‘தகுதிபெற முயலுகிறீர்களா?’
மகேஷ்a ரொம்ப பதட்டமாக இருந்தார். இரண்டு மூப்பர்கள் அவரிடம் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். இப்படி அவர்கள் பேசுவது முதல் தடவை கிடையாது. வட்டாரக் கண்காணியின் சில சந்திப்புகளுக்குப் பிறகு முன்பு ஒருமுறை மூப்பர்கள் அவரிடம் பேசினார்கள். சபையில் கூடுதலான பொறுப்புகளைப் பெறுவதற்கு அவர் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனாலும், மகேஷ் இன்னும் மூப்பராகவில்லை. அதனால், ‘நானெல்லாம் மூப்பராக முடியாது’ என்று மகேஷ் நினைத்தார். இப்போது வட்டாரக் கண்காணி மறுபடியும் அவருடைய சபையைச் சந்தித்திருக்கிறார். அவர் சந்தித்து சில வாரங்களுக்குப் பிறகு மகேஷிடம் மூப்பர்கள் பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அவரிடம் என்ன சொல்லப் போகிறார்கள்?
மூப்பர்கள் சொல்வதை மகேஷ் கவனமாகக் கேட்டார். 1 தீமோத்தேயு 3:1-ல் சொல்லப்பட்டிருந்த விஷயத்தை அவர்கள் குறிப்பிட்ட பிறகு மகேஷ் மூப்பராக நியமிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். மகேஷால் நம்பவே முடியவில்லை, “என்ன சொல்றீங்க?” என்று ஆச்சரியமாகக் கேட்டார். மூப்பர்கள் சொன்னதைக் கேட்டு மகேஷ் ரொம்பச் சந்தோஷப்பட்டார். சபையில் அறிவித்தபோது சகோதர சகோதரிகளும் சந்தோஷப்பட்டார்கள்.
மூப்பராவதற்கு ஆசைப்படுவது தவறா? “கண்காணியாவதற்குத் தகுதிபெற முயலுகிற ஒருவர் சிறந்த வேலையை விரும்புகிறார்” என்று பைபிளே சொல்கிறது. (1 தீ. 3:1) நிறைய சகோதரர்கள் அருமையான முன்னேற்றங்களைச் செய்து மூப்பராவதற்குத் தகுதி பெற்றிருக்கிறார்கள்; மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும், சபைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் இன்னும் நிறைய மூப்பர்களும் உதவி ஊழியர்களும் தேவைப்படுகிறார்கள். சபையில் தகுதிபெறுவதற்குச் சகோதரர்கள் என்ன செய்ய வேண்டும்? ஒருவேளை மூப்பராக நியமிக்கப்படவில்லை என்றால் அதை நினைத்து சோர்ந்துபோக வேண்டுமா?
‘தகுதிபெற முயலுவது’ என்றால் என்ன?
‘தகுதிபெற முயலுவது’ என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தைக்கு ‘ஏங்குவது,’ ‘எட்டிப்பிடிப்பது’ போன்ற அர்த்தங்களும் இருக்கின்றன. ஒரு மரத்திலிருக்கும் பழத்தை எட்டிப்பறிக்க முயலுவதுபோல் மூப்பராவதற்கும் நம் பங்கில் முயற்சி தேவைப்படுகிறது. ஆனால், ‘கண்காணியாவதற்குத் தகுதிபெற முயலுவது’ என்பது, எப்படியாவது அதை அடைந்துவிட முயற்சி செய்வதை அர்த்தப்படுத்தாது. ஏனென்றால், கண்காணியாவதற்கு முயற்சி செய்பவர் பதவி வெறியில் அதைச் செய்யக் கூடாது.
மூப்பர்களுக்கான தகுதிகள் 1 தீமோத்தேயு 3:2-7-லும் தீத்து 1:5-9-லும் இருக்கின்றன. இந்தத் தகுதிகளைப் பற்றி, பல வருடங்கள் மூப்பராக இருந்த வினோத் என்ற சகோதரர் சொல்கிறார்: “கற்பிக்கிறதும் பேச்சுகள் கொடுக்கிறதும் முக்கியம்தான். ஆனா, நாம எப்படிப்பட்டவங்களா இருக்கிறோம் என்பதுதான் அதைவிட முக்கியம். குற்றம் சுமத்தப்படாதவராக, எதிலேயும் மிதமிஞ்சிப்போகாதவராக, தெளிவா யோசிச்சு முடிவெடுக்கிறவராக இருக்கணும். எல்லாத்தையும் ஒழுங்கா செய்யணும். உபசரிக்கும் குணத்தைக் காட்டணும். நியாயமானவராக நடந்துக்கணும்.”
