மாறிவரும் உலகின் ஆவியை எதிர்த்திடுங்கள்
“நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், . . . தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.”—1 கொரிந்தியர் 2:12.
1. ஏவாள் எவ்விதங்களில் வஞ்சிக்கப்பட்டாள்?
“சர்ப்பம் என்னை வஞ்சித்தது.” (ஆதியாகமம் 3:13) இவ்வாறு சொன்னவள் முதல் பெண்ணாகிய ஏவாள்; யெகோவா தேவனுக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்ததற்கான காரணத்தை அவள் இப்படித்தான் ஓரிரு வார்த்தைகளில் விளக்கினாள். அவள் சொன்னது உண்மையே, இருந்தாலும் அவள் செய்த பாவத்தை அது எவ்விதத்திலும் நியாயப்படுத்தாது. “[ஏவாள்] முழுமையாக வஞ்சிக்கப்பட்டாள்” என பிற்பாடு அப்போஸ்தலனாகிய பவுல் கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் எழுதினார். (1 தீமோத்தேயு 2:14, NW) கடவுளின் பேச்சை மீறி விலக்கப்பட்ட கனியை சாப்பிட்டால் தனக்கு நன்மை ஏற்படுமென்று, அதாவது தான் கடவுளைப் போல் ஆகிவிடலாமென்று நம்பும்படி அவள் வஞ்சிக்கப்பட்டாள். மேலும், தன்னை ஏமாற்றியது யார் என்று தெரியாதபடியும் அவள் வஞ்சிக்கப்பட்டாள். பாம்பைப் பயன்படுத்தி பேசியது உண்மையில் பிசாசாகிய சாத்தான் என்பதை அவள் அறியவே இல்லை.—ஆதியாகமம் 3:1-6.
2. (அ) இன்று எவ்வாறு சாத்தான் மக்களை வஞ்சிக்கிறான்? (ஆ) “உலகத்தின் ஆவி” என்பது என்ன, இப்போது என்ன கேள்விகளை சிந்திக்கப் போகிறோம்?
2 ஆதாம், ஏவாள் காலம் தொட்டே சாத்தான் மக்களை தொடர்ந்து வஞ்சித்து வந்திருக்கிறான். உண்மையில் அவன் ‘உலகமனைத்தையும் மோசம் போக்குகிறான்.’ (வெளிப்படுத்துதல் 12:9) அவனுடைய தந்திர புத்தி மாறவில்லை. இன்று அவன் பாம்பைப் பயன்படுத்துவதில்லை என்றாலும் தன் அடையாளம் தெரியாதபடி திரைமறைவில் பதுங்கியிருந்து செயல்படுகிறான். பொழுதுபோக்குத் துறை, மீடியா போன்றவற்றை சாத்தான் பயன்படுத்தி, கடவுளுடைய அன்பான வழிநடத்துதல் பயனளிப்பதுமில்லை தேவையுமில்லை என மக்களை தவறாக நம்ப வைக்கிறான். மக்களை வஞ்சிப்பதற்கு சாத்தான் தீவிரமாக முயன்று வந்திருப்பதன் விளைவாக, பைபிள் சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் எதிராக கலகம் செய்யும் ஆவியை, அதாவது மனப்பான்மையை அனைவரும் பெற்றிருக்கிறார்கள். இதை “உலகத்தின் ஆவி” என பைபிள் அழைக்கிறது. (1 கொரிந்தியர் 2:12) கடவுளை அறியாதவர்களின் நம்பிக்கைகள், மனப்பான்மைகள், நடத்தை ஆகியவற்றின் மீது இந்த ஆவி பலமான செல்வாக்கு செலுத்துகிறது. இது எவ்வாறு வெளிக்காட்டப்படுகிறது? இதன் மோசமான செல்வாக்கை நாம் எவ்வாறு எதிர்க்கலாம்? இவற்றிற்கான பதில்களை நாம் இப்போது பார்க்கலாம்.
தார்மீக மதிப்பீடுகள் சீரழிகின்றன
3. நவீன காலங்களில் “இந்த உலகத்தின் ஆவி” மேன்மேலும் மேலோங்கியிருப்பது ஏன்?
