செல்வங்கள் உங்களை சந்தோஷப்படுத்துமா?
சாலொமோன் ராஜா பணத்தின் மதிப்பை அறிந்திருந்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.” (பிரசங்கி 10:19) நண்பர்களோடு சேர்ந்து உண்பது மிகவும் சந்தோஷமானதாய் இருக்கலாம், ஆனால் அப்பம் அல்லது திராட்சரசம் வாங்குவதற்கு உங்களுக்கு பணம் தேவை. பணம் கொடுத்தே பொருள் உடைமைகளை வாங்கமுடிவதால், அதுவே ‘எல்லாவற்றிற்கும் உதவுகிறது.’
சாலொமோன் நம்பமுடியாத அளவு சொத்துக்கு சொந்தக்காரராக இருந்தபோதிலும், செல்வங்களுக்கென சில வரம்புகள் இருப்பதை அவர் அறிந்திருந்தார். பொருளாசைமிக்க வாழ்க்கைமுறை, சந்தோஷத்தை அடைவதற்கான பாதை அல்ல என்பதை அவர் கண்டறிந்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை.”—பிரசங்கி 5:10.
ஒரு செல்வந்தர் மேலும் மேலும் செல்வத்தைப் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். சாலொமோன் சொல்கிறார்: “பொருள் [“நல்ல பொருட்கள்,” NW] பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்.” (பிரசங்கி 5:11) ஒரு நபரின் “நல்ல பொருட்கள்” அல்லது உடைமைகள் அதிகரிக்கையில், அவற்றைக் கவனித்துக்கொள்வதற்கு இன்னுமதிகமான நபர்கள் தேவைப்படுகிறார்கள். பழுதுபார்ப்பவர்கள், பொறுப்பாளர்கள், வேலைக்காரர்கள், பாதுகாவலர்கள் இன்னும் மற்றவர்கள். எனவே, அவர்கள் செய்யும் வேலைகளுக்காக சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக இன்னும் கூடுதலான பணம் தேவைப்படுகிறது.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஒரு நபரின் சந்தோஷத்தின் மீது நேரடியான செல்வாக்கை செலுத்துகிறது. பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க சரித்திர ஆசிரியர் ஸெனோஃபென், ஏழையாயிருந்து செல்வந்தராக ஆன ஒரு நபரின் குறிப்புகளை பின்வருமாறு எழுதினார்:
“எனக்கு அதிகம் இருப்பதால், நான் அதிக சந்தோஷமாக வாழ்கிறேன் என்று . . . நீங்கள் உண்மையில் நினைக்க விரும்புவதேன்? நான் ஏழையாய் இருந்தபோது சாப்பிட்டு, குடித்து, தூங்கி அனுபவித்த இன்பத்தைக் காட்டிலும் துளிகூட அதிகமான இன்பம் இப்போது இல்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவில்லை. இத்தனை அதிகம் வைத்திருப்பதால் அடைந்திருக்கும் ஒரே லாபம் என்னவென்றால், நான் அதிகத்தைக் கவனித்துக்கொள்ளவும் மற்றவர்களுக்கு அதிகத்தை பகிர்ந்தளிக்கவும் கடமைப்பட்டிருப்பதுதான். மேலும், முன்பு வைத்திருந்ததைக் காட்டிலும் அதிகத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கஷ்டமும்கூட உள்ளது. இப்போது அநேக வேலைக்காரர்கள் உணவுக்காகவும், அநேகர் பானத்துக்காகவும், அநேகர் உடைக்காகவும் என்னை நம்பியிருக்கிறார்கள், வேறு சிலருக்கு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள்; ஓநாய்கள் ஆடுகளை தாக்கியதைப் பற்றியோ அல்லது செங்குத்தான பாறையிலிருந்து விழுந்து இறந்துபோன காளைகளைப் பற்றியோ அல்லது கால்நடைகள் மத்தியில் ஏதோவொரு நோய் பரவியிருப்பதைப் பற்றியோ சொல்வதற்காக ஒவ்வொருவரும் ஒரு கதையோடு என்னிடம் வருகிறான், கொஞ்சமாக வைத்திருந்தபோது இருந்ததைக் காட்டிலும் இப்போது எனக்கு கூடுதலான கஷ்டங்கள் . . . இருப்பது போல் தோன்றுகிறது.”
