“கடவுளுடைய வார்த்தைக்கு . . . வல்லமை இருக்கிறது”
“கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது, வல்லமை இருக்கிறது.”—எபி. 4:12.
1. கடவுளுடைய வார்த்தைக்கு வல்லமை இருப்பதை நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்? (ஆரம்பப் படம்)
யெகோவாவின் வார்த்தைக்கு, அதாவது மனிதர்களிடம் அவர் சொல்லும் செய்திக்கு, “உயிர் இருக்கிறது, வல்லமை இருக்கிறது” என்று அவருடைய மக்கள் நம்புகிறார்கள். (எபி. 4:12) நம்முடைய வாழ்க்கையிலும் மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் பைபிளின் வல்லமை செயல்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். சாட்சிகளாக மாறுவதற்கு முன்பு, சிலர் திருடர்களாகவோ போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாகவோ ஒழுக்கங்கெட்டவர்களாகவோ இருந்தார்கள். இன்னும் சிலர், பேர்புகழோடும் வசதி வாய்ப்புகளோடும் வாழ்ந்திருந்தாலும், வாழ்க்கையில் எதையோ இழந்ததுபோல் உணர்ந்தார்கள். (பிர. 2:3-11) ஆனால், நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்த அவர்கள் இப்போது நம்பிக்கையோடு வாழ்கிறார்கள்; அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு கிடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட நிறைய பேருடைய அனுபவங்களை காவற்கோபுரம் பத்திரிகையில் வரும் “பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது” என்ற தொடர்கட்டுரைகளில் படித்து ரசித்திருக்கிறோம். கிறிஸ்தவர்களாக மாறிய பிறகும்கூட, எல்லாரும் பைபிளின் உதவியோடு, யெகோவாவுடன் இருக்கும் பந்தத்தைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும்.
2. கடவுளுடைய வார்த்தையின் வல்லமை முதல் நூற்றாண்டில் இருந்தவர்களுக்கு எப்படி உதவியது?
2 சத்தியத்தைக் கற்றுக்கொள்ளும்போது நிறைய பேர் தங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் செய்கிறார்கள். இதில் ஆச்சரியமே இல்லை. ஏனென்றால், முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் அப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்தார்கள். (1 கொரிந்தியர் 6:9-11-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய அரசாங்கத்துக்குள் யாரெல்லாம் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதைப் பற்றி பவுல் சொன்னபோது, “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருந்தீர்கள்” என்றார். அவர்கள் மாறுவதற்குக் கடவுளுடைய வார்த்தையும் அவருடைய சக்தியும் உதவி செய்தன. ஆனால், கிறிஸ்தவர்களாக மாறிய பிறகும்கூட சிலர் பெரிய தவறுகளைச் செய்ததால், யெகோவாவோடு இருந்த பந்தத்தை இழந்தார்கள். உதாரணத்துக்கு, பரலோக நம்பிக்கையுள்ள ஒரு சகோதரர் சபை நீக்கம் செய்யப்பட வேண்டியிருந்ததைப் பற்றி பைபிள் சொல்கிறது. பிற்பாடு, மறுபடியும் கிறிஸ்தவ சபையின் பாகமாக ஆவதற்காக அவர் மாற்றங்கள் செய்தார். (1 கொ. 5:1-5; 2 கொ. 2:5-8) நம் சகோதர சகோதரிகள் கடவுளுடைய வார்த்தையின் வல்லமையால் இப்படிப்பட்ட நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்! இதைத் தெரிந்துகொள்ளும்போது நமக்கு உற்சாகமாக இருக்கிறது.
3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?
