நித்திய ஜீவன் உண்மையிலேயே சாத்தியமா?
“போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும்”?—மத்தேயு 19:16.
1. நம் வாழ்நாட்காலத்தைக் குறித்து என்ன சொல்லப்படலாம்?
பைபிளில் அகாஸ்வேரு என அழைக்கப்படும் பெர்சிய அரசன்தான் முதலாம் சஷ்டா. பொ.ச.மு. 480-ல், போருக்கு பரிவாரங்களுடன் அணிவகுத்துச் செல்லும் முன் தன் படைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான். (எஸ்தர் 1:1, 2) படைவீரர்களைப் பார்த்தபோது அவன் கண்ணீர் விட்டான் என கிரேக்க சரித்திர ஆசிரியர் ஹெரோடொட்டஸ் கூறுகிறார். ஏன்? “மனிதனின் குறுகிய வாழ்நாளை சிந்தித்துப் பார்க்கையில் அது எனக்கு மனவருத்தத்தைத் தருகிறது. இன்னும் நூறு வருஷம் கழித்துப் பார்த்தால், இவர்களில் ஒருவன்கூட உயிரோடு இருக்கமாட்டான்” என சஷ்டா கூறினான். வாழ்க்கை எவ்வளவு குறுகியது என்பதையும் வயதாகி, வியாதிப்பட்டு சாவதை யாருமே விரும்புவதில்லை என்பதையும் ஒருவேளை நீங்களும் கவனித்திருக்கலாம். இளமை துடிப்புடனும் ஆனந்த களிப்புடனும் வாழ்வை நாம் அனுபவிக்க முடிந்தால், ஆ, அது எவ்வளவு அருமையாக இருக்கும்!—யோபு 14:1, 2.
2. அநேகருக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது, ஏன்?
2 “அவர்கள் வாழ விரும்புகின்றனர்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை செப்டம்பர் 28, 1997 தேதியிட்ட த நியூ யார்க் டைம்ஸ் மேகஸின் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. “நாம் என்றும் வாழும் முதல் சந்ததியாராக இருப்போம் என உறுதியாய் நம்புகிறேன்” என ஓர் ஆராய்ச்சியாளர் வியந்து கூறியதை அந்தப் பத்திரிகை மேற்கோள் காட்டியது. நித்திய ஜீவன் சாத்தியமே என ஒருவேளை நீங்களும் நினைக்கலாம், ஏனெனில் இங்கே பூமியில் நாம் என்றும் வாழலாம் என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. (சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 21:3, 4) ஆனால், பைபிளில் உள்ள காரணங்களைத் தவிர வேறே காரணங்களுக்காகவும் நித்திய ஜீவன் சாத்தியமே என சிலர் நம்பலாம். இந்தக் காரணங்களில் சிலவற்றை அலசி ஆராய்வது நித்திய ஜீவன் உண்மையில் சாத்தியமே என்பதை புரிந்துகொள்ள நமக்கு உதவும்.
என்றும் வாழவே வடிவமைக்கப்பட்டோம்
3, 4. (அ) நாம் என்றும் வாழமுடியும் என்று ஏன் சிலர் நம்புகிறார்கள்? (ஆ) தன்னுடைய உருவமைப்பை பற்றி தாவீது என்ன சொன்னார்?
3 மனிதர் என்றும் வாழமுடியும் என்று அநேகர் நம்புவதற்கு ஒரு காரணம் நாம் அற்புதகரமாக படைக்கப்பட்டிருக்கும் விதமே. உதாரணமாக, தாயின் கருப்பையில் நாம் உருவான விதமே உண்மையில் ஓர் அற்புதம்தான்! வயதாவதைப் பற்றி ஆராய்ச்சி செய்த பிரபலமான ஒருவர் இவ்வாறு எழுதினார்: “கருவுறுதலிலிருந்து பிறப்பு, பிறகு பாலியல் முதிர்ச்சி, பருவமடைதல் என பல அற்புதங்கள் நிகழ்கின்றன. ஆனால் இந்த அற்புதங்களை என்றும் தக்கவைத்துக்கொள்ள மூப்பை நிறுத்தும் மிக எளிய செயல்முறையை இயற்கை தேர்ந்தெடுக்கவில்லை.” ஆம், நாம் அற்புதமாய் உருவாக்கப்பட்டிருப்பதை சிந்திக்கையில், நாம் ஏன் மரிக்க வேண்டும்? என்ற கேள்வி இன்னும் மனதில் ஊசலாடுகிறது.
