ஒருவரையொருவர் கட்டியெழுப்பிக்கொண்டிருங்கள்
“கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு [கட்டியெழுப்புவதற்கு, NW] ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே . . . பேசுங்கள்.”—எபேசியர் 4:29.
1, 2. (எ) பேச்சு ஓர் அற்புதம் என்று ஏன் சரியாகவே சொல்லலாம்? (பி) நாம் நம் நாவைப் பயன்படுத்தும் முறைக்கு என்ன எச்சரிக்கை பொருத்தமாயுள்ளது?
“பேச்சு நண்பர்களையும், குடும்பங்களையும், சமுதாயங்களையும் ஒன்றுசேர்த்துக் கட்டிவைக்கும் மாய நூல் . . . மனித மனதிலிருந்தும் [நாவின்] தசைத்தொகுதிகளின் ஒத்திசைவான சுருக்கங்களினாலும், நாம் அன்பை, பொறாமையை, மரியாதையை—நிச்சயமாகவே மனிதனின் எந்த உணர்ச்சியையும் தோற்றுவிக்கும் ஒலிகளை வெளிப்படுத்துகிறோம்.”—செவிகேட்பது, சுவை மற்றும் முகர்வு (Hearing, Taste and Smell).
2 நம்முடைய நாவு விழுங்குவதற்கு அல்லது சுவையுணர்வதற்குரிய உறுப்பாயிருப்பதைப் பார்க்கிலும் மிக அதிகப்பட்டது; நாம் சிந்திப்பதையும் உணருவதையும் பகிர்ந்துகொள்வதற்குரிய நம்முடைய திறமையின் ஒரு பாகமாக அது உள்ளது. யாக்கோபு பின்வருமாறு எழுதினார்: “நாவும் சிறிய அவயவமாயிருந்தும் . . . அதினாலே நாம் ஆண்டவரும் பிதாவுமானவரைத் [யெகோவாவை, NW] துதிக்கிறோம்; தெய்வ சாயலாய் உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.” (யாக்கோபு 3:5, 9, தி.மொ.) ஆம் நாம் நம்முடைய நாவை, யெகோவாவைத் துதிப்பதைப் போன்ற, நல்ல வழிகளில் பயன்படுத்தலாம். ஆனால் அபூரணராயிருப்பதால், புண்படுத்தும் அல்லது எதிர்மறையான காரியங்களைப் பேசுவதற்கும் நம்முடைய நாவை நாம் எளிதில் பயன்படுத்திவிடவும் முடியும். யாக்கோபு எழுதினதாவது: “என் சகோதரரே, இந்தக் காரியங்கள் இம்முறையில் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பது சரியல்ல.”—யாக்கோபு 3:10, தி.மொ.
3. நம்முடைய பேச்சின் எந்த இரண்டு அம்சங்களுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்?
3 ஒரு மனிதனும் தன் நாவைப் பரிபூரணமாய்க் கட்டுப்படுத்த முடியாதிருக்கையில், நாம் நிச்சயமாகவே முன்னேற்றமடைவதற்குக் கடுமுயற்சி செய்யவேண்டும். அப்போஸ்தலன் பவுல் நமக்குப் பின்வருமாறு அறிவுரை கூறுகிறார்: “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு [கட்டியெழுப்புவதற்கு, NW] ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜமுண்டாகும்படி பேசுங்கள்.” (எபேசியர் 4:29) இந்தத் தடைக் கட்டளை இரண்டு அம்சங்கள் அடங்கியதென்பதைக் கவனியுங்கள்: நாம் எதைத் தவிர்க்கப் பிரயாசப்பட வேண்டும் மற்றும் எதைச் செய்ய முயற்சிசெய்ய வேண்டும். இந்த இரண்டு அம்சங்களையும் நாம் சிந்திக்கலாம்.
கெட்ட பேச்சைத் தவிர்த்தல்
4, 5. (எ) ஆபாசமான பேச்சு சம்பந்தமாகக் கிறிஸ்தவர்களுக்கு என்ன போராட்டம் உண்டு? (பி) “கெட்ட வார்த்தை” என்ற சொற்றொடர் என்ன காட்சிக்குப் பொருந்தக்கூடும்?
4 எபேசியர் 4:29 நம்மைப் பின்வருமாறு முதலாவது எச்சரிக்கிறது: “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்.” இது ஒருவேளை எளிதாக இராது. நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் தூய்மையற்றப் பேச்சு அவ்வளவு சாதாரணமாக இருப்பது ஒரு காரணமாகும். கிறிஸ்தவ இளைஞர் பலர் வசைமொழியை நாள்தோறும் கேட்கின்றனர், ஏனெனில் அது மேலும் அசையழுத்தம் வைக்கிறதென அல்லது தங்களை மேலும் முரடர்களாகத் தோன்றச் செய்கிறதெனப் பள்ளித் தோழர்கள் ஒருவேளை நினைக்கலாம். ஆபாசமான வார்த்தைகளைக் கேட்பதை நாம் ஒருவேளை முழுமையாய்த் தவிர்க்க முடியாதிருக்கலாம், ஆனால் அவற்றை நம்மில் தொற்றிக்கொள்ள விடாதபடி தடுத்துவைக்க நாம் விழிப்புணர்வுள்ள முயற்சி செய்ய முடியும், அவ்வாறு செய்யவும் வேண்டும். நம்முடைய மனதிலோ வாயிலோ அவற்றிற்கு இடங்கிடையாது.