3 பைபிளுக்கு நிறைய வல்லமை இருக்கிறது. யெகோவா நமக்கு அதைக் கொடுத்திருப்பதால், நாம் அதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். (2 தீ. 2:15) (1) நம் வாழ்க்கையிலும், (2) ஊழியத்திலும், (3) மேடையிலிருந்து கற்பிக்கையிலும் பைபிளின் வல்லமை செயல்படுவதற்கு நாம் எப்படி அனுமதிக்கலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இதில் நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள், நம் பரலோகத் தகப்பன்மேல் அன்பு காட்டவும் அவருக்கு நன்றியோடு இருக்கவும் நமக்கு உதவும். நமக்குப் பிரயோஜனமானதைத்தான் அவர் கற்றுக்கொடுக்கிறார்.—ஏசா. 48:17.
நம் வாழ்க்கையில்
4. (அ) கடவுளுடைய வார்த்தையின் வல்லமை நம்மேல் செயல்படுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) பைபிளை வாசிப்பதற்கு நீங்கள் எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?
4 கடவுளுடைய வார்த்தையின் வல்லமை நம்மேல் செயல்பட வேண்டுமென்றால், நாம் அதைத் தவறாமல் வாசிக்க வேண்டும். சொல்லப்போனால், அதைத் தினமும் வாசிக்க நாம் முயற்சி எடுக்க வேண்டும். (யோசு. 1:8) நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நேரம் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. ஆனால், நாம் எவ்வளவு வேலையாக இருந்தாலும் சரி, நமக்கு எவ்வளவு பொறுப்புகள் இருந்தாலும் சரி, பைபிளை வாசிக்காமல் இருக்கக் கூடாது. (எபேசியர் 5:15, 16-ஐ வாசியுங்கள்.) நம்மில் நிறைய பேர் அதிகாலையிலோ, பகலில் ஏதாவது ஒரு நேரத்திலோ, ராத்திரியிலோ அதற்காக நேரம் ஒதுக்குகிறோம். “உங்களுடைய சட்டத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன்! நாளெல்லாம் அதைப் பற்றியே ஆழமாக யோசிக்கிறேன்” என்று எழுதியவரைப் போலவே நாமும் உணருகிறோம்.—சங். 119:97.
5, 6. (அ) நாம் ஏன் தியானிக்க வேண்டும்? (ஆ) பிரயோஜனமான விதத்தில் நாம் எப்படித் தியானிக்கலாம்? (இ) பைபிளை வாசிப்பதும் தியானிப்பதும் உங்களுக்கு எப்படி உதவியிருக்கிறது?
5 ஆனாலும், பைபிளை வெறுமனே வாசித்தால் போதாது. அதைப் பற்றித் தியானிக்கவும் வேண்டும், அதாவது படித்த விஷயங்களைப் பற்றிக் கவனமாகவும் ஆழமாகவும் யோசித்துப் பார்க்க வேண்டும். (சங். 1:1-3) அப்போதுதான், பைபிள் சொல்லும் ஞானமான அறிவுரைகளை நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடியும். பைபிளைப் புத்தக வடிவத்தில் வாசித்தாலும் சரி, எலக்ட்ரானிக் வடிவத்தில் வாசித்தாலும் சரி, அது நம்மை மாற்றவும் உந்துவிக்கவும் நாம் அனுமதிக்க வேண்டும்.
6 பிரயோஜனமான விதத்தில் நாம் எப்படித் தியானிக்கலாம்? பைபிளை வாசிக்கும்போது, கொஞ்சம் நிறுத்தி, ‘யெகோவாவ பத்தி இது என்ன சொல்லுது? இதுல சொல்லியிருக்கிற மாதிரி நான் ஏற்கெனவே எப்படி நடந்துட்டுவர்றேன்? வேற என்ன மாற்றங்கள நான் செய்யணும்?’ என்றெல்லாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். கடவுளுடைய வார்த்தையில் படிக்கிற விஷயங்களைப் பற்றித் தியானிக்கும்போதும், அதைப் பற்றி ஜெபம் செய்யும்போதும், அதன்படி நடக்க நாம் விரும்புவோம். அப்போது, பைபிளின் வல்லமை நம் வாழ்க்கையில் செயல்படுவதைப் பார்ப்போம்.—2 கொ. 10:4, 5.
