின்வரும் புத்திமதி கொடுத்தான்: “உண்மையுள்ளவைகளெவைகளோ [பொய்யான அல்லது பழிதூற்றுதலின் காரியமாயிருப்பவை அல்ல], ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ [அதிக கவனத்தை உட்படுத்தும் அக்கறைக்குரிய, NW], [அற்ப காரியங்கள் அல்ல], நீதியுள்ளவைகளெவைகளோ [பொல்லாத, கேடுண்டாக்குபவை அல்ல], கற்புள்ளவைகளெவைகளோ [அசுத்தமான பழிதூற்றுதல் அல்லது தீய சந்தேகங்கள் அல்ல], அன்புள்ளவைகளெவைகளோ [வெறுக்கப்படவேண்டியதும் அற்பமாக்கிடுபவை அல்ல], நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ [இழிவானவை அல்ல], புண்ணியம் எதுவோ [தீயது அல்ல], புகழ் எதுவோ [கண்டனத்துக்குரியது அல்ல] அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.”—பிலிப்பியர் 4:8.
5. பவுல் சம்பந்தமாக உடன் விசுவாசிகள் கண்டதும் கேட்டதும் என்ன?
5 பவுல் மேலும் கூட்டினான்: “நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.” (பிலிப்பியர் 4:9) பவுல் சம்பந்தமாக மற்றவர்கள் கண்டதும் கேட்டதும் என்ன? கற்புள்ளதும் ஆவிக்குரிய பிரகாரமாய் கட்டியெழுப்பக்கூடியதுமான காரியங்கள். லீதியாளைப் பற்றியோ அல்லது தீமோத்தேயுவைப் பற்றியோ புதிதாய்த் தோன்றிய வீண்பேச்சால் அவர்களுடைய செவிகளை நிரப்பவில்லை. பவுல் எருசலேமிலுள்ள மூப்பர்களைக் குறித்த வதந்திகளுக்குச் செவிசாய்க்கவோ அல்லது அவற்றைத் தூற்றிடவோ இல்லை என்பதில் நீங்கள் நிச்சயமாயிருக்கலாம்.a பெரும்பாலும், கடவுள் கொடுத்த மனதை மதித்த காரியம்தானே தீங்கிழைக்கும் வீண்பேச்சில் உட்படுவதிலிருந்து விலகியிருக்க பவுலுக்கு உதவியது. யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் மனதையும் நாவையும் நாம் உண்மையிலேயே போற்றிடுவோமானால், நாம் அவனுடைய முன்மாதிரியைப் பின்பற்றுவோம்.
கடவுளையும் அவருடைய வார்த்தையையும் மதித்திடுங்கள்
6, 7. (எ) அடங்காத நாவால் ஏற்படும் காரியங்களை யாக்கோபு எவ்விதம் காண்பித்தான்? (பி) கடவுளையும் அவருடைய வார்த்தையையும் நாம் மதிப்பவர்களாயிருந்தால் என்ன நேரிடாது?
6 கடவுளையும் அவருடைய பரிசுத்த வார்த்தையையும் இருதயப்பூர்வமாக மதித்தல் தீங்கிழைக்கும் வீண்பேச்சை நசுக்கிட நமக்கு உதவும். உண்மைதான், இப்படிப்பட்ட மதிப்பு மரியாதை, நாவைக் கண்டித்த சீஷனாகிய யாக்கோபின் புத்திமதிக்குச் செவிகொடுக்க நம்மைத் தூண்டிடும். (யாக்கோபு 3:2–12) ஒரு குதிரையின் வாயில் பொருத்தியுள்ள ஒரு துண்டு அந்த விலங்கை வழிநடத்தமுடிகிறது போல, ஒரு நபர் தன்னுடைய நாவைக் கட்டுப்படுத்த முடிந்தால், தன்னுடைய முழு சரீரத்தையும் கடிவாளமிட்டு அடக்கிக் கொள்ள முடியும். வெறும் ஒரு தீப்பொறி ஒரு காடு முழுவதையும் கொழுத்திவிடுவதுபோல, சிறிய நாவு ஆயுள் சக்கரத்தையே கொளுத்திவிடக்கூடும். மனிதன் வன விலங்குகளையும், பறவைகளையும், ஊரும் பிராணிகளையும், கடற் பிராணிகளையும் கட்டுப்படுத்தி பழக்குவிக்க முடியும், ஆனால் “நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது,” என்றான் யாக்கோபு. என்றபோதிலும், தீங்கிழைக்கும் வீண்பேச்சை நசுக்கிப்போடுவதற்கு முயற்சி எடுக்காமல் இருப்பதற்கு அது சாக்குபோக்கு கிடையாது.