5 பவுலின் எச்சரிக்கைக்கு அடிப்படையில், கெட்டுப்போன மீன் அல்லது அழுகிய பழத்துக்குத் தொடர்புபடுத்தும் ஒரு கிரேக்கச் சொல் உள்ளது. பின்வரும் இதைக் காட்சிப்படுத்திப் பாருங்கள்: ஒரு மனிதன் பொறுமை இழந்து, பின்பு முற்றிலும் கோபாவேசமடைவதை நீங்கள் கவனிக்கிறீர்கள். முடிவில் திடீரென தன் கோபத்தை வெளிக்காட்டுகிறான், கெட்டுப்போன மீன் அவன் வாயிலிருந்து வெளிவருவதை நீங்கள் காண்கிறீர்கள். பின்பு நாற்றமெடுக்கும், அழுகிப்போன பழம் உருண்டு வெளிவந்து விழுந்து அருகிலுள்ளோர் யாவர்மீதும் சிதறித் தெறிக்கிறது. அவன் யார்? நம்மில் எவராவது அவனாக இருந்தால் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்! எனினும், ‘கெட்ட வார்த்தைகள் நம் வாயிலிருந்து புறப்பட அனுமதித்தால்’ அத்தகைய தோற்றம் நமக்குப் பொருந்தலாம்.
6. குற்றங்குறைகூறும் எதிர்மறையான பேச்சுக்கு எபேசியர் 4:29 எவ்வாறு பொருந்துகிறது?
6 எபேசியர் 4:29-ஐப் பொருத்திப் பயன்படுத்த வேண்டிய மற்றொரு முறை, எப்போதும் குற்றங்குறை கூறுவோராக இருப்பதை நாம் தவிர்ப்பதாகும். நாம் விரும்பாத அல்லது விரும்பி ஏற்கும் காரியங்களைப்பற்றி நம்மெல்லாருக்கும் அவரவருக்குரிய எண்ணங்களும் விருப்பத்தேர்வும் உண்டென்பது மெய்யே, ஆனால், ஒவ்வொரு ஆளையும், இடத்தையும், அல்லது குறிப்பிடப்பட்ட காரியத்தையும் பற்றி எதிர்மறையான குறிப்புகளைச் சொல்லிக்கொண்டிருக்கும் ஒருவர் அருகில் இருந்திருக்கிறீர்களா? (ரோமர் 12:9; எபிரெயர் 1:9-ஐ ஒத்துப்பாருங்கள்.) அவனுடைய பேச்சு இடித்து வீழ்த்துகிறது, சோர்வூட்டுகிறது, அல்லது அழிக்கிறது. (சங்கீதம் 10:7; 64:2-4; நீதிமொழிகள் 16:27; யாக்கோபு 4:11, 12) மல்கியா விவரித்த, குறைகூறி எதிர்மறையான முறையில் பேசினவர்களுக்குத் தான் எவ்வளவாய் ஒத்திருக்கிறான் என்பதை அவன் ஒருவேளை உணராதிருக்கலாம். (மல்கியா 3:13-15) கெட்டுப்போன ஒரு மீன் அல்லது அழகிப்போன ஒரு பழம் அவனுடைய வாயிலிருந்து நழுவி வீழ்ந்ததென அருகில் நிற்கும் ஒருவர் அவனிடம் சொன்னால் அவன் எவ்வளவு திடுக்குற்றிருப்பான்!
7. என்ன தற்சோதனையை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்?
7 வேறு எவராவது எப்போதும் எதிர்மறையான அல்லது குற்றங்குறை காணும் குறிப்புகளைக் கூறுகையில் அதை உணர்ந்துகொள்வது எளிதாயிருக்கையில், உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் அவ்வாறு இருக்கும் மனப்போக்கை உடையவனா? உண்மையில், அவ்வாறு இருக்கிறேனா?’ நம்முடைய வார்த்தைகளின் பாங்கின்பேரில் அவ்வப்போது சிந்தித்துப் பார்ப்பது ஞானமாயிருக்கும். அவை முக்கியமாய் எதிர்மறையானவையாக, குற்றங்குறை கூறுபவையாக இருக்கின்றனவா? யோபுக்குப் போலி ஆறுதலளித்த அந்த மூவரைப்போல் நாம் பேசுகிறோமா? (யோபு 2:11; 13:4, 5; 16:2; 19:2) குறிப்பிடுவதற்கு நல்நம்பிக்கையான ஓர் அம்சத்தைக் காணலாமல்லவா? ஓர் உரையாடல் குற்றங்குறை காண்பதாகவே பெரும்பாலும் இருந்தால், கட்டியெழுப்பும் காரியங்களுக்குள் செல்லும்படி அதைத் திருப்பலாமல்லவா?
8. பேச்சைக் குறித்து என்ன பாடத்தை மல்கியா 3:16 அளிக்கிறது, இந்தப் பாடத்தை நாம் பொருத்திப் பயன்படுத்துகிறோமென எவ்வாறு காட்டலாம்?
