இவை “கடைசி நாட்கள்” என்பது உண்மையா?
பைபிள் குறிப்பிடுகிற கடைசி நாட்களை அடையாளம் காண இரண்டு வகையான அறிகுறிகள் நமக்கு உதவுகின்றன. ஒன்று, “உலகத்தின் முடிவு” காலத்தில் நடக்கவிருக்கும் சில சம்பவங்கள். (மத்தேயு 24:3) இரண்டு, “கடைசி நாட்களில்” வாழும் மக்களின் மனநிலையும் நடவடிக்கைகளும் மாறுபடுவது. இவற்றைக் குறித்து பைபிள் முன்னறிவிக்கிறது.—2 தீமோத்தேயு 3:1.
உலக சம்பவங்களும் மக்களுடைய சுபாவமும், நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதையும், கடவுளுடைய ராஜ்யம் சீக்கிரத்திலேயே வரப்போகிறது என்பதையும் நிரூபிக்கின்றன. கடவுளை நேசிப்போருக்கு அந்த ராஜ்யம் நித்திய ஆசீர்வாதங்களை அருளும். கடைசி நாட்களைக் குறிக்கும் மூன்று அம்சங்களை இயேசு குறிப்பிட்டார். அவற்றை முதலில் ஆராயலாம்.
“வேதனைகளுக்கு ஆரம்பம்”
“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்” என்று இயேசு கூறினார். “இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்” என்றும் அவர் குறிப்பிட்டார். (மத்தேயு 24:7, 8) “இவை” ஒவ்வொன்றையும் இப்போது ஆராயலாம்.
கடந்த நூற்றாண்டில் கோடிக்கணக்கான மக்கள் போர்களிலும் இன கலவரங்களிலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். “கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து 1899 வரை நடந்த எல்லாப் போர்களிலும் பலியானவர்களைவிட மூன்று மடங்கு அதிகமான ஆட்கள் [20-ம்] நூற்றாண்டில் நடந்த போர்களில் மட்டுமே உயிரிழந்திருக்கிறார்கள்” என்பதாக உவர்ல்டுவாட்ச் இன்ஸ்டிட்யூட் அறிக்கை கூறுகிறது. மனிதகுலம்—இருபதாம் நூற்றாண்டின் தார்மீக சரித்திரம் என்ற ஆங்கில புத்தகத்தில், ஜோனத்தான் க்ளாவர் இவ்வாறு எழுதினார்: “ஒரு கணக்கெடுப்பின்படி, 1900-லிருந்து 1989 வரை 8.6 கோடி மக்கள் போர்களில் மாண்டார்கள். . . . 20-ம் நூற்றாண்டில் நடந்த போர்களில் பலியானோரின் எண்ணிக்கை கற்பனைக்கு எட்டாதது. இந்த மரணங்கள் அந்த நூற்றாண்டு முழுவதிலும் ஒரேசீராக நடைபெற்றவை என்று நினைப்பது தவறு. ஏனெனில், இதில் மூன்றில் இரண்டு பங்கு மரணங்கள் (5.8 கோடி) இரண்டு உலகப்போர்களில் மட்டுமே நிகழ்ந்தவை. ஒருவேளை இருபதாம் நூற்றாண்டு முழுவதுமாக அந்த மரணங்கள் சீராக ஏற்பட்டதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால், ஒவ்வொரு நாளும் சுமார் 2,500 ஆட்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். அதாவது, தொடர்ந்து தொண்ணூறு வருடங்களுக்கு, மணிக்கு 100 பேர் என்ற கணக்கில் உயிரிழந்திருப்பார்கள்.” இப்படி உயிரிழந்தோரின் உறவினர்களும் நண்பர்களும் எந்தளவு வேதனையில் துடித்திருப்பார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
பூமியில் உணவு உற்பத்தி பெருமளவு அதிகரித்திருக்கிறது. என்றபோதிலும், கடைசி நாட்களுக்கான அம்சங்களில் பஞ்சங்களும் இடம்பிடித்திருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் மக்கள் தொகையைக் காட்டிலும் உணவு உற்பத்தி அதிகரித்திருக்கிறது. என்றாலும், உலகின் பல இடங்களில் உணவுப் பற்றாக்குறை நிலவி வருகிறது. காரணம், அநேகரிடம் பயிர் செய்வதற்குப் போதுமான நிலங்கள் இல்லை, அல்லது உணவு வாங்குவதற்குத் தேவையான பணம் இல்லை. வளரும் நாடுகளில், பல கோடி ஜனங்கள் மிகக் குறைவான வருமானத்திலேயே காலத்தை ஓட்டுகிறார்கள். இதில் சுமார் 78 கோடி மக்கள் கடுமையான பட்டினியில் தவிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் சாவதற்கு முக்கிய காரணம் ஊட்டக் குறைவுதான் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது.
