நிச்சயமற்ற நிலையை உங்களால் சமாளிக்க முடியும்
“உறுதியாக நடக்கும்!” “நிச்சயம் நடக்கும்!” “உத்தரவாதம் உள்ளது!” இதுபோன்ற வார்த்தைகள் அநேக தடவை உங்களுடைய காதில் விழுந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நம்முடைய அன்றாட வாழ்க்கையில், எல்லாவற்றிற்கும் அந்தளவு உறுதியளிக்க முடியாது. என்ன நடக்கும் ஏது நடக்குமென முன்னதாகவே திட்டவட்டமாய்க் கூற முடியாதளவுக்கு வாழ்க்கை நிச்சயமற்றதாக இருக்கிறது. எனவே நூறுசதம் உறுதியளிக்க ஏதேனும் உண்டாவென நாம் அடிக்கடி யோசிக்கிறோம். ஐயப்பாடும் நிச்சயமற்ற நிலையும் வாழ்க்கையின் அங்கமாக ஆகிவிட்டதுபோல் தோன்றுகிறது.
தாங்களும் தங்கள் குடும்பமும் பாதுகாப்புடனும் சந்தோஷத்துடனும் வாழ வேண்டும் என அநேகர் விரும்புவது புரிந்துகொள்ளத்தக்கதே. பொதுவாக, பணமும் பொருளும் தங்களுக்கு சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் தருமென நினைத்து அதற்காக அவர்கள் படாத பாடு படுகிறார்கள். ஆனால் அப்படி பார்த்துப் பார்த்து சேர்த்து வைத்த பொருட்களெல்லாம் பூமியதிர்ச்சி, சூறாவளி, விபத்து போன்றவை நேரிடுகையில் அல்லது கொடூர குற்றச்செயல் இழைக்கப்படுகையில் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றன. கொடிய வியாதி வந்தாலோ, விவாகரத்து ஏற்பட்டாலோ, வேலை பறிபோனாலோ திடீரென வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடுகிறது. உண்மைதான், இப்படிப்பட்ட காரியங்கள் உண்மையில் உங்களுக்கு ஏற்படாது போகலாம். இருந்தாலும், எந்த நேரத்திலும் படுமோசமான எதுவும் நடக்கலாம் என்பதை அறிந்திருப்பதே நிம்மதியற்ற நிலையையும் சஞ்சலத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனால் பிரச்சினைகள் இத்துடன் நின்றுவிடுவதில்லை.
நிச்சயமற்ற நிலை என்பதற்கு இணையான வார்த்தை ஐயப்பாடு. தீர்மானம் எடுக்கையில் பெரும்பாலும் குறுக்கிடும் நிச்சயமற்ற நம்பிக்கை அல்லது கருத்தே ஐயப்பாடு என ஓர் அகராதி விளக்கமளிக்கிறது. மேலும், “முக்கியமான ஒன்றைக் குறித்து நிச்சயமற்று இருப்பது சஞ்சலத்திற்கும் கவலைக்கும் பெரும் காரணமாகிறது” என உங்கள் மனதைக் கட்டுப்படுத்துதல் என்ற ஆங்கில நூல் சொல்கிறது. தெளிவுபடுத்தப்படாத ஐயப்பாடுகள் கவலையிலும் விரக்தியிலும் கோபத்திலும் போய் முடியலாம். ஆம், என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என நினைத்து நினைத்து கவலைப்படுவது மனோ ரீதியிலும் உடல் ரீதியிலும் நம்மை பாதிக்கும்.
இதனால் சிலர் முற்றிலும் எதிர்மாறாக சிந்திக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பிரேசிலை சேர்ந்த இளைஞனின் மனோபாவமே அவர்களுக்கும் இருக்கிறது; அவன் இவ்வாறு சொன்னான்: “நாளைக்கு நடப்பதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? இன்றைய பாடு இன்றைக்கு, நாளைய பாடு நாளைக்கு.” நம் கையில் ஒன்றுமில்லை என்பதுபோல், “புசிப்போம் குடிப்போம்” என்ற மனப்பான்மையோடு இருப்பது ஏமாற்றத்திலும், கவலையிலும், கடைசியில் மரணத்திலும் போய் முடியும். (1 கொரிந்தியர் 15:32) படைப்பாளராகிய யெகோவா தேவனிடம் திரும்புவது மிகவும் நல்லது; “அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை” என அவரைக் குறித்து பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:17) கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை ஆராயும்போது, வாழ்க்கையில் சந்திக்கும் நிச்சயமற்ற நிலையை சமாளிப்பதற்குத் தேவையான பயனுள்ள புத்திமதியையும் வழிநடத்துதலையும் நாம் கண்டடைவோம். இன்று இந்தளவுக்கு நிச்சயமற்ற நிலை நிலவுவதற்குரிய காரணத்தைப் புரிந்துகொள்ளவும் அது நமக்கு உதவும்.
