உங்களால் முடிவுவரை சகித்திருக்க முடியும்
“நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே [“சகிப்புத்தன்மையோடே,” NW] ஓடக்கடவோம்.”—எபிரெயர் 12:1.
1, 2. சகிப்புத்தன்மையோடிருப்பது என்பதன் அர்த்தமென்ன?
சகிப்புத்தன்மை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது” என்று முதல் நூற்றாண்டு எபிரெய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபிரெயர் 10:36, NW) இந்தப் பண்பின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தி, அப்போஸ்தலன் பேதுருவும் அவ்வாறே கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார்: “உங்கள் விசுவாசத்தோடே . . . பொறுமையையும் [“சகிப்புத்தன்மையையும்,” NW], . . . கூட்டி வழங்குங்கள்.” (2 பேதுரு 1:5, 6) ஆனால், உண்மையில் சகிப்புத்தன்மை என்பது என்ன?
2 “சகித்திரு” என்பதற்கான கிரேக்க வினைச்சொல்லை, “ஓடிப்போகாமல் நிலைத்திரு . . . விடாமுயற்சி செய், உறுதியோடு தரித்திரு” என்று ஒரு கிரேக்க-ஆங்கில அகராதி விளக்கமளிக்கிறது. “சகிப்புத்தன்மை” என்பதற்கான கிரேக்க பெயர்ச்சொல்லைக் குறித்து ஒரு நூல் இவ்வாறு சொல்கிறது: “அது காரியங்களைச் சகிக்க இயலும் தன்மை. காரியங்களை நம்மால் மாற்ற முடியாது என்பதால் வெறுமனே இணங்கிப்போவதை அல்ல, ஆனால் மிகுந்த ஊக்கமான நம்பிக்கையோடு சகிப்பது . . . முகத்திற்கு நேராக காற்றடிக்கையிலும் தடுமாறாமல் நிற்பதற்கு ஒரு மனிதனை செய்விக்கும் தன்மை. வேதனைக்கு அப்பால் அது இலக்கைக் காண்பதால், மிகக் கடும் துன்பத்தையும் மகிமையானதாய் மாற்ற இயலும் நற்பண்பு.” ஆகையால், இடையூறுகளுக்கும் இக்கட்டுகளுக்கும் மத்தியில் ஒருவர் உறுதியாய் நிலைநிற்கவும் நம்பிக்கை இழக்காமல் இருக்கவும் சகிப்புத்தன்மை உதவி செய்கிறது. யாருக்கு இந்தப் பண்பு முக்கியமாக தேவை?
3, 4. (அ) யாருக்கு சகிப்புத்தன்மை தேவை? (ஆ) நாம் ஏன் முடிவு வரையில் சகிப்புத்தன்மையோடு நிலைத்திருக்க வேண்டும்?
3 சகிப்புத்தன்மையை தேவைப்படுத்தும் அடையாளப்பூர்வ ஓர் ஓட்டத்தில், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஓடுகிறார்கள். ஏறக்குறைய பொ.ச. 65-ல் அப்போஸ்தலன் பவுல், தன் சகவேலையாளனும் உண்மையுள்ள பயணத் தோழனுமாகிய தீமோத்தேயுவுக்கு நம்பிக்கையூட்டும் இந்த வார்த்தைகளை எழுதினார்: “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.” (2 தீமோத்தேயு 4:7) “ஓட்டத்தை முடித்தேன்” என்ற சொற்றொடரால், ஒரு கிறிஸ்தவராக பவுல் தம்முடைய வாழ்க்கையை ஆரம்பக் கோடும் முடிவுக் கோடும் கொண்ட ஒரு பந்தய ஓட்டத்திற்கு ஒப்பிட்டார். பவுல் அப்போது பந்தய ஓட்டத்தின் முடிவை வெற்றிகரமாய் நெருங்கிக் கொண்டிருந்தார். பரிசை பெறுவதை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருந்தார். அவர் மேலும் தொடர்ந்து சொன்னார்: “இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்.” (2 தீமோத்தேயு 4:8) பவுல் முடிவுபரியந்தம் சகிப்புத்தன்மையோடு நிலைத்திருந்ததால், பரிசை பெறுவார் என்று நிச்சயமாக இருந்தார். நம் அனைவரையும் பற்றியதென்ன?
