ஆரோக்கியமான போதனையை உங்கள் வாழ்க்கை முறையாக்குங்கள்
“தேவபக்தியானது . . . எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.”—1 தீமோத்தேயு 4:8.
1, 2. மக்கள் எந்தளவுக்குத் தங்கள் ஆரோக்கியத்துக்கு அக்கறை காட்டுகின்றனர், விளைவு என்ன?
நல்ல ஆரோக்கியம் வாழ்க்கையில் கிடைக்கும் மிக அருமையான உடமைகளில் ஒன்றாயிருக்கிறது என்பதை பெரும்பான்மையர் உடனடியாக ஒத்துக்கொள்வர். சரீரப்பிரகாரமாய் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு அவர்கள் பெருமளவான நேரத்தையும் பணத்தையும் செலவிடுகின்றனர், மேலும் தகுந்த மருத்துவ கவனிப்புத் தேவைப்படுகையில் அதைப் பெறுவதை நிச்சயப்படுத்திக் கொள்கின்றனர். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில், ஒரு சமீப வருடத்தில் ஆரோக்கிய நலனுக்கு உண்டான வருடாந்தர செலவானது, 9,000 கோடி டாலருக்கும் மேற்பட்டதாயிருந்தது. ஒரு வருடத்தில், அந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தைக்கும் 3,000 டாலருக்கும் வெகு அதிகமான தொகைக்கு ஈடாக அது இருக்கிறது. வளர்ச்சியடைந்த மற்ற நாடுகளிலுங்கூட, ஒவ்வொரு நபருக்கும் கிட்டத்தட்ட அதே செலவுதான் ஆகிறது.
2 நேரம், சக்தி, பணம் ஆகிய யாவற்றையும் செலவிடுவது எதைச் சாதித்திருக்கிறது? மொத்தத்தில், நிச்சயமாகவே, சரித்திரத்தின் எந்தவொரு காலக்கட்டத்திலும் இல்லாத அளவுக்கு அதிமுன்னேற்றமடைந்த மருத்துவ வசதிகளையும் சாதனங்களையும் நாம் இன்று கொண்டிருப்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். என்றாலும், இது தானாகவே ஆரோக்கியமான வாழ்க்கையாக மாறிவிடாது. உண்மையில் சொன்னால், ஐக்கிய மாகாணங்களுக்காக தீர்மானிக்கப்பட்ட ஓர் ஆரோக்கிய நலன் திட்டத்தைக் குறித்து ஆற்றிய சொற்பொழிவொன்றில், “இந்த நாட்டில் உண்டாகும் வன்முறைக்கான மட்டுமீறிய செலவு”களோடுகூட, ஐக்கிய மாகாண வாசிகள், வளர்ச்சியடைந்த வேறெந்த நாட்டைக் காட்டிலும் “எய்ட்ஸ், புகைபிடித்தல், குடிவெறி, பருவவயது கருத்தரிப்பு, குறை எடையுடைய குழந்தை பிறப்புகள் ஆகியவற்றில் உயர்வீதங்களைக் கொண்டிருக்கின்றனர்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். அவருடைய முடிவு? “ஒரு ஜனமாக, ஆரோக்கியமாக இருக்கவேண்டுமென்று நாம் உண்மையில் விரும்பினால், நம்முடைய போக்குகளை மாற்றவேண்டும்.”—கலாத்தியர் 6:7, 8.
ஓர் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை
3. பூர்வ கிரேக்க கலாச்சாரத்தைக் கருத்தில்கொண்டு, பவுல் அளித்த புத்திமதி என்ன?
3 முதல் நூற்றாண்டில், கிரேக்கர்கள் உடல் கலாச்சாரம், உடற்கட்டு, விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் முழு ஈடுபாடுகொண்ட மக்களாக அறியப்பட்டிருந்தனர். இந்தப் பின்னணிக்கு எதிராகவே, இளம் மனிதனாகிய தீமோத்தேயுவுக்கு பவுல் அப்போஸ்தலன் பின்வருமாறு எழுதும்படி ஏவப்பட்டார்: “சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.” (1 தீமோத்தேயு 4:8) இவ்வாறு, மக்கள் இன்று எதை ஒப்புக்கொள்கின்றனர் என்பதைப் பவுல் குறிப்பிட்டுக் காட்டினார், அதாவது, மருத்துவ அல்லது உடல் பிரகாரமான ஏற்பாடுகள் உண்மையில் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை உறுதிப்படுத்துவது கிடையாது. ஆனால், ஆவிக்குரிய நலத்தையும் தேவபக்தியையும் கடைப்பிடிப்பதே இன்றியமையாததாக இருக்கிறது என்று பவுல் நமக்கு உறுதியாகக் கூறுகிறார்.
