அதிகாரம் இரண்டு
பைபிள்—கடவுள் தந்த புத்தகம்
வேறெந்த புத்தகத்தையும்விட பைபிள் எவ்விதங்களில் வித்தியாசமானது?
பிரச்சினைகளைச் சமாளிக்க பைபிள் எப்படி உங்களுக்கு உதவலாம்?
பைபிளிலுள்ள தீர்க்கதரிசனங்களை நீங்கள் ஏன் நம்பலாம்?
1, 2. கடவுள் தந்த பைபிள் எவ்விதங்களில் மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிற பரிசாக இருக்கிறது?
நெருங்கிய நண்பர் ஒருவர் உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொருளை பரிசாகத் தந்தது ஞாபகம் இருக்கிறதா? அதைப் பெற்றுக் கொண்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது? ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்கும், உங்கள் உள்ளமெல்லாம் குளிர்ந்திருக்கும். ஆம், ஒரு பரிசு அதைக் கொடுக்கும் நபரைப் பற்றி ஒரு விஷயத்தைத் தெரிவிக்கிறது, அதாவது உங்களுடைய நட்பை அவர் பெரிதாக மதிக்கிறார் என்பதைத் தெரிவிக்கிறது. உங்களுக்கென்றே ஆசையாக வாங்கிக் கொடுத்த அந்தப் பரிசுக்காக நிச்சயம் நீங்கள் அவருக்கு நன்றி சொல்லியிருப்பீர்கள்.
2 அதைப் போலவே, பைபிள் என்பது கடவுள் நமக்குத் தந்திருக்கும் ஒரு பரிசு; இந்தப் பரிசுக்காக நாம் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம். வேறெந்த விதத்திலும் நம்மால் தெரிந்துகொள்ள முடியாத எத்தனையோ விஷயங்களை இந்த நிகரற்ற புத்தகம் சொல்கிறது. உதாரணமாக, நட்சத்திர வானமும், சிங்கார பூமியும், முதல் மனிதத் தம்பதியும் சிருஷ்டிக்கப்பட்டதைப் பற்றியெல்லாம் அது விவரிக்கிறது. பிரச்சினைகளையும் கவலைகளையும் சமாளிக்க உதவுகிற நம்பகமான நியமங்களைத் தருகிறது. அதுமட்டுமல்ல, கடவுள் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி இந்தப் பூமியை எப்படி நல்ல நிலைக்குக் கொண்டு வருவார் என்றும் விளக்குகிறது. மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிற எப்பேர்ப்பட்ட பரிசு இந்த பைபிள்!
3. யெகோவா பைபிளைத் தந்திருப்பது அவரைப் பற்றி நமக்கு எதைக் காட்டுகிறது, இது நம் உள்ளத்தை ஏன் குளிர்விக்கிறது?
3 பைபிள் நம் உள்ளத்தைக் குளிர்விக்கும் ஒரு பரிசாகவும் இருக்கிறது, ஏனெனில் அதைப் பரிசாகத் தந்த யெகோவா தேவனைப் பற்றி அது சொல்கிறது. இப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை அவர் தந்திருப்பதுதானே நாம் அவரைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென அவர் விரும்புவதைக் காட்டுகிறது. யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கு பைபிள் உண்மையிலேயே நமக்கு உதவும்.
4. பைபிள் விநியோகிப்பைப் பற்றிய என்ன விஷயம் உங்களைக் கவருகிறது?
4 உங்களிடம் பைபிள் இருக்கிறதா? அநேகரிடம் இருக்கிறது. பைபிள் முழுமையாகவோ பகுதியாகவோ 2,300-க்கும் அதிகமான மொழிகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது; இப்படியாக உலக ஜனத்தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு அது கிடைக்கிறது. சராசரியாக, பத்து லட்சத்திற்கும் அதிகமான பைபிள்கள் ஒவ்வொரு வாரமும் விநியோகிக்கப்படுகின்றன! கோடிக்கணக்கான பைபிள்கள் முழுமையாகவோ பகுதிகளாகவோ அச்சடிக்கப்படுகின்றன. நிச்சயமாகவே, பைபிளைப் போல வேறெந்த புத்தகமும் இவ்வுலகத்தில் இல்லை.
