சத்திய வசனத்தை சரியாக போதிக்க நமக்கு எது உதவும்?
செய்தித்தாளில் நாடக விமர்சனம் எழுதுபவர் ஒரு நாடகத்தைப் பார்க்கச் சென்றார். அவருக்கு அது பிடிக்கவில்லை. அதை விமர்சிக்கையில் அவர் இவ்வாறு எழுதினார்: “எதுவுமே இல்லாத ஒரு நாடகத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், கட்டாயமாக இந்த நாடகத்தை நீங்கள் பார்க்க வேண்டும்.” அதற்குப் பிறகு, இந்த நாடகத்தை அமைத்தவர்கள் இந்த விமர்சகரின் வார்த்தைகளை வெளியிட்டு ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார்கள். அது இவ்வாறு வாசித்தது: “கட்டாயமாக இந்த நாடகத்தை நீங்கள் பார்க்க வேண்டும்”! விமர்சகரின் வார்த்தைகள் விளம்பரத்தில் அப்படியே இடம்பெற்றிருந்தன, ஆனால் சூழமைவுக்குப் பொருந்தாமல் பயன்படுத்தப்பட்டன. ஆகவே விமர்சகரின் கருத்து அப்படியே திரித்துக் கூறப்பட்டது.
ஒரு கூற்றின் சூழமைவு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உதாரணம் காட்டுகிறது. பொருத்தமின்றி ஒரு சில வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டால் அதன் அர்த்தம் மாறுபடும். இயேசுவை சாத்தான் தவறாக வழிநடத்த முயன்றபோது வேதவாக்கியங்களின் கருத்தை திரித்துக் கூறியது போல இது இருக்கிறது. (மத்தேயு 4:1-11) மறுபட்சத்தில், ஒரு கூற்றின் சூழமைவை கவனத்தில் எடுத்துக்கொண்டால், அதன் அர்த்தத்தை நாம் அதிக திருத்தமாக புரிந்துகொள்ள முடியும். இதன் காரணமாகவே, ஒரு பைபிள் வசனத்தை நாம் படிக்கும்போது, அது எந்த சூழமைவில் சொல்லப்பட்டது என்பதை பார்ப்பது எப்போதும் ஞானமான காரியம். அப்போதுதான் எழுத்தாளர் எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்பது நமக்கு நன்றாக புரியும்.
கவனமாக கையாளவும்
சூழமைவு என்பது குறிப்பிட்ட வார்த்தை அல்லது பகுதிக்கு முன்போ பின்போ வரும் எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட பகுதி, இது பொதுவாக அதன் பொருளை அல்லது விளைவை பாதிக்கிறது. குறிப்பிட்ட சம்பவம், நிலைமை போன்றவற்றோடு சம்பந்தப்பட்ட சூழ்நிலைகள் அல்லது உண்மைகள் என்றும் சூழமைவை விளக்கலாம். இரண்டாவதாக கூறப்பட்ட கருத்தில் பார்த்தால் “சூழமைவு” “பின்னணி”யைக் குறிக்கும். தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய விஷயத்தை எண்ணிப்பார்க்கையில், ஒரு வசனத்தின் சூழமைவைக் கவனிப்பது மிகவும் முக்கியமாகும்: “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.” (2 தீமோத்தேயு 2:15) கடவுளுடைய வார்த்தையை சரியாக பகுத்துப் போதிப்பதற்கு நாம் அதை சரியாக புரிந்துகொண்டு, பின்னர் அதை மற்றவர்களுக்கு நேர்மையாகவும் திருத்தமாகவும் விளக்குவது அவசியம். பைபிளின் நூலாசிரியரான யெகோவாமீது நமக்கிருக்கும் மரியாதை, அவ்வாறு செய்ய நம்மைத் தூண்டும். சூழமைவை சிந்திப்பது இதற்குப் பேருதவி செய்யும்.
இரண்டு தீமோத்தேயுவின் பின்னணி
உதாரணமாக, பைபிள் புத்தகமாகிய இரண்டு தீமோத்தேயுவை நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.a இதை ஆராய்வதற்கு புத்தகத்தின் பின்னணியைக் குறித்து சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம். இரண்டு தீமோத்தேயுவை எழுதியது யார்? எப்போது எழுதினார்? எந்த சூழ்நிலையில் எழுதினார்? புத்தகத்தின் தலைப்பில் இடம் பெறும் “தீமோத்தேயு” என்பவருக்கு இருந்த சூழ்நிலை என்ன? அந்தப் புத்தகத்திலுள்ள தகவல் அவருக்கு ஏன் தேவையாக இருந்தது? இந்தக் கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொண்டால், இந்தப் புத்தகத்தின்மீது நமக்கிருக்கும் அபிமானம் அதிகமாகும், இன்று அதிலிருந்து நாம் எவ்வாறு நன்மையடையலாம் என்பதைக் காணவும் அது நமக்கு உதவும்.