4. தேவபக்தியினால் வரும் பயன்கள் என்னென்ன?
4 அப்படிப்பட்ட ஒரு வழிமுறை “இந்த ஜீவனுக்கு” பிரயோஜனமுள்ளது, ஏனென்றால் தேவபக்தியற்ற மக்களுக்கு, அல்லது “தேவபக்தியின் வேஷத்தை [அல்லது, தோற்றத்தை]” மட்டுமுடையவர்கள் தங்கள்மீது வருவித்துக்கொள்ளும் எல்லா தீங்கான காரியங்களுக்கு எதிராகவும் அது பாதுகாப்பைத் தருகிறது. (2 தீமோத்தேயு 3:5; நீதிமொழிகள் 23:29, 30; லூக்கா 15:11-16; 1 கொரிந்தியர் 6:18; 1 தீமோத்தேயு 6:9, 10) தேவபக்தி, தங்களுடைய வாழ்க்கையை உருவமைக்க அனுமதிக்கும் ஆட்கள், கடவுளுடைய சட்டங்களுக்கும் தராதரங்களுக்கும் ஆரோக்கியமான மரியாதையை உடையவர்களாயிருக்கின்றனர்; அதுதானே கடவுளுடைய ஆரோக்கியமான போதனையைத் தங்களுடைய வாழ்க்கை முறையாக்கிக்கொள்ள அவர்களைத் தூண்டிவிடுகிறது. இப்படிப்பட்ட ஒரு வழிமுறை ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும் தேக ஆரோக்கியத்தையும் திருப்தியையும் சந்தோஷத்தையும் கொண்டுவருகிறது. மேலும் அவர்கள் “நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்”கின்றனர்.—1 தீமோத்தேயு 6:19.
5. தீத்துவுக்கு எழுதிய தன்னுடைய கடிதத்தின் இரண்டாம் அதிகாரத்தில் பவுல் அளித்த அறிவுரைகள் என்னென்ன?
5 கடவுளுடைய ஆரோக்கியமான போதனையால் வழிநடத்தப்படும் வாழ்க்கையானது இப்போதும் வருங்காலத்திலும் அத்தகைய ஆசீர்வாதங்களைக் கொண்டுவருவதனிமித்தம், நடைமுறையான கருத்தில், நாம் எவ்வாறு கடவுளுடைய ஆரோக்கியமான போதனையை நம்முடைய வாழ்க்கை முறையாக்கிக்கொள்ளலாம் என்பதை அறியவேண்டியது அவசியம். பவுல் அப்போஸ்தலன் தீத்துவுக்கு எழுதிய தன்னுடைய கடிதத்தில் இதற்கான பதிலை அளித்தார். அந்தப் புத்தகத்தில் உள்ள இரண்டாம் அதிகாரத்திற்கு நாம் விசேஷமாகக் கவனம் செலுத்துவோம்; அங்கு அவர் ‘ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசும்படியாக’ தீத்துவுக்கு அறிவுரை அளித்தார். நிச்சயமாகவே, இன்று வாலிபரும் முதியவரும், ஆணும் பெண்ணுமாகிய நாம் அனைவரும் ‘ஆரோக்கியமான போதனையிலிருந்து’ பயனடையலாம்.—தீத்து 1:1, 2, 5; 2:1.
முதிர்வயதுள்ள ஆண்களுக்குப் புத்திமதி
6. ‘முதிர்வயதுள்ள புருஷர்களுக்கு’ பவுல் அளித்த புத்திமதிகள் என்னென்ன, அவருடைய பங்கில் அவ்வாறு செய்வது ஏன் அன்பான செயலாக இருந்தது?