3 நவீன காலங்களில், ‘இந்த உலகத்தின் ஆவியே’ மேலோங்கியிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) தார்மீக மதிப்பீடுகள் சீரழிந்து வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்கான காரணத்தை பைபிள் விளக்குகிறது. 1914-ல் கடவுளுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டவுடன் பரலோகத்தில் போர் மூண்டது. சாத்தானும் அவனுடைய தூதர்களும் தோல்வியடைந்து, இந்த பூமியின் சுற்றுப்புறத்திற்கு தள்ளப்பட்டார்கள். இதனால் மிகுந்த கோபங்கொண்ட சாத்தான், உலகை மோசம்போக்கும் தன் முயற்சியில் இன்னும் தீவிரமாக செயல்படத் துணிந்தான். (வெளிப்படுத்துதல் 12:1-9, 12, 17) “கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்க” அவன் எல்லா விதங்களிலும் முயன்று பார்க்கிறான். (மத்தேயு 24:24) கடவுளுடைய மக்களாகிய நாமே அவனுடைய முக்கிய குறியிலக்கு. நம் ஆன்மீகத்தை அழிக்க அவன் முயலுகிறான்; ஏனென்றால் யெகோவாவின் தயவையும் நித்திய ஜீவனைப் பெறும் எதிர்பார்ப்பையும் நாம் இழக்க வேண்டுமென விரும்புகிறான்.
4. யெகோவாவின் ஊழியர்கள் பைபிளை எவ்வாறு கருதுகிறார்கள், ஆனால் உலகம் அதை எவ்வாறு கருதுகிறது?
4 பைபிளின் மதிப்பை சாத்தான் கெடுக்கப் பார்க்கிறான்; ஆனால் நம் அன்பான படைப்பாளரைப் பற்றி நமக்கு கற்பிக்கும் மதிப்புமிக்க புத்தகமே பைபிள். யெகோவாவின் ஊழியர்களாகிய நாம் பைபிளை நேசிக்கிறோம், பொக்கிஷமாகவும் கருதுகிறோம். அது மனுஷர் வசனமல்ல, தேவ வசனம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (1 தெசலோனிக்கேயர் 2:13; 2 தீமோத்தேயு 3:16) இருந்தாலும் அதற்கு முரணாக நாம் நினைக்க வேண்டுமென சாத்தானின் உலகம் விரும்புகிறது. உதாரணத்திற்கு பைபிளை கடுமையாக விமர்சிக்கும் ஒரு புத்தகம் அதன் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறது: “பைபிளில் ‘பரிசுத்தமான’ எதுவுமே இல்லை, அது ‘தேவ வசனமும்’ அல்ல. அது கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட புனிதர்களால் எழுதப்படவில்லை, ஆனால் பதவி வெறிபிடித்து அலைந்த ஆசாரியர்களால் எழுதப்பட்டது.” இப்படிப்பட்ட கூற்றுகளை நம்புகிறவர்கள், தங்களுடைய விருப்பப்படி கடவுளை வணங்கலாம் அல்லது கடவுளை வணங்காமலேயேகூட இருக்கலாம் என்ற தவறான கருத்தை எளிதில் ஏற்றுக்கொள்ளலாம்.—நீதிமொழிகள் 14:12.
5. (அ) பைபிளை அடிப்படையாகக் கொண்ட மதங்களைப் பற்றி ஒரு ஆசிரியர் என்ன சொல்கிறார்? (ஆ) சில உலகப்பிரகாரமான கருத்துக்கள் எவ்வாறு பைபிள் கருத்துக்களோடு முரண்படுகின்றன? (அடுத்த பக்கத்தில் உள்ள பெட்டியைக் காண்க.)