5. பைபிள் எவ்விதத்தில் “கடவுளால் ஏவப்பட்டிருக்கிறது”?
5 அதுமட்டுமா, பைபிள் “கடவுளால் ஏவப்பட்டிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, NW) எவ்விதத்தில்? “மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” என்று பைபிள்தானே பதிலளிக்கிறது. (2 பேதுரு 1:21) இதை இப்படி விளக்கலாம்: ஒரு மேனேஜர் தன் செக்ரெட்டரியிடம் ஒரு கடிதத்தை எழுதச் சொல்கிறார். தன் எண்ணங்களையும் அறிவுரைகளையும் அந்த மேனேஜர் சொல்லச் சொல்ல அந்த செக்ரெட்டரி எழுதிக்கொள்கிறார். அப்படியானால் அந்தக் கடிதம் யாருடையது? அது உண்மையில் மேனேஜருடையது, செக்ரெட்டரியுடையதல்ல. அவ்வாறே, பைபிளை மனிதர்கள் எழுதினாலும் அதிலிருப்பது கடவுளுடைய செய்தி, மனிதர்களுடைய செய்தி அல்ல. எனவே, முழு பைபிளும் உண்மையில் “தேவ வசனமாகவே” இருக்கிறது.—1 தெசலோனிக்கேயர் 2:13.
ஒத்திசைவானது, துல்லியமானது
6, 7. பைபிள் பதிவுகளிலுள்ள ஒத்திசைவு ஏன் குறிப்பிடத்தக்கது?
6 பைபிளை எழுதி முடிக்க 1,600-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பிடித்தன. அதை எழுதியவர்கள் வெவ்வேறு காலப்பகுதியில் வாழ்ந்தவர்கள், அதுவும் வித்தியாசமான பின்னணியைச் சேர்ந்தவர்கள். சிலர் விவசாயிகளாக, மீனவர்களாக, மேய்ப்பர்களாக இருந்தார்கள். வேறு சிலர் தீர்க்கதரிசிகளாக, நியாயாதிபதிகளாக, ராஜாக்களாக இருந்தார்கள். சுவிசேஷ எழுத்தாளரான லூக்கா ஒரு மருத்துவராக இருந்தார். இப்படி வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள் பைபிளை எழுதியிருந்தாலும், ஆரம்பத்திலிருந்து முடிவுவரை அது முரண்பாடில்லாமல் ஒத்திசைவாகவே இருக்கிறது.a
7 மனிதகுலத்தின் பிரச்சினைகள் எவ்வாறு ஆரம்பமாயின என்பதை பைபிளின் முதல் புத்தகம் சொல்கிறது. முழு பூமியுமே ஒரு பரதீஸாக, அதாவது பூங்காவாக மாறப் போகிறது என்பதை அதன் கடைசி புத்தகம் காண்பிக்கிறது. பைபிள் பதிவுகள் அனைத்தும் ஆயிரக்கணக்கான வருடங்களின் சரித்திரத்தை உள்ளடக்கியவை. இவை அனைத்தும் கடவுளுடைய நோக்கத்துடன் ஏதோவொரு விதத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. பைபிளின் ஒத்திசைவு மனதைக் கவருகிறது, கடவுள் தந்த புத்தகம் அப்படியிருக்க வேண்டும் என்றுதானே நாம் எதிர்பார்ப்போம்!
8. அறிவியல்பூர்வமாக பைபிள் துல்லியமானது என்பதற்கு உதாரணங்கள் தருக.