முன்னறிவிக்கப்பட்ட பூமியதிர்ச்சிகளைக் குறித்து என்ன சொல்லலாம்? 1990-லிருந்து மட்டுமே ஒவ்வொரு வருடமும் சராசரியாக 17 பெரிய பூமியதிர்ச்சிகள் ஏற்பட்டிருக்கின்றன; இவை கட்டிடங்களைச் சேதப்படுத்தும் அளவுக்கு மிக கடுமையானவை என்று அமெரிக்க மண்ணியல் ஆராய்ச்சித் துறை கூறுகிறது. கட்டிடங்களைத் தரைமட்டமாக்கிப் போடுமளவுக்குப் பயங்கரமான பூமியதிர்ச்சிகள் சராசரியாக ஆண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் நிகழ்ந்திருக்கின்றன. “கடந்த 100 ஆண்டுகளில் பூமியதிர்ச்சிகள் லட்சோப லட்ச உயிர்களைப் பறித்திருக்கின்றன” என்று மற்றொரு அறிக்கை கூறுகிறது. 1914 முதற்கொண்டு, மக்கள்தொகை அதிகமாக இருக்கும் நகரங்கள் நிலநடுக்கப் பகுதியில் உருவாகியிருப்பது இதற்கு ஒரு காரணம்.
முக்கியமான மற்ற சம்பவங்கள்
‘பல இடங்களில் . . . கொள்ளைநோய்கள் உண்டாகும்’ என்று இயேசு குறிப்பிட்டார். (லூக்கா 21:11) மருத்துவத் துறை முன்பைவிட இப்போது ரொம்பவே முன்னேறியிருக்கிறது. இருந்தாலும், பழைய நோய்களும் புதிய நோய்களும் மனிதகுலத்தை தொடர்ந்து சீரழிக்கின்றன. ஐ.மா. தேசிய உளவுத்துறை குறிப்பு இவ்வாறு கூறுகிறது: “1973-ம் ஆண்டு முதற்கொண்டு டிபி, மலேரியா, காலரா உட்பட இருபது பெரிய நோய்கள் மறுபடியும் அவற்றின் கோரமுகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளன அல்லது பேரளவாக பரவத் தொடங்கியுள்ளன, அதிக வீரியமுள்ள அவற்றை மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த முடிவதில்லை. 1973 முதற்கொண்டு, குறைந்தபட்சம் 30 புதிய நோய்க்கிருமிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. எச்ஐவி, ஈபோலா, ஹெப்படைடிஸ் சி, நிப்பா வைரஸ் ஆகியவை இதிலடங்கும். இவற்றை குணப்படுத்த மருந்தே கிடையாது.” ஜூன் 28, 2000-ல் வெளியான செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கைபடி, அதற்கு முந்தைய வருடம் தொற்று வியாதிகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இயற்கை பேரழிவுகளால் இறந்தோரின் எண்ணிக்கையைவிட 160 மடங்கு அதிகம்.
‘அக்கிரமம் மிகுதியாவதும்’ கடைசி நாட்களின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகும். (மத்தேயு 24:12) இன்று உலகில் பெரும்பாலான இடங்களில் மக்கள் தங்கள் வீடுகளை பூட்டியே வைக்கிறார்கள், இரவு நேரத்தில் வெளியே செல்லவும் பயப்படுகிறார்கள். அதோடு, காற்று, நிலம், நீர் ஆகியவை மாசுபட்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம்; இவையெல்லாம் பெரும்பாலும் சட்டவிரோதமான செயல்களால் ஏற்படுகின்றன. அவற்றைக் குறித்து என்ன சொல்லலாம்? இதையும் பைபிள் முன்னறிவித்திருக்கிறது. குறித்த காலத்தில் கடவுள் ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்’ என்று பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் கூறுகிறது.—வெளிப்படுத்துதல் 11:18.