இரண்டு தீமோத்தேயுவின் முதல் ஓரிரு வசனங்களைப் பார்த்தால், இந்தப் புத்தகம் தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய கடிதம் என்பது தெரிகிறது. பவுல் அதை எழுதியபோது, நற்செய்தியின் நிமித்தமாக காவலில் வைக்கப்பட்டிருந்ததை மற்ற வசனங்கள் காட்டுகின்றன. பலரால் கைவிடப்பட்ட நிலையில், சாவு வெகு தூரத்தில் இல்லை என்பதாக பவுல் நினைத்தார். (2 தீமோத்தேயு 1:15, 16; 2:8-10; 4:6-8) ஆகவே அவர் இந்தப் புத்தகத்தை பொ.ச. 65-ல் ரோமில் இரண்டாவது தடவை காவலில் வைக்கப்பட்டிருந்த சமயம் எழுதியிருக்க வேண்டும். அதற்குப் பின்தான் சீக்கிரத்தில் நீரோ அவருக்கு மரணத்தீர்ப்பு அளித்திருக்க வேண்டும்.
இதுதான் இரண்டு தீமோத்தேயுவின் பின்னணி. இருந்தாலும், தன் சொந்த பிரச்சினைகளைப் பற்றி புகார் செய்வதற்காக தீமோத்தேயுவுக்கு பவுல் இதை எழுதவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அதற்கு மாறாக, தீமோத்தேயுவுக்கு எதிர்காலத்தில் வரவிருந்த கஷ்டமான காலங்களைக் குறித்து அவர் எச்சரித்தார்; அதோடு, கவனச்சிதறல்களைத் தவிர்த்து, தொடர்ந்து ‘பலப்பட்டு’ தன்னுடைய அறிவுரைகளை மற்றவர்களுக்கும் போதிக்கும்படி தன் நண்பனை பவுல் உற்சாகப்படுத்தினார். அப்பொழுது அவர்களும் இன்னும் அநேகருக்கு உதவ தயார் நிலையில் இருப்பர். (2 தீமோத்தேயு 2:1-7) கடினமான காலங்களிலும்கூட மற்றவர்களுக்கு சுயநலமற்ற அக்கறை காட்டுவதில் என்னே சிறந்த முன்மாதிரி! இன்று நமக்கு எவ்வளவு சிறந்த அறிவுரை!
தீமோத்தேயுவை ‘பிரியமுள்ள குமாரன்’ என்று பவுல் அழைக்கிறார். (2 தீமோத்தேயு 1:2) இந்த இளம் மனிதன் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் அடிக்கடி பவுலின் உண்மையுள்ள கூட்டாளியாக குறிப்பிடப்பட்டிருக்கிறார். (அப்போஸ்தலர் 16:1-5; ரோமர் 16:21; 1 கொரிந்தியர் 4:17) பவுல் இந்தக் கடிதத்தை தீமோத்தேயுவுக்கு எழுதினபோது அவர் 30-40 வயதுக்கு உட்பட்டவராக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனெனில் தீமோத்தேயு இளைஞராகவே கருதப்பட்டார். (1 தீமோத்தேயு 4:12) இருந்தபோதிலும் ஏற்கெனவே ஒருவேளை 14 வருடங்களாக ‘பவுலோடே ஊழியஞ்செய்து’ உண்மையுள்ளவர் என்று நற்சாட்சி பெற்றிருந்தார். (பிலிப்பியர் 2:19-22) தீமோத்தேயு ஓரளவுக்கு இளைஞனாக இருந்தபோதிலும் மற்ற மூப்பர்களுக்கு புத்தி சொல்லும் பொறுப்பை பவுல் அவருக்குக் கொடுத்தார். ‘வார்த்தைகளைக் குறித்து வாக்குவாதம் செய்துகொண்டிராமல்’ விசுவாசம், சகிப்புத்தன்மை போன்ற முக்கியமான விஷயங்களுக்கு கவனம் செலுத்தும்படி மூப்பர்களுக்குச் சொல்லுமாறு இவருக்கு பொறுப்பளித்தார். (2 தீமோத்தேயு 2:14, NW) சபை மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் நியமனம் செய்யும் பொறுப்பைக் கையாளவும்கூட தீமோத்தேயு அதிகாரம் பெற்றிருந்தார். (1 தீமோத்தேயு 5:22) இருந்தபோதிலும், தன் அதிகாரத்தை பயன்படுத்தும் விஷயத்தில் அவர் சற்று தயக்கமுள்ளவராக இருந்திருக்கலாம்.—2 தீமோத்தேயு 1:6, 7.