மக்கள் ஏன் அதிகமதிகமாக செல்வத்தை நாடித்தொடர்கின்றனர் என்பதற்கான மற்றொரு காரணம், ‘ஐசுவரியத்தின் மயக்கம்’ என்று இயேசு கிறிஸ்து அழைத்தவற்றால் அவர்கள் தந்திரமாய் ஏமாற்றப்பட்டு விடுவதே. (மத்தேயு 13:22) அவர்கள் மிகவும் ஆர்வத்தோடு விரும்பி நாடும் இந்தச் செல்வங்களிலிருந்து எதிர்பார்க்கும் திருப்தி அல்லது சந்தோஷத்தை அவர்கள் அடையாமலே போவதன் காரணமாக அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். குறைவான செல்வம் சாதிக்க முடியாத காரியங்களை மிகுதியான செல்வம் சாதிக்கும் என்று அவர்கள் நியாயப்படுத்துகின்றனர். ஆகையால் அதிகமதிகமான செல்வத்தைப் பெறுவதற்காக எப்போதும் முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள்.
பண ஆசை சந்தோஷத்துக்கான வழியல்ல
ஒரு செல்வந்தர் தன் உடைமைகளைக் குறித்து கவலைப்படுவாரேயானால் அவருக்கு இரவில் நிம்மதியான உறக்கம் இல்லாமல் போய்விடக்கூடும். சாலொமோன் இவ்வாறு எழுதுகிறார்: “வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.”—பிரசங்கி 5:12.
ஒருவர் தன் செல்வம் கையை விட்டுப் போய்விடுமோ என்று அளவுக்குமீறி கவலைப்படும்போது, அதில் உறக்கம் கெடுவதைக் காட்டிலும் அதிகம் உட்பட்டுள்ளது. சாலொமோன் கஞ்சத்தனமுள்ள நபரை விவரித்து இவ்வாறு எழுதுகிறார்: “அவன் தன் நாட்களிலெல்லாம் இருளிலே புசித்து, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான்.” (பிரசங்கி 5:17) தன் செல்வத்தால் சந்தோஷத்தைக் காண்பதற்கு பதிலாக, உணவுக்காக செலவழிக்கும் பணத்திலும்கூட அதிருப்தியடைவது போல் அவன் ‘சலிப்போடு’ உண்கிறான். அப்படிப்பட்ட சோர்வுற்ற மனநிலை உடல்நலமின்மைக்கு காரணமாகலாம். அவ்வாறு சுகவீனம் அடைவது, கஞ்சத்தனமுள்ளவனின் கவலையை அதிகரிக்கிறது, ஏனென்றால் மிகுதியான செல்வத்தை சேகரிப்பதிலிருந்து அது அவனைத் தடைசெய்கிறது.
இது ஒருவேளை அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதை உங்களுக்கு நினைப்பூட்டலாம்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, . . . அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.” (1 தீமோத்தேயு 6:9, 10) பணத்தை விரும்பி நாடுகையில், மக்கள் மோசடி செய்கின்றனர், பொய் சொல்கின்றனர், திருடுகின்றனர், தங்களை விலைமாதர்களாக ஆக்கிக்கொள்கின்றனர், ஏன் கொலையும்கூட செய்கின்றனர். பேராசைப் பிடித்து விடாப்பிடியாய் செல்வங்களை சேர்க்க முயலுவதால் ஏற்படும் விளைவு, ஒருவர் தன்னை உணர்ச்சிரீதியிலும், உடல்ரீதியிலும், ஆவிக்குரியரீதியிலும் வேதனையால் குத்திக்கொள்வதே. இது சந்தோஷத்துக்கு வழிநடத்தும் பாதை போலவா இருக்கிறது? இல்லவே இல்லை!