8 மல்கியா இதற்கு மாறுபட்டதைப் பின்வருமாறு அளித்தது: “யெகோவாவுக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிவந்தார்கள், யெகோவா கவனித்துக்கேட்டார்; யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கெனவும் அவருடைய திருநாமத்தை நினைக்கிறவர்களுக்கெனவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்குமுன்பாக எழுதப்பட்டிருக்கிறது.” (மலாகி [மல்கியா] 3:16, தி.மொ.) கட்டியெழுப்பும் பேச்சுக்குக் கடவுள் பிரதிபலித்த முறையை கவனித்தீர்களா? இத்தகைய உரையாடல் உடன்தோழர்களின்பேரில் என்ன பயனுள்ள பாதிப்பைப் பெரும்பாலும் கொண்டிருந்திருக்கும்? நம்முடைய அன்றாடகப் பேச்சைக் குறித்து நாம்தாமே சொந்தமாய் ஒரு பாடத்தைக் கற்கலாம். நம் உரையாடலின் மாதிரி ‘கடவுளுக்குச்’ செலுத்தும் நம்முடைய ‘துதியின் பலியைப்’ பிரதிபலிக்கிறதெனில், அது நமக்கும் மற்றவர்களுக்கும் எவ்வளவு மிக நலமானது.—எபிரெயர் 13:15, NW.
மற்றவர்களைக் கட்டியெழுப்பும்படி உழையுங்கள்
9. மற்றவர்களைக் கட்டியெழுப்புவதற்குக் கிறிஸ்தவக் கூட்டங்கள் ஏன் நல்ல சந்தர்ப்பங்கள்?
9 ‘தேவைப்படுகிறபடி பக்திவிருத்திக்கு [கட்டியெழுப்புவதற்கு] ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி’ பேசுவதற்குச் சபை கூட்டங்கள் மிகச் சிறந்த சந்தர்ப்பங்களாகும். (எபேசியர் 4:29) பைபிள்பூர்வ தகவலின்பேரில் ஒரு பேச்சைக் கொடுக்கையில், ஒரு நடிப்பில் பங்குகொள்கையில், அல்லது கேள்வி-பதில் பாகங்களின்போது குறிப்புகள் சொல்கையில் இதைச் செய்யலாம். இவ்வாறு நாம் நீதிமொழிகள் 20:15-ஐ மெய்ப்பித்துக் காட்டுகிறோம்: “அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம்.” எத்தனை இருதயங்களை நாம் தொடுகிறோமோ கட்டியெழுப்புகிறோமோ யாருக்குத் தெரியும்?
10. வழக்கமாய் நாம் யாரோடு பேசிவருகிறோம் என்பதன்பேரில் சிந்தித்தப்பின், என்ன சரிசெய்தல் நலமாயிருக்கும்? (2 கொரிந்தியர் 6:12, 13)
10 கூட்டங்களுக்கு முன்னும் பின்னும் உள்ள நேரம், கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகச் செய்யும் உரையாடலால் மற்றவர்களைக் கட்டியெழுப்புவதற்கு நல்ல வசதியான நேரமாகும். இந்த நேரப்பகுதிகளை உறவினருடனும், சங்கடமில்லாமல் உணரும் ஒரு சிறு எண்ணிக்கையான நண்பர்களுடனும் மகிழ்ச்சியுடன் பேசுவதில் செலவிடுவது எளிதாயிருக்கும். (யோவான் 13:23; 19:26) எனினும், எபேசியர் 4:29-க்குப் பொருந்த, மற்றவர்களை நாடிப் பேசும்படி முயற்சி செய்யலாமல்லவா? (லூக்கா 14:12-14-ஐ ஒத்துப்பாருங்கள்.) புதியோரான சிலருக்கு, முதியோருக்கு, அல்லது இளைஞருக்கு, வெறும் முறைமைச் சார்ந்த வாழ்த்துதல் அல்லது கடந்துசெல்கையில் ஒரு முகமனுரை சொல்வதற்கு மேலாகச் செல்லும்படி முன்னதாகவே நாம் தீர்மானிக்கலாம், சிறுவர்கள் நிலையில் நம்மை வைக்குமளவில் அவர்களோடு சேர்ந்து உட்காரவும் செய்யலாம். நம்முடைய உண்மையான அக்கறையும் கட்டியெழுப்புமாறு பேசும் பேச்சும், சங்கீதம் 122:1-ல் தாவீது உணர்ச்சிக்கனிவுடன் கூறியதை மற்றவர்கள் இன்னுமதிகமாகப் பிரதிபலிக்கக் கூடியதாக்கும்.
11. (எ) உட்காரும் இடத்தைக் குறித்ததில் என்ன பழக்கத்தைப் பலர் உண்டாக்கியிருக்கின்றனர்? (பி) சிலர் ஏன் தாங்கள் உட்காருமிடத்தை அவ்வப்போது வேண்டுமென்றே மாற்றிக்கொள்கின்றனர்?
