சர்ப்பத்தின் வேடத்தைக் கலைத்தல்
“ஒருநாள் தெய்வதூதர் யெகோவாவின் சந்நிதியில் வந்து நின்றபோது சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.”—யோபு 1:6, தி.மொ.
சாத்தான் என்ற பெயரின் தோற்றுமூலம் என்ன? அதன் அர்த்தம் என்ன? பைபிள் பிரகாரம், அது மூன்று எபிரெயு எழுத்துக்களிலிருந்து உருவானது, அதாவது ש (ஸின்), ט (டெத்), נ (நுன்) அந்த உயிரெழுத்துக்கள் “சாத்தான்” என்ற வார்த்தையை அமைக்கிறது. அறிஞர் எட்வர்டு லாங்டன் குறிப்பிடுகிறபடி, அது ‘எதிர்ப்பது’ அல்லது ‘எதிராளியாக இருப்பது அல்லது நடிப்பது’ என்ற பொருள் கொண்டிருக்கும் வேர் வார்த்தையிலிருந்து வருகிறது.” (1 பேதுரு 5:8-ஐ ஒப்பிடவும்.) சாத்தான் என்ற பெயர் பைபிளில் ஐம்பது முறைகளுக்கு மேல் காணப்படுகிறது என்றாலும், அது எபிரெயு வேதாகமத்தில் 18 முறைகளும், அதுவும் 1 நாளாகமம், யோபு, சகரியா ஆகிய புத்தகங்களில் மட்டுமே தோன்றுகிறது. எனவே என்ன கேள்விகள் எழும்புகிறது என்றால், சாத்தானின் கலகத்தனத்தையும் அவனுடைய நடவடிக்கைகளையும் மனிதன் எப்பொழுது உணர ஆரம்பித்தான்? எபிரெயு வேதாகமத்தில் எப்பொழுது சாத்தான் முதல் முறையாகத் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறான்?
2 மத்திய கிழக்கில் பரதீஸான தோட்டம் இருந்த பூமியில் பாவமும் கலகமும் எப்படி வந்தது என்பதை பைபிள் சாதாரணமான ஆனால் தெளிவான நடையில் விளக்குகிறது. (ஆதியாகமம், 2 மற்றும் 3 அதிகாரங்களைப் பார்க்கவும்.) ஆதாம், ஏவாளின் கீழ்ப்படியாமைக்குக் காரணமாக இருந்தது சர்ப்பம் என்று அடையாளங்காட்டப்பட்டாலும், சர்ப்பத்தால் தொனிக்கப்பட்ட குரலுக்குப் பின்னாலிருந்த அந்த சக்தியும் அறிவுத்திறனும் படைத்தவன் யார் என்பதற்கான உடனடியான குறிப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. என்றபோதிலும், பரதீஸான அந்தத் தோட்டத்திலிருந்து தான் வெளியேற்றப்படுவதற்கு வழிநடத்திய சம்பவங்களை எண்ணிப்பார்ப்பதற்கு ஆதாம் ஏராளமான காலத்தைக் கொண்டிருந்தான்.—ஆதியாகமம் 3:17, 18, 23; 5:5.
