-
பெற்றோர்களே, ‘மீட்கப்படுவதற்கு வழிநடத்தும் ஞானத்தை’ பெற பிள்ளைகளுக்கு உதவுங்கள்காவற்கோபுரம் (படிப்பு)—2017 | டிசம்பர்
-
-
3. (அ) தீமோத்தேயு எப்படி ஒரு கிறிஸ்தவரானார், இயேசுவின் போதனைகளைக் கற்றுக்கொண்டபோது அவர் என்ன செய்தார்? (ஆ) கற்றுக்கொள்வதில் அடங்கியிருக்கும் என்ன மூன்று அம்சங்களைப் பற்றி தீமோத்தேயுவிடம் பவுல் சொன்னார்?
3 கி.பி. 47-ல் அப்போஸ்தலன் பவுல் முதல் தடவையாக லீஸ்திராவுக்குப் போனார். அப்போது தீமோத்தேயு டீனேஜ் வயதில் இருந்திருக்கலாம். அந்தச் சமயத்தில்தான் அவர் இயேசுவின் போதனைகளைப் பற்றிக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருப்பார். கற்றுக்கொண்ட விஷயங்களை அவர் கடைப்பிடித்தார். இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, பவுலோடு சேர்ந்து பயணம் செய்ய ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 16 வருஷங்களுக்குப் பிறகு, தீமோத்தேயுவுக்கு பவுல் இப்படி எழுதினார்: “நீ கற்றுக்கொண்ட விஷயங்களை, நம்பிக்கை வைக்கும் விதத்தில் உனக்குப் பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களை விடாமல் கடைப்பிடி; அவற்றை யாரிடமிருந்து கற்றுக்கொண்டாய் என்பது உனக்குத் தெரியுமே. அதுவும், பரிசுத்த எழுத்துக்களை [அதாவது, எபிரெய வேதாகமத்தை] நீ சிசுப் பருவத்திலிருந்தே அறிந்திருக்கிறாய்; அவை உனக்கு ஞானத்தைத் தந்து கிறிஸ்து இயேசுமேல் வைத்திருக்கிற விசுவாசத்தின் மூலம் நீ மீட்கப்படுவதற்கு வழிநடத்தும்.” (2 தீ. 3:14, 15) பவுல் சொன்ன இந்த மூன்று குறிப்புகளைக் கவனியுங்கள்: (1) பரிசுத்த எழுத்துக்களை அறிந்திருப்பது, (2) பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களில் நம்பிக்கை வைப்பது, (3) கிறிஸ்து இயேசுமேல் வைத்திருக்கிற விசுவாசத்தின் மூலம், மீட்கப்படுவதற்கு வழிநடத்தும் ஞானத்தைப் பெற்றிருப்பது.
-
-
பெற்றோர்களே, ‘மீட்கப்படுவதற்கு வழிநடத்தும் ஞானத்தை’ பெற பிள்ளைகளுக்கு உதவுங்கள்காவற்கோபுரம் (படிப்பு)—2017 | டிசம்பர்
-
-
‘பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களில் நம்பிக்கை வைப்பது’
5. (அ) ‘பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களில் நம்பிக்கை வைப்பது’ என்பதற்கான கிரேக்க வார்த்தைகளின் அர்த்தம் என்ன? (ஆ) இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியில் தீமோத்தேயு உறுதியான விசுவாசம் வைத்தார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
5 பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் மக்களையும் சம்பவங்களையும் பற்றி மட்டுமே பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தால் போதாது. தீமோத்தேயுவின் விஷயத்தை எடுத்துக்கொள்ளலாம். ‘பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களில் அவர் நம்பிக்கை வைத்தார்.’ பவுல் இங்கே பயன்படுத்திய கிரேக்க வார்த்தைகளின் அர்த்தம், “உறுதியாக இருப்பது” அல்லது “ஏதோவொரு விஷயம் உண்மை என்பதை எந்தச் சந்தேகமும் இல்லாமல் உறுதியாக நம்புவது.” தீமோத்தேயுவுக்கு “சிசுப் பருவத்திலிருந்தே,” அதாவது சின்னஞ்சிறு வயதிலிருந்தே, எபிரெய வேதாகமம் தெரிந்திருந்தது என்பது உண்மைதான். ஆனால், இயேசுவே மேசியா என்பதற்கான மறுக்க முடியாத அத்தாட்சிகளைத் தெரிந்துகொண்டபோதுதான் அதை உறுதியாக நம்பினார். இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியில் அவர் உறுதியான விசுவாசம் வைத்ததால் ஞானஸ்நானம் எடுத்து, பவுலோடு சேர்ந்து ஒரு மிஷனரியாகச் சேவை செய்ய ஆரம்பித்தார்.