7 நாவு ஒரே வாயிலிருந்து ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் அனுப்புகிறது என்றும் யாக்கோபு சொன்னான். இது சரியல்ல, ஏனென்றால் ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து இனிப்பும் கசப்புமான தண்ணீர் சுரப்பதில்லை. அத்தி மரம் ஒலிவப்பழங்களைக் கொடுப்பதில்லை, உப்புத் தண்ணீர் தித்திப்பான தண்ணீரைக் கொடுப்பதில்லை. உண்மைதான், கிறிஸ்தவர்கள் அபூரணராயிருக்கும் வரையில், நாவைப் பூரணமாக அடக்கியாளுவது கூடாத காரியமாயிருக்கும். இதுதானே நமக்கு எதிராகப் பாவம் செய்கிறவர்கள் மனந்திரும்பும்போது அவர்களிடம் இரக்கம் காண்பிக்க நம்மைத் தூண்ட வேண்டும், என்றபோதிலும் தீங்கிழைக்கும் வீண்பேச்சை அது மன்னிப்பதில்லை. நம்மைப் பொருத்ததில், கடவுளையும் அவருடைய வார்த்தையையும் உண்மையிலேயே மதித்திடுவோமானால், நாவை இப்படியாக விஷமாகத் துர்ப்பிரயோகம் செய்வது தொடராது.
ஜெபம் எவ்விதம் உதவக்கூடும்
8. தீங்கிழைக்கும் வீண்பேச்சை நசுக்கிட ஜெபம் எவ்வாறு நமக்கு உதவும்?
8 தீங்கிழைக்கும் வீண்பேச்சுக்குச் செவிகொடுப்பதற்கும் அதைத் தூற்றுவதற்குமான சோதனை பலமாக இருக்கக்கூடும். எனவே, கடந்த காலங்களில் நீங்கள் அப்படிப்பட்ட சோதனைக்கு இடங்கொடுத்திருப்பீர்களானால், கடவுளிடம் நீங்கள் மன்னிப்பையும் உதவியையும் கேட்க வேண்டுமல்லவா? இயேசு இவ்விதம் ஜெபிக்க நமக்குக் கற்றுக்கொடுத்தார்: “எங்களைச் சோதனைக்குள் கொண்டுவராமல், தீயவனிடமிருந்து மீட்டருளும்.” (மத்தேயு 6:13, NW) அவ்விதம் சோதனையாக அமையும் ஆனால் தீய பேச்சுக்குக் கடவுள் தங்களை உட்படுத்திவிடக்கூடாது என்று மனதார ஜெபிக்கும் கிறிஸ்தவர்கள் சாத்தானின் இந்த வழிக்கு ஆளாக மாட்டார்கள்; அவர்கள் பெரும் பழிதூற்றுபவனிடமிருந்து காக்கப்படுவார்கள்.
9. எவரேனும் ஒருவரைப் பழிதூற்ற சோதிக்கப்பட்டால், நாம் எவ்விதம் ஜெபிக்கலாம்?