உள்ளதைக்கொண்டு திருப்தியாய் இருத்தல்
சாலொமோன் செல்வங்களைப் பற்றிய சமநிலையான நோக்குநிலையைக் குறித்து அதிகமாக சொன்னார். அவர் இவ்வாறு எழுதினார்: “தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப் போவான்; அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு போவதில்லை. இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக்குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அனுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு.”—பிரசங்கி 5:15, 18.
நாம் உயிரோடு இருக்கப்போகாத ஒரு எதிர்காலத்துக்காக செல்வத்தை குவிக்க பெரும் முயற்சி எடுப்பதில் சந்தோஷம் சார்ந்தில்லை என்பதை இந்த வார்த்தைகள் காண்பிக்கின்றன. நம் கடின உழைப்பின் பலன்களில் திருப்தியோடிருந்து சந்தோஷப்படுவது மிகவும் மேலானது. அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதிய கடிதத்தில் அதுபோன்ற ஒரு கருத்தை தீமோத்தேயுவிடம் கூறினார்: “உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.”—1 தீமோத்தேயு 6:7, 8; ஒப்பிடுக: லூக்கா 12:16-21.
சந்தோஷத்துக்கான வழி
சாலொமோன் ஏராளமான செல்வத்தையும் தேவ ஞானத்தையும் பெற்றிருந்தார். ஆனால் அவர் சந்தோஷத்தை பணத்தோடு அல்ல, ஞானத்தோடே இணைத்துப் பேசினார். அவர் சொன்னார்: “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது. முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல. அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.”—நீதிமொழிகள் 3:13-18.
ஞானம் ஏன் பொருள் உடைமைகளைக் காட்டிலும் மிக சிறந்தது? சாலொமோன் எழுதினார்: “ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.” (பிரசங்கி 7:12) பணம் ஓரளவு பாதுகாப்பைத் தந்து, அதை வைத்திருப்பவருக்குத் தேவையானதை வாங்குவதற்கு உதவுகிறது, ஆனால் ஞானமோ, தன் வாழ்க்கையை கஷ்டத்துக்குள்ளாக்கும் ஆபத்துக்களிலிருந்து ஒரு நபரை பாதுகாக்கலாம். மெய் ஞானம், அகால மரணத்திலிருந்து ஒரு நபரை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அது கடவுளிடம் சரியான பயத்துடன் இருப்பதன் பேரில் சார்ந்திருப்பதால் நித்திய ஜீவனைப் பெறுவதற்கு வழிநடத்தும்.
தெய்வீக ஞானம் ஏன் சந்தோஷத்திற்கு வழிநடத்துகிறது? ஏனெனில் உண்மையான சந்தோஷம் யெகோவா தேவனிடமிருந்து மட்டுமே வரமுடியும். மகா உன்னதமானவருக்கு கீழ்ப்படிவதன் மூலமாக மட்டுமே உண்மையான சந்தோஷத்தைப் பெறமுடியும் என்பதை அனுபவம் காட்டுகிறது. நிலையான சந்தோஷம், கடவுளோடு அங்கீகரிக்கப்பட்ட நிலைநிற்கையில் இருப்பதன் பேரில் சார்ந்துள்ளது. (மத்தேயு 5:3-10) பைபிளை படிப்பதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் காரியங்களை பொருத்துவதன் மூலம் ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ நாம் வளர்த்துக்கொள்வோம். (யாக்கோபு 3:17) அது செல்வங்களால் ஒருபோதும் அளிக்கமுடியாத சந்தோஷத்தை நமக்கு அளிக்கும்.
[பக்கம் 4, 5-ன் படங்கள்]
எது ஒரு நபரை சந்தோஷப்படுத்தும் என்பதை சாலொமோன் ராஜா அறிந்திருந்தார். நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?