6. கடவுளுடைய வார்த்தையில் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
6 “நம்பிக்கை வைக்கும் விதத்தில்” தீமோத்தேயுவுக்கு விஷயங்கள் பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்டதால், அவர் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டார். அப்படியென்றால், உங்கள் பிள்ளையும் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளும் அளவுக்கு விஷயங்களை நீங்கள் எப்படிப் பக்குவமாக எடுத்துச்சொல்லலாம்? முதலில், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உறுதியான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள காலம் எடுக்கும். அதோடு, நீங்கள் ஒரு விஷயத்தை நம்புகிறீர்கள் என்பதற்காக உங்கள் பிள்ளையும் அதை நம்பிவிடுவான் என்று சொல்ல முடியாது. பைபிள்மேல் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய “சிந்திக்கும் திறனை” பயன்படுத்த வேண்டும். (ரோமர் 12:1-ஐ வாசியுங்கள்.) உங்கள் பிள்ளைகள் தங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள, உங்களால் நிறைய உதவி செய்ய முடியும். முக்கியமாக, அவர்கள் கேள்விகள் கேட்கும்போது உங்களால் அப்படி உதவி செய்ய முடியும். ஒரு அப்பாவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இப்போது பார்க்கலாம்.
7, 8. (அ) ஒரு அப்பா தன் மகளுக்குக் கற்றுக்கொடுக்கும்போது எப்படிப் பொறுமை காட்டுகிறார்? (ஆ) நீங்கள் எப்போது உங்கள் பிள்ளையிடம் பொறுமையாக நடந்துகொள்ள வேண்டியிருந்தது?
7 தாமஸ் என்ற சகோதரருக்கு 11 வயது மகள் இருக்கிறாள். சிலசமயங்களில், அவள் அவரிடம் கேள்விகள் கேட்பாள். உதாரணத்துக்கு, “இந்த பூமியில உயிர்கள உருவாக்குறதுக்கு யெகோவா பரிணாமத்த பயன்படுத்தியிருக்கலாம், இல்லையா?” என்று கேட்பாள். அல்லது, “நாம ஏதாவது சேவை செஞ்சு சமுதாயத்த நல்ல நிலைமைக்கு கொண்டுவரலாம் இல்லையா? அதுக்காக தேர்தல்ல கலந்துக்கலாம்தானே?” என்று கேட்பாள். அப்போது, அவள் எதை நம்ப வேண்டும் என்று நேரடியாகச் சொல்லாமல் இருக்க அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது. உண்மையை எடுத்த எடுப்பிலேயே சொல்வதற்குப் பதிலாக, அதற்கான ஆதாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் காட்டும்போதுதான் ஒருவருக்கு நம்பிக்கை வரும் என்பதை தாமஸ் புரிந்துவைத்திருக்கிறார்.