4 இன்றைய விஞ்ஞானிகளால் கருப்பையின் உள்ளே நடப்பதை காண முடிவதைப் போல பைபிள் எழுத்தாளராகிய தாவீதால் காண முடியாதபோதிலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதே அற்புதங்களைத்தான் அவர் ஆழ்ந்து யோசித்தார். தான் உருவான விதத்தைக் குறித்து தாவீது ஆச்சரியப்பட்டார். ‘தன் தாயின் வயிற்றில் மறைக்கப்பட்டிருந்ததாக’ எழுதினார். அந்தச் சமயத்தில், ‘தன்னுடைய சிறுநீரகம் உருவேற்பட்டிருந்ததாக’ கூறினார். ‘தான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டதையும்’ தன்னுடைய ‘எலும்புகள்’ உருவாகியிருந்ததையும் அவர் சொன்னார். பின்பு தாவீது, ‘என் கரு’ என்பதாக பேசினார், தன்னுடைய தாயின் கருப்பையில் இருந்த அந்தக் கருவைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்: ‘அதன் உறுப்புக்கள் அனைத்தும் எழுதப்பட்டிருந்தன.’—சங்கீதம் 139:13-16, NW.
5. கருப்பையில் நாம் உருவாவதில் என்ன அதிசயங்கள் உட்பட்டுள்ளன?
5 உண்மையில், தாவீது தன்னுடைய தாயின் கருப்பையில் உருவாவதற்கு கையால் வரையப்பட்ட சொல்லர்த்தமான புளூபிரின்ட் எதுவும் இருக்கவில்லை. ஆனால் தன்னுடைய ‘சிறுநீரகங்கள்,’ ‘எலும்புகள்’ மற்றும் தன்னுடைய பிற உடல் உறுப்புக்கள் உருவாவதைப் பற்றி தாவீது தியானிக்கையில், இவை வளருவது ஒரு வரைபடத்தைப் போல—எல்லாம் ‘எழுதப்பட்டதைப்’ போல—அவருக்குத் தோன்றியது. ஒரு குழந்தை எப்படி உருவாக வேண்டும் என்பதற்கு விலாவாரியான கட்டளைகளைக் கொண்ட குடோன் அளவான புத்தகங்கள் தன்னுடைய தாயின் கருப்பையிலுள்ள கருவுற்ற அந்த உயிரணுவுக்கு இருந்ததைப் போலவும், அதிலிருந்து உருவாகும் ஒவ்வொரு உயிரணுவுக்கும் இந்தச் சிக்கலான கட்டளைகள் கடத்தப்பட்டதைப் போலவும் இருந்தது. இதனால், விஞ்ஞான உலகம் என்ற ஆங்கில பத்திரிகை, ‘வளரும் கருவில் உள்ள ஒவ்வொரு உயிரணுவுக்கும் கேபினெட் நிறைய புளூபிரின்ட்கள்’ என்ற உருவக நடையை பயன்படுத்துகிறது.
6. தாவீது எழுதியபடி, நாம் ‘பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருப்பதற்கு’ என்ன அத்தாட்சி இருக்கிறது?