ஊழியத்தில்
7. ஊழியத்தில் கடவுளுடைய வார்த்தையை நீங்கள் எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம்?
7 பிரசங்கிக்கும்போதும் கற்பிக்கும்போதும் நாம் அடிக்கடி கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துவது முக்கியம். “நீங்க யெகோவாவோட சேர்ந்து ஊழியம் செய்றதா இருந்தா, நீங்களே பேசிட்டு இருப்பீங்களா, இல்லன்னா அவர பேச விடுவீங்களா?” என்று ஒரு சகோதரர் கேட்டார். நாம் யாருக்காவது பைபிளிலிருந்து வாசித்துக் காட்டும்போது, யெகோவா அவரிடம் பேசுவதற்கு அனுமதிக்கிறோம். நாம் என்னதான் சொன்னாலும், பொருத்தமான ஒரு வசனத்தைக் காட்டுவதுபோல் வராது; நம் வார்த்தைகளைவிட கடவுளுடைய வார்த்தைக்குத்தான் வல்லமை அதிகம். (1 தெ. 2:13) நீங்கள் ஊழியம் செய்யும்போது, பைபிள் வசனங்களை அடிக்கடி வாசித்துக் காட்ட முயற்சி செய்கிறீர்களா?
8. ஊழியத்தில் பைபிளை வெறுமனே வாசித்துக் காட்டுவது ஏன் போதாது?
8 ஊழியத்தில் பைபிளை வெறுமனே வாசித்துக் காட்டினால் போதாது. ஏனென்றால், வசனங்களின் அர்த்தத்தைப் பெரும்பாலானவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. முதல் நூற்றாண்டிலும் இதே நிலைமைதான் இருந்தது. (ரோ. 10:2) நாம் வசனத்தை வாசித்ததுமே மக்கள் அதைப் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கக் கூடாது. முக்கிய வார்த்தைகளை அல்லது கருத்துகளை நாம் திரும்பவும் சொல்ல வேண்டும்; பிறகு, அவற்றின் அர்த்தத்தை விளக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, கடவுளுடைய வார்த்தை மக்களின் மனதிலும் இதயத்திலும் நன்றாகப் பதியும்.—லூக்கா 24:32-ஐ வாசியுங்கள்.
9. மக்களுக்கு பைபிள்மேல் மதிப்பு வரும் விதத்தில் நாம் எப்படி வசனத்தை அறிமுகப்படுத்தலாம்? ஒரு உதாரணம் கொடுங்கள்.
9 ஒரு வசனத்தை நாம் எப்படி அறிமுகப்படுத்துகிறோம் என்பதும் முக்கியம்; அதைப் பொறுத்துதான் மக்களுக்கு பைபிள்மேல் மதிப்பு வரும். உதாரணத்துக்கு, “நம்மள படைச்சவரு இந்த விஷயத்த பத்தி என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்” என்று நாம் சொல்லலாம். ஒருவேளை, கிறிஸ்தவராக இல்லாத ஒருவரிடம் பேசினால், “ஒரு வேத புத்தகம் என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்” என்று சொல்லலாம். மதத்தின்மேல் ஆர்வம் காட்டாத ஒருவரிடம், “ரொம்ப காலத்துக்கு முன்னாடி சொல்லப்பட்ட இந்த விஷயத்த நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்று கேட்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பின்னணியும் நம்பிக்கையும் இருக்கிறது என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொண்டால், அவரவருடைய மனதைத் தொடும் விதத்தில் வசனங்களை அறிமுகப்படுத்துவதற்கு முழு முயற்சி செய்வோம்.—1 கொ. 9:22, 23.
10. (அ) ஒரு சகோதரருக்குக் கிடைத்த அனுபவத்தைச் சொல்லுங்கள். (ஆ) ஊழியத்தில் கடவுளுடைய வார்த்தையின் வல்லமை செயல்படுவதை நீங்கள் எப்படிப் பார்த்திருக்கிறீர்கள்?