இந்த இளவயது மூப்பர் முக்கிய சவால்கள் சிலவற்றையும் எதிர்ப்பட்டார். ஒரு காரியமானது, இமெநேயு, பிலேத்து என்ற இரு நபர்கள் “உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போ”ட்டுக் கொண்டிருந்தார்கள். (2 தீமோத்தேயு 2:17, 18) ஆவிக்குரிய உயிர்த்தெழுதல் என்ற ஒன்று மட்டும்தான் உண்டு, அது ஏற்கெனவே கிறிஸ்தவர்களுக்கு நடந்துவிட்டது என்பதாக அவர்கள் நம்பியிருக்கலாம். பாவங்களில் மரித்தவர்களாயிருந்த கிறிஸ்தவர்கள் கடவுளுடைய ஆவியால் உயிர்ப்பிக்கப்பட்டதாக பவுல் சொன்ன வார்த்தைகளை சூழமைவுக்குப் பொருத்தமில்லாமல் அவர்கள் ஒருவேளை மேற்கோள் காட்டியிருந்திருக்கலாம். (எபேசியர் 2:1-5, 7) இப்படிப்பட்ட விசுவாசதுரோக செல்வாக்கு இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பவுல் எச்சரித்தார். “அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், . . . சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங் காலம் வரும்” என அவர் எழுதினார். (2 தீமோத்தேயு 4:3, 4) முன்கூட்டியே சொல்லப்பட்ட இந்த எச்சரிக்கை, பவுலின் அறிவுரைகளுக்கு தீமோத்தேயு உடனடியாக செவிசாய்க்க வேண்டியதைக் காட்டியது.
இன்று இப்புத்தகத்தின் மதிப்பு
மேலே சொல்லப்பட்டவற்றைப் பார்க்கும்போது, பவுல் இரண்டு தீமோத்தேயு புத்தகத்தை குறைந்தபட்சம் பின்வரும் காரணங்களுக்காக எழுதியிருக்க வேண்டும் என்று தெரிகிறது: (1) தான் சீக்கிரம் மரணத்தைத் தழுவ வேண்டி வரும் என்று அவர் அறிந்திருந்தார், ஆகவே தன்னுடைய உதவி இல்லாமல் தனியாக இருக்கப்போகும் காலத்திற்காக தீமோத்தேயுவை அவர் தயார்படுத்த விரும்பினார். (2) தீமோத்தேயுவின் மேற்பார்வையில் இருக்கும் சபைகளை விசுவாசதுரோகத்திலிருந்தும் மற்ற தீய செல்வாக்குகளிலிருந்தும் பாதுகாக்க விரும்பினார். (3) யெகோவாவின் ஊழியத்தில் சுறுசுறுப்பாக இருக்கும்படியும், பொய்ப் போதகங்களை எதிர்த்து நிற்பதில் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களின் திருத்தமான அறிவைச் சார்ந்திருக்கும்படியும் தீமோத்தேயுவை அவர் உற்சாகப்படுத்த விரும்பினார்.
இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டால், இரண்டு தீமோத்தேயு நமக்கு அதிக அர்த்தமுள்ளதாகிறது. இன்றும்கூட இமெநேயு, பிலேத்து போன்ற விசுவாசதுரோகிகள் இருக்கின்றனர், அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களை சொல்லி நம்முடைய விசுவாசத்தை தகர்க்க விரும்புகின்றனர். அதோடு, பவுல் முன்னறிவித்த ‘கையாளுவதற்கு கடினமான காலங்கள்’ (NW) இப்போது வந்துவிட்டன. “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என்ற பவுலின் எச்சரிக்கை எவ்வளவு உண்மையானது என்பதை அநேகர் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1, 12) நாம் எவ்வாறு உறுதியாக நிற்கலாம்? தீமோத்தேயு செய்தது போல, யெகோவாவை அநேக ஆண்டுகளாக சேவித்து வந்திருப்பவர்களின் ஆலோசனைகளுக்கு செவிசாய்ப்பது அவசியம். தனிப்பட்ட படிப்பு, ஜெபம், கிறிஸ்தவ கூட்டுறவு ஆகியவற்றின் வாயிலாக யெகோவாவின் தகுதியற்ற தயவைப் பெற்று ‘தொடர்ந்து பலப்பட’ முடியும். அது மட்டுமல்லாமல், திருத்தமான அறிவு வல்லமையுள்ளது என்ற நம்பிக்கையோடு, “ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு” என்ற பவுலின் அறிவுரைக்கு நாம் செவிசாய்க்கலாம்.—2 தீமோத்தேயு 1:13.