6 முதலாவதாக, பவுல் சபையிலுள்ள முதிர்வயதுள்ள ஆண்களுக்கு ஒருசில புத்திமதிகளைச் சொன்னார். தீத்து 2:2-ஐ தயவுசெய்து வாசியுங்கள். “முதிர்வயதுள்ள புருஷர்கள்” ஒரு தொகுதியாக, மதிக்கப்பட்டு விசுவாசத்திற்கும் உத்தமத்திற்கும் முன்மாதிரிகளாக நோக்கப்படுகின்றனர். (லேவியராகமம் 19:32; நீதிமொழிகள் 16:31) இதனிமித்தமே, மற்றவர்கள் முதிர்வயதுள்ள ஆண்களுக்கு, மிகவும் வினைமையற்ற காரியங்களின்பேரில் புத்திமதிகளையோ ஆலோசனைகளையோ கொடுக்க மனமில்லாமலிருக்கலாம். (யோபு 32:6, 7; 1 தீமோத்தேயு 5:1) ஆகையால், முதலாவதாக முதிர்வயதுள்ள ஆண்களைக் குறித்துப் பேசுவது பவுலுடைய பங்கில் அன்பான செயலாக இருக்கிறது; அவர்களுங்கூட பவுலின் வார்த்தைகளை மனதிற்கொண்டு பவுலைப்போல, பின்பற்றுவதற்குத் தகுதியானவர்களாகத் தங்களை ஆக்கிக்கொள்வதை நிச்சயப்படுத்திக் கொள்வது நல்லது.—1 கொரிந்தியர் 11:1; பிலிப்பியர் 3:17.
7, 8. (அ) “பழக்கங்களில் மிதம்” ஆக இருப்பது எதை உட்படுத்துகிறது? (ஆ) ‘நல்லொழுக்கம்’ உள்ளவராயிருப்பது ஏன் “தெளிந்த புத்தி” உள்ளவராயிருப்பதோடு சமநிலைப்படுத்தப்படவேண்டும்?
7 முதன்முதலாக, முதிர்வயதுள்ள கிறிஸ்தவ ஆண்கள், “பழக்கங்களில் மிதம்” (NW) ஆக இருக்கவேண்டும். மூல வார்த்தையானது குடிப்பழக்கத்தை (“நிதானம்,” கிங்டம் இன்டர்லீனியர்) குறிப்பிட்டுப் பேசினாலும், ஜாக்கிரதையுள்ளவர்களாகவும் தெளிந்துணர்வுள்ளவர்களாகவும் உணர்ச்சிகளை இழக்காமல் இருப்பதையும் அது அர்த்தப்படுத்துகிறது. (2 தீமோத்தேயு 4:5; 1 பேதுரு 1:13) இவ்வாறு, குடிப்பதானாலுஞ்சரி வேறு காரியங்களானாலுஞ்சரி, முதிர்வயதுள்ள ஆண்கள் அளவுக்கதிகமாகவோ மிதமிஞ்சியோ செல்லாமல் மிதமாக இருக்கவேண்டும்.
8 பிறகு, அவர்கள் ‘நல்லொழுக்கம்’ உள்ளவர்களாகவும் “தெளிந்த புத்தி” உள்ளவர்களாகவுங்கூட இருக்கவேண்டும். நல்லொழுக்கமாகவோ கண்ணியமாகவோ மதிப்புக்குரியவராகவோ இருப்பது, சாதாரணமாக வயதோடு சேர்ந்துவருகிறது. ஆனால் சிலர் மிகவும் நல்லொழுக்கமுள்ளவர்களாக, வாலிபரின் சுறுசுறுப்புள்ள போக்குகளை சகித்திருக்க முடியாதவர்களாக மாறுவார்கள். (நீதிமொழிகள் 20:29) ஆதலால்தான் ‘நல்லொழுக்கம்’ “தெளிந்த புத்தி”யோடு சமநிலைப்படுத்தப்படுகிறது. முதிர்வயதுள்ள ஆண்கள் வயதுக்கு ஏற்ற நல்லொழுக்கத்தைக் காத்துக்கொள்வது அவசியமென்றாலும், அதே சமயத்தில் சமநிலையோடு தங்களுடைய உணர்ச்சிகள்மீதும் தூண்டுதல்கள்மீதும் முழு கட்டுப்பாட்டை உடையவர்களாக இருக்கவேண்டும்.
9. முதிர்வயதுள்ள ஆண்கள் ஏன் விசுவாசத்திலும் அன்பிலும் விசேஷமாக பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கவேண்டும்?