8 அறிவியல்பூர்வமாக பைபிள் துல்லியமானது. அத்துடன், மனிதர் கண்டுபிடிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னரே பல உண்மைகளை அது வெளிப்படுத்தியிருக்கிறது. உதாரணமாக, நோயாளிகளைத் தனியாகப் பிரித்து வைப்பது, சுகாதார முறைகளைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றிற்கான சட்டங்கள் லேவியராகமப் புத்தகத்தில் இருக்கின்றன; ஆனால் பூர்வ இஸ்ரவேலரைச் சுற்றியிருந்த தேசங்களுக்கு அவற்றைப் பற்றி ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. அதேபோல, பூமியின் வடிவத்தைப் பற்றி தவறான கருத்துகள் நிலவிய சமயத்தில் பூமி உருண்டையானது என பைபிள் குறிப்பிட்டிருந்தது. (ஏசாயா 40:22) அதுமட்டுமல்ல, பூமி ‘அந்தரத்திலே தொங்குகிறது’ எனவும் அது துல்லியமாகச் சொன்னது. (யோபு 26:7) பைபிள் ஓர் அறிவியல் பாடப்புத்தகம் அல்ல என்பது உண்மைதான், ஆனால் அறிவியல் விஷயங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அது வெகு துல்லியமாக இருக்கிறது. கடவுள் தந்துள்ள ஒரு புத்தகம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று நாம் எதிர்பார்ப்போம், அல்லவா?
9. (அ) பைபிள் சரித்திரப்பூர்வமாகத் துல்லியமானது, நம்பகமானது என பைபிளே எப்படி அத்தாட்சி அளிக்கிறது? (ஆ) பைபிள் எழுத்தாளர்களின் நேர்மை, பைபிளைப் பற்றி எதை நிரூபிக்கிறது?
9 சரித்திரப்பூர்வமாகவும் பைபிள் துல்லியமானது, நம்பகமானது. அதன் பதிவுகளில் திட்டவட்டமான குறிப்புகள் இருக்கின்றன. அவற்றில் ஆட்களின் பெயர் மட்டுமல்ல, அவர்களுடைய வம்ச வரலாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.b பொதுவாக, சரித்திராசிரியர்கள் தங்கள் நாட்டவரின் தோல்விகளையெல்லாம் குறிப்பிட மாட்டார்கள், ஆனால், பைபிள் எழுத்தாளர்களோ எதையும் மறைக்காமல் விஷயங்களை நேர்மையுடன் தெரிவித்திருக்கிறார்கள்; ஆம், தங்களுடைய மற்றும் தங்கள் நாட்டவருடைய குறைபாடுகளைக்கூட உள்ளதை உள்ளபடியே பதிவு செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, பைபிள் எழுத்தாளரான மோசே, தான் ஒரு பெரிய தவறு செய்ததைப் பற்றியும், அதனால் தனக்குக் கடுந்தண்டனை கிடைத்ததைப் பற்றியும் பைபிளிலுள்ள எண்ணாகமப் புத்தகத்தில் அவரே பதிவு செய்துள்ளார். (எண்ணாகமம் 20:2-12) இப்படிப்பட்ட நேர்மையை வேறு சரித்திரப் புத்தகங்களில் காண்பது வெகு அபூர்வம். ஆனால் பைபிளில் அது காணப்படுகிறதென்றால் அதற்குக் காரணம், அது கடவுள் தந்த புத்தகம்.
நடைமுறைக்கேற்ற ஞானத்தைத் தருகிற புத்தகம்
10. பைபிள் நடைமுறைக்கேற்ற ஒரு புத்தகம் என்பதில் ஏன் ஆச்சரியமில்லை?
10 பைபிள் கடவுளால் ஏவப்பட்டிருப்பதால் அது ‘உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் . . . பிரயோஜனமுள்ளதாய்’ இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:17) ஆம், பைபிள் நடைமுறைக்கேற்ற ஒரு புத்தகம். மனிதர்களுடைய சுபாவத்தை அது அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை, ஏனெனில் சிருஷ்டிகரான யெகோவா தேவனே அதன் நூலாசிரியர்! நம்முடைய யோசனைகளையும் உணர்ச்சிகளையும் நம்மைவிட அவர் நன்கு புரிந்து வைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, சந்தோஷமாக இருக்க நமக்கு என்ன தேவை என்பதை அறிந்திருக்கிறார். என்னென்ன செயல்களையெல்லாம் நாம் தவிர்க்க வேண்டும் என்பதைக்கூட அவர் அறிந்திருக்கிறார்.
11, 12. (அ) மலைப் பிரசங்கத்தில் இயேசு என்னென்ன விஷயங்களைப் பற்றிப் பேசினார்? (ஆ) நடைமுறையான வேறு என்ன விஷயங்கள் பைபிளில் உள்ளன, அதன் ஆலோசனைகள் ஏன் எக்காலத்துக்கும் ஏற்றவை?
