உண்மையான வாழ்வைப் பொக்கிஷமாகப் போற்றுங்கள்
இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? ‘உண்மையான வாழ்வை உறுதியாகப் பற்றிக்கொள்ளும்படியாக’ நம்மை உற்சாகப்படுத்துவதன் மூலம் இன்னும் அதிகமிருப்பதை பைபிள் சுட்டிக்காட்டுகிறது. (1 தீமோத்தேயு 6:17-19) நம்முடைய தற்போதைய வாழ்வு உண்மையான வாழ்வாக இல்லாவிடில், உண்மையான வாழ்வு எது?
முன்சொல்லப்பட்ட வேதவாக்கியத்தின் சூழமைவு, கடவுள் பயமுள்ள நபர் ‘நித்திய ஜீவனையே’ உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதைக் காண்பிக்கிறது. (1 தீமோத்தேயு 6:12) பெரும்பாலானவர்களுக்கு, இது பூமியின்மீது நித்திய ஜீவனை அர்த்தப்படுத்துகிறது. முதல் மனிதனாகிய ஆதாம், ஒரு பரதீஸிய பூமியில் என்றுமாக வாழும் எதிர்பார்ப்பை உடையவனாக இருந்தான். (ஆதியாகமம் 1:26, 27) “நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப்” புசித்தால் மட்டுமே அவன் மரித்துப்போவான். (ஆதியாகமம் 2:17) ஆனால் ஆதாமும் அவனுடைய மனைவியாகிய ஏவாளும் கீழ்ப்படியாமல் அந்த விருட்சத்திலிருந்து புசித்ததன் காரணமாக, கடவுள் மரணத் தீர்ப்பை அறிவித்தார். ‘அதை புசித்த நாளிலே’ அவர்கள் கடவுளுடைய நோக்குநிலையில் மரித்தவர்களாகி, சரீரப்பிரகாரமான மரணத்துக்குள் விழ ஆரம்பித்தனர். அவர்களுடைய வாழ்க்கை ஆரம்பத்தில் அவர்கள் அனுபவித்து மகிழ்ந்த தரமானதாக இனிமேலும் இருக்கவில்லை.
“உண்மையான வாழ்வு”க்குச் செல்லும் வழி
‘உண்மையான வாழ்வைக்’ கூடிய காரியமாக்குவதற்கு, யெகோவா தேவன் மனிதவர்க்கத்தை விடுவிப்பதற்கான ஓர் ஏற்பாட்டைச் செய்தார். இந்த ஏற்பாட்டை நாம் புரிந்துகொள்வதற்கு உதவியாக, சிறிய ஒரு தொழிற்சாலையை கற்பனைசெய்வோமாக. முதலில் வேலைசெய்த வேலையாள் பல வருடங்களுக்கு முன்னால் அவற்றை இயக்குபவருக்குக் கொடுக்கப்பட்ட கையேட்டை அசட்டை செய்து எல்லா இயந்திரங்களையும் கெடுத்துவிட்டிருந்தபடியால் அதிலிருந்த எல்லா இயந்திரங்களும் குறையுள்ளதாய் ஆபரேட்டர்களுக்குத் தொந்தரவைக் கொடுக்கின்றன. தற்போது வேலைசெய்யும் ஆபரேட்டர்கள் தங்களிடமிருப்பதை வைத்து தங்களாலான மிகச் சிறந்ததைச் செய்யவேண்டும். தொழிற்சாலை சொந்தக்காரர் வேலையாட்களுக்கு உதவுவதற்காக இயந்திரங்களைத் திரும்ப சீர்படுத்துவதற்கு விரும்புகிறார், அந்த நோக்கத்துக்காக தேவையான நிதியை ஒதுக்கிவைக்கிறார்.
