அதிக வேலையாய் இருப்பது—செத்த கிரியைகளிலா அல்லது யெகோவாவின் சேவையிலா?
“மன்னிக்கவும், நான் அதிக வேலையாயிருக்கிறேன்.” ராஜ்யத்தின் நற்செய்தியை வெளிப்படையாக பிரசங்கிக்கையில் யெகோவாவின் சாட்சிகள் எதிர்ப்படும் எதிர்ப்புகளில் இது ஒன்றாகும். (மத்தேயு 24:14) சில சமயங்களில் “நான் அதிக வேலையாயிருக்கிறேன்,” என்று சொல்வது வெறும் வசதியான சாக்குப்போக்காக இருந்தபோதிலும், அநேக ஜனங்கள் அதிக வேலையாயிருக்கின்றனர் என்பது உண்மை. அவர்கள் உண்மையிலேயே வாழ்க்கை நடத்துவதில் வரும் அழுத்தங்கள், செலவுகளைச் சமாளிப்பது, வேலைக்குச் செல்வதும் திரும்பி வருவதும், பிள்ளைகளை வளர்ப்பது, வீடு, கார், மற்ற உடைமைகள் ஆகியவற்றை கவனித்துக்கொள்வது போன்ற “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கவலையினால்,” விழுங்கப்பட்டிருக்கின்றனர்.—மத்தேயு 13:22, NW.
ஜனங்கள் உண்மையிலேயே அதிக வேலையுள்ளவர்களாக இருந்தபோதிலும், உண்மையிலேயே பலன்தரும் வேலைகளில் வெகு சிலரே ஈடுபட்டிருக்கின்றனர். இது ஞானியாகிய சாலொமோன் ஒரு சமயம் எழுதினவிதமாகவே இருக்கிறது: “மனுஷன் சூரியனுக்குக் கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன? அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவன் வேலைகள் வருத்தமுள்ளது; இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை; இதுவும் மாயையே.”—பிரசங்கி 2:22, 23.
இப்படிப்பட்ட பயனற்ற வேலைகளைச் “செத்த கிரியைகள்” என்றும்கூட பைபிள் அழைக்கிறது. (எபிரெயர் 9:14) அப்படிப்பட்ட வேலைகள் உங்களுடைய வாழ்க்கையில் மேலோங்கியிருக்கின்றனவா? கடவுள் “அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறதினால்,” ஒரு கிறிஸ்தவனாக இது உங்களுக்குப் பெரும் அக்கறைக்குரிய ஒன்றாக இருக்க வேண்டும். (சங்கீதம் 62:12) “இனிவரும் காலம் குறுகினதானபடியால்,” செத்த கிரியைகளில் நேரத்தை வீணாக்காமலிருக்க நாம் விசேஷமாக கவனமாயிருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 7:29) ஆனால் செத்த கிரியைகள் என்றால் என்ன? நாம் அவைகளை எவ்வாறு நோக்க வேண்டும்? மெய்யான மதிப்புள்ள கிரியைகளில் நாம் சுறுசுறுப்பாயிருக்கிறோம் என்று நாம் எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்?
செத்த கிரியைகளை அடையாளம் கண்டுபிடித்தல்
எபிரெயர் 6:1, 2-ல் பவுல் எழுதினார்: “ஆகையால், கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன் பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக.” “மூல உபதேச வசனங்கள்,” “செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதலை,” உட்படுத்தியது என்பதை கவனியுங்கள். கிறிஸ்தவர்களாக பவுலின் வாசகர்கள் ஏற்கெனவே அப்படிப்பட்ட செத்த கிரியைகளிலிருந்து மனந்திரும்பியிருந்தனர். எவ்வாறு?