9 எவரேனும் ஒருவரை நாம் பழித்தூற்றும் சோதனையை எதிர்ப்பட்டால் நாம் இப்படியாக ஜெபிக்கலாம்: “யெகோவா, என் வாய்க்குக் காவல்வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.” (சங்கீதம் 141:3, தி.மொ.) சோதனைக்கு இடங்கொடுத்து, பகைக்கும், பொய்ப்பேசும், கொலைக்கார பழிதூற்றும் பிசாசைப் பின்பற்றுவதனால் நித்திய ஜீவனுக்குரிய நம்முடைய எதிர்பார்ப்பை நாம் அழித்துக்கொள்ளக்கூடும். (யோவான் 8:44) அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினான்: “தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.”—1 யோவான் 3:15.
அன்பு வீண்பேச்சை அறவே ஒழிக்கிறது
10. மற்றவர்களைப் பற்றிய வீண்பேச்சுக்குப் பதிலாக நாம் அவர்களுக்கு எதில் கடன்பட்டிருக்கிறோம்?
10 நாம் எல்லாருமே மற்றவர்களுக்கு ஏதாகிலும் கடன்பட்டவர்களாயிருக்கிறோம், ஆனால் தீங்கிழைக்கும் வீண்பேச்சைத் தூண்டும் பகை காட்ட நாம் கடன்பட்டில்லை. “ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்” என்று பவுல் எழுதினான். (ரோமர் 13:8) மற்றவர்களுக்கு எதிராகப் பேசிக் கொண்டும் அவர்களுடைய பெயரைக் கெடுத்துக்கொண்டுமிருப்பதற்கு மாறாக நாம் அந்தக் கடனை அனுதினமும் செலுத்திக்கொண்டிருக்கவேண்டும். நாம் யெகோவாவில் அன்புகூருவதாய் உரிமைபாராட்டினால், நாம் ஓர் உடன் வணக்கத்தாரைப் பழிதூற்ற முடியாது, ஏனென்றால் “தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?”—1 யோவான் 4:20.
11. செம்மறியாடு, வெள்ளாடு குறித்த இயேசுவின் உவமை தீங்கிழைக்கும் வீண்பேச்சு சம்பந்தமாக எவ்வாறு நம் சிந்தைக்கு உணவளிக்கிறது?
11 செம்மறி ஆடு வெள்ளாடு குறித்த இயேசுவின் உவமையைக் கவனியுங்கள். கிறிஸ்துவின் சகோதரர்களுக்குத் தாங்கள் எதைச் செய்தார்களோ அதை அவருக்குச் செய்ததாகக் கருதப்பட்டது என்று வெள்ளாட்டு மக்களுக்கு சொல்லப்பட்டது. நீங்கள் கிறிஸ்துவைப் பற்றி வீண்பேச்சு பேசுவீர்களா? உங்கள் ஆண்டவரும் எஜமானருமாய் இருப்பவருக்கு எதிராக நீங்கள் பேச மாட்டீர்கள் என்றால், அவருடைய அபிஷேகம் பண்ணப்பட்ட சகோதரரையும் அவ்விதம் நடத்தாதீர்கள். “நித்திய ஆக்கினையை அடையும்” வெள்ளாட்டு மக்கள் செய்த அந்தத் தவறை நீங்கள் செய்யாதீர்கள். இயேசுவின் சகோதரரை நீங்கள் நேசிக்கிறீர்களானால், அவர்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதில் அதைக் காண்பியுங்கள்.—மத்தேயு 25:31–46.
12. நீதிமொழிகள் 16:2-ன் சாராம்சம் என்ன? இது நம்முடைய எண்ணங்கள், செயல்கள் மற்றும் பேச்சை எவ்விதம் பாதிக்க வேண்டும்?