9 கடைசியாக, முதிர்வயதுள்ள ஆண்கள் “விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்”களாக இருக்கவேண்டும். பவுல் தன்னுடைய எழுத்துக்களில் அநேக முறைகள் விசுவாசத்தையும் அன்பையும் நம்பிக்கையோடு பட்டியலிட்டார். (1 கொரிந்தியர் 13:13; 1 தெசலோனிக்கேயர் 1:2; 5:8) இங்கு அவர் ‘நம்பிக்கைக்கு’ பதிலாக ‘பொறுமையைப்’ பற்றி பேசுகிறார். அது ஏனென்றால் ஒருவேளை விட்டுக்கொடுக்கும் உணர்ச்சி வயதாக ஆக, சுலபமாக வந்துவிடக்கூடும். (பிரசங்கி 12:1) என்றாலும் இயேசு குறிப்பிட்டதுபோல, “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.” (மத்தேயு 24:13) கூடுதலாக, முதிர்வயதுள்ள ஆட்கள் வெறுமனே தங்களுடைய வயதினிமித்தமோ அனுபவத்தினிமித்தமோ மற்றவர்களுக்குத் தகுந்த முன்மாதிரிகளாக இல்லாமல் தங்களிடத்திலிருக்கும் விசுவாசம், அன்பு, பொறுமை போன்ற திடமான ஆவிக்குரிய குணங்களுக்காக அவ்வாறிருக்கின்றனர்.
முதிர்வயதுள்ள பெண்களுக்கு
10. சபையிலுள்ள ‘முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்கு’ பவுல் அளித்த புத்திமதிகள் என்னென்ன?
10 அடுத்து பவுல் சபையின் முதிர்வயதுள்ள பெண்களிடம் கவனத்தை செலுத்தினார். தீத்து 2:3-ஐ தயவுசெய்து வாசியுங்கள். ‘முதிர்வயதுள்ள ஸ்திரீகள்’ சபையிலுள்ள பெண்களில் மூத்த அங்கத்தினர்களாக இருக்கின்றனர், இவர்களில் “முதிர்வயதுள்ள புருஷர்”களுடைய மனைவிகளும் மற்ற அங்கத்தினர்களின் தாய்மார்களும் பாட்டிமார்களும் அடங்குவர். அதனால், அவர்கள் நல்லதற்கோ கெட்டதற்கோ பெருமளவு செல்வாக்கு செலுத்தக்கூடும். ஆதலால்தான், பவுல் தன் வார்த்தைகளை “அப்படியே” என்பதோடு அறிமுகப்படுத்துகிறார். இது எதை அர்த்தப்படுத்துகிறதென்றால், “முதிர்வயதுள்ள ஸ்திரீ”களுங்கூட சபையில் தங்களுடைய பங்கை வகிப்பதற்கு ஒருசில பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியவர்களாயுள்ளனர்.
11. பரிசுத்த நடக்கை என்றாலென்ன?
11 முதலாவதாக, ‘முதிர்வயதுள்ள ஸ்திரீகள் பரிசுத்தத்துக்கேற்ற விதமாய் நடக்கிறவர்களாயிருக்கவேண்டும்’ என்று பவுல் சொன்னார். ‘நடக்கை’ என்பது நடத்தையிலும் தோற்றத்திலும் பிரதிபலிக்கக்கூடிய ஒருவருடைய உள்ளார்ந்த மனநிலையின் வெளிக்காட்டாகவும் ஆளுமையின் வெளிக்காட்டாகவும் இருக்கிறது. (மத்தேயு 12:34, 35) அப்படியானால், ஒரு முதிர்வயதுள்ள கிறிஸ்தவ பெண்ணின் மனநிலை அல்லது ஆளுமை என்னவாயிருக்கவேண்டும்? ஒரே வார்த்தையில் சொன்னால், “பரிசுத்தமாய்” இருக்கவேண்டும். இது, “கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆட்களில், நடவடிக்கைகளில் அல்லது பொருட்களில் பொருந்தக்கூடிய ஒன்று” என்று அர்த்தப்படுத்தும் கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இது பிறர்மீது, விசேஷமாக சபையிலுள்ள இளம் பெண்கள்மீது அவர்கள் கொண்டிருக்கும் செல்வாக்கினிமித்தம் உண்மையிலேயே ஒரு பொருத்தமான ஆலோசனையாக இருக்கிறது.—1 தீமோத்தேயு 2:9, 10.
12. எல்லாரும் எந்த விதத்தில் நாவைத் தவறாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்?