4 ஓட்டப் பந்தயத்தில் உட்பட்டிருப்போரை ஊக்குவிக்கும் விதத்தில் பவுல் இவ்வாறு எழுதினார்: “நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே [“சகிப்புத்தன்மையோடே,” NW] ஓடக்கடவோம்.” (எபிரெயர் 12:1) கிறிஸ்தவர்களாக நாம் இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவா தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தபோது, சகிப்புத்தன்மையோடு நிலைத்திருப்பதற்கான இந்த ஓட்டப் பந்தயத்தில் அடியெடுத்து வைத்தோம். சீஷராகும் பாதையில் ஒரு நல்ல தொடக்கம் முக்கியமானது, ஆனால் அதை ஓடி முடிப்பதே முடிவில் முக்கியமாக கருதப்படுகிறது. இயேசு சொன்னார்: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.” (மத்தேயு 24:13) இந்த ஓட்டப் பந்தயத்தை வெற்றிகரமாக ஓடி முடிப்போருக்குக் காத்திருக்கும் பரிசு நித்திய ஜீவன்! ஆகையால், ஓர் இலக்குடன் நாம் இறுதிவரை சகிப்புத்தன்மையுடன் நிலைத்திருக்க வேண்டும். அந்த இலக்கை அடைய எது நமக்கு உதவும்?
சரியான ஊட்டச்சத்து—மிக இன்றியமையாதது
5, 6. (அ) ஜீவனுக்காக ஓடும் ஓட்டத்தில் சகிப்புத்தன்மையோடு நிலைத்திருக்க நாம் எதற்கு கவனம் செலுத்த வேண்டும்? (ஆ) ஆவிக்குரிய எந்த ஏற்பாடுகளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், ஏன்?
5 பூர்வ காலங்களில் கிரீஸிலுள்ள கொரிந்து பட்டணத்திற்கு அருகில் புகழ்பெற்ற இஸ்த்மியன் விளையாட்டுகள் நடைபெற்ற ஓர் இடம் இருந்தது. அங்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளையும் மற்ற பந்தயங்களையும் பற்றி கொரிந்திய சகோதரர்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பதில் பவுலுக்கு துளியும் சந்தேகமில்லை. அவர்களுக்கு தெரிந்திருந்த இந்த விஷயத்திற்கு கவனத்தைத் திருப்பி, அவர்கள் உட்பட்டிருந்த ஜீவனுக்கான ஓட்டப் பந்தயத்தை அவர் நினைப்பூட்டினார்: “பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.” ஓட்டப் பந்தயத்தில் நிலைத்திருந்து முடிவு வரையில் தொடர்ந்து ஓடுவதன் முக்கியத்துவத்தை பவுல் வலியுறுத்தினார். ஆனால் அவ்வாறு செய்வதற்கு எது அவர்களுக்கு உதவி செய்யும்? “பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்” என்றும் அவர் சொன்னார். ஆம், பூர்வகால போட்டி விளையாட்டுகளில் கலந்துகொண்டவர்கள் மிகக் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டனர். சாப்பிடுவதிலும் குடிப்பதிலும் அதிக கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதில் கவனமாயிருந்தார்கள். ஜெயிப்பதற்காக தங்கள் ஒவ்வொரு நடவடிக்கையையும் கட்டுப்படுத்தினார்கள்.—1 கொரிந்தியர் 9:24, 25.
6 கிறிஸ்தவர்கள் அடியெடுத்து வைத்திருக்கும் ஓட்டப் பந்தயத்தைப் பற்றியதென்ன? “ஜீவனுக்கான ஓட்டப் பந்தயத்தில் நீங்கள் சகிப்புத்தன்மையுடன் நிலைத்திருக்கப் போகிறீர்களென்றால், சத்துள்ள ஆவிக்குரிய உணவுக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்று யெகோவாவின் சாட்சிகளுடைய சபையின் மூப்பர் ஒருவர் சொல்கிறார். ‘சகிப்புத்தன்மையை அருளும் தேவனாகிய’ யெகோவா நமக்கு அளித்திருக்கும் ஆவிக்குரிய உணவை சிந்தித்துப் பாருங்கள். (ரோமர் 15:6) நம்முடைய ஆவிக்குரிய ஊட்டச்சத்தின் முதன்மையான முக்கிய ஊற்று அவருடைய வார்த்தையாகிய பைபிள். பைபிள் வாசிப்பதற்கான நல்ல படிப்புத் திட்டத்தை வைத்து, அதை தவறாமல் நாம் பின்பற்ற வேண்டும் அல்லவா? “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” மூலம் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! என்ற காலத்திற்கேற்ற பத்திரிகைகளையும், பைபிள் அடிப்படையிலான மற்ற பிரசுரங்களையும் யெகோவா அருளியிருக்கிறார். (மத்தேயு 24:45) இவற்றை ஊக்கத்தோடு கவனமாய்ப் படிப்பது, நம்மை ஆவிக்குரிய வகையில் பலப்படுத்தும். ஆம், தனிப்பட்ட படிப்புக்காக நாம் நேரம் செலவிட வேண்டும்; ‘காலத்தைத் தப்பவிடாமல் பிரயோஜனப்படுத்திக்கொள்ள’ வேண்டும்.—எபேசியர் 5:16, தி.மொ.