3 தெளிவாகவே, விலங்குகள் மனிதனைப் போன்று புத்திக்கூர்மை படைத்ததாய்ப் பேசுவதில்லை என்பதை ஆதாம் அறிந்திருந்தான். ஏவாள் சோதிக்கப்படுவதற்கு முன்பு கடவுள் எந்த ஒரு விலங்கின் மூலமும் தன்னிடம் பேசியில்லை என்பதையும் அவன் அறிந்திருந்தான். அப்படியிருக்க, கடவுளுக்குக் கீழ்ப்படியாதிருக்கத் தன் மனைவியிடம் சொன்னது யார்? முழுவதுமாக வஞ்சிக்கப்பட்டது பெண் என்றாலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை என்று பவுல் சொல்லுகிறான். (ஆதியாகமம் 3:11–13, 17; 1 தீமோத்தேயு 2:14) ஒருவேளை கடவுளுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதில் காரியத்தைக் காணக்கூடாத ஒரு சிருஷ்டி தனக்கு அளிக்கிறது என்று ஆதாம் உணர்ந்திருக்கக்கூடும். என்றபோதிலும், அவன்தானே சர்ப்பத்தால் அணுகப்படவில்லையென்றாலும், கீழ்ப்படியாமையில் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து செல்வதைத் தெரிந்துகொண்டான். ஆதாம் தெரிந்தே தன்னிச்சையாக செய்த கீழ்ப்படியாமையின் செயல் பரிபூரணத்தின் வார்ப்பை உடைத்தது, பாவம் என்ற குறைபாட்டைக் கொண்டுவந்தது, முன்னறிவிக்கப்பட்ட மரண தண்டனைக்கு வழிநடத்தியது. இப்படியாக, சர்ப்பத்தை ஏதுவாகப் பயன்படுத்தி சாத்தான் ஆதி கொலைப்பாதகனானான்.—யோவான் 8:44; ரோமர் 5:12, 14.
4 ஏதேன் தோட்ட கலகத்தனத்தின் பலன் முன்னறிவிக்கப்பட்ட கடவுளுடைய நியாயத்தீர்ப்பாக இருந்தது. அந்த நியாயத்தீர்ப்பு ஒரு “பரிசுத்த இரகசியத்தை” உட்படுத்தியது. அதை முழுவதுமாக தெளிவுபடுவதற்கு ஆயிரக்கணக்கான வருடங்கள் எடுக்கும். கடவுள் சர்ப்பத்திடம் சொன்னார்: “உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.”—எபேசியர் 5:32; ஆதியாகமம் 3:15.
5 இந்த முக்கியமான தீர்க்கதரிசனம் புரியாத பல புதிர்களை உள்ளடக்கியது. “ஸ்திரீ” யாரைக் குறிக்கிறாள்? அது ஏவாளா, அல்லது ஏவாளிலும் அதிக குறிப்பிடத்தக்க அம்சமுடைய ஓர் அடையாள அர்த்தமுள்ள பெண்ணா? மேலும் ‘ஸ்திரீயின் வித்து,’ ‘சர்ப்பத்தின் வித்து’ என்பதன் பொருள் என்ன? ஸ்திரீயின் வித்துக்குப் பகைமையிலிருப்பது சர்ப்பத்தின் வித்து. ஆக, அந்தச் சர்ப்பம் உண்மையிலேயே யார்? இந்தக் கேள்விகளுக்குத் தம்முடைய உரிய காலத்தில் முழு விடை கிடைக்கும் என்பதை யெகோவா தீர்மானித்திருப்பது தெளிவாக இருக்கிறது என்பதை நாம் விரைவில் கவனிப்போம்.—தானியேல் 12:4 மற்றும் கொலோசெயர் 1:25, 26.
பரலோகங்களில் கலகத்தனத்திற்குக் கூடுதல் அத்தாட்சி
6 பைபிள் சரித்திரத்தின் போக்கில், மனித உயிர்வாழ்விலும் மேன்மையான ஒரு மட்டத்தில் கலகத்தனம் இருந்தது வெளிப்படுத்தப்படுகிறது. இது ஜலப்பிரளயத்துக்குச் சற்று முன்பு, மனிதன் பாவத்தில் வீழ்ந்து ஏறக்குறைய 1,500 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிப்படுத்தப்படுகிறது. “தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.” இயல்புக்கு மாறான இந்த இணைப்பின் கலப்பினம் “இராட்சதர்கள்,” (நெபிலிம்) “பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.” (ஆதியாகமம் 6:1–4; “தேவ புத்திரர்” அடையாளங்காணப்படுவதற்கு யோபு 1:6-ஐ ஒப்பிடவும்.) ஏறக்குறைய 2,400 வருடங்களுக்குப் பின்பு யூதா இந்தக் காரியத்தைக் குறித்து சுருக்கமாகக் குறிப்பிட்டான். அவன் எழுதியதாவது: “தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.”—யூதா 6; 2 பேதுரு 2:4, 5.