மூப்பராவதற்கு ‘தகுதிபெற முயலும்’ ஒருவர் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் இருப்பதால் யாரும் அவர்மீது குற்றம் சுமத்த மாட்டார்கள். “மிதமிஞ்சிப்போகாதவராக,” தெளிவாக யோசித்து முடிவெடுக்கிறவராக, எல்லாவற்றிலும் “ஒழுங்குள்ளவராக,” “நியாயமானவராக” இருப்பதால் சபையார் அவரை நம்புவார்கள். அவரால் சபையை முன்னின்று நடத்த முடியும், சகோதர சகோதரிகளுக்கு நல்ல ஆலோசனைகளைக் கொடுக்க முடியும் என்று நம்புவார்கள். ‘உபசரிக்கும் குணம்’ இருப்பதால் அவர் எல்லோரிடமும் அன்பாக நடந்துகொள்வார்; இளைஞர்களையும் புதியவர்களையும் உற்சாகப்படுத்துவார். அவர் “நல்ல காரியங்களை விரும்புகிறவராக” இருப்பதால், வயதானவர்களுக்கும் வியாதிப்பட்டவர்களுக்கும் உதவுவார், ஆறுதலாக இருப்பார். ஆனால், மூப்பராவதற்காக மட்டுமே இதையெல்லாம் செய்யக் கூடாது; மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்ய வேண்டும்.b
மூப்பராவதற்கு விரும்பும் ஒருவருக்கு தேவையான ஆலோசனையையும் உற்சாகத்தையும் கொடுக்க சபையிலிருக்கும் மூப்பர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். ஆனால், அதைக் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு அந்த நபரிடம்தான் இருக்கிறது. ராஜேஷ் என்கிற அனுபவமுள்ள மூப்பர் சொல்கிறார்: “நீங்க மூப்பராக விரும்பினால், தகுதிகளை வளர்க்க கடும் முயற்சி எடுங்கள். ‘செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்’-னு பைபிள் சொல்லுது. மூப்பர்கள் உங்களுக்கு எந்த வேலை கொடுத்தாலும் அதை உற்சாகமா செய்யுங்க. அது பெரிய வேலையா இருந்தாலும் சரி, ராஜ்ய மன்றத்தை பெருக்கிறது, துடைக்கிறது மாதிரி சாதாரண வேலையா இருந்தாலும் சரி, அதை முழு மனசோட செய்யுங்க. நீங்க மனதார செய்யுற சேவையை மூப்பர்கள் நிச்சயம் கவனிப்பாங்க.” (பிரசங்கி 9:10) நீங்கள் மூப்பராக வேண்டும் என்று விரும்பினால் எல்லா விஷயங்களிலும் மற்றவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதியுங்கள், கடினமாக உழைப்பவராக இருங்கள். பெருமைப் பிடித்தவராக இருக்காதீர்கள், மனத்தாழ்மையாக நடந்துகொள்ளுங்கள்.—மத். 23:8-12.
எதைத் தவிர்க்க வேண்டும்?
மூப்பராவதற்கு விரும்புகிறவர் அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, அதைப் பற்றி ஜாடைமாடையாகக்கூட மூப்பர்களிடம் சொல்லக் கூடாது; மூப்பராக வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு “ஐஸ்” வைக்கவும் கூடாது. அதோடு, மூப்பர்கள் ஆலோசனை கொடுக்கும்போது கோபப்படக் கூடாது. அப்படிக் கோபம் வந்தால் உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் பதவி ஆசையினால மூப்பராக விரும்புறேனா, அல்லது மனத்தாழ்மையோட யெகோவாவின் மக்களுக்குச் சேவை செய்ய விரும்புறேனா?’
