வெற்றி—எப்படியாகிலுமா?
வெற்றி பெறுவதற்குத் தீர்மானமாயிருப்பதுதானே நிச்சயமான ஓர் இலக்கை ஒருவர் வைத்திருக்கிறார் என்பதைக் காண்பிக்கிறது. வாழ்க்கையில் உங்களுடைய இலக்கு என்ன? அதை அடைவதற்காக அல்லது சாதிப்பதற்காக நீங்கள் என்ன செய்ய தயாராயிருக்கிறீர்கள்? ஆம், உண்மையிலேயே திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு நீங்கள் பிரதானமாக நாடவேண்டியது என்னவாக இருக்க வேண்டும்?
பின்தங்கிய பல நாடுகளில் வாழ்க்கையின் பொதுவான தராதரம் விரும்புவதற்கு ஏராளமானவற்றை விட்டுவைக்கிறது. அங்கு எதிர்ப்படும் பிரச்னைகளைக் கவனிக்கும்போது, நாம் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் சரி, கடவுளுடைய வார்த்தையிலிருந்து பொருத்தமான ஆலோசனைகளைக் கவனிப்பது நம்முடைய சொந்த இலக்குகளையும் வெற்றியையும் நல்ல விதத்தில் பரிசீலனை செய்து பார்ப்பதற்கு நமக்கு உதவும்.
வறுமை பெருகிக்கொண்டிருக்க, வேறு எந்தக் காரியத்தையும்விட அநேகர் பணம் சம்பந்தமான வெற்றியையே நாடிச்சென்றிருக்கின்றனர். இதைப் பெற்றிடுவதற்கு சிலர் நேர்மையற்ற வழிகளுக்கும் திரும்பியிருக்கின்றனர். என்றபோதிலும் உண்மைக் கிறிஸ்தவர்களாக ஆகும்போது, பைபிளின் நீதியான தராதரங்களுக்கு இசைவாக வாழ்வதற்கு அவர்கள் அந்த மனநிலையை நிரந்தரமாக நிராகரித்திருக்க வேண்டும்.
என்றபோதிலும் சில கிறிஸ்தவர்களுங்கூட உலகப்பிரகாரமான இலக்குகளைத் தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதில் மீண்டும் சிக்கியிருக்கின்றனர். வெற்றியைப் பெற்றிட அவர்கள் கிறிஸ்தவமல்லாத நடத்தைக்குப் பலியாகிவிடக்கூடும். பெற்றோர் தங்களுடைய குடும்பங்களைக் கவனிக்கத் தவறுகின்றனர். தனிப்பட்டவர்கள் கடவுளுக்குரிய தங்களுடைய சேவையை அசட்டை செய்துவிடுகின்றனர். வாழ்க்கையில் திருப்தி மற்றும் மகிழ்ச்சியைக் குறித்ததில் விளைவு என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
விளைவைக் குறித்து நம்முடைய கவனத்தை ஒருமுகப்படுத்துகிறவிதமாய் பைபிள் எச்சரிப்பதாவது: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற . . . பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து விசுவாசத்தைவிட்டு வழுவி அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:9, 10.
“எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.” “அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.” நிச்சயமாகவே அது திருப்தியும் மகிழ்ச்சியும் கொண்ட ஒரு விவரமாகத் தொனிப்பதில்லை, அல்லவா? என்றபோதிலும், கடந்த நுற்றாண்டுகள் முழுவதும், இன்று வரையுங்கூட இலட்சக்கணக்கான மக்களுடைய அனுபவம் அந்த பைபிள் கூற்று எவ்வளவு உண்மை என்பதை நிரூபிக்கிறது. அப்படியிருக்க, ஒரு கிறிஸ்தவனின் இலக்குகள் மற்றும் வாழ்க்கை வழி குறித்ததில் இது சிபாரிசு செய்வதுதான் என்ன?
வழி விலகியிருக்கின்றனர்—எப்படி?
கிறிஸ்தவர்கள் எவ்வழிகளில் விசுவாசத்திலிருந்து வழிவிலகக்கூடும்? சிலர் நல்ல ஒழுக்கங்களையும் நம்பிக்கைகளையும் முற்றிலுமாக மறுக்கும் அளவுக்குச் சென்றிருக்கின்றனர். மற்ற சந்தர்ப்பங்களில் தனிப்பட்டவர்கள் தேவ பக்திக்கடுத்த ஒரு வாழ்க்கை வழியிலிருந்து பக்க பாதையில் சென்றுவிட்டிருக்கின்றனர், அப்படிப்பட்ட பக்தியை மற்றவர்கள் மீது செல்வாக்குப் பெற்றிட ஒரு வழிமுறையாகவும் பயன்படுத்தியிருக்கின்றனர். எனவே பைபிள் “கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களும்” பற்றி பேசுகிறது. (1 தீமோத்தேயு 6:5) கிறிஸ்தவ மதத்தை முற்றிலும் கைவிடுகிறவர்களாய் இல்லாமலிருந்தாலும், கிறிஸ்தவ விசுவாசத்துக்கு அடிப்படைக் கூறுகளாக அமையும் பைபிள் நியமங்களை அவர்கள் மீறுகிறவர்களாகத் தங்களை காண்பர்.