7இந்தக் கட்டத்தில் பிரளயத்துக்கு முன்பு “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது, . . . அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாய்” இருந்தது. என்றபோதிலும், தேவதூதரின் கலகத்தனத்துக்கும் மனிதனின் துன்மார்க்கத்துக்கும் பின்னால் இருக்கும் அந்த வல்லமையான செல்வாக்கு சாத்தானுடையது என்பது பரிசுத்தாவியினால் ஏவப்பட்டெழுதப்பட்ட ஆதியாகமம் புத்தகத்தில் குறிப்பாக அடையாளங்காட்டப்படுவதில்லை. (ஆதியாகமம் 6:5) ஆம், இஸ்ரவேல், யூதா தேசங்களின் சரித்திரம் முழுவதிலுமே அவர்கள் அவ்வப்பொழுது விக்கிரகாராதனையிலும் பொய் வணக்கத்திலும் ஈடுபட்டுவந்த போதிலும், பரிசுத்தாவியினால் ஏவப்பட்டெழுதப்பட்ட பைபிள் புத்தகங்களாகிய நியாயாதிபதிகள், சாமுவேல், இராஜாக்கள் புத்தகங்களில் இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் காணக்கூடாத செல்வாக்கு செலுத்துபவன் சாத்தான் என்று ஒருபோதும் சொல்லப்படவில்லை—“பூமியெங்கும் உலாவி அதில் சுற்றித்திரிந்து வருகிறேன்” என்று சாத்தான்தானே ஒப்புக்கொண்டபோதிலும் அவ்வாறு சொல்லப்படவில்லை.—யோபு 1:7; 2:2.
8 யோபின் குறிப்பிடத்தக்க பதிவையும் அவனுடைய சோதனைகளையும் நாம் கவனிக்கிற போதிலும், எதிரியான சாத்தானிடமிருந்துதான் தனக்குச் சோதனைகள் வந்தது என்று யோபு குறிப்பிடுவதில்லை. தன்னுடைய நடத்தையின் பேரில் சார்ந்திருந்த விவாதத்தை அந்தச் சமயம் அவன் அறியாதவனாயிருந்தான் என்பது தெரிகிறது. (யோபு 1:6–12) யெகோவாவுக்கு முன் யோபின் உத்தமத்தைச் சவாலுக்குக் கொண்டுவருவதன் மூலம் சாத்தான் பிரச்னையை துரிதப்படுத்தியிருக்கிறான் என்பதை யோபு உணரவில்லை. இப்படியாக யோபின் மனைவி இந்த வார்த்தைகளால் அவனைக் கடிந்துகொண்டாள்: “நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாயிருக்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்!” அவன் கொடுத்த பதில்: “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெற வேண்டாமா?” தன்னுடைய சோதனைகளின் ஊற்றுமூலத்தை அவன் அறியாதவனாய், அவை கடவுளிடமிருந்து வருகிறது என்பதாக நினைத்ததால் அது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதாக நோக்கினான். எனவே, யோபின் உத்தமத்துக்கு இது கடுமையான சோதனையாக இருந்தது.—யோபு 1:21; 2:9, 10.
