யெகோவா—நன்றியுள்ள கடவுள்
“உங்கள் கிரியையையும் . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.”—எபிரெயர் 6:10.
1. மோவாபியப் பெண் ரூத்திற்கு யெகோவா எவ்வாறு பலன் அளித்தார்?
யெகோவா மிகவும் நன்றியுள்ள கடவுள். தம் சித்தத்தைச் செய்ய ஒரு நபர் நெஞ்சார முயற்சி செய்கையில் அதை அவர் பெரிதும் மதிக்கிறார்; அவருக்குப் பலனும் அளிக்கிறார். (எபிரெயர் 11:6) கடவுளின் தலைசிறந்த இந்தக் குணாம்சத்தை உண்மை தவறாதவரான போவாஸ் அறிந்திருந்தார். எதை வைத்துச் சொல்கிறோம்? விதவையாகிவிட்ட தன் மாமியாரை அன்புடன் கவனித்துவந்த மோவாபியப் பெண் ரூத்திடம் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: “உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; . . . உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக.” (ரூத் 2:12) ரூத்திற்குக் கடவுள் பலன் அளித்தாரா? நிச்சயமாக அளித்தார்! எப்படியெனில், ரூத்தின் வாழ்க்கை வரலாறு பைபிளில் இடம்பெறும்படி செய்தார். அதோடு, போவாஸை அவர் திருமணம் செய்துகொண்டு, தாவீது ராஜாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் மூதாதை ஆகும்படியும் செய்தார். (ரூத் 4:13, 17; மத்தேயு 1:5, 6, 16) தம் ஊழியர்களுக்கு யெகோவா பலன் அளிக்கிறவர் என்பதற்கு பைபிளில் காணப்படும் ஏராளமான உதாரணங்களில் இது ஒன்றே ஒன்றுதான்.
2, 3. (அ) யெகோவா தம் ஊழியர்களை மதிப்புள்ளவர்களாய்க் கருதுவதன் சிறப்பம்சம் என்ன? (ஆ) நம் சேவையை யெகோவா ஏன் பொக்கிஷமாகப் போற்றுகிறார்? உதாரணத்துடன் விளக்குங்கள்.
2 நன்றியுணர்வைத் தாம் வெளிக்காட்டாவிட்டால், அதை அநீதியான செயலாகவே யெகோவா கருதுவார். எபிரெயர் 6:10 பின்வருமாறு தெரிவிக்கிறது: “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.” இந்த வசனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள் பாவிகளாக, தேவமகிமையற்றவர்களாக இருக்கிறபோதிலும், அவர் அவர்களை மதிப்புள்ளவர்களாய்க் கருதுகிறார்.—ரோமர் 3:23.
3 அபூரணர்களாக இருப்பதால், நாம் கடவுளுக்குச் செய்கிற ஊழியம் எந்த மூலைக்கு என்பதாகவும், அது அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறத் தகுதியற்றது என்பதாகவும் நினைத்து நாம் அதிருப்திப்பட்டுக் கொள்ளலாம். யெகோவா தேவனோ, நம் உள்நோக்கங்களையும், சூழ்நிலைகளையும் முழுமையாக அறிந்திருக்கிறார்; ஆகவே, நாம் முழு ஆத்துமாவோடு சேவை செய்கையில் அதை அவர் பொக்கிஷமாகப் போற்றுகிறார். (மத்தேயு 22:37) உதாரணத்திற்கு ஒரு தாயைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவள் தன் மேஜையில் ஒரு பரிசு வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள். அது குறைந்த விலையுள்ள ஒரு மணிமாலை. ‘ப்பூ, இதுதானா’ என்று சொல்லி அந்தப் பரிசை அவள் ஒரு மூலையில் வீசியிருக்கலாம். ஆனால் அவள் அப்படிச் செய்வதில்லை. ஏனெனில் அந்தப் பரிசுடன் ஒரு கார்டும் வைக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து, தன் செல்ல மகள் தனக்குத் தந்த பரிசு அது என்பதையும், சேமிப்புப் பணத்தையெல்லாம் போட்டு அவள் வாங்கிய பரிசு என்பதையும் அந்தத் தாய் அறிந்துகொள்கிறாள். இப்போது அந்தத் தாயைப் பொறுத்தவரை அந்தப் பரிசு விலைமதிக்க முடியாதது. கலங்கிய கண்களுடன் தன் மகளை அணைத்து, நன்றி பொங்கிய இதயத்திலிருந்து பெருக்கெடுத்த வார்த்தைகளால் மகளுக்குப் புகழ் மாலை சூட்டுகிறாள்.