கடைசி நாட்களில் மக்களின் சுபாவம்
தயவுசெய்து உங்கள் பைபிளைத் திறந்து 2 தீமோத்தேயு 3:1-5-ஐ வாசியுங்கள். ‘கடைசிநாட்களில் [கையாளுவதற்கு கடினமான] கொடியகாலங்கள் வரும்’ என்று அப்போஸ்தலன் பவுல் கூறினார். கடவுளுடைய சட்டதிட்டங்களின்படி வாழாத ஆட்களின் சுபாவம் எப்படியிருக்கும் என்பது சம்பந்தமாக 20 குணங்களை அவர் பட்டியலிட்டிருக்கிறார். உங்கள் அக்கம்பக்கத்தில் வாழும் ஆட்களிடம் இதுபோன்ற குணங்களை கவனித்திருக்கிறீர்களா? இன்றுள்ள மக்களைக் குறித்து சமீபத்தில் சொல்லப்பட்ட சில கருத்துகளை கவனியுங்கள்:
‘தற்பிரியர்.’ (2 தீமோத்தேயு 3:2) “முன்பைவிட இப்போது [மக்கள்] தங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். [தங்களை] கடவுளாக பாவித்துக் கொள்கிறார்கள், மற்றவர்களும் தங்களை அப்படியே நடத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.”—ஃபைனான்ஷியல் டைம்ஸ், செய்தித்தாள், இங்கிலாந்து.
‘பணப்பிரியர்.’ (2 தீமோத்தேயு 3:2) “தன்னலத்தோடுகூடிய பணஆசை அடக்க குணத்தை அடக்கிவிட்டது. பணக்காரர்களில் ஒருவராக நீங்கள் கருதப்படாவிட்டால் நீங்கள் வாழ்வதே வீண்.”—ஜகார்தா போஸ்ட், செய்தித்தாள், இந்தோனேஷியா.
‘தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்கள்.’ (2 தீமோத்தேயு 3:2) 4 வயது பிள்ளை, [பிரான்சு நாட்டு ராஜாவான] பதினான்காம் லூயீயைப் போல, பெற்றவர்களையே அதிகாரம் செய்கிறது. 8 வயது பிள்ளையோ அவர்களைப் பார்த்து, ‘உங்கள எனக்கு சுத்தமா பிடிக்கல!’ என்று கத்துகிறது. இதனால் பெற்றோர் கதிகலங்கி நிற்கிறார்கள்.”—அமெரிக்கன் எஜூகேட்டர், பத்திரிகை, அமெரிக்கா.
‘பரிசுத்தமில்லாதவர்கள்.’ [அதாவது, “உண்மையற்றவர்கள்,” NW] (2 தீமோத்தேயு 3:2) “ஆட்கள் தங்கள் மணத்துணையையும் பிள்ளைகளையும் பிரிந்து செல்ல இப்போதெல்லாம் துளிகூட தயங்குவதில்லை. [கடந்த 40 ஆண்டுகளில்] ஒழுக்கரீதியில் ஏற்பட்டிருக்கிற மிகப்பெரிய மாற்றம் இது.”—வில்சன் க்வார்டர்லி, பத்திரிகை, அமெரிக்கா.
‘சுபாவ அன்பில்லாதவர்கள்.’ (2 தீமோத்தேயு 3:3) “உலகெங்கிலும் குடும்ப வன்முறை அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாகியிருக்கிறது.”—ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அஸோசியேஷன், பத்திரிகை, அமெரிக்கா.
‘இச்சையடக்கமில்லாதவர்கள்.’ (2 தீமோத்தேயு 3:3) “அன்றாடம் செய்தித்தாளின் தலைப்புச் செய்திகளில் நாம் வாசிக்கிற அநேக விஷயங்கள் சுயகட்டுப்பாடு, ஒழுக்கம், பிறரிடமும், தங்களிடமேகூட காட்டும் கரிசனை ஆகியவை குறைந்துகொண்டே வருவதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. . . . சமுதாயத்தில் வன்முறையை ஆதரிக்கும் இந்தப் போக்கு தொடர்ந்தால் சீக்கிரத்திலேயே ஒழுக்கம் என்பது இருந்த இடம்தெரியாமல் போய்விடும்.”—பேங்காக் போஸ்ட், செய்தித்தாள், தாய்லாந்து.
