அநேகரை மீட்கும்பொருள்
மார்ச் 31, 1970, ஒரு ஜெட்லைனர் ஜப்பானில் ஃப்யூஜி மலையருகே கடத்தப்பட்டது. ஜப்பானிய சிவப்பு சேனை கட்சி என்று அறியப்பட்டிருந்த ஒரு தொகுதியைச் சேர்ந்த ஒன்பது பேர் 120-க்கும் மேற்பட்ட பயணிகளையும் விமான பணியாட்களையும் பிணைக் கைதிகளாக நிறுத்திக்கொண்டு வட கொரியாவுக்கு பத்திரமாக கொண்டுசெல்லப்பட வற்புறுத்தினர்.
விமானம் கொரியா குடியரசின் சியோலில் வந்திறங்கிய போது, ஜப்பானின் போக்குவரத்து துணை அமைச்சர் ஷின்ஜீரோ யமமுரா கைதிகளின் சார்பாக தன்னுடைய உயிரை ஆபத்திற்குள்ளாக்க முன்வந்தார். தங்கள் சொந்த பாதுகாப்புக்கு உத்தரவாதமாக அவரை ஏற்றுக்கொள்ள ஒப்புதலளித்து, விமானத்தை கடத்தியவர்கள் விமான பணியாட்களைத் தவிர எல்லா பிணைக்கைதிகளையும் விடுவித்தனர். பிறகு அவர்கள் பயோயாங்குக்கு பறந்து சென்று வட கொரியா அதிகாரிகளிடம் சரணடைந்தனர். திருவாளர் யமமுராவும், விமானியும் பின்னால் பத்திரமாக ஜப்பான் திரும்பினார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில், 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளின் உயிர்களுக்கு பரிமாற்றமாக ஒரே ஒரு நபர் ஈடு செய்தார். இது அநேகரை மீட்கும் பொருளாக ஒரு மனிதன் எவ்வாறு தம்முடைய ஜீவனைக் கொடுக்க முடியும் என்பதைக் காண நமக்கு உதவிசெய்யக்கூடும். ஆனால் மீட்கும் பொருள் பற்றிய பைபிளின் கோட்பாட்டை புரிந்துகொள்வதற்கு, இந்தப் பொருளை நாம் அதிக முழுமையாக ஆராய வேண்டும்.
ஒரு காரியமானது நாம் பாவத்தின் ஆரம்பத்தை கண்டுபிடிக்க வேண்டும். “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று,” என்று பைபிள் விளக்குகிறது. (ரோமர் 5:12) இது எப்படி சம்பவித்தது? அங்கே குறிப்பிடப்படும் மனிதன், சிருஷ்டிக்கப்பட்ட முதல் மானிடனாகிய ஆதாம். அவனுடைய சிருஷ்டிப்பு பற்றிய சரித்திரப்பூர்வமான பதிவையும், கடவுளுடைய தராதரத்திலிருந்து அவனை விலகிப் போக வழிநடத்தியது எது என்பதைப் பற்றியும் நீங்கள் வாசிக்கலாம். இது பைபிள் புத்தகமாகிய ஆதியாகமத்தில் முதல் மூன்று அதிகாரங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆதாம் முதலில் பாவத்தைச் செய்த போது, காட்சியில் பின்னிருந்து அவனைத் தூண்டிவிட்டவன் ஒருவன் இருந்தான் என்பதை பதிவு வெளிப்படுத்துகிறது. அதிகாரத்துக்கான தன்னுடைய சொந்த ஆசையை திருப்திப்படுத்திக்கொள்ள, அந்தத் தூண்டிவிட்டவன் ஆதாமையும் அவன் கொண்டிருக்கக்கூடிய பிள்ளைகளையும் கட்டுப்படுத்தி ஆள