‘ஆரோக்கியமான வசனங்களின் சட்டம்’
பவுல் குறிப்பிட்ட ‘ஆரோக்கியமான வசனங்கள்’ யாவை? மெய்யான கிறிஸ்தவ கோட்பாட்டைக் குறிப்பதற்காக அவர் இந்த வார்த்தைகளை பயன்படுத்தினார். தீமோத்தேயுவுக்கு அவர் எழுதிய முதல் கடிதத்தில், ‘ஆரோக்கியமான வசனங்கள்’ அடிப்படையில் “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து”வினுடையது என்று விளக்கினார். (1 தீமோத்தேயு 6:3) ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தை பின்பற்றுகையில் நம் மனம் தெளிவடையும், நம்மிடம் அன்பு சுரக்கும், நமக்கு பிறர்பால் கரிசனை பிறக்கும். இயேசுவின் ஊழியமும் போதனைகளும், முழு பைபிளிலும் காணப்படும் மற்ற எல்லா போதனைகளோடும் இசைவாக இருப்பதால், ‘ஆரோக்கியமான வசனங்கள்’ என்பது பைபிளின் எல்லா போதனைகளையும் குறிக்கலாம்.
தீமோத்தேயுவுக்கும் எல்லா கிறிஸ்தவ மூப்பர்களுக்கும், ‘ஆரோக்கியமான வசனங்களின் சட்டம்’ என்பது அவர்களிடம் ‘ஒப்புவிக்கப்பட்ட நற்பொருளாக’ இருந்தது; அதை அவர்கள் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. (2 தீமோத்தேயு 1:13, 14) தீமோத்தேயு ‘சாதகமான காலத்திலும் கஷ்டமான காலத்திலும் வசனத்தை அவசர உணர்வுடன் பிரசங்கம் பண்ண வேண்டியிருந்தது. நீடிய பொறுமையோடும் கற்பிக்கும் கலையோடும், கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்ல’ வேண்டியிருந்தது. (2 தீமோத்தேயு 4:2, NW) தீமோத்தேயுவின் நாளில் விசுவாச துரோக போதனைகள் பரவி வந்தன என்பதை நாம் புரிந்துகொண்டால், ஆரோக்கியமான வசனங்களை அவசரமாக போதிக்க வேண்டும் என்று பவுல் ஏன் வலியுறுத்தினார் என்பதும் நமக்கு புரியும். தீமோத்தேயு கற்பிக்கும் திறமையை நன்றாக பயன்படுத்தி நீடிய சாந்தத்தோடு மந்தையை ‘கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லி’ பாதுகாக்க வேண்டியிருந்தது என்பதையும் நாம் புரிந்துகொள்கிறோம்.
தீமோத்தேயு வசனத்தை யாருக்குப் பிரசங்கிக்க வேண்டியிருந்தது? ஒரு மூப்பராக தீமோத்தேயு கிறிஸ்தவ சபையிலே வசனத்தை பிரசங்கிக்க வேண்டியிருந்தது சூழமைவிலிருந்து தெரிகிறது. எதிரிகளிடமிருந்து அழுத்தங்கள் வந்ததால், தீமோத்தேயு தன் ஆவிக்குரிய சமநிலையைக் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. மனித தத்துவங்களையோ தனிப்பட்ட கருத்துக்களையோ அல்லது பிரயோஜனமற்ற ஊகங்களையோ அல்ல, ஆனால் கடவுளுடைய வசனத்தை தைரியமாய் அறிவிக்க வேண்டியிருந்தது. தவறான மனச்சாய்வுள்ள சிலர் இவரை எதிர்க்க வாய்ப்பிருந்ததும் உண்மையே. (2 தீமோத்தேயு 1:6-8; 2:1-3, 23-26; 3:14, 15) ஆனால் பவுலின் ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலம், அவரைப் போலவே தீமோத்தேயுவும் விசுவாசதுரோகத்துக்கு தடையாக இருக்க வாய்ப்பிருந்தது.—அப்போஸ்தலர் 20:25-32.