9 இப்பொழுது ஒரு கேள்வி எழும்புகிறது. நாம் நம்புவதுபோல், மோசே யோபு புத்தகத்தை எழுதினான், எனவே சாத்தான் பூமியெங்கும் சுற்றித்திரிந்து வருகிறான் என்பதை அறிந்திருந்தான் என்றால், அவன் எழுதிய முதல் ஐந்து ஆகமங்களில் ஒன்றில்கூட ஏன் சாத்தானைப் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை? ஆம், எபிரெயு வேதாகமத்தில் ஏன் சாத்தான் அதிகமாகப் பேசப்படவில்லை?a
சாத்தானை ஓரளவாக வெளிப்படுத்துதல்
10 பிசாசின் ஏவுதலின் கீழ் நடக்கும் காரியங்கள் கண்டனம் செய்யப்பட்டாலும் தம்முடைய எதிராளியாகிய சாத்தானை எபிரெயு வேதாகமத்தில் ஓரளவாக வெளிப்படுத்துவதற்கு யெகோவா தம்முடைய ஞானத்தின் அடிப்படையில் தீர்மானிப்பதற்கு நல்ல காரணங்களைக் கொண்டிருந்தார். (லேவியராகமம் 17:7; உபாகமம் 18:10–13; 32:16, 17; 2 நாளாகமம் 11:15) இப்படியாக எபிரெயு எழுத்தாளர்கள் சாத்தானைப் பற்றியும் பரலோகங்களில் அவனுடைய கலகத்தனமான போக்கையும் குறித்து ஓரளவு அறிந்திருந்தாலும், கடவுளுடைய மக்களின் மற்றும் அவர்களைச் சுற்றியிருந்த தேசங்களின் பாவங்களை விளக்கிடவும் வெளிப்படுத்தவும், அவர்களுடைய துன்மார்க்கமான செயல்களைக் கண்டித்து புத்திமதி கொடுக்கவுமே அவர்கள் ஏவப்பட்டார்கள். (யாத்திராகமம் 20:1–17; உபாகமம் 18:9–13) சாத்தானின் பெயர் குறிப்பிடப்பட்டதோ அரிது.
11 ஏதேனில் நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது, “தேவகுமாரரின்” இழிவான நடத்தை மற்றும் யோபு புத்தகத்தில் காணப்படும் பதிவு ஆகியவற்றைக் கவனிக்கும்போது, ஏவப்பட்டெழுதப்பட்ட எபிரெயு வேதாகமத்தின் எழுத்தாளர்கள் பொல்லாங்கைக் குறித்து, மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாத்தானின் செல்வாக்கு குறித்து அறியாமையிலிருக்கவில்லை. பொ. ச. மு. ஆறாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் சகரியா தீர்க்கதரிசிக்குப் பிரதான ஆசாரியனான யோசுவாவின் தரிசனம் கொடுக்கப்பட்டது. “அவன்மேல் குற்றஞ்சாட்டும்படி சாத்தான் அவன் வலதுபக்கத்திலே நின்றான். அப்பொழுது யெகோவா [யெகோவாவின் தூதன், NW] சாத்தானைப் பார்த்து: சாத்தானே, யெகோவா உன்னைக் கடிந்து கொள்வாராக என்றார்.” (சகரியா 3:1, 2) மேலும் பொ. ச. மு. ஐந்தாம் நூற்றாண்டில் இஸ்ரவேல், யூதாவின் சரித்திரத்தை எழுதுகையில் வேதபாரகனாகிய எஸ்றா பின்வருமாறு குறிப்பிட்டான்: “சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.”—1 நாளாகமம் 21:1.
12 இப்படியாக சகரியாவின் காலத்திற்குள்ளாக பரிசுத்த ஆவி சாத்தான் வகிக்கும் பாகத்தை வேதவசனங்களில் தெளிவாக்கிக்கொண்டிருந்தது. ஆனால் இந்தப் பொல்லாங்கன் கடவுளுடைய வார்த்தையில் முழுவதுமாக வெளிப்படுத்தப்படுவதற்கு அல்லது அவனுடைய வேடம் கலைக்கப்படுவதற்கு இன்னும் ஐந்து நூற்றாண்டுகள் கடந்துசெல்ல வேண்டியதாயிருந்தது. பைபிளை ஆதாரமாகக் கொண்டு, சாத்தானை முழுவதுமாக வெளிப்படுத்திடுவதற்கான இந்தக் காலப்பகுதிக்கு நாம் என்ன காரணத்தை அறிய வருகிறோம்?