சூழ்ச்சி செய்தான். தூண்டிவிட்டவன் பிசாசாகிய சாத்தானாக இருந்தான். அவன் ஆதாமையும் ஏவாளையும் பாவத்துக்கு வழிநடத்துவதில் ஒரு பாம்பை பயன்படுத்திய காரணத்தால் அவன் “பழைய பாம்பு,” என்றும்கூட அழைக்கப்படுகிறான். (வெளிப்படுத்துதல் 12:9) மனிதகுலத்தின் அன்புள்ள சிருஷ்டிகர் எது சரி எது தவறு என்பதை தீர்மானிப்பதற்குரிய தம்முடைய உரிமையை மதிக்கும்படியாக ஆதாமிடம் சொல்லியிருந்த போதிலும் சர்ப்பம் ஆதாமின் மனைவியாகிய ஏவாளை தந்திரமாக கடவுளுக்குக் கீழ்ப்படியாமற் போகும்படி செய்வித்தது. அவள் பின்னர் தன் கணவனை கீழ்ப்படியாமற் போகும்படி செய்வித்தாள். அந்த நடத்தைப் போக்கின் மூலம், ஆதாம் கடவுளிடமிருந்து பிரிந்து வாழ்பவனாக தன்னை ஆக்கிக்கொண்டான், வேண்டுமென்றே பாவமுள்ளவனாக ஆனான், அவ்வகையான ஒரு வாழ்க்கையையே தன் பிள்ளைகளுக்குக் கடத்தக்கூடியவனாக ஆனான்.
நாம் இன்னமும் அதனுடைய பின்விளைவுகளினால் துன்பமனுபவிக்கிறோம். எப்படி? ஆம், சிருஷ்டிகர் ஆதாமும் ஏவாளும் வேண்டுமென்றே கீழ்ப்படியாமையை தெரிந்துகொண்டால், விளைவு மரணமாக இருக்கும் என்று நியாயமாகவே கட்டளையிட்டிருந்தார். ஆகவே, பாவம் செய்வதன் மூலம், ஆதாம் எல்லா மனிதகுலத்தையும் பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திற்குள் விற்றுவிட்டான்.—ஆதியாகமம் 2:17; 3:1-7.
பாவமுள்ள அந்நிலையிலிருந்து மனிதகுலம் எவ்விதமாக மீட்கப்பட முடியும்? இயேசு கிறிஸ்து, “அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க” பூமிக்கு வந்தார், இது மனிதகுலத்தை மீட்பதற்கான வழியைத் திறந்து வைத்தது.—மத்தேயு 20:28.
மூடுவதும் விடுவிப்பதும்
மனிதகுலத்தை மீட்பது இரண்டு படிகளை உட்படுத்தியதை பைபிள் காண்பிக்கிறது: (1) திரும்ப வாங்குவது மற்றும் (2) விடுவிப்பது. “மீட்பு” என்பதாக மொழிபெயர்க்கப்படும் கிரேக்க வார்த்தையாகிய லைட்ரான் பற்றி பைபிள் கல்விமான் ஆல்பர்ட் பார்னஸ் இவ்விதமாக எழுதினார்: “மீட்கும் பொருள் என்ற வார்த்தையின் நேர்பொருள், கைதிகளை மீட்பதற்காக செலுத்தப்படும் விலை என்பதாகும். போரில், கைதிகள் விரோதியால் கொண்டுசெல்லப்படும் போது, அவர்களின் விடுதலைக்காக கேட்கப்படும் பணம் மீட்கும் பொருள் என்றழைக்கப்படுகிறது; அதாவது, அவர்கள் விடுதலையாவதற்குரிய வழிவகையாக இது இருக்கிறது. ஆகவே எவரையாவது தண்டிக்கப்படும் அல்லது துன்பமான அல்லது பாவமுள்ள நிலையிலிருந்து விடுவிக்கும் எதுவும் மீட்கும் பொருள் என்று அழைக்கப்படுகிறது.”