5 பைபிள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கப்பட்டிருப்பதாலும், அதை ஆதரிப்பதாக சொல்பவர்களின் மத மாய்மாலத்தாலும் அதிகமதிகமானோர் பைபிளை அடிப்படையாகக் கொண்ட மதங்களையும் மற்ற மதங்களையும்கூட வெறுத்து வருகிறார்கள். செய்தித் துறையிலும் மெத்தப் படித்த மேதாவிகள் வட்டத்திலும் மதம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஒரு எழுத்தாளர் இவ்வாறு சொல்கிறார்: “யூத மதமும் கிறிஸ்தவ மதமும் இன்றைய சமுதாயத்தினரிடம் நல்ல பெயரை எடுக்கவில்லை. அவை பழம்பாணியான அமைப்புகள் என்ற கருத்து முதல், அறிவுப்பூர்வ வளர்ச்சிக்கும் அறிவியல் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையான பண்டைய அமைப்புகள் என்ற கருத்து வரை பலதரப்பட்ட எதிர்மறையான கருத்துக்கள் நிலவுகின்றன. சமீப வருடங்களில் மதத்தின் பேரிலான வெறுப்பு, பரிகாசமாகவும் வெளிப்படையான எதிர்ப்பாகவும் பூதாகாரமாக உருவெடுத்திருக்கிறது.” கடவுள் இல்லை என்று சொல்லி, ‘தங்கள் சிந்தனைகளினாலே வீணராகியிருக்கும்’ நபர்களிடமிருந்தே முக்கியமாக இப்படிப்பட்ட எதிர்ப்பு ஆரம்பிக்கிறது.—ரோமர் 1:20-22.
6. கடவுளால் கண்டனம் செய்யப்படும் பாலியல் பழக்கங்களை உலகம் எவ்வாறு கருதுகிறது?
6 ஆகவே, நடத்தை சம்பந்தமான கடவுளுடைய தராதரங்களிலிருந்து மக்கள் மேன்மேலும் விலகிப்போவதில் ஆச்சரியமே இல்லை. உதாரணத்திற்கு, ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியை “அவலட்சணமான” ஒன்றாக பைபிள் விவரிக்கிறது. (ரோமர் 1:26, 27) வேசித்தனத்திலும் விபச்சாரத்திலும் ஈடுபடுபவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை என்றும் அது குறிப்பிடுகிறது. (1 கொரிந்தியர் 6:9) இருந்தாலும் அநேக நாடுகளில் அப்படிப்பட்ட பாலியல் பழக்கங்கள் அங்கீகரிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் பாடல்களிலும் சினிமாக்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் ‘க்ளாமராக’ காட்டப்படுகின்றன. அவற்றை கண்டனம் செய்பவர்கள் குறுகிய மனப்பான்மையுள்ளவர்களாக, குறைகாண்பவர்களாக, முற்போக்கு சிந்தனையற்றவர்களாக கருதப்படுகிறார்கள். கடவுளுடைய தராதரங்கள் அவருடைய அன்புக்கும் கரிசனைக்குமான வெளிக்காட்டுகள் என அவர்கள் நினைப்பதில்லை; மாறாக, சுதந்திரமாக செயல்பட்டு திருப்தியோடு வாழ்வதற்கு அவை முட்டுக்கட்டைகளாக இருப்பதாகவே கருதுகின்றனர்.—நீதிமொழிகள் 17:15; யூதா 4.
7. நம்மை நாமே என்ன கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டும்?
7 கடவுளுக்கு எதிராக செயல்படுவதில் நாளுக்கு நாள் சீர்கெட்டு வரும் ஓர் உலகில் நம் மனப்பான்மையையும் மதிப்பீடுகளையும் சோதித்துப் பார்ப்பது ஞானமானது. யெகோவாவின் சிந்தனையிலிருந்தும் தராதரங்களிலிருந்தும் நாம் படிப்படியாக வழிவிலகிச் செல்கிறோமா என அவ்வப்போது நம்மை நாமே பரிசோதித்துப் பார்க்க வேண்டும்; இதைப் பற்றி மனதாரவும் நேர்மையாகவும் ஜெபம் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு இவ்வாறு நம்மை கேட்டுக்கொள்ளலாம்: ‘சில வருடங்களுக்கு முன்பு நான் வெறுத்த விஷயங்களில் இப்போது ஆர்வம் காட்டுகிறேனா? கடவுள் கண்டனம் செய்யும் பழக்கங்களை முன்புபோல் கருத்தாக எடுத்துக்கொள்ளாமல் லேசாக எடுத்துக்கொள்கிறேனா? ஆவிக்குரிய விஷயங்களை முன்பு போல முக்கியமானதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறேனா? ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் தருகிறேன் என்பதை என் வாழ்க்கை காட்டுகிறதா?’ (மத்தேயு 6:33) இப்படியெல்லாம் சிந்தித்துப் பார்ப்பது உலகின் ஆவியை எதிர்க்க நமக்கு உதவும்.