7. (அ) அடிப்படை கிறிஸ்தவக் கோட்பாடுகளை மாத்திரமே அறிவதோடு நாம் ஏன் திருப்தியடையக் கூடாது? (ஆ) நாம் எவ்வாறு ‘முதிர்ச்சியை நோக்கி முன்னேறலாம்’?
7 கிறிஸ்தவ சீஷருக்குரிய பாதையில் நாம் நிலைத்திருப்பதற்கு, அடிப்படையான ‘ஆரம்ப உபதேசங்களுக்கு’ மேலாக, ‘முதிர்ச்சியை நோக்கி முன்னேறிச் செல்ல’ வேண்டும். (எபிரெயர் 6:1, தி.மொ.) ஆகையால், சத்தியத்தின் ‘அகலமும் நீளமும் ஆழமும் உயரமுமானவற்றில்’ ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு, ‘பூரண வயதுள்ளவர்களுக்குத் தகுந்த’ ‘பலமான ஆகாரத்திலிருந்து’ ஊட்டச்சத்தை பெறவேண்டும். (எபேசியர் 3:18; எபிரெயர் 5:12-14) பூமியில் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய நம்பத்தக்க நான்கு விவரப் பதிவுகளாகிய மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் சுவிசேஷங்களை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். இந்த சுவிசேஷ பதிவுகளைக் கவனமாக படிப்பதன்மூலம் இயேசு நடப்பித்த செயல்களையும் அவர் எப்படிப்பட்டவர் என்பதையும் அறிவதோடு, அவருடைய செயல்களைத் தூண்டுவித்த அவருடைய சிந்தனைப் போக்கையும் உணர்ந்து கொள்ளலாம். அப்போது நாம் “கிறிஸ்துவின் சிந்தை” உடையோராகலாம்.—1 கொரிந்தியர் 2:16.
8. எவ்வாறு கிறிஸ்தவக் கூட்டங்கள், ஜீவனுக்கான ஓட்டத்தில் சகிப்புத்தன்மையோடு நிலைத்திருக்க நமக்கு உதவுகின்றன?
8 பவுல் தம்முடைய உடன் விசுவாசிகளுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக. சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது; ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதிநாள் நெருங்கி வருகிறதைக் காண்கிறோம்; எனவே இன்னும் அதிகமாய் ஊக்குமூட்டுவோம்.” (எபிரெயர் 10:24, 25, பொ.மொ.) கிறிஸ்தவ கூட்டங்கள் எப்பேர்ப்பட்ட உற்சாகத்தின் உறைவிடம்! நம்மீது கரிசனை காட்டுபவர்களும் இறுதிவரை சகிப்புத்தன்மையோடு நிலைத்திருக்க நமக்கு உதவ ஆவலுள்ளவர்களுமான அன்புள்ள சகோதர சகோதரிகளுடன் இருப்பது மனதுக்கு எவ்வளவு இதமானது! யெகோவாவின் இந்த அன்புள்ள ஏற்பாட்டை நாம் ஏனோதானோவென அசட்டையாக கருதக்கூடாது. நம்முடைய ஊக்கமான தனிப்பட்ட படிப்பு, தவறாமல் கூட்டங்களுக்குச் செல்வது ஆகியவற்றின் மூலம் ‘புரிந்துகொள்ளும் திறமைகளில் முழு வளர்ச்சியடைந்தவராக ஆவோமாக.’—1 கொரிந்தியர் 14:20, NW.
உங்களை ஊக்குவிக்கும் பார்வையாளர்கள்
9, 10. (அ) சகிப்புத்தன்மையோடு நிலைத்திருப்பதற்கான ஓர் ஓட்டத்தில், பார்வையாளர்கள் எவ்வகையில் ஊக்குவிப்புக்குக் காரணராய் இருக்கலாம்? (ஆ) எபிரெயர் 12:1-ல் குறிப்பிட்டுள்ள, ‘நம்மைச் சூழ்ந்துள்ள மேகம் போன்ற திரளான சாட்சிகள்’ யார்?