6 நம்முடைய உடலின் வியத்தகு செயல்பாட்டை நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? உயிரியலாளர் ஜாரெட் டைமண்ட் இவ்வாறு குறிப்பிட்டார்: “நம் குடலில் பரவியுள்ள செல்களை சில தினங்களுக்கு ஒருமுறையும் சிறுநீர்ப்பையில் பரவியுள்ளவற்றை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையும் நமது இரத்த சிவப்பணுக்களை நான்கு மாதங்களுக்கு ஒருமுறையும் நாம் மாற்றீடு செய்கிறோம்.” அவர் இந்த முடிவுக்கு வந்தார்: “இயற்கை நம்மை ஒவ்வொரு நாளும் தனியே பிரித்து மறுபடியும் ஒன்றாக இணைக்கிறது.” அது உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது? எட்டு வருஷம் வாழ்ந்தாலும்சரி, எண்பது வருஷம் வாழ்ந்தாலும்சரி, எண்ணூறு வருஷம் வாழ்ந்தாலும்சரி, நம் உடலிலுள்ள செல்களில் பெரும்பாலானவை மிகவும் இளமையாகவே தொடர்ந்து இருக்கின்றன. ஓர் விஞ்ஞானி ஒருமுறை இவ்வாறு கணித்தார்: “ஒரு வருடத்தில், இப்பொழுது நமக்குள் இருக்கும் ஏறக்குறைய 98 சதவிகித அணுக்களை, காற்று, உணவு, பானம் ஆகியவற்றிலிருந்து நாம் பெறும் அணுக்கள் மாற்றீடு செய்யும்.” உண்மையில், தாவீது துதித்துப் பாடியபடி, நாம் ‘பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்.’—சங்கீதம் 139:14.
7. நம்முடைய உடல்களின் வடிவமைப்பை பொறுத்து, சிலர் என்ன முடிவுக்கு வந்திருக்கின்றனர்?
7 நம் உடல் வடிவமைப்பின் அடிப்படையில், வயதாவதைப் பற்றிய ஆராய்ச்சி நிபுணர் ஒருவர் கூறினார்: “ஏன் மூப்படைதல் நிகழ்கிறது என்பது தெளிவாக இல்லை.” ஆகவே உண்மையில் நாம் என்றென்றும் வாழ வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. அதன் காரணமாகத்தான் மனிதர்கள் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த இலக்கை அடைய முயலுகின்றனர். மரணத்தின் மீது ஜெயம் என்ற ஆங்கில புத்தகத்தில் டாக்டர் ஆல்வின் சில்வர்ஸ்டைன் முழு நம்பிக்கையோடு சமீபத்தில் இவ்வாறு எழுதினார்: “வாழ்க்கையின் அர்த்தத்தை நாம் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவோம். ஒரு நபர் எவ்வாறு முதுமையடைகிறார் என்பதை . . . நாம் புரிந்துகொள்வோம்.” விளைவு என்ன? அவர் இவ்வாறு முன்னுரைத்தார்: “அங்கு இனிமேல் ‘வயதான’ ஆட்களே இருக்கமாட்டார்கள். ஏனென்றால் மரணத்தை வெல்வதற்கான வாய்ப்பைப் பற்றிய அறிவும்கூட நித்திய இளமையை கொண்டுவரும்.” மனிதன் படைக்கப்பட்ட விதத்தைப் பற்றிய நவீன விஞ்ஞான ஆராய்ச்சியை கவனிக்கையில், நித்திய ஜீவனைப் பற்றிய எண்ணம் கானல் நீர் போல காட்சியளிக்கிறதா? நித்திய ஜீவனை அடைவது சாத்தியம் என நம்புவதற்கு மற்றொரு பலமான காரணமும் இருக்கிறது.
என்றும் வாழ வேண்டும் என்ற ஆசை
8, 9. ஆண்டாண்டு காலமாகவே என்ன இயல்பான ஆசை மனிதருக்கு இருந்திருக்கிறது?
8 என்றும் வாழவேண்டும் என்பது இயல்பான மனித ஆசை என்பதை நீங்கள் எப்பொழுதாவது கவனித்தீர்களா? ஜெர்மானிய பத்திரிகையில் ஒரு மருத்துவர் இவ்வாறு எழுதினார்: “நித்திய ஜீவனுக்கான ஆசை ஒருவேளை மனிதன் தோன்றியது முதற்கொண்டே இருந்திருக்கலாம்.” பூர்வ ஐரோப்பியர் சிலருடைய நம்பிக்கைகளை விவரிக்கையில் த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு கூறுகிறது: “பொற்கூரை வேயப்பட்ட பளபளக்கும் மாளிகையில் முக்கியமானவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்.” ஆ, நித்திய ஜீவனுக்கான அடிப்படை ஆசையை திருப்திசெய்ய மனிதர்கள் எந்தளவுக்கு முயற்சி செய்திருக்கின்றனர்!