‘விட்டுவிலகாதிருங்கள்’
8. ஒருவர் எவ்வாறு யெகோவாவை விட்டு வழிவிலகிப் போகலாம்?
8 உடன் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: “நாம் கேட்டவைகளை விட்டுவிலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும்.” (எபிரெயர் 2:1) வழிவிலகிப்போகும் கப்பல் சேர வேண்டிய இடத்திற்கு போய்ச் சேராது. காற்றையும் நீரோட்டத்தையும் கேப்டன் கவனிக்காவிட்டால் கப்பல் பாதுகாப்பான துறைமுகத்திலிருந்து சுலபமாக வழிவிலகிப் போய் பாறைமீது மோதலாம். அதேபோல் கடவுளுடைய வார்த்தையில் உள்ள அருமையான சத்தியங்களுக்கு நாம் கவனம் செலுத்தாவிட்டால் யெகோவாவிடமிருந்து சுலபமாக வழிவிலகிப் போய் ஆவிக்குரிய கப்பற்சேதத்தை அனுபவிப்போம். சத்தியத்தை ஒரேயடியாக விட்டுவிட்டால்தான் இப்படிப்பட்ட நிலை ஏற்படும் என்று சொல்ல முடியாது. திடீரென்றும் வேண்டுமென்றேயும் யெகோவாவை விட்டு விலகுபவர்கள் உண்மையில் சிலர் மட்டும்தான். பெரும்பாலானவர்கள், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தங்கள் கவனத்தைத் திருப்பும் ஏதோவொன்றில் மெதுமெதுவாக மூழ்கிவிடுகிறார்கள். கிட்டத்தட்ட அறியாமலேயே வழிவிலகி பாவத்தை நோக்கி சென்றுவிடுகிறார்கள். தூங்கிவிடும் கேப்டனைப் போல், அப்படிப்பட்ட நபர்கள் காலம் கடந்த பின்னரே கண் விழிக்கிறார்கள்.
9. யெகோவா எவ்விதங்களில் சாலொமோனை ஆசீர்வதித்தார்?
9 சாலொமோனின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். இஸ்ரவேலின் ராஜாவாக அவரை யெகோவா நியமித்தார். ஆலயத்தைக் கட்டவும் பைபிளின் சில பகுதிகளை எழுதவும்கூட அவரை அனுமதித்தார். இரு சந்தர்ப்பங்களில் அவருடன் யெகோவா பேசினார்; செல்வம், புகழ், சமாதான ஆட்சி ஆகிய அனைத்தையும் தந்தருளினார். எல்லாவற்றையும்விட, மிகுந்த ஞானத்தைக் கொடுத்து அவரை ஆசீர்வதித்தார். பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.” (1 இராஜாக்கள் 4:21, 29, 30; 11:9) ‘யார் கடவுளுக்கு உண்மையுள்ளவராக நிலைத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்?’ என அன்று ஒருவரிடம் கேட்டிருந்தால் கட்டாயம் சாலொமோனின் பெயரைத்தான் குறிப்பிட்டிருப்பார். ஆனாலும் சாலொமோன் விசுவாச துரோகியானார். அது எப்படி நடந்தது?
10. சாலொமோன் எந்த அறிவுரையை மீறினார், அதன் விளைவு என்ன?