9 ஓடுகிறவன் எவ்வளவுதான் நன்கு தயாரானாலும், இடையில் ஏதாயினும் ஏற்பட்டால் அவன் தடுமாறிப் போகலாம். “நீங்கள் நன்றாய் ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?” என்று பவுல் கேட்டார். (கலாத்தியர் 5:7) கலாத்திய கிறிஸ்தவர்களில் சிலர், கெட்ட சகவாசங்களுக்குள் வீழ்ந்து, அதன் விளைவாக தங்கள் ஜீவனுக்கான ஓட்டத்தில் கவனம் சிதறுண்டதாக தெரிகிறது. மறுபட்சத்தில், மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவும் ஊக்குவிப்பும் அந்த ஓட்டத்தில் சகிப்புத்தன்மையோடு நிலைத்திருப்பதை பெரிதளவு எளிதாக்கும். விளையாட்டு போட்டியில் கலந்துகொள்பவர்கள்மீது பார்வையாளர்கள் ஏற்படுத்தும் நல்ல பாதிப்பைப்போல் இது உள்ளது. உணர்ச்சியார்வம் ததும்பும் கூட்டத்தினர் அந்த ஊக்கத்தை மேலும் பெருகச் செய்கிறார்கள்; அது, போட்டியாளர்களை தொடக்கத்திலிருந்து முடிவுவரை அதே ஊக்கத்தோடு ஒரே குறிக்கோளோடு செயல்படச் செய்கிறது. முடிவுக் கோட்டை நெருங்குகையில், பார்வையாளர்கள் பெரும்பாலும் உரத்த இசையோடும் கைதட்டுதலோடும் பாராட்டி ஆர்ப்பரிப்பது, போட்டியில் கலந்துகொள்வோருக்குத் தேவைப்படும் கூடுதலான ஊக்குவிப்பை அளிக்கலாம். நிச்சயமாகவே, பந்தயத்தில் கலந்துகொள்வோரின்மீது பரிவிரக்கமுள்ள பார்வையாளர்கள் நல்ல பாதிப்பை ஏற்படுத்தலாம்.
10 கிறிஸ்தவர்கள் அடியெடுத்து வைத்திருக்கும் ஜீவனுக்கான ஓட்டத்தில், பார்வையாளரின் கூட்டத்திலிருப்போர் யார்? எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறபடி, கிறிஸ்தவ காலத்திற்கு முன்னிருந்தவர்களான யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளை வரிசையாக குறிப்பிட்ட பின்பு பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, . . . நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே [“சகிப்புத்தன்மையோடே,” NW] ஓடக்கடவோம்.” (எபிரெயர் 12:1) மேகம் என்பதை உருவகமாக பயன்படுத்தினதில், திட்டமான அளவும் வடிவமுமுள்ள ஒரு மேகத்தை விவரிக்கும் கிரேக்க பதத்தை பவுல் பயன்படுத்தவில்லை. மாறாக, “வானங்களை முழுவதும் மூடியிருக்கும், வடிவமற்ற, பெருந்திரளான முகிலைக் குறிக்கிறது” என்று சொற்களஞ்சிய ஆசிரியர் டபிள்யு. இ. வைன் குறிப்பிடுகிற ஒன்றை அவர் பயன்படுத்தினார். சந்தேகமில்லாமல், சாட்சிகளின் ஒரு பெரும் திரளையே பவுல் மனதில் வைத்திருந்தார்; அவ்வளவு மிகப் பலராக அவர்கள் இருந்ததனால், மேகத் திரளைப்போல் இருந்தார்கள்.
11, 12. (அ) தொடர்ந்து சகிப்புத்தன்மையோடு ஓடுவதற்கு, கிறிஸ்தவ காலத்திற்கு முன்னிருந்த உண்மையுள்ள சாட்சிகள் நம்மை எவ்வாறு ஊக்குவிக்க முடியும்? (ஆ) ‘மேகம்போன்ற திரளான சாட்சிகளிடமிருந்து’ நாம் எவ்வாறு அதிக முழுமையாய் பயனடையலாம்?