12 பின்னர், இரண்டு எதிர்மறையான காரியங்கள்: “அவதூறுபண்ணாதவர்களும், [திராட்சரசத்துக்கு, NW] அடிமைப்படாதவர்களுமாயிருக்க” வேண்டும். இவ்விரண்டும் ஒன்றாக சேர்ந்து பேசப்படுவது அக்கறையூட்டுவதாயிருக்கிறது. “பூர்வ காலங்களில், திராட்சரசம் மட்டுமே அருந்தும் பானமாக இருந்தபோது, முதிர்வயதுள்ள பெண்கள் தங்களுடைய சிறிய திராட்சரச விருந்துகளில், பிறரின் தன்மைகளை சுக்குநூறாக்கிவிடுவார்கள்,” என்று பேராசிரியர் E. F. ஸ்காட் சொல்கிறார். ஆட்கள்மீது ஆண்களைவிட பொதுவாக பெண்கள் அதிக அக்கறையுடையவர்கள் என்பது பாராட்டத்தக்கது. ஆனால், அக்கறையானது புறங்கூறி, அவதூறாகப் பேசும் அளவுக்கு படுமோசமாகிவிடும்; விசேஷமாக மதுபானத்தால் நாவு கட்டுப்பாடிழந்தால் அவ்வாறாகும். (நீதிமொழிகள் 23:33) நிச்சயமாகவே, ஆண்களும் பெண்களும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை நாடித் தொடருபவர்கள் யாவரும் இந்தப் படுகுழியைக் குறித்து மிகவும் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
13. முதிர்வயதுள்ள பெண்கள் போதகர்களாக இருக்கும் வழிகள் என்னென்ன?
13 கிடைக்கக்கூடிய நேரத்தைப் பிரயோஜனமான வழியில் பயன்படுத்த, முதிர்வயதுள்ள பெண்கள் ‘நற்காரியங்களைப் போதிக்கிறவர்களாக’ (வசனம் 5) இருப்பதற்கு உற்சாகம் அளிக்கப்படுகின்றனர். வேறொரு இடத்தில், சபையில் பெண்கள் போதகர்களாக இருக்கக்கூடாது என்று பவுல் தெளிவான அறிவுரைகளை அளித்தார். (1 கொரிந்தியர் 14:34; 1 தீமோத்தேயு 2:12) ஆனால், தங்களுடைய வீட்டாருக்கும் வெளி ஆட்களுக்கும் கடவுளுடைய அருமையான அறிவைப் புகட்டுவதிலிருந்து இது அவர்களைத் தடைசெய்வது கிடையாது. (2 தீமோத்தேயு 1:5; 3:14, 15) பின்வரும் வசனங்கள் காட்டுகிறபடி, சபையிலுள்ள இளம் பெண்களுக்கு கிறிஸ்தவ முன்மாதிரிகளாக இருப்பதன் மூலமும் அவர்கள் அதிக நன்மையானதை செய்விக்கக்கூடும்.
இளம் பெண்களுக்கு
14. இளம் கிறிஸ்தவ பெண்கள் எவ்வாறு தங்களுடைய அலுவல்களைக் கவனித்துக்கொள்வதில் சமநிலையைக் காட்டலாம்?
14 “நற்காரியங்களைப் போதிக்கிறவர்கள்” ஆக இருக்கவேண்டும் என்று முதிர்வயதுள்ள பெண்களை உற்சாகப்படுத்துகையில் பவுல் குறிப்பாக இளம் பெண்களைக் குறிப்பிட்டார். தீத்து 2:4, 5-ஐ தயவுசெய்து வாசியுங்கள். பெரும்பான்மையான அறிவுரைகள் வீட்டு அலுவல்களைச் சுற்றியிருந்தாலும், இளம் கிறிஸ்தவ பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை, பொருளாதார கவலைகள் ஆதிக்கம் செலுத்துமளவுக்கு மட்டுமீறி செல்லக்கூடாது. மாறாக, அவர்கள் “தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், . . . நல்லவர்களும்” எல்லாவற்றிற்கும் மேலாக, “தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு” கிறிஸ்தவ தலைமைத்துவ ஏற்பாட்டை ஆதரிப்பதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும்.
15. சபைகளிலுள்ள இளம் பெண்களில் அநேகர் ஏன் பாராட்டப்படவேண்டும்?