10 சாலொமோன் கடவுளுடைய சட்டதிட்டங்களை முழுமையாக அறிந்திருந்தார், நன்கு புரிந்திருந்தார். இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவுரைகளில் அவர் விசேஷ ஆர்வம் காட்டியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அந்த அறிவுரைகளில் ஒன்று இவ்வாறு குறிப்பிட்டது: “[ராஜாவின்] இதயம் ஆண்டவரைவிட்டு விலகாதிருக்க வேண்டுமானால், பல மனைவியரைக் கொள்ளலாகாது.” (உபாகமம் 17:14, 17, பொது மொழிபெயர்ப்பு) அவ்வளவு தெளிவாக அறிவுரை கொடுக்கப்பட்டும், சாலொமோன் 700 மனைவிகளையும் 300 வைப்பாட்டிகளையும் வைத்திருந்தார். இவர்களில் அநேகர் அந்நிய தேவர்களை வணங்கி வந்தார்கள். சாலொமோன் ஏன் இத்தனை அநேக மனைவிகளை வைத்துக்கொண்டார் என்று நமக்குத் தெரியாது, அதை எப்படி நியாயப்படுத்தினார் என்றும் நமக்குத் தெரியாது. ஆனால் அவர் கடவுளுடைய தெளிவான கட்டளையை மீறினார் என்று மட்டும் நமக்கு நன்றாக தெரியும். அவரது நடத்தையின் விளைவு? யெகோவா எச்சரித்தபடியே நடந்தது. “[சாலொமோனின்] மனைவிகள் [“மெதுமெதுவாக,” NW] அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்.” (1 இராஜாக்கள் 11:3, 4) சாலொமோனுக்கு இருந்த தெய்வீக ஞானம்—“மெதுமெதுவாக,” ஆனாலும் நிச்சயமாக—மழுங்கிப்போனதில் சந்தேகமில்லை. அவர் வழிவிலகிப் போனார். காலப்போக்கில், கடவுளுக்கு கீழ்ப்படிந்து அவரை பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆவலுக்குப் பதிலாக தன் புறதேச மனைவிகளை பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆவல் சாலொமோனின் மனதை ஆக்கிரமித்தது. அந்தோ பரிதாபம்! “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து” என்ற வார்த்தைகளை எழுதியவருக்கே இந்நிலை!—நீதிமொழிகள் 27:11.
உலகின் ஆவி வலிமைமிக்கது
11. நம் மனதிற்குள் செல்லும் விஷயங்கள் எவ்வாறு நம் சிந்தையை பாதிக்கின்றன?
11 சாலொமோனின் உதாரணத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்? நாம் சத்தியத்தை அறிந்திருக்கிறோம் என்பதற்காக உலக செல்வாக்குகள் நம் சிந்தையை பாதிக்காதென நினைப்பது ஆபத்தானது என்பதை கற்றுக்கொள்கிறோம். நம் வயிற்றுக்குள் செல்லும் உணவு நம் உடலை பாதிப்பது போலவே நம் மனதிற்குள் செல்லும் விஷயங்களும் நம் மனதை பாதிக்கின்றன. இந்த விஷயங்கள் நம் சிந்தையையும் மனப்பான்மையையும் செதுக்குகின்றன. இந்த உண்மையை அறிந்திருப்பதால்தான் பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை விளம்பரம் செய்ய வருடாவருடம் கோடிக்கணக்கான டாலர் பணத்தை செலவழிக்கின்றன. வெற்றிகரமான விளம்பரங்கள், வாடிக்கையாளர்களின் ஏக்கங்களுக்கும் ஆசைகளுக்கும் தீனி போடும் விதத்தில் கவர்ச்சியான வார்த்தைகளையும் படங்களையும் சாமர்த்தியமாக பயன்படுத்துகின்றன. விளம்பரத்தை ஓரிரு முறை பார்த்தவுடனேயே மக்கள் ஓடிப்போய் தங்கள் பொருட்களை வாங்கிவிட மாட்டார்கள் என்பதையும் விளம்பரதாரர்கள் அறிந்திருக்கிறார்கள். விளம்பரங்களை மறுபடியும் மறுபடியுமாக பல முறை பார்த்த பிறகே வாடிக்கையாளர்கள் விற்பனைப் பொருட்களிடம் பெரும்பாலும் கவரப்படுகிறார்கள். விளம்பரம் உண்மையில் பலனளிக்கிறது; இல்லையேல் ஒருவரும் அதில் முதலீடு செய்ய மாட்டார்களே. ஆக, விளம்பரம் பொது மக்களின் சிந்தையையும் மனப்பான்மையையும் பெருமளவு பாதிப்பதில் சந்தேகமில்லை.