முதல் ‘இயந்திர ஆபரேட்டரான’ ஆதாம் தனக்குக் கொடுக்கப்பட்ட உயிரைப் பொக்கிஷமாக போற்றவில்லை. ஆகவே, சரியாக வேலைசெய்யாத ஒரு இயந்திரத்தைப் போன்றே, அபூரணமான ஒரு வாழ்வை அவன் தன்னுடைய சந்ததிக்குக் கடத்தினான். (ரோமர் 5:12) நிலைமையைச் சரியாக்க முடியாத, தொழிற்சாலையில் பின்னால் ஆபரேட்டர்களாக வேலைபார்த்தவர்களைப் போல, ஆதாமின் சந்ததி தங்களுக்காக உண்மையான வாழ்வை முயன்றுபெற இயலாதவர்களாக இருந்திருக்கின்றனர். (சங்கீதம் 49:7) நம்பிக்கையற்றதுபோல தோன்றின இந்த நிலைமையைச் சரிசெய்ய, மனிதவர்க்கம் நித்திய ஜீவனைத் திரும்பப் பெறும்பொருட்டு யெகோவா தம்முடைய ஒரே பேறான மகனை பூமிக்கு அனுப்பினார். (லூக்கா 1:35; 1 பேதுரு 1:18, 19) மனிதவர்க்கத்துக்காக ஒரு பலிக்குரிய மரணத்துக்கு உட்பட்டதன் மூலம், கடவுளுடைய ஒரே பேறான மகனாகிய இயேசு கிறிஸ்து தேவையான நிதியை—ஆதாம் இழந்ததற்கு ஒப்பான ஒரு உயிரை அளித்தார். (மத்தேயு 20:28; 1 பேதுரு 2:22) மதிப்புள்ள இந்தப் பலியினால், இப்பொழுது உண்மையான வாழ்வை அளிக்க யெகோவாவுக்கு ஆதாரம் இருக்கிறது.
கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு, இயேசுவினுடைய மீட்பின் பலி பரதீஸிய பூமியில் நித்திய வாழ்வை அர்த்தப்படுத்தும். (சங்கீதம் 37:29) இந்த நம்பிக்கையானது அர்மகெதோன் என்று குறிப்பிடப்படும் “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்”தைத் தப்பிப்பிழைக்கும் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 16:14-16) பூமியிலிருந்து அது எல்லா அக்கிரமத்தையும் நீக்கிவிடும். (சங்கீதம் 37:9-11) அந்தச் சமயத்திற்கு முன்பாக மரித்துவிடும் கடவுளுடைய ஞாபகத்தில் இருப்பவர்கள் பூமியின் மீது திரும்ப நிலைநாட்டப்படும் பரதீஸில் உயிர்த்தெழுப்பப்பட்டு, கடவுளுக்குக் கீழ்ப்படிகிற அனைவருக்கும் காத்திருக்கும் உண்மையான வாழ்வை அனுபவிக்கும் எதிர்பார்ப்பை உடையவர்களாக இருப்பர்.—யோவான் 5:28, 29.
நம்முடைய தற்போதைய உயிரைப் பேணிக்காப்பதற்கான அவசியம்
தற்போதைய நம்முடைய உயிரின் புனிதத்தன்மைக்குச் சரியாகவே அவமதிப்பைக் காண்பிக்கலாம் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. தொழிற்சாலையின் ஒரு சொந்தக்காரர் இயந்திரத்தைப் பராமரிக்காமல் இருக்கும் ஒரு வேலையாளுக்கு அதை மறுபடியும் சீர்படுத்துவதற்காக நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பாரா? மாறாக, முதலாளி மறுபடியும் சீர்படுத்தப்பட்ட இயந்திரத்தை பழையதை பராமரிப்பதற்கு தன்னால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்த நபரிடமாக ஒப்படைத்துவிடுவார் அல்லவா?
உயிர் யெகோவாவிடமிருந்து வரும் மதிப்புள்ள ஒரு பரிசாகும். உதாரகுணமுள்ள அந்தப் பரிசின் ஊற்றுமூலராக, அதை நாம் பேணிக்காக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். (சங்கீதம் 36:9; யாக்கோபு 1:17) பூமியிலுள்ள மனிதர்கள் மீது யெகோவாவின் அக்கறையைக் குறித்து பேசுகையில், இயேசு சொன்னார்: “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.” (லூக்கா 12:7) யெகோவா கொலைசெய்யக் கூடாது என்பதாக இஸ்ரவேலருக்குக் கட்டளைகொடுத்திருந்தார், இயற்கையாகவே இது ஒருவர் தன்னையே கொலைசெய்துகொள்ளக்கூடாது என்பதையும் உட்படுத்தியது. (யாத்திராகமம் 20:13) இது தற்கொலையை ஒரு தெரிவாக கருதுவதைத் தவிர்ப்பதற்கு நமக்கு உதவிசெய்கிறது.