நிச்சயமற்ற நிலைக்குக் காரணம்
வாழ்க்கையைப் பற்றி பைபிள் எதார்த்தமான கண்ணோட்டத்தை அளிப்பதுடன் நிச்சயமற்ற நிலையிடமும் மாற்றத்திடமும் சரியான மனநிலையை வளர்த்துக்கொள்ளவும் உதவுகிறது. குடும்ப உறவுகள், சமூக அந்தஸ்து, புத்திசாலித்தனம், நல்லாரோக்கியம் போன்றவை ஓரளவு பாதுகாப்பளிக்கலாம். இருந்தாலும், அவை நிரந்தரமானவை என்றோ, சுகமான வாழ்வளிக்கும் என்றோ நாம் கருதிவிடக் கூடாதென பைபிள் காட்டுகிறது. “ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது” என ஞானமுள்ள ராஜாவாகிய சாலொமோன் சொன்னார். ஏன் அப்படி சொன்னார்? “அவர்களெல்லாருக்கும் சமயமும் எதிர்பாராத சம்பவமும் நேரிடுகின்றன.” எனவே, “மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவது போலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவது போலவும், மனுபுத்திரர் பொல்லாத காலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்” என சாலொமோன் ராஜா எச்சரித்தார்.—பிரசங்கி 9:11, 12; NW.
தாங்க முடியாத கவலையும் நிச்சயமற்ற நிலையும் சகல ஜனங்களையும் பாதிக்கும் ஒரு காலப் பகுதியைக் குறித்து இயேசு கிறிஸ்துவும் சொன்னார். “சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின் மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின் மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்” என தெள்ளத் தெளிவாக விவரித்தார். என்றாலும், நல்மனம் படைத்தவர்களுக்கு சந்தோஷமளிக்கும் பின்வரும் குறிப்பையும் இயேசு சொன்னார்: “அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.” (லூக்கா 21:25, 26, 31) அதேவிதமாக, நிச்சயமற்ற ஓர் எதிர்காலத்தை எண்ணி கவலைப்படுவதற்கு பதிலாக கடவுள் மீதுள்ள நம் விசுவாசம் நிச்சயமற்ற நிலைக்கும் அப்பால் தெரியும் ஒளிமயமான, பாதுகாப்பான எதிர்காலத்தைக் காண நமக்கு உதவுகிறது.
‘நம்பிக்கையின் பூரண நிச்சயத்தைக் கொண்டிருத்தல்’
நாம் கேட்கிற, வாசிக்கிற, பார்க்கிற அனைத்தையும் அப்படியே நம்ப முடியாவிட்டாலும் படைப்பாளர் மீது நம்பிக்கை வைப்பதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. அவர் சர்வவல்லவர் மட்டுமல்ல, தம் பூமிக்குரிய பிள்ளைகளிடம் அக்கறை காட்டும் அன்பான தகப்பனாகவும் இருக்கிறார். தம் வாயிலிருந்து பிறக்கும் வார்த்தையைப் பற்றி கடவுள் குறிப்பிடுகையில், “அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்” என சொன்னார்.—ஏசாயா 55:11.
கடவுளிடமிருந்து பெற்ற சத்தியத்தை இயேசு கிறிஸ்து கற்பித்தார். அவர் பேசியதைக் கேட்ட அநேகர் அதை உறுதியோடும் நிச்சயத்தோடும் ஏற்றுக்கொண்டார்கள். உதாரணமாக, இயேசு சொன்னதை கேட்டிருந்த பெண்ணிடம் நல்மனம் படைத்த சமாரியர்கள் சிலர், “உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலக ரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம்” என சொன்னார்கள். (யோவான் 4:42) அதேவிதமாகவே இன்று பாதுகாப்பற்ற காலத்தில் வாழ்ந்தாலும் எதை நம்ப வேண்டும் என்பதைக் குறித்து நாம் நிச்சயமற்றவர்களாய் இருக்க அவசியமில்லை.