11 மலைப் பிரசங்கம் என்றழைக்கப்படுகிற இயேசுவின் சொற்பொழிவை எடுத்துக் கொள்ளுங்கள், மத்தேயு புத்தகத்தில் 5 முதல் 7 வரையான அதிகாரங்களில் அது பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைசிறந்த அந்தச் சொற்பொழிவில், உண்மையான சந்தோஷத்தை எப்படிக் கண்டடைவது, சண்டை சச்சரவுகளை எப்படித் தீர்ப்பது, எப்படி ஜெபிப்பது, பொருளுடைமைகளைப் பற்றி எப்படிச் சரியான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பது போன்ற அநேக விஷயங்களைக் குறிப்பிட்டார். இயேசு சொன்னவை அன்றைக்கு எப்படி வலிமையானதாகவும் நடைமுறையானதாகவும் இருந்ததோ அப்படியே இன்றைக்கும் இருக்கின்றன.
12 பைபிளிலுள்ள சில நியமங்கள் குடும்ப வாழ்க்கை பற்றியும், வேலை சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்கள் பற்றியும், பிறரிடம் நடந்துகொள்கிற முறைகள் பற்றியும் சொல்கின்றன. அத்தகைய பைபிள் நியமங்கள் எல்லா ஜனங்களுக்குமே பொருந்துகின்றன, அதன் ஆலோசனைகள் எக்காலத்துக்கும் பிரயோஜனமாய் இருக்கின்றன. பைபிளிலுள்ள ஞானத்தைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி மூலம் கடவுள் ஒரே வரியில் இவ்வாறு சொல்கிறார்: ‘பிரயோஜனமாயிருக்கிற காரியங்களை உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய யெகோவா நானே.’—ஏசாயா 48:17, NW.
தீர்க்கதரிசன புத்தகம்
13. பாபிலோனைக் குறித்து என்னென்ன விவரங்களைப் பதிவு செய்யுமாறு ஏசாயா தீர்க்கதரிசியை யெகோவா ஏவினார்?
13 பைபிளில் ஏராளமான தீர்க்கதரிசனங்கள் உள்ளன, அவற்றில் பல ஏற்கெனவே நிறைவேறிவிட்டன. ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். பாபிலோன் நகரம் அழிக்கப்படும் என்று பொ.ச.மு. எட்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யெகோவா முன்னறிவித்தார். (ஏசாயா 13:19; 14:22, 23) இந்த நகரம் எப்படி கைபற்றப்படும் என்பதற்கான விவரங்களும் கொடுக்கப்பட்டன. படையெடுத்து வருபவர்கள் பாபிலோனின் நதியை வற்றிப்போகச் செய்து, போரில் ஈடுபடாமலேயே நகரத்திற்குள் நேராக நுழைந்திடுவார்கள் என்று தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டது. அதுமட்டுமா? பாபிலோனைக் கைப்பற்றப் போகிற ராஜாவின் பெயரைக்கூட, அதாவது கோரேசு என்ற பெயரைக்கூட அந்தத் தீர்க்கதரிசனம் முன்கூட்டியே அறிவித்தது.—ஏசாயா 44:27–45:2.
14, 15. பாபிலோனைக் குறித்து ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனத்தின் சில விவரங்கள் எப்படி நிறைவேறின?
14 சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு—பொ.ச.மு. 539, அக்டோபர் 5/6 அன்று இரவு—பாபிலோனுக்கு அருகே ஒரு படை முகாமிட்டது. அதன் தளபதி யார்? பெர்சிய ராஜாவான கோரேசுதான். ஆக, வியக்க வைக்கும் ஒரு தீர்க்கதரிசனம் அப்போது நிறைவேறவிருந்தது. ஆனால் முன்கூட்டியே அறிவித்தபடி, போரில் ஈடுபடாமல் கோரேசுவின் படை பாபிலோனுக்குள் நுழைந்ததா?