15 பவுலின் நாளில் இருந்ததைக் காட்டிலும் இன்று குடும்ப நிலையானது பெருமளவு மாறிவிட்டிருக்கிறது. மதநம்பிக்கையைப் பொருத்தமட்டில், அநேக குடும்பங்கள் பிளவுபட்டிருக்கின்றன, மற்ற குடும்பங்களில், ஒரே ஒரு பெற்றோர்தான் இருக்கிறார்கள். ஐதிகமான குடும்பங்கள் என்றழைக்கப்படும் குடும்பங்களிலுங்கூட மனைவியாக அல்லது தாயாக இருப்பவர் முழுநேர வீட்டுப் பராமரிப்பாளராக இருப்பது மிகவும் அரிதாயிருக்கிறது. இதெல்லாமே இளம் கிறிஸ்தவ பெண்கள்மீது கடும் அழுத்தத்தையும் பொறுப்பையும் வைக்கிறது, ஆனால் தங்களுடைய வேதப்பூர்வ கடமைகளிலிருந்து இது அவர்களை விலக்கிவைப்பது கிடையாது. ஆகவே, அநேக உண்மையுள்ள, இளம் பெண்கள் தங்களுடைய பல்வேறு அலுவல்களை சமநிலைப்படுத்துவதற்குக் கடினமாக உழைக்கும் சமயத்திலேயே, ராஜ்ய அக்கறைகளை முதலாவது வைப்பதற்கு சமாளிக்கப்பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது; அவர்களில் சிலர் முழுநேர ஊழியத்தில் துணைப் பயனியர்களாக அல்லது ஒழுங்கான பயனியர்களாகவுங்கூட இருக்கிறார்கள். (மத்தேயு 6:33) நிச்சயமாகவே அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்!
வாலிபர்களுக்கு
16. வாலிபர்களுக்கு பவுல் அளித்த புத்திமதிகள் என்னென்ன, இது ஏன் காலத்துக்கேற்றதாக இருக்கிறது?
16 பிறகு தீத்து உட்பட, பவுல் வாலிபர்களின் விஷயத்திற்கு வந்தார். தீத்து 2:6-8-ஐ தயவுசெய்து வாசியுங்கள். புகைபிடித்தல், போதைப்பொருளையும் மதுபானத்தையும் துர்ப்பிரயோகம் செய்வது, கள்ளக்காதல், மற்றும் வெறித்தனமான போட்டி விளையாட்டுகள், தரக்குறைவான இசைகள், கேளிக்கைகள் ஆகிய உலகப்பிரகாரமான நாட்டங்கள் அடங்கிய இன்றுள்ள வாலிபருடைய பொறுப்பற்ற கேட்டுக்கேதுவான வழிகளைக் கருதினோமேயானால், இது ஆரோக்கியமான திருப்தியான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க விரும்பும் கிறிஸ்தவ வாலிபருக்கு உண்மையிலேயே காலத்துக்கேற்ற அறிவுரையாக இருக்கிறது.
17. ஒரு வாலிபன், ‘தெளிந்த புத்தியுள்ளவனாகவும்,’ ‘நற்கிரியைகளுக்கு மாதிரியாகவும்’ எவ்வாறு ஆக முடியும்?
17 உலகப்பிரகாரமான வாலிபருக்கு முரணாக, ஒரு கிறிஸ்தவ வாலிபன் ‘தெளிந்த புத்தியுள்ளவனாகவும்’ ‘நற்கிரியைகளுக்கு மாதிரியாகவும்’ திகழவேண்டும். ஒரு தெளிவான, முதிர்ச்சியுள்ள மனமானது, படிப்பவர்களால் மட்டுமல்ல, “நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்”களாலேயே பெறப்படும் என்று பவுல் விளக்கினார். (எபிரெயர் 5:14) வாலிபர்கள் தங்களுடைய வாலிப பலத்தை தன்னல நாட்டங்களில் வீணடிப்பதற்கு பதிலாக, தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் கிறிஸ்தவ சபையிலுள்ள பலதரப்பட்ட வேலைகளில் முழுமையாக ஈடுபடுவதற்கு மனமுவந்து அளிப்பதைக் காண்பது எவ்வளவு மெச்சத்தக்கதாயிருக்கிறது! தீத்துவைப்போல அவ்வாறு செய்வதன்மூலம் கிறிஸ்தவ சபையில் “நற்கிரியைக”ளுக்கு அவர்கள் மாதிரிகளாக முடியும்.—1 தீமோத்தேயு 4:12.
18. உபதேசத்திலே விகற்பமில்லாமலும், செயலில் நல்லொழுக்கமாகவும் பேச்சில் ஆரோக்கியமாகவும் இருப்பதென்றால் என்ன?