4, 5. மதித்துணர்வைக் காட்டுவதில் இயேசு எவ்வாறு யெகோவாவைப் பின்பற்றினார்?
4 நம் உள்நோக்கங்களையும் வரம்புகளையும் யெகோவா முழுமையாய் அறிந்திருக்கிறார். ஆகவே, நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யும்போது, அது கொஞ்சமோ அதிகமோ, அதை அவர் பெரிதும் மதிக்கிறார். இவ்விஷயத்தில், இயேசுவும் தம் பிதாவின் மறுபிம்பமாகவே திகழ்ந்தார். ஏழை விதவை காணிக்கை போட்டதைப்பற்றி பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவத்தைச் சற்று ஞாபகப்படுத்திப் பாருங்கள். “அவர் [இயேசு] கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார். ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.”—லூக்கா 21:1-4.
5 ஆம், அந்தப் பெண்ணின் சூழ்நிலைகளை இயேசு அறிந்திருந்தார். அவள் ஒரு விதவை, ஓர் ஏழை என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே, அவள் போட்ட காணிக்கை எந்தளவு மதிப்புமிக்கது என்பதைப் புரிந்துகொண்டார். எனவேதான் அதைப் பொக்கிஷமாய் மதித்தார். யெகோவாவும் அப்படித்தான். (யோவான் 14:9) உங்கள் சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் சரி, நன்றியுள்ள கடவுளின் கண்களிலும் நன்றியுள்ள அவரது குமாரனின் கண்களிலும் நீங்கள் தயவைப் பெற முடியும்! இதை அறிவது ஊக்கமூட்டுகிறது, அல்லவா?
தேவபக்தியுள்ள எத்தியோப்பியனுக்கு யெகோவா பலன் அளித்தார்
6, 7. எபெத்மெலேக்கிற்கு யெகோவா ஏன் பலன் அளித்தார், எவ்வாறு?
6 தம் சித்தத்தைச் செய்பவர்களுக்கு யெகோவா பலன் அளிக்கிறார் என்பது வேதாகமத்தில் அடிக்கடி காட்டப்படுகிறது. தேவபக்தியுள்ள எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்கின் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எபெத்மெலேக், யூதாவை ஆண்ட உண்மையற்ற சிதேக்கியா ராஜாவின் குடும்பத்திற்கு வேலைசெய்தவரும் எரேமியாவின் காலத்தில் வாழ்ந்தவரும் ஆவார். யூதாவின் பிரபுக்கள் எரேமியா தீர்க்கதரிசியைத் தேசத்துரோகி எனப் பொய்க்குற்றஞ்சாட்டி, பட்டினியினால் சாகும்படி தண்ணீரில்லாத கிணற்றில் அவரைப் போட்டுவிட்டதை எபெத்மெலேக் அறியவந்தார். (எரேமியா 38:1-7) எரேமியா அறிவித்துவந்த செய்தியின் காரணமாக மற்றவர்கள் அவரைக் கடுமையாய் பகைப்பதை அறிந்த எபெத்மெலேக், தன் உயிரையே பணயம் வைத்து ராஜாவிடம் கெஞ்சினார். தன் தைரியத்தை ஒன்றுதிரட்டி அவர் இவ்வாறு சொன்னார்: “ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே இனி நகரத்திலே அப்பமில்லை.” பின்னர் ராஜாவின் கட்டளைப்படி, எபெத்மெலேக் 30 பேரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டுபோய், கடவுளின் தீர்க்கதரிசியை மீட்டார்.—எரேமியா 38:8-13.