9 சீனாவில் 2,000 வருடங்களுக்கு முன்பே, “தாவோ மத பூஜாரிகள் தலைமையில் அரசர்களும் [பொது] மக்களும்கூட ஜீவாமிர்தத்தை”—வற்றாத இளமையின் ஊற்று என அழைக்கப்படுவதை—“கண்டுபிடிக்க தங்கள் வேலையையே அசட்டை செய்தனர்” என்று தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா குறிப்பிடுகிறது. வெவ்வேறு கஷாயங்களை உட்கொள்வதன் மூலம் அல்லது வெறுமனே விசேஷித்த தண்ணீரை குடிப்பதன் மூலம் தொடர்ந்து இளமையுடன் வாழமுடியும் என ஆண்டாண்டு காலமாகவே மக்கள் நம்பியிருக்கின்றனர்.
10. நெடுநாள் வாழ என்ன நவீன முயற்சி செய்யப்பட்டது?
10 நித்திய ஜீவனைப் பெற மனிதனுக்கு இருக்கும் உள்ளான ஆசையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்படும் நவீனகால முயற்சிகளும் அதேபோல குறிப்பிடத்தக்கவையே. அதற்கு மிகச் சிறந்த ஓர் உதாரணம், வியாதிக்கான நிவாரணம் கண்டுபிடிக்கப்படும்போது, எதிர்காலத்தில் மறுபடியும் உயிரடையும் நம்பிக்கையில், வியாதிப்பட்டு மரித்த ஓர் ஆளை உறை நிலையில் பாதுகாத்து வைத்திருப்பதாகும். உறைநிலையியல் (cryonics) என்று அழைக்கப்படும் இந்தப் பழக்கத்தை ஆதரிக்கும் ஒருவர் எழுதினார்: “நம்பிக்கையான நம் மனநிலை நிஜமாகி, முதிர் வயதின் தளர்ச்சி உட்பட எல்லா குறைபாடுகளையும் எப்படி குணமாக்குவது அல்லது சரிசெய்வது என்பதைக் கற்றுக்கொண்டால், இப்போது ‘மரிப்பவர்கள்’ எதிர்காலத்தில் நித்தியமாய் வாழ முடியும்.”
11. மனிதர்கள் ஏன் என்றும் வாழ விரும்புகின்றனர்?
11 நித்திய ஜீவனுக்கான ஆசை நம் எண்ணத்தில் ஏன் இவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது? என நீங்கள் கேட்கலாம். ‘நித்தியகால நினைவை மனிதனின் உள்ளத்தில் [கடவுள்] வைத்திருப்பதாலா?’ (பிரசங்கி 3:11, திருத்திய மொழிபெயர்ப்பு) இது, ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம்! இதைப் பற்றி சற்று யோசியுங்கள்: என்றும் வாழ்வதற்கான இந்த உள்ளான ஆசையை பூர்த்தி செய்வது நம்முடைய சிருஷ்டிகரின் நோக்கமாக இல்லையென்றால், ஏன் நித்தியத்திற்கான இந்த ஆசை நமக்கு இருக்கிறது? நித்திய ஜீவனுக்கான ஆசையுடன் கடவுள் நம்மைப் படைத்துவிட்டு அதை அனுபவிக்க விடாமல் நம்மை ஏமாற்றினால் அவருடைய பங்கில் அது அன்பாக இருக்குமா?—சங்கீதம் 145:16.
யாரை நம்பவேண்டும்?
12. சிலருக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது, ஆனால் அதற்கு நல்ல ஆதாரம் இருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா?