மத நம்பிக்கைகளைக் குறித்ததில், அவற்றைப் புரிந்துகொள்ள முயலுவதற்கு பதிலாக கேள்வி கேட்காமல் அப்படியே அவற்றை நம்பிவிட வேண்டுமென்ற கருத்து அநேகருக்கு இருக்கிறது. ஆனால் பைபிள் எழுத்தாளராகிய லூக்கா அப்படி நினைக்கவில்லை. மற்றவர்கள் தான் எழுதிய ‘விசேஷங்களின் நிச்சயத்தை அறிய வேண்டும்’ என்பதற்காக தீர ஆராய்ந்து, திருத்தமான தகவலை அளித்தார். (லூக்கா 1:3) நம் மத நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத குடும்பத்தாரும் நண்பர்களும், கடைசியில் நமக்கு மனவருத்தமும் ஏமாற்றமுமே மிஞ்சுமென நினைத்து கவலைப்படலாம்; அவர்களிடம் நம் விசுவாசத்தை ஆதரித்துப் பேச தெரிந்திருப்பது அவசியம். (1 பேதுரு 3:15) நம்முடைய நம்பிக்கைக்கான காரணத்தைத் திருத்தமாக அறிந்திருந்தால் மட்டுமே கடவுளை நம்பும்படி மற்றவர்களுக்கு உதவ முடியும். யெகோவாவைக் குறித்து பைபிள் இவ்வாறு விவரிக்கிறது: “அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.”—உபாகமம் 32:4.
“அவர் நீதியும் செம்மையுமானவர்” என்ற அந்தக் கடைசி சொற்றொடரைக் கவனியுங்கள். இதை நம்புவதற்கு நம்மிடம் என்ன ஆதாரமுள்ளது? இந்த வார்த்தைகள் உண்மையானவை என்பதை அப்போஸ்தலன் பேதுரு முழுமையாக நம்பினார். “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்” என ரோம அதிபதியிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் அவர் சொன்னார். (அப்போஸ்தலர் 10:34, 35) ஒருகாலத்தில் புறதேசத்தார் அசுத்தமானவர்களாகவும் ஏற்கத்தகாதவர்களாகவும் கருதப்பட்டார்கள்; அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தாரை தாம் ஏற்றுக்கொள்ளத்தக்கவர்களாக ஆகும்படி கடவுள் வழிநடத்திய விதத்தை சற்று முன்புதான் பேதுரு கண்கூடாக பார்த்திருந்தார், ஆகவேதான் இந்த வார்த்தைகளை அவர் சொன்னார். 60 லட்சத்துக்கும் அதிகமான ‘திரள் கூட்டத்தாரை’—தங்கள் பழைய வாழ்க்கை முறையை விட்டொழித்து நீதியின் பாதையில் நடக்கும் 230-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்தவர்களை—கண்கூடாக காண்கையில், பேதுருவைப் போலவே நாமும் கடவுளுடைய பாரபட்சமற்ற தன்மையையும் நீதியையும் உறுதியாக நம்புகிறோம்.—வெளிப்படுத்துதல் 7:9; ஏசாயா 2:2-4.
மத வெறியர்களையோ கொள்கை வெறியர்களையோ போலின்றி, மெய் கிறிஸ்தவர்களாகிய நாம் மனத்தாழ்மையுடனும் நியாயத்துடனும் நடந்துகொள்ள விரும்புகிறோம். ஆனால் நம் நம்பிக்கையைக் குறித்தும் வருங்கால எதிர்பார்ப்புகளைக் குறித்தும் நிச்சயமற்றவர்களாக இல்லை. “உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்” என முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபிரெயர் 6:12) அதேபோல, பைபிளிலுள்ள நற்செய்தி ‘நம்பிக்கையின் பூரண நிச்சயத்தை’ நமக்கு அளித்திருக்கிறது. பவுல் விளக்கிய விதமாகவே, கடவுளுடைய வார்த்தையில் உறுதியாய் வேரூன்றிய அந்த நம்பிக்கை “ஒருபோதும் ஏமாற்றம் தராது.”—ரோமர் 5:5, பொது மொழிபெயர்ப்பு.