மற்றவர்களை அதிகாரமாய் நடத்துகிற உலக மக்களைப் போன்று இருக்கக்கூடாது என்று இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் சொன்னார்: “உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.” யூத மதத் தலைவர்களைக் கண்டனம் செய்வதில் இயேசு இன்னும் பலமாகச் சென்றார். உலகப்பிரகாரமான கெளரவத்தை அதிகமாக நேசிப்பது கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றுத்தருவதில்லை என்று அவர் குறிப்பிட்டார். (மத்தேயு 20:26; 23:6–9, 33) எனவே கிறிஸ்தவர்கள் மற்றவர்களைவிட சிறந்திருக்க வேண்டும் அல்லது மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்த வேண்டும் என்று இருப்பதற்கு மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் ஊழியஞ் செய்ய நாட வேண்டும். எப்படியாகிலும் வெற்றி காணநினைக்கும் பண ஆசை படைத்தவன் இந்த வழியிலிருந்து மிக எளிதாக வழிவிலகிச்செல்லக்கூடும்.
இந்தக் காரியத்தில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் மற்றவர்கள் மீது எந்தளவுக்கு அதிகாரம் செலுத்த முடிகிறது என்பதை வைத்து உங்கள் வெற்றியை அளவிடுகிற நிலையில் உங்களைக் காண்கிறீர்களா? அதிகாரத்தைச் செலுத்துவதற்காக அல்லது அதைப் பெறுவதற்காக நீங்கள் கிறிஸ்தவ நியமங்களை அதற்குத் தகுந்தவாறு அமைத்துக்கொள்ள அல்லது வளைத்திட முற்படுகிறீர்களா? எப்படியாகிலும் உங்களுடைய சகாக்களைவிட அதிகத்தைச் சாதித்திட அல்லது பெற்றிட வேண்டும் என்று உணருகிறீர்களா? உங்களுடைய சொத்துக்களைக் குறித்தோ அல்லது வாழ்க்கைப் பணியின் சாதனைகளைக் குறித்தோ பேசுவதில் அதிக மகிழ்ச்சி காண்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் விசுவாசத்திலிருந்து வழுவிச்செல்கிறீர்களா என்பதைப் பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.
“வெற்றியின்” வேதனைகள்
இயேசு மேலும் கூறினார்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம் . . . உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் . . . தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.” (மத்தேயு 6:19–24) பிள்ளைகளை முக்கியமாக பொருள் சம்பந்தமான இலக்குகளிடமாகவும் உலகப்பிரகாரமான வாழ்க்கைப் பணிகளிடமாகவும் கவனத்தைத் திருப்பும் பெற்றோர்கள் இந்த ஆலோசனையைப் பின்பற்றுகிறார்களா? பிள்ளைகள் சத்தியத்தை விட்டு கிறிஸ்தவமல்லாத வாழ்க்கைப் பாணிகளை மேற்கொள்வார்களானால் உலகப்பிரகாரமான வெற்றிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் உண்மையிலேயே பயனுள்ளதா? “பூமியிலே பொக்கிஷங்களுக்காக” ஆவிக்குரிய வாழ்க்கையைத் தியாகம் செய்வது அல்லது அதற்கு இடர் செய்வது பிரயோஜனம்தானா? இதைச் செய்யும் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளைக் குறித்த கவலையினாலும் அவர்களுடைய ஆவிக்குரிய—சில சமயங்களில் சரீரத்துக்குரிய—இழப்பினால் ‘அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருப்பதைக்’ காண்கிறார்கள்.
ஐசுவரியத்தின் பேரில் இருக்கும் ஆசை அதிகத்தைக் கேட்கும் ஓர் எஜமான். அது மக்களுடைய நேரத்தையும் பலத்தையும் திறமைகளையும் கேட்பதாயிருக்கிறது; அது பொதுவாக தேவ பக்தியை நெருக்கிப்போடுகிறது. மிகுந்த சம்பத்தையும் உலகப்பிரகாரமான கெளரவத்தையும் நாடும்படிச் செய்து, இப்படியாக அவர்களை விசுவாசத்திலிருந்து அதிக தூரமாகச் செல்லும்படிச் செய்கிறது. பைபிள் சரியாகவே சொல்லுகிறது: “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை.”—பிரசங்கி 5:10.