12 நாம் எல்லாருமே பாவிகளாக இருப்பதாலும் நமக்கு இயேசுவின் மீட்கும் கிரய பலி அவசியமாயிருப்பதாலும், எவரேனும் நம்மைக் குறித்து பாதகமான குறிப்புகளைச் சொல்ல விரும்பினால், அவர் சொல்வதற்கு ஏராளம் இருக்கும். (1 யோவான் 2:1, 2) உண்மைதான், நாம் சரியானதையே செய்கிறோம் என்பதாக நினைக்கக்கூடும். “மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ [யெகோவாவோ, NW] ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.” கடவுளுடைய நிறுவைத் தட்டுகள் பாரபட்சத்தில் ஒருபக்கமாய் இறங்குவதில்லை. (நீதிமொழிகள் 16:2; அப்போஸ்தலர் 10:34, 35) அவர் நம்முடைய ஆவியை நிறுத்துப்பார்க்கிறார், நம்மை சிந்திக்க, செயல்பட மற்றும் பேசத் தூண்டும் நம்முடைய மனப்போக்கையும் உள்ளுணர்வுகளையும் கவனிக்கிறார். அப்படியிருக்க, நாம் சுத்தமுள்ளவர்கள் என்றும் மற்றவர்கள் கறைபட்டவர்களும் நம்முடைய புண்படுத்தும் சொற்களுக்குத் தகுந்தவர்கள் என்றும் தவறாக நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில் கடவுள் நம்மைக் காணும்படி நாம் நிச்சயமாகவே விரும்பமாட்டோம். யெகோவாவைப் போல, நாம் பட்சபாதமற்றவர்களாகவும், இரக்கமுள்ளவர்களாகவும், அன்புள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
13. (எ) “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது,” என்ற உண்மை எவ்வாறு தீங்கிழைக்கும் வீண்பேச்சை நசுக்கிப்போட உதவக்கூடும்? (பி) ஒருவர் நமக்கு இல்லாத ஓர் ஊழிய சிலாக்கியத்தைப் பெறுகிறவராயிருந்தால், அவருக்கு எதிராகப் பேசுவதிலிருந்து நம்மை எது தடுத்து நிறுத்தும்?
13 பவுல் 1 கொரிந்தியர் 13:4–8-ல் சொன்னவற்றைப் பொருத்துதல் தீங்கிழைக்கும் வீண்பேச்சை நசுக்கிப்போட நமக்கு உதவக்கூடும். “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது,” என்று அவன் எழுதினான். விசுவாசத்தில் பிளவுபட்டிருக்கும் குடும்பத்தில் துன்புறுத்தலை அனுபவித்துவரும் ஒரு சகோதரி நம்மை இன்முகத்தோடு வாழ்த்தாமல் இருக்கலாம். அல்லது, சுகவீனத்தின் காரணத்தால் சிலர் உடல் சம்பந்தமாய்க் காரியங்களில் மெதுவாய் இருக்கக்கூடும். அப்படிப்பட்டவர்களைக் குற்றப்படுத்தும் வீண்பேச்சுக்கு இலக்காக்கிவிடுவதற்குப் பதிலாக, அன்பு அவர்களிடமாக பொறுமையாகவும், தயவாகவும் இருக்க நம்மைத் தூண்ட வேண்டாமா? ‘அன்புக்குப் பொறாமை இல்லை, தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.’ இப்படியாக, ஒரு கிறிஸ்தவன் நமக்கு இல்லாத ஓர் ஊழிய சிலாக்கியத்தைப் பெறுகிறவனாயிருந்தால், அவருக்கு எதிராகப் பேசுவதிலிருந்தும் அவர் வேலைக்குப் பிரயோஜனம் இல்லை என்று சொல்வதிலிருந்தும் அன்பு நம்மைத் தடுத்திடும். வாய்ப்புக் குறைவானவர்களைச் சோர்வுக்குள்ளாக்கிடும் நம்முடைய சாதனைகளைப் பற்றிப் பெருமையடித்துக்கொள்ளும் பேச்சிலிருந்தும் அன்பு நம்மை தடுத்திடும்.