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, முதல் நூற்றாண்டிலிருந்த சிலர் செத்த “மாம்சத்தின் கிரியைகளான” “விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம்,” மேலும் மற்ற இழிவான செயல்களில் ஈடுபட்டிருந்தனர். (கலாத்தியர் 5:19-21) தடுக்கப்படாமலிருந்தால், அப்படிப்பட்ட கிரியைகள் அவர்களுடைய ஆவிக்குரிய மரணத்துக்கு வழிநடத்தியிருக்கும். ஆனால் அந்தக் கிறிஸ்தவர்கள் அழிவுக்கு வழிநடத்திய பாதையிலிருந்து மனந்திரும்பி “கழுவப்பட்டிருந்தனர்.” இவ்வாறு அவர்கள் யெகோவாவோடு ஒரு சுத்தமான நிலைநிற்கையை அனுபவித்தனர்.—1 கொரிந்தியர் 6:9-11.
பொல்லாத அல்லது ஒழுக்கங்கெட்ட கிரியைகளிலிருந்து எல்லா கிறிஸ்தவர்களுமே மனந்திரும்பவேண்டிய தேவை இருக்கவில்லை. பவுலின் கடிதம் முக்கியமாக யூத விசுவாசிகளுக்கு எழுதப்பட்டிருந்தது. அவர்களில் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தை கண்டிப்பாக கடைப்பிடித்திருந்தனர் என்பதில் சந்தேகமில்லை. அப்படியென்றால் அவர்கள் எந்தச் செத்த கிரியைகளிலிருந்து மனந்திரும்பியிருந்தனர்? நியாயப்பிரமாண சட்டத்தின் சடங்குகளையும், உணவு விதிமுறைகளையும் அவர்கள் பின்பற்றியதில் நிச்சயமாகவே எந்தத் தவறும் இல்லை. நியாயப்பிரமாண சட்டங்கள் “பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும்” இருக்கவில்லையா? (ரோமர் 7:12) ஆம், ஆனால் ரோமர் 10:2, 3-ல் பவுல் யூதர்களைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “தேவனைப் பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சி சொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல. எப்படியென்றால், அவர்கள் தேவ நீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவ நீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.”
ஆம், நியாயப்பிரமாண சட்டத்தின் சிறு நுணுக்கங்களையும் அசட்டை செய்யாமல் பின்பற்றுவதன் மூலம், தங்கள் இரட்சிப்பை சம்பாதித்துக்கொள்ளலாம் என்று யூதர்கள் தவறாக நம்பினர். “நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுகிறான்,” என்று பவுல் விளக்கினார். (கலாத்தியர் 2:15) கிறிஸ்துவின் மீட்கும் பலி கொடுக்கப்பட்ட பிறகு, நியாயப்பிரமாணத்தின் கிரியைகள்—எவ்வளவு உயர்நோக்கத்துடனும் பக்தியுடனும் செய்யப்பட்டபோதிலும்—செத்த கிரியைகளாய் இருந்தன. இரட்சிப்பை பெற்றுக்கொள்வதில் அவை எந்தவித மதிப்பும் உடையவையாய் இல்லை. இப்படிப்பட்ட செத்த கிரியைகளிலிருந்து மனந்திரும்புவதன் மூலமும், தங்களுடைய மனந்திரும்புதலை அடையாளப்படுத்திக் காட்டுவதற்கு முழுக்காட்டுதல் எடுப்பதன் மூலமும், சரியான இருதயமுள்ள யூதர்கள் இவ்வாறு கடவுளுடைய ஆதரவை நாடினர்.—அப்போஸ்தலர் 2:38.
இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? பொல்லாத அல்லது ஒழுக்கங்கெட்ட செயல்களைக் காட்டிலும் அதிகமானதைச் செத்த கிரியைகள் உட்படுத்தலாம் என்பதை; ஆவிக்குரிய விதத்தில் செத்த, வீணான அல்லது பயனற்ற எந்த வேலையையும் அவைகள் உள்ளடக்குகின்றன. ஆனால் எல்லா கிறிஸ்தவர்களும் தங்கள் முழுக்காட்டுதலுக்கு முன்பு அப்படிப்பட்ட செத்த கிரியைகளிலிருந்து மனந்திரும்புவதில்லையா? உண்மைதான். ஆனால் முதல் நூற்றாண்டிலிருந்த சில கிறிஸ்தவர்கள் பின்னர் ஒழுக்கங்கெட்ட நடத்தையில் வீழ்ந்துவிட்டனர். (1 கொரிந்தியர் 5:1) மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின் செத்த கிரியைகளை மீண்டும் வழக்கமாக கடைப்பிடிக்கும் மனச்சாய்வு யூத கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்தது. செத்த கிரியைகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டாம் என்று பவுல் அப்படிப்பட்டவர்களுக்கு நினைப்பூட்ட வேண்டியிருந்தது.—கலாத்தியர் 4:21; 5:1.