8 தன்னுடைய மகளுக்குப் பொறுமையாகத்தான் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதையும் தாமஸ் புரிந்துவைத்திருக்கிறார். சொல்லப்போனால், எல்லா கிறிஸ்தவர்களுமே பொறுமை காட்ட வேண்டும். (கொலோ. 3:12) தன்னுடைய மகளின் நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்குக் காலம் எடுக்கும் என்பதும், நிறைய தடவை அவளுக்கு விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கும் என்பதும் தாமசுக்கு நன்றாகத் தெரியும். அதோடு, பைபிள் வசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுவது எவ்வளவு அவசியம் என்பதும் அவருக்குத் தெரியும். அவர் இப்படிச் சொல்கிறார்: “கத்துக்குற முக்கியமான விஷயங்கள என் பொண்ணு உண்மையிலேயே நம்புறாளான்னும், அவளுக்கு அதெல்லாம் சரின்னு படுதான்னும் நானும் என் மனைவியும் தெரிஞ்சுக்க நினைப்போம். அவ கேள்வி கேட்டா நாங்க சந்தோஷப்படுவோம். உண்மைய சொல்லணும்னா, எந்த கேள்வியும் கேட்காம ஒரு விஷயத்த அவ ஏத்துக்கிட்டாதான் எங்களுக்கு கவலையா இருக்கும்.”
9. கடவுளுடைய வார்த்தையில் நம்பிக்கை வைக்க உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
9 பெற்றோர் பொறுமையாகக் கற்றுக்கொடுக்கும்போது, காலப்போக்கில் பிள்ளைகள் சத்தியத்தின் ‘அகலத்தையும் நீளத்தையும் உயரத்தையும் ஆழத்தையும்’ புரிந்துகொள்ள ஆரம்பிப்பார்கள். (எபே. 3:18) அவர்களுடைய வயதுக்கும் புரிந்துகொள்ளும் திறனுக்கும் ஏற்றபடி நாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம். அவர்களுடைய விசுவாசம் அதிகமாகும்போது, கூடப் படிப்பவர்களிடமும் மற்றவர்களிடமும் சத்தியத்தைப் பற்றி அவர்களால் தயக்கமில்லாமல் பேச முடியும். (1 பே. 3:15) உதாரணத்துக்கு, இறந்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை உங்கள் பிள்ளைகளால் பைபிளிலிருந்து விளக்க முடியுமா? பைபிள் தரும் விளக்கம் அவர்களுக்குச் சரியென்று படுகிறதா?a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) கடவுளுடைய வார்த்தையில் விசுவாசத்தை வளர்க்க உங்கள் பிள்ளைக்கு நீங்கள் பொறுமையாக உதவி செய்ய வேண்டும் என்பதை ஞாபகம் வையுங்கள். ஆனால், நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைக்கும்.—உபா. 6:6, 7.
10. பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்போது உங்கள் பங்கில் என்ன செய்வது முக்கியம்?
10 பிள்ளைகள் விசுவாசத்தை வளர்த்துக்கொள்வதற்கு உதவ வேண்டுமென்றால், நீங்கள் முன்மாதிரி வைப்பதும் முக்கியம். மூன்று மகள்களுக்குத் தாயாக இருக்கும் ஸ்டெஃபனீ இப்படிச் சொல்கிறார்: “என்னோட பொண்ணுங்க ரொம்ப சின்ன பிள்ளைங்களா இருந்தப்பவே, நான் சில விஷயங்கள யோசிக்க வேண்டியிருந்துச்சு. அதாவது, ‘யெகோவா இருக்குறாரு... நம்ம மேல அன்பு காட்டுறாரு... அவரு சொல்றதுதான் சரி... அப்படின்னெல்லாம் நான் ஏன் நம்புறேங்கறத பத்தி பிள்ளைங்ககிட்ட பேசறேனா? நான் யெகோவாவ உண்மையிலேயே நேசிக்கிறத பிள்ளைங்களால நல்லா பார்க்க முடியுதா?’ அப்படின்னெல்லாம் யோசிக்க வேண்டியிருந்துச்சு. ஏன்னா, எனக்கு முதல்ல நம்பிக்கை இருந்தாதான் என் பிள்ளைங்களுக்கும் நம்பிக்கை வரும்.”
-