14. நாம் மற்றவர்களைப் பற்றி சொல்லுவதைப் பாதிக்கக்கூடிய அன்பைக் குறித்த வேறு என்ன காரியமும் இருக்கிறது?
14 ‘அன்பு அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,’ என்றும் பவுல் சொன்னான். கிறிஸ்தவமல்லாத காரியங்களை அநாகரிகமாகச் சொல்வதற்குப் பதிலாக, மற்றவர்களைக் குறித்து நல்ல விதத்தில் பேசுவதற்கும் அவர்களுடைய அக்கறைகளைக் கவனிப்பதற்கும் அன்பு நம்மைத் தூண்டும்படி அனுமதிக்கவேண்டும். நாம் சினந்துகொள்வதிலிருந்தும், உண்மையாயிருக்கும் அல்லது நம் கற்பனையாயிருக்கும் காயங்களுக்காக ஆட்களுக்கு விரோதமாகப் பேசுவதிலிருந்தும் நம்மைத் தடுக்கிறது. ‘அன்பு அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படுவதால்,’ அநீதியை அனுபவிக்கும் எதிர்ப்பாளர்களைப் பற்றிய புண்படுத்துகிற வீண்பேச்சில் ஈடுபடுவதிலிருந்தும் அன்பு நம்மைத் தடுக்கிறது.
15. (எ) ‘அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும், நம்பும்’ என்ற உண்மை நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்? (பி) மற்றவர்கள் யெகோவாவின் அமைப்புக்கு எதிராகப் பேசினாலும், அன்பின் எந்த அம்சங்கள் நம்மை அமைப்போடு இசைந்திருக்க உதவக்கூடும்?
15 அன்பு கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் ‘சகலத்தையும் விசுவாசிக்கிறது, நம்புகிறது’ மற்றும் பொய்ப்பேசும் விசுவாச துரோகிகளின் அவதூறான மொழிகளுக்குச் செவிகொடுப்பதற்குப் பதிலாக ‘உண்மையுள்ள அடிமை’ வகுப்பு அளித்திடும் ஆவிக்குரிய உணவுக்குப் போற்றுதல் அளிக்கும்படி நம்மைத் தூண்டுகிறது. (மத்தேயு 24:45–47; 1 யோவான் 2:18–21) ‘அன்பு சகலத்தையும் சகிப்பதாலும், ஒழிந்து போகாததாலும்’ “கள்ளச் சகோதர”ரோ அல்லது மற்றவர்களோ கடவுளுடைய அமைப்புக்கோ அல்லது அதன் அங்கத்தினருக்கோ எதிராகப் பேசினாலும், அதற்கு உண்மையுள்ளவர்களாயிருக்க அது நமக்கு உதவுகிறது.—கலாத்தியர் 2:4.
மரியாதைக் காண்பித்தல் வீண்பேச்சைக் கட்டுப்படுத்துகிறது
16. கொரிந்துவிலுள்ள கள்ளச் சகோதரர்களால் பவுல் எவ்விதம் நடத்தப்பட்டான்?
16 உடன் விசுவாசிகளுக்கு மரியாதையைக் காண்பித்தலுங்கூட புண்படுத்துகிற வீண்பேச்சை நசுக்கிப்போட உதவும். அவர்கள் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால், அவர்களை நிச்சயமாகவே அவதூறாய்ப் பேசக்கூடாது. பவுல் எதிர்ப்பட்ட “கள்ளச் சகோதரர்கள்” போன்று நாம் ஒருபோதும் இருக்க வேண்டாம். அவர்கள் அவனைப் பற்றி தீய காரியங்களைச் சொன்னார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. (2 கொரிந்தியர் 11:26) விசுவாச துரோகிகள்கூட அவனைக் குறித்து அவதூறாய்ப் பேசியிருப்பார்கள். (யூதா 3, 4 ஒப்பிடவும்.) கொரிந்துவிலுள்ள சில ஆட்கள் இப்படியாகச் சொன்னார்கள்: “அவனுடைய நிருபங்கள் பார யோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறது.” (2 கொரிந்தியர் 10:10) தாங்கள் நேசிக்கும் நபரைக் குறித்து ஆட்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்வதில்லை.