ஆம், “எவரையாவது விடுவிக்கும் எதுவும்” லைட்ரான் என்று குறிப்பிடப்படலாம். ஆகவே இந்தக் கிரேக்க வார்த்தை விடுவிக்கும் செயலை அல்லது செயல்முறையை உயர்த்திக் காண்பிக்கிறது.a
அப்போஸ்தலனாகிய பவுல் மீட்கும் பொருளாக செலுத்தப்பட்ட விலையின் மதிப்பை அழுத்திக் காண்பிக்க தொடர்புடைய வார்த்தையாகிய அன்டிலைட்ரானை பயன்படுத்தினார். 1 தீமோத்தேயு 2:6-ல், “[இயேசு] தாமே” “எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்தா”ர் என்று எழுதினார். இதன் பேரில் குறிப்புசொல்வதாய், பார்க்ஹர்ஸ்டின் புதிய ஏற்பாட்டுக்கு கிரேக்க மற்றும் ஆங்கில அகராதி இவ்விதமாகச் சொல்கிறது: “கைதிகளை விரோதியிடமிருந்து மீட்டுக்கொள்வதற்காக செலுத்தப்படும் கிரயத்தை அது சரியாகவே குறிப்பிடுகிறது; ஒருவருடைய உயிர் மற்றொருவருடைய உயிரினால் மீட்கப்படும் வகையான ஒரு பரிமாற்றத்தை குறிப்பிடுகிறது.” நீதியின் துலாத்தட்டை சமநிலைப்படுத்துவதில் செலுத்தப்பட்ட மீட்பின் கிரயத்தின் ஈடுசெய்யும் இயல்பு அல்லது பயனுறுதி அழுத்திக் காண்பிக்கப்படுகிறது. இயேசுவின் மீட்பின் பலி எவ்விதமாக ‘ஈடான மீட்கும் பொருளாக’ கருதப்படலாம்?
ஈடான மீட்கும் பொருள்
ஆதாம் நம்மை உட்பட, மனிதகுலம் முழுவதையும் பாவத்துக்குள்ளும் மரணத்துக்குள்ளும் விற்றுபோட்டான். அவன் செலுத்திய விலை அல்லது அபராதம் என்றும் வாழக்கூடிய வாய்ப்புள்ள அவனுடைய பரிபூரண மனித ஜீவன். இதை மூடுவதற்கு, மற்றொரு பரிபூரண மனித ஜீவன்—ஓர் ஈடான மீட்கும் பொருள்—செலுத்தப்பட வேண்டும். என்றபோதிலும், அபூரண மனிதரிலிருந்து பிறந்த எவரும் தேவைப்பட்ட பரிபூரண மனித ஜீவனை அளிக்க முடியாது. (யோபு 14:4; சங்கீதம் 51:5) என்றபோதிலும் தம்முடைய ஞானத்தில் கடவுள் இந்த இக்கட்டான நிலையிலிருந்து வெளியேற ஒரு வழியை திறந்து வைத்தார். அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனின் பரிபூரண உயிரை பரலோகத்திலிருந்து ஒரு கன்னியின் கருப்பைக்கு மாற்றி, அவரை ஒரு பரிபூரண மனிதனாகப் பிறக்கும்படி அனுமதித்தார். (லூக்கா 1:30-38; யோவான் 3:16-18) இயேசுவின் கன்னிப் பிறப்பைப் பற்றிய இந்தப் போதனை, ஒரு மதத்தின் ஸ்தாபகரை உயர்த்துவதற்காக புனைந்து உருவாக்கப்பட்ட ஒரு கதை அல்ல. மாறாக, மீட்கும் பொருளை அளிக்கும் கடவுளுடைய ஏற்பாட்டில் நியாயமான ஒரு படியையே இது விளக்குகிறது.
மீட்டுக்கொள்ளுதலை நிறைவேற்ற, இயேசு தாம் பூமியின் மீது இருந்த காலமெல்லாம் சுத்தமான ஒரு பதிவைக் காத்துக்கொள்ள வேண்டும். இதை அவர் செய்தார். பின்னர் அவர் ஒரு பலிக்குரிய மரணத்தை அனுபவித்தார். இவ்விதமாக, இயேசு மனிதகுலத்தை விடுவிப்பதற்கு மீட்கும் பொருளாக தம்முடைய பரிபூரண மானிட ஜீவனின் விலையை செலுத்தினார். (1 பேதுரு 1:19) ஆகவே “எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திரு”க்கிறார் என்று நாம் திருத்தமாகவே சொல்ல முடியும். (2 கொரிந்தியர் 5:14) ஆம், “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.”—1 கொரிந்தியர் 15:22.