இந்தப் புதிருக்குத் திறவுகோல்
13 கடவுளுடைய வார்த்தையில் விசுவாசமுடைய கிறிஸ்தவனுக்கு இந்தக் கேள்விகளுக்கும் அதற்கு முன் எழுப்பப்ட்ட கேள்விகளுக்கும் திறவுகோல் பைபிள் வெறும் ஒரு சிறந்த இலக்கிய நூல், முற்றிலும் மனிதனுடைய அறிவின் ஆற்றலால் இயற்றப்பட்டது என்று எண்ணி மேற்கொள்ளப்படும் திறனாய்வில் காணப்படுவதற்கில்லை. அந்தத் திறவுகோல் இரண்டு பைபிள் சத்தியங்களில் காணப்படுகிறது. முதலாவது, சாலொமோன் அரசன் எழுதிய பிரகாரம்: “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.” (நீதிமொழிகள் 4:18; ஒப்பிடவும்: தானியேல் 12:4; 2 பேதுரு 1:19–21.) சத்தியம் கடவுளுடைய வார்த்தையில் கடவுளுடைய உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்படும். அது தேவை மற்றும் அப்படிப்பட்ட சத்தியத்தை அவருடைய ஊழியர்கள் கிரகித்துக்கொள்ளும் திறமைக்கு இசைவாகக் கொடுக்கப்படுகிறது.—யோவான் 16:12, 13; 6:48–69-ஐ ஒப்பிடவும்.
14 இரண்டாம் அடிப்படை உண்மை கிறிஸ்தவ சீஷனாகிய தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதில் காணப்படுகிறது. “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் எந்த நற்கிரியையுஞ் செய்ய தகுதியுள்ளவனாகவும் . . . அவை உபதேசத்துக்கு . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) கடவுளுடைய குமாரனாகிய இயேசு சாத்தானை வெளிப்படுத்திடுவார், இது வேதவசனங்களில் பதிவு செய்யப்படும், இப்படியாக கிறிஸ்தவ சபை, சாத்தானுக்கு எதிராய் யெகோவாவின் அரசுரிமைக்கு ஆதரவாக உறுதியாய் நிலைத்திட தயார் செய்யப்படும்.—யோவான் 12:28–31; 14:30.
15 இந்த ஆதாரங்களின்கீழ் ஆதியாகமம் 3:15-ன் புதிர்கள் படிப்படியாக வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டன. கடவுளுடைய பரிசுத்த ஆவியின் அல்லது கிரியை செய்யும் சக்தியின் வழிநடத்துதலில் எபிரெயு வேதாகமம் வரவிருந்த மேசியாவின் மேல் ஒளிக்கதிர்களைப் பாய்ச்ச ஆரம்பித்தது. (ஏசாயா 9:6, 7; 53:1–12) இதற்கு இணையாகவே அவை கடவுளுடைய எதிராளியாகவும் மனிதவர்க்கத்தின் விரோதியாகவும் சாத்தான் வகிக்கும் பாகத்தின் மேல் சிறிய ஒளிக்கற்றைகளை வீசியது. ஆனால் இயேசு வந்தபோதோ சாத்தான் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட வித்துக்கு விரோதமாக நேரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டான், அப்பொழுது அவன் முற்றிலுமாக வெட்டவெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டான். பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டில் யெகோவாவின் பரலோக அமைப்பாகிய “ஸ்திரீ” வகித்த பாகமும் “வித்தாகிய” இயேசு கிறிஸ்துவின் பாகமும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் தெளிவுபடுத்தப்பட்டது. அதே சமயத்தில், “பழைய பாம்பாகிய வலுசர்ப்பம்,” பிசாசாகிய சாத்தானின் பங்கு அதிக முழு அளவில் வெளியரங்கமானது.—வெளிப்படுத்துதல் 12:1–9; மத்தேயு 4:1–11; கலாத்தியர் 3:16; 4:26.