11 கூட்டங்களில் நாம் உட்காரும் இடத்தை அவ்வப்போது மாற்றிக்கொள்வதும் கட்டியெழுப்பும் உரையாடலுக்கு மற்றொரு உதவியாகும். குழந்தையைக் கவனிக்கும் தாய் கழுவும் அறைக்கு அண்மையான இடத்தில் உட்கார வேண்டியிருக்கலாம், அல்லது முதிர்வயதால் தளர்ந்த ஒருவருக்கு ஓரத்திலுள்ள இடம் தேவைப்படலாம், ஆனால் மற்றவர்களான நம்மைப்பற்றியதென்ன? வெறும் பழக்கம் நம்மை ஒருவேளை ஒரு குறிப்பிட்ட இருக்கைக்கு அல்லது பகுதிக்கு வழிநடத்தக்கூடும்; ஒரு பறவையுங்கூட அது உட்கார்ந்து உறங்கும் இடத்துக்கு இயலுணர்ச்சியால் திரும்புகிறது. (ஏசாயா 1:3; மத்தேயு 8:20) எனினும், வெளிப்படையாகக் கூற, நாம் எந்த இடத்திலும் உட்காரலாமாதலால்,—வலதுபுறம், இடதுபுறம், முன்புறத்துக்கருகில், போன்ற முறையில்—மாறி மாறி உட்கார்ந்து, இவ்வாறு வெவ்வேறு நபர்களுடன் மேலும் நன்றாய்ப் பழகிக்கொள்ளலாமல்லவா? இவ்வாறு செய்ய வேண்டுமென்று எந்தக் கட்டளையும் இல்லையெனினும், தாங்கள் உட்காருமிடத்தை மாற்றிக்கொள்ளும் மூப்பர்களும் முதிர்ச்சியடைந்த மற்றவர்களும், பிரயோஜனமானவற்றை ஒருசில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமேயல்லாமல், பலருக்கு அளிப்பதை எளிதாகக் கண்டிருக்கின்றனர்.
தெய்வபக்திக்குரிய முறையில் கட்டியெழுப்புங்கள்
12. விரும்பத்தகாத என்ன போக்கு சரித்திரம் முழுவதிலும் வெளிப்படுத்திக் காட்டப்பட்டிருக்கிறது?
12 மற்றவர்களைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற ஒரு கிறிஸ்தவனின் ஆவல், பெரும் எண்ணிக்கையான கட்டளைகளை உண்டுபண்ணும் மனித போக்கைப் பின்பற்றுவதற்கு மாறாக, இந்தக் காரியத்தில் கடவுளுடைய மாதிரியைப் பின்பற்றும்படி செய்ய வேண்டும்.a அபூரண மனிதர்கள் தங்களைச் சுற்றியிருப்போரை ஆளும் போக்குடையோராக நீண்டகாலமாக இருந்திருக்கின்றனர், கடவுளுடைய ஊழியர்களிலுங்கூட சிலர் இந்த மனப்போக்குக்கு இடங்கொடுத்திருக்கின்றனர். (ஆதியாகமம் 3:16; பிரசங்கி 8:9) இயேசுவின் காலத்தில் யூதத் தலைவர்கள் ‘சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்தினார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடாதிருந்தனர்.’ (மத்தேயு 23:4) தீங்கற்ற வழக்கங்களை அவர்கள் சட்டப்படியான பாரம்பரியங்களாக மாற்றினர். மனிதக் கட்டளைகளைப் பற்றி அவர்கள் மட்டுக்குமீறி அக்கறை கொண்டிருந்து, மிக அதிக முக்கியமெனக் கடவுள் குறித்துக் காட்டின காரியங்களைக் கவனியாது விட்டனர். வேதப்பூர்வமற்ற பல கட்டளைகளை அவர்கள் உண்டுபண்ணினதால் ஒருவரும் கட்டியெழுப்பப்படவில்லை. அவர்களுடைய வழி கடவுளுடைய வழி அல்ல.—மத்தேயு 23:23, 24; மாற்கு 7:1-13.
13. உடன்தோழரான கிறிஸ்தவர்களுக்கு மிகப்பல கட்டளைகளை ஏற்படுத்தி வைப்பது ஏன் தகுதியற்றது?
13 கிறிஸ்தவர்கள் கடவுளுடைய சட்டங்களை உள்ளப்பூர்வமாய்க் கடைப்பிடிக்க விரும்புவர். பாரமான மிகப்பல கட்டளைகளை உண்டாக்கும் போக்குக்கு நாமுங்கூட ஆளாகக்கூடும். ஏன்? ஒரு காரணம், விருப்ப உணர்வுகளும் விருப்பத்தேர்வுகளும் வேறுபடுகின்றன, ஆகவே மற்றவர்கள் விரும்பாததையும் விலக்கப்படவேண்டுமென உணருவதையும் சிலர் ஏற்கத்தக்கதாகக் காணலாம். மேலும், ஆவிக்குரிய முதிர்ச்சியை நோக்கிய தங்கள் முன்னேற்றத்திலும் கிறிஸ்தவர்கள் வேறுபடுகின்றனர். ஆனால் பல கட்டளைகளை ஏற்படுத்தி வைப்பது, முதிர்ச்சியை நோக்கி படிப்படியாய் முன்னேற மற்றவருக்கு உதவிசெய்வதற்கான தெய்வீக வழியாகுமா? (பிலிப்பியர் 3:15; 1 தீமோத்தேயு 1:19; எபிரெயர் 5:14) மட்டுக்குமீறியதாக அல்லது ஆபத்தானதாகத் தோன்றும் ஒரு போக்கை ஒருவர் உண்மையில் நாடித்தொடருகையிலுங்கூட, தடைசெய்யும் ஒரு கட்டளையே மிகச் சிறந்த பரிகாரமாகுமா? தகுதிபெற்றவர்கள், தவறுசெய்த அந்த ஆளுடன் சாந்தத்தோடு நியாயங்காட்டிப் பேசி அவனைத் திரும்பச் சீர்த்திருந்த செய்விக்க முயற்சி செய்வதே கடவுளுடைய வழியாகும்.—கலாத்தியர் 6:1.