அநேகருக்காக ஒரே மனிதன்
முன் குறிப்பிடப்பட்ட விமான கடத்தல் விஷயத்தில், பிணைக் கைதிகள் செல்வந்தர்களாக இருந்தாலும்கூட தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ள எந்த வழியும் இல்லை. வெளியே இருந்து உதவி தேவையாயிருந்தது, பரிமாற்றமாக சேவித்த மனிதன் ஒரு சில நிபந்தனைகளை நிறைவுசெய்ய வேண்டும். மனிதகுலத்தை மீட்பதற்குத் தேவையான மீட்கும் பொருளின் சம்பந்தமாகவும் இதுவே அதிக ஆழமான விதத்தில் உண்மையாக இருக்கிறது. ஒரு சங்கீதக்காரன் எழுதினார்: “தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற, ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே (அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது).” (சங்கீதம் 49:6-8) ஆம், மனிதகுலத்துக்கு வெளியிலிருந்து உதவி தேவையாக இருந்தது. கடவுளுடைய நீதியின் துலாத்தட்டுகளை சமநிலைப்படுத்த தேவையான நிபந்தனைகளை ஒரு மனிதன் நிறைவுசெய்யக்கூடுமானால் எல்லா மனிதகுலத்தையும் மீட்டுக்கொள்ள ஒரு மனிதனின் ஜீவனே போதுமானதாக இருக்கும். இயேசு கிறிஸ்து மாத்திரமே தகுதிகளை நிறைவுசெய்யக்கூடிய ஒரே பரிபூரண மனிதராக இருந்திருக்கிறார்.
இயேசு கிறிஸ்து செலுத்திய மீட்கும் பொருளின் மூலமாக மனிதகுலத்தை விடுவிப்பதற்கான ஏற்பாட்டை யெகோவா செய்திருக்கிறார். ஆனால் கடவுள் அதிகத்தை செய்திருக்கிறார். மனிதகுலத்தை பாவத்துக்குள் வழிநடத்திய பிசாசாகிய சாத்தானுக்கு மரணத்தீர்ப்பை அளித்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 12:7-9) யெகோவா விரைவில் அந்தக் குற்றமுள்ளவனை கட்டிப்போட்டு பின்னர் கடைசியாக நித்திய அழிவுக்கு அடையாளமாக இருக்கும் “அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்”ளுவதன் மூலம் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார். (வெளிப்படுத்துதல் 20:1-3, 7-10, 14) இந்தப் பொல்லாத ஆவி சிருஷ்டி அழிக்கப்பட்டுவிடுவதன் காரணமாகவும் மீட்கும் பொருள் பொருத்தப்படுவதன் மூலமாகவும், மனிதகுலம் பாவம் மற்றும் மரணத்தின் பிடியிலிருந்து மாத்திரமல்லாமல் சாத்தானின் செல்வாக்கிலிருந்தும் விடுதலையை அனுபவிக்கும். இவ்விதமாக விடுவிக்கப்பட்டு, கிறிஸ்துவின் மீட்கும் பலியின் விலைமதிப்பு முழுவதுமாக பொருத்தப்படுகையில் கீழ்ப்படிதலுள்ள மனிதகுலம் மனித பரிபூரணத்தை நோக்கி முன்னேறும்.