நம்முடைய நலனில் யெகோவாவின் அன்புள்ள அக்கறையை அறிந்தவர்களாக, கடவுள் பயமுள்ள ஆட்கள் இன்றைய பழக்கவழக்கங்களை மதிப்பிடுவதற்கு பைபிள் நியமங்களைப் பொருத்திப் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக, உண்மை கிறிஸ்தவர்கள் ‘மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, தங்களைச் சுத்திகரித்துக்கொண்டு பரிசுத்தமாக்குதலை தேவபயத்தோடே பூரணப்படுத்துவது’ தேவையாக இருப்பதால், அவர்கள் புகையிலையையும் மனதை மாற்றக்கூடிய அடிமைப்படுத்தும் போதைப்பொருட்களையும் அறவே வெறுத்துத் தள்ளுகின்றனர்.—2 கொரிந்தியர் 7:1.
‘அமைதியான இருதயத்தைக்’ காத்துக்கொண்டு ஒழுக்கமற்ற நடத்தையைத் தவிர்க்கும்படியான அவருடைய புத்திமதியில் மனித உயிரில் கடவுளுக்கிருக்கும் அக்கறை மேலுமாக காணப்படுகிறது. (நீதிமொழிகள் 14:30; கலாத்தியர் 5:19-21) இந்த உயர்ந்த தராதரங்களைப் பின்பற்றுவதன் மூலம், உடல்நலத்தைக் கெடுக்கும் கோபம் மற்றும் பாலுறவினால் கடத்தப்படும் நோய்கள் போன்ற இப்படிப்பட்ட காரியங்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுகிறோம்.
தம்முடைய மக்களின் உயிர்களின்மீது யெகோவாவின் அக்கறை, அளவுக்கு அதிகமாக புசித்தல் மற்றும் அளவுக்கு அதிகமாக குடித்தல் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்கும்படியான அவருடைய புத்திமதியிலிருந்தும் தெளிவாக தெரிகிறது. (உபாகமம் 21:18-21; நீதிமொழிகள் 23:20, 21) பேராசையுள்ள மக்களும் குடிவெறியர்களும் கடவுளுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டார்கள், அதாவது உண்மையான வாழ்வை ஒருபோதும் அனுபவிக்க மாட்டார்கள் என்பதாக கிறிஸ்தவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். (1 கொரிந்தியர் 6:9, 10; 1 பேதுரு 4:3) நிதானத்தை ஊக்குவிப்பதன் மூலம், யெகோவா நாம்தாமே பயனடைவதற்கு போதிக்கிறார்.—ஏசாயா 48:17.
நாம் கடவுளுடைய தராதரங்களின்படி வாழும்போது, நம்முடைய தற்போதைய உயிரைப் பொக்கிஷமாக போற்றுவதைக் காண்பிக்கிறோம். நிச்சயமாகவே, உண்மையான வாழ்வு இன்னும் அதிக முக்கியத்துவமுள்ளதாக இருக்கிறது. அது நித்தியமாக இருப்பதன் காரணமாக, மெய்க் கிறிஸ்தவர்கள் தங்களுடைய தற்போதைய உயிரைக் காட்டிலும் அதிக முக்கியத்துவத்தை அதற்குக் கொடுக்கின்றனர். இயேசு கிறிஸ்து தம்முடைய உயிரை பலிசெலுத்திய போது, அவர் யெகோவாவின் சித்தத்துக்குத் தம்மைக் கீழ்ப்படுத்தினார். தம்முடைய தந்தைக்குக் கீழ்ப்படிவதானது, பூமியில் உயிரோடிருப்பதைக் காட்டிலும் அவருக்கு மிக அதிகத்தை அர்த்தப்படுத்தியது. இயேசுவின் போக்கு, அவர் உயிர்த்தெழுப்பப்படுவதிலும் பரலோகத்தில் சாவாமையுள்ள உயிரைப் பெற்றுக்கொள்வதிலும் விளைவடைந்தது. (ரோமர் 6:9) அவருடைய மரணம், மீட்பின் பலியில் விசுவாசத்தை அப்பியாசிக்கும் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு நித்திய ஜீவனையும்கூட அர்த்தப்படுத்துகிறது.—எபிரெயர் 5:8, 9; 12:2.