14. கடவுள் இஸ்ரவேலருக்குக் கொடுத்த சட்டங்கள் என்ன நோக்கங்களைச் சேவித்தன?
14 உண்மைதான், கடவுள் இஸ்ரவேலரைத் தம்முடைய ஜனமாகப் பயன்படுத்தினபோது, ஆலய வணக்கம், பலிகள், இன்னும் சுகாதாரத்தையும் பற்றிய நூற்றுக்கணக்கான சட்டங்களை அவர் நிச்சயமாக ஏற்படுத்தி வைத்தார். இது தனிவேறுபட்ட ஒரு ஜனத்துக்குப் பொருத்தமாயிருந்தது, மேலும், அந்தச் சட்டங்கள் பல, தீர்க்கதரிசன முக்கியத்துவமுடையனவாக இருந்தன மற்றும் யூதர்களை மேசியாவினிடம் வழிநடத்துவதற்கு உதவிசெய்தன. பவுல் பின்வருமாறு எழுதினார்: “நாம் விசுவாசத்தினால் நீதிமான்களாகத் தீர்க்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடம் வழிநடத்துகிற உபாத்தியானது. விசுவாசம் வந்தபின்போ நாம் அந்த உபாத்திக்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.” (கலாத்தியர் 3:19, 23-25, தி.மொ.) அந்த நியாயப்பிரமாணம் கழுமரத்தின்மீது ஆணியடித்து நீக்கப்பட்ட பின்பு, கிறிஸ்தவர்களுக்குக் கடவுள், வாழ்க்கையின் பெரும்பான்மையான அம்சங்களின்பேரில் விரிவான கட்டளைகளடங்கிய பட்டியலை, அவையே அவர்களை விசுவாசத்தில் கட்டியெழுப்பி வைக்கும் வழி என்பதுபோல், கொடுக்கவில்லை.
15. கிறிஸ்தவ வணக்கத்தாருக்குக் கடவுள் என்ன வழிநடத்துதலை அளித்திருக்கிறார்?
15 நிச்சயமாகவே, நாம் சட்டமின்றி இல்லை. விக்கிரகாராதனை, வேசித்தனமும் விபசாரமும், இரத்தத்தின் தகாப்பிரயோகம் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்கும்படி கடவுள் நமக்குக் கட்டளையிடுகிறார். கொலைசெய்தல், பொய்ச் சொல்லுதல், ஆவிக்கொள்கை, மற்றும் பல்வேறு மற்ற பாவங்களைச் செய்யக்கூடாதென்று திட்டவட்டமாய்க் கட்டளையிடுகிறார். (அப்போஸ்தலர் 15:28, 29; 1 கொரிந்தியர் 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:8) மேலும், தம்முடைய வார்த்தையில் அவர் பல காரியங்களின்பேரில் தெளிவான அறிவுரையைக் கொடுக்கிறார். எனினும், இஸ்ரவேலின் காரியத்தில் இருந்ததைப் பார்க்கிலும் மிகப் பேரளவில், நாம் பைபிளிலுள்ள நியமங்களைக் கற்று பொருத்திப் பயன்படுத்துவதற்குப் பொறுப்புள்ளோராய் இருக்கிறோம். மூப்பர்கள், இந்த நியமங்களுக்காக வெறுமென தேடுவதற்கு அல்லது கட்டளைகளை உண்டாக்குவதற்கு மாறாக, மற்றவர்கள் இந்த நியமங்களைக் கண்டுபிடிக்கவும் அவற்றின்பேரில் ஆழ்ந்து சிந்திக்கவும் அவர்களுக்கு உதவிசெய்வதன்மூலம் அவர்களைக் கட்டியெழுப்பலாம்.
கட்டியெழுப்பும் மூப்பர்கள்
16, 17. உடன்தோழரான வணக்கத்தாருக்குக் கட்டளைகளை உண்டாக்கிவைப்பதைக் குறித்ததில் என்ன நல்ல மாதிரியை அப்போஸ்தலர்கள் வைத்தனர்?
