வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
எபிரெயர் 4:15, 16-ல் குறிப்பிடப்பட்டுள்ள கிறிஸ்து இயேசுவின் பிரதான ஆசாரியருக்குரிய சேவைகளின் நன்மைகள் இப்பொழுது எவ்வாறு “வேறே ஆடு”களுக்குப் பயன்படுகின்றன?
பிரதான ஆசாரியராக இயேசுவின் பங்கு, பரலோகத்தில் அவரோடுகூட இருப்பவர்களுக்கே அடிப்படை முக்கியத்துவமுடையதாக இருந்தாலும், பூமிக்குரிய நம்பிக்கைகளையுடைய கிறிஸ்தவர்கள் இப்பொழுதேகூட இயேசுவின் ஆசாரியருக்குரிய சேவைகளால் நன்மையடைகின்றனர்.
ஆதாம் முதற்கொண்டு, மனிதர்கள் பாவத்தைச் சுமந்துகொண்டிருக்கின்றனர். இஸ்ரவேலர்களைப் போலவே நாம் சுதந்தரிக்கப்பட்ட அபூரணத்திலிருந்து துன்பமனுபவிக்கிறோம். தங்களுடைய சொந்த பாவங்களுக்காகவும் மக்களின் பாவங்களுக்காகவும் பலிகளைச் செலுத்திய நீண்ட வரிசையில் வந்த பிரதான ஆசாரியர்கள் மற்றும் துணை ஆசாரியர்களின் உதவியை அவர்கள் நாடினர். காலம் வந்தபோது, இயேசு ஆசாரியராக “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி” அபிஷேகம் செய்யப்பட்டார். உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பு, தம்முடைய பரிபூரண மனித பலியின் மதிப்பை அளிப்பதற்காக இயேசு யெகோவாவுக்கு முன்பாகத் தோன்றினார்.—சங்கீதம் 110:1, 4.
இன்று இது நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? எபிரெயர்களுக்கு எழுதிய தன்னுடைய கடிதத்தில் பவுல், பிரதான ஆசாரியராக இயேசுவின் சேவையைப் பற்றி பேசினார். எபிரெயர் 5:1-ல் நாம் வாசிக்கிறோம்: “மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காகத் தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான்.” பின்னர் வசனங்கள் 5 மற்றும் 6-ல், இயேசு பிரதான ஆசாரியராக ஆனார் என்று பவுல் காண்பித்தார், இது நமக்கு நன்மைகளுக்கு வழிநடத்தக்கூடும்.
எவ்விதமாக? பவுல் எழுதினார்: “அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரண”ரானார். (எபிரெயர் 5:8, 9) இந்த வசனத்தைப் பார்த்தவுடனே, கடவுளுக்கும் இயேசுவுக்கும் பற்றுமாறாதிருப்பவர்களின் பாவமுள்ள நிலைமை நீங்கும்படியாகச் செய்யப்பட்டு அவர்கள் நித்திய ஜீவனைப் பெறுகையில், எவ்வாறு நாம் புதிய உலகில் நன்மையடையக்கூடியவர்களாக இருப்போம் என்பதை யோசிக்கச் செய்யலாம். இயேசுவின் மீட்கும் பலியினுடைய மதிப்பு மற்றும் பிரதான ஆசாரியராக அவருடைய சேவை ஆகியவற்றின் அடிப்படையில் அது ஒரு நியாயமான எதிர்பார்ப்பாக இருக்கிறது.
உண்மையில், இப்பொழுதே பிரதான ஆசாரியராக அவருடைய பங்கிலிருந்து அல்லது சேவையிலிருந்து நாம் பயனடைய முடியும். எபிரெயர் 4:15, 16-ஐ கவனியுங்கள்: “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் [“பேச்சு சுயாதீனத்தோடு,” NW] கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.” ‘ஏற்ற சமயம்’ எதுவாக இருக்கும்? நமக்கு இரக்கமும் தகுதியற்ற தயவும் தேவைப்படும்போது. நம்முடைய அபூரணத்தின் காரணமாக இப்பொழுது நாம் அனைவருமே இந்தத் தேவையை உணரவேண்டும்.