7 ஒருவேளை எபெத்மெலேக்கிற்குப் பயமாக இருந்திருக்கலாம், ஆனால் அந்தப் பயத்தைச் சமாளிக்க அவருடைய விசுவாசம் அவருக்குக் கைகொடுத்தது. அந்த விசுவாசத்தைச் செயலில் காட்டினதை யெகோவா கவனித்தார். அதற்கு யெகோவா எப்படிப் பலன் அளித்தார்? எபெத்மெலேக்கிடம் அவர் எரேமியாவின் மூலமாய்க் கூறினதாவது: “இதோ, என்னுடைய வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்; . . . ஆனால் அந்நாளிலே உன்னைத் தப்புவிப்பேன், . . . நீ பயப்படுகிற மனுஷரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை. உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், . . . நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்கு[ம்].” (எரேமியா 39:16-18) தாம் சொன்னபடியே யெகோவா எபெத்மெலேக்கை விடுவித்தார். எரேமியாவையும் அவர் விடுவித்தார். யாரிடமிருந்து? முதலில் யூதாவின் பொல்லாத பிரபுக்களிடமிருந்தும், பின்பு எருசலேமைத் தரைமட்டமாக்கிய பாபிலோனியரிடமிருந்தும் விடுவித்தார். “[யெகோவா] தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்” என்று சங்கீதம் 97:10 கூறுகிறது.
“அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்”
8, 9. எவ்வித ஜெபங்களை யெகோவா மதிப்புமிக்கவையாகக் கருதுகிறார் என இயேசுவின் ஜெபங்கள் காட்டுகின்றன?
8 நம் தேவபக்தியை யெகோவா மதிப்புடன் நோக்குகிறார், அதைப் பொக்கிஷமாய்ப் போற்றுகிறார் என்பதற்கு மற்றொரு அத்தாட்சி உள்ளது; அதை, ஜெபம்பற்றி பைபிள் சொல்வதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். ‘செம்மையானவர்களின் ஜெபம் [கடவுளுக்கு] பிரியம்’ என்று ஞானி குறிப்பிட்டார். (நீதிமொழிகள் 15:8) இயேசுவின் காலத்தில் மதத் தலைவர்கள் பலர், யாவரறிய ஜெபம் செய்தார்கள். ஆனால், உண்மையான பக்தியுடன் அல்ல, மற்றவர்களை வசீகரிப்பதற்காகவே அப்படி ஜெபித்தார்கள். ‘அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்தாயிற்று’ என்றார் இயேசு. “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்” என்றும் அவர் தம் சீஷர்களிடம் கூறினார்.—மத்தேயு 6:5, 6.
9 பொதுவிடங்களில் செய்யப்படும் ஜெபத்தை இயேசு கண்டனம் செய்யவில்லை; ஏனெனில், அவரே சில சந்தர்ப்பங்களில் யாவரறிய ஜெபம் செய்தார். (லூக்கா 9:16) மற்றவர்களை வசீகரிக்கும் நோக்கத்துடன் ஜெபிக்காமல், உள்ளப்பூர்வமாக ஜெபிக்கும்போது அதை யெகோவா பெரிதும் மதிக்கிறார். உண்மையில், நாம் தனியே செய்கிற ஜெபங்கள், கடவுள்மீது நாம் எந்தளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பதற்கும், அவர்மீது நாம் எந்தளவு நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதற்கும் ஓர் அருமையான அடையாளமாக இருக்கின்றன. ஆகவே, இயேசு ஜெபிப்பதற்காக ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களைத் தேடிச்சென்றார் என்பது நமக்கு ஆச்சரியம் அளிப்பதில்லை. ஒரு சந்தர்ப்பத்தில், அவர் “அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு . . . போய்” ஜெபம்பண்ணினார். மற்றொரு சந்தர்ப்பத்தில், “அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி[னார்].” தம்முடைய 12 அப்போஸ்தலரைத் தெரிந்தெடுப்பதற்கு முந்தின இரவு முழுவதும் அவர் தனித்திருந்து ஜெபித்தார்.—மாற்கு 1:35; மத்தேயு 14:23; லூக்கா 6:12, 13.
10. கடவுளைப் பிரியப்படுத்தும் வகையில் உணர்ச்சியைக் கொட்டி, உள்ளப்பூர்வமாக ஜெபிக்கையில், எதைக் குறித்து நாம் நிச்சயமாய் இருக்கலாம்?