16 பவுல் பின்வருமாறு எழுதினார்: “நாம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும் அதே ஒழுங்காய் நடப்போமாக.” (பிலிப்பியர் 3:16, தி.மொ.) இந்தத் தெய்வீக நோக்குநிலைக்கு இசைவாக, அப்போஸ்தலன் கட்டியெழுப்பும் முறையில் மற்றவர்களைக் கையாண்டார். உதாரணமாக, விக்கிரகக் கோயிலிலிருந்து ஒருவேளை வந்திருக்கக்கூடிய இறைச்சியை உண்பதா இல்லையா என்பதைப்பற்றி ஒரு கேள்வி எழும்பினது. இந்த மூப்பர், ஒருவேளை முரண்பாடற்று அல்லது எளிதாயிருக்கும்படியான நோக்கத்துடன் பூர்வ சபைகளிலிருந்த எல்லாருக்காகவும் ஏதோ ஒரு கட்டளையை ஏற்படுத்தி வைத்தாரா? இல்லை. அறிவிலும் முதிர்ச்சியை நோக்கிய முன்னேற்றத்திலுமிருந்த வேறுபாட்டுநிலைகள் அந்தக் கிறிஸ்தவர்களை வெவ்வேறுபட்ட தெரிவுகளுக்கு வழிநடத்தலாமென்பதை அவர் உணர்ந்தார். தம்மைக் குறித்தவரை, அவர் ஒரு நல்ல முன்மாதிரியை வைக்கும்படி தீர்மானித்தார்.—ரோமர் 14:1-4; 1 கொரிந்தியர் 8:4-13.
17 உடை, நடை, தோற்றம்போன்ற தனிப்பட்டவருக்குரிய காரியங்கள் சிலவற்றின்பேரிலும் அப்போஸ்தலர்கள் உதவியான அறிவுரையை அளித்தனரென கிறிஸ்தவ வேத எழுத்துக்கள் காட்டுகின்றன, ஆனால் எல்லா சந்தர்ப்பத்துக்கும் பொருந்தும் கட்டளைகளை ஏற்படுத்தி வைக்க நாடவில்லை. இன்று, மந்தையைக் கட்டியெழுப்புவதில் அக்கறைகொண்டுள்ள கிறிஸ்தவக் கண்காணிகளுக்கு இது ஒரு நல்ல முன்மாதிரியாக உள்ளது. இது உண்மையில் பூர்வ இஸ்ரவேலரிடம் கடவுள் கையாண்ட அடிப்படையான முறையின் தொடர்பேயாகும்.
18. உடை சம்பந்தமாக யெகோவா இஸ்ரவேலருக்கு என்ன கட்டளைகளைக் கொடுத்தார்?
18 உடையைப்பற்றி கடவுள் இஸ்ரவேலருக்கு நுட்பவிவரமான சட்டங்களைக் கொடுக்கவில்லை. ஆண்களும் பெண்களும் ஒத்த வகையான மேலாடைகளைப் பயன்படுத்தினதாகத் தெரிகிறது, பெண்ணினுடையது ஒருவேளை தையல் பூவேலை செய்யப்பட்டதாக அல்லது பகட்டான நிறங்களில் இருந்திருக்கலாம். இருபாலாரும் சாடின், அல்லது உள்ளாடையையும் அணிந்தனர். (நியாயாதிபதிகள் 14:12; நீதிமொழிகள் 31:24; ஏசாயா 3:23) உடையைப்பற்றிய என்ன சட்டங்களைக் கடவுள் கொடுத்தார்? ஆண்களாயினும் பெண்களாயினும், ஒருவேளை ஓரினப்புணர்ச்சி நோக்கத்தோடு, எதிர்பாலாரெனக் கருதும்படி செய்யும் உடைகளை அணியக்கூடாது. (உபாகமம் 22:5) சுற்றியிருந்த ஜாதியாரைச் சேராதத் தனிப்பட்டவர்களாகத் தாங்கள் இருப்பதைக் காட்டுவதற்குத் தங்கள் அங்கியின் ஓரத்தில் நூலிழைத் தொங்கல்களை வைத்து, அந்தத் தொங்கல்களுக்குமேல் நீலநாடாவை அமைக்கவும், ஒருவேளை அந்த மேலாடைகளின் மூலைகளில் தொங்கற் குஞ்சங்களை வைக்கவும் வேண்டியவர்களாக இருந்தனர். (எண்ணாகமம் 15:38-41) இதுவே அடிப்படையாய் உடைபாங்குகளைப்பற்றி நியாயப்பிரமாணம் கட்டளையாகக் கொடுத்ததெல்லாமாகும்.
19, 20. (எ) உடை மற்றும் தோற்றத்தின்பேரில் என்ன வழிநடத்துதலை பைபிள் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கிறது? (பி) தனிப்பட்டவர் தோற்றத்தைக் குறித்து கட்டளைகளை ஏற்படுத்துவதைப்பற்றி என்ன கருத்தை மூப்பர்கள் கொண்டிருக்க வேண்டும்?