பரிசுத்த இரகசியம் வெளிப்படுகிறது
16 அப்போஸ்தலனாகிய பவுல் “கிறிஸ்துவைப்பற்றிய பரிசுத்த இரகசியத்தைக்” குறித்து அதிகமாக எழுதினான். (எபேசியர் 3:2–4; ரோமர் 11:25; 16:25) (எபேசியர் 3:2–4; ரோமர் 11:25; 16:25) இந்தப் பரிசுத்த இரகசியம் முடிவில் பழைய பாம்பாகிய பிசாசாகிய சாத்தானை நசுக்கப் போகும் மெய்யான “வித்து”டன் சம்பந்தப்பட்டதாக இருந்தது. (வெளிப்படுத்துதல் 20:1–3, 10) இயேசு அந்த “வித்தின்” முதல் அடிப்படை அங்கத்தினர், ஆனால் அவரை மற்றவர்கள், “உடன் சுதந்தரர்” சேர்ந்துகொள்வார்கள் என்ற உண்மையை இந்தப் பரிசுத்த இரகசியம் உட்படுத்தியது. அந்த “வித்தின்” முழு எண்ணிக்கையைப் பூர்த்திசெய்திட “உடன் சுதந்தரவாளிகள்” முதலாவது யூதர்களிலிருந்தும், பின்பு சமாரியர் மற்றும் புறஜாதியாரிலிருந்தும் சேர்க்கப்படுவதை உட்படுத்தியது.—ரோமர் 8:17; கலாத்தியர் 3:16, 19, 26–29; வெளிப்படுத்துதல் 7:4; 14:1.
17 பவுல் பின்வருமாறு விளக்குகிறார்: “இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது போல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.” அந்த இரகசியம் என்ன? “அதென்னவெனில், புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்கள்.”—எபேசியர் 3:5, 6; கொலோசெயர் 1:25–27.
18 மற்றவர்களெல்லாரிலும் தான் “கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காகவும், . . . எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிப்பதற்கும்” பயன்படுத்தப்பட்டதை பவுல் பாராட்டுகிறான். அல்லது கொலோசெயருக்கு எழுதினபிரகாரம், “ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியம்” என்று குறிப்பிடுகிறான். தர்க்கரீதியாகவே, “வித்தை” பற்றிய இரகசியம் கடைசியில் வெளிப்படுத்தப்பட்டது என்றால், அது மகா எதிரியும் “பழைய பாம்பாகிய வலுசர்ப்பமுமாக இருப்பவனின்” வேடம் முழுவதுமாகக் கலைக்கப்படுவதை உட்படுத்தும். தெளிவாகவே, மேசியா வருமட்டும் சாத்தானை உட்படுத்திய விவாதத்தைப் பெரிதுபடுத்த யெகோவா சித்தங்கொள்ளவில்லை. சாத்தானுடைய வேடத்தைக் கலைப்பதற்கு வித்தாகிய கிறிஸ்து இயேசுவைவிட சிறந்தவர் வேறு யாராக இருக்க முடியும்?—எபேசியர் 3:8, 9; கொலோசெயர் 1:26.
இயேசு எதிராளியின் வேடத்தைக் கலைக்கிறார்
19 தம்முடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் சோதனைக்காரனைப் பின்வரும் வார்த்தைகளில் மறுத்துப்பேசினார்: “அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய யெகோவாவைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.” (மத்தேயு 4:3, 10) மற்றொரு சமயம் இயேசு தம்மைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கொண்ட தேவனைப் பழிக்கும் தம்முடைய மத விரோதிகளை வெளிப்படையாக அடையாளங்காட்டுகிறவராயும் அவர்களை ஊட்டிவளர்க்கிறவனை சபித்து ஏதேன் தோட்டத்தில் சர்ப்பத்துக்குப் பின்னால் இருந்த சக்தியின் வேடத்தைக் கலைப்பவராய்ப் பின்வருமாறு சொன்னார்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவின் இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைப்பாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.”—யோவான் 8:44.