12 நித்திய ஜீவனை பெறுவதற்கான நம்பிக்கையை நாம் எங்கே அல்லது எதன்மீது வைக்க வேண்டும்? 20-ம் அல்லது 21-ம் நூற்றாண்டின் மனித தொழில்நுட்பத்திலா? த நியூ யார்க் டைம்ஸ் மேகஸினில் வந்த “அவர்கள் வாழ விரும்புகின்றனர்” என்ற கட்டுரை, “தொழில்நுட்பம் எனும் புதிய கடவுளை” பற்றியும் “அதன் சாதனைகளில் ஆர்வத்தைப்” பற்றியும் கூறியது. “முதுமைக்கு ஒரு முட்டுக்கட்டை போடுவதற்கும் இளமை திரும்புவதற்கும்கூட மரபியல் சார்ந்த ஆராய்ச்சி முறைகள் சீக்கிரத்தில் கைகொடுக்கும்” என்று ஓர் ஆராய்ச்சியாளர் “சிறிதும் கவலையின்றி நம்பிக்கை தெரிவித்ததாக” சொன்னது. ஆனால் உண்மையில், வயதாவதை தடுப்பதிலோ மரணத்தை முறியடிப்பதிலோ மனிதன் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராய் இருக்கின்றன.
13. நாம் என்றும் வாழவே படைக்கப்பட்டோம் என்பதை நம் மூளையின் அமைப்பு எவ்வாறு சுட்டிக்காட்டுகிறது?
13 நித்திய ஜீவனை அடைய வேறெந்த வழியுமே இல்லை என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? நிச்சயமாகவே இல்லை! ஒரு வழி இருக்கிறது! கற்றுக்கொள்வதற்கான நம் மூளையின் வியத்தகு திறமை, இதைப் பற்றிய நம்முடைய நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். மூலக்கூறு உயிரியல் நிபுணர் ஜேம்ஸ் வாட்சன் நம்முடைய மூளையை, “நம் அண்டத்தில் நாம் இதுவரை கண்டுபிடித்திருக்கும் பொருட்களிலேயே மிகவும் சிக்கலானது” என அழைத்தார். நரம்பியல் நிபுணர் ரிச்சர்ட் ரிஸ்டாக் கூறினார்: “அதோடு கொஞ்சமாவது ஒத்திருக்கும் ஒன்று, இந்த அறியப்பட்ட பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை.” நாம் நித்திய ஜீவனை அனுபவிப்பதற்காக படைக்கப்படவில்லை என்றால், ஏறக்குறைய எல்லையற்ற தகவலை சேகரித்து அவற்றை கிரகித்துக் கொள்ளும் திறமையுள்ள மூளையும் என்றுமாக வேலைசெய்வதற்காக படைக்கப்பட்ட உடலும் நமக்கிருந்து என்ன பயன்?
14. (அ) பைபிள் எழுத்தாளர்கள் மனித வாழ்க்கையைக் குறித்து என்ன முடிவை சுட்டிக்காட்டுகின்றனர்? (ஆ) நாம் ஏன் நம்முடைய நம்பிக்கையை, மனிதன்மீது அல்ல, கடவுள்மீது வைக்க வேண்டும்?
14 அப்படியானால், உண்மையான எந்த ஒரே முடிவுக்கு வருவது நியாயமானது? நாம் என்றென்றும் வாழ்வதற்கு ஏற்றாற்போல் சர்வவல்லமையும் புத்திக்கூர்மையுமிக்க சிருஷ்டிகரால் வடிவமைக்கப்பட்டு, படைக்கப்பட்டோம் என்ற முடிவுக்கே அல்லவா? (யோபு 10:8; சங்கீதம் 36:9; 100:3; மல்கியா 2:10; அப்போஸ்தலர் 17:24, 25) ஆகவே, “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்” என்று சொன்ன சங்கீதக்காரனின் ஏவப்பட்ட கட்டளையை பின்பற்றுவது ஞானமாய் இருக்கும் அல்லவா? ஏன் மனிதனில் நம்பிக்கை வைக்கக்கூடாது? ஏனெனில் சங்கீதக்காரன் எழுதினார்: “அவனுடைய ஆவிபிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” உண்மையில், என்றென்றும் வாழ்வதற்கான திறமை இருந்தும், மரணத்தை எதிர்ப்படுகையில் மனிதர்கள் நிர்க்கதியாக இருக்கிறார்கள். சங்கீதக்காரன் இவ்வாறு முடிக்கிறார்: ‘தன் தேவனாகிய [யெகோவா] மேல் நம்பிக்கை வைக்கிறவன் பாக்கியவான்.’—சங்கீதம் 146:3-5.