11 கிறிஸ்தவ காலத்திற்கு முன்னிருந்த உண்மையுள்ள சாட்சிகள் உண்மையாகவே இன்று பார்வையாளர்களாய் இருக்க முடியுமா? முடியாது. அவர்கள் எல்லாரும் உயிர்த்தெழுதலுக்காக காத்திருப்பவர்களாய் மரணத்தில் நித்திரை செய்கிறார்கள். எனினும், உயிரோடிருந்தபோது அவர்கள்தாமே வெற்றிகரமாய் ஓடி முடித்திருந்தார்கள்; அவர்களுடைய முன்மாதிரிகள் பைபிளின் பக்கங்களில் இன்றும் உயிரோவியங்களாய் உள்ளன. வேதவசனங்களை நாம் படிக்கையில், இந்த உண்மையுள்ள நபர்கள் நம்முடைய மனங்களில் உயிர்பெற்று, ஓட்டப் பந்தயத்தை முடிவு வரையில் தொடர நம்மை ஊக்கி உற்சாகப்படுத்துவோர்போல் இருக்க முடியும்.—ரோமர் 15:4.a
12 உதாரணமாக, உலகப்பிரகாரமான நல்ல வாய்ப்புகள் நம்மை கவர்ந்திழுக்கையில், எவ்வாறு மோசே எகிப்தின் மேன்மைகளை வேண்டாமென்று தள்ளிவிட்டார் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது, விலகிச் செல்லாமல் பாதையில் உறுதியாய் நிலைநிற்க நம்மை தூண்டுவிக்கும் அல்லவா? நாம் எதிர்ப்படும் ஒரு சோதனை கடுமையாக தோன்றினால், ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்கை பலிசெலுத்தும்படி கேட்கப்பட்டபோது, அவர் எதிர்ப்பட்ட அந்தக் கடினமான பரீட்சையை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்; அது விசுவாச சோதனையில் பின்வாங்கிவிடாமல் இருப்பதற்கு நிச்சயமாகவே நம்மை ஊக்குவிக்கும். ‘‘மேகம்போன்ற இத்தனை திரளான” இந்தச் சாட்சிகள், எந்தளவு நம்மை இவ்வகையில் உந்துவிக்கிறார்கள் என்பது நம்முடைய மனக்கண்களால் எவ்வளவு தெளிவாக நாம் அவர்களைக் காண்கிறோம் என்பதன் பேரிலேயே சார்ந்திருக்கிறது.
13. ஜீவனுக்கான ஓட்டத்தில் யெகோவாவின் தற்கால சாட்சிகள் நம்மை எவ்வகையில் உந்துவிக்கிறார்கள்?
13 தற்காலங்களிலும் யெகோவாவின் பெரும் கூட்டத்தாரான சாட்சிகளால் நாம் சூழப்பட்டிருக்கிறோம். அபிஷேகஞ் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும், அவர்களோடுகூட ‘திரள்கூட்டத்தாரான’ ஆண்களும் பெண்களும், விசுவாசத்திற்கு எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரிகளாய் திகழ்கின்றனர்! (வெளிப்படுத்துதல் 7:9) இந்தப் பத்திரிகையிலும், மற்ற உவாட்ச் டவர் பிரசுரங்களிலும் அவர்களுடைய வாழ்க்கை சரிதைகளை நாம் அவ்வப்போது வாசிக்கலாம்.b அவர்களுடைய விசுவாசத்தைக் குறித்து நாம் சிந்திக்கையில், கடைசிவரை சகிப்புத்தன்மையோடு நிலைத்திருப்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறோம். யெகோவாவை உண்மையுடன் சேவிக்கிறவர்களே நெருங்கிய நண்பர்களும் உறவினர்களுமானோர்; அத்தகையவர்களின் ஆதரவை பெற்றிருப்பது எவ்வளவு ஆனந்தத்தை அளிக்கிறது! ஆம், ஜீவ ஓட்டத்தில் நம்மை உந்தி ஊக்குவிக்க பலர் நமக்கு உள்ளனர்.
உங்கள் ஓட்ட வேகத்தில் கவனம்
14, 15. (அ) நம் ஓட்ட வேகத்தை கவனத்தில் வைப்பது ஏன் முக்கியம்? (ஆ) இலக்குகளை வைப்பதில் நாம் ஏன் நியாயமாயிருக்க வேண்டும்?