மூப்பர்களுக்கான தகுதிகளில் ஒன்றுதான் ‘மந்தைக்கு முன்மாதிரிகளாக இருப்பது.’ (1 பே. 5:1-3) அப்படி முன்மாதிரியாக இருக்க விரும்பினால் தவறான ஆசைகளையும் செயல்களையும் தவிர்த்திடுங்கள். மூப்பராக நியமிக்கப்பட்டாலும் சரி நியமிக்கப்படாவிட்டாலும் சரி சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். மூப்பரான உடனேயே எல்லா நல்ல குணங்களும் தானாக வந்துவிடாது. (எண். 12:3; சங். 106:32, 33) “என்னிடம் எந்தக் குற்றமும் இருப்பதாக என் மனதிற்குத் தோன்றவில்லை” என்று நீங்கள் நினைக்கலாம். (1 கொ. 4:4) ஆனால், மற்றவர்களுக்கு நீங்கள் செய்கிற தவறுகள் தெரியலாம். அதுபோன்ற நேரங்களில் மூப்பர்கள் உங்களுக்கு பைபிளிலிருந்து ஆலோசனைகள் கொடுப்பார்கள். கோபப்படாமல் அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்யுங்கள்.
பொறுமையாகக் காத்திருப்பீர்களா?
சில சகோதரர்கள் மூப்பராவதற்குப் பல வருடங்கள் காத்திருக்கிறார்கள். நீங்கள் அப்படிக் காத்திருக்கிறீர்களா? ‘நான் ஏன் இன்னும் மூப்பராகல’ என்று நினைத்துக் கவலைப்படுகிறீர்களா? ‘நெடுங்காலமாய்க் காத்திருத்தல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும்’ என்று பைபிள் சொல்கிறது.—நீதி. 13:12.
ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்றால் ஒருவர் சோர்ந்துபோகலாம். ஒருசமயம் ஆபிரகாமும் அப்படித்தான் சோர்ந்துபோனார். அவருக்கு ஒரு மகன் பிறப்பான் என்று யெகோவா வாக்குக் கொடுத்திருந்தார். ஆனால், பல வருடங்கள் உருண்டோடியும் பிள்ளை பிறக்கவில்லை. (ஆதி. 12:1-3, 7) “கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; . . . தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை” என்று ஆபிரகாம் வயதான காலத்தில் யெகோவாவிடம் மன்றாடினார். நிச்சயம் அவருக்கு ஒரு மகன் பிறப்பான் என்று யெகோவா திரும்பவும் உறுதியளித்தார். ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற ஆபிரகாம் இன்னும் 14 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.—ஆதி. 15:2-4; 16:16; 21:5.
ஆபிரகாம் தனக்கு ஒரு மகன் பிறக்கும்வரை பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தார். யெகோவாவுடைய சேவையில் அவர் சந்தோஷத்தை இழக்கவில்லை. கடவுள் கொடுத்த வாக்குறுதி நிறைவேறுமா என்று அவர் ஒருபோதும் சந்தேகப்படவில்லை. அதனால்தான், “ஆபிரகாம் பொறுமையோடு காத்திருந்த பின்பு கடவுள் வாக்குறுதி அளித்ததைப் பெற்றுக்கொண்டார்” என்று பவுல் சொன்னார். (எபி. 6:15) பொறுமையாகக் காத்திருந்ததால் எதிர்பார்த்ததைவிட அதிகமாக யெகோவா அவரை ஆசீர்வதித்தார். ஆபிரகாமிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
பல வருடங்களாகக் காத்திருந்தும் நீங்கள் மூப்பராகவில்லை என்றால் சோர்ந்துபோய்விடாதீர்கள்; யெகோவாமீது நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். யெகோவாவுடைய சேவையில் உங்கள் சந்தோஷத்தையும் இழந்துவிடாதீர்கள். நிறைய சகோதரர்கள் முன்னேறுவதற்கு உதவி செய்த பாபு என்ற மூப்பர் சொல்கிறார்: “ஒருத்தர் திடீர்னு மூப்பராயிட முடியாது, அதுக்கு கொஞ்சம் காலம் எடுக்கும். ஒரு சகோதரர் மத்தவங்ககிட்ட எப்படி நடந்துக்கிறாரு, பொறுப்புகளை எப்படி கையாள்றார் என்பதை வச்சுதான் அவருக்கு இருக்கிற திறமைகளையும் மனப்பான்மையையும் கண்டுபிடிக்க முடியும். மூப்பரானாதான் வாழ்க்கையில வெற்றி பெற முடியும்னு சிலர் நினைக்கிறாங்க. ஆனா, அது தப்பு. அந்த எண்ணம் பின்னால பதவி வெறியா மாறிடும். நாம எங்க இருந்தாலும், என்ன செஞ்சாலும் யெகோவாவை முழு மனசோட சேவிக்கிறதுலதான் உண்மையான வெற்றி இருக்கு.”