செத்த கிரியைகளுக்கு எதிராக காத்துக்கொள்ளுதல்
ஆகையால் இன்றுள்ள யெகோவாவின் ஜனங்கள் செத்த கிரியைகளின் கண்ணிக்குள் வீழ்ந்துவிடாதபடி கவனமாயிருக்க வேண்டும். ஒழுக்க சம்பந்தமாக விட்டுக்கொடுக்க, நேர்மையற்றவர்களாக இருக்க, பால் சம்பந்தமான ஒழுக்கக்கேட்டில் ஈடுபட அழுத்தங்களின் மூலம் நாம் எல்லா திசைகளிலுமிருந்தும் தாக்கப்படுகிறோம். விசனகரமாக, ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு வருடமும் இப்படிப்பட்ட அழுத்தங்களுக்கு விட்டுக்கொடுத்து விடுகின்றனர். மேலும் மனந்திரும்பவில்லையென்றால் கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கப்படுகின்றனர். எப்போதும் இருப்பதைவிட அதிகமாக ஒரு கிறிஸ்தவன் எபேசியர் 4:22-24-ல் உள்ள பவுலின் புத்திமதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும்: “அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம் போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்து போட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.”
பவுலின் கடிதத்தைப் பெற்ற எபேசியர்கள் ஏற்கெனவே புதிய ஆள்தன்மையை பெரும் அளவுக்கு தரித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவ்வாறு செய்வது தொடர்ந்து செய்ய வேண்டிய நடவடிக்கை என்பதை அவர்கள் போற்றும்படி பவுல் அவர்களுக்கு உதவினார்! இடைவிடாமல் தொடர்ச்சியாக முயற்சி செய்யாவிடில், கெடுக்கும் இயல்புள்ள செல்வாக்கைப் போன்று தொடர்ந்து நீடித்திருக்கும் தந்திரமான விருப்பங்கள் மூலம் செத்த கிரியைகளுக்கு மறுபடியும் கிறிஸ்தவர்கள் வழிநடத்தப்படக்கூடும். இதே காரியம் இன்று நம்மைக் குறித்ததிலும் உண்மையாயிருக்கிறது. புதிய ஆள்தன்மையை தரித்துக்கொள்வதற்கு நாம் எப்போதும் இடைவிடாமல் முயற்சி செய்து கொண்டேயிருக்க வேண்டும். நம்முடைய பழைய வாழ்க்கை முறையில் நாம் கொண்டிருந்த எந்தப் பண்புகளாலும் அது கறைப்பட்டுவிட அனுமதிக்கக்கூடாது. மாம்சத்தின் பொல்லாத கிரியைகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை நாம் விட்டொழிக்க வேண்டும். வெறுக்க வேண்டும். “கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்து விடுங்கள்,” என்று சங்கீதக்காரன் அறிவுரை கூறுகிறார்.—சங்கீதம் 97:10.
பாராட்டத்தக்கவிதமாக, யெகோவாவின் ஜனங்களில் பெரும்பான்மையர் இன்று இந்தப் புத்திமதிக்கு கவனம் செலுத்தி ஒழுக்கப்பிரகாரமாக சுத்தமாக நிலைத்திருந்தனர். ஆனால் சிலர் தவறற்ற கிரியைகளினால் திசைதிருப்பப்பட்டிருக்கின்றனர். அவை தவறற்றவையாக இருந்தபோதிலும் இறுதியில் அவை வீணானதும் பலனற்றதுமாய் இருக்கின்றன. உதாரணமாக, சிலர் பணம் குவிக்கும் திட்டங்கள் அல்லது பொருள் உடைமைகளைப் பெற்றுக்கொள்வதில் முழுவதுமாக ஈடுபட்டவர்களாகி விடுகின்றனர். ஆனால் பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.” (1 தீமோத்தேயு 6:9) மற்றவர்களுக்கு, உலகப்பிரகாரமான கல்வி ஒரு கண்ணியாக நிரூபித்திருக்கிறது. வேலை பெற்றுக்கொள்வதற்கு ஓரளவு உலகப்பிரகாரமான கல்வி தேவையாக இருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் உயர்தரமான உலகப்பிரகாரமான கல்வியை மேற்கொண்டதன் மூலம் சிலர் ஆவிக்குரிய பிரகாரமாய் தங்களுக்குத் தீங்கு வருவித்திருக்கின்றனர்.