12. (அ) மக்களின் சிந்தை மீது சாத்தான் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறான்? (ஆ) கிறிஸ்தவர்கள் மீது சாத்தான் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை எது காட்டுகிறது?
12 சாத்தான் ஒரு விளம்பரதாரர் போல தன் கருத்துக்களை கவர்ச்சியான விதத்தில் முன்னேற்றுவிக்கிறான்; காலப்போக்கில் மக்கள் தன் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என அவன் அறிந்திருக்கிறான். சாத்தான் பொழுதுபோக்குத் துறை மூலமாகவும் மற்ற விதங்களிலும் தீமையை நன்மையென்றும் நன்மையைத் தீமையென்றும் மக்களை நம்பும்படி செய்து அவர்களை வஞ்சிக்கிறான். (ஏசாயா 5:20) சாத்தானின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு உண்மை கிறிஸ்தவர்களும்கூட பலியாகியிருக்கிறார்கள். பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டுவிலகிப் போவார்கள்.”—1 தீமோத்தேயு 4:1, 2; எரேமியா 6:15.
13. கெட்ட கூட்டுறவுகள் என்பது என்ன, நம் கூட்டுறவுகள் நம்மை எவ்வாறு பாதிக்கும்?
13 இந்த உலகத்தின் ஆவி நம் யாரையுமே விட்டுவைப்பதில்லை. இவ்வுலகின் செல்வாக்குகளும் சூட்சுமமான சக்திகளும் வலிமைமிக்கவை. ஆகவேதான் இந்த ஞானமான அறிவுரையை பைபிள் தருகிறது: “மோசம்போகாதிருங்கள். கெட்ட கூட்டுறவுகள் நல்ல பழக்கங்களைக் கெடுக்கும்.” (1 கொரிந்தியர் 15:33, NW) இங்கே கெட்ட கூட்டுறவுகள் என குறிப்பிடப்பட்டிருப்பது இந்த உலகத்தின் ஆவியை வெளிக்காட்டும் எதையும், யாரையும் குறிக்கலாம்; அவர்கள் சபையில் உள்ளவர்களாகவும் இருக்கலாம். கெட்ட கூட்டுறவுகளால் நமக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்று நினைத்தால், நல்ல கூட்டுறவுகளால் நமக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்றும்தானே நினைக்க வேண்டியிருக்கும்? அது எப்பேர்ப்பட்ட தவறான கருத்து! பைபிள் இவ்வாறு தெளிவாக விளக்குகிறது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.”—நீதிமொழிகள் 13:20.
14. இவ்வுலக ஆவியை நாம் எவ்விதங்களில் எதிர்த்திடலாம்?
14 இவ்வுலக ஆவியை எதிர்த்திட, யெகோவாவை சேவிக்கும் ஞானமுள்ள நபர்களோடு நாம் கூட்டுறவு கொள்ள வேண்டும். நம் விசுவாசத்தை பலப்படுத்தும் விஷயங்களால் நம் மனதை நிரப்ப வேண்டும். “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (பிலிப்பியர் 4:8) தெரிவு செய்யும் சுதந்திரம் பெற்றவர்களாக, சிந்திப்பதற்குரிய விஷயங்களை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும். ஆக, யெகோவாவிடம் நம்மை நெருங்கிவரச் செய்யும் விஷயங்களையே நாம் எப்போதும் தேர்ந்தெடுத்து சிந்திப்போமாக.
கடவுளுடைய ஆவி அதிக வலிமைமிக்கது
15. பூர்வ கொரிந்து பட்டணத்திலிருந்த கிறிஸ்தவர்கள் எவ்வாறு அங்கிருந்த மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவர்களாக இருந்தார்கள்?