10 தமது குமாரனின் இதயப்பூர்வமான வார்த்தைகளை யெகோவா எவ்வளவு உன்னிப்பாகக் கேட்டிருப்பாரென்று சற்று கற்பனை செய்துபாருங்கள்! சொல்லப்போனால், சில சமயங்களில் இயேசு, “பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்[டார்].” (எபிரெயர் 5:7; லூக்கா 22:41-44) அவ்வாறே நாமும் கடவுளைப் பிரியப்படுத்தும் வகையில் உணர்ச்சியைக் கொட்டி, உள்ளப்பூர்வமாக ஜெபிக்கையில் யெகோவா உன்னிப்பாகக் கேட்டு அவற்றை மதிப்புமிக்கவையாகக் கருதுவாரென்று நிச்சயமாய் இருக்கலாம். ஆம், ‘உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், யெகோவா சமீபமாயிருக்கிறார்.’—சங்கீதம் 145:18.
11. நாம் தனியாக இருக்கும்போது செய்யும் காரியங்களைக் குறித்து யெகோவா எப்படி உணருகிறார்?
11 அந்தரங்கத்தில் நாம் ஜெபிக்கையில் யெகோவா பலன் அளிக்கிறார் என்றால், அந்தரங்கத்தில் நாம் கீழ்ப்படிகையிலும் அவர் பலன் அளிப்பார் என்பது உறுதியல்லவா! சொல்லப்போனால், நாம் தனியாக இருக்கும்போது செய்யும் அனைத்துக் காரியங்களையும் யெகோவா அறிந்திருக்கிறார். (1 பேதுரு 3:12) நாம் தனியாக இருக்கும்போது உண்மையுடனும் கீழ்ப்படிதலுடனும் நடந்துகொள்வது, நாம் யெகோவாவை “உத்தம இருதயத்தோடு” வணங்குகிறோம் என்பதற்கு ஓர் அருமையான அடையாளமாகவே இருக்கிறது; நல்ல உள்நோக்கத்தோடும் சரியானதைச் செய்யும் உறுதியோடும் இருப்பதையே அது காட்டுகிறது. (1 நாளாகமம் 28:9) அப்படிப்பட்ட நடத்தை யெகோவாவின் இதயத்தை எவ்வளவாய் குளிர்விக்கிறது!—நீதிமொழிகள் 27:11; 1 யோவான் 3:22.
12, 13. நாம் எவ்வாறு நம் மனதையும் இதயத்தையும் காத்துக்கொண்டு, உத்தம சீஷனாயிருந்த நாத்தான்வேலைப் போல் இருக்கலாம்?
12 ஆகவே, உண்மைதவறாத கிறிஸ்தவர்கள் தங்களது மனதையும் இதயத்தையும் கெடுக்கிற அந்தரங்கப் பாவங்களைச் செய்துவிடாதபடி, அதாவது ஆபாசத்தையும் வன்முறையையும் பார்த்து ரசிப்பது போன்ற பாவங்களைச் செய்துவிடாதபடி ஜாக்கிரதையுடன் இருக்கிறார்கள். சில பாவங்களைச் செய்துவிட்டு மனிதருக்குத் தெரியாமல் மறைத்துவிடலாம் என்பது உண்மையே; ஆனாலும், “சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்” என்று நமக்குத் தெரியும். (எபிரெயர் 4:13; லூக்கா 8:17) யெகோவாவை விசனப்படுத்தும் காரியங்களைச் செய்யாமலிருக்கப் போராடுகையில், நம் மனசாட்சியைச் சுத்தமாக வைத்துக்கொள்வோம்; கடவுளுடைய அங்கீகாரப் புன்னகையைப் பெறுவதை அறிந்து அகமகிழ்வோம். ஆம், “உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிற” நபரை யெகோவா பெரிதும் மதிக்கிறார் என்பதில் துளியும் சந்தேகமில்லை.—சங்கீதம் 15:1, 2.
13 ஆனால், இந்த உலகம் தீயசெயல்களில் ஊறிப்போய் இருக்கிறதே, அப்படியிருக்க நாம் எப்படி நம் மனதையும் இதயத்தையும் காத்துக்கொள்ள முடியும்? (நீதிமொழிகள் 4:23; எபேசியர் 2:2) நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்கு யெகோவா செய்திருக்கும் எல்லா ஏற்பாடுகளையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; அத்துடன் நல்ல காரியங்களை விரும்பிச் செய்யவும், கெட்ட காரியங்களை உதறித் தள்ளவும் கடினமாகப் போராட வேண்டும். தவறான ஆசைகள் வளர்ந்து பாவச் செயல்களில் நம்மை ஈடுபடுத்திவிடாதபடி அவற்றை உடனே உதறித்தள்ள வேண்டும். (யாக்கோபு 1:14, 15) ‘இதோ, கபடற்ற உத்தமன்’ என நாத்தான்வேலை இயேசு குறிப்பிட்டார். (யோவான் 1:47) அவ்வாறே உங்களையும் அவர் குறிப்பிட்டால் நீங்கள் எவ்வளவு சந்தோஷப்படுவீர்கள் என்பதைச் சற்று எண்ணிப்பாருங்கள். பற்தொலொமேயு என்றும் அழைக்கப்பட்ட நாத்தான்வேல், பின்னர் இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் ஒருவராகும் பாக்கியத்தைப் பெற்றார்.—மாற்கு 3:16-19.