ஆம், அநேக கிரியைகள் ஒழுக்கப்பிரகாரமாக தவறானவையாக இல்லாமல் இருக்கலாம். அப்படியிருந்தபோதிலும், அவை இப்போது நம்முடைய வாழ்க்கைக்கு அதிகத்தைக் கூட்டவில்லையென்றால் அல்லது யெகோவா தேவனின் ஆதரவை நமக்குப் பெற்றுத் தரவில்லையென்றால் அவை செத்த கிரியைகளாய் இருக்கின்றன. அப்படிப்பட்ட கிரியைகள் நேரத்தையும் சக்தியையும் எடுத்துக்கொள்கின்றன. ஆனால் ஆவிக்குரிய நன்மைகளை கொடுப்பதில்லை. நிரந்தரமான புத்துணர்ச்சியையும் அளிப்பதில்லை.—பிரசங்கி 2:11 ஒப்பிடவும்.
பயனுள்ள ஆவிக்குரிய வேலைகளில் அதிக சுறுசுறுப்புள்ளவர்களாக இருக்க நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை. உங்களை நீங்களே ஒழுங்காக கூர்ந்து ஆராய்வது உதவியாயிருக்கும். அவ்வப்போது இப்படிப்பட்ட கேள்விகளை நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளலாம்: ‘தேவையற்ற உலகப்பிரகாரமான வேலையை எடுத்துக்கொண்டதன் காரணமாக வெளி ஊழியத்தில் பங்குகொள்வதும் கூட்டத்துக்கு ஆஜராவதும் பாதிக்கப்படுகிறதா?’ ‘பொழுதுபோக்குக்கு எனக்கு நேரம் இருக்கிறது, ஆனால் தனிப்பட்ட படிப்புக்கும் குடும்ப படிப்புக்கும் சிறிது நேரம் மட்டுமே இருக்கிறதா?’ ‘பொருள் உடைமைகளை கவனித்துக் கொள்வதற்காக அதிக நேரத்தையும் சக்தியையும் நான் செலவழித்துவிட்டு, சபையில் வியாதியாகவும், வயதானவர்களாகவும் இருக்கும் தேவையில் இருப்போரை கவனிக்க நான் தவறுகிறேனா?’ உங்கள் பங்கில் ஆவிக்குரிய கிரியைகளுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற தேவையை இப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் வெளிப்படுத்தும்.
யெகோவாவின் சேவையில் அதிக வேலையாய் இருத்தல்
ஒன்று கொரிந்தியர் 15:58 சொல்கிறபடி, “கர்த்தருடைய கிரியையிலே செய்கிறதற்கு அதிகம் இருக்கிறது.” ராஜ்ய-பிரசங்கிப்பு வேலையும், சீஷரை-உண்டுபண்ணும் வேலையும் மிக முக்கியமான வேலையாயிருக்கிறது. 2 தீமோத்தேயு 4:5-ல் பவுல் இவ்விதமாக ஊக்குவித்தார்: “தளர்விலா ஊக்கமுடைய சேவை செய்வதன் மூலம் நற்செய்தியைப் பிரசங்கிப்பதை உன் வாழ்க்கையின் வேலையாக்கிக்கொள்.” (ஜெருசலெம் பைபிள்) மந்தையின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதில் மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் செய்வதற்கு அதிகம் இருக்கிறது. (1 தீமோத்தேயு 3:1, 5, 13; 1 பேதுரு 5:2) குடும்பத் தலைவர்களுக்கு—அதில் அநேகர் ஒற்றை பெற்றோராய் இருக்கின்றனர்—தங்கள் குடும்பங்களைக் கவனித்துக்கொள்வதிலும், தங்கள் பிள்ளைகள் கடவுளோடு கொண்டுள்ள உறவில் வளருவதற்கு அவர்களுக்கு உதவி செய்வதிலும் கனத்த உத்தரவாதங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட வேலைகள் முற்றிலும் சோர்வுண்டாக்கலாம். சில சமயங்களில் சமாளிக்க முடியாத அளவு பெரியதாக இருக்கலாம். ஆனால் செத்த கிரியைகளாக இருப்பதற்குப் பதிலாக, அவை உண்மையான திருப்தியைக் கொண்டு வருகின்றன.