மீட்பின் ஏற்பாடும் நீங்களும்
இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பலியைப் பற்றி கற்றறியும் போது, கிழக்கத்திய தேசங்களிலுள்ள அநேகர் கடவுள் அவர்களுக்குச் செய்திருக்கும் காரியங்களை மிக ஆழமாக மதித்துணர்ந்திருக்கிறார்கள். கசுவோ ஓர் உதாரணம். பெய்ன்ட் தின்னரை முகர்ந்து எப்போதும் வெறித்திருப்பதே அவனுடைய வாழ்க்கையின் மையமாக இருந்தது. அதன் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டும்போது, அவன் திரும்பத் திரும்ப தன் கார்களை நாசமாக்கிக் கொண்டிருந்தான். அவனுடைய மூன்று நண்பர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொண்ட பிறகு தற்கொலை செய்துவிட்டிருந்தார்கள். கசுவோவும்கூட தற்கொலை செய்துகொள்ள முயன்றான். பின்னர், அவன் பைபிளை படிக்க ஆரம்பித்தான். தான் கற்றுக்கொண்ட சத்தியத்தால் நெகிழ்ந்து போய் அவன் தன் வாழ்க்கையை சுத்தம் செய்ய தீர்மானித்தான். பெய்ன்ட் தின்னரினால் தன் சரீரத்தை துர்ப்பிரயோகம் செய்யும் பழக்கத்தோடு அவன் போராடினான், அநேக தடங்கல்களும் வந்தன. மாம்சப்பிரகாரமான ஆசைக்கும் சரியானதைச் செய்வதற்கான விருப்பத்துக்குமிடையே அவன் அலைக்கழிக்கப்பட்டான். இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பலியின் விலைமதிப்பின் மூலமாக கடவுளிடம் மன்னிப்புக்காக ஜெபிக்க முடிவதைக் குறித்து அவன் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தான்! ஜெபத்தின் மூலமாகவும் கிறிஸ்தவ நண்பர்களின் உதவியோடும், கசுவோ தன் தீய பழக்கத்தை மேற்கொண்டுவிட்டான், இப்பொழுது அவன் சுத்தமான மனச்சாட்சியோடு சந்தோஷமுள்ள ஓர் ஊழியனாக யெகோவாவை சேவித்து வருகிறான்.
முந்திய கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட சிஸாக்காவை உங்களுக்கு நினைவிருக்கிறதா? பைபிள் படிப்பின் மூலமாக அவளும்கூட மீட்கும் பொருளைப் பற்றிய அன்பான ஏற்பாட்டை புரிந்துகொண்டாள். மனிதகுலத்தை பாவத்திலிருந்து விடுவிக்க கடவுள் தம்முடைய குமாரனை கொடுத்ததைக் கற்றறிந்த போது அவள் வெகுவாக நெகிழ்ந்து போனாள். சிஸாக்கா யெகோவாவுக்குத் தன்னுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தாள். இப்பொழுதும்கூட, 77-வது வயதில், யெகோவாவின் பெரிதான அன்பைப் பற்றியும் அவர் காண்பிக்கும் தகுதியற்ற தயவைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்வதில் ஒவ்வொரு மாதமும் 90 மணிநேரங்களை செலவிடுகிறாள்.
மீட்கும் பொருள் உங்களுக்கும்கூட முக்கியமானதாக இருக்க வேண்டும். அதன் மூலமாக, கடவுள் மனிதகுலத்துக்கு மெய்யான விடுதலைக்கு—பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலைக்கு—வழியை திறந்து வைப்பார். இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியை ஏற்றுக்கொள்பவர்களுக்கு முன்னால் ஒரு பரதீஸிய பூமியில் நித்திய வாழ்க்கையின் ஒரு மகத்தான எதிர்காலம் இருக்கிறது. தயவு செய்து யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு கொண்டு அன்பான மீட்பின் ஏற்பாட்டின் மூலமாக நீங்கள் எவ்வாறு பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையை அனுபவித்துக் களிக்க முடியும் என்பதை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a எபிரெய வேதாகமத்தில், பத்தா (pa·dhahʹ) மற்றும் இதோடு சம்பந்தப்பட்ட வார்த்தைகள் “மீட்டுக்கொள்” அல்லது “மீட்பு விலை” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டு, அதில் உட்பட்டிருந்த விடுதலை உயர்த்திக் காண்பிக்கப்படுகிறது.—உபாகமம் 9:26.
[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]
Courtesy of the Mainichi Shimbun