அது உண்மையிலேயே கடவுளுடைய நோக்கமா?
15. நாம் என்றும் வாழவேண்டும் என்பது கடவுளுடைய நோக்கம் என்பதை எது காட்டுகிறது?
15 ஆனால் நீங்கள் ஒருவேளை கேட்கலாம், நாம் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதுதான் உண்மையிலேயே கடவுளுடைய நோக்கமா? ஆம், நிச்சயமாகவே! அவருடைய வார்த்தை அநேக முறை வாக்குறுதி அளிக்கிறது. “தேவனுடைய கிருபை வரமோ . . . நித்திய ஜீவன்” என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. கடவுளுடைய ஊழியராகிய யோவான் எழுதினார்: “நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே [கடவுள்] நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.” இயேசுவிடம் ஓர் இளைஞன் இவ்வாறு கேட்டதில் ஆச்சரியமில்லை: “போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும்”? (ரோமர் 6:23; 1 யோவான் 2:25; மத்தேயு 19:16) சொல்லப்போனால், அப்போஸ்தலன் பவுல், ‘பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக் குறித்து வாக்குத்தத்தம் பண்ணினதைப்’ பற்றி எழுதினார்.—தீத்து 1:3.
16. என்ன அர்த்தத்தில் “ஆதிகாலமுதல்” நித்திய ஜீவனை கடவுள் வாக்குறுதி அளித்திருக்கலாம்?
16 “ஆதிகாலமுதல்” நித்திய ஜீவனைப் பற்றி யெகோவா வாக்குறுதி கொடுத்தார் என்பதன் அர்த்தம் என்ன? முதல் தம்பதி ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டிப்பதற்கு முன்பே மனிதர்கள் என்றும் வாழவேண்டும் என கடவுள் நோக்கம் கொண்டிருந்தார் என்பதை அப்போஸ்தலன் பவுல் அர்த்தப்படுத்தினார் என சிலர் நினைக்கின்றனர். ஆனால், மனிதரை படைத்த பிறகு யெகோவா தம்முடைய நோக்கத்தை வெளிப்படுத்தியதாக பவுல் குறிப்பிட்டிருந்தாலும், மனிதர் என்றும் வாழவேண்டும் என்பதே கடவுளுடைய சித்தம் என்றே அர்த்தமாகிறது.
17. ஏதேன் தோட்டத்திலிருந்து ஏன் ஆதாமும் ஏவாளும் துரத்தப்பட்டார்கள், ஏன் கேருபீன்கள் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டார்கள்?
17 “தேவனாகிய கர்த்தர் . . . [ஏதேன்] தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தை . . . பூமியிலிருந்து முளைக்கப் பண்ணினார்” என பைபிள் சொல்கிறது. ஆதாம் பாவம் செய்தபிறகு அவனை அந்தத் தோட்டத்திலிருந்து வெளியே துரத்திவிடுவதற்கான காரணம், “அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியை பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்”காகும்! ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாமையும் ஏவாளையும் துரத்தியபிறகு, யெகோவா, “ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய . . . வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும்” கேருபீன்களையும் வைத்தார்.—ஆதியாகமம் 2:9; 3:22-24.
18. (அ) ஆதாமும் ஏவாளும் ஜீவ விருட்சத்தின் கனியை சாப்பிடுவது எதை அர்த்தப்படுத்தியிருக்கும்? (ஆ) அந்த விருட்சத்தின் கனியை சாப்பிடுவது எதை அடையாளப்படுத்தியது?