பிரச்னை என்னவென்றால்: இப்படிப்பட்ட தேவையான பயனுள்ள எல்லா கிரியைகளையும் செய்து முடிப்பதற்கு ஒருவர் எவ்வாறு நேரத்தைக் கண்டுபிடிக்க முடியும்? சுய-சிட்சையும், தனிப்பட்ட ஒழுங்கமைப்பும் இன்றியமையாததாக இருக்கின்றன. 1 கொரிந்தியர் 9:26, 27-ல் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்னேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான் தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.” வசனத்தின் நியமத்தை பொருத்துவதற்கு ஒரு வழி, உங்களுடைய தனிப்பட்ட நடைமுறையொழுங்கையும், வாழ்க்கை-பாணியையும் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒழுங்காக ஆராய்வது ஆகும். உங்களுடைய நேரம், சக்தி ஆகியவற்றை உறிஞ்சிக்கொள்ளும் பல காரியங்களை நீங்கள் நீக்கலாம் என்பதை நீங்கள் கண்டுபிடிக்கக்கூடும்.
உதாரணமாக, டிவி பார்ப்பது, பொழுதுபோக்கு, உலகப் பிரசுரங்களைப் படிப்பது, ஓய்வுநேர விருப்பவேலை ஆகியவற்றின் பேரில் உங்களுடைய நேரமும், சக்தியும் அதிகமாக செலவழிக்கப்படுகிறதா? ஐக்கிய மாகாணங்களில் இருக்கும் சராசரி ஆள், “ஒரு வாரத்துக்கு 30 மணிநேரங்களுக்கும் சற்று மேல்” டிவி பார்ப்பதில் செலவிடுகிறார் என்று தி நியூ யார்க் டைம்ஸ் என்ற பத்திரிகையில் உள்ள ஒரு கட்டுரை சொல்கிறது. நிச்சயமாகவே, அப்படிப்பட்ட நேரம் இதைவிட மேம்பட்ட வழிகளில் பயன்படுத்தப்படக்கூடும்! “டிவி பார்ப்பது போன்ற நேரத்தை வீணாக்கும் எல்லா காரியங்களையும் நான் முழுவதுமாக நீக்கிவிட்டேன்,” என்று ஒரு பயண கண்காணியின் மனைவி அறிக்கை செய்கிறார்கள். அதன் விளைவு? வேதாகமத்தின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) என்ற இரு-ஏடுகளையுடைய பைபிள் என்ஸைக்ளோபீடியாவை முழுவதுமாக அவர்களால் வாசிக்க முடிந்தது!
உங்களுடைய வாழ்க்கை-பாணியை எந்த அளவுக்கு எளிமையாக்கலாம் என்பதைக் குறித்தும்கூட நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. சாலொமோன் சொன்னார்: “வேலை செய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.” (பிரசங்கி 5:12) தேவையற்ற பொருள் உடைமைகளைக் கவனித்துக்கொள்வதற்காக உங்களுடைய நேரமும், ஊக்கமும் அதிகமாக செலவழிக்கப்படுகிறதா? உண்மையில் அதிகமான பொருட்களை நாம் சொந்தமாக வைத்திருந்தால் நாம் அதிகத்தைப் பராமரித்தும், காப்புறுதி செய்தும், பழுதுபார்த்தும், பாதுகாத்தும் வரவேண்டும். சில உடைமைகளை வெறுமென நீக்கிவிடுவது உங்களுக்கு அனுகூலமாக இருக்குமா?