14 மாரத்தான் போன்ற நீண்ட தூர பந்தய ஓட்டத்தில் ஓடுகையில், ஓடுபவன் தன் வேகத்தில் கவனம் வைக்க வேண்டியது அவசியம். நியூ யார்க் ரன்னர் பத்திரிகை இவ்வாறு சொல்கிறது: “பந்தயத்தின் துவக்கத்திலேயே அதி விரைவாய் ஓடுவது, நீங்கள் தோல்வியுறுவதில் முடிவடையலாம். கடைசியான பல மைல் தூரமிருக்கையில், நீண்ட நேரம் மல்லுக்கட்ட வேண்டியிருக்கும் அல்லது ஓடுவதை விட்டு விலக வேண்டி வரும்.” மாரத்தான் ஓட்டக்காரர் ஒருவர் இவ்வாறு நினைவுபடுத்திச் சொல்கிறார்: “நான் கலந்துகொண்ட ஓட்டப் பந்தயத்தில், துவக்கத்தில் கொடுக்கப்பட்ட ஒரு பேச்சில், பேச்சாளர் இவ்வாறு தெளிவாய் எச்சரித்தார்: “விரைவாய் ஓடுவோருக்கு சரிசமமான வேகத்தில் ஓட முயற்சி செய்யாதீர்கள். உங்களால் முடிந்த வேகத்தில் ஓடுங்கள். இல்லையென்றால் நீங்கள் முழுமையாய் சோர்வுற்று, ஓடுவதை நிறுத்த வேண்டியதாகலாம்.’ இந்த அறிவுரைக்குச் செவிகொடுத்தது, ஓட்டத்தை ஓடி முடிக்க எனக்கு உதவி செய்தது.”
15 ஜீவனுக்கான ஓட்டத்தில் கடவுளுடைய ஊழியர்கள் ஊக்கமாய் பிரயாசப்பட வேண்டியது அவசியம். (லூக்கா 13:24, NW) எனினும், சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “பரத்திலிருந்து வரும் ஞானம் . . . பகுத்தறிவுக்கு ஒத்தது.” (யாக்கோபு 3:17, NW) இன்னுமதிகம் செய்ய மற்றவர்களின் நல்ல முன்மாதிரி நம்மை தூண்டினாலும், நம்முடைய திறமைகளுக்கும் சூழ்நிலைமைகளுக்கும் தகுந்தாற்போல் செயல்படுத்த முடிந்த இலக்குகளை வைக்க பகுத்தறிவு நமக்கு உதவும். வேதவசனங்கள் நமக்கு இவ்வாறு நினைப்பூட்டுகின்றன: “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப் பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும். அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.”—கலாத்தியர் 6:4, 5.
16. நம்முடைய வேகத்தை கவனத்தில் வைத்துக்கொள்ள மனத்தாழ்மை எவ்வாறு நமக்கு உதவுகிறது?
16 மீகா 6:8-ல் (NW), சிந்தனையைத் தூண்டும் இந்தக் கேள்வி நம்மிடம் கேட்கப்படுகிறது: “உன் கடவுளுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்க வேண்டுமென கேட்பதேயல்லாமல் வேறே எதை யெகோவா உன்னிடம் கேட்கிறார்”? மனத்தாழ்மை நம்முடைய வரம்புகளை உணர்ந்திருப்பதை உட்படுத்துகிறது. நம்முடைய சுகவீனம் அல்லது முதிர்வயது, கடவுளுடைய ஊழியத்தில் நாம் செய்ய முடிந்தவற்றின்மீது சில வரம்புகளை வைத்திருக்கிறதா? நாம் சோர்வடையாமல் இருப்போமாக. ‘நமக்கு இல்லாததின்படியல்ல, நமக்கு உள்ளதின்படியே’ யெகோவா நம்முடைய முயற்சிகளையும் தியாகங்களையும் ஏற்றுக்கொள்கிறார்.—2 கொரிந்தியர் 8.12; லூக்கா 21:1-4-ஐ ஒப்பிடுக.
பரிசின்மீது உங்கள் கண்களை ஊன்ற வையுங்கள்
17, 18. எதை கவனத்தில் வைத்திருந்தது, கழுமரத்தை சகிக்க இயேசுவுக்கு உதவியது?