‘கொடுமையுள்ளவர்கள்.’ (2 தீமோத்தேயு 3:3) “நியாயமில்லாமல் மிதமிஞ்சி கோபாவேசப்படுவதை சாலைகளில், குடும்ப சண்டைகளில், . . . குற்றச்செயலுக்கு வழிநடத்துகிற நியாயமற்ற, தேவையற்ற வன்முறையில் என பல சந்தர்ப்பங்களில் பார்க்க முடிகிறது. எதிர்பாராத விதத்தில் திடீர்திடீரென வன்முறை வெடிப்பதால், மக்கள் உதவியற்றவர்களாகவும் பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள்.”—பிஸினஸ் டே, செய்தித்தாள், தென் ஆப்பிரிக்கா.
‘தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராய்’ இருப்போர். (2 தீமோத்தேயு 3:4) “பாலியல் விஷயத்தில் சர்வசுதந்திரமாக இருக்க கிறிஸ்தவ ஒழுக்கத்திற்கு எதிராக ஒரு போரே நடந்துகொண்டிருக்கிறது.”—பவுன்ட்லெஸ், ஓர் இன்டர்நெட் பத்திரிகை.
‘தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள்.’ (2 தீமோத்தேயு 3:5) “விபசாரத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு எதிராக மத அமைப்புகளே பெரும்பாலும் கண்டனக்குரல் எழுப்புவதாக [நெதர்லாந்தில் இருக்கும் ஒரு முன்னாள் விலைமாது] கூறினாள். அவள் சற்றே நிறுத்தி, புன்னகைத்தபடி, தான் விலைமாதுவாக இருந்தபோது [மத] போதகர்கள் பலர் தன்னுடைய ரெகுலர் கஸ்டமர்களாக இருந்ததாகக் குறிப்பிட்டாள். ‘மத அமைப்புகளில் உள்ள ஆட்கள்தான் தங்களுடைய மிகச்சிறந்த கஸ்டமர்கள் என்று விலைமாதுக்கள் எப்போதும் கூறுவார்கள்’ என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.”—நேஷனல் கேத்தலிக் ரிப்போர்ட்டர், செய்தித்தாள், அமெரிக்கா.
எதிர்காலம் எப்படி இருக்கும்?
பைபிள் முன்னறிவித்தபடியே, இன்றைய உலகம் பிரச்சினைகளில் மூழ்கித் தவிக்கிறது. என்றாலும், ‘[கிறிஸ்துவின்] வருகைக்கும், உலகத்தின் முடிவுக்குமான அடையாளத்தைப்’ பற்றிய தீர்க்கதரிசனத்தில் உற்சாகமூட்டும் விஷயம் ஒன்று உள்ளது. “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்று இயேசு கூறினார். (மத்தேயு 24:3, 14) கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி 230-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. “சகல ஜாதிகளிலும் [“தேசங்களிலும்,” NW] கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” வந்த 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ஜனங்கள் ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9) அவர்களுடைய ஊக்கமுள்ள பிரசங்கிப்பு வேலையின் விளைவு: ராஜ்யத்தை பற்றியும், அது நிறைவேற்றப்போகும் காரியங்கள் பற்றியும், அது அருளப்போகும் ஆசீர்வாதங்களை அனுபவிக்க நாம் செய்ய வேண்டிய காரியங்கள் பற்றியும் உலகிலுள்ள கிட்டத்தட்ட எல்லாராலுமே தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. உண்மையில், ‘முடிவுகாலத்தில் அறிவு பெருகியிருக்கிறது.’—தானியேல் 12:4.
இந்த அறிவை நீங்களும் எடுத்துக்கொள்வது அவசியம். யெகோவாவுக்குத் திருப்தியளிக்கும்வரை நற்செய்தி பிரசங்கிக்கப்பட்ட பிறகு என்ன நடக்கும் என்பதைக் கவனியுங்கள். “அப்போது முடிவு வரும்” என்று இயேசு கூறினார். (மத்தேயு 24:14) அப்போது, பூமியிலிருந்து பொல்லாத காரியங்களை எல்லாம் கடவுள் துடைத்தழிப்பார். நீதிமொழிகள் 2:22 இவ்வாறு கூறுகிறது: “துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.” சாத்தானுக்கும் அவனது பேய்களுக்கும் என்ன நேரிடும்? அவர்கள் பாதாளத்திற்குள் தள்ளப்படுவார்கள்; இனியும் மக்களை அவர்களால் தவறாக வழிநடத்த முடியாது. (வெளிப்படுத்துதல் 20:1-3) அப்போது, ‘செவ்வையானவர்களும் உத்தமர்களும்’ பூமியிலே “தங்கியிருப்பார்கள்.” கடவுளுடைய ராஜ்யம் பொழியும் ஆசீர்வாதங்களை அவர்கள் சந்தோஷமாக அனுபவிப்பார்கள்.—நீதிமொழிகள் 2:21; வெளிப்படுத்துதல் 21:3-5.