ஒரு கிறிஸ்தவராக ஆன பின்புங்கூட வர்த்தகத்தில் ஈடுபட்ட ஓர் ஆப்பிரிக்கரின் பணசம்பந்தமான வெற்றிதானே அவருடைய வாழ்க்கையில் முதலிடத்தைப் பெற்றிருந்தது. அவர் உலகப்பிரகாரமான வர்த்தகக் கூட்டாளிகளுடன் தோழமைக் கூட்டுறவு கொள்வதை விரும்பி கிறிஸ்தவ நடவடிக்கைகளை அசட்டை செய்தார். அவருடைய சபையின் மூப்பர்கள் அவருக்கு உதவிசெய்ய முயன்ற போதும் அவர் எந்தவித ஆவிக்குரிய முன்னேற்றமும் செய்யவில்லை. இப்படியாக தான் ஆவிக்குரிய விதத்தில் ஊசலாடிக்கொண்டிருப்பதை—தான் கிறிஸ்தவனாக நடக்காமல் ஆனால் அப்படி அங்கீகரிக்கப்பட விரும்புகிறவனாய் எவருக்கும் உரிமையாயிராத ஓர் இடத்தில் இருப்பது போல் வாழ்ந்தார். அவரிருந்த நிலைமை வாழ்க்கையில் ஆழ்ந்த திருப்தியோ அல்லது நிலைத்திருக்கும் மகிழ்ச்சியோ பெறுவதற்கு உகந்ததாயில்லை என்பதை நாம் எல்லாருமே மதித்துணர முடிகிறது.
அப்படிப்பட்ட ஆட்கள் ஆவிக்குரியவிதத்தில் வேதனைகளை அனுபவிக்கவேண்டியதுதான். நேர்மை அல்லது பாலுறவு சம்பந்தப்பட்ட ஒழுக்கத்தைச் சற்றும் மதிக்காத ஆட்களுடன் வர்த்தக அல்லது தோழமை விவகாரங்கள் ஒருவரை ஆரோக்கியமற்ற செல்வாக்குகளுக்கு உட்படுத்துகிறது. இப்படிப்பட்ட நிலைக்குத் திறந்திருக்கும் கிறிஸ்தவர்கள் இந்த செல்வாக்குகளை எதிர்த்துப் போராட வேண்டியவர்களாகவும் பொதுவாகத் தங்களுடைய மனச்சாட்சியுடன் போராட வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள். கடைசியில் சிலர் தங்களுடைய கூட்டாளிகள் போல மாறிவிடுகிறார்கள், விசுவாசத்திலிருந்து முற்றிலும் வழிவிலகிப் போய்விடுகிறார்கள். (1 கொரிந்தியர் 15:33) அப்படிப்பட்ட ஆவிக்குரிய மற்றும் ஒழுக்கத்தின் வீழ்ச்சிக்கு வழிநடத்தும் பணசம்பந்தமான வெற்றியில் என்ன பலன் இருக்கிறது? இயேசு சொன்ன விதமாக: “மனுஷன் உலக முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?”—மத்தேயு 16:26.
மேன்மையான ஒரு வெற்றி
பின்வரும் பைபிள் புத்திமதிக்குச் செவிகொடுப்பது ஞானமான காரியம் என்பதை அனுபவம் உறுதிப்படுத்தியுள்ளது: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக” நிரூபியுங்கள். “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.” ஆம், நாம் உலகத்தைப் பின்பற்றாமல் இருப்பது அல்லது அது அளிப்பவற்றிற்கு நாம் ஏக்கம் கொள்ளாமல் இருப்பது ஞானமானது. கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதே நம்முடைய முக்கிய அக்கறையாக இருக்க வேண்டும், இதை நாம் உலக காரியங்களை நாடிச் செல்வதால் பெற்றுக்கொள்ள முடியாது.—ரோமர் 12:2; 1 யோவான் 2:15, 16.
தன்னுடைய ஆஸ்தியில் நம்பிக்கை வைத்த ஒரு விவசாயினுடைய உதாரணத்தின் மூலம் இயேசு இதை விளக்கினார். கடவுள் அவனிடம் சொன்னார்: “மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்?” தம்முடைய உவமையின் கருத்தை சுருங்கச் சொல்கிறவராய் இயேசு சொன்னார்: “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான்.” “ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தியிருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல” என்று இயேசு காண்பிப்பவராயிருந்தார்.—லூக்கா 12:15–21.