15 அன்றிரவு பாபிலோனியர்கள் ஏதோவொரு திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். தங்களுடைய கோட்டையைச் சுற்றியிருந்த பிரமாண்டமான மதில்களைத் தாண்டி யார் உள்ளே வந்துவிடப் போகிறார்கள் என்ற நினைப்பில் தைரியமாக இருந்தார்கள். இதற்கிடையே, பாபிலோன் நகரத்திற்குள் ஓடிய நதியின் தண்ணீரை கோரேசு திறமையாக வேறு வழியில் திருப்பிவிட்டார். சீக்கிரத்தில் தண்ணீரின் ஆழம் குறைந்தது, அவருடைய ஆட்கள் நதிப்படுகையில் நடந்து சென்று பாபிலோனின் மதில்களை அடைந்தார்கள். ஆனால் இப்போது அந்த மதில்களைத் தாண்டி எப்படி உள்ளே செல்வது? என்ன காரணமோ தெரியவில்லை, அன்றிரவு பாபிலோனின் வாயிற்கதவுகள் பூட்டப்படாமல் அப்படியே திறந்து விடப்பட்டிருந்தன!
16. (அ) கடைசியில் பாபிலோனுக்கு என்ன சம்பவிக்கும் என்று ஏசாயா முன்னறிவித்தார்? (ஆ) பாபிலோன் அழிக்கப்படுமென ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது?
16 பாபிலோனைக் குறித்து பின்வருமாறும் முன்னறிவிக்கப்பட்டது: ‘இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறை தோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம் போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மேய்ப்பதுமில்லை.’ (ஏசாயா 13:20) ஆக, இந்தத் தீர்க்கதரிசனம் பாபிலோனின் வீழ்ச்சியை மட்டுமே முன்னறிவிக்கவில்லை, பாபிலோன் நிரந்தரமாக அழிக்கப்படும் என்பதையும் முன்னறிவித்தது. இந்த வார்த்தைகள் நிறைவேறியிருப்பதை நீங்களே கண்கூடாகப் பார்க்கலாம். ஈராக்கில் உள்ள பாக்தாத் நகருக்குத் தெற்கே சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் பூர்வ பாபிலோன் இருந்த இடம் இன்றும் வெறிச்சோடிக் கிடக்கிறது; “அதைச் சங்காரம் என்னும் துடைப்பத்தினால் பெருக்கிவிடுவேன்” என்று ஏசாயா மூலம் யெகோவா சொன்ன வார்த்தைகள் நிறைவேறியிருப்பதற்கு அந்த இடம் அத்தாட்சியாக இருக்கிறது.—ஏசாயா 14:22, 23.c
17. பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியிருப்பது எப்படி நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது?
17 பைபிள் நம்பகமான தீர்க்கதரிசனங்கள் அடங்கிய ஒரு புத்தகம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது அல்லவா? யெகோவா தேவன் கடந்த காலத்தில் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார் என்றால், எதிர்காலத்தில் பரதீஸ் பூமியைப் பற்றிய வாக்குறுதியையும் அவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என நாம் நிச்சயமாய் இருக்கலாம். (எண்ணாகமம் 23:19) ஆம், ‘பொய்யுரையாத தேவன் ஆதிகால முதல் நித்திய ஜீவனைக் குறித்து வாக்குத்தத்தம் பண்ணியுள்ளதால் [நாம்] நம்பிக்கையாக’ இருக்கலாம்.—தீத்து 1:3.d
‘தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளது’
18. ‘தேவனுடைய வார்த்தையைப்’ பற்றி அப்போஸ்தலன் பவுல் என்ன வலிமைமிக்க கூற்றைச் சொன்னார்?
18 இந்த அதிகாரத்தில் இதுவரை நாம் சிந்தித்த விஷயங்களை வைத்துப் பார்த்தால், பைபிள் உண்மையிலேயே நிகரற்ற ஒரு புத்தகம் என்பது தெளிவாகிறது. ஆனால், அதன் ஒத்திசைவு, அறிவியல் மற்றும் சரித்திரப்பூர்வ துல்லியம், நடைமுறைக்கேற்ற ஞானம், நம்பகமான தீர்க்கதரிசனம் ஆகியவற்றை வைத்து மட்டும் அதன் மதிப்பைக் கணக்கிட்டுவிட முடியாது, அதன் மதிப்பு அதற்கும் அப்பாற்பட்டது. கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.”—எபிரெயர் 4:12.