அதுமட்டுமின்றி, பைபிளிலிருந்து நற்செய்தியை மற்றவர்களுக்கு போதிக்கும்போதும் கற்பிக்கும்போதும் அது ஆவிக்குரிய ரீதியில் மட்டுமல்ல, ஆனால் உணர்ச்சி ரீதியிலும் உடல் ரீதியிலும் பாதுகாப்பையும் நிச்சயத்தையும் அவர்களுக்கு அளிக்குமென நாம் உறுதியாக நம்புகிறோம். “எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது” என பவுலைப் போல நாமும் சொல்லலாம்.—1 தெசலோனிக்கேயர் 1:5.
ஆவிக்குரிய பாதுகாப்பில் தற்கால ஆசீர்வாதங்கள்
இன்று வாழ்க்கையில் முழுமையான பாதுகாப்பு கிடைக்குமென நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஓரளவுக்கு ஸ்திரமான, பாதுகாப்பான வாழ்க்கை வாழ நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யலாம். உதாரணமாக, கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தவறாமல் செல்வது நமக்கு ஸ்திரத்தன்மையை அளிக்கும். ஏனென்றால் அங்கு பயனளிக்கும் சரியான நியமங்களும் நெறிமுறைகளும் கற்பிக்கப்படுகின்றன. “இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்” வேண்டுமென பவுல் எழுதினார். (1 தீமோத்தேயு 6:17) நிலையற்ற பொருள்கள் மீதோ ஆசாபாசங்கள் மீதோ அல்ல ஆனால் யெகோவாவின்மீது நம்பிக்கை வைக்க கற்றுக்கொள்வதன் மூலம் முன்பு கவலைகளுக்கும் விரக்திக்கும் அடிமைப்பட்டிருந்தவர்கள் தங்களை சுற்றியிருந்த சங்கிலிகளை உடைத்துக்கொண்டு வெளிவர முடிந்திருக்கிறது.—மத்தேயு 6:19-21.
சபையில் நாம் அன்பான சகோதரத்துவத்தை அனுபவித்து மகிழ்கிறோம். இது பல்வேறு வழிகளில் உதவியையும் ஆதரவையும் அளிக்கிறது. ஊழியம் செய்கையில் ஒரு கட்டத்தில், பவுலும் அவருடைய பயண கூட்டாளிகளும் ‘தாங்க முடியாத சுமையை’ உணர்ந்தார்கள், அவர்களுக்கு “பிழைப்போம் என்னும் நம்பிக்கையே இல்லாமல் போயிற்று.” அந்த சமயத்தில் பவுல் ஆதரவையும் உதவியையும் எங்கிருந்து பெற்றார்? கடவுள் மீது அவருக்கிருந்த நம்பிக்கை ஒருபோதும் ஆட்டங்காணவில்லை என்பது உண்மைதான். எனினும் அவருக்கு உதவிக்கரம் நீட்டிய உடன் கிறிஸ்தவர்களிடமிருந்து உற்சாகத்தையும் ஆறுதலையும் பெற்றார். (2 கொரிந்தியர் 1:8, 9, பொ.மொ; 7:5-7) இன்று இயற்கை பேரழிவுகளோ வேறு பேரிடர்களோ தாக்குகையில் உடன் கிறிஸ்தவர்களுக்கும் தேவையிலுள்ள மற்றவர்களுக்கும் பொருள் சம்பந்தமாகவும், ஆவிக்குரிய விதத்திலும் உதவி தேவைப்படுகிறது; அவற்றை அளிக்க எப்போதும் நம் கிறிஸ்தவ சகோதரர்களே முதலில் ஓடோடி வருகிறார்கள்.
வாழ்க்கையில் சந்திக்கும் நிச்சயமற்ற நிலைமைகளை சமாளிக்க நமக்கு உதவும் மற்றொரு வழி ஜெபம். எதிர்பாராத அழுத்தத்தை எதிர்ப்படுகையில் எப்போதும் நம் அன்புள்ள பரலோக தகப்பனை ஜெபத்தில் அணுகலாம். “சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.” (சங்கீதம் 9:9) மானிட பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க தவறலாம். ஆனால் கடவுள் நம்முடைய கவலைகளையும் நிச்சயமற்ற உணர்வுகளையும் சமாளிக்கத் தேவையான உதவியளிப்பதற்கு மனமுள்ளவராக இருக்கிறார். யெகோவாவிடம் ஜெபத்தில் நம் கவலைகள் அனைத்தையும் கொட்டிவிட்டு, “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய்” அவர் செய்வார் என நாம் நிச்சயமாய் இருக்கலாம்.—எபேசியர் 3:20.