15 இவ்வுலகின் ஆவியால் தவறாக வழிநடத்தப்படுபவர்களைப் போல் அல்லாமல் உண்மை கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பரிசுத்த ஆவியால் சரியாக வழிநடத்தப்படுகிறார்கள். கொரிந்துவில் இருந்த சபைக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.” (1 கொரிந்தியர் 2:12) பூர்வ கொரிந்து பட்டணம் உலக ஆவியால் முழுமையாக சூழப்பட்டிருந்தது. அதன் பட்டணத்தாரில் பெரும்பான்மையர் மிகவும் ஒழுக்கங்கெட்டவர்களாக இருந்தனர். அவர்களது மனதை சாத்தான் குருடாக்கியிருந்தான். அதன் விளைவாக அவர்கள் உண்மையான கடவுளைப் பற்றி அதிகம் புரிந்துகொள்ளவில்லை அல்லது ஒன்றுமே புரிந்துகொள்ளவில்லை. (2 கொரிந்தியர் 4:4) இருந்தாலும் யெகோவா தமது பரிசுத்த ஆவியைக் கொண்டு சில கொரிந்தியர்களின் கண்களைத் திறந்தார்; இதனால் அவர்கள் சத்தியத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் செய்ய அவரது ஆவி அவர்களை தூண்டி வழிநடத்தியது; இவ்வாறு அவரது அங்கீகாரத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற உதவியது. (1 கொரிந்தியர் 6:9-11) உலக ஆவி வலிமைமிக்கதாக இருந்தபோதிலும் யெகோவாவின் ஆவி அதைக் காட்டிலும் அதிக வலிமைமிக்கதாக இருந்தது.
16. நாம் எவ்வாறு பரிசுத்த ஆவியைப் பெற்று காத்துக்கொள்ள முடியும்?
16 இன்றும் அதுவே உண்மையாக இருக்கிறது. யெகோவாவின் பரிசுத்த ஆவிதான் இந்த பிரபஞ்சத்திலேயே மிகுந்த வலிமைமிக்க சக்தியாகும்; விசுவாசத்தோடு கேட்கிற அனைவருக்கும் அவர் அந்த ஆவியை தாராளமாக அள்ளி வழங்குகிறார். (லூக்கா 11:13) இருந்தாலும் கடவுளுடைய ஆவியை பெறுவதற்கு உலக ஆவியை எதிர்த்தால் மட்டும் போதாது. நாம் கடவுளுடைய வார்த்தையை தவறாமல் வாசித்து அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்; அப்போதுதான் நம் ஆவி, அதாவது நம் மனச்சாய்வு அவருடைய சிந்தையோடு இசைந்திருக்கும். அப்படி செய்வோமானால் நம் ஆவிக்குரிய தன்மையை அழிக்க சாத்தான் பயன்படுத்தும் எவ்வித தந்திரத்தையும் எதிர்த்திட யெகோவா நம்மை பலப்படுத்துவார்.
17. லோத்துவின் அனுபவம் நமக்கு எவ்விதங்களில் ஆறுதலளிக்கலாம்?
17 கிறிஸ்தவர்கள் இவ்வுலகின் பாகமாக இல்லாவிட்டாலும் இவ்வுலகத்தில்தான் வாழ்கிறார்கள். (யோவான் 17:11, 16) நாம் யாருமே இவ்வுலக ஆவியை முழுமையாக தவிர்க்க முடியாது; ஏனென்றால் கடவுளையும் அவரது வழிகளையும் கொஞ்சம்கூட நேசிக்காதவர்களோடு நாம் வசிக்கலாம் அல்லது வேலை செய்யலாம். தன்னை சூழ்ந்திருந்த சோதோம் மக்களின் அக்கிரம செயல்களைக் கண்டு “மிகுந்த வேதனைப்பட்ட,” சொல்லப்போனால் இருதயம் வாதிக்கப்பட்ட லோத்துவைப் போல் நாமும் உணருகிறோமா? (2 பேதுரு 2:7, 8) அப்படியென்றால் நாம் ஆறுதலடையலாம். ஏனெனில் லோத்துவை காப்பாற்றியது போல் நம்மையும் யெகோவா காப்பாற்றுவார். நம் அன்பான தகப்பன் நம் சூழ்நிலைகளைப் பார்க்கிறார், புரிந்துகொள்கிறார்; ஆகவே நம் ஆவிக்குரிய தன்மையைக் காத்துக்கொள்ளத் தேவையான உதவியையும் பலத்தையும் அவரால் நமக்குக் கொடுக்க முடியும். (சங்கீதம் 33:18, 19) நாம் அவரை சார்ந்திருந்து, அவர் மீது நம்பிக்கை வைத்து, அவரை நோக்கி கூப்பிடுவோமானால், எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலையிலும் இவ்வுலக ஆவியை எதிர்த்திட அவர் நமக்கு உதவுவார்.—ஏசாயா 41:10.