10 ஊழியத்தில் நாம் சந்திக்கிற ஆட்கள்மேல் கடவுளுடைய வார்த்தை ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை நிறைய பேர் கண்கூடாகப் பார்த்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஒரு சகோதரர் வயதான ஒருவரை மறுசந்திப்பு செய்தார். அந்த வயதானவர் நம்முடைய பத்திரிகைகளைப் பல வருஷங்களாகப் படித்துவந்திருந்தார். அவருக்குப் புதிய காவற்கோபுர பத்திரிகையைக் கொடுப்பதோடு, ஒரு வசனத்தையும் வாசித்துக் காட்ட அந்தச் சகோதரர் முடிவு செய்தார். பிறகு, 2 கொரிந்தியர் 1:3, 4-ஐ அந்த வயதானவருக்கு வாசித்துக் காட்டினார். “அவர்தான் [கடவுள்தான்] கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன். எல்லா விதமான ஆறுதலின் கடவுள். நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் அவர் நமக்கு ஆறுதல் தருகிறார்” என்று அந்த வசனங்கள் சொல்கின்றன. இந்த வார்த்தைகள் அந்த வயதானவரின் மனதை ரொம்பவே தொட்டதால், மறுபடியும் அந்த வசனங்களை வாசித்துக் காட்டும்படி சொன்னார். பிறகு, தனக்கும் தன் மனைவிக்கும் உண்மையிலேயே ஆறுதல் தேவைப்பட்டதாகச் சொன்னார். பைபிளைப் பற்றி அதிகமாகக் கற்றுக்கொள்ளவும் விரும்பினார். ஊழியத்தில் கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துவது அருமையான பலன்களைத் தருகிறது, இல்லையா?—அப். 19:20.
மேடையிலிருந்து கற்பிக்கையில்
11. மேடையிலிருந்து கற்பிக்கும் சகோதரர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?
11 கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் போக நாம் ரொம்பவே விரும்புகிறோம். முக்கியமாக, யெகோவாவை வணங்குவதற்குத்தான் நாம் அங்கே போகிறோம். அதோடு, அங்கே கற்றுக்கொள்ளும் விஷயங்களிலிருந்து நாம் பிரயோஜனம் அடைகிறோம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மேடையிலிருந்து கற்பிப்பது, சகோதரர்களுக்குக் கிடைக்கும் பெரிய பாக்கியம்! அது மிகப் பெரிய பொறுப்பும்கூட! (யாக். 3:1) அதனால், கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் எல்லாவற்றையும் கற்பிக்க அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தால், பைபிளுக்கு இருக்கும் வல்லமையை எல்லாருக்கும் உணர்த்தும் விதத்தில் நீங்கள் எப்படிக் கற்பிக்கலாம்?
12. வசனங்களின் அடிப்படையில் பேச்சு கொடுப்பதற்குப் பேச்சாளர் எப்படிக் கவனமாக இருக்கலாம்?