இரத்தத்தின்பேரில் இன்றியமையாத சட்டம்
இயேசுவைப் பின்பற்றுவோர் அவருடைய சிந்தனையைப் பிரதிபலிப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. கிறிஸ்து செய்தவிதமாகவே அவர்கள் எல்லா காரியங்களிலும் கடவுளைப் பிரியப்படுத்த நாடுகின்றனர். ஒரு காரியமானது, ஒருசில மருத்துவர்கள் உயிர்காப்பது என்பதாக அழைக்கும் இரத்தமேற்றுதல்களை அவர்கள் ஏன் மறுக்கின்றனர் என்பதை இது விளக்குகிறது. இரத்தமேற்றுதல்களை மறுப்பதன் மூலம் ஒரு நபர் எவ்விதமாக தான் உண்மையான வாழ்வைப் பொக்கிஷமாக போற்றுவதைக் காண்பிக்கிறார் என்பதை நாம் பார்க்கலாம்.
இயேசு கிறிஸ்துவைப் போலவே, உண்மை கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பார்வையில் உயிருள்ளவர்களாக இருக்க விரும்புகின்றனர், அது அவருக்கு முழுமையாகக் கீழ்ப்பட்டிருப்பதைத் தேவைப்படுத்துகிறது. கிறிஸ்துவைப் பின்பற்றுவோருக்குக் கடவுளுடைய வார்த்தை இவ்விதமாக கட்டளையிடுகிறது: “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருங்குண்டு செத்ததற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்”டும். (அப்போஸ்தலர் 15:28, 29) கிறிஸ்தவர்களைக் கட்டுப்படுத்தும் கட்டளைகளுள் இரத்தத்தைப்பற்றிய இந்தக் கட்டளை ஏன் சேர்க்கப்பட்டது?
இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை இரத்தத்திலிருந்து விலகியிருப்பதைத் தேவைப்படுத்தியது. (லேவியராகமம் 17:13, 14) கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை. ஆனால் இரத்தத்தைப் புசிக்கக்கூடாது என்ற கட்டளை நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பிருந்தே இருந்ததை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; பிரளயத்துக்குப் பின்பு அது ஏற்கெனவே நோவாவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. (ஆதியாகமம் 9:3, 4; கொலோசெயர் 2:13, 14) நோவாவின் சந்ததியிலிருந்து தோன்றியிருக்கும் பூமியிலுள்ள ஜனங்கள் அனைவருக்கும் இந்தக் கட்டளைப் பொருந்துவதாக இருந்தது. (ஆதியாகமம் 10:32) மேலுமாக, மோசேயின் நியாயப்பிரமாணம் இரத்தத்தின் புனிதத்தன்மையைக் கடவுள் வற்புறுத்துவதற்கான காரணத்தைக் காண்பதற்கு நமக்கு உதவிசெய்கிறது. எந்த வகையான இரத்தத்தையும் புசிப்பதிலிருந்து இஸ்ரவேலரை விலக்கியபின்பு, கடவுள் இவ்வாறு சொன்னார்: “மாம்சத்தின் உயிர் இரத்தத்திலிருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன். ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.” (லேவியராகமம் 17:11) இரத்தமானது பலிபீடத்தின்மேல் பலிக்குரிய உபயோகத்துக்காக கடவுளால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இரத்தத்தின் புனிதத்தன்மையைப் பற்றிய கட்டளை பூமியிலுள்ள உயிர்கள் அனைத்தின்மீதும் அவருடைய அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. (எசேக்கியேல் 18:4; வெளிப்படுத்துதல் 4:11) யெகோவாவின் நோக்குநிலையிலிருந்து நம்முடைய உயிரைக் காண்கையில், அது நமக்கு உரியதாக இல்லாமல், ஆனால் கடவுளால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக மாத்திரமே இருக்கிறது என்பதை உணருகிறோம்.