18 அந்த ஜீவவிருட்சத்தின் கனியை ஆதாமும் ஏவாளும் புசித்திருந்தார்கள் என்றால் அது அவர்களுக்கு எதை அர்த்தப்படுத்தியிருக்கும்? பரதீஸில் நித்திய ஜீவனுடன் வாழும் சிலாக்கியத்தையே! பைபிள் விரிவுரையாளர் ஒருவர் கூறினார்: “வயோதிபத்தின் தளர்ச்சியிலிருந்து அல்லது மரணத்தில் விளைவடையும் சிதைவிலிருந்து மனித உடலை காக்கக்கூடிய ஏதோ ஒரு குணம் அந்த ஜீவவிருட்சத்திற்கு இருந்திருக்க வேண்டும்.” வயோதிபத்தின் “பாதிப்புகளை எதிர்க்கும் மூலிகைப் பண்பு ஒன்று பரதீஸில் இருந்தது” என்றும்கூட அவர் உறுதியுடன் கூறினார். ஆனால், ஜீவவிருட்சத்தில் தானே உயிரளிக்கும் பண்புகள் இருப்பதாக பைபிள் சொல்கிறதில்லை. மாறாக, அதின் கனியைப் புசிக்க அனுமதிக்கப்படுபவருக்கு கடவுள் கொடுக்கும் நித்திய ஜீவனின் வாக்குறுதியை மட்டுமே அந்த மரம் அடையாளப்படுத்தியது.—வெளிப்படுத்துதல் 2:7.
கடவுளுடைய நோக்கம் மாறவில்லை
19. ஆதாம் ஏன் மரித்தான், அவனுடைய சந்ததியாகிய நாமும் ஏன் மரிக்கிறோம்?
19 ஆதாம் பாவம் செய்தபோது, தனக்கும் இன்னும் பிறவாத தன் சந்ததி முழுவதற்கும் நித்திய ஜீவனுக்கான உரிமையை இழந்தான். (ஆதியாகமம் 2:17) கீழ்ப்படியாமையின் காரணமாக அவன் பாவியானபோது குறைவுள்ளவனாக அல்லது அபூரணனாக ஆனான். அந்தச் சமயத்திலிருந்து ஆதாமின் உடல் மரணத்திற்காக திட்டமைக்கப்பட்டதாக ஆனது. பைபிள் சொல்கிறது: “பாவத்தின் சம்பளம் மரணம்.” (ரோமர் 6:23) மேலும், ஆதாமின் அபூரண சந்ததியும்கூட, நித்திய ஜீவனுக்காக அல்ல, மரணத்திற்காகவே திட்டமைக்கப்பட்டதாக ஆனது. பைபிள் விளக்குகிறது: “ஒரே மனுஷனாலே [ஆதாமினாலே] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.”—ரோமர் 5:12.
20. பூமியில் மனிதர்கள் என்றும் வாழவே படைக்கப்பட்டார்கள் என்பதை எது சுட்டிக்காட்டுகிறது?
20 ஆனால் ஆதாம் பாவம் செய்யவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்? அவன் கடவுளுக்கு கீழ்ப்படிந்திருந்து, ஜீவவிருட்சத்தின் கனியை புசிக்கும் அனுமதி பெற்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்? கடவுளுடைய பரிசாகிய நித்திய ஜீவனை அவன் எங்கே அனுபவித்திருப்பான்? பரலோகத்திலா? இல்லை! ஆதாம் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதைப் பற்றி கடவுள் எதுவுமே சொல்லவில்லை. அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை இங்கே பூமியில்தான். “கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும் . . . பூமியிலிருந்து முளைக்கப் பண்ணினார்” என்று பைபிள் விளக்குகிறது. மேலும் அது சொல்கிறது: “கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.” (ஆதியாகமம் 2:9, 15) ஆதாமுக்கு துணையாக ஏவாள் படைக்கப்பட்ட பிறகு, அந்த இருவருக்கும் பூமியில் கூடுதலான வேலை கொடுக்கப்பட்டது. கடவுள் அவர்களிடம் கூறினார்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.”—ஆதியாகமம் 1:28.