19 கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லையெனினும், உடையையும் அலங்காரத்தையும் பற்றிய நுட்பவிவரமான மற்ற கட்டளைகள் பைபிளில் நமக்குக் குறித்து வைக்கப்பட்டிருக்கின்றனவா? உண்மையில் இல்லை. நாம் பொருத்திப் பயன்படுத்தக்கூடிய சமநிலையான நியமங்களைக் கடவுள் அளித்திருக்கிறார். பவுல் எழுதினதாவது: “ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், . . . தங்களை அலங்கரிக்கவேண்டும்.” (1 தீமோத்தேயு 2:9, 10) கிறிஸ்தவ பெண்கள், புறம்பான சரீர அலங்காரத்தின்மீது கவனத்தை ஊன்றவைப்பதைப் பார்க்கிலும், “அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குண”த்தின்பேரில் கவனத்தை ஊன்றவைக்க வேண்டுமென பேதுரு ஊக்கப்படுத்துகிறார். (1 பேதுரு 3:3, 4) இத்தகைய அறிவுரை பதிவுசெய்து வைக்கப்பட்டிருப்பதானது, முதற்நூற்றாண்டு கிறிஸ்தவர்களில் சிலர் தங்கள் உடையிலும் தோற்றத்திலும் மேலுமாக அடக்கமும் தற்கட்டுப்பாடுமுள்ளோராக இருக்கும்படி ஒருவேளை தேவைப்பட்டிருக்கலாமெனத் தெரிவிப்பதாகத் தோன்றுகிறது. எனினும், குறிப்பிட்ட உடை பாங்குகளைக் கட்டளையிடுவதற்கு—அல்லது தடையுத்தரவு போடுவதற்குப்—பதிலாக, அப்போஸ்தலன் கட்டியெழுப்பும் அறிவுரையை வெறுமென அளித்தார்.
20 யெகோவாவின் சாட்சிகள் தங்கள் அடக்கமானத் தோற்றத்துக்காக மதிக்கப்பட வேண்டும், பொதுவாய் மதிக்கப்பட்டும் வருகின்றனர். இருப்பினும், நாட்டுக்குநாடும், ஒரு பிராந்தியம் அல்லது ஒரு சபைக்குள்ளுங்கூட நாகரிகப் பாங்குகள் வேறுபடுகின்றன. உடையிலும் தோற்றத்திலும் தனிப்பட்ட உறுதியான அபிப்பிராயங்களை அல்லது ஒரு குறிப்பிட்ட உணர்வையுடைய மூப்பர் ஒருவர் தனக்கும் தன் குடும்பத்துக்கும் அதற்கேற்ப தீர்மானித்துக்கொள்ளலாம். ஆனால் மந்தையைக் குறித்ததிலோ, அவர் பவுலின் பின்வரும் குறிப்பை மனதில் வைக்க வேண்டும்: “விசுவாச விஷயத்தில் நாங்கள் உங்களை ஆளுகிறவர்களல்ல, உங்கள் சந்தோஷத்திற்கோ நாங்கள் உடன் ஊழியர், விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்கள்.” (2 கொரிந்தியர் 1:24, தி.மொ.) ஆம், சபைக்காகக் கட்டளைகளை ஏற்படுத்தி வைக்கும் எந்த மனத்தூண்டுதலையும் தடுத்து அடக்கி மூப்பர்கள் மற்றவர்களுடைய விசுவாசத்தைக் கட்டியெழுப்புவதற்கு உழைக்க வேண்டும்.
21. உடையில் எவராவது அடக்கத்துக்கு மீறிச் செல்வாராகில் மூப்பர்கள் எவ்வாறு கட்டியெழுப்பும் உதவியை அளிக்கலாம்?
21 முதல் நூற்றாண்டில் இருந்ததைப்போல், சில சமயங்களில் புதியவராய் அல்லது ஆவிக்குரியபடி பலவீனராயிருக்கும் ஒருவர் உடையில் அல்லது சிங்காரிப்புப் பொருட்கள் அல்லது நகைகள் பயன்படுத்துவதில் தகாத அல்லது ஞானமற்றப் போக்கை ஒருவேளைப் பின்பற்றலாம். அப்போது என்னசெய்வது? உள்ளப்பூர்வமாய் உதவிசெய்ய விரும்பும் கிறிஸ்தவ மூப்பர்களுக்கு மறுபடியுமாக, கலாத்தியர் 6:1 வழிநடத்துதலை அளிக்கிறது. மூப்பர் ஒருவர் அறிவுரையை அளிக்கத் தீர்மானிப்பதற்கு முன், அவர் ஞானமாய், உடன் மூப்பர் ஒருவருடன் கலந்துபேசுவார், தன்னுடையதைப்போன்ற விருப்பத்தை அல்லது சிந்தனையை உடையவரெனத் தான் அறியும் ஒரு மூப்பரிடம் செல்லாதிருப்பது நலம். உடையிலும் தோற்றத்திலும் உலகப்போக்கைப் பின்பற்றுவது சபையிலுள்ள பலரைப் பாதிப்பதாகத் தோன்றினால், மூப்பர் குழு, எத்தகைய சிறந்த முறையில் உதவி அளிக்கலாம், கூட்டத்தில் கனிவான, கட்டியெழுப்பும் பாகத்தின் மூலமா அல்லது தனிப்பட்ட உதவியை அளிப்பதன் மூலமா என்பவற்றைக் கலந்தாலோசிக்கலாம். (நீதிமொழிகள் 24:6; 27:17) அவர்களுடைய இலக்கு 2 கொரிந்தியர் 6:3-ல் பிரதிபலித்துள்ள மனப்பாங்கை ஊக்குவிப்பதாயிருக்கும்: “இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல்,” இருக்கிறோம்.