இப்பொழுது பரலோகத்தில் ஆசாரியராக இருக்கும் இயேசு ஒரு சமயம் மனிதராகவும் இருந்த காரணத்தால் அவர் ஒற்றுணர்வுடையவராக இருக்கக்கூடும் என்ற குறிப்பை எபிரெயர் 4:15, 16 தெளிவாக்குகிறது. யாரிடமாக? நம்மிடமாக. எப்போது? இப்போது. மனிதராக இருந்தபோது, மனிதர்களுக்குப் பொதுவாயுள்ள அழுத்தங்களை இயேசு அனுபவித்தார். ஒரு சமயம் இயேசு பசியாயும் தாகமாயுமிருந்தார். பரிபூரணராக இருந்தபோதிலும் அவர் களைப்படைந்தார். அது நமக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். ஏன்? ஏனென்றால் இயேசு இயல்பான களைப்பை அனுபவித்திருக்கும் காரணத்தால், நாம் அடிக்கடி எப்படி உணருகிறோம் என்பதை அறிந்தவராக இருக்கிறார். அப்போஸ்தலர்கள் மத்தியில் போட்டி பூசல்களை இயேசு சமாளிக்க வேண்டியதாக இருந்தது என்பதை நினைவுகூருங்கள். (மாற்கு 9:33-37; லூக்கா 22:24) ஆம், அவருக்கு ஏமாற்றங்கள் இருந்தன. நாம் ஏமாற்றமடைகையில் அல்லது ஊக்கம் இழக்கையில் அவர் நம்மை புரிந்துகொள்கிறார் என்ற நம்பிக்கையை அது நமக்குக் கொடுக்க வேண்டுமல்லவா? நிச்சயமாகவே.
நீங்கள் உற்சாகமிழந்துபோகையில், நீங்கள் என்ன செய்யலாம்? புதிய உலகத்தில் உங்கள் பிரதான ஆசாரியரான இயேசு, மனதிலும் உடலிலும் நீங்கள் பரிபூரணராவதற்கு உதவும்வரையாக நீங்கள் வெறுமனே காத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று பவுல் சொன்னாரா? இல்லை. பவுல் சொன்னார்: “நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும்.” ஏற்ற காலம் நிகழ் காலத்தையும் உட்படுத்துகிறது. மேலுமாக, இயேசு ஒரு மனிதராக இருந்தபோது, அவர் துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்து “எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்”டிருக்கிறார். ஆகவே நாம் இப்படிப்பட்ட காரியங்களை எதிர்ப்படுகையில், நாம் எதை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அவர் புரிந்துகொண்டிருப்பதன் அடிப்படையில் அவர் நமக்கு உதவிசெய்ய தயாராக இருக்கிறார். அது நம்மை அவரிடமாக கவர்ந்திழுக்கவில்லையா?
இப்பொழுது வசனம் 16-ஐ கவனியுங்கள். பவுல் சொல்கிறார், நாம்—இது அபிஷேகம் பெற்றவர்களையும் வேறே ஆடுகளையும் உட்படுத்துகிறது—கடவுளை பேச்சு சுயாதீனத்தோடு அணுகமுடியும். (யோவான் 10:16) ஜெபத்தில் நாம் விரும்பும் எதை வேண்டுமானாலும், கோபமான, மரியாதையில்லாத காரியங்களைக்கூட பேசலாம் என்பதை அப்போஸ்தலன் அர்த்தப்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, இயேசுவின் பலியின் அடிப்படையிலும், பிரதான ஆசாரியராக அவருடைய பங்கின் அடிப்படையிலும் நாம் பாவிகளாக இருந்தபோதிலும் கடவுளை அணுகமுடியும்.
நம்முடைய பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துவின் சேவைகளிலிருந்து இப்பொழுதே நாம் நன்மையடையக்கூடிய மற்றொரு வழி நம்முடைய பாவங்களை அல்லது தவறுகளை உட்படுத்துகிறது. தற்போதைய ஒழுங்கில் இயேசு அவருடைய பலியின் முழு மதிப்பை நமக்குப் பயன்படுத்துவார் என்பதாக நிச்சயமாகவே நாம் எதிர்பார்ப்பதில்லை. அவர் அதைச் செய்தாலும், நாம் அப்பொழுதும்கூட நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளமாட்டோம். லூக்கா 5:18-26-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள, கூரையின் திறப்பு வழியாய் படுக்கையோடு இறக்கிவிடப்பட்ட திமிர்வாதக்காரனை உட்படுத்தும் விஷயத்தை நினைவில் வையுங்கள். இயேசு அவனிடம் சொன்னார்: “மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது.” திமிர்வாதத்தை உண்டுபண்ணிய ஏதோ குறிப்பிட்ட பாவங்களை அது அர்த்தப்படுத்தவில்லை. அது பொதுவாக அந்த மனிதனின் பாவங்களையும், நோய்கள் உண்டாவதற்கு ஓரளவு காரணமாயிருக்கும் அவனுடைய சுதந்தரிக்கப்பட்ட அபூரணத்தையும் அர்த்தப்படுத்தியிருக்க வேண்டும்.