17 ஜீவனுக்கான இந்த ஓட்ட பந்தயத்தில் சகிப்புத்தன்மையோடு நிலைத்திருப்பதன் அவசியத்தை கொரிந்திய கிறிஸ்தவர்களுக்கு பவுல் குறிப்பிட்டுக் காட்டுகையில் அந்த இஸ்த்மியன் விளையாட்டுகளில் உட்பட்டிருந்த அதேசமயத்தில் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சத்தையும் குறிப்பிட்டார். அந்த விளையாட்டுகளில் கலந்துகொள்பவர்களைப் பற்றி பவுல் இவ்வாறு எழுதினார்: “அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு [ஓடுகிறார்கள்] நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.” (1 கொரிந்தியர் 9:25, 26) அந்தப் பூர்வகால விளையாட்டுகளில் வெற்றி பெற்றவனின் பரிசு, தேவதாரு மரத்தின் அல்லது மற்ற செடிகளின் இலையில், அல்லது காய்ந்த சிவரிக்கீரையிலும்கூட செய்யப்பட்ட கிரீடமாக அல்லது வளையமாக இருந்தது—மெய்யாகவே ‘அழிவுள்ள கிரீடம்.’ எனினும், முடிவு வரை சகிப்புத்தன்மையோடு நிலைத்திருக்கும் கிறிஸ்தவர்களுக்கு என்ன காத்திருக்கிறது?
18 நமக்கு முன்மாதிரியானவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறிப்பிட்டு, அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தினிமித்தம், அவமானத்தைக் கருதாமல் கழுமரத்தைச் சகித்து, கடவுளுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.” (எபிரெயர் 12:2, NW) இயேசு, கழுமரத்திற்கும் அப்பால் தமக்காக வைக்கப்பட்டிருந்த பரிசை நோக்குபவராய், தம்முடைய மனித வாழ்க்கையின் முடிவு வரை சகித்தார். இந்தப் பரிசு, யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படும்படி செய்வதிலும், மனித குடும்பத்தை மரணத்திலிருந்து மீட்பதிலும், அரசராகவும் பிரதான ஆசாரியராகவும் இருப்பதிலும், கீழ்ப்படிதலுள்ள மனிதரை ஒரு பரதீஸான பூமியில் முடிவற்ற வாழ்க்கைக்கு திரும்பக் கொண்டுவருவதிலும் அவருக்கு இருக்கும் சந்தோஷத்தை உட்படுத்துகிறது.—மத்தேயு 6:9, 10; 20:28; எபிரெயர் 7:23-26.
19. கிறிஸ்தவ சீஷருக்குரிய போக்கை நாம் தொடருகையில், எதை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்?
19 கிறிஸ்தவ சீஷருக்குரிய பாதையை நாம் தொடருகையில், நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள சந்தோஷத்தைச் சிந்தித்துப் பாருங்கள். கடவுளின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதும், உயிரைக் காக்கும் பைபிள் அறிவை மற்றவர்களுக்கு அளிப்பதுமான பரம திருப்திதரும் ஊழியத்தை யெகோவா நமக்கு கொடுத்திருக்கிறார். (மத்தேயு 28:19, 20) உண்மையான கடவுளில் ஆர்வம் காட்டும் ஒருவரை கண்டுபிடிப்பதும், ஜீவனுக்கான ஓட்டப் பந்தயத்தில் அடியெடுத்து வைக்க அந்த நபருக்கு உதவுவதும், எத்தகைய பெரும் மகிழ்ச்சியளிக்கிறது! நாம் பிரசங்கிக்கிற ஜனங்களின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தாலும், யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதோடு இணைந்த இந்த வேலையில் பங்குகொள்வது பாக்கியமே. நாம் சாட்சிபகரும் பிராந்தியத்திலுள்ளோரின் அக்கறையில்லாமையை அல்லது எதிர்ப்பை பொருட்படுத்தாமல், ஊழியத்தில் நாம் சகிப்புத்தன்மையோடு நிலைத்திருக்கையில், யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்தும் பெருமகிழ்ச்சி நமக்கு உண்டாகிறது. (நீதிமொழிகள் 27:11) மேலும், அவர் நமக்கு வாக்குறுதியளிக்கும் மகத்தான பரிசு நித்திய ஜீவன். அது எப்பேர்ப்பட்ட சந்தோஷம்! நாம் இந்த ஆசீர்வாதங்களை கவனத்தில் வைத்து, பந்தய ஓட்டத்தை விடாது தொடரவேண்டும்.
முடிவு நெருங்கி வருகையில்
20. முடிவு நெருங்குகையில், ஜீவனுக்கான ஓட்டம் எவ்வாறு அதிக கடினமாகலாம்?