18 வாலிபர்கள் ‘[தங்கள்] உபதேசத்திலே விகற்பமில்லாதவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவர்களுமாயிருக்க’ நினைவூட்டப்படுகின்றனர். ‘விகற்பமில்லாத’ போதனை கடவுளுடைய வார்த்தையின்மீது பலமாக ஆதாரமிடப்பட்டிருக்கவேண்டும்; ஆகவே, வாலிபர்கள் பைபிளின் ஊக்கமான மாணாக்கர்களாக இருக்கவேண்டும். முதிர்வயதுள்ள ஆண்களைப்போல, வாலிபர்களும் நல்லொழுக்கமுள்ளவர்களாக இருக்கவேண்டும். கடவுளுடைய வார்த்தையின் ஊழியனாயிருப்பதை ஒரு முக்கியமான பொறுப்பாக அவர்கள் ஏற்றுக்கொள்வது அவசியம்; எனவே ‘சுவிசேஷத்திற்குப் பாத்திரராக நடந்துகொள்ள’ வேண்டும். (பிலிப்பியர் 1:27) அவ்வாறே அவர்களுடைய பேச்சும் ‘ஆரோக்கியமாகவும்,’ “குற்றம்பிடிக்கப்படாத”படியும் இருக்கவேண்டும்; அப்போது எதிர்ப்பவர்கள் எந்தவொரு குறையையும் சொல்லமாட்டார்கள்.—2 கொரிந்தியர் 6:3; 1 பேதுரு 2:12, 15.
அடிமைகளுக்கும் வேலைக்காரர்களுக்கும்
19, 20. மற்ற ஆட்களிடம் வேலை செய்பவர்கள் எவ்வாறு ‘நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை அலங்கரிக்கலாம்’?
19 கடைசியாக, மற்ற ஆட்களிடம் வேலை செய்பவர்களிடமாக பவுல் திரும்புகிறார். தீத்து 2:9, 10-ஐ தயவுசெய்து வாசியுங்கள். இன்று நம்மில் அநேகர் அடிமைகளாகவோ வேலைக்காரர்களாகவோ இல்லை, ஆனால் பிறருக்கு சேவை செய்யக்கூடிய வேலையாட்களாகவும் உழைப்பாளிகளாகவும் அநேகர் இருக்கிறோம். இவ்வாறு, பவுல் விவரித்துக்கூறிய நியமங்கள் இன்றுங்கூட நன்றாகப் பொருந்துகின்றன.
20 “எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்”வது, கிறிஸ்தவ வேலையாட்கள் தங்களை வேலைக்கு அமர்த்தியிருப்பவர்களுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் உண்மையான மரியாதையைக் காட்டவேண்டும் என்பதைக் குறிக்கிறது. (கொலோசெயர் 3:22) நேர்மையான வேலையாட்கள் என்ற நற்பெயரையும் அவர்கள் வாங்கவேண்டும், மேலதிகாரிக்கு கொடுக்கக் கடன்பட்டிருக்கிற முழு நாள் வேலையை செய்துமுடிக்கவேண்டும். மேலும் தங்களுடைய வேலையிடங்களில் பிறருடைய நடத்தையைப் பாராமல், கிறிஸ்தவ நடத்தைக்கான உயர்ந்த தராதரத்தை அங்குக் காத்துக்கொள்ளவேண்டும். “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக” இதெல்லாவற்றையும் செய்யவேண்டும். சாட்சிகளாக இருக்கும் தங்களுடைய உடன் வேலையாட்களின் அல்லது வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் நல்ல நடத்தையைக் கண்டு, நேர்மை மனமுள்ள ஆட்கள், சத்தியத்துக்குப் பிரதிபலித்திருக்கக்கூடிய மகிழ்ச்சியான பலன்களைப்பற்றி நாம் எவ்வளவு அடிக்கடி கேட்கிறோம்! இது, தங்களுடைய வேலையிடங்களிலுங்கூட ஆரோக்கியமான போதனையைப் பின்பற்றுபவர்கள்மீது யெகோவா அளிக்கும் ஒரு வெகுமதியாக இருக்கிறது.—எபேசியர் 6:7, 8.
சுத்திகரிக்கப்பட்ட ஜனம்
21. யெகோவா ஏன் ஆரோக்கியமான போதனையைக் கொடுத்திருக்கிறார், நாம் எவ்வாறு பிரதிபலிக்கவேண்டும்?