மெய்யான அட்டவணையைக் கொண்டிருப்பது உங்களுடைய நேரத்தை மேலான முறையில் பயன்படுத்த மற்றொரு வழியாகும். அப்படிப்பட்ட அட்டவணை ஓய்வு அல்லது பொழுதுபோக்குக்கான ஒருவரின் தேவையை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் ஆவிக்குரிய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். ஒழுங்கான அடிப்படையில் எல்லா சபை கூட்டங்களுக்கும் ஆஜராவதற்கு நேரத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். நற்செய்தியை அறிவிக்கும் வேலைக்கு எந்த நாட்கள் அல்லது மாலை நேரம் ஒதுக்கி வைக்கப்படலாம் என்பதையும்கூட நீங்கள் முன்கூட்டியே தீர்மானிக்கலாம். கவனமாக திட்டமிடுவதன் மூலம் நீங்கள் ஊழியத்தில் உங்களுடைய பங்கையும்கூட அதிகரிக்க முடியும். அவ்வப்போது துணைப்பயனியராக சேவிக்க முடியும். கூட்டங்களுக்கு முழுமையாக தயாரிப்பது உட்பட, தனிப்பட்ட படிப்புக்கும் குடும்ப படிப்புக்கும் நேரத்தை அட்டவணையிட நிச்சயமாயிருங்கள். தயாரித்து இருப்பதன் மூலம், கூட்டங்களிலிருந்து நீங்கள் அதிகத்தைப் பெற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், உங்களுடைய குறிப்புகள் மூலம், “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவுவதற்கு” நீங்கள் ஒரு சிறந்த நிலையில் இருப்பீர்கள்.—எபிரெயர் 10:24.
படிப்பதற்கு நேரத்தைக் கண்டுபிடிப்பது சில தியாகங்கள் செய்வதை ஒருவேளை தேவைப்படுத்தலாம். உதாரணமாக, தினவசனத்தின் பேரில் கலந்தாலோசிப்பைக் கொண்டிருக்க பூமி முழுவதிலும் உள்ள பெத்தேல் குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலே எழும்புகின்றனர். ஒவ்வொரு நாள் காலையிலும் தனிப்பட்ட படிப்புக்காக சிறிது நேரத்தை உங்களால் வாங்கக்கூடுமா? “அதிகாலையில் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்,” என்று சங்கீதக்காரன் சொன்னார். (சங்கீதம் 119:147) பொருத்தமான நேரத்தில் படுக்கைக்குச் செல்ல வேண்டும் என்று அட்டவணையிடுவதை அதிகாலமே எழுந்திருப்பது தேவைப்படுத்தும். அப்போதுதான் நீங்கள் ஓய்வுபெற்று நன்னிலையில் அடுத்த நாளைத் துவங்கலாம்.
யெகோவாவின் சேவையில் அதிக வேலையாய் இருப்பதால் வரும் நன்மைகள்
“கர்த்தருடைய கிரியையிலே செய்வதற்கு அதிகத்தைக் கொண்டிருப்பது,” திட்டமிடுதல், சிட்சை, சுய-தியாகம் ஆகியவற்றை தேவைப்படுத்துகிறது. ஆனால் அதன் விளைவாக எண்ணற்ற நன்மைகளை நீங்கள் அனுபவித்து மகிழ்வீர்கள். ஆகையால் சுறுசுறுப்பாயிருங்கள். வெறுமையையும் துயரத்தையும் மட்டுமே கொண்டுவரும் செத்த அல்லது வீணான கிரியைகளில் அல்ல. ஆனால் யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாயிருங்கள். இப்படிப்பட்ட கிரியைகளினாலே நீங்கள் உங்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்திக் காட்டி, கடவுளின் அங்கீகாரத்தையும் இறுதியில் நித்திய ஜீவன் என்ற வெகுமதியையும் பெற்றுக்கொள்ளுகிறீர்கள்!
[பக்கம் 28-ன் படம்]
மெய்யான அட்டவணையை போடுவது ஒரு கிறிஸ்தவன் தன் நேரத்தை அதிக ஞானமாக உபயோகிக்க உதவுகிறது