‘இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியர்’
14. மரியாளின் செயலை இயேசு எவ்வாறு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்த்தார்?
14 ‘அதரிசனமான தேவனாகிய’ யெகோவாவின் ‘தற்சுரூபமாய்’ இருக்கிற இயேசு தம் பிதாவின் மறுபிம்பமாய் எப்பொழுதுமே திகழ்கிறார். சுத்தமான இதயத்தோடு கடவுளை வணங்குபவர்களைப் பொக்கிஷமாய் மதிக்கிற விஷயத்திலும்கூட. (கொலோசெயர் 1:15) உதாரணமாக, இயேசு இறப்பதற்கு ஐந்து நாட்கள் முன்பு, அவரும் அவருடைய சீஷர்களில் சிலரும் பெத்தானியாவைச் சேர்ந்த சீமோனின் வீட்டில் விருந்துக்குச் சென்றிருந்தார்கள். அந்த மாலை வேளையில், லாசருவுக்கும் மார்த்தாளுக்கும் சகோதரியான மரியாள், (சுமார் ஒரு வருட சம்பாத்தியத்திற்குச் சமமான) “விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டு வந்து,” அதை இயேசுவின் தலையிலும் பாதங்களிலும் பூசினாள். (யோவான் 12:3) “இந்த வீண்செலவு என்னத்திற்கு?” என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இயேசுவோ, மரியாளின் செயலை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்த்தார். அதை மாபெரும் கொடைச் செயலாகப் பார்த்ததோடு, வெகு சீக்கிரத்தில் தாம் இறந்து அடக்கம்பண்ணப்படவிருப்பதற்கு அடையாளமாகச் செய்யப்பட்ட ஆழ்ந்த அர்த்தமுள்ள செயலாகவும் பார்த்தார். ஆகவே, மரியாளைத் திட்டுவதற்குப் பதிலாக, அவளைக் கௌரவித்தார். எப்படி? “இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும்” என்றார்.—மத்தேயு 26:6-13.
15, 16. இயேசு பூமியில் வாழ்ந்ததாலும் கடவுளுக்குச் சேவை செய்ததாலும் நாம் எவ்வாறு நன்மை அடைகிறோம்?
15 நன்றியுள்ள ஒரு நபரான இயேசுவை நம் தலைவராக ஏற்றிருப்பது நமக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட பாக்கியம்! சொல்லப்போனால், இயேசு பூமியில் வாழ்ந்தபோது பெற்ற அனைத்து அனுபவங்களும், பிற்காலத்தில் யெகோவா அவருக்கென்று வைத்திருந்த வேலையைச் செய்வதற்கு அவரைத் தயார்படுத்தின. இயேசு, முதலில் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் மீதும் பின்பு உலகத்தார் மீதும் பிரதான ஆசாரியராகவும் அரசராகவும் இருக்க வேண்டுமென்பதே யெகோவா அவருக்காக வைத்திருந்த வேலையாகும்.—கொலோசெயர் 1:13; எபிரெயர் 7:26; வெளிப்படுத்துதல் 11:15.
16 பூமிக்கு வருவதற்கு முன்பு இயேசுவுக்கு மனிதர்களிடம் உள்ளான அக்கறையும் தனிப் பிரியமும் இருந்தது. (நீதிமொழிகள் 8:31) மனிதனாக வாழ்ந்த காலத்தில், கடவுளுக்குச் சேவை செய்யும்போது நாம் என்னென்ன சோதனைகளை எதிர்ப்படுவோமென்பதை அவர் முழுவதுமாகப் புரிந்துகொண்டார். “[இயேசு] இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். “அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய” வல்லவராயிருக்கிறார் என்றும் பவுல் குறிப்பிட்டார். இயேசு, ‘நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடியவராக’ இருக்கிறார்; ஏனெனில், அவர் ‘எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டு, பாவமில்லாதவராக’ இருக்கிறார்.—எபிரெயர் 2:17, 18; 4:15, 16.