19, 20. (அ) உங்களை நீங்களே ஆராய்ந்து பார்க்க பைபிள் எப்படி உதவலாம்? (ஆ) கடவுள் தந்த நிகரற்ற பரிசான பைபிளுக்கு நீங்கள் எப்படி நன்றி காட்டலாம்?
19 பைபிளிலுள்ள கடவுளுடைய ‘வார்த்தைகளை,’ அதாவது விஷயங்களை வாசிப்பது நம் வாழ்க்கையையே மாற்றி விடலாம். முன்பு ஒருபோதும் செய்திராத வண்ணம் ஒரு புதிய கோணத்தில் நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க அது உதவலாம். ஒருவேளை நாம் கடவுளை நேசிப்பதாகச் சொல்லிக்கொண்டாலும், அவருடைய வார்த்தையாகிய பைபிள் கற்பிக்கிற விஷயங்களுக்கு நாம் பிரதிபலிக்கிற விதம் நம் மனதில் உள்ளதை வெளிப்படுத்திவிடும்; நம் இருதயத்தில் புதைந்துள்ள யோசனைகளையும்கூட, அதாவது உள்நோக்கங்களையும்கூட வெளிப்படுத்திவிடும்.
20 பைபிள் நிஜமாகவே கடவுள் தந்த புத்தகம்தான். அது நாம் வாசிக்க வேண்டிய, ஆழ்ந்து படிக்க வேண்டிய, உயிருக்கு உயிராய் நேசிக்க வேண்டிய ஒரு புத்தகம். அப்படியானால், பைபிளிலுள்ள விஷயங்களைத் தொடர்ந்து ஆழமாக ஆராய்வதன் மூலம் கடவுள் தந்த இந்தப் பரிசுக்கு நன்றி காட்டுங்கள். அவ்வாறு செய்யும்போது மனிதருக்கான கடவுளுடைய நோக்கத்தைக் குறித்து ஆழமாகப் புரிந்துகொள்வீர்கள். அந்த நோக்கம்தான் என்ன? அது எவ்வாறு நிறைவேறும்? அடுத்த அதிகாரம் அதைப் பற்றிச் சிந்திக்கும்.
a பைபிளின் குறிப்பிட்ட சில பகுதிகள் மற்ற பகுதிகளோடு முரண்படுவதாகச் சிலர் சொன்னாலும், அதற்கு எந்த ஆதாரமுமில்லை. யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் 7-ம் அதிகாரத்தைக் காண்க.
b உதாரணமாக, லூக்கா 3:23-38 வரையான வசனங்களில் இயேசுவின் வம்ச வரலாறு விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளதைக் கவனியுங்கள்.
c பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றிக் கூடுதலான தகவல்களுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டில் பக்கங்கள் 27-9-ஐக் காண்க.
d பைபிளிலுள்ள ஏராளமான தீர்க்கதரிசனங்கள் ஏற்கெனவே நிறைவேறியுள்ளன. அதற்கு ஓர் உதாரணம்தான் பாபிலோனுக்கு ஏற்பட்ட அழிவு. மற்ற உதாரணங்கள் தீரு, நினிவே ஆகிய பட்டணங்களின் அழிவு. (எசேக்கியேல் 26:1-5; செப்பனியா 2:13-15) அதோடு, பாபிலோனுக்குப் பின் அடுத்தடுத்து வரவிருந்த உலக வல்லரசுகளைப் பற்றி தானியேலின் தீர்க்கதரிசனம் முன்னறிவித்தது. மேதிய-பெர்சிய வல்லரசைப் பற்றியும் கிரேக்க வல்லரசைப் பற்றியும் அந்தத் தீர்க்கதரிசனம் அறிவித்தது. (தானியேல் 8:5-7, 20-22) இயேசு கிறிஸ்துவில் நிறைவேறிய மேசியானிய தீர்க்கதரிசனங்கள் பலவற்றைக் குறித்த விவரங்களுக்கு, பக்கங்கள் 199-201-ல் உள்ள பிற்சேர்க்கையைக் காண்க.