நம்முடைய உதாரணத்திலுள்ள ஆபரேட்டர் ஒரு இயந்திரத்துக்குப் பொறுப்புள்ளவராக இருந்தது போலவே, நம்முடைய தற்போதைய உயிர் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய இயந்திரத்துக்குப் பழுதுபார்ப்பது தேவையாக இருந்து, ஆபரேட்டருக்குக் கொடுக்கப்பட்ட கையேட்டில் குறிப்பாக தடைசெய்யப்பட்டிருக்கும் பாகங்களைக்கொண்டு இணைக்கப்பட வேண்டும் என்பதாக ஒரு மெக்கானிக் ஆலோசனை சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? கையேட்டின் அறிவுரைகளுக்கு இசைவாக, இயந்திரத்தை சரிபார்க்க முடியுமா என்பதைக் காண நீங்கள் மற்ற மெக்கானிக்குகளிடம் கலந்துபேச மாட்டீர்களா? மனித உயிர் ஒரு இயந்திரத்தைவிட மிக அதிக முக்கியமானதும் சிக்கலானதுமாக இருக்கிறது. மனிதர்களை உயிரோடு வைப்பதற்கான கையேடாகிய தம்முடைய ஏவப்பட்ட வார்த்தையில், நம்மை உண்டாக்கினவர் உயிரைக் காப்பதற்கு இரத்தத்தின் உபயோகத்தைத் தடைசெய்கிறார். (உபாகமம் 32:46, 47; பிலிப்பியர் 2:16) அந்தக் கையேட்டின் தேவைகளை உறுதியாக பற்றிக்கொண்டிருப்பது நியாயமாக இருக்கிறதல்லவா?
உண்மையில், தங்களுடைய நோய்கள் இரத்தமின்றி கட்டுப்படுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் கிறிஸ்தவ நோயாளிகள் எல்லா மருத்துவ சிகிச்சையையும் நிராகரித்துக்கொண்டில்லை. தங்களுடைய உயிருக்கு—தற்போதைய மற்றும் எதிர்கால உயிருக்கு—மரியாதையைக் காண்பிக்கும் சிகிச்சையையே வெறுமனே கேட்கிறார்கள். கிறிஸ்தவர்கள் எடுக்கும் நிலைநிற்கைக்குத் தைரியமாக மரியாதைக் காட்டும் மருத்துவர்கள் வேண்டுகோளுக்கு இசைவாக அவர்களுக்குச் சிகிச்சையளிப்பதனால் வரும் நன்மைகளை உறுதிசெய்கிறார்கள். “யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தது புதிய ஒரு தொகுதியான மதிப்பீடுகளிடமாக என்னை வழிநடத்தியிருக்கிறது,” என்பதாக தாராளமாக இரத்தத்தைச் செலுத்தும் பழக்கமுடையவராய் இருந்த ஒரு அறுவை மருத்துவர் கூறினார். இப்பொழுது அவர் சாட்சிகளாக இல்லாதவர்களுக்கும்கூட இரத்தமின்றி சிகிச்சையளிக்க முயற்சிசெய்கிறார்.
உண்மையான வாழ்வைப் பொக்கிஷமாக போற்றுதல்
யெகோவாவின் சாட்சிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம் இந்த அறுவை மருத்துவர் கண்ட புதிய மதிப்பீடுகளின் தொகுதி என்னவாக இருந்தது? ஒரு நபருக்கு சிகிச்சையளிப்பது வெறுமனே பாதிக்கப்பட்ட சரீரத்தின் ஒரு பகுதியை மாத்திரமல்லாமல், முழு நபரையும் உட்படுத்துவதை அவர் இப்பொழுது உணர்ந்துகொண்டிருக்கிறார். ஒரு நோயாளி அவனுடைய அல்லது அவளுடைய சரீர, ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சி சம்பந்தமான நலனுக்காக மிகச் சிறந்த கவனிப்பைக் கேட்பதற்கு அனுமதிக்கப்படவேண்டாமா?