20 சாத்தானை வெளிப்படையாகக் கண்டனம் செய்வதில் இயேசு எவ்விதம் அவ்வளவு உறுதியாக இருக்கக்கூடும்? அவர் எவ்விதம் அவனை அவ்வளவு நன்றாக அறிந்திருக்கக்கூடும்? ஏனென்றால் அவர் பரலோகங்களிலே சாத்தானோடுகூட இருந்தவர்! பேரரசரும் ஆண்டவருமாகிய யெகோவாவுக்கு விரோதமாக அவன் அகந்தை கொண்டு கலகம் செய்ததற்கு முன்னமே இயேசு வார்த்தையாக அவனை அறிந்திருந்தார். (யோவான் 1:1–3; கொலோசெயர் 1:15, 16) ஏதேன் தோட்டத்தில் சர்ப்பத்தின் மூலம் அவன் மேற்கொண்ட தந்திரமான செயல்களை அவர் பார்த்தார். உடன்பிறப்பைக் கொலை செய்த காயீன் மீது அவன் செலுத்திய தந்திரமான செல்வாக்கை அவர் பார்த்தார். (ஆதியாகமம் 4:3–8; 1 யோவான் 3:12) அதற்குப் பின்பு “தேவபுத்திரர் . . . வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்ற போது” இயேசு யெகோவாவின் பரலோக நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தார். (யோபு 1:6; 2:1) ஆம், இயேசு அவனை முழுவதுமாக அறிந்திருந்ததால் அவன் என்னவாக இருந்தானோ, அவனாக—ஒரு பொய்யன், ஒரு கொலைப்பாதகன், ஒரு பழிதூற்றுபவன், மற்றும் கடவுளுடைய ஓர் எதிரியாக அவனுடைய வேடத்தைக் கலைக்க ஆயத்தமாக இருந்தார்!—நீதிமொழிகள் 8:22–31; யோவான் 8:58.
21 இப்படிப்பட்ட பலத்த எதிரி மனிதவர்க்கத்தின் மீதும் அதன் சரித்திரத்தின் மீதும் செல்வாக்குச் செலுத்திவருவதால், இப்பொழுது எழும் கேள்விகள்: சாத்தான் இன்னும் எந்தளவுக்குக் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் வெளியாக்கப்படுகிறான்? அவனுடைய தந்திரமான சூழ்ச்சிகளை நாம் எவ்விதத்தில் எதிர்த்து நம்முடைய கிறிஸ்தவ உத்தமத்தைக் காத்துக்கொள்ளலாம்?—எபேசியர் 6:11. (w88 9⁄1)
[அடிக்குறிப்புகள்]
a பிசாசு—பூர்வீகம் முதல் கிறிஸ்தவ மதத்தின் ஆரம்பக்காலம் முடிய பொல்லாங்கனைப் பற்றிய கருத்துகள் (The Devil—Perceptions of Evil From Antiquity to Primitive Christianity) என்ற நூலில் பேராசிரியர் ரசல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பிசாசானவன் பழைய ஏற்பாட்டில் முழுமையாக விளக்கப்படவில்லை என்ற உண்மைதானே நவீன யூத மதம் மற்றும் கிறிஸ்தவ மத இறைமையியலில் அவனுடைய இருப்பை மறுப்பதற்கு ஆதாரம் அல்ல. அது பிறப்பியல் சார்ந்த மூடக் கருத்தாகும்: ஒரு வார்த்தையின்—அல்லது ஒரு கருத்தின்—உண்மை அதன் முதல் அமைப்பு முறையில் காணப்படவேண்டும் என்ற கருத்து. மாறாக, காலப்போக்கில் வளர்ச்சியடைதலே சரித்திரம் சார்ந்த உண்மையாகும்.”—பக்கம் 174.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ ஆதியாகமம் 3:15 சம்பந்தமாக விளக்கப்படவேண்டிய புதிர்கள் என்ன?
◻ பரலோகங்களில் கலகத்தனத்துக்கு எபிரெயு வேதாகமத்தில் என்ன அத்தாட்சி இருக்கிறது?
◻ எபிரெயு வேதாகமத்தில் சாத்தான் ஏன் குறைவாகக் குறிப்பிடப்படுகிறான் என்பதை நாம் புரிந்துகொள்ள நமக்கு உதவும் இரண்டு உண்மைகள் யாவை?