17, 18. (அ) ஆசியா மைனரிலிருந்த ஏழு சபைகளுக்கு எழுதப்பட்ட கடிதங்கள், இயேசுவின் மதித்துணர்வைக் குறித்து எதை வெளிக்காட்டுகின்றன? (ஆ) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எதற்காகத் தயார்படுத்தப்பட்டார்கள்?
17 தம் சீஷர்கள் எதிர்ப்பட்ட சோதனைகளை இயேசு நன்றாகப் புரிந்துகொண்டார் என்பது அவர் உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு தெளிவாகத் தெரிந்தது. அப்போஸ்தலன் யோவான் மூலமாக ஆசியா மைனரிலிருந்த ஏழு சபைகளுக்கு அவர் எழுதிய கடிதங்களைச் சற்று கவனியுங்கள். சிமிர்னா சபைக்கு எழுதியபோது இயேசு இவ்வாறு கூறினார்: “உன் உபத்திரவத்தையும், . . . உனக்கிருக்கிற தரித்திரத்தையும் . . . அறிந்திருக்கிறேன்.” வேறு வார்த்தைகளில் சொன்னால், ‘உன் பிரச்சினைகளை நான் முழுமையாய் அறிந்திருக்கிறேன்; உன் பாடுகள் அனைத்தையும் நன்றாகவே தெரிந்திருக்கிறேன்’ என்றுதான் இயேசு சொன்னார். அத்துடன், மரணபரியந்தம் அவர் கஷ்டப்பட்டு வெற்றிபெற்றிருந்ததால், “நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” என்று இரக்கத்தோடும் அசைக்க முடியாத உறுதியோடும் சொன்னார்.—வெளிப்படுத்துதல் 2:8-10.
18 ஏழு சபைகளுக்கு எழுதப்பட்ட கடிதங்களை வாசித்துப் பார்த்தால், அவற்றில் இயேசுவின் சீஷர்கள் எதிர்ப்பட்ட பிரச்சினைகளை அவர் முழுமையாக அறிந்திருந்தார் என்பதையும், அவர்களின் உத்தம வாழ்க்கையை உண்மையில் மதித்துணர்ந்தார் என்பதையும் தெரிவிக்கும் கூற்றுகள் நிறைந்திருப்பது தெரியும். (வெளிப்படுத்துதல் 2:1–3:22) இயேசுவின் கடிதத்தைப் பெற்றவர்கள், அவரோடுகூட பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யும் நம்பிக்கையுடனிருந்த அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். வியாதிப்பட்ட மனிதவர்க்கத்தினருக்கு கிறிஸ்துவின் மீட்பு பலியின் நன்மைகளை மிகவும் இரக்கத்தோடு பிரயோகிக்கும் உன்னதப் பொறுப்பிற்காகத் தங்கள் கர்த்தரைப் போலவே இவர்களும் தயார்படுத்தப்பட்டார்கள்.—வெளிப்படுத்துதல் 5:9, 10; 22:1-5.
19, 20. ‘திரள் கூட்டத்தாரை’ சேர்ந்தவர்கள் யெகோவாவுக்கும் அவருடைய குமாரனுக்கும் தங்கள் நன்றியை எப்படி வெளிக்காட்டுகிறார்கள்?
19 அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களிடம் மட்டுமல்ல, தம்முடைய உண்மைதவறா ‘வேறே ஆடுகளிடமும்’ இயேசு அன்பு காட்டுகிறார். இவர்களில் லட்சக்கணக்கானோர், ‘சகல தேசத்தாரிலுமிருந்து வந்த’ ‘திரள் கூட்டத்தாரைச்’ சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் ‘மிகுந்த உபத்திரவத்தைத்’ தப்பிப் பிழைப்பார்கள். (யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:9, 14; NW) இவர்கள் இயேசுவின் மீட்பு பலிக்கும் நித்திய ஜீவ நம்பிக்கைக்கும் நன்றியுடன் இருப்பதால், அவருடைய பக்கத்தில் வந்து சேருகிறார்கள். தங்கள் நன்றியை அவர்கள் எவ்வாறு வெளிக்காட்டுகிறார்கள்? ‘இரவும் பகலும் [கடவுளை] சேவிப்பதன் மூலம்’ வெளிக்காட்டுகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:15-17.