17. தியோத்திரேப்பு அப்போஸ்தலனாகிய யோவானைக் குறித்து என்ன விதமான வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்தான்?
17 அப்போஸ்தலனாகிய யோவானைக் கவனியுங்கள். தியோத்திரேப்பு யோவானுக்கு எதிராகப் பேசினான். “நான் சபைக்கு எழுதினேன்,” என்றான் யோவான், “ஆனாலும், அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனபடியால், நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிரியைகளை நினைத்துக் கொள்வேன்.” (3 யோவான் 9, 10) இப்படியாக அலப்புதல் மிக மோசமான காரியம், இன்று நாம் இதுபோன்ற பேச்சுக்கு செவிகொடுத்துக்கொண்டு அல்லது தூற்றிக்கொண்டு இருந்தால், அப்படிச் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
18. தேமேத்திரியு எவ்விதம் தியோத்திரேப்புவிலிருந்து வித்தியாசப்பட்டவனாயிருந்தான்? இந்த முரண் நம்முடைய நடத்தையை எவ்விதம் பாதிக்கக்கூடும்?
18 நீதியுள்ளோருக்கு மரியாதைக் காண்பித்தலை ஊக்குவிப்பவனாய் யோவான் காயுவிடம் இப்படியாகச் சொன்னான்: “நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை. தேமேத்திரியு எல்லாராலும் நற்சாட்சிபெற்றவன்; நாங்களும் சாட்சி கொடுக்கிறோம், எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள்.” (3 யோவான் 1, 11, 12) நாம் ஒவ்வொருவரும் நம்மைநாமே இப்படியாகக் கேட்டுக்கொள்ளலாம்: நான் அலப்புகிற தியோத்திரேப்புவா அல்லது நான் உண்மையுள்ள தேமேத்திரியுவா? நாம் உடன் விசுவாசிகளை மதித்தால், அவர்களைப் பற்றி தவறாகப் பேசமாட்டோம். அப்படிப் பேசினால் மற்றவர்கள் நம்மை அலப்புகிறவர்களாக நோக்குவதற்குக் காரணத்தை அளிப்பதாயிருக்கும்.
19. கள்ளச் சகோதரர்கள் C.T. ரசலின் நற்பெயரை எவ்விதம் கெடுக்க முயன்றனர்?
19 கள்ளச் சகோதரர்கள் முதல் நூற்றாண்டில் மட்டும் இருக்கவில்லை. 1890-களில் கடவுளுடைய அமைப்போடு கூட்டுறவு கொண்ட சில தீய எண்ணம் கொண்ட தனிநபர்கள் காவற்கோபுர சங்கத்தின் மீது அதிகாரம் பெற முயன்றனர். அவர்கள் சார்ல்ஸ் டேஸ் ரசலுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து, சங்கத்தின் முதல் தலைவராக இருப்பதை முடிவுக்குக் கொண்டுவர முயன்றனர். இரண்டு ஆண்டுகளாக சதி செய்துகொண்டிருந்ததால், அது 1894-ல் வெடித்தது. அவர்களுடைய பொய்க் குற்றச்சாட்டுகள் முக்கியமாக ரசல் வியாபாரத்தில் நேர்மையற்றவர் என்பதாக இருந்தது. அவர்களுடைய அற்பமான குற்றச்சாட்டுகள் குற்றஞ்சாட்டுகிறவர்களின் உள்நோக்கத்தை—C.T. ரசலின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தை முறியடித்தது. பாரபட்சமற்ற கிறிஸ்தவர்கள் காரியங்களை விசாரித்தாராய்ந்து, அவர் சரியாக இருப்பதைக் கண்டார்கள். இப்படியாக “திரு. ரசலையும் அவருடைய வேலையையும் தகர்த்திட” திட்டம்பண்ணின காரியம் தோல்வியடைந்தது. எனவே, பவுலைப் போல, சகோதரர் ரசல் கள்ளச் சகோதரரால் எதிர்க்கப்பட்டார், ஆனால் இந்தச் சோதனை சாத்தானுடைய திட்டம் என்பது அறியப்பட்டது. அதன்பின் அந்தச் சதிக்காரர் கிறிஸ்தவ கூட்டுறவை அனுபவித்து மகிழ்வதற்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டார்கள்.