21 பவுல் விவரித்துச் சொன்ன ஆரோக்கியமான போதனையானது, நாம் விரும்பும்போது எடுத்துப் பார்ப்பதற்காக, வெறுமனே ஏதோ அறநெறிகளடங்கிய நியதியோ ஒழுக்க மதிப்பீடுகளோ கிடையாது. அதன் நோக்கத்தைப் பவுல் தொடர்ந்து விளக்கினார். தீத்து 2:11, 12-ஐ தயவுசெய்து வாசியுங்கள். யெகோவா தேவன் நம்மிடம் வைத்த அன்பினாலும் தகுதியற்ற தயவினாலும், இந்தக் கொடிய ஆபத்தான காலங்களில் ஒரு நோக்கமுள்ள திருப்திகரமான வாழ்க்கை வாழக் கற்றுக்கொள்வதற்கு அவர் ஆரோக்கியமான போதனையைக் கொடுத்திருக்கிறார். ஆரோக்கியமான போதனையை ஏற்று அதை உங்களுடைய வாழ்க்கை முறையாக்க நீங்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? அவ்வாறு செய்வது உங்களுக்கு இரட்சிப்பைக் குறிக்கும்.
22, 23. ஆரோக்கியமான போதனையை நம்முடைய வாழ்க்கை முறையாக்கிக் கொள்வதன் மூலம் என்னென்ன ஆசீர்வாதங்களை அறுவடை செய்வோம்?
22 அதைவிட மேலாக, ஆரோக்கியமான போதனையை நம்முடைய வாழ்க்கை முறையாக்கிக்கொள்வது, இன்று ஒரு விசேஷித்த சிலாக்கியத்தைக் கொண்டுவந்து, பிற்காலத்திற்கான ஒரு சந்தோஷமான நம்பிக்கையை அளிக்கிறது. தீத்து 2:13, 14-ஐ தயவுசெய்து வாசியுங்கள். நிச்சயமாகவே, ஆரோக்கியமான போதனையை நம்முடைய வாழ்க்கை முறையாக்கிக்கொள்வது கெட்டுக்கிடக்கிற அழிவுறும் உலகிலே நம்மை சுத்திகரிக்கப்பட்ட ஜனமாகப் பிரித்து வைக்கிறது. பவுல் சொன்ன வார்த்தைகள் சீனாயில் இஸ்ரவேல் புத்திரருக்கு மோசே நினைப்பூட்டிய காரியங்களோடு இணையாக இருக்கின்றன: ‘கர்த்தர், தான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வார், அவர் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான அவருக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய்.’—உபாகமம் 26:18, 19.
23 ஆரோக்கியமான போதனையை நம்முடைய வாழ்க்கை முறையாக்கிக் கொள்வதன் மூலம், யெகோவாவின் சுத்திகரிக்கப்பட்ட ஜனமாக இருப்பதன் சிலாக்கியத்தை என்றும் பொக்கிஷமாக கருதுவோமாக! எவ்விதமான தேவபக்தியின்மையையும் உலக இச்சைகளையும் வெறுத்து ஒதுக்குவதில் நித்தமும் விழிப்புள்ளவர்களாக இருந்து, இவ்வாறு, யெகோவா இன்று நிறைவேற்றிவரும் மகத்தான வேலையில் அவரால் பயன்படுத்தப்படுவதற்கு சுத்தமுள்ளவர்களாகவும் தகுதியுள்ளவர்களாகவும் நிலைத்திருப்பீர்களாக.—கொலோசெயர் 1:10.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ தேவபக்தி ஏன் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது?
◻ முதிர்வயதுள்ள கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் எவ்வாறு ஆரோக்கியமான போதனையை வாழ்க்கை முறையாக நாடித்தேட முடியும்?
◻ சபையிலுள்ள வாலிபர்களுக்கும் பெண்களுக்கும் பவுல் என்ன ஆரோக்கியமான போதனையைக் கொடுத்தார்?
◻ ஆரோக்கியமான போதனையை நம்முடைய வாழ்க்கை முறையாக்குவோமானால், என்ன சிலாக்கியமும் ஆசீர்வாதமும் நம்முடையதாயிருக்கும்?
[பக்கம் 18-ன் படங்கள்]
இன்று அநேகர் தீத்து 2:2-4-ல் உள்ள புத்திமதிகளை அப்பியாசிக்கின்றனர்