பதினைந்து வயதினளாக இருந்த குமிக்கோவுக்கு, சாவுக்கேதுவான அவளுடைய லூக்கீமியா என்ற வியாதிக்கு சிகிச்சையளிக்க சாத்தியமாக இருந்த மிக மோசமான தெரிவு இரத்தமேற்றுதலாக இருந்தது. இம்முறையின் மூலமாக அவளுடைய வாழ்நாட்காலத்தை ஒருசில வாரங்கள், மாதங்கள் அல்லது வருடங்கள்கூட நீட்டிக்க முயற்சிசெய்வது முடிவாக அவளுக்கு ஏற்படும் இழப்புக்குத் தகுதியானதாக இல்லை. யெகோவா தேவனுக்கு, அவருடைய சாட்சிகளில் ஒருவராக தன்னுடைய தற்போதைய உயிரை அவருக்கு ஒப்புக்கொடுத்திருந்த காரணத்தால், அவள் உயிர் மற்றும் இரத்தத்தின் புனிதத்தன்மையை மதித்தாள். அவளுடைய அப்பாவும் மற்ற உறவினர்களும் அவளுடைய நிலைநிற்கையைத் தீவிரமாக எதிர்த்தபோதிலும், குமிக்கோ உறுதியாக இருந்தாள். அவளுடைய மருத்துவர் ஒரு சமயம் அவளை இவ்விதமாக கேட்டாள்: “தவறுகளை உங்கள் கடவுள் மன்னிக்கிறாரென்றால், நீ இரத்தமேற்றிக்கொண்டாலும்கூட அவர் மன்னித்துவிடமாட்டாரா?” குமிக்கோ ஒத்திணங்கிப் போகாமல் இவ்விதமாக பைபிள் ஆதாரமுள்ள தன்னுடைய நம்பிக்கையை நிராகரிக்க மறுத்துவிட்டாள். “ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு,” அவள் தன்னுடைய நிலைநிற்கையைக் காத்துக்கொண்டாள். (பிலிப்பியர் 2:16) அவிசுவாசியாக இருந்த அவளுடைய பாட்டி சொன்னவிதமாக, “குமிக்கோ தன்னுடைய விசுவாசத்தைக் கைவிடமாட்டாள்.” விரைவில் அவளுடைய அப்பா, பாட்டி, அவளைக் கவனித்துக்கொண்டிருந்த மருத்துவர்களின் மனநிலையும்கூட மாறிவிட்டது.
குமிக்கோவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பக்கூடியவராக இருந்த யெகோவா தேவனில் அவளுடைய பலமான விசுவாசம், அநேகருடைய இருதயங்களைத் தூண்டியது. உயிரோடிருக்கும்போதே, அவள் தன்னுடைய தந்தையிடம் இவ்வாறு கேட்டுக்கொண்டாள்: “நான் மரித்தாலும்கூட பரதீஸில் உயிர்த்தெழுப்பப்படுவேன். ஆனால் அர்மகெதோனில் நீங்கள் அழிக்கப்பட்டுவிட்டால், நான் உங்களைப் பார்க்க முடியாது. ஆகவே தயவுசெய்து பைபிளைப் படியுங்கள்.” அவளுடைய தந்தையோ, “உனக்குக் குணமானபிறகு நான் படிப்பேன்,” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் குமிக்கோ தீராத நோயினால் மரித்தபோது, அவளுடைய தந்தை “குமிக்கோ, நான் உன்னை பரதீஸில் பார்ப்பேன்,” என்ற குறிப்பை எழுதி அவளுடைய சவப்பெட்டியில் வைத்தார். சவ அடக்க ஆராதனைக்குப் பின்பு, ஆராதனைக்கு வந்திருந்தவர்களிடம் பேசுகையில் இவ்விதமாகச் சொன்னார்: “குமிக்கோவை பரதீஸில் பார்ப்பதாக அவளுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன். நான் போதிய அளவு படிக்காத காரணத்தால் இன்னும் என்னால் அதை நம்ப முடியாவிட்டாலும், அதைக் கவனமாக ஆராய தீர்மானித்திருக்கிறேன். தயவுசெய்து எனக்கு உதவிசெய்யுங்கள்.” குடும்பத்தில் மற்றவர்களும்கூட பைபிளைப் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
குமிக்கோ உயிரை உண்மையாக மதித்தாள், வாழ விரும்பினாள். அவளுடைய தற்போதைய உயிரைப் பாதுகாக்க அவளுடைய மருத்துவர்கள் செய்த அனைத்துக் காரியங்களையும் அவள் போற்றினாள். என்றாலும், படைப்பாளரின் கையேட்டின் அறிவுரைகளுக்கு இணங்கிப் போவதன் மூலம் உண்மையான வாழ்வைப் பொக்கிஷமாக போற்றியதை அவள் காண்பித்தாள். இலட்சக்கணக்கானோருக்கு, அது பரதீஸிய பூமியில் நித்திய வாழ்க்கையாக இருக்கும். அவர்கள் மத்தியில் நீங்கள் இருப்பீர்களா?