21. என்ன அற்புதகரமான எதிர்பார்ப்பு ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இருந்தது?
21 கடவுளின் அந்தக் கட்டளைகள் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அளித்த அற்புதகரமான பூமிக்குரிய எதிர்பார்ப்புகளை சிந்தித்துப் பாருங்கள்! பூமிக்குரிய பரதீஸில் பரிபூரண ஆரோக்கியமுள்ள குமாரரையும் குமாரத்திகளையும் அவர்கள் வளர்க்க வேண்டும். அவர்களுடைய அன்பான பிள்ளைகள் பெரியவர்களாகையில் அந்தப் பரதீஸை பராமரிக்கும் இன்பமான தோட்ட வேலையில் அவர்களுடன் சேர்ந்துகொள்வர். எல்லா மிருகங்களும் அவர்களுக்கு கீழ்ப்பட்டிருந்ததால், அவர்களுடைய வாழ்க்கை அதிக திருப்திகரமாக இருந்திருக்கும். பின்னர், மனித குடும்பம் பெருகுகையில் ஏதேன் தோட்டத்தின் எல்லைகளை விரிவாக்கி, முடிவாக முழு பூமியையும் ஒரு பரதீஸாக்கும் அந்தச் சந்தோஷத்தை கற்பனை செய்து பாருங்கள்! வயதாகி மரிப்பதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் அப்படிப்பட்ட அழகான பூமிக்குரிய வீட்டில் நீங்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வீர்களா? உங்கள் இருதயத்தின் இயல்பான ஆசைகள் அந்தக் கேள்விக்கு பதிலளிக்கட்டும்.
22. பூமிக்கான தம்முடைய நோக்கத்தை கடவுள் மாற்றிக்கொள்ளவில்லை என்பதில் நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்?
22 அப்படியானால், ஆதாம் ஏவாள் கீழ்ப்படியாமல் போய் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, மனிதர்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழவேண்டும் என்ற நோக்கத்தை கடவுள் மாற்றிக்கொண்டாரா? இல்லவே இல்லை! கடவுள் அப்படி செய்திருந்தால், தம்முடைய ஆதி நோக்கத்தை நிறைவேற்ற அவருக்கு திறமையில்லை என அவர் தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமமாகும். கடவுள் தம்முடைய வார்த்தையை நிச்சயம் நிறைவேற்றுவார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம், ஏனெனில் அவர்தாமே இவ்வாறு கூறுகிறார்: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”—ஏசாயா 55:11.
23. (அ) நீதிமான்கள் பூமியில் என்றும் வாழ்வது கடவுளுடைய நோக்கம் என்பதை வேறு எதுவும் உறுதிப்படுத்துகிறது? (ஆ) அடுத்து நாம் எதை சிந்திப்போம்?
23 பூமிக்கான கடவுளுடைய நோக்கம் மாறவில்லை என்பதை பைபிளில் அவர் தெளிவாக்கினார். அதில் கடவுள் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறார்: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” சாந்த குணமுள்ளவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள் என்பதை தம்முடைய மலைப்பிரசங்கத்தில் இயேசு கிறிஸ்துவும்கூட சொன்னார். (சங்கீதம் 37:29; மத்தேயு 5:5) என்றபோதிலும், நாம் எவ்வாறு நித்திய ஜீவனை பெறமுடியும்? இப்படிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? பின்வரும் கட்டுரையில் இவை சிந்திக்கப்படும்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ நித்திய ஜீவன் சாத்தியம் என ஏன் அநேகர் நம்புகின்றனர்?
◻ என்றும் வாழவே நாம் படைக்கப்பட்டோம் என்பதை எது உறுதிப்படுத்துகிறது?
◻ மனிதவர்க்கம் மற்றும் பூமிக்கான கடவுளுடைய ஆதி நோக்கம் என்ன?
◻ கடவுள் தம்முடைய ஆதி நோக்கத்தை நிறைவேற்றுவார் என்பதில் நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?