ஒரு சகோதரர் 10 வருடங்களுக்கு மேல் காத்திருந்த பிறகுதான் மூப்பரானார். எசேக்கியேல் 1-ஆம் அதிகாரத்திலிருந்து கற்றுக்கொண்ட விஷயத்தைப் பற்றி அவர் சொல்கிறார்: “யெகோவா அவரோட பரம ரதத்தை, அதாவது அமைப்பை அவர் நினைச்சபடி வழிநடத்துறார். நாம என்ன ஆசப்படுறோம் என்பது முக்கியம் இல்லை. யெகோவா என்ன நினைக்கிறாரு என்பதுதான் முக்கியம். மூப்பராகுற விஷயத்துலயும் அதுதான் உண்மை. நமக்கு எப்போ, எதை கொடுக்கணும்னு நம்மளவிட யெகோவாவுக்குதான் நல்லா தெரியும்.”
மூப்பராவதற்கு நீங்கள் ஆசைப்பட்டால், சபையில் உங்களுக்குக் கிடைக்கும் பொறுப்புகளைச் சந்தோஷமாகச் செய்யுங்கள்; அப்படிச் செய்தால், சபையாரும் சந்தோஷமாக இருப்பார்கள். ரொம்ப காலம் காத்திருக்க வேண்டியிருந்தால், சோர்ந்துவிடாதீர்கள்; பொறுமையாக இருங்கள். “லட்சிய வெறி இருந்தா வாழ்க்கையில திருப்தியே இருக்காது. கிடைக்காததை நினைச்சு கவலைப்படுறவங்க, யெகோவாவோட சேவையில கிடைக்கிற சந்தோஷத்தை இழந்துடுவாங்க” என்று வினோத் சொல்கிறார். எனவே, கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்களை, முக்கியமாக பொறுமையை வளர்த்துக்கொள்ளுங்கள். பைபிளை ஆழமாகப் படித்து யெகோவாவோடு இருக்கும் பந்தத்தை பலப்படுத்துங்கள். வைராக்கியமாக ஊழியம் செய்யுங்கள்; நிறைய பைபிள் படிப்புகளை நடத்துங்கள். கூட்டங்களையும் ஊழியத்தையும் குடும்ப வழிபாட்டையும் தவறவிடாதிருக்க குடும்பத்தாருக்கு உதவுங்கள். சகோதர சகோதரிகளோடு சந்தோஷமாக நேரம் செலவிடுங்கள். இப்படிச் செய்தால், தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள முடியும், சந்தோஷமாகவும் வாழ முடியும்.
ஒரு நபர் மூப்பராகச் சேவிப்பது யெகோவா தரும் ஆசீர்வாதம். உங்களைக் காத்திருக்க வைத்து, சோர்வடையச் செய்ய வேண்டும் என்று யெகோவாவோ அமைப்போ நினைப்பதில்லை. உண்மை மனதோடு சேவை செய்யும் அனைவரையும் யெகோவா ஆசீர்வதிப்பார், “அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.”—நீதி. 10:22.
நீங்கள் எத்தனை வருடம் காத்திருந்தாலும் யெகோவாவோடு இருக்கும் உங்கள் பந்தத்தைத் தொடர்ந்து பலப்படுத்த முடியும். நல்ல குணங்களை வளர்ப்பதற்கும் சபையில் கடுமையாக உழைப்பதற்கும் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதற்கும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை யெகோவா மறந்துவிட மாட்டார். யெகோவாவுடைய சேவையில் உங்களுக்கு எந்தப் பொறுப்பு கிடைத்தாலும் அதைச் சந்தோஷமாகச் செய்யுங்கள்.
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகள் உதவி ஊழியராவதற்கு விரும்புகிறவர்களுக்கும் பொருந்தும். உதவி ஊழியர்களுக்கான தகுதிகள் 1 தீமோத்தேயு 3:8-10, 12, 13-ல் இருக்கின்றன.