22 ‘தங்கள் கவனிப்பின்கீழுள்ள கடவுளுடைய மந்தையை மேய்க்கும்’ கிறிஸ்தவ மூப்பர்கள் பேதுரு குறிப்பிட்டபடி செய்ய விரும்புவர், அதாவது, ‘கடவுளுடைய சுதந்தரமாக இருப்போரை இறுமாப்பாய் ஆளாமல்’ இருக்க வேண்டும். (1 பேதுரு 5:2, 3) அவர்களுடைய அன்புள்ள ஊழியப் போக்கில், விருப்பத் தேர்வுகளில் வேறுபடக்கூடிய காரியங்களின்பேரில் கேள்விகள் எழும்பலாம். ஒருவேளை காவற்கோபுர படிப்பின்போது பத்திகளை வாசிப்பதற்கு எழும்பிநிற்பது உள்ளூர் வழக்கமாக இருக்கலாம். வெளி ஊழியத்துக்கான தொகுதி ஏற்பாடுகள் மற்றும் ஊழியத்தையும் பற்றிய வேறு பல நுட்பவிவரங்கள் அவ்விடத்து வழக்கப்படி கையாளப்படலாம். எனினும், எவராவது சற்று வேறுபட்ட முறையில் கையாண்டால் பேராபத்தாய்விடுமா? “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்ப”டும்படி அன்புள்ள கண்காணிகள் விரும்புகின்றனர், இந்தச் சொற்களைப் பவுல் அற்புத வரங்கள் சம்பந்தமாகப் பயன்படுத்தினார். ஆனால் பவுலின் முக்கிய அக்கறை “சபையைக் கட்டியெழுப்புதலே”யென சூழமைவு காட்டுகிறது. (1 கொரிந்தியர் 14:12, 40) முழுமையான ஒருமைப்பாடு அல்லது பூரண திறம்பட்ட தன்மையே தன் முக்கிய நோக்கம் என்பதுபோல் முடிவற்ற எண்ணிக்கையான கட்டளைகளை உண்டாக்கும் மனப்போக்கை அவர் காட்டவில்லை. அவர் எழுதினதாவது: “உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல, உங்களை ஊன்றக் கட்டுகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரம்.”—2 கொரிந்தியர் 10:8.
23. மற்றவர்களைக் கட்டியெழுப்பும் பவுலின் முன்மாதிரியை நாம் பின்பற்றக்கூடிய சில வழிகள் யாவை?
23 சந்தேகமில்லாமல் பவுல் நல்நம்பிக்கையான மற்றும் ஊக்கமூட்டுதலான பேச்சினால் மற்றவர்களைக் கட்டியெழுப்பும்படி உழைத்தார். வெறும் ஒரு சிறு தொகுதி நண்பர்களுடன் மாத்திரமே கூட்டுறவு வைத்துக்கொள்வதைப் பார்க்கிலும் அவர், பல சகோதரர் சகோதரிகளையும், ஆவிக்குரியபிரகாரமாய் பலமாய் இருந்தவர்களையும் முக்கியமாய்க் கட்டியெழுப்பத் தேவைப்பட்டவர்களையும் சந்திக்க மிகைப்படியான முயற்சி எடுத்தார். கட்டளைகளைப் பார்க்கிலும் அன்பையே அவர் அறிவுறுத்தினார்—ஏனெனில் “அன்பு கட்டியெழுப்பும்.”—1 கொரிந்தியர் 8:1.
[அடிக்குறிப்புகள்]
a சூழ்நிலைமைகளைச் சார்ந்து, குடும்பத்துக்குள் பல்வேறு கட்டளைகள் உசிதமானதாகத் தோன்றலாம். வயதுவராதத் தங்கள் பிள்ளைகளுக்காகக் காரியங்களைத் தீர்மானிக்கும்படி பைபிள் பெற்றோருக்கு அதிகாரமளிக்கிறது.—யாத்திராகமம் 20:12; நீதிமொழிகள் 6:20; எபேசியர் 6:1-3.
விமரிசனத்துக்குரிய குறிப்புகள்
◻ நம் பேச்சு எதிர்மறையான அல்லது குற்றங்குறைகூறும் பாங்கில் சென்றால் ஒரு மாற்றம் ஏன் பொருத்தமாயிருக்கும்?
◻ சபையில் மேலுமாகக் கட்டியெழுப்புவோராய் இருப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?
◻ மற்றவர்களுக்குப் பல கட்டளைகளை ஏற்படுத்திவைப்பதைப் பற்றியதில் தெய்வீக மாதிரி என்ன?
◻ மந்தைக்கு மனிதக் கட்டளைகளை ஏற்படுத்திவைப்பதைத் தவிர்ப்பதற்கு எது மூப்பர்களுக்கு உதவி செய்யும்?
22. (எ) நோக்குநிலையில் அற்ப வேறுபாடுகள் இருந்தால் அது ஏன் அமைதிகுலைப்பதாக இருக்கக்கூடாது? (பி) என்ன நல்ல முன்மாதிரியைப் பவுல் அளித்தார்?