20 ஜீவனுக்கான இந்த ஓட்டத்தில், நம்முடைய பிரதான சத்துருவாகிய பிசாசான சாத்தானோடு நாம் போராட வேண்டியிருக்கிறது. முடிவை நெருங்குகையில், நம்மை இடறிவிழச் செய்ய அல்லது தாமதப்படுத்த அவன் இன்னுமதிக மும்முரமாய் முயற்சி செய்கிறான். (வெளிப்படுத்துதல் 12:12, 17) மேலும், ‘முடிவு காலத்தைக்’ குறிக்கிற யுத்தங்கள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள், இன்னும் மற்ற இக்கட்டுகளின் மத்தியில், ஒப்புக்கொடுத்த உண்மையுள்ள ராஜ்ய அறிவிப்பாளராக தொடர்ந்து செயல்படுவது எளிதல்ல. (தானியேல் 12:4; மத்தேயு 24:3-14; லூக்கா 21:11; 2 தீமோத்தேயு 3:1-5) மேலும், நாம் எதிர்பார்த்ததைவிட முடிவு அதிக தூரம் இருப்பதாய் சிலசமயம் தோன்றலாம். முக்கியமாக இந்த ஓட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் நாம் பிரவேசித்திருந்தால் அவ்வாறு தோன்றலாம். எனினும், முடிவு வரும் என்று கடவுளுடைய வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது. அது தாமதிக்காது என்று யெகோவா சொல்கிறார். முடிவு கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது.—ஆபகூக் 2:3; 2 பேதுரு 3:9, 10.
21. (அ) ஜீவனுக்கான ஓட்டத்தில் நாம் விடாது தொடருகையில் எது நம்மை பலப்படுத்தும்? (ஆ) முடிவு நெருங்கி வருகையில் நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
21 ஆகையால், ஜீவனுக்கான ஓட்டத்தில் வெற்றிபெற நம்முடைய ஆவிக்குரிய ஊட்டச்சத்திற்காக யெகோவா அன்புடன் அருளியவற்றிலிருந்து பலத்தைப் பெற வேண்டும். மேலும், பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிற நம்முடைய உடன் விசுவாசிகளோடு தவறாமல் கூட்டுறவு கொள்வதிலிருந்து நாம் பெற முடிந்த எல்லா ஊக்குவிப்பும் நமக்குத் தேவை. ஓடும் வழியில் கடும் துன்புறுத்துதலும் எதிர்பாராத சம்பவங்களும் நம்முடைய ஓட்டத்தை அதிகக் கடினமாக்கினாலும், நாம் முடிவுவரையில் சகிப்புத்தன்மையோடு நிலைத்திருக்க முடியும். ஏனென்றால், ‘இயல்புக்கு மீறிய வல்லமையை’ யெகோவா அருளுகிறார். (2 கொரிந்தியர் 4:7, NW) இந்த ஓட்டத்தை நாம் வெற்றிகரமாய் ஓடி முடிக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார் என்பதை அறிவது மறுபடியும் எவ்வளவாய் நம்பிக்கை அளிக்கிறது! “நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்” என்ற முழு நம்பிக்கையுடன், “நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே [“சகிப்புத்தன்மையோடே,” NW] ஓடக்கடவோம்.”—எபிரெயர் 12:1; கலாத்தியர் 6:9.
[அடிக்குறிப்புகள்]
a எபிரெயர் 11:1–12:3 வரையான இதன் தர்க்கரீதியான ஆராய்ச்சிக்கு, ஆங்கில காவற்கோபுரம், ஜனவரி 15, 1987, பக்கங்கள் 10-20-ஐ காண்க.
b இத்தகைய ஊக்குவிக்கும் அனுபவங்களுக்கு, காவற்கோபுரம், ஜூன் 1, 1998, பக்கங்கள் 28-31; செப்டம்பர் 1, 1998, பக்கங்கள் 24-8; பிப்ரவரி 1, 1999, பக்கங்கள் 25-9 ஆகியவற்றில் வெளிவந்த சமீப காலத்திய முன்மாதிரிகள் சிலவற்றை காணலாம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ நாம் ஏன் முடிவு வரையில் சகிப்புத்தன்மையோடு நிலைத்திருக்க வேண்டும்?
◻ யெகோவாவின் என்ன ஏற்பாடுகளை நாம் அசட்டை செய்யக்கூடாது?
◻ நம் ஓட்ட வேகத்தை கவனத்தில் வைப்பது ஏன் முக்கியம்?
◻ நாம் விடாது தொடர்ந்து ஓடுகையில் என்ன சந்தோஷம் நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது?
[பக்கம் 18-ன் படம்]
கிறிஸ்தவ கூட்டங்களிலிருந்து ஊக்குவிப்பைப் பெறுங்கள்