இதே காரியத்தைக் காண்பிக்க இயேசு ஓர் இளம் அதிபதியின் உயிருள்ள உதாரணத்தைப் பயன்படுத்தினார். இவன் உலகப்பிரகாரமான கருத்தில் வெற்றிகரமானவனாயிருந்தான், அவன் ஒழுக்கத்தின் விஷயத்திலும் நேர்மையாக இருக்க விரும்பினான் என்பது தெளிவாயிருந்தது. என்றபோதிலும், இயேசு அவனை வெற்றியின் சின்னமாகப் பயன்படுத்தவில்லை. அப்படிப்பட்டவர்கள் “தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது” கடினமாயிருக்கும் என்று இயேசு சொன்னார். அந்த நிலையிலிருக்கும் அநேகர் பொருளாசை சம்பந்தமாகத் தங்களுடைய அக்கறைகளைத் தியாகம் செய்யவும் கடவுளுடைய ராஜ்யத்தைத் தங்களுடைய வாழ்க்கையின் பிரதான இலக்காக நாடவும் தயாராயிருப்பதில்லை.—லூக்கா 18:18–30.
ஆவிக்குரிய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுப்பதை அழுத்தமாகக் கூறுகிறவராய் இயேசு மேலுமாகக் கூறினார்: “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள், இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” எனவே அவசியமான காரியங்களிலும் நாம் முதல் வைப்பவை சரியானவையாக இருக்கவேண்டும். நாம் உண்மையிலேயே வெற்றி பெற்றிட—சந்தோஷமும் உண்மையான திருப்தியும் பெற்றிட—ஆவிக்குரிய காரியங்கள் பொருள் சம்பந்தமான காரியங்களுக்கு முன்னதாக வரவேண்டும்.—மத்தேயு 6:31–33.
ஆவிக்குரிய வெற்றியை நாடிக்கொண்டிருங்கள்
எனவே கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் நாடித்தேடுவதன் மூலம் வெற்றி காண்பதே ஞானமான போக்கு. இதில் “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிய” பைபிளை வாசிப்பது உட்படுகிறது. அவருடைய சித்தம் உங்களுடைய வாழ்க்கையில் அவருடைய சேவையை முதலாவது வைப்பதை, கிறிஸ்தவ ஊழியத்தில் முழு பங்கைக் கொண்டிருப்பதை, கிறிஸ்தவ கூட்டங்களை அசட்டை செய்யாதிருப்பதை, மற்றும் கடவுளுடைய நீதிக்கு இசைவாக நீங்கள் ஒழுக்க ரீதியில் நேர்மையான வாழ்க்கை வாழ்வதை உட்படுத்துகிறது. இந்தக் காரியங்கள் பொருள் சம்பந்தமான அக்கறைகளைக் கருதி ஒதுக்கி வைக்கப்படக்கூடாது, அல்லது அவற்றால் மறைக்கப்படக்கூடாது. செல்வந்தனான அந்த இளம் அதிபதிக்கு இயேசு கொடுத்த ஆலோசனையின் கருத்து இதுவே: “உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றி வா.”—ரோமர் 12:2; லூக்கா 18:22.
இதைச் செய்வதில் நீங்கள் உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்துடைய சொந்த ஆவிக்குரிய தன்மையை வளர்ப்பவர்களாயிருப்பீர்கள். மேட்டிமையான எண்ணத்தைக் கொள்வதற்குப் பதிலாக அல்லது உங்களுடைய நம்பிக்கையை அநிச்சயமான ஐசுவரியத்தில் வைப்பதைவிட, “நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாக . . . நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கும்” ஆட்கள் மத்தியில் நீங்கள் இருப்பீர்கள். ஆம், மீண்டும் நிலைநாட்டப்பட்ட பூமிக்குரிய பரதீசில் நித்திய ஜீவன் என்பது உங்களுடைய இலக்காக இருக்கலாம், ஏனென்றால் “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” இதற்கு மேலாக வேறு சிறந்த வெற்றி இருக்க முடியாது.—1 தீமோத்தேயு 6:17–19; 1 யோவான் 2:17. (w88 8⁄15)
[பக்கம் 5-ன் படம்]
பணம்தான் வெற்றியின் உயிர்நிலையா?
[பக்கம் 7-ன் படம்]
உயர் கல்வியின் மூலம் வெற்றியை நாடிட பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அனுப்பிவிடுவார்களா?