நற்கிரியைகள் தீங்கிழைக்கும் வீண்பேச்சை நெரித்துவிடுகின்றன
20. பவுல் சில இளவயது விதவைகளிடம் என்ன குறை கண்டான்?
20 தீங்கிழைக்கும் வீண்பேச்சு பெரும்பாலும் சோம்பலுடன் சம்பந்தப்பட்டது, ஏராளமான நற்கிரியைகளுடன் அல்ல என்பதைப் பவுல் அறிந்திருந்தான். சில இளம் விதவைகள் “சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகி . . . சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும், தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயும்” இருந்தது கண்டு பவுல் விசனப்பட்டான். பரிகாரம் என்ன? ஆரோக்கியமான கிரியைகள். எனவே பவுல் எழுதினான்: “ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.”—1 தீமோத்தேயு 5:11–14.
21. தீங்கிழைக்கும் வீண்பேச்சைத் தவிர்ப்பதில் 1 கொரிந்தியர் 15:58 என்ன சம்பந்தம் உடையதாயிருக்கிறது?
21 பெண்கள் ஒரு வீட்டை நடத்தினால், பிள்ளைகளைக் கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாகப் பயிற்றுவித்தால், மற்ற பிரயோஜனமான கிரியைகளைத் தொடருவார்களானால், தீங்கிழைக்கும் வீண்பேச்சுக்கு வழிநடத்தும் வெட்டிப் பேச்சுக்கு நேரம் இருக்காது. ஆண்களுங்கூட நற்கிரியைகளில் மிகுந்திருந்தால் அப்படிப்பட்ட பேச்சுக்கு நேரம் இருக்காது. ‘கர்த்தருடைய கிரியைகளில் செய்வதற்கு எப்பொழுதும் அதிகத்தைக் கொண்டிருப்பது’ தீங்கிழைக்கும் வீண்பேச்சைத் தவிர்ப்பதற்கு நம் எல்லாருக்குமே உதவியாயிருக்கும். (1 கொரிந்தியர் 15:58) விசேஷமாகக் கிறிஸ்தவ ஊழியத்திலும், சபைக் கூட்டங்களிலும், மற்ற தெய்வீகக் கிரியைகளிலும் முழு இருதயத்தோடு உட்படுவது நம்முடைய மனதை ஆவிக்குரிய காரியங்களில் ஊன்றவைக்கும், இதனால் நாம் வேலைவெட்டியில்லா வீண்பேச்சு ஆட்களாகவும் மற்றவர்களுடைய விவகாரங்களில் தலையிடுகிறவர்களாகவும் இருக்க மாட்டோம்.
22. பழிதூற்றுபவர்களைக் கடவுள் எவ்வாறு நோக்குகிறார் என்பதைக் குறித்து நீதிமொழிகள் 6:16–19 என்ன சொல்லுகிறது?