◻ சாத்தானும் அவன் வகிக்கும் பாகமும் வெளிப்படுத்தப்படுவதில் “கிறிஸ்துவைப்பற்றிய பரிசுத்த இரகசியம்” எந்த விதத்தில் சம்பந்தமுடையதாயிருக்கிறது?
[கேள்விகள்]
1. (எ) சாத்தான் என்ற பெயரின் தோற்றுமூலமும் அதன் அர்த்தமும் என்ன? (பி) வேதாகமத்தில் “சாத்தான்” எத்தனை முறை தோன்றுகிறது? என்ன கேள்விகள் எழும்புகின்றன?
2. ஆதாம், ஏவாள் கலகத்தனத்தைத் தொடர்ந்து என்ன கேள்வி உடனடியாக பதிலளிக்கப்படவில்லை?
3. ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை என்றாலும், அவன் எப்படி பாவம் செய்தான்? மனிதவர்க்கத்துக்கு அதன் விளைவு என்னவாயிருந்திருக்கிறது?
4, 5. (எ) சர்ப்பத்துக்கு விரோதமாக தீர்க்கதரிசனமாக என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது? (பி) அந்தத் தீர்க்கதரிசனத்தில் என்ன புதிர்கள் அடங்கியிருந்தன?
6. ஜலப்பிரளயத்துக்கு முன்பு பரலோகங்களில் கலகத்தனத்துக்குரிய என்ன அறிகுறிகள் காணப்பட்டன?
7. மனுஷனின் அக்கிரமம் இருந்தபோதிலும், பைபிளின் பல சரித்திர புத்தகங்களில் எது இல்லாமலிருப்பதைக் காண்கிறோம்?
8. தான் அனுபவித்த கஷ்டங்களில் சாத்தானுடைய பங்கை யோபு ஆரம்பத்தில் அறிந்திருந்தானா? இது நமக்கு எப்படித் தெரியும்?
9. மோசேயைக் குறித்து என்ன நியாயமான கேள்வியை எழுப்பலாம்?
10. எபிரெய வேதாகமத்தில் சாத்தான் எப்படி ஓரளவே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறான்?
11, 12. எபிரெயு பைபிள் எழுத்தார்கள் சாத்தானையும் அவனுடைய செல்வாக்கையும் குறித்து அறியாதிருக்கவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?
13–15. (எ) எபிரெய வேதாகமத்தில் சாத்தான் ஏன் ஓரளவே வெளிப்படுத்தப்பட்டான் என்பதைப் புரிந்துகொள்வதற்கு அடிப்படையான உண்மைகள் யாவை? (பி) இயேசு பூமிக்கு வந்ததைத் தொடர்ந்து சாத்தானின் வேடம் எவ்விதம் கலைக்கப்பட்டது?
16, 17. “கிறிஸ்துவைப்பற்றிய பரிசுத்த இரகசியம்” எதை உட்படுத்தியது?
18. (எ) “பரிசுத்த இரகசியத்தின்” பொருளை வெளிப்படுத்துவதற்கு காலம் தேவைப்பட்டது என்று பவுல் எப்படி காண்பித்தான்? (பி) இந்த வெளிப்பாடு “பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பத்தை” நாம் புரிந்து கொள்ளும் காரியத்தை எவ்விதம் பாதிக்கும்?
19. எதிராளியின் வேடத்தை இயேசு எவ்விதம் கலைத்தார்?
20. சாத்தானின் வேடத்தைக் கலைப்பதற்கு இயேசு என்ன ஆதாரத்தைக் கொண்டிருந்தார்?
21. பதிலளிக்கப்படவேண்டிய கேள்விகள் என்ன?
[பக்கம் 22-ன் படம்]
ஜலப்பிரளயத்துக்கு முன்பு சாத்தானின் செல்வாக்கு மனிதவர்க்கத்தின் மத்தியில் மிகத் தெளிவாகக் காணப்பட்டது
[பக்கம் 23-ன் படம்]
யோபின் உத்தமத்தைக் குறித்து கடவுளிடம் சவால் எழுப்பியவன் சாத்தான்—உண்மையில் ஓர் ஆள்