18. யெகோவாவுடன் உள்ள நம் உறவை ஏன் பொக்கிஷமாக கருத வேண்டும்?
18 கடவுளிடமிருந்து பிரிந்து, சாத்தானால் வஞ்சிக்கப்பட்டிருக்கும் ஓர் உலகில், யெகோவாவின் மக்களாகிய நாம் சத்தியத்தின் அறிவைப் பெற்று ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு, உலகம் பெற்றிராத சந்தோஷத்தையும் சமாதானத்தையும் நாம் அனுபவிக்கிறோம். (ஏசாயா 57:20, 21; கலாத்தியர் 5:22) பரதீஸில் நித்திய ஜீவனைப் பெறும் அருமையான நம்பிக்கையை நாம் நெஞ்சார போற்றுகிறோம்; அழிவை நோக்கி இப்போது சென்றுகொண்டிருக்கும் இவ்வுலகத்தின் ஆவி அந்தப் பரதீஸில் இருக்காது. ஆகவே கடவுளுடன் உள்ள நம் மதிப்புமிக்க உறவை பொக்கிஷமாக கருதுவோமாக; ஆவிக்குரிய விதத்தில் வழிவிலகச் செய்யும் எவ்வித மனப்போக்கையும் சரிசெய்ய ஊக்கமாக முயலுவோமாக. யெகோவாவிடம் மேன்மேலும் நெருங்கிச் செல்வோமாக. அப்போது இவ்வுலக ஆவியை எதிர்த்திட அவர் நமக்கு உதவுவார்.—யாக்கோபு 4:7, 8.
உங்களால் விளக்க முடியுமா?
• சாத்தான் எவ்விதங்களில் மக்களை வஞ்சித்து தவறாக வழிநடத்தியிருக்கிறான்?
• யெகோவாவிடமிருந்து வழிவிலகிப் போவதை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
• இவ்வுலக ஆவி வலிமைமிக்கது என்பதை எது காட்டுகிறது?
• கடவுள் தரும் ஆவியை நாம் எவ்வாறு பெற்று காத்துக்கொள்ளலாம்?
[பக்கம் 11-ன் அட்டவணை]
உலக ஞானம் Vs தெய்வீக ஞானம்
சத்தியம் மாறுதலுக்குட்பட்டது—மக்களே தங்களுக்கென்று சத்தியத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
“[கடவுளுடைய] வசனமே சத்தியம்.”—யோவான் 17:17.
சரி எது தவறு எது என்பதை தீர்மானிப்பதற்கு உங்கள் உணர்ச்சிகளையே நம்புங்கள். “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது.”—எரேமியா 17:9.
உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்.
“தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.”—எரேமியா 10:23.
செல்வம்தான் சந்தோஷத்திற்கு வழி.
“பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.”—1 தீமோத்தேயு 6:10.
[பக்கம் 10-ன் படம்]
சாலொமோன் உண்மை வணக்கத்திலிருந்து வழிவிலகி பொய்க் கடவுட்களிடம் சென்றார்
[பக்கம் 12-ன் படம்]
ஒரு விளம்பரதாரர் போல் இவ்வுலக ஆவியை சாத்தான் முன்னேற்றுவிக்கிறான். நீங்கள் அதை எதிர்க்கிறீர்களா?