20 பக்கங்கள் 27 முதல் 30 வரையில் 2006 ஊழிய ஆண்டுக்கான உலகளாவிய அறிக்கை காணப்படுகிறது. அது, இந்த உத்தம ஊழியர்கள் உண்மையில் “இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே” அவரைச் சேவித்து வருவதற்கு தெளிவான அத்தாட்சி அளிக்கிறது. கடந்த ஒரே ஒரு வருடத்தில், இவர்களும், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் மீதியாய் இருக்கும் கொஞ்சப் பேர்களும் சேர்ந்து ஊழியத்தில் மொத்தமாக 133,39,66,199 மணிநேரங்களைச் செலவிட்டிருக்கிறார்கள். இது, 1,50,000-க்கும் அதிகமான ஆண்டுகளுக்குச் சமம்!
தொடர்ந்து நன்றியை வெளிக்காட்டுங்கள்!
21, 22. (அ) நன்றியை வெளிக்காட்டுவதில் கிறிஸ்தவர்கள் முக்கியமாக இன்று ஏன் கவனமாய் இருக்க வேண்டும்? (ஆ) அடுத்த கட்டுரையில் எவற்றைச் சிந்திப்போம்?
21 அபூரண மனிதர்களிடம் யெகோவாவும் அவருடைய குமாரனும் அளவிலா நன்றியைக் காட்டியிருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. என்றாலும், மனிதர்களில் பெரும்பாலோர் கடவுளைப் பொருட்படுத்துவதே இல்லை; அவர்கள் தங்கள் சொந்தக் காரியங்களிலேயே மூழ்கிவிடுகிறார்கள். “கடைசி நாட்களில்” வாழ்பவர்களை விவரிப்பவராக பவுல் இவ்வாறு எழுதினார்: “மக்கள் தன்னலப்பிரியர், பொருளாசை பிடித்தவர், . . . நன்றி கொன்றவர் . . . என்று இவ்வாறெல்லாம் இருப்பர்.” (2 தீமோத்தேயு 3:1-5, கத்தோலிக்க பைபிள்) இப்படிப்பட்டவர்களுக்கும் உண்மைக் கிறிஸ்தவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்! உண்மைக் கிறிஸ்தவர்களோ, இதயங்கனிந்த ஜெபம், உள்ளப்பூர்வ கீழ்ப்படிதல், முழு ஆத்தும சேவை ஆகியவற்றின் மூலம் கடவுள் தங்களுக்காகச் செய்திருப்பவற்றுக்கு நன்றியை வெளிக்காட்டுகிறார்கள்.—சங்கீதம் 62:8; மாற்கு 12:30; 1 யோவான் 5:3.
22 யெகோவா நமக்காக அன்புடன் அநேக ஆன்மீக ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்; அவற்றில் சிலவற்றை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம். இந்த ‘நன்மையான ஈவுகளைக்’ குறித்துச் சிந்திக்கையில் நம் நன்றியுணர்வு இன்னும் பெருக்கெடுக்கட்டும்.—யாக்கோபு 1:17.
உங்கள் பதில்?
• யெகோவா நன்றியுள்ள கடவுள் என்பதை எப்படி வெளிக்காட்டியிருக்கிறார்?
• தனியாக இருக்கும்போது, யெகோவாவின் இதயத்தை நாம் எவ்வாறு குளிர்விக்கலாம்?
• இயேசு நன்றியுள்ளவர் என்பதை என்னென்ன வழிகளில் வெளிக்காட்டினார்?
• ஒரு மனிதனாக வாழ்ந்தது இயேசுவை இரக்கமும் நன்றியுமுள்ள ஓர் ஆட்சியாளராக எவ்வாறு தயார்படுத்தியது?
[பக்கம் 17-ன் படம்]
ஒரு தாய், தன் பிள்ளை தந்த சிறிய பரிசையும் பொக்கிஷமாய்ப் போற்றுவதைப் போலவே, நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யும்போது யெகோவா அதைப் பெரிதும் மதிக்கிறார்