22 தேவ கிரியைகளில் நாம் சுறுசுறுப்பாக இருந்து மற்றவர்களை ஆவிக்குரிய பிரகாரமாய் ஆசீர்வதிக்க நாடுவோமானால், நாம் உண்மையற்ற கோள்சொல்லிகளாய் அல்ல, உண்மையுள்ள சிநேகிதராய் இருப்போம். (நீதிமொழிகள் 17:17) நாம் சேதப்படுத்தும் வீண்பேச்சைத் தவிர்ப்போமானால், நாம் எல்லாரிலும் மிகச் சிறந்த நண்பரை—யெகோவாவைக் கொண்டிருப்போம். “மேட்டிமையான கண், பொய் நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல்” ஆகிய ஏழு காரியங்கள் அவருக்கு அருவருப்பானவை என்பதை நாம் நினைவிற் கொள்ளக்கடவோம். (நீதிமொழிகள் 6:16–19) வீண்பேச்சு பேசுகிறவர்கள் காரியங்களை மிகைப்படுத்தி மாற்றிக் கூறுவார்கள், பழிதூற்றுபவர்கள் பொய் நாவுகளைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சொற்கள் கோள் சொல்வதில் ஆர்வமாய் இருப்பவர்களின் கால்களைச் செயலில் ஆழ்த்துகிறது. அநேகமாக, இது விரோதத்தில்தான் முடிவடையும். ஆனால் கடவுள் வெறுப்பதை நாம் வெறுத்தால், செவ்வையானவர்களுக்குச் சேதமுண்டாக்கவல்லதும் மகா பழிதூற்றுபவனாகிய பிசாசாகிய சாத்தானுக்கு பேரானந்தத்தை உண்டுபண்ணக்கூடியதுமான தீங்கிழைக்கும் வீண்பேச்சை தவிர்த்திடுவோம்.
23. நம்முடைய பேச்சைக் குறித்ததில், யெகோவாவின் இருதயத்தை நாம் எவ்வாறு மகிழ்விக்கலாம்?
23 எனவே, நாம் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துவோமாக. (நீதிமொழிகள் 27:11) அவர் வெறுத்திடும் பேச்சைத் தவிர்ப்போமாக, அவதூறான பேச்சுக்குச் செவிகொடுக்க மறுப்போமாக, தீங்கிழைக்கும் வீண்பேச்சை நசுக்கிப்போட நம்மாலானவற்றையெல்லாம் செய்வோமாக. நம்முடைய பரிசுத்த கடவுளாகிய யெகோவாவின் உதவியால் நாம் இதை நிச்சயமாக செய்ய முடியும். (w89 10/15)
[அடிக்குறிப்புகள்]
a இன்றுங்கூட ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் சொல்லியிருப்பதாய் அல்லது செய்திருப்பதாய்க் கருதப்படும் (பெரும்பாலும் எந்த ஓர் உண்மையின் அடிப்படையிலும் இராத) காரியங்களைக் குறித்த கதைகளுக்கு செவி கொடுப்பதோ, அவற்றைத் தூற்றுவதோ சரியல்ல.
நீங்கள் எவ்விதம் பதிலளிப்பீர்கள்?
◻ மற்றவர்களைக் குறித்து பழிதூற்றுவதைத் தவிர்க்க ஜெபம் நமக்கு எவ்விதம் உதவக்கூடும்?
◻ 1 கொரிந்தியர் 13:4–8-ஐப் பொருத்திப் பிரயோகிப்பது எவ்வாறு தீங்கிழைக்கும் வீண்பேச்சை நசுக்கிட நமக்கு உதவும்?
◻ உடன் விசுவாசிகளைப் பற்றி வீண்பேச்சு பேசுவதற்கான எந்த ஒரு சோதனையையும் கட்டுப்படுத்திட சுய மரியாதை எவ்விதம் நமக்கு உதவக்கூடும்?
◻ தீங்கிழைக்கும் வீண்பேச்சைத் தவிர்ப்பதில் 1 கொரிந்தியர் 15:58-க்கு என்ன சம்பந்தம் இருக்கக்கூடும்?
[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]
U.S. Forest Service photo