12 எந்தப் பேச்சாக இருந்தாலும் சரி, வசனங்கள்தான் மிக முக்கியமான அம்சமாக இருக்க வேண்டும். (யோவா. 7:16) நீங்கள் கொடுக்கும் பேச்சோ சொல்லும் அனுபவங்களோ உதாரணங்களோ, பைபிளைவிட அதிக கவனத்தை ஈர்க்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அதோடு, பைபிளை வாசிப்பதற்கும் அதைக் கற்றுக்கொடுப்பதற்கும் வித்தியாசம் இருப்பதை நீங்கள் ஞாபகம் வைக்க வேண்டும். சொல்லப்போனால், நீங்கள் நிறைய வசனங்களை வாசித்தால், எல்லாராலும் அவற்றை ஞாபகம் வைக்க முடியாது. அதனால், வசனங்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். பிறகு, அவற்றை வாசியுங்கள், விளக்குங்கள், உதாரணம் சொல்லி புரிய வையுங்கள், நன்றாகப் பொருத்திக் காட்டுங்கள். (நெ. 8:8) ஒரு குறிப்புத்தாளின் அடிப்படையில் நீங்கள் பேச்சு கொடுத்தால், அந்தக் குறிப்புத்தாளையும் அதில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களையும் நன்றாகப் படியுங்கள். குறிப்புத்தாளில் உள்ள விஷயங்களோடு அந்த வசனங்கள் எப்படிப் பொருந்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பிறகு, அந்த வசனங்களில் சிலவற்றைப் பயன்படுத்தி, குறிப்புத்தாளில் இருக்கிற விஷயங்களைக் கற்பியுங்கள். (தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் புத்தகத்தில், படிப்புகள் 21-23-ல் நல்ல ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.) எல்லாவற்றையும்விட முக்கியமாக, பைபிளில் யெகோவா பதிவு செய்திருக்கும் அருமையான விஷயங்களை விளக்குவதற்கு அவரிடம் உதவி கேளுங்கள்.—எஸ்றா 7:10-ஐயும், நீதிமொழிகள் 3:13, 14-ஐயும் வாசியுங்கள்.
13. (அ) ஒரு கூட்டத்தில் சொல்லப்பட்ட வசனம் ஒரு சகோதரியின் மனதை எப்படித் தொட்டது? (ஆ) கூட்டத்தில் வசனங்கள் பயன்படுத்தப்படும் விதம் உங்கள் மனதை எப்படித் தொட்டிருக்கிறது?
13 ஆஸ்திரேலியாவில் இருக்கிற ஒரு சகோதரி சிறு வயதில் நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். பிற்பாடு, அவர் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டார். ஆனாலும், யெகோவா தன்னை நேசிக்கிறார் என்பதை அந்தச் சகோதரியால் முழுமையாக நம்ப முடியவில்லை. ஒரு கூட்டத்தில் சொல்லப்பட்ட வசனம் அவருடைய மனதைத் தொட்டது. அதைப் பற்றி அவர் தியானித்துப் பார்த்தார், ஆராய்ச்சியும் செய்தார். அப்படி ஆராய்ச்சி செய்தபோது, மற்ற வசனங்களையும் எடுத்துப் பார்த்தார். அதனால், யெகோவா உண்மையிலேயே தன்னை நேசிப்பதைப் புரிந்துகொண்டார்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஏதாவது ஒரு கூட்டத்திலோ மாநாட்டிலோ கேட்ட ஒரு வசனம் உங்கள் மனதையும் தொட்டிருக்கிறதா?—நெ. 8:12.
14. கடவுளுடைய வார்த்தையை நேசிக்கிறோம் என்பதையும் மதிக்கிறோம் என்பதையும் எப்படிக் காட்டலாம்?
14 யெகோவா நமக்கு பைபிளைக் கொடுத்திருப்பதற்காக நாம் எந்தளவுக்கு நன்றியோடு இருக்கிறோம்! பைபிள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று அவர் வாக்குக் கொடுத்தார், கொடுத்த வாக்கைக் காப்பாற்றியும் இருக்கிறார். (1 பே. 1:24, 25) அதனால், நாம் பைபிளைத் தவறாமல் வாசிக்க வேண்டும், நம் வாழ்க்கையில் அதைக் கடைப்பிடிக்க வேண்டும், மற்றவர்களுக்கு உதவி செய்ய அதைப் பயன்படுத்தவும் வேண்டும். அப்படிச் செய்யும்போது, இந்தப் பொக்கிஷத்தை உண்மையிலேயே நேசிக்கிறோம் என்பதையும் மதிக்கிறோம் என்பதையும் காட்டுகிறோம். அதைவிட முக்கியமாக, இதைக் கொடுத்த யெகோவா தேவனை நேசிக்கிறோம் என்பதையும் மதிக்கிறோம் என்பதையும் காட்டுகிறோம்.
a “ஒரு திருப்புமுனை” என்ற பெட்டியைப் பாருங்கள்.