போக்காடாக விடப்பட்ட வெள்ளாடு பாவநிவிர்த்தி நாளில் இஸ்ரவேலருடைய பாவங்களைப் போக்கியது போலவே, தாம் அளிக்க இருந்த பலியின் அடிப்படையில் இயேசு மனிதரின் பாவங்களைப் போக்க முடியும். (லேவியராகமம் 16:7-10) என்றபோதிலும், திமிர்வாதக்காரன் இன்னும் ஒரு மனிதனாகவே இருந்தான். அவன் மறுபடியுமாக பாவம் செய்வான், பாவிகள் மரிக்க வேண்டியதாயிருக்கிறபடியே அவன் காலப் போக்கில் மரித்துவிடுவான். (ரோமர் 5:12; 6:23) இயேசு சொன்ன காரியம் அவன் உடனடியாக நித்திய ஜீவனைப் பெறுவான் என்பதை அர்த்தப்படுத்தவில்லை. ஆனால் அந்தச் சமயத்தில் ஓரளவு பாவ மன்னிப்பினால் அந்த மனுஷன் ஆசீர்வதிக்கப்பட்டான்.
இப்பொழுது நம்முடைய நிலைமையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அபூரணராய் இருப்பதால் நாம் தினமும் தவறுகளைச் செய்கிறோம். (யாக்கோபு 3:2) அதைக் குறித்து நாம் என்ன செய்யலாம்? ஆம், யெகோவாவை ஜெபத்தில் அணுகுவதற்கு நமக்கு பரலோகத்தில் இரக்கமுள்ள ஒரு பிரதான ஆசாரியர் இருக்கிறார், அவர் மூலமாக நாம் அணுகலாம். ஆம், பவுல் எழுதிய விதமாகவே, நாமனைவருமே “இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும் தைரியமாய்க் [கடவுளுடைய] கிருபாசனத்தண்டையிலே சேர”முடியும். இதன் விளைவாக, வேறே ஆடுகளைச் சேர்ந்த அனைவரும் இன்று கிறிஸ்துவின் பிரதான ஆசாரியருக்குரிய ஆசாரிய சேவைகளிலிருந்து தெளிவான மனச்சாட்சி உட்பட நிச்சயமாகவே அதிசயமான நன்மைகளைப் பெற்றுவருகின்றனர்.
பூமிக்குரிய நம்பிக்கையுடைய எல்லா கிறிஸ்தவர்களும் நெருங்கி வந்துகொண்டிருக்கும் புதிய உலகத்தில் இன்னும் மகத்தான நன்மைகளை எதிர்நோக்கியிருக்கலாம். அப்போது நம்முடைய பரலோக பிரதான ஆசாரியர் தம்முடைய பலியின் மதிப்பை முழுமையாக பயன்படுத்தி முழுமையான பாவமன்னிப்புக்கு வழிநடத்துவார். மக்களின் சரீரப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய நலனைக் கவனித்துக்கொள்வதன் மூலம் அதிகமான நன்மைகளையும் அவர் அருளிச்செய்வார். மேலும் பூமியில் கடவுளுடைய மக்களின் கல்வியை வெகுவாக இயேசு விஸ்தரிப்பார், ஏனென்றால் நியாயப்பிரமாணத்தைக் கற்பிப்பது இஸ்ரவேலில் ஆசாரியர்களின் ஒரு முக்கிய உத்தரவாதமாக இருந்தது. (லேவியராகமம் 10:8-11; உபாகமம் 24:8; 33:8, 10) ஆகவே, இப்பொழுது இயேசுவின் ஆசாரிய சேவைகளால் நாம் நன்மையடைந்துகொண்டிருக்கும் அதே சமயத்தில் இன்னும் அதிகமான நன்மைகள் நமக்குக் காத்துக்கொண்டிருக்கின்றன!