நீங்கள் என்ன செய்யலாம்?
சாத்தானுடைய பொல்லாத உலகம் வெகு சீக்கிரத்தில் அழியப்போகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதை நிரூபிக்கும் அத்தாட்சிகளை அலட்சியம் செய்வோர் முடிவு வருகையில் அதிர்ச்சி அடைவார்கள். (மத்தேயு 24:37-39; 1 தெசலோனிக்கேயர் 5:2) ஆகவே, இயேசு தமக்கு செவிகொடுத்துக் கொண்டிருந்தோரிடம் இவ்வாறு கூறினார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்.”—லூக்கா 21:34-36.
மனுஷகுமாரனான இயேசுவின் அங்கீகாரத்தை பெற்றவர்கள் மட்டுமே சாத்தானின் உலகிற்கு வரப்போகும் அழிவைத் தப்பிப்பிழைப்பார்கள். அப்படியானால், மீந்திருக்கும் இந்தக் காலத்தை யெகோவா தேவனின் அங்கீகாரத்தையும் இயேசு கிறிஸ்துவின் அங்கீகாரத்தையும் பெறுவதற்காக செலவழிப்பது எவ்வளவு முக்கியம்! கடவுளிடம் இயேசு இவ்வாறு ஜெபித்தார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (யோவான் 17:3) ஆகவே, யெகோவா தேவனைப் பற்றியும், நம்மிடம் அவர் எதிர்ப்பார்க்கும் விஷயங்களைப் பற்றியும் அதிகமாக தெரிந்துகொள்வதே ஞானமான செயலாகும். பைபிள் என்ன கற்பிக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமா? உங்கள் பகுதியில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ சந்தோஷப்படுவார்கள். அவர்களை தொடர்பு கொள்ளும்படி, அல்லது இந்தப் பத்திரிகையை பிரசுரிப்போர்க்கு எழுதும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
கடைசி நாட்களின் அம்சங்கள்
முக்கிய சம்பவங்கள்:
▪ போர்கள்.—மத்தேயு 24:6, 7.
▪ பஞ்சங்கள்.—மத்தேயு 24:7.
▪ பூமியதிர்ச்சிகள்.—மத்தேயு 24:7.
▪ கொள்ளைநோய்கள்.—லூக்கா 21:11.
▪ அக்கிரமம் மிகுதியாதல்.—மத்தேயு 24:12.
▪ பூமி கெடுக்கப்படுதல்.—வெளிப்படுத்துதல் 11:18.
மக்கள்:
▪ தற்பிரியர்.—2 தீமோத்தேயு 3:2.
▪ பணப்பிரியர்.—2 தீமோத்தேயு 3:2.
▪ அகந்தையுள்ளவர்கள்.—2 தீமோத்தேயு 3:2.
▪ தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்கள்.—2 தீமோத்தேயு 3:2.
▪ நன்றியறியாதவர்கள்.—2 தீமோத்தேயு 3:2.
▪ உண்மையற்றவர்கள்.—2 தீமோத்தேயு 3:2, NW.
▪ சுபாவ அன்பில்லாதவர்கள்.—2 தீமோத்தேயு 3:3.
▪ இச்சையடக்கமில்லாதவர்கள்.—2 தீமோத்தேயு 3:3.
▪ கொடுமையுள்ளவர்கள்.—2 தீமோத்தேயு 3:3.
▪ சுகபோகப்பிரியர்.—2 தீமோத்தேயு 3:4.
▪ தேவபக்தியின் வேஷத்தைப் போட்டுக்கொண்டு ஏமாற்றுபவர்கள்.—2 தீமோத்தேயு 3:5.
உண்மை வணக்கத்தார்:
▪ அவர்களுடைய மெய் அறிவு அதிகரிக்கும்.—தானியேல் 12:4.
▪ உலகெங்கும் நற்செய்தியை பிரசங்கிப்பார்கள்.—மத்தேயு 24:14.
[படத்திற்கான நன்றி]
UNITED NATIONS/Photo by F. GRIFFING