வார்த்தையைப் பிரசங்கிக்கும்படியாக பவுல் சொன்னது சபைக்கு வெளியே பிரசங்கிப்பதையும்கூட அர்த்தப்படுத்துமா? ஆம், சூழமைவு அதைத்தான் காட்டுகிறது. பவுல் இவ்வாறு தொடர்ந்து சொல்கிறார்: “நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.” (2 தீமோத்தேயு 4:5) சுவிசேஷத்தை அறிவிப்பது—அவிசுவாசிகளுக்கு இரட்சிப்பின் நற்செய்தியைப் பிரசங்கிப்பது—கிறிஸ்தவ ஊழியத்தில் இன்றியமையாத ஒன்று. (மத்தேயு 24:14; 28:19, 20) ‘கடவுளுடைய வசனம் கஷ்டமான காலங்களிலும்’கூட சபையில் பிரசங்கிக்கப்படுவது போலவே, சபைக்கு வெளியே இருப்பவர்களுக்கு கடினமான சூழ்நிலைகளிலும்கூட தொடர்ந்து நாம் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறோம்.—1 தெசலோனிக்கேயர் 1:6.
கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட பைபிளே நாம் செய்யும் பிரசங்க வேலைக்கும் போதிக்கும் வேலைக்கும் அடிப்படையாகும். பைபிளில் நாம் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். தீமோத்தேயுவுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) பைபிள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட வார்த்தை என்பதைக் காட்டுவதற்கு இந்த வசனங்களை அடிக்கடி மேற்கோள் காட்டுவது சரியே. ஆனால் பவுல் இதை எந்த நோக்கத்துக்காக எழுதினார்?
சபைக்குள்ளே ‘கடிந்துகொண்டு, சீர்திருத்தி, நீதியைப் படிப்பிக்க’ வேண்டிய பொறுப்பிலிருந்த ஒரு மூப்பரிடம் பவுல் பேசிக்கொண்டிருந்தார். ஆகவே சிசுப்பருவம் முதல் போதிக்கப்பட்டிருந்த கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஞானத்தை நம்பியிருக்கும்படி அவர் தீமோத்தேயுவுக்கு நினைப்பூட்டிக் கொண்டிருந்தார். தீமோத்தேயுவைப் போல, இன்று மூப்பர்கள், சில சமயங்களில் தவறு செய்கிறவர்களை கடிந்துகொள்ள வேண்டும். அந்தச் சமயத்தில், அவர்கள் எப்போதும் பைபிளை நம்பியிருக்க வேண்டும். அதோடு, வேதவாக்கியங்கள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டுள்ளபடியால், அவற்றின் அடிப்படையில் தரப்படும் கடிந்துகொள்ளுதல் உண்மையில் கடவுளிடமிருந்து வரும் கடிந்துகொள்ளுதலாகும். பைபிள் அடிப்படையில் தரப்படும் கடிந்துகொள்ளுதலை நிராகரிப்பவர்கள், உண்மையில் மனித கருத்துக்களை அல்ல, ஆனால் யெகோவா தேவனிடமிருந்தே வரும் புத்திமதியை நிராகரிக்கிறார்கள்.
இரண்டு தீமோத்தேயுவில் தெய்வீக ஞானம் எவ்வளவு அபரிமிதமாய் உள்ளது! அதன் அறிவுரையை சூழமைவோடு சேர்த்து சிந்தித்துப் பார்க்கையில் அது எத்தனை அர்த்தம் பொதிந்ததாய் உள்ளது! இந்தப் புத்தகத்தில் அடங்கியிருக்கும் அதிசயமான, கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட தகவலை மேலோட்டமாகவே அறிந்துகொண்டோம். ஆனால் பைபிளில் உள்ள தகவலை அதன் சூழமைவை அறிந்து படிப்பது எவ்வளவு பயனுள்ளது என்பதைக் காட்ட இதுவே போதுமானது. நாம் ‘சத்திய வசனத்தை நிதானமாய் பகுத்துப் போதிக்கிறோமா’ என்பதை உறுதி செய்துகொள்ள இது நமக்கு உதவி செய்யும்.
[அடிக்குறிப்பு]
a கூடுதலான தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்துள்ள வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) தொகுதி 2, பக்கங்கள் 1105-8-ஐக் காண்க.
[பக்கம் 27-ன் படம்]
பவுல் சபைகளை பாதுகாப்பதற்கு தீமோத்தேயுவை தயார்படுத்த விரும்பினார்
[பக்கம் 30-ன் படம்]
கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட வார்த்தையிலுள்ள ஞானத்தை நம்பியிருக்கும்படி தீமோத்தேயுவுக்கு பவுல் நினைப்பூட்டினார்