தவறாமல் கடவுளிடம் ஜெபிக்கிறீர்களா? கடவுள் உங்கள் ஜெபங்களைக் கேட்கிறார் என உறுதியாக நம்புகிறீர்களா? “கடவுளிடம் ஜெபிக்க வேண்டுமென என் அம்மா சொன்னார். ஆனால், ‘யாருன்னுகூட தெரியாத ஒருவரிடம் நான் ஏன் பேசணும்’ என நான் நினைத்ததுண்டு. எனினும் கடவுளுடைய உதவி நமக்கு தேவை என்பதையும் அவரிடம் ஜெபத்தில் நாம் பேச வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள நீதிமொழிகள் 18:10 எனக்கு உதவியது” என சாவோ போலோவைச் சேர்ந்த ஓர் இளம் பெண் சொன்னாள். ‘யெகோவாவின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்’ என அந்த வசனம் சொல்கிறது. தவறாமல் அவரிடம் பேசுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளாவிட்டால் உண்மையில் நாம் எப்படி நம்பிக்கையையும் உறுதியையும் வளர்த்துக்கொள்ள முடியும்? ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ தினமும் மனதார ஜெபிப்பதை நாம் பழக்கப்படுத்திக் கொள்வது அவசியம். “ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள்” என இயேசு சொன்னார்.—லூக்கா 21:36.
வேறொன்றைக் குறித்தும் நாம் உறுதியோடிருக்கலாம்; அதுவே கடவுளுடைய ராஜ்யத்தின் மீதுள்ள நம் நம்பிக்கை. தானியேல் 2:44-லுள்ள வார்த்தைகளைக் கவனியுங்கள்: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” அந்த நம்பிக்கை உறுதியானது, அது நடக்குமென நாம் நிச்சயமாய் இருக்கலாம். பெரும்பாலும் மனிதரின் வாக்குறுதிகள் பொய்த்துப் போகின்றன, ஆனால் யெகோவாவின் வார்த்தையை நாம் எப்போதும் நம்பலாம். கடவுள் நம்பத்தகாதவராக அல்ல ஆனால் நம்பத்தக்க கன்மலையைப் போல் நமக்கு இருக்கிறார். “என் கடவுள்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம்; எனக்கு மீட்பளிக்கும் வல்லமை; என் அரண்; என் தஞ்சம்; என் மீட்பர். கொடுமையினின்று என்னை விடுவிப்பவரும் அவரே” என சொன்ன தாவீதைப் போல் நாம் உணரலாம்.—2 சாமுவேல் 22:3, பொ.மொ.
முன்னர் குறிப்பிடப்பட்ட உங்கள் மனதைக் கட்டுப்படுத்துதல் புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “நடக்க சாத்தியமுள்ள மோசமான காரியங்களைக் குறித்து நீங்கள் சிந்திக்க சிந்திக்க அவை உங்கள் மனதில் நிஜமானவையாகவே ஆகிவிடலாம், பின்னர் அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பதைக் குறித்து சிந்திப்பது பெரும் கஷ்டமாகிவிடுகிறது.” அப்படியிருக்கையில் உலக கவலைகளையும் ஐயப்பாடுகளையும் நம்மீது இழுத்துப் போட்டுக்கொண்டு நம்மை நாமே ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்? மாறாக, இந்த உலகின் நிச்சயமற்ற காரியங்களை அல்ல, ஆனால் கடவுள் தரும் நிச்சயமான காரியங்களை நம்புங்கள். நூறுசதம் நிறைவேறும் யெகோவாவின் வாக்குறுதிகளில் நம் விசுவாசத்தை உறுதியாய் காத்துக்கொள்கையில், “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை [“ஏமாற்றமடைவதில்லை,” NW]” என்ற இந்த உறுதி நமக்கு அளிக்கப்படுகிறது.—ரோமர் 10:11.
[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]
மனிதகுலத்திற்கு எதிர்கால ஆசீர்வாதங்களை கடவுளுடைய வார்த்தை உறுதியளிக்கிறது
[பக்கம் 30-ன் சிறு குறிப்பு]
‘அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் ஏமாற்றமடைவதில்லை’
[பக்கம் 31-ன் படம்]
ராஜ்ய நற்செய்தி ஜனங்களுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது